search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94595"

    வீட்டுமனை மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் தஞ்சை மாப்பிள்ளை நாயக்கர் பட்டியைச் சேர்ந்தவர் தனசாமி (வயது 67). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்புதுக்கோட்டை பாலன்நகர் பகுதியை சேர்ந்த தனபாக்கியம் மற்றும் 11- க்கும் மேற்பட்ட நபர்களிடம் வீட்டு மனை  வழங்குவதாக கூறி, ரூ. 11 லட்சத்து 75 ஆயிரம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.   

    இது தொடர்பாக பணம் கட்டியவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் பணம் திருப்பித்தராமலும், வீட்டு மனை வழங்காமலும் தனசாமி  காலதாமதம் செய்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனபாக்கியம் தலைமையில் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு  இன்ஸ் பெக்டர் லட்சுமியிடம் புகார் செய்தனர். 

    இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் பிச்சை ஆகியோர் தனசாமி  மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தனசாமியை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 21 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி திடீரென கைது செய்யப்பட்டார்.
    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரம் திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவரை நேற்று ரோட்டில் சென்ற போது ஒரு வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணம் பறித்து விட்டு தப்பி சென்றார். 

    இது குறித்து லாரன்ஸ் பொன்மலை போலீசில் புகார் செய்தார். விசாரணையில் பணத்தை பறித்து விட்டு தப்பித்தவர் பிரபல ரவுடி நார்த் டி பாஸ்கர் எனத் தெரியவந்தது. 

    பாஸ்கரை பொன்மலை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். பாஸ்கர் மீது தஞ்சை, நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    திருச்சியில் நேற்று முன்தினம் ரவுடி சந்துரு கொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் தலைமறைவாக உள்ள ரவுடிகளையும் தேடி பிடித்து வருகிறார்கள். ஜாமீனில் விடுதலையாகியுள்ள ரவுடிகளையும் கண்காணித்து வருகிறார்கள். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் தினசரி நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணித்து கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 
    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் பள்ளி கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC
    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில், மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடம் ஆகிறது. பள்ளி கட்டிடங்களில் பெரும்பாலானவை சேதம் அடைந்துள்ளன. அங்கு மாணவர்கள் படிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    எனவே பள்ளிகளை ஆய்வு செய்து பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இதுகுறித்து விசாரிக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    இதைத் தொடர்ந்து பள்ளிகள் ஆய்வு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வருகிற 29-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். #MaduraiHC
    குடிநீர் விநியோகத்திற்கு இடையூறு செய்தது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை அடுத்த கரிக்காப்பட்டி ஊராட்சி தாண்டான்வளவில் 3 சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 35), அவரது மனைவி செல்வி(27) மற்றும் பொன்னுவேல் மனைவி சித்ரா(35) ஆகியோர் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வரவில்லை.

    இதனால் மற்ற பகுதிகளுக்கும், குடிநீர் விநியோகிக்ககூடாது என இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஜலகண்டாபுரம் போலீசார், மேற்கண்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக நங்கவள்ளி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வெங்கடேசன்(40) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews
    தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி விமர்சித்து பேசிய எச்.ராஜா மீது காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #HRaja #BJP
    காஞ்சீபுரம்:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி விமர்சித்து பேசினார்.

    இதனை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி மற்றும் ஊழியர்கள் கடந்த மாதம் 18-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம், எச்.ராஜா மீது புகார் மனு அளித்தனர்.

    அதில், அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி தரக்குறைவாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதையடுத்து புகாரின் அடிப்படையில் இன்று காலை காஞ்சீபுரம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக (294-3ன்) படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #HRaja #BJP
    அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகித்ததாக திமுகவினர் உள்பட 24 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #DMK #TNGovernment
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ரெயில் நிலையம் பகுதியில் தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் இஸ்ரேல் தலைமையில் நிர்வாகிகள் தமிழக அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    ‘‘கலெக்சன், கரப்‌ஷன், கமி‌ஷன்’’ என்ற வாசகங்கள் அந்த துண்டு பிரசுரத்தில் இடம்பெற்று இருந்தது.

    இதையடுத்து அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகித்ததாக தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் இஸ்ரேல் உள்பட 9 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

    இதைப்போல் ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சி பஸ்நிலையம் பகுதியில் தி.மு.க. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை போலீசார், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக், சண்முகம், பழனி, வேலு உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #DMK #TNGovernment
    முன்னாள் எம்.பி. ஆரூணுக்கு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #JMHaroon
    சென்னை:

    ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் முஸ்லிம் அமைப்பு தேர்தல் நடந்தது.

