search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    அ.தி.மு.க.வை விட்டால் பா.ஜ.க.வை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #ADMK #Congress #Thirunavukkarasar

    அறந்தாங்கி:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அறந்தாங்கியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதி அளிக்கும் தொகுதியில் தான் போட்டியிடுவேன். அந்த தொகுதி ராமநாதபுரமாகவும், திருச்சியாகவும், சென்னையாகவும் இருக்கலாம். பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுவது, அனைத்து அரசுகளும் வாடிக்கையாக செய்யக் கூடிய ஒன்று தான்.

    ஆனால் கடந்த 4½ஆண்டுகளாக பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமல், தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிதி உதவி வழங்குவது தேர்தலை மனதில் வைத்து தான். ரூ.15 லட்சம் தருவதாக மக்களை ஏமாற்றிய மோடி, தற்போது இந்த தேர்தலில் மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் விவசாயிகளுக்காக கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. பிளவு பட்டதால், தற்போது பெரும் பான்மையை இழந்துள்ள அரசைக் காப்பாற்றிக்கொள்ளவும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும், தமிழக அரசு பா.ஜ.க.வின் பினாமி அரசு போல செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்தே அக்கட்சியை நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் அ.தி.மு.க. சேர்க்கிறது.

    தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.விற்கும் கெட்ட பெயர் உள்ளதால், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தான் பலமான கூட்டணியாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சேராவிட்டால், அந்த கட்சியை யாருமே சேர்க்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #Congress  #Thirunavukkarasar

    அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
    ஆலந்தூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

    அவருடன் மனைவி பிரேமலதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து பேச குழு ஒன்றையும் அறிவித்து இருந்தார்.

    அதன்படி துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையிலான குழுவினர் கூட்டணி பற்றி பேசி வருகிறார்கள். விஜயகாந்த் நாடு திரும்பிய பிறகு அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் விஜயகாந்த் இன்று அதிகாலை 1.15 மணிக்கு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

    பிரான்சில் இருந்து விமானம் மூலம் வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் இருந்தார். மகன் விஜய பிரபாகர் மட்டும் வீட்டுக்கு சென்று விட்டார்.



    காலை 8.30 மணிக்கு விஜயகாந்த் வெளியில் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அவரை வரவேற்க மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தொண்டர்கள் விமான நிலையத்தில் அதிகாலையில் குவிந்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.

    இதற்கிடையே விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் காலை 9.05 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து மகன் விஜயபிரபாகர் 9.20 மணிக்கு விமான நிலையத்திற்குள் சென்றார்.

    காலை 11 மணி அளவில் மியாட் ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு டாக்டர், 3 நர்சுகள் அடங்கிய குழுவினர் விமான நிலையத்துக்குள் சென்றதாக தகவல் வெளியானது.

    அவர்கள் விஜயகாந்தின் உடல்நிலையை பரிசோதனை செய்ததாகவும். விமான பயணத்தினால் விஜயகாந்த் சோர்வடைந்து உள்ளதாகவும், அதற்காக சிகிச்சை அளித்ததாகவும் தெரிகிறது.

    விஜயகாந்த் 10 மணி நேரத்துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அவர் பேட்டரி கார் மூலம் வெளியே வந்தார். அவரைப் பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவராக இருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். #TamilisaiSoundararajan #EdappadiPalanisamy-
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதலமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவராக இருக்கிறார் என பாராட்டு தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவால்களையும், சதிகளையும் கடந்து பல நல்ல திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி கொண்டு வந்துள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளார்.



    மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து பல சோதனைகளை சாதனையாக்கி 3 ஆவது ஆண்டில் தொடரும் முதலமைச்சருக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் வாழ்த்தியுள்ளார். #TamilisaiSoundararajan #EdappadiPalanisamy
    அ.தி.மு.க.வை பயமுறுத்தி பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருவதாக திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். #Thirunavukkarasar #BJP

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளோடு விரைவில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது. எங்களுடைய கூட்டணி பலமாக உள்ளது.

    ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வர உள்ளனர். காங்கிரஸ் கட் சியில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு இணைந்து தேர்தல் பணியாற்றுவோம்.

