search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும் என்று சிவோட்டர் மற்றும் இந்தியா டி.வி.- சி.என்.எக்ஸ் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. #BJP #SurveyPoll
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்று சிவோட்டர் நிறுவனமும், இந்தியா டி.வி.- சி.என்.எக்ஸ் நிறுவனமும் கருத்துக்கணிப்புகளை தனித்தனியாக நடத்தின.

    இந்த 2 கருத்து கணிப்புகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அந்த 2 முடிவுகளிலும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்பது தெரிய வந்துள்ளது.

    சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ள முடிவுகள் வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 264 தொகுதிகள் வெற்றி பெறும். பாரதிய ஜனதாவுக்கு மட்டும் 220 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 141 இடங்களே கிடைக்கும். இதில் காங்கிரசுக்கு மட்டும் 86 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

    பா.ஜனதா, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தவிர மாநில கட்சிகளுக்கும் அதிகளவு தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாநில கட்சிகளுக்கு 138 தொகுதிகள் வரை கிடைக்கக் கூடும்.

    உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஓரளவு வெற்றி கிடைக்கும். இந்த வெற்றிதான் பாரதிய ஜனதாவின் தனி பெருமபான்மையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு 29 இடங்களே கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா 71 இடங்களை கைப்பற்றி இருந்தது. அங்கு முன்பு போல பா.ஜனதா வெற்றி பெற்றால் 300 தொகுதிகளுக்கு மேல் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று விடும்.

    பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பலமான 272 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பில்லை. பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதால் சில மாநில கட்சிகள் பா.ஜனதாவை ஆதரிக்க வாய்ப்புள்ளது.

    மொத்தத்தில் நாடு முழுவதும் பா.ஜனதா கூட்டணிக்கு 31.1 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 30.9 சதவீதம், மாநில கட்சிகளுக்கு 28 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

    மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான தேர்தல் உடன்பாடு ஏற்படாததால் அந்த கட்சி கணிசமான தொகுதிகளில் தோல்வி அடையும் நிலையில் உள்ளது.

    பாரதிய ஜனதா கட்சிக்கு பீகாரில் 36, குஜராத்தில் 26, கர்நாடகாவில் 16, மத்திய பிரதேசத்தில் 24, மராட்டியத்தில் 36, ஒடிசாவில் 12, ராஜஸ்தானில் 20 தொகுதி களில் வெற்றி வாய்ப்பு உள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

    இவ்வாறு சிவோட்டர் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியா டி.வி.டி.என். எக்ஸ் நடத்திய கருத்து கணிப்புகளில் தெரிய வந்து இருப்பதாவது:-

    பாரதிய ஜனதா கட்சிக்கு வருகிற பாராளுமன்ற தேரதலில் 238 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 82 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

    பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகள் பெறும் இடங்களை கருத்தில் கொண்டு அந்த கூட்டணிக்கு 285 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி கிடைத்தால் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகபட்சமாக 126 இடங்கள் பெறவே வாய்ப்புள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். சமாஜ்வாடி கட்சிக்கு 18 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது.

    உத்தரபிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் கூட்டணி காரணமாக பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும். என்றாலும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

    மற்ற மாநிலங்களில் கிடைக்கும் வெற்றிகள் பா.ஜனதாவின் உத்தபிரதேச இழப்பை ஈடு செய்யும் வகையில் இருக்கும்.

    இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. #BJP #SurveyPoll
    அரசியலில் வாரிசுகள் வரக்கூடாது என்று சட்டம் எதுவும் கிடையாது என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #kumaraswamy

    பெங்களூரு:

    ஜே.டி.எஸ். கட்சியின் தேசிய தலைவரான தேவகவுடா ஏற்கனவே பிரதமராக இருந்தார். அவரது மகன் குமாரசாமி கர்நாடக முதல் மந்திரியாக உள்ளார். இன்னொரு மகன் ரேவண்ணா கர்நாடக மந்திரியாக உள்ளார். குமாரசாமியின் மனைவி அனிதா எம்.எல்.ஏ.வாக உள்ளார். ரேவண்ணாவின் மனைவி பவானி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்.

    இந்த நிலையில் குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் கவுடாவும் அரசியலில் குதிக்கிறார். அவர் மாண்டியா எம்.பி. தொகுதியில் ஜே.டி.எஸ். வேட்பாளராக போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது குறித்து கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அரசியலில் வாரிசுகள் வரக்கூடாது என்று சட்டம் எதுவும் கிடையாது. என் மகன் நிறுத்தப்படுகிறான் என்றால் வாரிசு அடிப்படையில் அல்ல. வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை பொறுத்தே சீட் வழங்கப்படுகிறது.

