search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    தூத்துக்குடி தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் தமிழிசை போட்டியிட்டால் சந்திக்க தயார் என்று திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். #DMK #Kanimozhi #TamilisaiSoundararajan
    சென்னை:

    தி.மு.க. எம்.பி.யும், தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளருமான கனிமொழி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடிய மிக மோசமான சூழ்நிலையை நாம் சந்தித்து இருக்கிறோம். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யால் தூத்துக்குடியில் சிறு தொழில்கள், வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு பெண்களும், இளைஞர்களும் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு புதிய தொழில் முயற்சிகளுக்கு சாத்தியம் உள்ளது. விவசாயிகளுக்கு உதவி செய்யக்கூடிய வழிவகைகள் இருந்தும் அது செயல்படுத்தப்படவில்லை.

    கிராமப்புற மக்களுக்கு பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை. எனவே அங்கு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.

    கேள்வி:- கலைஞர் இல்லாமல் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறீர்களே?

    பதில்:- கலைஞர் இல்லை என்பது எல்லோருக்குமே பாதிப்புதான். தனிப்பட்ட முறையில் தந்தை என்கிற வகையில் எனக்கு பெரிய வலியையும், வருத்தத்தையும உருவாக்கி உள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பக்கூடிய தலைவராக கடினமாக உழைக்கக்கூடிய தலைவராக எனக்கு வழிகாட்டக்கூடிய தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.



    கே:- தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறதே?

    ப:- இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. பா.ஜனதா என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. யாராக இருந்தாலும் தேர்தல் களத்தில் சந்திக்கலாம்.

    கே:- தமிழிசை போட்டியிட்டால் போட்டி கடுமையாக இருக்குமா?

    ப:- பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Kanimozhi #TamilisaiSoundararajan
    கேரளாவில் காங்கிரஸ் ஆதரவாளரான முன்னாள் துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இணைந்தார். #BJP #Radhakrishnan
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை மும்முனை போட்டி நடக்கிறது.

    கேரளாவில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, இப்போது நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் கணக்கை தொடங்கி விட தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

    இதற்காக கட்சி சார்பற்ற பிரமுகர்களை வளைத்து தேர்தலில் நிறுத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது.

    அதன்படி பிற கட்சிகளில் இருக்கும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து பாரதிய ஜனதா வேட்பாளர்களாக களம் இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நேற்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். டெல்லியில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இணைந்தார்.

    இவர் கேரள பப்ளிக்சர்வீஸ் கமி‌ஷன் முன்னாள் தலைவரான இவர் காலடியில் உள்ள ஸ்ரீசங்கராச்சார்யா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆவார்.

    முன்னாள் துணை வேந்தர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் சமீபத்தில் நடந்த சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றவர். இதனால் பக்தர்கள் மத்தியில் அறிமுகமானவர்.

    எனவே இவரை ஆலப்புழா பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. கேரள பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது இவரது பெயரும் பட்டியலில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. #BJP #Radhakrishnan
    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கட்சி மேலிடம் பரிசீலித்து நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #BJP
    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளிலும் காங்கிரசுடன் நேரடியாக மோதுகிறது.

    கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. தேசிய கட்சியான பா.ஜனதா வேட்பாளர்களை டெல்லி மேலிடம்தான் அறிவிக்கும்.

    எனவே தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிட உள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளிலும் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பெயர் பட்டியலை தமிழக நிர்வாகிகள் தயாரித்துள்ளனர்.



    இந்த பட்டியலுடன் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு கட்சி தலைவர் அமித்ஷாவிடம் பட்டியலை ஒப்படைக்கிறார். கட்சி மேலிடம் பரிசீலித்து நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்டியலை வெளியிடாவிட்டாலும் பெரும்பாலான தொகுதிகளில் தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்கள். கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா ஆகியோருக்கு சீட் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    தூத்துக்குடியில் தமிழிசை, ராமநாதபுரத்தில் நயினார்நாகேந்திரன் அல்லது குப்புராம் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதுபற்றி தமிழிசையிடம் கேட்டபோது கட்சி அதிகாரப் பூர்வமாக எப்போது யாரை அறிவிக்கிறதோ அதன்பிறகு தான் வேட்பாளர் யார் என்பது உறுதியாக தெரியும் என்றார். #LSPolls #BJP
    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பரிக்கர் உடல் நலக்குறைவால் இன்றிரவு காலமானார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
      
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். 

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு கனையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக சிகிச்சை பெற்றவாறு தனது இல்லத்தில் இருந்தபடி முதல் மந்திரிக்கான பணிகளை கவனித்துவந்த மனோகர் பரிக்கர், சிகிச்சை பலனின்றி இன்றிரவு காலமானார்.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar  
    ஆந்திரா மற்றும் அருணாச்சலப்பிரதேசம் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டது. #BJPcandidates #ArunachalPradeshelections #APAssemblyelections
    புதுடெல்லி:

    175  உறுப்பினர்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கு ஏப்ரல் 11-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் இங்குள்ள 123 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்  பட்டியலை பாஜக  தலைமை இன்று வெளியிட்டது.

