search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை முறையான அழைப்பு வராததால் மோடி பதவி ஏற்பு விழாவை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க உள்ளனர்.
    சென்னை:

    நரேந்திர மோடி இன்று 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் செய்யப்பட்டு வருகிறது.

    விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் இவ்விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் 20 பேருக்கும் அழைப்பிதழ் வந்துள்ளது.


    ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை முறையான அழைப்பு வரவில்லை. எனவே மோடி பதவி ஏற்பு விழாவை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 20 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 3 பேர் என தி.மு.க. வுக்கு மொத்தம் 23 எம்.பி.க்கள் உள்ளனர்.

    இதன் மூலம் பா.ஜனதா, காங்கிரசை அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. விளங்குகிறது. ஆனாலும் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்காதது தி.மு.க. தலைவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தால் மட்டும் தான் நாங்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்போம் என தி.மு.க. செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

    மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் பிரசாரத்தின்போது மோடியை கடுமையாக தாக்கி பேசி இருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து பேசினார். என்றாலும் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றபோது மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது என தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

    பா.ஜனதா நிர்வாகிகள் கூறும்போது, மு.க.ஸ்டாலினின் மோடிக்கு எதிரான பிரசாரத்தால் எங்கள் மேலிடம் வருத்தம் அடைந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் எங்கள் கட்சியை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

    எங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு சமூக வலைதளங்களில் சரியான பதிலடி கொடுக்க தயாராகி வருகிறோம். மு.க.ஸ்டாலின் தான் எங்களுக்கு முதல் எதிரி என்றனர்.
    மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி மேலும் ஒரு எம்.எல்.ஏ. இன்று பாஜகவில் இணைந்தார்.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும்  மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. யாரும் எதிர்பாராத வகையில் பாஜக அதிக இடங்களை பிடித்துள்ளது.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சுப்ரான்ஷு ராய், துஷார்காந்தி பட்டாச்சார்ஜீ மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. தேவேந்திர ராய் என மொத்தம் மூன்று மேற்கு வங்காளம் மாநில சட்டசபை உறுப்பினர்கள் நேற்று பாஜகவில் இணைந்தனர்.

    டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளை சேர்ந்த 50-க்கும் அதிகமான கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்தனர். 

    இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கைலாஷ் விஜய்வார்கியா, ‘மேற்கு வங்காளத்துக்கு பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்ததுபோல் பாஜகவில் இணையும் விழாக்களும் 7 கட்டங்களாக நடக்கப் போகிறது. இன்று (நேற்று) வெறும் முதல் கட்டம்தான் முடிந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதற்கேற்ப, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான மனிருல் இஸ்லாம் இன்று கைலாஷ் விஜய்வார்கியா இன்று முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

    அவருடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கடாஹர் ஹசாரா, முஹம்மது ஆசிப் இக்பால், நிமாய் தாஸ் ஆகியோரும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
    அமெரிக்காவின் மிகப்பெரிய நட்பு நாடான இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்ற அந்நாட்டின் அதிபர் தலைமையிலான அரசு நிர்வாகம் மீண்டும் உறுதி அளித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மோர்கன் ஆர்டாகஸ் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலில் அமைதியாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் சிறப்பாக நடைபெறுகிறது. தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்ற மோடிக்கும், அவரது பா.ஜனதா கட்சிக்கும் அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் வெளியுறவு மந்திரி மைக் பால்பியோ உள்ளிட்ட டிரம்ப் நிர்வாகம் வாழ்த்து செய்தி அனுப்பியது.

    இந்தியா அமெரிக்காவின் மிகப்பெரிய நட்புநாடு. எனவே அமெரிக்கா பிரதமர் மோடியுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும். முக்கிய பிரச்சனைகள் குறித்து வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ மிகவும் அதிதீவிரமாக ஆலோசனை நடத்த உள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.


    பிரதமர் மோடியின் வெற்றியை அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க எம்.பி.க்கள், மூத்த அரசு அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுவரை 50 எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள், மூத்த அரசு அதிகாரிகள் மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.