    நேரடியாக நடக்காத வி‌ஷயத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை, பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    பா.ஜ.க.விற்கு கூட்டணி கட்சிகள் கிடைக்கவில்லை. இதனால் இருக்கின்ற கட்சிகளை விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை நிர்பந்தப்படுத்தி பயமுறுத்தி கூட்டணி பேச்சுவார்த்தையை தற்போது நடத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க.விலேயே பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்கலாம் , வைக்கக்கூடாது என்று இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #BJP

    பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கீர்த்தி ஆசாத் எம்பி, இன்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர உள்ளார். #KirtiAzad
    புதுடெல்லி:

    முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்திஆசாத். இவர் பா.ஜனதா கட்சியின் எம்.பி. ஆகவும் இருக்கிறார். பீகார் மாநிலம் தர்பாங்கா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராக இருக்கும் மத்திய மந்திரி அருண் ஜெட்லியை பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.

    இதனால் பா.ஜனதாவில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று  ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளார்.

    நேற்று மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், “என் மீது தவறு எதுவும் இல்லாதபட்சத்தில் நான் பா.ஜனதாவில் இருந்து ‘சஸ்பெண்டு’ (தற்காலிக நீக்கம்) செய்யப்பட்டிருக்கிறேன். கட்சிக்கு விரோதமான எந்த நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை.

    தனியார் நிறுவனமான டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக போராடினேன். அதற்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா எனது முதுகில் குத்தி விட்டார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் 3 வட இந்திய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பறி கொடுத்தது. அதன்மூலம் மாநிலங்களில் அக்கட்சி தனது செல்வாக்கை இழந்து விட்டது தெளிவாக தெரிகிறது. உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் 120 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜனதா அதிக தொகுதியை இழக்க நேரிடும்” என்றார்.

    கீர்த்தி ஆசாத் தர்பாங்கா தொகுதியில் 3 தடவை பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். #KirtiAzad
    அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா மிரட்டி கூட்டணிக்கு அடி பணிய வைப்பதாக தி.மு.க. தலைவர். மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #BJP #ADMK
    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் திராவிட நாடு அலுவலக கட்டிடத்தின் முகப்பில் புதிதாக அமைக்கப்பட்ட அண்ணா, கருணாநிதி முழு உருவச் சிலைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பின்னர் காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடியில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் நகரச் செயலாளர் சன் பிராண்டு ஆறுமுகம் வரவேற்றார். கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    அறிஞர் அண்ணா பிறந்த ஊரில் அவர் பல்வேறு கட்டுரைகள் எழுதி தி.மு.க. வினை வளர்த்த இடத்தில் அவருடைய சிலையும், அவரது அன்பிற்கு என்றும் பாத்திரமாக இருந்து கழகத்தினை கட்டிக் காத்த கலைஞர் சிலையையும் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    மத்தியில் மோடி தலைமையில் பாசிச ஆட்சி நடைபெற்று வருகின்றது. மத்தியில் இருந்து தமிழகத்திற்கு வரும் அவர்களுடைய சதியினை தகர்த்தெறிய வேண்டும். நதிகள் இணைக்கப்படவில்லை. அதி நவீன நகரத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தினை மீட்டு அனைவரது கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்றார் மோடி. ஆனால் 15 ரூபாய் கூட போடவில்லை. மோடியின் அனைத்து வாக்குறுதியும் பொய்.

    ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என்று சொன்னார்கள். வெளிநாட்டு பெரு நிறுவனம் தனியார் துறைகளிடம் அத்திட்டம் தாரை வார்க்கப்படுகின்றது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மத்தியில் மன்னர் ஆட்சியும் மாநிலத்தில் கொத்தடிமை ஆட்சியும் நடைபெற்று வருகின்றது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.4 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளோம் என்கிறார்கள். ஆனால் 21 சதவீதம் உலக முதலீடு குறைந்துள்ளது என மத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. ஜி.எஸ்.டி. வரி ரூ.5454 கோடியினை மத்திய அரசிடம் கேட்டுப்பெற தமிழக அரசுக்கு திராணியில்லை.