    இதேபோல், 60 உறுப்பினர்களை கொண்ட அருணாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபைக்கும் ஏப்ரல் 11-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் 54 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட பட்டியலையும் பாஜக  தலைமை இன்று வெளியிட்டுள்ளது. 

    அருணாச்சலப்பிரதேசம் முதல் மந்திரி பெமா கன்டு முக்தோ தொகுதியில் போட்டியிடுவார் என இந்த பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. #BJPcandidates #ArunachalPradeshelections #APAssemblyelections 
    அதிமுக தலைமைக் கழகத்தில் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. #ADMK

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்று காலை நடைபெற்றது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து, தொகுதி நிலவரம், கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தனர்.

    யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    18 தொகுதிக்கும் மொத்தம் 311 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். அவர்கள் அனைவரும் இன்று நேர்காணலில் பங்கேற்றனர்.

    நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறுகையில் யார் வேட்பாளர் என்பதை நேரடியாக தெரிவிக்காமல் கட்சி நிறுத்தும் வேட்பாளரை கருத்து வேறுபாடுகளை மறந்து வெற்றி பெற செய்யபாடுபட வேண்டும் என்று பொதுவான ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவித்தனர்.

    நேர்காணல் நிகழ்ச்சி பகல் 12.30 மணிக்கு முடிவடைந்ததும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டச் செயலாளர்களுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளதால் யாரும் சோர்வாகிவிடக் கூடாது. நமக்கு வெற்றிதான் முக்கியம். அதற்கேற்ப பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டதாக மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர். #ADMK

    நடிகர் சத்ருகன் சின்கா எம்.பி.யாக இருக்கும் பீகார் மாநிலம், பாட்னா சாகிப் பாராளுமன்ற தொகுதியில் இந்தமுறை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பாஜக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தெரியவந்துள்ளது. #ShatrughanSinha #ShatrughanSinhacontest #PatnaSahib
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுக்க மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19-ம் தேதி வரை வாக்கு பதிவுகள் நடைபெற உள்ள நிலையில், மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகரும், பா.ஜனதாவில் இருக்கும் அதிருப்தியாளரும், பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவர் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    பாஜகவின் மிக மூத்த உறுப்பினர் என்பதால் கட்சியின் மேலிடம் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனினும், வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை அவருக்கு பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என்னும் பேச்சு பரவலாக உள்ளது.



    இந்நிலையில், பாஜகவின் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

    கட்சியின் முக்கிய பிரமுகர்கள் யார் யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்குவது என்பது தொடர்பாக இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டியிடலாம் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதே தொகுதியில் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.கே.சின்காவை நிறுத்தவும் ஆலோசிக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த சர்ச்சை தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சத்ருகன் சின்கா, (கட்சியின் முடிவு எதுவாக இருந்தாலும்) ‘நிலைமை எவ்வாறாக இருந்தாலும் மீண்டும்  பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுவேன்’ என தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். #ShatrughanSinha  #ShatrughanSinhacontest #PatnaSahib
    பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுவை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் இன்று டெல்லியில் கூடி பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினர். #LSpolls #BJP #CECmeeting
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுக்க மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19-ம் தேதி வரை வாக்கு பதிவுகள் நடைபெற உள்ள நிலையில், மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாஜகவின் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். 



    இந்த ஆலோசனை கூட்டத்தில், முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியும், லக்னோவில் ராஜ்நாத் சிங்கும் போட்டியிடலாம் என தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.

    பீகார், உத்தரகாண்ட், அசாம், அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, கேரளா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், அந்தமான் மற்றும் நிகோபார் சட்டசபை தேர்தல்களில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுதொடர்பான அடுத்த ஆலோசனை கூட்டம் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது. #LSpolls #BJP #CECmeeting
    பாராளுமன்ற தேர்தலில் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் அரசியல், மதத்தலைவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு பார்வையாளர்களை நியமிக்குமாறு தேர்தல் கமிஷனை டெல்லி பாஜக வலியுறுத்தியுள்ளது. #DelhiBJP #DelhiEC
    புதுடெல்லி:

    தேர்தல் காலங்களில் மத வழிப்பாட்டுத்தலங்களில் அரசியல் பிரமுகர்கள் வாக்கு வேட்டையாட செல்வதுண்டு. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் அதிகமான மக்கள் கூடும் வேளைகளிலும், வெள்ளிக்கிழமையன்று மசூதிகளில் நடைபெறும் ’ஜும்மா’ சிறப்பு தொழுகையின்போதும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதுண்டு.

    சில பகுதிகளில் மசூதிக்கு வருபவர்கள் இந்த வேட்பாளருக்குதான் வாக்களிக்க வேண்டும் என மதத்தலைவர்கள் பிரசாரம் செய்ததாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.



