search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94595"

    திசையன்விளையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள உறுமன் குளத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது43). இவர் மீது திசையன்விளை போலீஸ் நிலையத்தில் மணல் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் இவர் மணல் கடத்தியபோது போலீசாரிடம் பிடிபட்டார். அவருக்கு மணல் கடத்தலில் உடந்தையாக இருந்ததாக திசையன்விளை போலீஸ்காரர் சிவாவையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே சின்னதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்தி குமார் மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசுக்கு சிபாரிசு செய்தார். அதை ஏற்ற அவர் சின்னதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தர‌விட்டார். அதன்பேரில் சின்னதுரை பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன.
    சென்னை:

    நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இந்த லோக் அதாலத், தேசிய அளவில் ஆண்டுக்கு ஒரு முறையும், மாநில அளவில் 2 மாதங்களுக்கு ஒரு முறையும் நடத்தப்படுகின்றன.

    லோக் அதாலத்தில், செக் மோசடி, வங்கிக்கடன், மோட்டார் வாகன விபத்து உள்பட 11 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பினரின் சம்மதத்துடன் சுமூக முடிவு எடுக்கப்படும். இதற்காக ஒரு நீதிபதி மற்றும் 2 உறுப்பினர்கள் கொண்ட அமர்வை மாநில சட்டப்பணி ஆணைக்குழு உருவாக்கும்.

    இதுபோன்ற மாபெரும் லோக் அதாலத் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. சென்னை ஐகோர்ட்டில், நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணகுமார், கோவிந்தராஜ், பவானி சுப்பராயன், அப்துல் குத்தூஸ், தண்டபாணி, ராஜமாணிக்கம், சுப்பிர மணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், சரவணன் ஆகியோர் தலைமையில் 10 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஐகோர்ட்டு மதுரை கிளையில் 6 நீதிபதிகள் தலைமையில் 6 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போல மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோர் தலைமையிலும் அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழகம் முழுவதும் 468 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த அமர்வுகள் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதில், எத்தனை வழக்குகள் சுமூக முடிவுக்கு வந்துள்ளது என்பது குறித்து மாலையில் தான் தெரிய வரும். #tamilnews
    மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதை எதிர்த்து புதுச்சேரி அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது. #MekedatuDam #PuducherryGovtCase
    புதுடெல்லி:

    காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.



    இந்நிலையில் புதுச்சேரி அரசும் உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது, மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என புதுவை அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #MekedatuDam #PuducherryGovtCase
    சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காடையாம்பட்டி:

    சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பொட்டியாபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    முதல்கட்டமாக அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளை வைத்துள்ள பொதுமக்கள் தாமாகவே முன்வந்து வழங்கிய நிலத்தில் அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலம் எடுப்பு தனி தாசில்தார் சாந்தி தலைமையில் நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தும்பிப்பாடி கிராமத்திற்கு நில அளவீடு செய்வதற்காக சென்றனர்.

    அப்போது அங்கு திரண்டு வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலத்தை ஒப்படைக்க மாட்டோம் என்று கூறியதோடு இங்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது சில விவசாயிகள் நிலத்தை அளவீடு செய்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்வோம் என கூறி அங்குள்ள கிணற்று திட்டில் இறங்கி மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் நிலத்தை அளக்காமல் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் தாராபுரம் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் தீவட்டிப்பட்டி போலீசில் விவசாயிகள் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில அளவீடு செய்ய சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த வினோத், கிருஷ்ணன், விஜய், சின்னப்பையன், குமரவேல், எல்லப்பன் உள்பட பலர் தடுத்து நிறுத்தினார்கள், அரசு பணிகளை செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் விவசாயிகள் மீது அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல், அச்சுறுத்தும் வகையில் ஒன்றாக கூடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மேகதாது அணை விவகாரத்தில் சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நீதிமன்றம் செல்வோம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Mekedatudam #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவையில் 1957-ம் ஆண்டு முதல் இதுவரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95 சதவீத ஆசிரியர்களுக்கு சம்பளம், பென்‌ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

    விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. புதுவையில் 26, காரைக்காலில் 8, ஏனாமில் ஒரு பள்ளி என மாநிலம் முழுவதும் 35 பள்ளிகள் உள்ளது.

    இந்த பள்ளிகளில் 26 ஆயிரத்து 568 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாதந்தோறும் இந்த பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் சம்பளமாக ரூ.2 கோடியே 92 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

    பென்‌ஷனுக்காக மாதம் ரூ.58 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 மாதத்திற்கு ஒரு முறை இதற்கான கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.

    தற்போது கவர்னர் கிரண்பேடி இதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். இந்த நிதியை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். புதுவை மாநிலம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ்வதற்கு அரசு உதவி பெறும் பள்ளிகளும் காரணம்.