    அமெரிக்காவின் வலுவான நட்பு நாடாக இந்தியா தொடர்கிறது. தேர்தலில் வெற்றிபெற்ற மோடிக்கு வாழ்த்துக்கள். தங்கள் நட்பு தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என அமெரிக்காவாழ் இந்தியரும் அரசியல்வாதியுமான நிக்கிஹாலே டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
    பாரதிய ஜனதா கூட்டணியில் இருப்பதால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக பெற்றுத்தருவோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தக வளாகத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையவில்லை. இந்தியா முழுவதும் மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் இங்கு தமிழகத்துக்கு எதிராக பாரதிய ஜனதா இருப்பது போல சித்தரிப்பு, தொடர்ந்து பல்வேறு வகையில் எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரம் செய்த காரணத்தால் தமிழக மக்கள் ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். தேசிய நீரோட்டத்தோடு சேர்ந்து நாமும் வாக்களித்து இருக்கலாம் என்று இன்று மக்கள் வருத்தப்படுகின்றனர்.

    அதேபோல மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர்.

    தி.மு.க.வை பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவுகள் பெருத்த ஏமாற்றம்தான். மே 23-ந் தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும் என ஸ்டாலின் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார். ஆனால் மாற்றம் வரவில்லை. ஸ்டாலினுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.

    தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும், நாங்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருப்பதால் தமிழர்களின் நலன் கருதி தமிழர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறாமல் தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதனை கண்டிப்பாக பெற்றுத் தருவோம்.

    இந்த பணியை நாங்கள் தான் செய்ய முடியும். தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும் அவர்களால் இதனை செய்ய முடியாது. எப்படி அவர்கள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்கிறார்களோ? அதே போல் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்யலாம். அதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் சாதிக்க முடியாது. தி.மு.க. பெற்றுள்ளது பயனில்லாத வெற்றி.

    தூத்துக்குடியை பொருத்தவரை கனிமொழி வெற்றி பெற்றிருந்தாலும் கூட, கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிலுக்கும், கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கும் அவர்களால் குரல் கொடுக்க முடியாது. வெற்றி -தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தமிழகத்துக்கு தேவையான திட்டங்களைப் பெற்று தரும் வகையில் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே சாதிப்பது நாங்கள்தான். தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவோம், தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் எங்களது ஸ்லீப்பர் செல்கள் மறுபடியும் வருவார்கள் என தினகரன் கூறியது நல்ல ஜோக்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உள்நாட்டு அரசியல் சூழ்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாத நிலை உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரோஷி தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி நாளை (30-ந்தேதி) 2-வது முறை பிரதமராக பதவி ஏற்கிறார்.

    இந்த விழாவில் வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நோபளம், பூடான், கிர்கிஸ்தான், மொரீசியஸ் உள்ளிட்ட 14 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரோஷி இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரம் முழுவதும் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டே நடைபெற்றது. இத்தகைய உள்நாட்டு அரசியல் சூழ்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாத நிலை உள்ளது.



    இது எதிர்பாராதது. இத்தகைய பிரச்சனையில் இருந்து இந்தியா விரைவில் விடுபடும். இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர நட்புறவுடன் திகழ வேண்டும் என பிரதமர் இம்ரான்கான் விரும்புகிறார். எனவே தான் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜனதா கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இப்பிராந்தியம் வளர்ச்சி பெற காஷ்மீர், சியாசின் மற்றும் சர்கிரீக் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    மோடியின் பதவியேற்பு விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்பதாக கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

    மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் மோடியும் மம்தாவும் மோதிக்கொண்ட நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

    இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் தெரிவித்தார். பதவியேற்பு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் கலந்துகொள்வதாகவும், பதவியேற்பு விழாவில் பங்கேற்பது தொடர்பாக பிற மாநில முதல்வர்களுடனும் பேசியிருப்பதாகவும் மம்தா கூறினார்.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் மற்றும் ஏராளமான கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் இணைந்தது திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையிலும் மம்தா, டெல்லி சென்று மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தல் குறித்து விமர்சனம் செய்த எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பா.ஜ.க.வினர் காவி வேட்டி அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    சென்னையில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசும் போது தேர்தல் முடிவுக்கு முன் வெளியான கருத்து கணிப்பை வைத்து தமிழகத்தை பொறுத்தவரை தப்பித்து கொள்வோம்.