    நமது ஜனநாயக அமைப்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அது அவர்களின் உரிமை. வாரிசு வளர்ப்பு என்பது முக்கியமான வி‌ஷயம் அல்ல. தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதை தான் பார்க்க வேண்டும்.

    வாரிசுகள் அரசியலுக்கு வருவது எல்லா இடங்களிலும் தான் இருக்கிறது. நாங்கள் ஒன்றும் மறை முகமாக எங்கள் வாரிசை கொண்டு வரவில்லை. மக்களை சந்தித்தே அரசியலுக்கு கொண்டு வருகிறோம். மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகிறோம். அது மக்களின் முடிவு.

    எங்கள் பிள்ளைகளும் இந்த நாட்டின் குடி மக்கள் தானே, தேர்தலில் நிற்க அவர்களுக்கும் உரிமை இருக்கிறது.

    என் குடும்பத்தினர் யாரும் இனி அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று 8 மாதங்களுக்கு முன்பு சொன்னதை நினைவூட்டி கேட்கிறீர்கள். 8 மாதங்களில் அரசியல் சூழல்கள் எவ்வளவோ மாறிவிட்டது. கட்சித் தொண்டர்களின் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது.

    காங்கிரஸ், ஜே.டி.எஸ். தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. இன்னும் 2, 3 நாளில் தொகுதி பங்கீடு விவரம் வெளிவரும் எங்களுக்கு எத்தனை இடம் என்பது பிரச்சினை அல்ல. பா.ஜனதாவுக்கு எதிராக எத்தனை இடம் ஜெயிக்கிறோம் என்பது தான் முக்கியம். அதற்கேற்பவே எங்களின் களப்பணி இருக்கும். 22 முதல் 24 இடங்களை கைப்பற்றுவோம்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #kumaraswamy 

    தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டியில் பேசியுள்ளார். #admk #bjp #tamilisai #parliamentelection

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பா.ஜ.க. கொடியேற்று நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று கொடியேற்றி பேசியதாவது:-

    தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் வெற்றி பெறக் கூடிய கூட்டணியாக எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது. மாம்பழமும் பழுத்துக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் எல்லா கூட்டணியும் அறிவிக்கப்பட்டுவிடும். இதைப் பொறுத்துக் கொள்ளாமல் தான் எதிர்கட்சியினர் பதற்றத்தோடு இருக்கிறார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். 50 கோடி மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொடுத்திருக்கிறார். இலவச எரிவாயு சிலிண்டர் திட்டம், 8 கோடி இலக்கு வைத்து இதுவரை 7 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் இருக்கிறார். நிச்சயமாக எங்கள் கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி இந்திய தமிழர்களையும், இலங்கை தமிழர்களையும் பாதுகாக்கவில்லை. நிச்சயமாக இந்தக் கூட்டணி தோல்வியடையும். ஏனென்றால், தோல்வியடைந்த அனைவரும் அவர்களிடம் உள்ளனர். வைகோவின் கருப்புக் கொடிக்கும், அவரது கருப்புத் துண்டுக்கும், அவரது கருத்துக்கும் மரியாதை கிடையாது. காமராஜரை பற்றி பேச தகுதி படைத்த ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டும்தான். நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் மோடி பிரதமராக வர வேண்டும். மத்தியில் தாமரை மலர வேண்டும். மாநிலத்தில் அ.தி.மு.க. பலம் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #admk #bjp #tamilisai #parliamentelection

    மும்பை முதல் கோவை வரை யார் ஆட்சியில் குண்டு வெடித்தது என்று ராகுல்காந்திக்கு இல.கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார். #ilaganesan #rahulgandhi #pmmodi

    மதுரை:

    பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் யார் ஆட்சி காலத்தில் விடுதலை செய்யப்பட்டார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஏதோ வரலாற்று ரகசியத்தை கண்டுபிடித்த மாதிரி இப்போது கேள்வி கேட்டுள்ளார்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானில் காந்தகார் நகருக்கு கடத்தி சென்று விட்டனர்.

    இந்திய விமானத்தில் பயணித்த பயணிகளை விடுவிப்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் விதித்த ஒரே நிபந்தனை இந்திய சிறையில் இருக்கும் மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான்.

    இந்திய விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களோ எங்களது பிள்ளைகளுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் அதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதியை விடுவிக்கக்கூடாது என்றனர்.

    இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தூண்டுதலின்பேரில் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களை பிரதமர் வீட்டு முன்பு திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    இதனால்தான் பிரதமர் வாஜ்பாய் வேறு வழியின்றி மசூத் அசாரை விடுதலை செய்ய நேரிட்டது. இந்திய சிறையில் இருந்து மசூத் அசார் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கிய காரணம்.