    ஏழை மாணவர்களிடம் அவர்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. பெரும்பாலும் சிறுபான்மையினர்தான் இந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர்.

    இதனால் அவர்களுக்கு நிதியுதவி அளிப்பது பொருத்தமானதுதான். அரசை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமை உள்ளது. விதிமுறைகளை கவர்னர் தொடர்ந்து மீறி வருகிறார்.

    நிர்வாக விதிமுறைகளுக்கு மாறாகவும் செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக பல முறை நான் கடிதம் எழுதி உள்ளேன். அரசின் அன்றாட நடவடிக்கையில் கவர்னர் தலையிடக்கூடாது. அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடக்கூடாது.



    ஆனால், கவர்னர் கிரண்பேடி நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை மிரட்டி வருகிறார். சமீப காலமாக பல அரசு துறை அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

    கூட்டுறவு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.326 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான கோப்பையும் கவர்னர் திருப்பி அனுப்புகிறார். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தடுக்க கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

    அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் கவர்னர் தொடர்ந்து செயல்படுகிறார். ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு அரை சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அந்த சம்பளத்தையும் வழங்கவிடாமல் தடுத்து விட்டார்.

    ரோடியர் மில்லுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய உள்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதற்கான கோப்பு 3 மாதமாக நிலுவையில் உள்ளது. இதற்கு விரைவில் முடிவு கிடைக்கும். இதன் பிறகு ரோடியர் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவோம்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தை மத்திய குழு பார்வையிட்டது. பேரிடர்துறை மூலம் ரூ.10 கோடி இடைக்கால நிவாரணமாக அனுப்பியுள்ளோம்.

    மேலும் மத்திய அரசிடம் நீண்டகால திட்டங்களுக்காக ரூ.1,342 கோடி கேட்டுள்ளோம். புதுவை பகுதியில் சாலைகளை சீரமைக்கவும் நிதி கேட்டுள்ளோம்.

    கேரளா அதிரகண்டி நீர்தேக்கத்தில் இருந்து மாகிக்கு குடிநீர் வருகிறது. இதற்கு மாநில அரசு சார்பில் கேரளா அரசுக்கு பணம் செலுத்தி வருகிறோம். இத் தொகையை கேரளா அரசு திடீரென உயர்த்தியது. கேரளா முதல்வருக்கு கடிதம் அனுப்பி கேட்டுக்கொண்டதால் இத்தொகையை ரத்து செய்துள்ளனர். இதனால் கூடுதலாக செலுத்திய ரூ.2 கோடி திரும்பக்கிடைக்கும்.

    மேகதாதுவில் தடுப்பணை கட்டக்கூடாது என உத்தரவு உள்ளது. அதை மீறி தடுப்பணை கட்டினால் தமிழகத்தை மட்டுமின்றி புதுவையையும் பாதிக்கும். தேவைப்பட்டால் சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நீதிமன்றம் செல்வோம்.

    தமிழக அரசும் காவிரி ஆணையம் கூறியபடி காரைக்காலுக்கு நீர் வழங்க முன்வர வேண்டும். வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டபோது புதுவையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் நிதி அளித்தனர். இந்த நிதியை அடுத்த மாதம் கேரளா முதல்-அமைச்சரிடம் நேரில் அளிக்க உள்ளேன்.

    தற்போது புதுவையில் காரைக்கால் மாவட்டம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கும் தாராளமாக நிதி வழங்க அனைவரும் முன்வர வேண்டும். இதற்காக முதல்-அமைச்சர் அலுவலகத்தில் வார வேலை நாட்களில் தனி பிரிவு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். #Mekedatudam #Narayanasamy

    ஏரல் அருகே இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் 2 வாலிபர்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்தனர்.
    ஏரல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது 28). பிரபல ரவுடியான இவர் கடந்த 23-ந்தேதி இரவில் ஏரல் அருகே மேலமங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டு பகுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் வினோத் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகில் தாமிரபரணி ஆற்றில், நேற்று முன்தினம் குரும்பூர் அருகே கல்லாம்பாறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (22) உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக மிதந்தார். இவரும், வினோத்தும் நண்பர்கள்.

    வினோத் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து ராமச்சந்திரனும் மாயமானது தெரியவந்தது. வினோத்தும், ராமச்சந்திரனும் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டது, போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து இரட்டைக்கொலை வழக்காக போலீசார் மாற்றி பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் வினோத், ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கொலை செய்ததாக, மேலமங்களகுறிச்சி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த துரைமுத்து என்ற ராஜா (26), அவருடைய மைத்துனர் முத்துமுருகன் (26) ஆகிய 2 பேரும் ஸ்ரீவைகுண்டம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் சரண் அடைந்தனர்.

    2 பேரையும் அவர் ஏரல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து ராஜா, முத்துமுருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கைதான ராஜா, முத்துமுருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இரட்டைக்கொலைக்கு பயன்படுத்திய 2 அரிவாள்களையும் போலீசார் கைப்பற்றினர்.

