search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94595"

    கடன் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    மதுரை:

    நாகப்பட்டிணம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 63). தொழில் அதிபரான இவருக்கு வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக ரூ.2ம கோடி தேவைப்பட்டது.

    இதற்காக மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் அருந்ததி, கவுதம் ஆகியோரை அணுகினார். அவர்கள் கடன் தருவதாகவும், அதற்கு டாக்குமெண்ட் செலவுக்கு ரூ. 30 லட்சம் தர வேண்டுமெனவும் கூறினர். இதை நம்பிய வரதராஜனும் ரூ.30 லட்சத்தை 3 பேரிடமும் கொடுத்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வரதராஜனை தொடர்பு கொண்ட 3 பேரும் பணம் தயாராகி விட்டது. உடனே வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினர். இதனை நம்பி வரதராஜன் மதுரைக்கு வந்து ஒரு ஓட்டலில் தங்கினார். அங்கு வந்த 3 பேரும் ஒரு சூட்கேசை கொடுத்து அதில் ரூ. 1 கோடியே 40 லட்சம் இருப்பதாக கூறிவிட்டுச் சென்றனர். வரதராஜனும் பணத்தை இங்கு எண்ணினால் பாதுகாப்பு இருக்காது என்று கூறி சூட்கேசுடன் ஊருக்கு சென்று விட்டார்.

    அங்கு சென்று சூட்கேசை திறந்து பார்த்தபோது ரூ.25 ஆயிரம் மட்டுமே இருந்தது. மேலும் பணக்கட்டுகள் போன்று காட்சியளிப்பதற்காக 3 பேரும் பணத்தை ஜெராக்ஸ் எடுத்து பேப்பர் கட்டுகளை வைத்திருந்தனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வரதராஜன், 3 பேரையும் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் மோசடி குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் கேட்காமல் விவாதத்தை ஒளிபரப்பிய ஆங்கில தொலைக்காட்சி மீது ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. #Rafale #Reliance
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தபின்பும் தொடர்ந்து புகார் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ரபேல் ஒப்பந்தத்தில் உதிரி பாகங்கள் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம் தொழில் அதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் சிபாரிசு இல்லாமல் ரபேல் நிறுவனமே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் ‘உண்மையும் மீறலும்’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேசிய பிரபலங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    இதில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்காமலேயே ஒளிபரப்பப்பட்டதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர் பாக ஆங்கில தொலைக்காட்சி மீது ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி நஷ்டஈடு கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

    இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். வருகிற 26-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார். #Rafale #Reliance
    எடப்பாடி பழனிசாமி தன் மீது வழக்கு போட்டால் சந்திக்கத் தயார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். #DMK #MKStalin #Edappadipalaniswami
    காஞ்சீபுரம்:

    மதுராந்தகத்தில் எஸ்.டி. உகம்சந்த் படத்திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய துறையை பயன்படுத்தி ஒப்பந்ததாரர் அடிப்படையிலே தன்னுடைய உறவினருக்கு காண்ட்ராக்டை கொடுத்திருக்கிறார். ஏறக்குறைய ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேலே அதிலே ஊழல் நடைபெற்றிருக்கிறது.

    இதை உடனடியாக விசாரிக்க வேண்டும். இதற்குரிய தண்டனையை அவருக்கு வழங்கிட வேண்டும் என்று அமைப்புச் செயலாளர் அந்த வழக்கை தி.மு.க. சார்பில் தொடுத்தார்.

    சென்னை உயர்நீதிமன்றம் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து முகாந்திரம் இருக்கிறது என்று சொல்லி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது.

    அடுத்த வினாடியே அவர் முதல்-அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து இருக்க வேண்டும். அந்த வழக்கை சந்திக்காமல், உளுந்தூர்பேட்டையிலே போய் அவர் இதை திசை திருப்புகிற வகையில் நாங்களும் தி.மு.க. மீது வழக்கு போடுவோம் என்கிறார்.

    எங்கள் மீது வழக்கு போடுங்கள், நாங்கள் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். எத்தனையோ வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டதுண்டு. எம்.ஜி.ஆரே எங்கள் மீது வழக்கு போடவில்லையா? சர்க்காரியா கமி‌ஷனை மறந்திருப்பீர்களா?