    பாராளுமன்ற தேர்தலோடு, சட்டப்பேரவைத் தேர்தலையும் உள்ளாட்சித் தேர்தலையும் நடத்துங்கள் என மக்கள் தெரிவிக்கின்றனர். நீதி மன்றம் எச்சரித்தும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. 21 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டும் அங்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா இறப்பின் மர்மம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். தமிழக சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது நான் அதனை உதவாக்கரை பட்ஜெட் என சொன்னேன். அந்த வார்த்தையினை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.

    ஆனால் ஓ.பி.எஸ். பதில் அளித்து பேசும்போது எதிர்கட்சித் தலைவர் பட்ஜெட்டினை உதவாக்கரை பட்ஜெட் எனக் கூறுகிறார் என பேசி அந்த வார்த்தையினை அவைக் குறிப்பிலே ஏறுவதற்கு வழி செய்து விட்டு மேலும் எதிர்கட்சித் தலைவர் கருப்புக் கண்ணாடி அணிந்து வெறுப்புக் கண்ணோடு பார்க்கின்றார் எனத் தெரிவிக்கின்றார்.

    நானாவது சில சமயங்களில் கருப்புக் கண்ணாடி மட்டுமே அணிகின்றேன். ஆனால் ஓ.பி.எஸ். கருப்பு உள்ளத்தோடு உள்ளார் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது எனக் கூறி அவரின் சமாதியில் சபதம் செய்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மர்மம் கண்டு பிடிக்கப்படும்.

    தமிழகத்தை ஆள்பவர்கள் மக்கள் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் மோடியின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். சிறிய கட்சிகள் கூட பா.ஜனதாவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

    ஆனால் அ.தி.மு.க.வை மிரட்டி கூட்டணிக்கு அடி பணிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நாட்டு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ.க்கள், சி.வி.எம்.பி. எழிலரசன், புகழேந்தி, ஆர்.டி.அரசு, மற்றும் சி.வி.எம்.அ.சேகரன், வி.எஸ்.ராமகிருஷ்ணன், சிறுவேடல் செல்வம், தசரதன், சுகுமார், ஜெகன்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #MKStalin #BJP #ADMK
    தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்போம் என்று மத்திய மந்திரி ரவிசங்கர்பிரசாத் கூறினார். #BJP #RavishankarPrasad

    மதுரை:

    மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட  பயங்கரவாதிகளின் தாக்குதல் காட்டு மிராண்டிதனமானது. வீரர்களின் தியாகம் போற்றப்பட வேண்டிய ஒன்று. பயங்கரவாதிகளை தூண்டிவிடுவதன் மூலம் பாகிஸ்தான் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

    தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பா.ஜனதா கட்சி தலைவர்களின் நிகழ்ச்சிகள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.

    தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 17 கோடி பேருக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 7.5 லட்சம் பேருக்கு கடன் கொடுக்கப்பட்டு உள்ளது.

    தூய்மை இந்தியா திட்டத்தில் இந்தியாவில் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் 52 லட்சம் கழிவறைகள் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ளன.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி இடம் பெறும் அணி வெற்றி கூட்டணியாக அமையும். அந்த வகையில் வலுவாக கூட்டணியை அமைப்போம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது விரைவில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #RavishankarPrasad

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தற்போது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறுவதன் மூலம் அ.தி.மு.க. -பா.ஜனதா கூட்டணி உறுதியாகி விட்டது. #ParliamentElection #ADMK #BJP
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்துள்ளன.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே கூட்டணி அமைகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா நெருக்கம் காட்டி வந்தது. அ.தி.மு.க.வில் நெருக்கடி ஏற்பட்டபோது அரசுக்கு பல்வேறு வகையில் பா.ஜனதா பக்க பலமாக செயல்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா ஆயத்தமான போது தமிழக மூத்த அமைச்சர்கள் டெல்லி சென்று பா.ஜனதா தலைவர்களையும், மத்திய மந்திரிகளையும் சந்தித்து ரகசியமாக பேச்சு நடத்தினார்கள்.