    நான் ராகுல்காந்தியை பார்த்து கேட்கிறேன். இந்தியாவில் மும்பை முதல் கோவை வரையிலான பயங்கர குண்டு வெடிப்புகள் யார் ஆட்சி காலத்தில் நடந்தது.


    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மொழிப் பிரச்சினையை தூண்டும் வகையில் தமிழகத்தில் ஓடும் ரெயில்களுக்கு தேஜஸ், அந்தியோதயா என இந்தியில் பெயர் வைக்கலாமா? என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    அந்த கட்சியின் பெயரில் உள்ள மார்க்சிஸ்ட் தமிழ் வார்த்தையா? என்று கேட்க விரும்புகிறேன். ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 11, 12-ந்தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். அது கோடை விடுமுறை காலம். இதனால் அவர் சொல்லி இருக்கலாம்.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைக்க ஆளும் கட்சி தலைவர்களுக்கு துளியும் விருப்பமில்லை. ஆனாலும் பா.ஜனதா நெருக்கடி காரணமாகத் தான் தே.மு.தி.க.வுடன் பேச்சுவர்த்தை நடக்கிறது என்று கூறுவது சரியல்ல.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதை தமிழக முதல்வர் வரவேற்றுள்ளார். தமிழக அரசியலை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் பலத்தை அதிகப்படுத்துவதும், எதிர் கட்சிகளின் பலத்தை அதிகரிக்காததும் தான் ராஜதந்திரம். அத்தகைய பணிகளில்தான் அ.தி.மு.க. கூட்டணி ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் பாராளு மன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவு இல்லை. ராகுலுக்கு ஆதரவு என கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இல.கணேசன், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படாததால் மு‌ஷரப் அவ்வாறு கூறி இருக்கலாம் என்றார். #ilaganesan #rahulgandhi #pmmodi 

    வைகோ இருந்த கூட்டணி இதுவரையிலும் வெற்றி பெற்றது கிடையாது என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #Tamilisaisoundararajan #Vaiko
    தென்திருப்பேரை:

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    பாரத பிரதமர் மோடி தலைமையில் நாடு பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் நலனுக்காகவே 24 மணி நேரமும் கடந்த 5 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். பாரதியஜனதா அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு  தமிழக அரசு ரூ.2 ஆயிரமும் வழங்கி வருகிறது. வரிசையில் நிற்கவேண்டாம். இடைத்தரகர்கள் கிடையாது. நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லஞ்சம், ஊழல். ஆனால் மோடி ஆட்சியில் ஒரு ஊழல் கூற முடியுமா?

     தமிழ்மொழி ஏன் வழக்காடு மன்றத்தில் இல்லை என ஸ்டாலின் கேட்கிறார். 5 முறை தமிழகத்தை ஆண்ட நீங்கள் ஏன் வளர்க்கவில்லை. கனிமொழியை தானே வளர்த்தீர்கள்.



    மு.க.ஸ்டாலினுக்கு இன்னும் அரசியலே பிடிபடவில்லை. இது வரையிலும் வைகோ இருந்த கூட்டணி வெற்றி பெற்றது கிடையாது. எனவேதான் ம.தி.மு.க.வை தி.மு.க. கூட்டணியில் இருந்து விரட்டி விடுவதற்காக, அந்த கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டது.

    ஆனாலும் அந்த ஒரு தொகுதியையும் பெற்றுக்கொண்டு விட்டு, தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு ம.தி.மு.க. தயாராகி விட்டது. தி.மு.க.வினர் பகுத்தறிவாளிகள் என்று கூறிக்கொண்டு, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கோவிலுக்கு சென்று வருகின்றனர். ஆனால் நாம் ஆன்மிகவாதிகள் என்று கூறிக்கொண்டு தலைநிமிர்ந்து கோவிலுக்கு சென்று வருகிறோம்.

    தென் திருப்பேரை கரிசல் மண் அல்ல. காவி மண். நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். மீண்டும் தாமரை மலர்ந்தே தீரும்.

    இவ்வாறு அவர் பேசினார். #BJP #Tamilisaisoundararajan #Vaiko
    தேமுதிக தலைவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக தங்கள் முடிவை நாளைக்குள் அறிவிக்கும்படி அதிமுக மூத்த தலைவர்கள் கறாராக கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #LSPolls #ADMKAlliance #DMDK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இந்த கட்சிகள் தவிர விஜயகாந்தின் தே.மு.தி.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏற்கனவே 15 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 25 தொகுதிகளில் 4 தொகுதிகளை தே.மு.தி.க. வுக்கு தருவதாகவும் அ.தி.மு.க. தரப்பில் பேசப்பட்டது.