    அப்போது வாக்களிக்க வந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஆரூணுக்கும், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி அஸ்லம் பாட்சா என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக அஸ்லம் பாட்சா ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஆரூண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் ஆரூண் ராயப்பேட்டை போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கல்லூரியில் நடந்த முஸ்லிம் அமைப்பு தேர்தலில் வாக்களித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தேன்.

    அப்போது வாணியம்பாடியைச் சேர்ந்த அஸ்லம் பாட்சா உள்பட 10 பேர் என்னிடம் தகராறு செய்தனர். கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளேன்.

    இதையடுத்து போலீசார் அஸ்லம் பாட்சா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #JMHaroon


    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக காஞ்சிபுரம் எம்எல்ஏ உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #EdappadiPalanisamy #ADMK
    கோவை:

    கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டில் கடந்த 3-ந் தேதி கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.யுமான எழிலரசன், தலைமை பேச்சாளர் சிங்கை சவுந்தர் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பேசினர்.

    இது குறித்து காட்டூர் போலீசார் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.,எழிரசன், தலைமை பேச்சாளர் சிங்கை சவுந்தர் ஆகியோர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #EdappadiPalanisamy #ADMK
    திண்டிவனம் அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திண்டிவனம்:

    நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. அந்த பஸ்சை மதுரையை சேர்ந்த ஜெகதீஸ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

    அந்த நேரத்தில் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மீனாட்சிமுத்து (49), நெல்லையை சேர்ந்த மல்லிகா (60), தினேஷ்பாபு (27), சென்னையை சேர்ந்த சுசீலா (45), மேரிநிர்மலா, தூத்துக்குடியை சேர்ந்த தங்கராஜ் (90), சாத்தான்குளத்தை சேர்ந்த ராஜகுமாரி (50) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திண்டிவனம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பேஸ்புக் மூலம் அறிமுகமாகி பெண் டாக்டரின் கற்பை சூறையாடி திருமணத்திற்கு மறுத்த என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #facebooklove
    சேலம்:

    மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 23 வயது பெண் டாக்டர் ஒருவர் சேலத்தை சேர்ந்த 22 வயது என்ஜினீயருடன் பேஸ்புக் மூலம் அறிமுகமானார். வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இதனை அறிந்த 2 பேரும் பேஸ்புக் மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் வாட்ஸ் அப்பில் மெசேஜ் மற்றும் படங்கள் அனுப்பியும், பேஸ்புக் மூலம் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    எத்தனை நாளுக்கு தான் தூரத்தில் இருந்து பேசுவது என்று நினைத்த இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்தனர். அதனை என்ஜினீயர், பெண் டாக்டரிடம் தெரிவித்தார். உடனே அதற்கு சம்மதித்த பெண் டாக்டர் சேலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு பயிற்சிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு புறப்பட்டார்.

    அங்கிருந்து சேலத்திற்கு வந்த பெண் டாக்டரை காரில் சென்று வரவேற்ற என்ஜினீயர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்க வைத்தார். அந்த ஓட்டல் கணவன்-மனைவி போல 10 நாட்கள் தங்கியிருந்த ஜோடியினர் உல்லாசமாக பொழுதை கழித்தனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு சாப்பிடுவதற்காக அந்த ஓட்டலின் ரெஸ்டராண்டுக்கு அந்த ஜோடி வந்தது. அப்போது திடீரென அந்த பெண் டாக்டர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜினீயர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.அப்போது தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாகவும், வி‌ஷம் குடித்ததாகவும் மாறி, மாறி கூறினார்.

    உடனே ஓட்டல் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பெண் டாக்டரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவலை பெண் டாக்டர், என்ஜினீயரின் உறவினர்களுக்கும் தெரிவித்தார். அதனால் அவர்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். தொடர்ந்து டாக்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது: அதன் விவரம் வருமாறு:-

    ஓட்டல் அறையில் மயங்கி விழுந்த பெண் டாக்டர் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தையும் டாக்டர். சேலத்தில் காதலனுடன் ஓட்டல் அறையில் 10 நாட்கள் உல்லாசம் அனுபவித்ததால் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் டாக்டர் வற்புறுத்தினார்.

    இதற்கு என்ஜினீயர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ரூ.25 லட்சத்தை பெண்டாக்டரிடம் இருந்து செலவுக்கு என்ஜினீயர் வாங்கியுள்ளார். ஓட்டலில் தங்கியதற்கான பணத்தையும் அந்த பெண் டாக்டரே வழங்கினார்.

    இதனால் மனம் உடைந்த பெண் டாக்டர் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மகராஷ்டிராவில் உள்ள அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அலறியடித்த படி சேலத்திற்கு விரைந்துள்ளனர்.

