search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    அமேதி பாராளுமன்ற தொகுதியில் தனது வெற்றிக்காக அரும்பாடுபட்டு, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சுரேந்திரா சிங்கின் பாடையை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி இன்று சுமந்து சென்றார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.

    அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து அவருடன் இரவும் பகலுமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக பிரமுகர்களில் முக்கியமானவர் பரவுலி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங். இவர்மீது ஸ்மிருது இரானி மிகவும் அன்பு செலுத்தி, சகோதரராக பாவித்து பழகி வந்தார்.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் சுரேந்திரா சிங்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.

    இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சுரேந்திரா சிங் மரணம் தொடர்பான செய்தியை அறிந்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். இன்று பிற்பகல் நடந்த இறுதி யாத்திரையில் பங்கேற்ற அவர் கண்ணீர் மல்க சுரேந்திரா சிங்கின் பாடைக்கு தோள்கொடுத்து சுமந்து சென்றார்.
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றிபெறாததால் தமிழிசையிடம் பா.ஜனதா தலைமை விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றிபெற வில்லை.

    தமிழகத்தில் குறைந்தது 2 அல்லது 3 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்று கருதிய பா.ஜனதா 5 தொகுதிகளிலும் நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கியது.

    தூத்துக்குடியில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கன்னியா குமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜா, கோவையில் கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

    இவர்களை ஆதரித்து பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் பிரசாரம் செய்தனர். ஆனால் 5 பேரும் தோல்வியை தழுவினர்.

    இந்த தோல்வி பா.ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே மாநில தலைவரை மாற்ற பா.ஜனதா தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜன் மாநில தலைவர் பதவிகாலம் முடிந்த பிறகும் அவர் 2-வது முறையாகவும் மாநில தலைவராகவே பதவி வகித்து வந்தார். தற்போது அவரை மாற்ற முடிவு செய்துள்ள தேசிய தலைமை, புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. வானதி சீனிவாசன், சி.பி.ராதா கிருஷ்ணன், கே.டி.ராகவன் ஆகியோரது பெயர்கள் முன்னிலையில் உள்ளது.


    இதற்கிடையே தமிழ்நாட்டில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் என்ன? என்பது குறித்து பா.ஜனதா தலைமை விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுடன் அல்லாமல் போட்டியிட்ட போதே 5.48 சதவீத ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பிறகும் 3.65 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளது.

    அ.தி.மு.க.வை பொறுத்த வரை 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தான் கவனத்தை செலுத்தியது. பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக ஆளும் கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில்கூட கன்னியாகுமரி, தர்மபுரி தொகுதிகளில் எங்கள் கூட்டணி கைப்பற்றி இருந்தது. ஆனால் இம்முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பிறகும் ஒரு தொகுதிகள்கூட வெற்றி பெற முடியாதது வருத்தமாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மண்டியா தொகுதியில் கர்நாடக முதல்வரின் மகனை வீழ்த்தி வெற்றிபெற்ற நடிகை சுமலதா இன்று பாஜக தலைவர்களை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா அவரது கணவர் வெற்றிபெற்ற மண்டியா தொகுதியில் போட்டியிட விரும்பி காங்கிரஸ் கட்சியிடம் மனு செய்தார். ஆனால், கூட்டணி உடன்பாட்டின்படி அந்த தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் மேலிடம் கைவிரித்து விட்டது.

    பின்னர், இந்த தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை சுமார் 73 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுமலதா தோற்கடித்தார்.

    இதையடுத்து, சுமலதா பெங்களூரு கன்டீரவா ஸ்டுடியோவில் உள்ள தனது கணவரின் சமாதிக்கு வந்தார். அங்கு தான் எம்.பி.யாக வெற்றி பெற்ற சான்றிதழை சமாதியில் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு சுமலதா நிருபர்களிடம் கூறுகையில், “நான் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை மண்டியாவில் கூட்ட முடிவு செய்துள்ளேன். மண்டியா மக்கள் என் மீது அன்பு செலுத்தியுள்ளனர். அவர்கள் சுயமரியாதை உள்ள மக்கள். எனது வெற்றிக்கு பாடுபட்டவர்களை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது. எனது கணவரின் பிறந்தநாளான வரும் 29-ம் தேதி என் தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளேன்.