    இரட்டை கொலையில் தலைமறைவான தனுஷ்கோடி, கண்ணன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த கண்ணன், தனுஷ்கோடி ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை ஏரல் சிறுதொண்டநல்லூர் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்தனர். இதையடுத்து சரணடைந்த 2 பேரையும் ஏரல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    அரும்பாக்கத்தில் விபசார அழகியுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் ஏட்டு மீது 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Policeconstable

    சென்னை:

    அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயந்தி. தனது வீட்டில் வைத்தே இவர் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு பார்த்திபன் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அடிக்கடி விபசார அழகியின் வீட்டுக்கு அவர் சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயந்தியின் வீட்டுக்கு விஸ்வநாதன் என்ற வாலிபர் சென்றுள்ளார். உல்லாசம் அனுப விப்பதற்காக சென்ற அந்த வாலிபரை மிரட்டி பணம் பறிக்க அவர் திட்ட மிட்டார்.

    இதன்படி வாலிபர் விஸ்வநாதன் கொடுத்த பணம் போதாது என்று கூறி அவர் தகராறில் ஈடுபட்டார்.

    பின்னர் இதுபற்றி போலீஸ் ஏட்டு பார்த்திபனுக்கும் தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக அரும்பாக்கத்தில் உள்ள விபசார அழகி ஜெயந்தியின் வீட்டுக்கு சென்றார். பின்னர் இருவரும் சேர்ந்து செக்ஸ் ஆசையில் வந்த விஸ்வநாதனை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவர் மீதே குற்றம்சாட்டி அமிஞ்சிகரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

    போலீஸ் விசாரணையில் வாலிபர் விஸ்வநாதன், ஏட்டு பார்த்திபன் பற்றிய ரகசிய தகவல்களை கொட்டித் தீர்த்து விட்டார். தன்னை மிரட்டி ரூ.10 ஆயிரம் பணம் பறித்ததாகவும் 2 பேரும் சேர்ந்து திட்டமிட்டே இதில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறி இருந்தார். இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தர விட்டார்.

    வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன், அண்ணா நகர் துணை கமி‌ஷனர் சுதாகர் ஆகியோரது மேற் பார்வையில் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஏட்டு பார்த்திபனின் லீலைகள் அம்பலமானது.

    இதையடுத்து வாலிபர் விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் போலீசார் உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இதன் படி அமிஞ்சிகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் வழக்கு பதிவு செய்தார். போலீஸ் ஏட்டு பார்த்திபன், விபசார அழகி ஜெயந்தி ஆகியோர் மீது விபசாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு போடப்பட்டது.

    வாலிபர் விஸ்வநாதனை மிரட்டிய குற்றச்சாட்டின் கீழ் 2 பேர் மீதும் கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டியது, வழப்பறி உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜெயந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

    போலீஸ் ஏட்டு பார்த்திபன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏட்டு பார்த்திபனின் செயல்பாடுகள் பற்றியும், பின்னணி குறித்தும் முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பார்த்திபனின் செல்போன் நம்பரை வைத்து அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றி துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

    கைதான விபசார அழகி ஜெயந்தி போலீசில் அளித்த வாக்கு மூலத்தில், கடந்த ஓராண்டாக ஏட்டு பார்த்திபனுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

    விஸ்வநாதனை ஏமாற்றி பணம் பறித்தது போல இருவரும் வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அழகி ஜெயந்தி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் அரும்பாக்கம் பகுதிக்கு குடிவந்துள்ளார்.

    விபசாரத்தில் ஈடுபடுவதற்கு வசதியாகவே அவர் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பதும் உறுதியாகி உள்ளது. இது போன்று விபசாரத்தில் ஈடுபடும் பெண்களை போலீசார் குற்றவாளியாக சேர்க்க மாட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணாக கருதி மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பார்கள்.

    ஆனால் ஜெயந்தி விபசார தொழிலில் ஈடுபடும் எண்ணத்தில் ஏட்டு பார்த்திபனுடன் சேர்ந்தே அரும்பாக்கத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குடியிருந்தது உறுதியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ஜெயந்தி மீது விபசார வழக்கு பாய்ந்துள்ளது. ஏட்டு பார்த்திபனும் வசமாக சிக்கி விட்டார். போலீஸ் ஏட்டு ஒருவர் விபசார தொழிலில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டிருப்பது சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இச்சம்பவம் உயர் போலீஸ் அதிகாரிகளை கடும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. #Policeconstable

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PoesGarden #HC
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.

    இந்த தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டது. தீர்ப்பின் அடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில், சிறப்பு கோர்ட்டு விதித்த அபராத தொகையை, ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துகளை விற்று செலுத்த வேண்டும். அந்த வகையில் ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகளில், போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லமும் ஒன்றாக உள்ளது.

    எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற முடியாது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் கர்நாடக அரசும் இறங்கவில்லை.

    ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த அம்ருதா ஆகியோர் உரிமை கொண்டாடி வருகிறார்கள். ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளாரா?, இல்லையா? என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. தமிழக அரசும் இதுகுறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

    போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, 2 அறைகள் பூட்டி வைக்கப்பட்டன. அந்த அறைகளில் உள்ள ‘சீல்’ இன்னும் அகற்றப்படவில்லை. வருமான வரித்துறையும் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்காமல் உள்ளது.

    இப்படி பல்வேறு குழப்பங்கள், கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு செலவில் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் நினைவு இல்லம் அமைப்பது ஏற்கக்கூடியது அல்ல. எனவே போயஸ் கார்டன் வீட்டை நினைவகமாக மாற்றும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர், இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #PoesGarden #HC

    தூத்துக்குடியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள ஆரோக்கியபுரம் பாலதண்டாயுதபுரத்தை சேர்ந்தவர் முகமது பரூக் (வயது 51). தொழிலதிபரான இவர் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். தூத்துக்குடி சிவந்தான்குளத்தை சேர்ந்தவர் செல்வமதன் (51). இவரும் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 5.10.17-ல் முகமது பரூக்கிடம் கடனாக ரூ. 45 லட்சம் வாங்கியுள்ளார். பின்னர் பணத்தை திருப்பி கொடுத்ததில் இதில் ரூ. 5 லட்சம் பாக்கி இருந்துள்ளது. இதனை முகமது பரூக் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் செல்வமதன் மறுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் ப    ணத்தை கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த செல்வமதன், அவரது மகன்கள் பொன் விக்னேஷ், பொன் சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து முகமது பரூக்கை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் மத்தியபாகம் போலீசில் புகார் செய்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் தூத்துக்குடி ஜெ.எம் 2-வது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்திரவிட்டார். இதன்பேரில் போலீசார் செல்வமதன் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றி விட்டதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது 122 எம்.பி.க்கள் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளனர். #srilankaparliament #rajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் பதவி வகித்த ரனில் விக்ரம சிங்கேவை கடந்த மாதம் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சே நியமிக்கப்பட்டார். எனினும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு ராஜபக்சேவுக்கு கிடைக்கவில்லை.

    எனவே பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஜனவரி 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்த அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து அதிபரின் உத்தரவுக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    அதன்பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் 2 முறை ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டு வந்தன. அவை இரண்டிலும் ராஜபக்சேவுக்கு தோல்வியே கிடைத்தது.

    இதற்கிடையே நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகர் 12 பேர் கொண்ட தேர்வு குழு பட்டியலை வெளியிட்டார். அதில் சர்ச்சை வெடித்தது. அதைத் தொடர்ந்து தேர்வுக்குழு நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

    அதில் சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக 121 ஓட்டுகள் கிடைத்தது. ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.

    அதன்மூலம் பாராளுமன்றத்தில் 3-வது முறையாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு கடும் தோல்வி ஏற்பட்டது.

    இந்த நிலையில் 122 எம்.பி.க்கள் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.

    அதில், “பிரதமர் ராஜ பக்சேவும், அவரது மந்திரிகளும் சர்ச்சைக்குரிய முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்த நிலையில் ராஜபக்சே பிரதமர் அலுவலகத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அவரது நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. #srilankaparliament #rajapaksa
    இலவச காலணி டெண்டர் அறிவிப்பில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐக்கோர்ட் உத்தரவிட்டது. #ChennaiHighCourt
    சென்னை:

    2018-19-ம் கல்வியாண்டுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தின் கீழ் 59.09 லட்சம் ஜோடி காலணி கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு அறிவித்தது.

    ரூ.114 கோடி மதிப்பிலான இந்த டெண்டரை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் காஸியாபத்தில் உள்ள ஷாம் சன் பாலிமர்ஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    விதிமுறைகளை மீறி இந்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த டெண்டர் அறிவிப்பில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதி மகாதேவன் விசாரித்தார். வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    காலணி தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ChennaiHighCourt
    குமரி மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ஹெல்மெட், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிவந்ததாக 118 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்படி நேற்று நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப் டிவி‌ஷன்களில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் நடந்த சோதனையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்ததாக 118 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் ஆவணங்கள் மற்றும் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 10 பேர் மீதும் வழக்குபதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.

    தக்கலையில் நடந்த சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 128 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். முறையான ஆவணம் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 31 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    குளச்சல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிவந்ததாக 179 பேர் மீதும், கன்னியாகுமரியில் நடந்த சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 301 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களுக்கு அபராத தொகையும் விதித்தனர். நேற்று மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தொடர் சோதனையில் மொத்தம் 767 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சோதனை இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. மாவட்டத்தில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews
    ×