search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவதால் அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை நிறுத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.
    • வரும் 30-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. பிப்ரவரி 27-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பு மனுதாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வும் களம் இறங்கி உள்ளது. தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோட்டில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் கூட்டணி கட்சியான த.மா.கா.வும் கலந்து கொண்டது.

    காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மதியம் 2.30 வரை நடைபெற்றது. பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 6.30 மணி வரை சுமார் 8 மணி நேரம் நடந்தது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு குறித்தும், சின்னம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் முதலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் தேர்தல் பணி குழுவில் இடம் பெற்றுள்ளதால் வேறு வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகியுள்ளது.

    தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவதால் அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை நிறுத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

    அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள கட்சியின் அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    ஈரோட்டில் பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 111 பேர் கொண்ட தேர்தல் பணி குழு மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு அ.தி.முக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு மற்றும் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் ஒவ்வொரு வார்டாக வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் முன்னிலையில் கள நிலவரம் குறித்தும், வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    சின்னம் தொடர்பான தீர்ப்புக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கு பாடுபடுவோம் என்பதே எங்களது இலக்கு. எனவே வரும் 30-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்களுக்கு அதை பற்றி எதுவும் கவலையில்லை.
    • நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டோம்.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஈரோடு திருநகர் காலனியில் நேற்று நடைபெற்றது. விழாவில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி கட்சிகளை எந்த நிலையிலும், எந்த இடத்திலும் தலைவர் மு.க.ஸ்டாலினை விட்டு கொடுத்தது கிடையாது. கூட்டணி கட்சிகள் தி.மு.க.வின் முழு ஒத்துழைப்போடு பணியாற்றி வருகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவதற்கு பணியாற்ற கூட்டணி கட்சிகள் உறுதி அளித்து உள்ளார்கள். இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றியடையும் என முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    அ.தி.மு.க. ரகசிய கூட்டம் ஈரோட்டில் நடந்து வருகிறது. ஏனென்றால் அவர்களால் வெளிப்படையாக கூட்டம் போட முடியவில்லை. இருந்தாலும் வெளியில் வந்து தானே ஆக வேண்டும். கத்தரி முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும். ரகசிய கூட்டம் போட்டுவிட்டு எங்களிடம் வரட்டுமே. நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டோம். எங்களுக்கு அதை பற்றி எதுவும் கவலையில்லை.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

    • ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள பணிக்குழு அமைப்பு.
    • அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் அடங்குவர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவில் 106 நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கீழ்க்கண்டவர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.

    அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண் முகம், செம்மலை,

    தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, விஜயபாஸ்கர், கடம்பூர் சி.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, பென்ஜமின், கருப்பசாமி பாண்டியன், கழக அமைப்பு செயலாளர் நா.பாலகங்கா, கழக இலக்கிய அணிச் செயலாளர் வைகைச் செல்வன், எஸ்.ஆர்.விஜய குமார், சி.த.செல்லப்பாண்டி யன், செ.தாமோதரன், இசக்கி சுப்பையா, ஆதிராஜாராம், வாலாஜாபாத் பா.கணேசன், எம்.சி.சம்பத், கே.சி.கருப்பணன், எம்.ஆர். விஜய பாஸ்கர், எஸ்.பி. சண்முக நாதன், மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா, எஸ்.ஆர். ராஜேஷ், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, தி.நகர். சத்தியா, எம்.கே.அசோக், விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், சிறுணியம் பலராமன், வி.அலெக்சாண்டர், தஞ்சை கணேச ராஜா, செல்வ மோகன்தாஸ் பாண்டியன், ஜாண்தங்கம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் இடம் பெற்று உள்ளன.

    • எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று காலை ஈரோடுக்கு வந்தார்.
    • பவானி நசியனூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி வழிப்பாடு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

    மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போல் தே.மு.தி.க.வும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்து உள்ளது.

    இதற்கிடையே நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து உள்ளது. சமத்துவ மக்கள் கட்சி, பா.ம.க. ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்து விட்டனர்.

    மேலும் டி.டி.வி. தினகரனும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளார். இதே போல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்தார். அதே போல் ஓ.பி.எஸ்.சும் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்து உள்ளார்.