    இந்நிலையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வாக்கு சேகரிக்கும் அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் மதத்தலைவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு பார்வையாளர்களை நியமிக்குமாறு தேர்தல் கமிஷனை டெல்லி பாஜக இன்று வலியுறுத்தியுள்ளது.

    குறிப்பாக, முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இத்தகைய கண்காணிப்பு மிகவும் அவசியம் என டெல்லி தேர்தல் கமிஷனுக்கு இன்று அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #DelhiBJP #DelhiEC #SpecialObserver 
    ஒடிசா மாநிலத்தின் ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.பி. பாலபத்ரா மஜி, அமித் ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். #BalabhadraMajhi #AmitShah
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி நெருங்கிவரும் நிலையில் உள்கட்சியில் சீட் கிடைக்காத தற்போதைய எம்.பி.க்களில் சிலர் மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.



    அவ்வகையில், ஒடிசா மாநிலத்தின் ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நபரங்பூர் தொகுதி எம்.பி. பாலபத்ரா மஜி, இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். #BalabhadraMajhi #AmitShah
    உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மகனும் பாஜக பிரமுகருமான மணிஷ் கந்தூரி, ராகுல் காந்தி முன்னிலையில் இன்று காங்கிரசில் இணைந்தார். #ManishKhanduri #FormerUttarakhandCM #Rahulgandhi
    டேராடூன்:

    2007-2009 மற்றும் 2011-2012 ஆண்டுகளுக்கு இடையில் உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்தவர் புவன் சந்திரா கந்தூரி. ராணுவத்தில் மேஜராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவரை சுருக்கமாக பி.சி.கந்தூரி என அழைப்பதுண்டு. பாஜகவை சேர்ந்த இவர் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று எம்.பி.யாக பதவி வகிக்கிறார்.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூனில் நடைபெற்றுவரும் பிரசார கூட்டத்தில் உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மகனும் பாஜக பிரமுகருமான மணிஷ் கந்தூரி, ராகுல் காந்தி முன்னிலையில் இன்று காங்கிரசில் இணைந்தார்.

    இந்த இணைப்பு தொடர்பாக இன்றைய கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,  ‘மணிஷ் கந்தூரியின் தந்தையும் உங்கள் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியுமான பி.சி.கந்தூரியை நீங்கள் மிகவும் நன்றாக அறிவீர்கள்.

    ராணுவத்தில் முன்னர் பணியாற்றி பல தியாகங்களை செய்த  பி.சி.கந்தூரி தற்போதைய மத்திய அரசில் பாதுகாப்புத்துறை நிலைக்குழுவின் தலைவராக இருந்தார். ராணுவ வீரர்களின் நலனுக்கு என்னவெல்லாம் இந்த அரசு செய்ய வேண்டும்? என்று ஆலோசனை கூறியதற்காக பாதுகாப்புத்துறை நிலைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து அவர் தூக்கி எறியப்பட்டார். இப்போது அவரது மகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்’ என்று குறிப்பிட்டார்.



    ‘ராகுல் காந்தியின் தலைமையின்கீழ் மட்டுமே இந்தியா முன்னேற முடியும் என்பதை நம்புவதால் காங்கிரஸ் கட்சியில் இணையும் முடிவு தொடர்பாக எனது தந்தையிடம் தெரிவித்து ஆசி பெற்றேன்’ என மணிஷ் கந்தூரி தெரிவித்தார்.

    ராகுல் காந்தியின் பிரசார கூட்ட மேடையில் உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி பி.சி.கந்தூரியும் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. #ManishKhanduri #FormerUttarakhandCM #Rahulgandhi
    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கர்நாடக மாநிலம் கலபுரகி தொகுதியைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ParliamentElection #KarnatakaBJP #BJPLeaderShanappa
    கலபுரகி:

    கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரசை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர். அத்துடன் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் பாஜகவில் இணையப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்களை கட்சி தலைமை சமாதானப்படுத்தி ஆட்சியை தக்க வைத்தது.

    எடியூரப்பாவுடன் உமேஷ் ஜாதவ்

    எனினும், சின்சோலி தொகுதி எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் திடீரென‌ தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகிய அவர், கலபுரகியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவில் இணைந்தார். அப்போதே அவர் கலபுரகி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.

    தற்போது வேட்பாளர் தேர்வு நடைபெற்ற வரும் நிலையில், கலபுரகி தொகுதியில் போட்டியிட உமேஷ் ஜாதவுக்கு வாய்ப்பு வழங்க பாஜக முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினருமான கே.பி.ஷனப்பா கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாக இன்று அறிவித்தார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் தலைவர்களை புறக்கணித்துவிட்டு, வெளியில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறினார்.

    மேலும், விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.

    இவ்வாறு மாறி மாறி முக்கிய தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கட்சி தாவி வருவதால் கலபுரகி தொகுதி பரபரப்பாக காணப்படுகிறது. #ParliamentElection #KarnatakaBJP #BJPLeaderShanappa

    ×