    சென்னை மாநகரத்திலே 9 மேம்பாலங்கள் நான் மேயராக இருந்தபோது கட்டப்பட்டது. ஆட்சி மாறிய பிறகு ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்ததற்கு பிறகு அதற்காக வழக்கு போட்டார்.

    வழக்கு போட்டது மட்டுமல்ல, இரவோடு இரவாக தலைவர் கலைஞர் வீட்டிலே தூங்கிக் கொண்டிருந்தபோது காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி உள்ளே புகுந்து தரதரவென இழுத்து வந்த அந்தக் கொடிய காட்சிகள் எல்லாம் பார்த்து உலகமெங்கும் இருக்கக் கூடிய தமிழர்கள் அத்தனைபேரும் வேதனைப் பட்டார்கள்.

    பாலம் வீக்கென்று சொன்ன ஜெயலலிதா, அதே பாலத்தின் மேல்தான் தொடர்ந்து கோட்டைக்கு போய் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார். பாலம் வீக்கென்று சொல்லி நம் மீது வழக்கு. வழக்கு போட்டு ஐந்து வருடங்கள் ஆகி விட்டது. ஐந்து வருடமாக ஒரு சார்ஜ்சீட் பைல் பண்ண முடிந்ததா?.

    தலைவரை கைது செய்தீர்கள். என்னை கைது செய்தீர்கள், பொன் முடியை கைது செய்தீர்கள், கோ.சி.மணியை கைது செய்தீர்கள். இப்படி பலபேரை கைது செய்து சிறையில் வைத்தீர்கள். வழக்கு போட்டதற்கு பிறகு அதே அ.தி.மு.க. ஆட்சி ஒரு சார்ஜ் சீட் பைல் செய்ததா என்றால், கிடையாது.

    2ஜி, 2ஜினு ஒரு பிரச்சனையை கிளப்பினார்ளே. எவ்வளவு திட்டமிட்டு பிரசாரம் நடந்தது. அது என்ன ஆனது? நீதிமன்ற தீர்ப்பில் எந்த முகாந்திரமும் இல்லை. அத்தனை பேரும் விடுதலை. இதுதான் தி.மு.க. நாங்கள் எத்தனையோ முறை சிறைக்குப் போய் இருக்கிறோம். ஆனால் இவர்களைப் போல கொள்ளையடித்து விட்டு போகவில்லை.

    இதே எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தி.மு.க. தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் என்கிறார். அதை இன்றைக்கு நாங்கள் போய் நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி விட்டோம். அந்த வழக்கு போடப்பட்டதற்கு பிறகு இதுவரையிலே 7 வருடம் ஆயிற்று. இதுவரையில் அதுபற்றி விசாரணை நடந்ததா? கிடையாது.

    ஆனால் விசாரணைக் கமி‌ஷன், அதற்கு ஒரு அலுவலகம், 3 கார்கள், போலீஸ் ஏறக்குறை 10 கோடி ரூபாய் அந்த நீதிபதிக்கே செலவு. இதைக் கண்டித்து உயர்நீதிமன்றம் என்ன செய்தது என்றால், அந்த கமி‌ஷனையே கலைத்து விட்டது.

    ஆனால் முதல்-அமைச்சராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் என்ன சொல்கிறது? ஆதாரங்கள் இருக்கிறது, அடிப்படை ஆதாரங்கள் இருக்கிறது. எனவே இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. அதை எதிர்த்து நியாயமாக எடப்பாடி என்ன செய்திருக்க வேண்டும்?

    சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று தடை வாங்கியிருக்க வேண்டும். வாங்குவேன் என்று சொன்னார். இதுவரைக்கும் வாங்கவில்லை. ஆனால், வாங்குவதற்கு நாம் தடை போட வேண்டும். அதை வாங்கினால் எங்களையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று சொல்லி, நம்முடைய ஆர்.எஸ்.பாரதி சார்பில் கேவியட்டும் போட்டு வைத்துள்ளோம்.

    எங்களுக்கு தைரியம் இருக்கிறது. தெம்பு இருக்கிறது, நாங்கள் கேவியட் போடுகின்றோம். தலைமைச் செயலக வழக்கில் எங்களுக்கு ஸ்டே கொடுத்துள்ளார்கள். அதை எதிர்த்து அப்பீலுக்கு செல்லும் தைரியும் உங்களுக்கு இல்லை. ஆனால் உளுந்தூர்பேட்டையில் வந்து புலம்பிக் கொண்டு போயிருக்கிறீர்கள்.

