search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94595"

    உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து போராட்டம் நடத்திய 296 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #AkhileshStopped #SamajwadiProtest
    லக்னோ:

    அலகாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார். இதற்காக லக்னோ விமான நிலையத்துக்கு சென்ற அவரை விமானத்தில் ஏறவிடாமல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். அலகாபாத் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.



    அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லக்னோ, பிரயாக்ராஜ், ஜான்ப்பூர், ஜான்சி, கானுஜ், பால்ராம்ப்பூர், கோராக்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தினர். பிரயாக்ராஜ் பகுதியில் போலீசாரின் தாக்குதலில் தர்மேந்திர யாதவ் எம்பி உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.

    இவ்வாறு மாநிலம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  2 எம்பிக்கள் உள்ளிட்ட 46 முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 296 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் நேற்று உ.பி. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. சமாஜ்வாடி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #AkhileshStopped #SamajwadiProtest

    பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #HardikPandya #KLRahul
    ஜெய்ப்பூர்:

    இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹர்திக் பாண்டிரா, கே.எல்.ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

    தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரபல இயக்குனர் கரண்ஜோகர் நடத்திய நிகழ்ச்சியில் அவர்கள் இந்த சர்ச்சை கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

    இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் மன்னிப்பு கேட்டு இருந்தனர். ஆனாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இருவரையும் சஸ்பெண்டு செய்தனர்.

    பின்னர் அவர்கள் மீதான சஸ்பெண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா நியூசிலாந்தில் விளையாடி வரும் இந்திய அணியுடன் இணைந்தார். இதைப்போல ராகுல் இந்திய ‘ஏ’ அணியில் விளையாடி வருகிறார்.



    இந்த நிலையில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ஹர்திக் பாண்டியா, ராகுல் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் ஜோக்பூர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்தனர். இதைப்போல அந்த நிகழ்ச்சியை நடத்திய கரண்ஜோகர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. #HardikPandya #KLRahul
    தமிழக கல்வித்துறையில் புத்தகங்கள் அச்சடிப்பில் நடைபெற்ற மோசடி தொடர்பாக அதிகாரி அறிவொளி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Arivoli
    சென்னை:

    தமிழக கல்வித்துறையில் “கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி மையம்” என்ற பெயரில் தனி பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக அறிவொளி உள்ளார்.

    இந்த மையத்தின் சார்பில் கல்வி துறையை மேம்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். கல்வியில் எத்தகைய புதுமைகளை கொண்டு வரலாம் என்பது பற்றி இந்த மையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும்.

    அந்த வகையில் ‘உலகமெல்லாம் தமிழ்’ என்ற திட்டமும் மாணவர்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டது. கனவு ஆசிரியர், சிட்டு ஆகிய 2 பெயர்களில் தனியாக புத்தகம் உருவாக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பொது அறிவை வளர்ப்பதற்கும், மொழித்திறனை மேம்படுத்தவும் இந்த நூல்கள் தயாரிக்கப்பட்டன. ‘உலகமெல்லாம் தமிழ்’ திட்டத்தின் கீழ் அனிமே‌ஷன் வீடியோக்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் எழுத்துக்களை சரியாக உச்சரிப்பதற்கும், இசை மற்றும் நடனம் மூலம் எளிதாக கற்கும் வகையில் இந்த வீடியோ சி.டி. உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில்தான் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

    இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் அறிவொளியின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உலகமெல்லாம் தமிழ் திட்டத்தின் கீழ் பாடப் புத்தகங்கள் அச்சடித்ததில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கல்வியியல் ஆராய்ச்சிக்காக வல்லுனர் குழுவை கூட்டாமல் போலியான ரசீதுகளை தயாரித்து மோசடி நடந்திருப்பதும் அம்பலமானது. இது தொடர்பாக ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதனை தொடர்ந்து இயக்குனர் அறிவொளி, முறைசாரா கல்வி நிறுவனத்தின் இயக்குனர் லதா, உதவி பேராசிரியை சங்கீதா, பட்டதாரி ஆசிரியை சித்ரா, இடைநிலை ஆசிரியர் அமலன் ஜெரோன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முறைகேடு குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் மீதும் வழக்கு போடப்பட்டிருப்பதால் அனைவரும் விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.பி.ஐ. வளாகத்தில் சோதனை நடத்தியபோது கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அறிவொளியின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.  #Arivoli
     


    தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிறப்பு கோர்ட்டில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார். #TTVDhinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு கரூரில் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன், மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு இருந்து மக்களை ஏமாற்றி வருகிறது என்று தெரிவித்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தினகரன் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல். ஏ. க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜெ.சாந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் நேரில் ஆஜரானார். அவரிடம், வழக்கின் நகல் வழங்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 4-ந்தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்தார்.

    சிறப்பு கோர்ட்டில் தினகரன் ஆஜரானதை தொடர்ந்து, அ.ம.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் கோர்ட்டில் குவிந்து இருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியில் வந்த தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்தை தடுக்க நினைக்காமல் தமிழக அரசு பேச்சு நடத்த முன்வர வேண்டும்” என்றார். #TTVDhinakaran

    வழிப்புறி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ்காரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
    கோவில்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்தவர் காவேரிமணியன் (வயது 33). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றினார். இந்நிலையில் கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர் செல்வி ஆகியோர் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது வாகன சோதனை என்று அவர்களை வழிமறித்து, 2 பவுன் செயின் மற்றும் 4 கிராம் மோதிரம் ஆகியவற்றை போலீஸ்காரர் காவேரி மணியன் தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து பறித்துள்ளார். இதில் செந்தில்குமாரும், செல்வியும் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து காவேரி மணியனை சுற்றிவளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர்.

    இதேபோல் கழுகுமலையில் இருந்து இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற இரண்டு பெண்களிடம் 11.5 பவுன் நகை பறித்தது மற்றும் கோவில்பட்டி தனியார் நகைக்கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த கயத்தாறை சேர்ந்த முருகானந்தத்தை அரிவாளை காண்பித்து மிரட்டி ஒரு பவுன் மோதிரத்தை பறித்தது ஆகிய புகார்கள் தொடர்பாக காவிரி மணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

    மேலும் அவரது கூட்டாளிகளான வெங்கடேஷ், கணேசன், சுடலை மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்குகள் கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் காவலர் காவேரி மணியன் பணிநீக்கமும் செய்யப்பட்டார். இந்த 3 வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் செந்தில் குமார், செல்வியிடம் நகை பறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ்காரர் காவேரி மணியனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாபுலால் தீர்ப்பளித்தார். மற்ற இரு வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டார். இதேபோல் அவரது கூட்டாளிகள் மூவரும் அனைத்து வழக்குகளிலும் விடுதலை செய்யப்பட்டனர்.இதையடுத்து காவிரி மணியனை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். #tamilnews
    திருப்பத்தூர் அருகே இருதரப்பினர் மோதல் சம்பவத்தில் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குரும்பேரி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில், ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ‘சைலன்சரை’ கழற்றிவிட்டு, அதிக ஒலி எழுப்பியவாறு மற்றொரு பிரிவினர் இருக்கும் பகுதிக்குள் சென்றனர். அதனை அவர்கள் தட்டிக்கேட்ட போது, மீண்டும் தகராறு ஏற்பட தொடங்கியது.

    அதேபோல் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம், கோவில் மாட்டினை அழைத்து வரும்போது தகராறு ஏற்பட்டது. மேலும் அங்குள்ள தலைவர் ஒருவரின் சிலை அருகில் காலி மதுபாட்டில்கள் கிடந்தன. அதனை மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் தான் வீசியுள்ளார்கள் என நினைத்து கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நேற்றும் வாக்குவாதம் நீடித்தது. இதில் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கல், கையால் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் வெங்கடேசன் தரப்பை சேர்ந்த நீலகண்டன் (வயது 24), ஸ்ரீதர் (24) ஆகிய 2 பேருக்கும், சாந்தலிங்கம் தரப்பை சேர்ந்த அன்பரசு, செங்கல்வராயன், ஜெகதீசன் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டதாக தெரிகிறது.

    இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக 3 மோட்டார்சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ஆயுதப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வகையிலும் பதற்றத்தை தணிக்கவும் 100 -க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருதரப்பை சேர்ந்தவர்களை பார்த்துவிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் திருப்பத்தூர் சப்-கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். பின்னர் அங்கிருந்து குரும்பேரி கிராமத்திற்கு தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு, 4 கார்களில் புறப்பட்டார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த வாகனங்களை நிறுத்தினர். அவர்களிடம், ‘‘ஊர் முழுவதும் போலீசாரின் முழுகட்டுப்பாட்டிற்குள் உள்ளது, யாரும் அத்துமீறி உள்ளே வரக்கூடாது’’ என கூறி, அவர்களை திருப்பி அனுப்பினர்.

    இப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #CBIDirector #NageswaraRao

    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

    இதையடுத்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வராவை மத்திய அரசு நியமித்தது.

    இதை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக்வர்மா மீண்டும் இயக்குனர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும் அலோக்வர்மா குறித்து இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர் நிலை குழு முடிவு செய்யும் என்று தெரிவித்து இருந்தது.

    இதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவி ஏற்ற 2 நாட்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலை குழு அறிவித்தது.

    அதனை தொடர்ந்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் கடந்த 11-ந்தேதி மீண்டும் பொறுப்பு ஏற்றார்.

    அலோக் வர்மா தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த புதிய பதவியை ஏற்க மறுத்து அவர் ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக காமன்காஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டெல்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி நிரந்தர சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனுவை அவசரமாக வருகிற வெள்ளிக்கிழமை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நிராகரித்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய், நீதிபதிகள் என்.எல். ராவ், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு அடுத்த வாரம் விசாரணை செய்கிறது.  #CBIDirector #NageswaraRao

    கோவை மாவட்டம் அன்னூரில் வங்கியில் கடன் பெற்றுதருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    அன்னூர்:

    அன்னூர் அருகே உள்ள நாகமாபுதூரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி ராஜம்மாள் (வயது 52).

    இவர் தனது பேரனின் மருத்துவ படிப்புக்காக மகன் மற்றும் மருமகன் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெற முயற்சி செய்து வந்தார்.

    அப்போது கோவையை சேர்ந்த தன்ராஜ், ஜெசிந்தா மேரி ஆகிய 2 பேர் ராஜம்மாளை தொடர்பு கொண்டனர். தன்ராஜ் வங்கியில் வேலை செய்வதாக கூறிய அவர்கள் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளனர்.

    இதை நம்பிய ராஜம்மாள் கோவை வங்கிக்கு சென்று அசல் பத்திரம் மற்றும் கடன் பெற தேவையான ஆவணங்களை கொடுத்து கையெழுத்து போட்டுள்ளார்.

    அப்போது சில வாரங்களில் ரூ.50 லட்சம் ராஜம்மாள் கணக்கில் வந்துவிடும் என தெரிவித்து உள்ளனர். பல மாதங்கள் ஓடி விட்டன. பணம் வங்கி கணக்கில் வரவில்லை.

    ஆனால் வங்கியில் இருந்து ரூ.50 லட்சத்துக்கு வட்டி செலுத்த வேண்டும் என ராஜம்மாளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜம்மாள் அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தன்ராஜ் மற்றும் ஜெசிந்தா மேரி மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.
    கொடைக்கானலில் போலி செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பகுதியில் பிரபல ஓட்டல்கள், தனியார் சொகுசு பங்களாக்கள், பள்ளிகள், அதிகளவில் உள்ளன. இவற்றிக்கு தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் மூலம் காவலாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