    அவர்கள் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தியதாக கூறப்பட்டது. இதன் மூலம் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி ஏற்படும் என தகவல் வெளியானது. ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர அ.தி.மு.க.வில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி வந்தனர்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா அதிக இடங்களை கேட்டது. இதற்கு அ.தி.மு.க. தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு உள்ள மக்கள் செல்வாக்கு அடிப்படையில்தான் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    பா.ஜனதா 12 தொகுதிகள் கேட்டது. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. இதற்கும் அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.

    ஒற்றை இலக்க எண்ணில்தான் சீட் தர முடியும். அதுவும் நாங்கள் தரும் தொகுதிகளில்தான் போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. நிபந்தனை விதித்தது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.

    இந்த நிலையில் கூட்டணியை உறுதி செய்வதற்காக பா.ஜனதா மேலிட பிரதிநிதியான மத்திய மந்திரி பியூஷ்கோயல் நேற்று இரவு 8.40மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார்.

    அவர் விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அறையில் தமிழக தேர்தல் கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 40 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடந்தது.



    பின்னர் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பியூஷ் கூறுகையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வந்திருப்பதாகவும், எங்கள் கூட்டணி வலிமையானதாக இருக்கும், இங்கு பெறும் வெற்றி மோடி அரசாங்கத்துக்கு வலு சேர்க்க கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    அதன் பிறகு மத்திய மந்திரி பியூஷ்கோயல் காரில் புறப்பட்டு நேராக ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் மகாலிங்கம் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு அவர் முன்னிலையில் அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே அதிகாரப்பூர்வமான முறையில் கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., கே.பி. முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா தரப்பில் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை அதிகாலை 1 மணி வரை 3 மணி நேரம் நீடித்தது.

    இதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மட்டும் 1 மணி நேரம் நடந்தது. அ.தி.மு.க.வின் கருத்துக்களும், விருப்பங்களும் மத்திய மந்திரி பியூஷ்கோயலிடம் எடுத்துக் கூறப்பட்டது. அதை கவனமாக கேட்டார். பின்னர் அவர் பா.ஜனதாவின் விருப்பத்தையும், பிரதமர் மோடி சொன்ன தகவல்களையும் அ.தி.மு.க.வினரிடம் எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது.

    பா.ஜனதா தரப்பில் முதலில் 12 தொகுதிகள் கேட்கப்பட்டது. பின்னர் 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டது. இறுதியாக 8 தொகுதிகள் வரை கொடுக்க அ.தி.மு.க. முன் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ஜனதா தரப்பில் தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, தஞ்சை, சிவகங்கை, நெல்லை, மதுரை ஆகிய 10 தொகுதிகளை பா.ஜனதா கேட்டதாகவும், இதில் தென்சென்னை, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய தொகுதிகளை தர அ.தி.மு.க. மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கு பா.ஜனதா சம்மதிக்கவில்லை. தனது நிலையில் பிடிவாதமாக இருந்ததால் நேற்றைய பேச்சு வார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.



    இதனால் இறுதியாக அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேச்சு நடத்தி விரைவில் தொகுதி உடன்பாடு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்று மத்திய மந்திரி நிதின்கட்கரி சென்னை வருகிறார். அவரும் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. குழுவுடன் பேச்சு நடத்துகிறார்.

    அதன்பிறகு நாளை மத்திய மந்திரி பியூஷ்கோயல் மீண்டும் சென்னை வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறார்.

    இதில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விடும் என்றும் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி பியூஷ்கோயல் ஆகியோர் சென்னை வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க. குழுவுடன் இணைந்து தொகுதி பங்கீடு அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

    தற்போது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறுவதன் மூலம் அ.தி.மு.க. -பா.ஜனதா கூட்டணி உறுதியாகி விட்டது. தொகுதி உடன்பாடு மட்டுமே இறுதி செய்யப்பட உள்ளது.

    இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகத்தில் பா.ஜனதா வலுவான கூட்டணி அமைக்கும். அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்று வருகிறது. மத்திய மந்திரி பியூஷ்கோயல் அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்தி உள்ளார். தொகுதி பங்கீடு பற்றி தொடர்ந்து பேசி முடிவு செய்வோம்” என்றார்.

    தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதுதான் எங்கள் இலக்கு. அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதும் எங்கள் இலக்கு. இதற்காக பல கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம்” என்றார்.