    ஆனால் 4 தொகுதிகளை ஏற்க மறுத்த தே.மு.தி.க. தங்களுக்கும் பா.ம.க.வுக்கு இணையாக 7 தொகுதிகள் வேண்டும் என்று முதலில் முரண்டு பிடித்தது. அ.தி.மு.க.வை மிரட்டும் வகையில் மற்றொரு பக்கம் தி.மு.க.வுடனும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது.

    மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேசியதால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அதிக தொகுதிகளை கேட்டு தி.மு.க.விடமும் தே.மு.தி.க. பிடிவாதம் பிடித்ததால் தி.மு.க.வினர் அந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கவில்லை.

    இதன் காரணமாக அ.தி.மு.க.விடம் கூட்டணி சேருவதை தவிர வேறு வழியில்லை என்ற பரிதாப நிலைக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டது. இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்கள் தே.மு.தி.க. தலைவர்களிடம் பேசி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தனர்.

    தே.மு.தி.க.வின் இரட்டை நிலை காரணமாக அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. தலைவர்கள் தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகள்தான் தர முடியும் என்று தெரிவித்தனர். பிறகு அது 4 தொகுதியாக அதிகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    4 தொகுதிகளை பெற்றுக் கொண்டு அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமாக தே.மு. தி.க. மூத்த தலைவர்களும் சம்மதித்துள்ளனர். ஆனால் கடந்த 2 நாட்களாக நேரம் சரியில்லை என்று கூறி கூட்டணி உடன்பாட்டுக்கு தே.மு.தி.க. தலைவர்கள் வரவில்லை.

    இதனால் தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் எத்தகைய நிலை எடுக்கும் என்ற கேள்விக்குறி நீடிக்கிறது.

    இந்த நிலையில் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளையும் சரமாரியாக தாக்கி பேசினார். அதோடு தனித்து போட்டியிட பயப்பட மாட்டோம் என்றும் ஆவேசமாக கூறினார்.



    பிரேமலதாவின் இந்த பேட்டி அ.தி.மு.க. மூத்த தலைவர்களை யோசிக்க வைத்துள்ளது. தே.மு.தி.க.விடம் கூட்டணிக்காக கெஞ்சக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

    பா.ஜனதாவின் வேண்டுகோளுக்காகவே தே.மு.தி.க.வையும் சேர்த்துக் கொள்ள அ.தி.மு.க. தலைவர்கள் முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் தே.மு.தி.க. தலைவர்கள் தொடர்ந்து தொகுதி பங்கீட்டை முடிவு செய்யாமல் இழுபறி செய்த படியே இருப்பது மற்ற தேர்தல் பணிகளை பாதிப்பதாக அ.தி.மு.க.வில் அதிருப்தி உருவாகி உள்ளது. எனவே தே.மு.தி.க.வுக்கு அ.தி.மு.க. தரப்பில் கெடு விதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    நாளை(ஞாயிற்றுக்கிழமை)க்குள் தே.மு.தி.க தனது முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அ.தி.மு.க. அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கி விடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கெடுவை அ.தி.மு.க. மூத்த தலைவர்களே மிகவும் கறாராக கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது.

    அ.தி.மு.க. தலைவர்களின் அதிருப்தி, கோபம் வெடிக்க தொடங்கி இருப்பதால் தே.மு.தி.க. தலைவர்கள் கூட்டணி பேச்சு வார்த்தையை நாளை காலை நடத்த திட்டமிட்டுள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை தே.மு.தி.க. தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச உள்ளனர்.

    அப்போது தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் உடன்பாடு ஏற்பட்டதும் இரு கட்சிகளின் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

    தே.மு.தி.க.வை தொடர்ந்து த.மா.கா.வுடனும் நாளை தொகுதி பங்கீட்டை அ.தி.மு.க. முடித்து விடும் என்று தெரிய வந்துள்ளது. தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு ஒன்று அல்லது 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    தோழமைக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள 19 அல்லது 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. நாளை தே.மு.தி.க., த.மா.கா.வுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டால் அ.தி.மு.க. கூட்டணி உடன்பாடு முழுமை பெற்று விடும்.

    இதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் தொகுதிகள் ஒதுக்கீடும் முடிவு செய்யப்பட்டு விடும். 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    பா.ஜனதா, பா.ம.க. வேட்பாளர்களையும் அடுத்த வாரம் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. #LSPolls #ADMKAlliance #DMDK
    பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரல்வாய்மொழி, நாகர்கோவிலில் நாளை வைகோ-காங்கிரசார் கருப்பு கொடி போராட்டம் நடத்துகிறார்கள். #modi #vaiko #congress

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மத்திய அரசு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி அரசு விழாக்களில் பங்கேற்க தமிழகம் வந்தால் அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கன்னியாகுமரிக்கு நாளை பிரதமர் மோடி வருகிறார். அரசு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

    இது பற்றி குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வெற்றிவேல் கூறியதாவது:-

    கன்னியாகுமரிக்கு நாளை பிரதமர் மோடி வர இருக்கிறார். அரசு விழாவிலும் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டப்படும்.

