search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 184 பேரில் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். #LSPolls #BJP
    புதுடெல்லி:

    கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளான பலர் இந்திய அரசியலில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ. என முக்கிய பதவிகளில் இருந்து வருகிறார்கள்.

    இவ்வாறு குற்றவாளிகள் அரசியலில் பதவிகளை பிடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்கள் அரசியலுக்கு வருவதை முழுமையாக தடுக்க முடியவில்லை.

    நாட்டில் உள்ள பல கட்சிகளும் கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் டிக்கெட் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

    இப்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் பல கட்சிகள் கிரிமினல் குற்றவாளிகளை வேட்பாளராக அறிவித்து உள்ளன.

    பாரதிய ஜனதா கட்சியிலும் கூட இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் பலர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களாக இருக்கின்றனர்.

    தற்போது பாரதிய ஜனதா தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் 184 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்களில் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். 184 பேரில் 78 பேர் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள் ஆவர்.

    ஏற்கனவே அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனு அடிப்படையில் இந்த 78 பேரில் யார்-யார்? கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற விவரம் கிடைத்துள்ளது. அதன் படிதான் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்கு உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    மற்ற 106 பேரில் யார்-யார் கிரிமினல் குற்றவாளிகள் என்பது அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு தான் தெரிய வரும்.

    35 பேரில் மராட்டிய மாநிலம் சந்திரபூர் தொகுதியில் போட்டியிடும் ஹன்ஸ் ராஜ் கங்காராம் மீதுதான் அதிக வழக்கு உள்ளது. அவர் மீது 11 கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஹன்ஸ் ராஜ் கங்காராம் தற்போது மத்திய உள்துறை இணை மந்திரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒடிசா மாநிலம் பால சோர் தொகுதி வேட்பாளர் பிரதாப் சாரங்கி மீது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    பாரதிய ஜனதா முன்னாள் தலைவரும் மத்திய மந்திரியுமான நிதின்கட்காரி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் மீது 5 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு முக்கிய தலைவர் சாக்‌ஷி மகராஜ் மீதும் கிரிமினல் வழக்கு உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவில் வெற்றி பெற்ற 282 பேரில் 98 பேர் மீதும், காங்கிரசில் வெற்றி பெற்ற 44 பேரில் 8 பேர் மீதும் கிரிமினல் வழக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. #LSPolls #BJP #BJPCandidates
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், மத்திய மந்திரிகள் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். #GautamGambhir #GambhirJoinsBJP #GambhirInBJP
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பீர், தொடக்க வீரராக களம் இறங்கிய அவர் 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையையும் வென்று கொடுத்தார்.

    கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக காம்பீர் அறிவித்தார். தற்போது அவர் வர்ணனையாளர் பணியை செய்து வருகிறார். சமீபத்தில் கவுதம் காம்பீருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது.


    இந்த நிலையில் கவுதம் காம்பீர் இன்று பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். டெல்லியில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். அவரை பாஜக தலைவர்கள் வரவேற்று வாழ்த்தினர். கட்சியில் இணைந்த காம்பீருக்கு உறுப்பினர் அட்டையை நிதி மந்திரி அருண் ஜெட்லி வழங்கினார்.

    பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்ததாகவும், பாஜகவில் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் பெருமைப்படுவதாகவும் காம்பீர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் காம்பீர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் அடுத்த வேட்பாளர் பட்டியலில் காம்பீர் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #GautamGambhir #GambhirJoinsBJP #GambhirInBJP
    பாரதிய ஜனதாவை பொறுத்தவரை பாசிச கட்சி அல்ல என்றும் பாசமுள்ள கட்சி என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #LSPolls #BJP #TamilisaiSoundararajan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளராக கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அவர் இன்று தூத்துக்குடி வந்தார். அவருக்கு பா.ஜ.க.வினர் வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி தொகுதியில் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பகுதி முன்னேற்றம் அடையவேண்டும். இங்கு கிடைக்கும் பொருட்களை கொண்டு பொருளாதாரத்தை உயர்த்துவது எப்படி என்பது குறித்து வி‌ஷன் டாக்குமென்ட் தயார் செய்துள்ளேன்.