    ஆனால் வெளியில் பொறுத்தவரை கண்டிப்பாக தவறு செய்திருப்போம். மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டி கொண்டு அலைய போவதாக பாரதீய ஜனதாவை மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றி வெற்றி பெற்றதை தொடர்ந்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா இளைஞரணி சார்பில் எஸ்.ஏ. சந்திரசேகரக்கு காவி வேட்டி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த காவி வேட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து பதிவு தபால் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா இளைஞரணி நிர்வாகிகள் கூறியதாவது-

    ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டது பாரதநாடு. இனி வரும் நாட்களில் நாட்டில் காவியே பிரதானமாக இருக்கும்.


    டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் காவியை குறிப்பிட்டு பேசியதாலும், பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெரும் வெற்றி பெற்றதாலும் அவருக்கு காவி வேட்டியை அனுப்பி உள்ளோம்.

    மாதந்தோறும் தொடர்ந்து அவருக்கு காவி வேட்டி எங்கள் சார்பில் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    புதுவை கவர்னர் கிரண்பேடி அவசரமாக டெல்லி சென்றுள்ள நிலையில் அவர் வேறு மாநிலத்தில் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி 2016 மே 29-ந்தேதி பதவியேற்றார்.

    கிரண்பேடி பதவியேற்ற பிறகு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. பதவியேற்றது முதல் கவர்னர் கிரண்பேடிக்கும், புதுவை அமைச்சரவைக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வந்தது.

    கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் ஆட்சியாளர்களை விமர்சித்து வந்தார். இதற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என நாராயணசாமி கூறினார். ஆனால், கவர்னர் இதை ஏற்க மறுத்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


    இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதிசெய்தது. இனியாவது கவர்னர் கிரண்பேடி தீர்ப்பை ஏற்று மாநில அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சரவை வலியுறுத்தியது.

    இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னருக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.

    இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக கவர்னர் தனது செயல்பாடுகளை குறைத்து அமைதியாக இருந்து வந்தார். தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் நேற்றோடு முடிவுக்கு வந்தது. அகில இந்திய அளவில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று வரும் 30-ந் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார்.

    இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க கவர்னர் கிரண்பேடிக்கு அழைப்பு வந்துள்ளது. விழாவில் பங்கேற்க கவர்னர் கிரண்பேடி இன்று காலை புதுவையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி புறப்பட்டு செல்லும் முன்பாக புதுவை மக்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

    அதில், புதுவையின் வளர்ச்சிக்கு மேற்கொண்ட பணிகள், எடுத்த முயற்சிகள் குறித்து எழுதியுள்ளார். இதில் தனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இதனால் புதுவையில் இருந்து கவர்னர் கிரண்பேடி விடைபெறுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கவர்னர் கிரண்பேடி மாநில கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கம் அல்லது கேரளாவில் கிரண்பேடி கவர்னராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

    டெல்லி புறப்பட்டு செல்லும் முன்னர் கவர்னர் மாளிகையில் உள்ள தனது பொருட்களை பார்சல் செய்து வைக்கும்படி ஊழியர்களிடம் கிரண்பேடி கூறி இருக்கிறார். எனவே, அவர் மாற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

    கிரண்பேடிக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் புருஷோத்தமன் புதுவை கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க.வினர் நடத்திய வெற்றிப் பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கொல்கத்தா:

    ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குபதிவு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அதில் பாஜக 303 இடங்களை பெற்று தனி பெரும்பான்மை மிக்க கட்சியாக ஆட்சியை மீண்டும் கைப்பற்றி அசத்தியது.

    கடந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பா.ஜ.க., இந்தத் தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றியது.