    18 எம்.எல்.ஏ. தீர்ப்பு வரட்டும். வந்ததற்கு பிறகு தான் இருக்கிறது கதை. ஏதோ ஆட்சியில் இருக்கிறோம். பதவியில் இருக்கிறோம். அதிகாரம் இருக்கிறது என்கிற திமிரில் இப்படி எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் முடிவு கட்டக்கூடிய காலம் வரப் போகிறது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #Edappadipalaniswami
    திருவண்ணாமலையில் 2 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மணமகன்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #childmarriage
    திருவண்ணாமலை:

    கீழ்பென்னாத்தூர் அரும்பாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடியை சேர்ந்த அறிவழகன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

    திருமண ஏற்பாடு நடந்துவந்த வேளையில், சமூக பாதுகாப்பு அலுவலர்கள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர். திருமண ஏற்பாட்டையும் தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில், திருமண ஏற்பாடு நடந்த இடைப்பட்ட பகுதியில் ஆசைவார்த்தை கூறி மணமகன் உல்லாசம் அனுபவித்ததாக அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்டது.

    மணமகன் அறிவழகன், இவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 4பேர் மீதும் பாலியல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், கீழ்பென்னாத்தூர் மேக்களூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு சிறுமிக்கும், செஞ்சி தாலுகா அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த குருமூர்த்தி என்பவருக்கும் திருமணம் செய்துவைக்க இருத்தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

    சமூகநல பாதுகாப்புதுறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்த சிறுமியும், மணமகன் குருமூர்த்தி மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.

    மணமகன் மற்றும் அவரது தந்தை, சிறுமியின் தாய் மற்றும் உறவினர் என 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #childmarriage
    கோவை அருகே சுரங்கப்பாதை கேட்டு பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை இருகூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    இந்த பள்ளி ஊருக்கு தெற்கே ரெயில்வே பாதையை தாண்டி அமைந்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வர தினமும் ரெயில்பாதையை கடந்து வர வேண்டி உள்ளது. எனவே ரெயில்பாதையை கடந்து செல்ல சுரங்கபாதை அமைக்க வேண்டும் என பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    நேற்று மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.

    இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி சிங்காநல்லூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன், தினேஷ், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மாரியப்பன், ரவிந்திரன், பாலகிருஷ்ணன், குருசாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின், பிரபாகரன், காவ்யா மற்றும் சிலர் சட்டவிரோதமாக கூடி, மாணவ, மாணவிகளை திரட்டி பள்ளி கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    அதன்பேரில் கோகுல் கிருஷ்ணன் உள்பட 9 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், மாணவர்களை தடுத்தல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது கைத்துப்பாக்கியை உருவி மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி.யின் மகன் மீது போலீசார் இன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். #BSPleader #Delhi5starhotel #DelhiHyattRegency #AshishPandey
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் பான்டே. பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தம்பியான ரிட்டேஷ் பான்டே உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் தற்போது உறுப்பினராக உள்ளார்.

    இந்நிலையில், லக்னோ நகரை சேர்ந்த ராகேஷ் பான்டேவின் மகனான ஆஷிஷ் பான்டே என்பவர் நேற்று முன்தினம் டெல்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் குடிபோதையில் தனது கைத்துப்பாக்கியை உருவி ஒரு பெண் உள்பட சிலரை மிரட்டும் வீடியோ காட்சி சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இந்த காட்சிகளை பலர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்தனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டு கிடக்கிறது என்பதை இந்த வீடியோ தெளிவுப்படுத்துவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா குறிப்பிட்டிருந்தார்.