    இதற்கிடையே புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

    அப்போது, “அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். கடந்த தேர்தலைப் போல இந்த தேர்தலிலும் புதுச்சேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. #ParliamentElection #ADMK #BJP 
    புதுவையில் மோசமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கவர்னரை மாற்ற வேண்டும் என சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Kiranbedi #PuducherryPolitical
    புதுச்சேரி:

    புதுவையில் முதல்- அமைச்சர், அமைச்சர்கள், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி தலைவர்கள் கவர்னரை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு கடந்த 13-ந்தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் புதுவையில் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் சபாநாயகர் வைத்திலிங்கம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

    3 பக்கங்கள் கொண்ட இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் நிர்வாகம் ஒரு அசாதாரணமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் உங்கள் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

    புதுவை கவர்னர் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தேவையில்லாமல் தலையிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார். கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சர், கவர்னருக்கு இங்கு தீர்வு காண வேண்டிய முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக குறிப்பிட்டு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார்.

    ஆனால் அந்த கடிதத்தை கவர்னர் கண்டுகொள்ளவில்லை. இதனால் வேறு வழியில்லாத நிலையில் முதல்-அமைச்சர் தனது சக அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுடன் சென்று கடந்த 13-ந்தேதி முதல் கவர்னர் மாளிகை எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் கவர்னர் மாளிகையை நோக்கி குவியத் தொடங்கினார்கள்.

    மோசமான சூழ்நிலை நிலவியதை அறிந்த நான் நேரடியாக அங்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தேன். மேலும் எனது கருத்துக்களையும் கூறி பத்திரிகை மூலமாக கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

    நான் இந்த பிரச்சனை சம்பந்தமாக நடுநிலையாளராக இருந்து சமரசம் செய்ய தயாராக இருக்கிறேன். பொதுமக்கள் நலன் கருதி இந்த பணியை செய்கிறேன் என்று கூறினேன்.



    தற்போது இந்த பிரச்சனை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கட்டுப்படுத்த முடியாத நிலையை உருவாக்கி உள்ளது. எனவே இதற்கு தீர்வு காண நான் கவர்னரை சந்தித்தேன். ஆனாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் உச்சகட்ட உணர்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்றாக இப்போது மாறி இருக்கிறது.

    இந்த சூழ்நிலையிலும் கவர்னர் இதில் கவனம் எடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர் புதுவை மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை.

    இப்போது இதில் அடுத்த கட்டமாக ஒரு இக்கட்டான நிலை உருவாகி இருக்கிறது. இங்கு போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று கவர்னர் திடீரென மாளிகையில் இருந்து வெளியேறி சென்று விட்டார்.

    இனி 21-ந்தேதி தான் இங்கு திரும்ப இருப்பதாக நான் அறிகிறேன். ஒரு கொந்தளிப்பான நிலை மாநிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் மாநிலத்தின் நிர்வாகியான கவர்னர் தனது கடமையை செய்ய முன்வரவில்லை. பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கும் அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது ஒரு ஆச்சரியமும் அதிர்ச்சியும் தரக்கூடிய வி‌ஷயமாக தென்படுகிறது.

    மிக முக்கிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மாநில தலைமை நிர்வாகியான கவர்னர் தனது அலுவலகத்தில் இருக்க வேண்டும். ஆனால் அதை தவிர்த்துவிட்டு வெளியேறி இருக்கிறார்.

    இப்படி மோசமான நிலை புதுவையில் நிலவிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது இன்னும் மோசமான நிலையை எட்டுவதற்கு முன்பாக அதை தடுக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    இதற்காக நான் சில வேண்டுகோள்களை விடுக்கிறேன். புதுவை மாநிலத்திற்கு பொறுப்பாக இருக்கும் மத்திய உள்துறை உடனடியாக இதில் கவனம் செலுத்தி பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். இதற்காக திறமை வாய்ந்த இடைக்கால கவர்னர் ஒருவரை புதுவைக்கு நியமிக்க வேண்டும்.