    திருமணத்திற்கு என்ஜினீயர் மறுத்தால் அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேஸ்புக் மூலம் அறிமுகமாகி பெண் டாக்டரின் கற்பை சூறையாடி திருமணத்திற்கு மறுத்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#facebooklove
    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திருச்சி கோர்ட்டில் தேமுதிக நிர்வாகி இன்று ஆஜரானார். #Jayalalithaa #ADMK #DMDK
    திருச்சி:

    கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தே. மு.தி.க. கூட்டணி வைத்து போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆளுங்கட்சியானது. 29 எம்.எல்.ஏ.க்களை பெற்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சியானது.

    இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் விதிமுறைகளை மீறியதாக அப்போதைய தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களான திருவெறும்பூர் செந்தில்குமார், பார்த்தீபன், சந்திரகுமார் உள்பட 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    அதனை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் திருவெறும்பூரில் 30.3.2013 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அப்போதைய தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளராக இருந்த ஏ.ஆர்.இளங்கோவன் பங்கேற்று பேசினார்.

    அவர் பேசும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றியும், அ.தி.மு.க. அரசை கண்டித்தும் விமர்சித்து பேசியதாக தெரிகிறது.

    இதையடுத்து முதல்வரை பற்றி அவதூறாக பேசியதாக இளங்கோவன் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.இளங்கோவன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    ஏ.ஆர்.இளங்கோவன் தற்போது சேலம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளராக உள்ளார். கோர்ட்டில் ஆஜராக வந்த அவருடன் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகோபால், சரவணன், பெருமாள், பகுதி செயலாளர் நூர்முகமது உள்பட பலர் உடன் வந்தனர். #Jayalalithaa #ADMK #DMDK
    மதஉணர்வை தூண்டும் வகையில் பேசிய கிறிஸ்துவ போதகர் மோகன் சி.லாசரஸ் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கோவை:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள நாலுமாவடியை சேர்ந்தவர் மோகன் சி.லாசரஸ்.

    பிரபல கிறிஸ்தவ போதகரான இவர் ‘ஏசு விடுவிக்கிறார்’ என்ற பெயரில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். இவர் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் மோகன் சி.லாசரஸ் பேசியதாவது:-

    இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சாத்தான்களின் இருப்பிடம் அதிகமாக உள்ளது. வட இந்தியாவை எடுத்துக்கொண்டால் பிர்லா மந்திர், அமிர்தசரஸ் பொற்கோவில் என ஆங்காங்கே ஒரு சில இடத்தில் தான் கோவில்கள் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கோவில்கள் தான் இருக்கின்றன. இந்த கோவில்கள் சாத்தான்களின் அரண்கள்.

    தமிழகத்தில் உள்ளது போல சாத்தான்களின் அரண் எங்குமே கிடையாது. இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் இந்த அளவுக்கு சாத்தான் தன்னுடைய எல்லையை கட்டுப்படுத்தி வைத்துள்ளது. ஏன் இவ்வளவு வலுவாக உள்ளது என்பதற்கான காரணத்தை கடவுள் எனக்கு வெளிப்படுத்தி உள்ளார்.

    சமீபத்தில் காஞ்சி சங்கர மடத்திற்கு செல்லக்கூடிய வலிமையை கடவுள் கொடுத்தார். அங்கு இரண்டு பேர் உள்ளனர். பட்டுசேலை, பட்டு வேட்டியை எடுத்து யாகம் செய்து அவர்களை வணங்குகின்றனர். மனிதர்கள், மனிதர்களையே வணங்கும் பழக்கம் தான் உள்ளது. இதுபோன்ற நிறைய ரகசியங்களை தெரிந்து கொள்ள முடிந்தது என பேசி உள்ளார்.

    இந்த கூட்டம் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றது என கூறப்படுகிறது. தற்போது சமூக வலை தளங்களில் இந்த வீடியோ பரவி வரும் நிலையில் மோகன் சி.லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்து அமைப்புகள் சார்பில் பல இடங்களில் போலீஸ் நிலையயங்களில் மனு அளிக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டம் சூலூரை அடுத்த அரசூரை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிற்ப்படுத்தப்பட்டோர் பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன்(43) என்பவர் சூலூர் மற்றும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையங்களில் ஒரு புகார் கொடுத்தார். அதில் மதஉணர்வை தூண்டும் வகையில் பேசிய மோகன் சி.லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இதேபோல பொள்ளாச்சியை சேர்ந்த விஷ்வ இந்து பரி‌ஷத் மாவட்ட துணை செயலாளர் மனோசங்கர்(35) என்பவரும் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் மோகன் சி.லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.

    இந்த புகார்களின் பேரில் மோகன் சி.லாசரஸ் மீது இந்திய தண்டனை சட்டம் 153(ஏ)- மத உணர்வை தூண்டும் வகையில் பேசி சமுதாயத்தினர் இடையே விரோதத்தை ஏற்படுத்துதல், 295(ஏ)- பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×