    இது போன்று யாரும் சிந்தித்திருக்க முடியாது என்ற அளவில் அந்த டாக்குமென்ட் இருக்கும். இதை வருகிற 26-ந்தேதி தூத்துக்குடி வரும் மத்திய மந்திரி பியூஸ்கோயல் வெளியிடுவார். பிரதமர் மோடியை ஸ்டாலின் சுயநலவாதி என்கிறார். குடும்பத்திற்கு, வாரிசுக்கு என எதையும் செய்யாதவர் மோடி. ஆனால் வாரிசுக்காக பல சலுகைகளை அளிப்பவர் ஸ்டாலின். ராகுல்காந்தியை பிரதமராக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



    இதை அவரது கூட்டணி கட்சிகளே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வருகிற 25-ந்தேதி எனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளேன். அதைத்தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்வேன். விளாத்திகுளம் வேட்பாளர் சின்னப்பன் பிரசாரத்தின் போது வாய் தவறி கனிமொழி பெயரை உச்சரித்தார். இதை நான் பெரிதாக எடுக்கவில்லை.

    மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம். மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள். தூத்துக்குடி தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

    ஸ்டெர்லைட் பிரச்சனை வழக்கில் உள்ளது. நான் நேர்மாறான அரசியல் செய்யவே விரும்புகிறேன். எதிர்மறையான அரசியல் செய்ய மாட்டேன். மக்கள் எளிதில் அணுக கூடிய சாதாரண பெண்ணாகவே இருப்பேன்.

    கருத்து சுதந்திரம் குறித்து கனிமொழி பேசுவது சரியல்ல. பா.ஜனதா ஆட்சியில் கருத்து சுதந்திரம் இருப்பதால் தான் பலர் பேச முடிகிறது. கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரசுடன் கை கோர்த்து கொண்டு இதுபற்றி பேசக்கூடாது. சாதிக் பாட்சா மனைவி கூடா நட்பு கேடாய் விளையும் என கலைஞர் கூறிய வார்த்தையை வைத்து விளம்பரம் செய்ததற்காக அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது. அவருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

    மத்தியில் பா.ஜனதாவும், மாநிலத்தில் அ.தி.மு.க.வும் ஆட்சி புரிவதால் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்க முடிகிறது. பா.ஜனதாவை பொறுத்தவரை இது பாசிச கட்சி அல்ல. பாசமுள்ள பா.ஜ.க.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #BJP #TamilisaiSoundararajan
    ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அரசியலுக்கு வயது ஒரு பாரம் இல்லை. மீண்டும் முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்று எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். மக்களின் ஆதரவு கிடைத்தால் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன்.

    வயது 77 ஆக இருந்தாலும், அந்த வயதால் கிடைத்த அனுபவம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும். கவர்னர் பதவி கிடைத்தால் அதை நான் ஏற்கமாட்டேன். கர்நாடகத்தின் வளர்ச்சியே எனக்கு முக்கியம். இங்கேயே இருந்து விவசாயிகளின் நலனுக்காக போராடுவேன்.

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதியிலும் பாஜக போட்டியிடும். குறைந்தது 22 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். பாஜக, இரண்டு இலக்க எண்ணில் வெற்றி பெறாது என்று தேவேகவுடா சொல்கிறார். காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி தான் இரண்டு இலக்க எண்களில் வெற்றி பெறாது.

    நாட்டின் எல்லைகளை சிறப்பான முறையில் காத்து வருகிறோம். ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை மோடி நடத்தியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியுள்ளார். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் ஒற்றுமையாக செயல்பட மாட்டார்கள்.

    அக்கட்சியின் தலைவர்கள் வேண்டுமானால் ஒற்றுமையாக செயல்படலாம். ஆனால் அடிமட்டத்தில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட மாட்டார்கள். 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளோம். 38 இடங்களில் வெற்றி பெற்றவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்.



    பாஜகவில் இருந்து விலகி நான் தனி கட்சி தொடங்கி தவறு செய்தேன். அதன் பிறகு நான் செய்தது தவறு என்று உணர்ந்தேன். அதற்காக மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டேன். கர்நாடகத்தில் மாநில கட்சிக்கு இடம் இல்லை.