    ஆரல்வாய்மொழி சந்திப்பில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான ம.தி.மு.க. வினர் கலந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினரும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

    நாகர்கோவில் வேப்ப மூட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக குமரிகிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    போலீசார் அனுமதி மறுத்தாலும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று காங்கிரசார் கூறியுள்ளனர். #modi #vaiko #congress

    பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல், சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளனர் என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார். #kanimozhi #admk #bjp #parliamentelection

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே சிவஞானபுரம், ஏ.வேலாயுதபுரம் ஆகிய இடங்களில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    தி.மு.க.வின் ஊராட்சி சபை கூட்டம் பொதுமக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இதுபோன்ற ஊராட்சி சபை கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு, மக்களின் அனைத்து குறைகளும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசும் மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் மிரட்டலுக்கு பயந்து, தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு, பா.ஜ.க.வுக்கு காவடி தூக்கி வருகிறது.

    நீட் தேர்வு திணிப்பு, ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் போன்றவற்றில் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல், மக்கள் விரோத போக்கை அ.தி.மு.க. அரசு கடைப்பிடித்து வருகிறது. தமிழக அரசின் தவறான கொள்கைகளால், கிராமங்களில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன.

    கிராமங்கள்தோறும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல், சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளனர்.

    மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டு எதிர்த்த பல திட்டங்களை தற்போது அ.தி.மு.க. அரசு ஆதரித்து வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு கூட நேர்மையாக இல்லாத அ.தி.மு.க.வினர், மக்களுக்கு எப்படி நேர்மையாக இருப்பார்கள்?. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று, சந்தர்ப்பவாத கூட்டணிக்கு பாடம் புகட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #kanimozhi #admk #bjp #parliamentelection

    அ.தி.மு.க.,-பா.ஜ.க. கூட்டணியின் வாக்குகள் நோட்டாவிற்கு கீழ் செல்லும் என அ.ம.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். #parliamentelection #admk #thangatamilselvan

    திருப்பரங்குன்றம்:

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    துணைச்செயலாளர் எஸ்.எஸ்.டி.மனோகரன், ஒன்றிய செயலாளர் கருத்தக் கண்ணன், பேரவை மாவட்ட செயலாளர் செல்வம், பகுதி செயலாளர் ராமமூர்த்தி, சுமதிமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பகுதி செயலாளர் வீரமணி வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் அ.ம.மு.க. வில் உள்ளனர். மத்திய, மாநில அரசு மீது மக்கள் அதிருப்தி உள்ளது. பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு எதிரான வாக்குகள் அ.ம.மு.க.விற்கே வந்து சேரும்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த ஆட்சியை எதிர்க்க திராணி இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளதால் தி.மு.க.விற்கு வாக்களிக்க மாட்டார்கள். பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணி குறித்து சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளை பார்த்தால் ராமதாஸ், அன்புமணி ஆகிய. இருவரும் தமிழகத்தை விட்டே வெளியேறும் நிலை உருவாகும். அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் நோட்டாவிற்கு கீழ் செல்லும்.

    இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும் என்பதை அ.ம.மு.க. நிர்ணயிக்கும், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுப்போம். அடிமை அரசின் அவலத்தால் மத்தியஅரசு தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது.

    ஆர்.கே.நகரை போன்று வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க.விற்கே வெற்றி எளிதில் கிட்டும். இளம் வாக்காளர்கள் அ.ம.மு.க.வின் பக்கமே உள்ளனர்.

    மெகா கூட்டணி, மேஜிக் கூட்டணி அமைத்தாலும் வெற்றி அ.ம.மு.க. விற்கே, அடுத்த ஆட்சி அ.ம.மு.க.வின் ஆட்சி தான் என்பதை பொதுமக்களே கூறுகின்றனர். அ.ம.மு.க. ஒன்றரை ஆண்டில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.

    தீப்பெட்டி கூட எடுத்துச் செல்ல முடியாத காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திடீரென தாக்குதல் நடத்துவதற்கான சூட்சுமம் என்ன? பாராளுமன்ற தேர்தல் வருமா? போர் வருமா? என்ற நிலை உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை தழுவும், அ.ம.மு.க. 40 இடங்களிலும் வெல்லும்.

    ஆறுமுகசாமி ஆணையத்தை நியமித்த நிலையில் அம்மா இறப்பில் மர்மம் இல்லை என்பது தெரிந்தால் சசிகலாவிற்கு ஆதரவு பெருகும் என்ற நிலை உள்ளது.