    இதையடுத்து முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று காலை ஈரோடுக்கு வந்தார். பவானி நசியனூரில் உள்ள அவரது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிப்பாடு செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு வந்தார்.

    அங்கு ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயகுமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, பகுதி செயலாளர்கள் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் பூத் கமிட்டி, தேர்தல் வெற்றி வியூகங்கள், பிரசார யுக்தி குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.

    • இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், அவரது திட்டங்களை முறியடிப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    • ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பெயர் பரிசீலிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சேலம்:

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் என இருதரப்பும் போட்டியிட தயாராகி வருகின்றனர்.

    நேற்று, சேலம் மாவட்டம் ஓமலூர் கோட்டை மேட்டுப்பட்டியில் உள்ள அ.தி.மு.க. சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், கே.பி.அன்பழகன், பெஞ்சமின், செல்லூர் ராஜூ, உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி, கே.சி.வீரமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, கே.சி.சம்பத், இசக்கி சுப்பையா, நத்தம் விஸ்வநாதன், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்தும், வேட்பாளராக யாரை நிறுத்துவது, தேர்தல் வெற்றிக்கு என்னென்ன செய்ய வேண்டும், அ.தி.மு.க.வுக்கு சாதகமான நிகழ்வுகள் குறித்தும், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது குறித்தும், விரைவில் வரவுள்ள கட்சி தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், அவரது திட்டங்களை முறியடிப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பெயர் பரிசீலிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அவர் மறுக்கும் பட்சத்தில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

    சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட தயங்க கூடாது, நாம் தான் உண்மையான அ.தி.மு.க என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதை திறமையாக எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எனவே தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆலோசனைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    இன்று (புதன்கிழமை) காலை எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் பலர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் 2-வது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க.வில் தொடர்ந்து நிலவி வரும் சர்ச்சைகள் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் அதை சரிசெய்து தி.மு.க. கூட்டணிக்கு பலமான போட்டியை கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டம் வகுத்து வருகிறார்.

    இதனால் அரசியல் விமர்சகர்கள் மற்றும் மற்ற கட்சியினரின் பார்வை அ.தி.மு.க. 2 அணிகளை நோக்கி திரும்பியுள்ளது.

    குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் முடிவு மற்றும் வியூகத்தை அறிந்து கொள்ள அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • அ.தி.மு.க. எப்போதும் தொண்டர்களின் இயக்கம்.
    • அ.தி.மு.க.வை மீண்டும் எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன்

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தலைவர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அனைவரின் ஒப்புதலோடு எதையும் செய்ய வேண்டும். தொண்டர்கள் எப்போதுமே கீழ்ப்படியில் நிற்பார்கள்.

    அவர்களால் தான் நாம் மேடையில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அது மாதிரியான ஒரு சூழ்நிலை அ.தி.மு.க.வில் தற்போது இல்லை. இது அனைத்திற்கும் கீழ்ப்படியில் நின்று கொண்டிருக்கும் தொண்டர்கள் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பா.ஜ.க. அலுவலக வாசலில் காத்திருந்தது குறித்து கேட்கிறீர்கள். அ.தி.மு.க. எப்போதும் தொண்டர்களின் இயக்கம். தொண்டர்களின் ஆதரவு பெற்றவர்களுக்கு இது போன்ற நிலை ஏற்படாது.

    அ.தி.மு.க.வில் எப்போதும் தொண்டர்கள் எண்ணப்படிதான் முடிவு எடுக்கப்படும். எப்போதுமே 2, 3 பேர் சேர்ந்து முடிவெடுக்க முடியாது. அதுபோன்று முடிவெடுக்கக் கூடிய கட்சி தி.மு.க.தான். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அவ்வாறு முடிவு எடுக்க முடியும்.

    அ.தி.மு.க. குடும்பம் என்பது மிகப்பெரியது. அ.தி.மு.க. குறித்து விரைவில் நல்ல முடிவு வரும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் என்னுடைய முடிவு.

    நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விட மாட்டேன். நான் ஒரு சிலரை எடை போட்டுக் கொண்டு இருக்கிறேன். அ.தி.மு.க.வை மீண்டும் எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க. ஒன்றிணையும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து நான் எதுவும் கூற முடியாது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

    அ.தி.மு.க. சிதறுண்டு இருப்பதற்கு காரணம் பா.ஜ.க.வா என்று கேட்கிறீர்கள். நாம் அடுத்தவரை பற்றி குறை கூற தேவையில்லை. நாம் சரியாக இருந்தால் போதும். என்னை யாராலும் ஏதாவது செய்ய முடியுமா? என் நிழலிடம் கூட யாரும் வர முடியாது.

    ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் நடவடிக்கைகள் அனைத்தும் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளது. ஆகவே ஒருவரை ஒருவர் திட்டுவதை விட்டு விட்டு இருவரும் ஒன்றிணைந்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் வேண்டுகோள். தேர்தல் சமயத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பெட்டியை பூட்டி சாவியை வைத்துக்கொண்ட ஸ்டாலின் அந்த சாவியை தற்போது தொலைத்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது.
    • இப்பொழுது தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.

    சேலம்:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாரத இந்து பரிவார் ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்தஅமைப்பின் தேசிய தலைவர் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றனர். அப்போது திருவண்ணாமலை கலசபாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.

    இதேபோல் மனித உரிமைகள் கழகமும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    தொடர்ந்து சுரேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், பொய்யான வாக்குறுதியை கூறி தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நாங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு பிரசாரத்திலும் ஈடுபடுவோம் என்றார். 

    • அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
    • எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் தொகுதியில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்கிறார்கள்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்.

    இதற்காக கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கோரி உள்ளார்கள். பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துவிட்டன.

    எனவே பா.ஜனதாவும் தனித்து போட்டியிடுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான் என்று அண்ணாமலை வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார்.

    எனவே அ.தி.மு.க.வுக்குத் தான் பா.ஜனதாவின் ஆதரவு என்பது உறுதியாகி விட்டது. இதற்கான அறிவிப்பு டெல்லி மேலிடத்தில் இருந்து இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க.வினரும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார்கள்.

    இன்று மாலையில் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் தொகுதியில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்கிறார்கள்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
    • பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க.வும் காங்கிரசுக்காக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை தி.மு.க. அமைத்துள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரையில் த.மா.கா. ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி. அதனால் த.மா.கா. போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் இம்முறை அ.தி.மு.க. இ.பி.எஸ். அணி போட்டியிட விரும்பியதால் அதனை த.மா.கா. ஏற்றுக்கொண்டது.

    பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். விரைவில் வேட்பாளர் தேர்வு நடைபெறும். நாங்கள் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் நிலை உள்ளது. எடப்பாடி பழனிசாமி தாமாக முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததால், ஒரே ஒரு பதவியாக ஒருங்கிணைப்பாளர் பதவிதான் உள்ளது என தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. வெற்றிக்காக பம்பரமாக சுழன்று கட்சியினர் பணிபுரிய வேண்டும்.
    • நாமே வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையோடு புயல் வேகத்தில் தேர்தல் பணியாற்றுங்கள்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து அ.தி.மு.க. களம் இறங்குகிறது.

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    யாருக்கு சாதகமாக தீர்ப்பு வரப்போகிறது? என்பது அரசியல் களத்திலும், அ.தி.மு.க. வட்டாரத்திலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத விதமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. இதனை வைத்து எடப்பாடி பழனிசாமி பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தல், தற்போதைய சூழலில் அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தலாகும். இதனை கருத்தில் கொண்டு இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்ட மன்ற தேர்தலின் போது கூட்டணி கட்சியான த.மா.கா. குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தது. இதனை மனதில் வைத்து கட்சியினர் செயல்பட வேண்டும்.

    தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மக்கள் மத்தியில் சரியாக நாம் கொண்டு சென்று பிரசாரம் செய்தாலே வெற்றி பெற்று விடலாம். எனவே அ.தி.மு.க. வெற்றிக்காக பம்பரமாக சுழன்று கட்சியினர் பணிபுரிய வேண்டும்.

    ஆளும் கூட்டணியில் உள்ள கட்சி போட்டியிடுகிறதே? நம்மால் வெற்றி பெற முடியுமா? என்று தளர்ந்து போகாமல் பணியாற்றுங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    கட்சிக்கு நிச்சயமாக இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இதில் எந்த குழப்பமும் அடையாதீர்கள்.