    முன்பு பாஜக-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினோம். ஆளுக்கு 20 மாதங்கள் என்ற ஒப்பந்தப்படி ஆட்சி நடத்தப்பட்டது. முதல் 20 மாதங்கள் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார்.

    அடுத்த 20 மாதங்கள் ஆட்சி நடத்த பாஜகவுக்கு தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் வாய்ப்பு வழங்கவில்லை. தேவேகவுடா, குமாரசாமி நம்பிக்கை துரோகிகள். அதனால் மீண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. அக்கட்சியுடன் எப்போதும் கூட்டணி அமைக்கமாட்டோம்.

    மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதில் குமாரசாமி நிபுணர். அது அவரது திறமை. இந்த பாராளுமன்ற தேர்தலில் 3 பெண்களுக்கு டிக்கெட் வழங்கப்படும். இந்த தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் பிரச்சினை ஏற்படும். அதன் மூலம் இந்த கூட்டணி அரசு கவிழும்.

    மக்கள் ஆதரவுடன் குடும்பத்தில் 2, 3 பேர் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. இது எல்லா கட்சிகளிலும் உள்ளது. ஆனால் தேவேகவுடா குடும்பத்தில் மகன்கள், மருமகள்கள், பேரன்கள் என அனைவரும் அரசியலில் உள்ளனர். இது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடும்ப அரசியலுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். தேவேகவுடா குடும்பத்தினர் அந்த கட்டுப்பாட்டை மீறுகிறார்கள். அனைத்து அதிகாரமும் தங்களுக்கே வேண்டும் என்று செயல்படும் தேவேகவுடா குடும்பத்தினரின் செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
    ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயமாக ஜெயிக்காது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். #EVKSElangovan #ADMK #BJP
    சென்னை :

    திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் ஆஜரானார். அவருக்கு வழக்கு நகல் வழங்கப்பட்டது. இதன்பின்னர், வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்தார்.

    இதன்பின்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான், ஜெயலலிதா தொடர்ந்த வழக்கையே சந்தித்தவன். எடப்பாடி பழனிசாமிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வாய்ப்பு இருந்தால் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணை செய்ய தயாராக இருக்கிறேன்.

    என்னை பொறுத்தமட்டில் வழக்குகள் போடுவதன் மூலம் மட்டுமே எனது வேகம் அதிகரிக்கும். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? இல்லையா? என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.



    எதையெல்லாம் செய்வோமோ அதைத்தான் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக தந்துள்ளது. மோடியை போல் வாய்ச்சொல்லில் வீரராக இல்லாமல் செயல்பாட்டில் காங்கிரஸ் வீரனாக இருக்கும்.

    பா.ஜனதாவின் எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை. எனவே தான், பாஜக. மேலிடம் அறிவிப்பதற்கு முன்பே அவர் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். மேலிடம் பட்டியலை வெளியிடும்போது தான் ராஜாவின் பெயர் பட்டியலில் இருக்கப்போகிறதா? அல்லது ஆட்டுப்பட்டியில் அடைபட்டு போகிறாரா? என்பது தெரியும்.

    இந்தியா முழுவதும் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டி இருப்பதால் காங்கிரஸ் பட்டியல் வெளியாவது தாமதம் ஆகி உள்ளது. விரைவில் பட்டியல் வெளியாகும். அதிமுக. தோல்வி பயத்தில் மிரண்டு போய் உள்ளது.

    எப்படியாவது டெபாசிட் வாங்க வேண்டும் என்பதற்காக அதிமுக.வுக்கு ஓட்டு போட்டால் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று கூறி வருகிறார்கள். ஓட்டுக்கு ரூ.1,500 அல்ல, ரூ.5 ஆயிரம் கொடுத்தாலும் ஒரு இடத்தில் கூட அதிமுக.-பாஜக. கூட்டணி நிச்சயமாக ஜெயிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #EVKSElangovan #ADMK #BJP

    கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். #ponradhakrishnan #bjp #parliamentelection
    சென்னை:

    தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். 