    எனவே ஆணையம் விசாரணை முடிவுக்கு வரவில்லை. தர்ம யுத்தம் நடத்திவிட்டு தற்போது ஆணையத்தில் ஆஜராகாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காலம் தாழ்த்தி வருகிறார்.

    வழக்கை முடிக்காமல் பா.ஜ.க.. அ.தி.மு.க. மூடி மறைக்கிறது. மக்களவை தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இளைஞரணி செயலாளர் டேவிட் அண்ணாத் துரை, அமைப்பு செயலாளர் சோழன் பழனிச்சாமி, ஒன்றிய துணைச்செயலாளர் நிலையூர் முத்துராஜா, ஆசைத்தம்பி, சங்கேஸ்வரன், பி.முருகன், முருகன், ரங்கராஜ், கிருஷ்ணமூர்த்தி, சூரி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். #parliamentelection #admk #thangatamilselvan

    எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பிரதமர் மோடி குமரியில் நாளை பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #BJP #PMModi
    நாகர்கோவில்:

    மத்திய அரசின் சார்பில் குமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைப்பார் என்றும், இதற்கான விழா கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் மேடை அமைக்கும் பணி நடந்தது. பிரதமர் வருகைக்கான முன்னேற்பாடுகளும் தொடங்கியது.

    பிரதமர் மோடி கன்னியாகுமரி வரும்போது, பாரதிய ஜனதா கட்சி சார்பில் இங்கு அரசியல் பிரசார கூட்டம் நடத்தவும், கட்சி தலைவர்கள் திட்டமிட்டனர். இதற்காக அரசு விழா நடைபெறும் மைதானத்தின் அருகிலேயே இன்னொரு தனி மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளும் வேகமாக நடந்து வந்தது.

    இதற்கிடையே பிரதமர் மோடியின் வருகை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை பகல் 2.30 மணிக்கு திருவனந்தபுரம் வருகிறார்.

    திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைகிறார். அங்கிருந்து விழா மேடைக்கு காரில் செல்கிறார். பிரதமர் செல்லும் பாதைகள், அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் ஆகியவற்றின் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. டெல்லியில் இருந்து வந்த பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த ஒத்திகையை நடத்தினர்.

    விழா நடைபெறும் மைதானத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், பாரதிய கட்சியின் மேலிட பார்வையாளர் முரளிதரராவ் ஆகியோர் பார்வையிட்டபோது எடுத்த படம்.

    பிரதமரின் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வந்த நிலையில் விழா மைதானத்தில் அரசு மற்றும் கட்சி பிரசார கூட்ட மேடைகள் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வந்தது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று இரவு திடீரென பிரதமரின் அரசியல் பிரசார கூட்ட மேடை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறும்போது, இந்திய எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளதால் பிரதமரின் பிரசார கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

    பிரதமரின் பாதுகாப்பு மற்றும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரிகளும், கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். தமிழகம் மற்றும் குமரி மாவட்டத்தில் திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் திட்டங்களை பிரதமர் மக்களுக்கு அர்ப்பணிப்பார்.

    அரசு நிகழ்ச்சி முடிந்ததும், அவர் உடனடியாக டெல்லி திரும்பி விடுவார் என்று கூறினர். அதற்கேற்ப பிரதமரின் புதிய பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார்கள்.

    அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார்கள். அவர்களை உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.

    கன்னியாகுமரிக்கு பிரதமர் வருவதையொட்டி இன்றும், நாளையும் கன்னியாகுமரி கடலோர கிராமங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு கருதி மீனவர்கள் யாரும் இன்று முதல் 2 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் கன்னியாகுமரியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். #BJP #PMModi
    டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பாஜக பூத் கமிட்டியுடன் உரையாடிய பிரதமர் மோடி, பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். #PMModiSpeech
    புதுடெல்லி:

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம் மீதான இந்திய விமானப்படை தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும், உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி இன்று விடியோ கான்பரன்சிங் மூலம் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எல்லையில் நடந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பரப்பும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். நமது இந்திய ராணுவத்தினர் மீது முழு நம்பிக்கை உள்ளது. இந்தியாவை பிரித்தாள பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.  நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து  மலைபோல் உறுதியாக இருந்து எதிரிகளின் சூழ்ச்சிகளை வீழ்த்துவோம்.  ஒற்றுமையாக செயல்பட்டு , போரிட்டு வெற்றி காண்போம்.



