search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
    • இடைத்தேர்தல் குறித்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே 4 முறை கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இன்று 5-வது முறையாக வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் குறித்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் 12-ந்தேதி வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் திடீரென அந்த கூட்டம் நாளை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்துவருகிறது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்பு இன்று திடீரென அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள், மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் 40 பேர் அடங்கிய நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் கமிஷனில் கொடுக்கப்பட்டிருந்தது.
    • ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பட்டியலை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது.

    சென்னை:

    ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார்.

    இவரை ஆதரித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பலர் ஓட்டு கேட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷனில் அனுமதி பெற வேண்டும் என்பதால் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் 40 பேர் அடங்கிய நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் கமிஷனில் கொடுக்கப்பட்டிருந்தது.

    இதே போல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் ஆரம்பத்தில் நட்சத்திர வேட்பாளர் பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. தரப்பில் இரு பட்டியல் கொடுக்கப்பட்டதால் அதை இந்திய தேர்தல் கமிஷன் அனுமதிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பி இருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது அணி வேட்பாளரான செந்தில்முருகனை போட்டியில் இருந்து வாபஸ் பெற வைத்தார்.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளராக தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இவரை ஆதரித்து பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் 40 பேர்களுக்கு இப்போது தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது.

    1. எடப்பாடி பழனிசாமி, 2. கே.ஏ.செங்கோட்டையன், 3. தமிழ்மகன் உசேன், 4. கே.பி.முனுசாமி, 5. திண்டுக்கல் சீனிவான், 6. நத்தம் விசுவநாதன், 7.பொன்னையன், 8. தங்கமணி, 9. எஸ்.பி.வேலுமணி, 10. பொள்ளாச்சி ஜெயராமன், 11. டி.ஜெயக்குமார், 12.சி.வி.சண்முகம், 13. வளர்மதி, 14. செல்லூர் ராஜூ, 15. கே.பி.அன்பழகன், 16.ஆர்.காமராஜ், 17. ஓ.எஸ்.மணியன், 18. கோகுல இந்திரா, 19. ஆர்.பி.உதயகுமார், 20. ராஜேந்திர பாலாஜி, 21. கடம்பூர் ராஜூ, 22. வைகைச் செல்வன், 23. கே.வி.ராமலிங்கம், 24. கே.சி.பழனிசாமி உள்பட 40 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பட்டியலை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது.

    • நாங்கள் சத்தியத்தையும், உண்மையும் சொல்லி மக்களை சந்தித்து வருகிறோம்.
    • அ.தி.மு.க. அரசு எத்தனை சுமைகள் வந்தாலும் அதனை தாங்கிக்கொண்டு மக்கள் மீது சுமைகளை சுமத்தாமல் இருந்த அரசு.

    ஈரோடு:

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை 42-வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் வீதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்று டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த தேர்தலை ஆளும் கட்சி பண பலம், அதிகார பலம் கொண்டு சந்தித்து வருகிறது. நாங்கள் சத்தியத்தையும், உண்மையும் சொல்லி மக்களை சந்தித்து வருகிறோம்.

    இதனால் எங்கள் பிரசாரம் மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க. அரசின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதை உணர முடிகிறது. மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க. அரசு எத்தனை சுமைகள் வந்தாலும் அதனை தாங்கிக்கொண்டு மக்கள் மீது சுமைகளை சுமத்தாமல் இருந்த அரசு. எடப்பாடி வகுத்து கொடுத்த வியூகத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. இடைத்தேர்தலில் வெற்றி பெறும்.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் இந்த தி.மு.க. அரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் ஆட்சி பொறுப்பில் ஏற்று 520 திட்டங்களில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று கூறினார். ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறினார்கள். இதுவரை ஒன்றும் செய்யவில்லை. மடிக்கணினி திட்டம் கேள்விக்குறியாக இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மடிக்கணினி வழங்குவது தொடர்பாக சாக்கு போக்கு சொல்லி வருகிறார்.

    முதல் தலைமுறையினர் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட முடிவு செய்து விட்டனர். ஈரோடு நகர் பகுதியில் சொத்து வரி உயர்வு, மின்சார உயர்வு, விலைவாசி உயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பல்வேறு தடைகளை தாண்டி பல்வேறு துரோகங்களை தாண்டி எடப்பாடி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடு த்துள்ளார்.

    திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தையும் தாண்டி அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதேபோன்று இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தில் பணம் பாதாளம் வரை சென்றாலும், அதிகார துஷ்பிரயோகம் செய்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    மக்கள் அளிக்கும் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழகத்திற்கு விடிவுகாலமாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கு இந்த தேர்தல் ஒரு அச்சாரமாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.
    • 120 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் 120 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. இதில் மதியம் 12.30 மணி வரை காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. வாபஸ் பெற போவதாக அறிவிக்கப்பட்ட அ.ம.மு.க. வேட்பாளர் மனுவும் ஏற்கப்பட்டது. ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மனு வாபஸ் வாங்குவதற்கு முன்பே நிராகரிக்கப்பட்டது.

    வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

    • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
    • 13-ந்தேதி மாலையில் திருநகர் காலனியில் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி., மற்றும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், வைகோ, மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்கிறார்கள். இதற்கான அதிகார பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வருகிற 12-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 12-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 5 நாட்கள் தீவிர பிரசாரம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பின்னர் தேர்தலுக்கு முந்தைய 2 நாட்களிலும் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    13-ந்தேதி மாலையில் திருநகர் காலனியில் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகிறார். தொடர்ந்து 2 நாட்கள் வேட்பாளருடன் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் 12-ந் தேதி பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் திடீரென அது ஒத்திவைக்கப்பட்டது. பிரேமலதா, விஜயபிரபாகர் பிரசாரம் குறித்த விவரம் இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும் என்று கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

    • முதலமைச்சர் அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளார்.
    • ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர். பகுதியில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் சேகர்பாபு ஆகியோர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    முதலமைச்சர் அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளார். இது மக்களுக்கான பொற்கால ஆட்சியாக திகழ்கிறது. இதனால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

    வேட்பாளரை அறிவித்து தனித்து நிற்க முடியாமல் திணறும் பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் காலூன்ற முடியாததால் அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கிறது.

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. எத்தனை அண்ணாமலை அ.தி.மு.க.வுடன் கூட்டணியாக வந்தாலும் இந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரட்டை இலை சின்னம் கிடைத்து இருப்பது தொண்டர்களுக்கு மகிழ்ச்சி.
    • இரட்டை இலைக்கு ஓ.பி.எஸ். ஓட்டு கேட்பாராம். ஆனால் வேட்பாளர் தென்னரசு பெயரை சொல்ல மாட்டாராம்.

    சென்னை:

    சென்னை கோட்டையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சுதந்திரமாக, ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அங்கு தி.மு.க.வினர் தேர்தல் விதிகளை மீறி பணம் பட்டு வாடா தீவிரமாக செய்து வருகின்றனர்.

    தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளோம்.

    எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் இடையூட்டு மனு தாக்கல் செய்து இரட்டை இலையை பெற்று இருக்கிறோம்.

    ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வின் பி. டீமாக செயல்பட்டு இரட்டை இலையை முடக்க முயற்சி செய்தார். அது முடியவில்லை. அ.தி.மு.க. தொண்டர்களின் கோவிலாக கருதப்படும் தலைமை கழகத்தை ஓ.பி.எஸ். காலால் மிதித்து கலங்கப்படுத்தினார். அவர் தி.மு.க.வை சார்ந்து இருக்கிறார். அதனால் தொண்டர்கள் அவரை ஏற்க மாட்டார்கள்.

    இரட்டை இலை சின்னம் கிடைத்து இருப்பது தொண்டர்களுக்கு மகிழ்ச்சி. அந்த அடிப்படையில் மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும்.

    இரட்டை இலைக்கு ஓ.பி.எஸ். ஓட்டு கேட்பாராம். ஆனால் வேட்பாளர் தென்னரசு பெயரை சொல்ல மாட்டாராம். இதிலும் அவர் முரண்பாடாக செயல்படுகிறார்.

    "ச்சீ... ச்சீ... இந்த பழம் புளிக்கும்" என்பது போல ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.

    • அ.தி.மு.க. வேட்பாளராக இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவை பாரதிய ஜனதா கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
    • நாம் அனைவரும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    சென்னை:

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவை பாரதிய ஜனதா கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டப்பூர்வ அ.தி.மு.க. வேட்பாளரை முன்நிறுத்தி இருக்கும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பொதுநலன் கருதி கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆளும் கட்சியின் அராஜகங்களை, ஊழல்களை அத்துமீறல்களை, மக்கள் விரோத போக்கை, கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல், திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசை, வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும், நாம் அனைவரும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும்.

    இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும்வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

    ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.
    • வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. கடந்த 4-ந் தேதி வரை 5 நாட்களில் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்கள். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனு தாக்கல் கிடையாது.