    இதையடுத்து, மாநில பாஜக சார்பில் வெற்றி பேரணி நடத்த முடிவானது. இந்நிலையில், பிர்பும் மாவட்டம் மயூரேஸ்வர் என்ற இடத்தில் பா.ஜ.க. சார்பில் வெற்றி பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் சென்றவர்கள் மீது கையெறி குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயமில்லை.

    ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் கையெறி குண்டு வீசியதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பேருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
    சென்னை:

    மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பதவி ஏற்க உள்ளது.

    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பல வெளிநாட்டுத் தலைவர்கள் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வர இருப்பதால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே புதிய அமைச்சரவையில் யார்- யாரை மத்திய மந்திரிகளாக சேர்த்துக் கொள்ளலாம் என்று மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி தனிப்பட்ட முறையில் 303 இடங்களைக் கைப்பற்றி இருப்பதால் மத்திய மந்திரி சபையில் முக்கியமான, பெரும்பாலான மந்திரிகள் பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

    என்றாலும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியினரையும் மத்திய மந்திரி சபையில் இடம்பெற செய்ய மோடி முடிவு செய்துள்ளார். எனவே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க., அகாலி தளம், லோக் ஜனசக்தி, அப்னா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

    பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் சிவசேனா 18 எம்.பி.க்களை வைத்துள்ளது. கடந்த தடவை 3 மந்திரி பதவி பெற்ற சிவசேனா இந்த தடவை 4 மந்திரி பதவிகளை கேட்கிறது. 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 மந்திரி பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 எம்.பி.க்களும், சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், அப்னா தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆல் ஜார்க்கண்ட் ஸ்டூடன்ட்ஸ் யூனியன், ராஜஸ்தானில் லோக் தந்திரிக் கட்சி, நாகலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற முன்னணி, மிசோரமில் மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தலா 1 இடத்தில் வென்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு மத்திய மந்திரி சபையில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் 38 இடங்களில் அ.தி.மு.க. மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அ.தி.மு.க.வுக்கு மத்திய மந்திரி சபையில் ஒரு இடம் கொடுக்க மோடி முடிவு செய்துள்ளார். அந்த ஒருவர் யார் என்பதை தெரிவிக்கும்படி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர்.


    இந்த நிலையில் அ.தி.மு.க. தரப்பில் 2 மத்திய மந்திரி பதவிகளை தருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த இரு மந்திரி பதவிகளில் ஒரு பதவி, தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலாகாவை பெற காய்களை நகர்த்தி வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான வைத்திலிங்கம் மத்திய மந்திரி பதவி பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். டெல்லி மேல்- சபையில் எம்.பி. ஆக இருக்கும் வைத்திலிங்கத்தை மத்திய மந்திரியாக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார்.

    பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ள போதிலும் மேல்-சபையான மாநிலங்கள் அவையில் தற்போது அ.தி.மு.க.வுக்கு 13 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற ஜூலை மாதம் மேல்-சபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும்.

    டெல்லி மேல்-சபையில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் இல்லை. எனவே மேல்-சபையில் அ.தி.மு.க.வின் தயவு பாரதிய ஜனதாவுக்கு தேவை என்ற நிலை உள்ளது. மேல்- சபையில் 12 எம்.பி.க்களை வைத்திருப்பதால் அ.தி.மு.க.வுக்கு இரண்டு மத்திய மந்திரிகள் தருவதுதான் நியாயமானதாக இருக்கும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இந்த வாதத்தை பாரதிய ஜனதா ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அ.தி.மு.க.வுக்கு இரு மந்திரி பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில் வைத்திலிங்கம், ரவீந்திரநாத்குமார் இருவரும் மந்திரி ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் ராஜாங்க இலாகா கொடுக்கப்படலாம்.