    தி.மு.க. அரசு மீது பரவலாக எழுந்துள்ள விமர்சனங்களையும், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும் சொல்லி ஓட்டு கேளுங்கள். நாமே வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையோடு புயல் வேகத்தில் தேர்தல் பணியாற்றுங்கள்.

    எதிர்காலத்தில் நாம் பெறப்போகும் வெற்றிக்கு ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

    இவ்வாறு அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறினார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுவதா? இல்லை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது பற்றி இன்னும் எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் அ.தி. மு.க.வினர் விருப்ப மனுக்களை பெற்றுக் கெள்ளலாம் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினரும், கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் சுறுசுறுப்புடன் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மின்னல் வேகத்தில் தொடங்கி விட்டது.
    • அ.தி.மு.க.வுக்குள் நிலவும் குழப்பத்தால் பா.ஜனதா போட்டியிட யோசிக்கிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் அ.தி.மு.க. போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளது.

    இதையடுத்து பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோரை அ.தி.மு.க. தலைவர்கள் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

    இதில் பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ஜனதா தரப்பில் இருந்து இதுவரை உறுதியான தகவல் எதையும் சொல்லவில்லை.

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அதே நேரம் பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவு கொடுக்க தயார் என்றும் அறிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வுக்குள் நிலவும் இந்த குழப்பத்தால் பா.ஜனதா போட்டியிட யோசிக்கிறது. இதற்காக தொகுதியின் கள நிலவரத்தையும் சர்வே செய்து தயாராக வைத்துள்ளது.

    இந்த தகவல்கள் அனைத்தையும் தமிழக பா.ஜனதா தலைமை டெல்லி தலைமைக்கு தெரிவித்துள்ளது. டெல்லி மேலிடத்தில் இருந்து தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதை பொறுத்து தங்கள் முடிவை தெரிவிப்பதாக பா.ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவின் திட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ள அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மின்னல் வேகத்தில் தொடங்கி விட்டது.

    தேனியில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "என் வழி தனி வழி" என்று குறிப்பிட்டு சின்னத்தை பற்றி கவலைப்படாமல் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபடுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

    இந்த நிலையில் இன்று முதல் விருப்ப மனு பெறப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமை கழகத்தில் இன்று முதல் 26-ந்தேதி (வியாழக்கிழமை) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.15 ஆயிரம் செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "நாங்கள் கூட்டணி தர்மத்துடன் பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளிடமும் ஆதரவு கேட்டோம். பா.ஜனதா தேசிய கட்சி என்பதால் டெல்லியில் கேட்டு சொல்வதாக கூறி இருக்கிறார்கள்.

    அவர்கள் முடிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் போட்டியிடுவது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணி கட்சியின் முடிவை கேட்பதற்காக காத்திருப்பதில் தவறு இல்லை. வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது என்றார்.

    • மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே.
    • 1972 திண்டுக்கல் தேர்தல்போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று அதிரடியாக அறிவிக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அ.தி.மு.க.வினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை எதிர்கொள்ள இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே தேர்தல் பணிமனை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பூஜையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இங்கு நாங்கள் அமைதியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வோம். அதன் முன்னோட்டமாக ஏற்கனவே ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது. இன்று தேர்தல் பணிமனை அமைப்பதற்கு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

    கூட்டணி கட்சிகளுடன் கலந்துபேசி போட்டியிட விரும்புவர்களிடமிருந்து விருப்பமனு பெற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவிக்க உள்ளார். மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அ.தி.மு.க. உறுதியாக வெற்றி பெறும் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். 1972 திண்டுக்கல் தேர்தல்போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும். தி.மு.க. தேர்தல் பணி குழுவில் அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது வழக்கம் தான். நாங்களும் பணிகுழுஅமைத்து தேர்தல் பணியை துவக்குவோம். மக்கள் சரியாக இருக்கிறார்கள். மனம் மாறி இருக்கிறார்கள். அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பார்கள்.

    இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையுடன் போட்டியிட்டு வெற்றி பெறும். அ.தி.மு.க. வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு செங்கோட்டையன் கூறும்போது, ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கூறியிருப்பதற்கும் இரட்டை இலை சின்னம் தனக்குதான், இ.பி.எஸ். அணியுடன் பேச தயார் என்று அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

    இரண்டு அணிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக பாஜக துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் கூறியதற்கு அவர் மீண்டும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

    ×