    எனக்கு காங்கிரஸ் கட்சி முன்னர் வாய்ப்பு அளித்திருந்தால் நான் இந்நேரம் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்திருப்பேன். அந்த கட்சிக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைத்திருக்கும். பா.ஜனதாவில் சேருவது குறித்து மண்டியா மக்களிடம் ஆலோசனை கேட்டு முடிவு செய்வேன்” என்றார்.

    இந்நிலையில், இன்று கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும்  கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரியும் அம்மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா ஆகியோரை சுமலதா சந்தித்தார்.

    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ‘மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைய மக்கள் அளித்துள்ள தீர்ப்பை நாம் மதித்து நடக்க வேண்டும். சாதி, மத பாகுபாடுகள் இல்லாமல்  சுயேட்சை வேட்பாளரான என்னை வெற்றிப்பெற வைத்த மண்டியா மக்களின் விருப்பப்படி எனது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.

    இதனால், விரைவில் அவர் பாஜகவில் இணையலாம் என்ற எண்ணம் கர்நாடக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
    டெல்லியில் நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அரசியல் சாசன புத்தகத்தை வணங்கி, உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக குழு தலைவாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது:-

    யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர். 2014 தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜக  25 சதவீதம் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. புதிய இந்தியாவை உருவாக்க இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். இந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. என்னை நம்பிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி.



    புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை கட்டமைப்போம் மாற்றுவோம். நான் உங்களில் ஒருவன், உங்களுக்கு சமமானவன். அனைவரின் ஆலோசனைகளை கேட்டறிந்து புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம். புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான எங்கள் பயணத்திற்கு புதிய பாதை கிடைத்துள்ளது.

    சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பாராளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். இது பெண்களின் சக்தியால் சாத்தியமானது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  

    இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்ற கட்சி தலைவராக மோடியின் பெயரை அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் முன்மொழிந்தனர்.



    இதன்மூலம் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோடி, அத்வானியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

    இதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டத்தில் பேசிய கூட்டணி கட்சி தலைவர்கள், மோடி பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளிப்பதாக கூறினர். மேலும் மோடிக்கு அனைத்து தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். 
    குட்டையில் நீர் இல்லாததால் தமிழகத்தில் தாமரை மலராது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் அளித்து மக்கள் எங்களை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

    எங்கள் கூட்டணி சந்தர்ப்பவாதம் இல்லாத கொள்கை ரீதியான கூட்டணி. தமிழ்நாட்டில் கல்வி, விவசாயம் தொழில் ஆகியவற்றுக்கு வளர்ச்சியை விரும்புகிற மக்கள் எங்கள் அணிக்கு வாக்களித்துள்ளனர். வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றி.

    காங்கிரஸ் ஒரு மிகப் பெரிய இயக்கம் காங்கிரஸ் தோல்வி அடையவில்லை, காங்கிரஸ்காரர்கள் தான் தோல்வியடைந்துள்ளனர். அதை சரி செய்யலாம் சரி செய்ய முடியாது என்று எதுவும் கிடையாது நெப்போலியன், காமராஜர், அண்ணா, இந்திரா காந்தி ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.

    வெற்றியும் தோல்வியும் ஒரு வீரனுக்கு சகஜம் தென்னிந்தியாவில் வெற்றி பெற்றிருக்கிறோம் வரும் காலங்களில் வட இந்தியா மேற்கு இந்தியாவில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிப்போம்.

    காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் சறுக்கல் தானே தவிர, வீழ்ச்சி அல்ல. கடைசியில் தனிமனித விமர்சனத்தை முன்வைத்து பிரசாரம் செய்தவர் மோடி.

    தமிழகத்தில் மீண்டும் தாமரை மலர்ந்தே தீரும் என்கிற தமிழிசை கருத்துக்கு, ஒரு மலர் மலர்வதை யாரும் தடுக்க முடியாது. ஒரு மலர் மலர வேண்டும் என்றால் தண்ணீர் வேண்டும். நாங்கள் எதையும் தடுக்கவில்லை. ஆனால் நீரற்ற குட்டையில் எவ்வாறு தாமரை மலரும்?.