    அவர் புதுவை மாநிலத்தின் இன்றைய பிரச்சனையை திறமையாக கையாண்டு தீர்க்க கூடிய வகையில் செயல்படுபவராக இருக்க வேண்டும். புதுவை மக்களின் நலன் கருதி உடனடியாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு வைத்திலிங்கம் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.  #Kiranbedi #PuducherryPolitical
    வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளை தானாகவே ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை நாடுகளுக்கு இடையே ஏற்படுத்த வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். #VenkaiahNaidu #BJP
    புதுடெல்லி :

    தங்கள் சொந்த நாட்டில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை மீண்டும் தங்கள் நாட்டுக்கே கொண்டு வந்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது அந்தந்த நாட்டு அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மேற்படி குற்றவாளிகளை தானாகவே சொந்த நாட்டிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தங்களை பல்வேறு நாடுகள் உருவாக்கி உள்ளன. இந்தியாவும் 50 நாடுகளுடன் மேற்படி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு இருக்கிறது. மேலும் 10 நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் தப்பி ஓடும் குற்றவாளிகளை தானாகவே சொந்த நாட்டிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளுக்கு இடையேயும் உருவாக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் டெல்லியில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



    நாட்டின் வளர்ச்சியை நோக்கியே வியாபாரங்கள் அமைய வேண்டும். வர்த்தகம் செய்வோர் தங்களுக்குள்ளே சுயக்கட்டுப்பாட்டு நெறிமுறையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சியை கெடுப்பதன் மூலம் சிலர் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

    குற்றங்களில் ஈடுபட்டு தப்பி ஓடுபவர்கள், சட்டத்தை எதிர்கொள்வதற்கு பதிலாக, தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள். எது அச்சுறுத்தல்? நீங்கள்தான் (தப்பி ஓடும் குற்றவாளிகள்) நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறீர்கள். மற்றவர்கள் எதிர்கொள்வதை போல நீங்களும் நாட்டுக்கு திரும்பி வந்து சட்ட நடவடிக்கைகளை ஏன் எதிர்கொள்ளக்கூடாது?

    இத்தகைய குற்றவாளிகளை தானாகவே ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தத்தை ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுக்கு இடையே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். விசாரணை நிறுவனங்களால் தேடப்படும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

    இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். எனினும் வெங்கையா நாயுடு, தனது உரையில் இவர்களில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #VenkaiahNaidu #BJP
    பிரதமர் இருக்கையை கைப்பற்ற இசை நாற்காலி விளையாட்டு போட்டி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் பற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் செய்தார். #DevendraFadnavis #BJP
    மும்பை :

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதற்காக பிராந்திய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் சூரத் மற்றும் மாண்ட்வி மாவட்டங்களை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் கூட்டம் தரம்பூர் பகுதியில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    கிட்டத்தட்ட 20 முதல் 25 கட்சிகள் இணைந்து பா.ஜனதாவை எதிர்த்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. அவர்களால் தங்கள் கட்சி சார்பில் 10 பேரை கூட பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற செய்ய முடியாது. ஆனால் அவர்கள் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர்.



    இசை நாற்காலி விளையாட்டில் இசை நிற்கும்போது நாற்காலியை கைப்பற்றும் நபர் வெற்றி பெற்றவர் ஆகிவிடுவார். இங்கு 25 கட்சிகள் சேர்ந்து பிரதமர் இருக்கைக்காக இசை நாற்காலி விளையாட்டு போட்டியை நடத்துகின்றன. இது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் செயலாகும்.

    2020-ல் இருந்து 2035-ம் ஆண்டுவரை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாகும். இந்த 15 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்தால் வறுமையில் இருந்து வெளியேறி இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும்.

    மேலும் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ பிரதமர் நரேந்திர மோடியின் 55 மாத ஆட்சியின் வளர்ச்சியுடன், 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிட்டு எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன” என்றார். #DevendraFadnavis #BJP
    நாங்கள் பாஜகவுடன் வெறுப்புடன் போராட மாட்டோம் எனவும் மோடியை கட்டி அணைத்தது அவரிடம் இருந்த வெறுப்பை அகற்றத்தான் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். #PMModi #RahulGandhi
    அஜ்மீர்:

    ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் 30 ஆண்டுகளுக்குப்பின் "ஆதிவேஷன்" எனும் 2 நாள் நிகழ்ச்சியை சேவா தளம் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், ராகுல் காந்தி ஆகியோர் இன்று பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசும் போது கூறியதாவது:-

    ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்புகிறார்கள். ஆனால் அவர்களின் செயலுக்கு மாறாக, நாம் அன்பை மக்களிடத்தில் பரப்ப வேண்டும். இதுதான் நமக்கும், அவர்களுக்கும் இடையிலான வேறுபாடு.