    நாய்ஸ்ரோடு பகுதியில் போலி செக்யூரிட்டி சர்வீஸ் இயங்கி வருவதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த செக்யூரிட்டி நிறுவனம் அனுமதியில்லாமல் போலியாக நடத்தப்பட்டு வருவது தெரியவந்தது. இதுகுறித்து பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் ஆகிய 2பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சட்டவிரோத கட்டிடத்தை அதிகாரிகள் இடிக்கவில்லை என்றால், ராணுவத்தை கொண்டு அவற்றை இடித்து தள்ளுவோம் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. #ChennaiHighCourt
    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம், முட்டுக்காடு அடுத்துள்ள காரிக்காட்டு குப்பத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவர், தங்களது கிராமத்தில் பொது நிலத்தை ஆக்கிரமித்தும், திட்ட அனுமதியில்லாமலும் சிலர் கட்டிடங்களை கட்டுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பகுதியை இடிக்கும்படி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டனர். ஆனால் இந்த உத்தரவுப்படி, அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து மனுதாரர், தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் அதுல்யமிஸ்ரா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர், வட்டார வருவாய் அலுவலர் உள்பட பலர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ததால், மனுதாரரின் கணவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியதில், அவர் சுயநினைவு இல்லாமல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

    இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை ஒரு ஆண்டாகியும் அதிகாரிகள் இடிக்கவில்லை. மனிதாபிமானம் இல்லாமல், மனுதாரரின் கணவரையும் தாக்கியுள்ளனர். இந்த செயலும் கோர்ட்டு அவமதிப்பதுதான். எனவே, மனுதாரருக்கு தன்னுடைய கணவரை யார் தாக்கியது என்று தெரிந்தால், அவர்களது விவரங்களை தாக்கல் செய்யவேண்டும். அவர்கள் மீது கோர்டடு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், விதிமீறல் கட்டிடப்பகுதியை அதிகாரிகள் இடிக்காமல் காலம் கடத்தியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலை இமாசலபிரதேச மாநிலத்தில் நிலவியபோது, அம்மாநில ஐகோர்ட்டு ராணுவத்தை பயன்படுத்தி சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டது. அப்படி ஒரு உத்தரவை நாங்கள் பிறப்பிக்க தயங்கமாட்டோம்’ என்று கூறியிருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை இடிக்கும் பணியை தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் ஆஜராகி கூறினர். அதுதொடர்பான வீடியோ காட்சியையும் நீதிபதிகளிடம் காட்டினர்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிட பகுதியை இடித்து தள்ளவேண்டும். அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #ChennaiHighCourt
    பொங்கல் பரிசாக ரூ.1,000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்குவதை தடை செய்யும்படி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #Pongalgift #Rationshops
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



    கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருமானம் உள்ளிட்ட எந்த ஒரு பாகுபாடின்றி, ரூ.1000-த்தை பொங்கல் பரிசாக வழங்குகிறது. ஏற்கனவே, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்காத நிலையிலும், அதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலையிலும், இதுபோல பொதுமக்கள் அனைவரும் ரொக்கப்பரிசு வழங்கினால், அது தேவையில்லாத நிதி சுமையை அரசுக்கு ஏற்படுத்தும். நலத்திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கலாம். அதுகூட பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே உருவாக்க வேண்டும். அதற்காக அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்குவது ஏற்க முடியாது.

    மேலும், தமிழக அரசுக்கு வரி உள்ளிட்ட பிற வகைகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 616 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், செலவு உள்ளிட்டவை ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடியாக உள்ளது. இதுபோக தமிழக அரசு ரூ.43 ஆயிரம் 962 கோடி கடன் வாங்கியுள்ளது. எனவே, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று அல்லது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #Pongalgift #Rationshops
    தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை எதிர்த்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ChennaiHighCourt
    சென்னை:

    கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த கே.சக்கரவர்த்தி. இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள கோவாரண்டோ மனுவில், ‘10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே துணை வேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் என்று பல்கலைக்கழகம் மானிய குழு விதி உள்ளது. ஆனால், இந்த விதியை மீறி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தங்கசாமி உதவி பேராசிரியராக மட்டுமே பணியாற்றியுள்ளார். ஆனால், இணை பேராசிரியராக 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பதாக தங்கசாமி தன்னுடைய சுயவிவரக் குறிப்பில் தெரிவித்துள்ளார். எனவே துணை வேந்தராக பணியாற்ற தங்கசாமிக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக்குழு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #ChennaiHighCourt
    ×