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தனி தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

    கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். #ponradhakrishnan #bjp #parliamentelection
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 184 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டது. வாரணாசி தொகுதியில் மீண்டும் மோடியும், ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானியும் களமிறங்குகின்றனர். #ModiagaininVaranasi, #SmritiIraniagaininAmethi #LSpollsBJPlist
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 184 பாஜக வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட முதல் பட்டியலை டெல்லியில் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா இன்றிரவு வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 

    பாஜக மூத்த தலைவர் அத்வானி எம்.பி.யாக பதவி வகிக்கும் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் தேசிய தலைவர் அமித் ஷா இந்த தேர்தலில் நிற்கிறார். மத்திய மந்திரி நிதின் கட்காரி நாக்பூர் தொகுதியிலும், ராஜ்நாத் சிங் லக்னோவிலும், வி.கே.சிங் காசியாபாத் தொகுதியிலும், நடிகை ஹேமா மாலினி மதுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

    மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி இந்த முறையும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 4 லட்சத்து 8 ஆயிரத்து 651 வாக்குகளை வாங்கி வெற்றியடைந்தார். பாஜக வேட்பாளராக அவரை எதிர்த்து நின்ற ஸ்மிருதி இரானி ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது நினைவிருக்கலாம். #ModiagaininVaranasi, #SmritiIraniagaininAmethi #LSpollsBJPlist #LSpolls #BJPfirstlist
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் நானும் பிரதமர் வேட்பாளர்தான் என்று மாயாவதி அறிவித்துள்ளார். #mayawati #parliamentelection

    லக்னோ:

    இந்தியாவில் அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் இங்கு 80 தொகுதிகள் உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிரும், புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை.

    பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும், சமாஜ்வாடி 37 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள அஜீத்சிங் கட்சிக்கு 3 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, சோனியாவுக்காக அமேதி, ரேபரலி தொகுதியில் வேட்பாளரை நிறுத்த வில்லை.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்து இருந்தார். இதனால் அவரது கட்சி தொண்டர்கள் விரக்தி அடைந்தனர்.

    இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடா விட்டாலும் தான் பிரதமர் வேட்பாளர்தான் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதாவை வீழ்த்த நான் பிரசாரம் செய்ய இருப்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனாலும் எனக்கு பிரதமர் கனவு இருக்கிறது.

    1995-ல் நான் உ.பி. முதல் மந்திரியாக முதல் முறையாக பதவியேற்றேன். அப்போது நான் எம்.எல்.ஏ. வாகவும், எம்.எல்.சி.யாகவும் இல்லை.

    அதே சூழ்நிலைதான் தற்போதும் நிலவுகிறது. எம்.பி.யாக இல்லாத ஒருவர் மந்திரியாகவோ அல்லது பிரதமராகவோ தேர்வு செய்யப்பட்டால் அவர் 6 மாதங்களில் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.

    நானும் உயர் பதவிக்கு (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்டால் உ.பி.யில் காலியாக இருக்கும் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.

    இதனால் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்காக தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்.

    இவ்வாறு மாயாவதி கூறினார். #mayawati #parliamentelection

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    தேவேகவுடா பிரதமராக இருந்தவர். தான் வகித்த பதவிக்கு ஏற்ப பேச வேண்டும். இந்த தேர்தலில் பாஜக, இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றிபெற விடமாட்டோம் என்று அவர் சொல்வது சரியல்ல.

    நீங்கள் முன்பு வெற்றி பெற்ற 2 தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள முடியுமா? என்று பாருங்கள். அதன் பிறகு எங்கள் கட்சி பற்றி அவர் பேசுங்கள். தங்களின் அங்கீகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவே, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 தொகுதிகள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதை காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் மறக்கக்கூடாது.

    இந்த தேர்தலில் பாஜக 20 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. கூட்டணி அமைக்கப்பட்டவுடன் அதை மக்கள் ஒப்புக்கொள்வது இல்லை. பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தகராறு போட்டுக் கொள்கிறார்கள்.

    இத்தகையவர்களுக்கு எங்கள் கட்சியை பற்றி பேச தகுதி இல்லை. காங்கிரஸ் கட்சியை ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியை காங்கிரசாரும் தோற்கடிப்பார்கள். இதை பொறுத்திருந்து பாருங்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் போட்டியிட்டால், அதை பற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம். இதன் மூலம் காங்கிரஸ் எந்த நிலைக்கு வந்துள்ளது என்பதை அறிய முடியும்.