    வடகிழக்கு மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அமைதியற்ற சூழலை உருவாக்கி விட்டார்கள். பிரதமர் மோடி இந்த நாட்டை தனக்குத் தேவையான 15 முதல் 20 மனிதர்களுக்காகத்தான் நடத்துகிறார்.

    பிரதமர் மோடியை பொறுத்தவரை இந்த தேசம் அவருக்கு ஒரு பொருள். தன்னுடைய 20 நண்பர்களுக்கு இந்த தேசத்தை பங்குபோட்டுக் கொடுக்க மோடி விரும்புகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேசம் என்பது அனைவருக்குமான கடல் போன்றது.

    மோடி தான் பேசும் பொதுக்கூட்டங்களில் நீண்ட உரையாற்றுகிறார். கடந்த 70 ஆண்டுகளாக நாட்டில் ஒன்றும் நடக்கவில்லை என்று பேசுகிறார். அப்படியென்றால், மகாத்மா காந்தி, சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பல்வேறு முதல்வர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என யாரும் இந்த தேசத்துக்கு ஒன்றும் செய்வில்லையா. ஒவ்வொரு குடிமகனையும் புண்படுத்தும் வார்த்தை.

    மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதியளித்து மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை அறிமுகம் செய்தோம். கடனில் உள்ள விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளித்தோம். ஆனால், விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதிகளை மோடி அளிக்கிறார். ரூ.3.50 லட்சம் கோடி கடனை தனது நண்பர்களுக்காக மோடி தள்ளுபடி செய்துள்ளார்.

    வெறுப்பு என்பது அச்சுறுத்தலின் மற்றொரு வடிவம். அச்சுறுத்தாமல் வெறுப்பு வராது. இதுதான் மோடிக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு. எங்களிடம் வெறுப்பு இல்லை, அதனால் எங்களிடம் அச்சம் இல்லை. ஆனால், பாஜக வெறுப்பைக் காட்டுகிறார்கள், பயத்தை உருவாக்குகிறார்கள்.

    என்னைப் பற்றியும், குடும்பத்தை பற்றியும் மோடி தேவையில்லாமல் பேசுகிறார். ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் உதாசினப்படுத்துகிறார். காங்கிரஸ் கட்சியை அழித்து விடுவோம் என்கிறார். ஆனால், நான் நாடாளுமன்றத்தில் அவருக்கு வெறுப்புக்கு பதிலாக கட்டி அணைத்து அன்பை அளித்தேன். வெறுப்பை அன்பால்தான் தோற்கடிக்க முடியும்.



    நான் மோடியை கட்டித்தழுவும்போது எனக்கு அவரிடம் எந்தவித வெறுப்பும் இல்லை. ஆனால், அவரிடம் வெறுப்பு இருந்தது. அவரின் முகத்தில் நான் பார்த்தேன். அதை அவரால் கையாள முடியவில்லை.

    வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பாஜகவை தோற்கடிக்கும். ஆனால், அழிக்க மாட்டோம், யாரையும் கொலை செய்ய மாட்டோம், தாக்க மாட்டோம். ஆனால், தோற்கடிப்போம், அன்பும் செலுத்துவோம்.

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சேவா தளம் அமைப்பை 1927-ம் ஆண்டு தடை செய்தார்கள். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடைசெய்யவில்லை. மகாத்மா காந்தி, சர்தார் படேல், சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோர் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தார்கள். ஆனால், ஒருவர் கூட ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கோரவில்லை. ஆனால், வீரசவார்கார் 9 முறை அச்சத்தின் காரணமாக மன்னிப்பு கோரினார். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். #PMModi #RahulGandhi 
    ×