    இதற்கிடையே டாக்டர் அன்புமணியையும் மேல்- சபை எம்.பி. என்ற அந்தஸ்துடன் மத்திய மந்திரியாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. மீண்டும் அவருக்கு சுகாதாரத் துறையை பெற காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன. ஆனால் பா.ம.க.வின் விருப்பத்தை பாரதிய ஜனதா நிறைவேற்றுமா? என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
    பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
    மதுரை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்களை பொறுத்தவரை நடந்து முடிந்த பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி தான் கிடைத்துள்ளது. நாங்கள் சாதாரண குடிமக்களாக பிறந்து உண்மையான அரசியலை கொண்டு வந்து புரட்சிகரமான அரசியலை செய்து வருகிறோம்.

    இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. கடைகளில் இருந்து 150 வாக்கு எந்திரங்களை எடுத்து வருகிறார்கள்.

    ஆட்டோவில் வாக்குப் பெட்டியை கொண்டு வருகிறார்கள். சிறுவன் வாக்கு எந்திரத்தை தூக்கிச் செல்கிறான். விடுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. இந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள்.

    தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் நேர்மையாக இருப்பதால் என்ன பயன்?


    நாம் வளர்ச்சி பெற்று வருகிறோம் என மோடி பேசி வருகிறார். 3 ஆயிரம் கோடியில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்திருக்கிறார்கள்.

    அதே குஜராத்தில் மாடியில் தீ விபத்து ஏற்படும் போது அதனை ஏணி வைத்து தண்ணீரை பீய்ச்சி அணைக்க நம்மிடம் வசதி இல்லை. இதனால் 28 மாணவ, மாணவிகள் இறந்துள்ளனர். பேரிடர் காலங்களில் மக்களை எப்படி காப்பாற்றுவது? என்ற அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத நாடாக இந்தியா உள்ளது.

    3 ஆயிரம் கோடி செலவு செய்து சிலை அமைத்தவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு ஏணி வாங்க முடியவில்லையா?

    தேர்தலில் கமல்ஹாசன் எங்கள் வாக்கை பிரித்து இருப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. 50 ஆண்டுகளாக நடித்த நடிகர் புதுசா வருகிறார். அவருக்கு ஓட்டு போட்டு பார்ப்போம் என மக்கள் நினைத்திருக்கலாம்.

    இங்கு என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால் பா.ஜ.க. வரக்கூடாது என்ற கருத்தை நாங்களே அதிகமாக எடுத்து வைத்தோம். அதை தி.மு.க. அறுவடை செய்துள்ளது.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.
    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்ற 37 பேரால் பலன் இல்லை என்பது தவறான பிரசாரம் என்று டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கூறியுள்ளார்.
    திருச்சி:

    தட்சிண ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு.) என்ற தொழிற்சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கலந்து கொண்டார்.

    கூட்டம் முடிவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பயங்கரவாதம், தேசப்பற்று, பாகிஸ்தான் அச்சுறுத்தல் என பாரதீய ஜனதா செய்த பிரசாரத்தை நம்பி மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்து விட்டனர். அதனால் தான் பாராளுமன்ற தேர்தல் முடிவு எதிர்பார்க்காத வகையில் வந்து உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மற்ற மாநிலங்களில் இடதுசாரிகளுக்கு தோல்வி ஏற்பட்டு இருப்பது உண்மை தான். இது தேர்தல் ரீதியான தோல்விதான். இயக்க ரீதியான தோல்வி அல்ல. இயக்க நடவடிக்கைகள் மூலம் தேர்தல் தோல்வியை சரிகட்ட முடியும். 

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களால் எந்த பலனும் கிடைக்காது என செய்யப்படும் பிரசாரம் தவறானது. இந்த எம்.பி.க்களால் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். தவறான பிரசாரம் செய்பவர்களுக்கு தான் பலன் கிடைக்காது.

    தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு வசதியாக கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். தி.மு.க மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறோம். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற இன்னும் 25 ஆண்டுகள் ஆகலாம். காவிரி நதி நீர் பிரச்சினையை தீர்த்துவிட்டு தான் கோதாவரி இணைப்புக்கு முயற்சி எடுக்கவேண்டும் என்று பிரதமரை சந்திக்கும் போது வலியுறுத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×