    இதைதொடர்ந்து, இந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் லக்னோ நகரில் உள்ள ஆஷிஷ் பான்டேவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆஷிஷ் பான்டே வீட்டில் இல்லாததால் தேடப்படும் குற்றவாளியாக அவரை அறிவித்து அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்நிலையில், டெல்லி போலீசார் இன்று ஆஷிஷ் பான்டே மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #BSPleader #Delhi5starhotel #DelhiHyattRegency #AshishPandey
    காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பெண் அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் சார்பதிவாளராக (பொறுப்பு) தருமபுரியில் உள்ள பிடமனேரியை சேர்ந்த அருட்பெருஞ்ஜோதி (வயது 45) என்பவர் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பத்திரம் பதிவு செய்ய லஞ்சம் பெறப்படுவதாக தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று திடீரென்று சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில், சார் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதியிடம் கணக்கில் வராத ரூ.33 ஆயிரத்து 266 மற்றும் அவருக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட பிரகாஷ் என்பவரிடம் ரூ.5 ஆயிரத்து 600 மற்றும் சேகர் என்பவரிடம் ரூ.8 ஆயிரத்து 920-ம் கணக்கில் வராமல் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சார்பதிவாளர் உள்ளிட்ட 3 பேரிடமும் இருந்து கணக்கில் வராத ரூ.47 ஆயிரத்து 786 பறிமுதல் செய்யப்பட்டது.

    சார்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி

    மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி மற்றும் இடைத்தரகர்கள் பிரகாஷ், சேகர் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணைக்கு பிறகு அருட்பெருஞ்ஜோதி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது வேறு ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்பது தெரியவரும். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    கடந்த மாதம் 26-ந்தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக வேல்முருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
    சென்னை:

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் மீது சுங்கச் சாவடியை தாக்கியதாக ஏற்கனவே வழக்கு உள்ளது. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

    இந்த நிலையில் வேல் முருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேல்முருகன் பேசினார்.

    அவரது பேச்சை அடிப்படையாக வைத்தே திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 3 சட்ட பிரிவுகளின் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
    போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அரசு ராஜா உள்பட 18 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிந்தனர்.
    திசையன்விளை:

    இந்து தெய்வங்களை பற்றி அவதூறாக பேசிய மோகன் சி.லாசரசை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் திசையன்விளை நேரு திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, திசையன்விளை நகர பொதுச்செயலாளர் கணேச மூர்த்தி, நகர தலைவர் விக்னேஷ், ராதாபுரம் ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் ராஜன், விஸ்வ இந்து பரி‌ஷத் மாநில செயற் குழு உறுப்பினர் முருகையா, நகர செயலாளர் நாகராஜன், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ரெங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அரசு ராஜா உள்பட 18 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிந்தனர். #tamilnews
    சேதராப்பட்டு வேலை தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலில் ஊழியரை தாக்கிய ஆரோவில் நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியில் சர்வதேச நகரமான ஆரோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், வெளிமாநில சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்து விட்டு செல்வார்கள்.

    இந்த தியான மண்டபத்துக்கு முக்கிய விருந்தினர்கள் வரும் போது அவர்களை வரவேற்று உபசரிக்கும் அதிகாரியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எரிக் (38) என்பவர் இருந்து வருகிறார். மேலும் இவர் ஆரோவில் நிர்வாக குழுவில் முக்கிய பொறுப்பிலும் உள்ளார்.

    இவருக்கும், அங்கு பணி புரியும் வடமாநிலத்தை சேர்ந்த சுனித் என்பவருக்கும் வேலை தொடர்பாக கருத்து மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது சுனித்தை எரிக் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் எரிக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    செங்குன்றம் அருகே கோவில் வளாகத்தில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் ராகுல் (வயது 22). இவர் செங்குன்றம் பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, கொலை மிரட்டல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று வழிப்பறியில் ஈடுபட்டார்.

    ஜோதிநகரில் கணேசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது, ரவுடி ராகுல் வழிமறித்து நிறுத்தினார். அவரிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டார்.

    இதையடுத்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரவுடி ராகுலை தேடி வந்தனர். இந்த நிலையில் பாடியநல்லூர் அங்காளஈஸ்வரி கோவில் வளாகத்தில் பதுங்கி இருந்த ரவுடி ராகுலை கைது செய்தனர்.

    சபரிமலைக்கு விதிமுறைகளை மீறி வரும் பெண்களை வெட்ட வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #SabrimalaVerdict #ActorKollamThulasi
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், நேற்று நடந்த போராட்டத்தின்போது சபரிமலை விவகாரம் தொடர்பாக மலையாள குணச்சித்திர நடிகர் கொல்லம் துளசியின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும். ஒரு துண்டை டெல்லிக்கும் மற்றொரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல் மந்திரியின் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அவர் பேசினார்.

    அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர் மீது காவல்துறை இன்று வழக்கு பதிவு செய்துள்ளது. விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது. #SabrimalaVerdict #ActorKollamThulasi

    ×