    நாட்டு  மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் நாம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இதற்காக அனைத்து துறைகளும் திறம்பட செயல்பட வேண்டும். மேலும் இந்திய  நாட்டை காப்பவர்களை  எண்ணி இந்தியா பெருமை அடைந்துக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModiSpeech
    மத்திய பாரதிய ஜனதா ஆட்சியிடமிருந்தும், அவர்களுக்க அடிமை சாசனம் எழுதி கொடுத்த அ.தி.மு.க. அரசிடமிருந்தும் நாட்டையும், மக்களையும் மீட்க வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    கோவை:

    கோவை கொடிசியாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது-

    எனது தந்தை கம்யூனிஸ்ட் கொள்கையில் ஆர்வம் கொண்டு எனக்கோ அன்றைய தினத்தில் இறந்த ரஷிய அதிபரின் பேரான ஸ்டாலின் என்ற பெயர் வைத்து உள்ளார்.

    இப்பெயரால் எனக்கு பள்ளியில் இடம் தர மறுத்து நிர்வாகம் அறிவுறுத்தியது.பெரியாரை கலைஞர் சந்திக்காவிட்டால் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருப்பார்.மா. சிங்கார வேலுவிற்கு 1925- ல் கம்யூனிஸ்டு கட்சி கொடி ஏற்ற வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் ரஷிய அதிபர் ஸ்டாலினை பெரியார் சந்தித்து இருந்தால் தி.மு.க. என்ற இயக்கம் வந்திருக்காது.

    அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்ற ஆட்சி கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சி. மக்களுக்கு பயன் தராத ஆட்சி எடப்பாடி, மோடி ஆட்சி. ரபேல் ஊழலில் லஞ்சம் இல்லை என எதிர் கட்சிக்கு பிரதமர் இதுவரை பதில் தர இல்லை. 5 விமான நிலையங்கள் பராமரிப்பு செய்ய அதானி குடும்பத்திற்கு ஒதுக்கியது ஊழல் இல்லையா?

    இந்த ஆட்சி தொடர்ந்தால் பல அனிதாக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டி இருக்கும். தற்போது இருப்பது எம்.ஜி.ஆர். ஆட்சி அல்ல.

    பாரதிய ஜனதா ஆட்சியில் ஊழல் ஒரே இடத்தில் உள்ளது. இதற்காக ஒரே நாடு என்ற கோசத்தை முன்னிலைபடுத்தி வருகின்றனர். பல நேரங்களில் பல வீரர்கள் உயிரிழந்தனர். இதனை மூடி மறைக்க பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயல்கிறார். இந்த ஆட்சி தொடர்ந்தால் வேலை வாய்ப்பு பறிபோகும். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நாட்டை விற்று கொண்டிருக்கும் மத்திய பாரதிய ஜனதா ஆட்சியிடமிருந்தும், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்த அ.தி.மு.க. அரசிடமிருந்தும் நாட்டையும், மக்களையும் மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    2 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் மத்திய அரசு 15 லட்சத்தை தருவதாக அறிவித்து ஏன் இது நாள் வரை தரவில்லை. தமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது. தமிழிசை கூறுவது போல ஒரு போதும் மலராது. இந்தியா முழுவதும் தாமரை கருகி கொண்டு உள்ளது. 21 சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி அரசு வீட்டிற்கு செல்லும். எந்த முகத்தோடு எடப்பாடிக்கு ராமதாஸ் வாங்கு கேட்பார். எடப்பாடி பா.ம.க.வினருக்கு அல்வா கொடுத்து உள்ளார். ஓபிஎஸ் வழக்கு தீர்ப்பு வரும்போது இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். அமித்ஷா அண்ட புளுகை அரங்கேற்றி வருகிறார். அனைத்து மக்கள் நலன்களை காக்க உருவான அணி இந்த அணி. 40 மக்களவை தொகுதியிலும், 21 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

    ஒரு யுத்தம் மூண்டு விட்ட பிரமையை சித்தரித்து கொண்டிருக்கின்றனர். எல்லையை காக்கும் இந்திய வீரர்களை எங்கள் மனதில் பூஜிக்கிறோம். நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தா? மோடி ஒரு பாசிஸ்ட் என குற்றம்சாட்டுகிறேன் , அவரிடம் நேராகவே கேட்பேன்.

    முசோலினி ,ஹிட்லர் போல மோடி பேசுகிறார். கம்யூனிஸ்ட் வளர்ந்து வருவதை பொறுக்காமல் பெர்லின் பாராளுமன்ற கட்டிடத்தை ஹிட்லரே எரித்து விட்டு கம்யூனிஸ்ட் மீது குற்றம்சாட்டினர். இதே போலவே முசோலினியும் செய்தார் தான் நினைத்ததை சாதிக்க எதை வேண்டுமானாலும் செய்ய துணிபவர் தான் பாசிஸ்ட். 6 சர்வதேச விமான நிலையங்கள் அதானிக்கு 50 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது-