    இந்தநிலையில் 6-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளராக பவானி அருகே உள்ள ஓடத்துறையை சேர்ந்த சீதாலட்சுமி (47), அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கட்சி சார்பில் ஈரோடு 46 புதூரை சேர்ந்த சுந்தராஜன் (32), கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி சார்பில் கே.பி.எம்.ராஜா (45), அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் ஈரோடு காசிபாளையத்தை சேர்ந்த பிரேம்நாத் (41), இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்) சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்த மணி (65) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.மேலும் அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த பேராயர் காட்பிரே வாஷிங்டன் நோபுள் (52) ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். இதேபோல் சுயேச்சையாக 7 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள்.

    எனவே நேற்று மட்டும் ஒரே நாளில் 13 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள். இதுவரை மொத்தம் 59 பேர் மனு தாக்கல் செய்து உள்ளார்கள்.

    இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும்.

    இந்நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிவித்த தென்னரசு மனு தாக்கல் செய்துள்ளார்.

    வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (புதன்கிழமை) செய்யப்படுகிறது.

    வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும். எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    • தி.மு.க. அரசுக்கு எதிரான விஷயங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று பிரசாரம் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
    • காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்று கணக்கு போட்டுள்ள எடப்பாடி ஆதரவாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைத்திருப்பதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களத்தில் முன்பை விட சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் அ.தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வருகிற 9-ந்தேதி அன்று ஈரோட்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. பெருந்துறை ரோடு முத்து மஹால் அருகே பிரமாண்ட மேடை அமைத்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்.

    அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தனது பலத்தை நிரூபிக்கும் தேர்தலாகவே இந்த தேர்தலை எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இதன் காரணமாகவே த.மா.கா.வுக்கு பதில் அ.தி.மு.க.வை அவர் களமிறக்கி உள்ளார்.

    தி.மு.க. அரசுக்கு எதிரான விஷயங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று பிரசாரம் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்று கணக்கு போட்டுள்ள எடப்பாடி ஆதரவாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு படிவங்களை டெல்லியில் சமர்ப்பித்து விட்டு இரட்டை இலை சின்னத்துக்கு கையெழுத்து போடும் அதிகாரத்துடன் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. வக்கீல் இன்பதுரை ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா வழி நடத்தியதன் பேரிலேயே வெற்றிச்சின்னமான இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்தனர்.

    • திமுகவின் ‘பி’ டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.
    • ஓ.பன்னீர்செல்வம் குறித்த செங்கோட்டையனின் பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம் என ஓ.பன்னீர்செல்வம் கூறுவதே முரண்பாடு தான்.

    * திமுகவின் 'பி' டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.

    * கட்சி அலுவலகத்தை சூறையாடியவர் தான் ஓ.பன்னீர்செல்வம்.

    * ஓ.பன்னீர்செல்வம் குறித்த செங்கோட்டையனின் பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து.

    * அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் இணைப்பு மட்டும் சாத்தியமில்லை.

    * ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளார்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு பணியாற்றும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. இன்று மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    இடைத்தேர்தலில் போட்டியிட இன்று மதியம் வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசும் இன்றுதான் மனு தாக்கல் செய்தார். தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர், தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    என்றாலும் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இடையேதான் வழக்கம் போல பலப்பரீட்சை உருவாகி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வமும் போட்டி வேட்பாளரை அறிவித்ததால் அ.தி.மு.க. வேட்பாளராக யார் கருதப்படுவார் என்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதுபோல யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதிலும் பரபரப்பு நிலவியது.

    இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க.வின் அவை தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி அவர் பொதுக்குழு உறுப்பினர்களில் 98 சதவீதம் பேரிடம் கையெழுத்து பெற்று தேர்தல் ஆணையத்திடம் நேற்று சமர்பித்தார்.

    அதை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமாருக்கு டெல்லி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து கடிதம் அனுப்பியது.

    அதில், "அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஏ, பி படிவத்தில் கையெழுத்திட்டு வழங்கும் அதிகாரம் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்படுகிறது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளவும்" என்று கூறி இருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுறுத்தல் மூலம் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள வேட்பாளருக்கு அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியானது. இதை தேர்தல் அதிகாரி சிவக்குமார் உறுதிப்படுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், "தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் எனக்கு வந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நான் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்வேன்.

    அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டு தரும் ஏ, பி படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்" என்று கூறினார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு பணியாற்றும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    இதனால் உற்சாகம் அடைந்துள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்று தங்களது பிரசாரத்தை சுறுசுறுப்புடன் தொடங்கி உள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஈரோடுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

    ×