    பாஜகவினருக்கு மானம், மரியாதை இல்லை என்று சித்தராமையா அடிக்கடி சொல்கிறார். முதலில் அவருக்கு அது இருக்கிறதா? என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார். #Eshwarappa #BJP
    என்னிடம் இன்றைக்கு பொறுப்பை கொடுத்தால், மறுநாளே பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன் என டி.ஆர்.பாலு சவால் விடுத்துள்ளார். #TRBaalu #DMK
    தாம்பரம் :

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி ஆகியோர் வரவேற்றனர்.

    இதில் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது:-

    1 லிட்டர் பெட்ரோல் ரூ.74.75-க்கு விற்கப்படுகிறது. இது நியாயமான விலை கிடையாது என்று நான் சொல்கிறேன். காரணம் நான், 1996-ல் பெட்ரோலிய துறை மந்திரியாக இருந்தேன்.

    இன்றைக்கு என்னிடம் அந்த பொறுப்பை கொடுங்கள். நான் நாளை காலைக்குள் 40 ரூபாயாக பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன். மோடி எங்கெங்கோ சென்று சவால் விடுகிறார்.

    நான் சவால் விடுகிறேன். 40 ரூபாய்க்கு நான் பெட்ரோலை கொடுக்கிறேன். அப்படி செய்தால் பா.ஜனதாவினர் யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது. பா.ஜனதாவினரால் அது முடியுமா?.

    இவ்வாறு அவர் பேசினார். #TRBaalu #DMK
    கருணாநிதி கற்றுத்தந்த வழியில் நின்று ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். #mkstalin #parliamentelection #tngovt
    சென்னை:

    தஞ்சையில் திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தஞ்சை மண் என்பது கருணாநிதியின் மண். அதனால் தான் இங்கு வந்து நான் வாக்கு கேட்கிறேன்.  பிறந்த ஊரான திருவாரூரில் தொடங்கி வளர்ந்த ஊரான தஞ்சைக்கு வந்துள்ளேன். 

    தமிழகத்தில் மக்களை பற்றி சிந்திக்க கூடிய ஆட்சியா நடக்கிறது? மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் நிலை ஏற்படத்தான் போகிறது. 

    எனக்கு எவ்வளவு பொறுப்புகள், பதவிகள் கிடைத்தாலும் கருணாநிதியின் மகன் என்பதற்கு ஈடாகாது. அதிமுக ஆட்சிக்கு ஆதரவளித்த 18 பேரிடம் தற்போது பதவிகள் இல்லை. 18 பேருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்பதே என் கேள்வி.  கருணாநிதி கற்றுத்தந்த வழியில் நின்று ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #mkstalin #parliamentelection #tngovt
    நாடு முழுவதும் உள்ள 25 லட்சம் காவலாளிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியரும் காவலாளிகளாக மாற வேண்டும் என விரும்புகின்றார் என தெரிவித்தார். #PMModi #Chowkidar
    புதுடெல்லி:

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்தார். இதற்கு பதிலடியாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.

    மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி மாற்றியுள்ளார். (சவுகிதார்) ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்துள்ளார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும், வாட்ச்மேன்களாக பணியாற்றும் சுமார் 25 லட்சம் காவலாளிகளிடம் ஆடியோ வசதி மூலம் இன்று உரையாற்றினார்.  ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    காவலாளிகள் என்பதற்கான விளக்கத்தை உலகம் முழுவதும் உள்ள பல மொழிகளில் அர்த்தம் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும் காவலாளிகளாக மாற வேண்டும் என விரும்புகின்றார். ஆனால், தவறான நோக்கத்துடன், காவலாளி என்பது குறித்து சிலர் தவறாக பிரசாரம் செய்கின்றனர். அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவர்களின் வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியது எதிர்பாராதது.

    காவலாளிகள் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளனர். அனைத்துக் கொடுமைகளுக்கு எதிராகவும் இந்தியா போராடி வருகிறது. நமது ராணுவம் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும்என தெரிவித்துள்ளார். #PMModi #Chowkidar
    ×