    இந்தியா மதவெறி சக்திகளிடமும் ,கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடகு வைக்கப்படுகிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருந்தால் இப்போது வரை 10 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும் . 15 லட்சம் ரூபாயின் மதிப்பு 6ஆயிரம் ரூபாயாக குறைந்து விட்டது. தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சி என்பதால் கொத்தடிமை கூட்டணியாக அமைந்திருக்கின்றது. எதிர்கால சந்ததிக்கு வாழ்வா? சாவா ? ஜனநாயகம் இருக்க வேண்டுமா? இல்லையா ? என்பதற்கான தேர்தல். இப்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு பயங்கரவாதத்திற்கு எதிராக கொந்தளிப்பு. இதை மோடிக்கு ஆதரவாக மாற்ற முயல்கின்றனர் இதனால் தேர்தலை தள்ளிப்போடுவார்களோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டு இருக்கின்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விடுதலை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது-



    நாட்டையும், தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது கொள்கை சார்ந்த கூட்டணி. தொலைநோக்கு பார்வையில் உருவான கூட்டணி. ஸ்டாலினை முதல்வராக முன்னிலைபடுத்தி 40 இடங்களிலும் வெற்றி பெற கூடிய கூட்டணி. சனாதன சக்திகளை விரட்டியடிக்க இந்த மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றியிருப்பது வரவேற்கதக்கது. சாதி மத வெறி கும்பல்களிடையே இந்த ஆட்சி பிடி கொண்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மகாத்மா காந்தியின் படத்தை பொது இடத்தில் வைத்து துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர். இந்திய அரசியலைப்பு சட்டத்தை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தூக்கி எறிவர். ஒரே மதம். ஒரே மொழி, என்ற ஒற்றை கோட்பாடு கொண்டு எதிர் கால திட்டத்தில் செயல்படுகிறது. போர் நடக்கும் சூழல் உருவாகி உள்ளதால் தேர்தல் தள்ளி போகலாம் என்ற செய்தி வருகிறது. தேசத்தையும், தமிழகத்தையும் காப்பதற்காக இங்கு ஒன்று பட்டு உள்ளோம். மக்களிடையே பகையை உருவாக்க முயற்சி நடக்கிறது. கார்ப்பரேட் முன்னேற்றத்திற்கு ஆதரவாக இந்த ஆட்சி உள்ளது. எதிர் கட்சி கேள்விக்கு மோடியிடம் பதில் இல்லை. அயல் நாட்டு பயணங்களில் கார்ப்பரேட் நிர்வாகிகள் உடன் சென்றனர். 2000 ரூபாய் விவசாயிகள் வங்கியில் செலுத்த மோடி அரசு முனைப்புடன் உள்ளது. அதனை தொடர்ந்து எடப்பாடி அரசு நலிந்த தொழிலாளர்கள் கணக்கில் 2000 செலுத்தப்படுகிறது. மோடி அரசை காப்பி அடிக்கும் அரசாக உள்ளது. பா.ம.க.இந்த கூட்டணிக்கு வராததால் தமிழகம் காப்பாற்றப்பட்டு உள்ளது. சாதி வெறி, மத வெறி அப்புறப்படுத்த வேண்டும். சமூக நீதியை காப்பாற்றுவதை தவிர வேற நாதியில்லை. ஆகவே நாங்கள் அனைவரும் கை கோர்த்து நிற்கிறோம். இந்திய தேசத்தை காப்பாற்ற மோடி ஆட்சியை அப்புறப்படுத்துவோம். மாநிலத்தில் எடப்பாடி அரசு விரட்டியடிக்கப்பட்டு அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது-

    மக்களை ஒன்றினைப்பதற்காக மட்டுமே தி.மு.க. தலைமையில் இந்த கூட்டணி. மிக, மிக வலுவான கூட்டணி தமிழகத்தில் உருவாக்கியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மதசார்பின்மைக்கு இந்த கூட்டணியே சான்று. இந்தியா ஒன்றுமைக்கு நலன் பயக்கும் அனைவரையும் சகோதர்களாகவே பார்ப்போம். இந்தியாவை முன்னேற்றியதில் 10 ஆண்டுகாலத்தில் 7 ஆயிரம் கோடி விவசாய கடனை கலைஞர் தள்ளுபடி செய்தார். தேர்தல் நேரத்தில் 6000 வழங்குவது எந்த விதத்தில் பயன் அளிக்கும். இந்திய பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. புதிய தொழிற்சாலை உருவாக இல்லை. வளர்ச்சியை உருவாக்க மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. செயல் திட்டம் என்பது மோடி , எடப்பாடி அரசுக்கு இல்லை. இட ஒதுக்கீட்டை அமல் படுத்தியவர் நேரு. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டை பெரியார் முன் எடுத்து சென்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், டி.ராஜா, சுதாகர் ரெட்டி, நல்லகண்ணு, தா. பாண்டியன், மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பேசினார். #DMK #MKStalin
    ×