    இந்திய தேசம் ஒரு கூட்டாட்சி தத்துவம் உள்ளது. ஒரு மாநிலத்தை தனிமைப்படுத்த நினைத்தால் அது ஒரு சர்வாதிகாரம் அனைவருக்கும் சம உரிமை உள்ளது.

    இந்தியாவை வழிநடத்த ராகுலை தவிர வேறு சிறந்த தலைவர் யாருமில்லை. காங்கிரஸ் தொண்டர்கள் ராகுலை தான் விரும்புகின்றனர் என்றார். ராகுல் பதவி விலக்கூடாது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்.

    காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வோம் அதற்காக பேச்சு வார்த்தை எல்லாம் நடத்த மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திராவிட கோட்டைக்குள் பாரதிய ஜனதாவால் நுழைய முடியவில்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் தி.மு.க. 3-வது இடத்தை பெற்று இருக்கிறது. தலைமை ஆளுமை என்பதை இந்த தேர்தல் மூலம் தமிழக மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள். தமிழக நலன்களை தி.மு.க. காக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.


    திராவிட கோட்டைக்குள் பா.ஜனதாவால் நுழைய முடியவில்லை. அடுத்து முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வருவார் என்பதை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் தார்மீக உரிமையை எடப்பாடி பழனிசாமி இழந்து இருக்கிறார்.

    தி.மு.க. கூட்டணியின் வெற்றி ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையை காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆளும் கட்சியின் அறை கூவலுக்கு எதிராக தி.மு.க. கூட்டணியின் வெற்றியை கண்டு மற்ற மாநிலத்தவர் கூட வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

    நியூட்ரினோ, மேகதாது அணை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றாத வண்ணம் தமிழகத்திற்கான அரணாக தி.மு.க. கூட்டணி இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அ.தி.மு.க.வுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் தமிழக பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவர் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட்டது.

    ஆனால் ஒரு இடத்தில் கூட பா.ஜனதா வெற்றி பெறவில்லை.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய மந்திரிசபையில் மோடி இடம் அளித்தார். இந்த தடவை தமிழகத்தில் இருந்து பா.ஜனதா எம்.பி.க்கள் ஒருவர் கூட இல்லை என்பதால் மத்திய மந்திரி சபையில் தமிழர்கள் இடம் பெறுவார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

    ஆனால் தமிழகத்தின் முக்கியத்துவத்தை கருதி தமிழக பா.ஜனதா தலைவர்களில் யாராவது ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி அளிக்கலாமா? என்று மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் தமிழக பா.ஜனதா தலைவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிய வந்துள்ளது.

    அவரது அழைப்பின் பேரில் தமிழக பா.ஜனதா மூத்த தலைவர்கள் சிலர் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

    தமிழக பா.ஜனதா தலைவர்களில் யாருக்கு மத்திய மந்திரியாகும் வாய்ப்பு கிடைக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து இல.கணேசன் கூறுகையில், “அதுபற்றி மோடிக்குதான் தெரியும். தமிழக பா.ஜனதா தலைவர்கள் ஒவ்வொருரையும் மோடி அறிந்து வைத்துள்ளார். எனவே அவர் சரியான முடிவு எடுப்பார்” என்றார்.


    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “பா.ஜனதா கட்டுக்கோப்பான அமைப்பாகும். மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்றார்.

    தமிழிசை சவுந்தரராஜன் மேலும் கூறுகையில், “அ.தி.மு.க.வுக்கு மேல்-சபையில் 13 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். எனவே அதற்கேற்ப முடிவு எடுப்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களை மத்திய மந்திரியாக்கினால் அவர்களை எம்.பி.யாக்க வேண்டிய தேவையாகும். இதுகுறித்தும் மேலிட தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்” என்றார்.

    பாராளுமன்ற மேல்-சபையில் எம்.பி.க்களாக இருக்கும் கனிமொழி (திமு.க.), லட்சுமணன், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்தினவேல் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) ஆகிய 6 பேரின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதியுடன் முடிகிறது. விரைவில் அவர்களுக்கு பதில் புதிய 6 எம்.பி.க்களை தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்ய உள்ளனர்.

    தற்போது சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். தி.மு.க. கூட்டணியில் வைகோ மற்றும் காங்கிரசுக்கு (மன்மோகன்சிங்) தலா ஒரு இடம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

    அதுபோல அ.தி.மு.க.வில் ஒரு மேல்-சபை எம்.பி. இடத்தை கேட்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் தமிழக பா.ஜனதா தலைவர்களில் ஒருவர் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளது.
    பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள மோடி வருகிற 30-ந்தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்கான பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது.

    இதில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.


    அவர்களுடன் தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும் சென்றார்.

    முன்னதாக ரவீந்திரநாத் குமார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    குஜராத்தை சேர்ந்த பாஜக வேட்பாளர் சி.ஆர்.பாட்டீல், பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

    இந்த தேர்தலில் நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை குஜராத் மாநில பாஜக வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. 

    குஜராத் மாநிலத்தின் நவ்சாரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.ஆர். பாட்டீல், 9,69,430 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தர்மேஷ்பாய் பீம்பாய் பட்டேல் 2,81,663 வாக்குகள் பெற்றார்.



    இதன்மூலம் சி.ஆர். பாட்டீல் 6 லட்சத்து 87 ஆயிரத்து 767 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதேபோல், மேலும் 2 பா.ஜ.க. வேட்பாளர்கள் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 

    அரியானாவின் கர்னால் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் பாட்டியா 6,54,269 வாக்குகள் வித்தியாசத்திலும், ராஜஸ்தானின் பில்வாரா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சுபாஷ் சந்திர பகேரியா 6,10,920 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜனதாவை சேர்ந்த 145 எம்.பி.க்கள் தங்கள் பதவியை மீண்டும் உறுதி செய்திருக்கின்றனர்.
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பல கட்சிகள், ஏற்கனவே பதவியில் இருக்கும் எம்.பி.க்களை மீண்டும் களமிறக்கின. இதில் 27 பெண்கள் உள்பட 197 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜனதாவை சேர்ந்த 145 எம்.பி.க்கள் தங்கள் பதவியை மீண்டும் உறுதி செய்திருக்கின்றனர். இவர்களில் நிதின் கட்காரி, கிரண் ரெஜிஜு, ஜூவல் ஓரம், ராதாமோகன் சிங், பாபுல் சுப்ரியோ போன்றவர்கள் முக்கியமானவர்கள் ஆவர்.



    பீகாரில் பா.ஜனதாவை சேர்ந்த 12 பேர் மீண்டும் எம்.பி.க்கள் ஆகி உள்ளனர். மேலும் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த 2 பேரும், லோக் ஜனசக்தியை சேர்ந்த 3 பேரும் மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளனர். டெல்லியை சேர்ந்த 5 எம்.பி.க்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் மகுடம் சூடியிருக்கின்றனர்.

    ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி 9 எம்.பி.க்களை மீண்டும் களமிறக்கியது. இதில் 2 பேர் மட்டுமே தங்கள் பதவியை உறுதி செய்துள்ளனர். இதைப்போல ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த 2 எம்.பி.க்களும் மீண்டும் வென்றுள்ளனர்.

    இவ்வாறு பல கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி வாகை சூடிய நிலையில், மீண்டும் களமிறங்கியவர்களில் ஒருவர் கூட தொகுதியை தக்க வைக்க முடியாத நிலையை அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், சமாஜ்வாடி வேட்பாளராக அசம்கான் உள்ளிட்ட சர்ச்சை வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் சர்ச்சைக்குரிய வேட்பாளர்களாக திகழ்ந்த பலர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில், பா.ஜனதா வேட்பாளரான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், போபால் தொகுதியில் 3 லட்சத்து 64 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்கை தோற்கடித்தார்.



    பிரக்யா சிங், பிரசாரத்தின்போது, கோட்சேவை தேசபக்தர் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். மும்பை தாக்குதலில் உயிரிழந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரேயின் மரணத்துக்கு தனது சாபமே காரணம் என்றும் கூறினார். இத்தகைய பேச்சுகளால், பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டார்.

    உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிட்ட அசம்கான், தனது எதிரணி வேட்பாளரான நடிகை ஜெயபிரதா குறித்து ஆபாசமாக பேசி சர்ச்சையை உண்டாக்கினார். அவர் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    பீகார் மாநிலம் பெகுசாரையில் மத்திய மந்திரி கிரிராஜ்சிங் 4 லட்சத்து 22 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் தட்சணகன்னடா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நளின் குமார் கதீல், உத்தரகன்னடா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
    ×