search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • அ.தி.மு.க. சிறுபான்மை, மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது.
    • புரட்சி தலைவி அம்மா கிறிஸ்தவ பெருமக்களை கவுரவிக்கும் விதமாக, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் வருகிற 19-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    இதுபற்றி அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. சிறுபான்மை, மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது. புரட்சி தலைவி அம்மா கிறிஸ்தவ பெருமக்களை கவுரவிக்கும் விதமாக, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்.

    அந்த வகையில் இந்த ஆண்டும், அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந் தேதி மாலை 5 மணியளவில் சென்னை, வானகரம், ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்கள் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. தலைமை யார் என்பது தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • அ.தி.மு.க.வுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஜி20 என்ற அமைப்பு உள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

    உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 85 சதவீத பங்களிப்பை இந்த நாடுகள்தான் வழங்குகின்றன. இதனால் ஜி20 அமைப்பு சர்வதேச அளவில் அதிக சக்தி வாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது.

    ஜி20 என்ற அமைப்பின் அடுத்த சர்வதேச மாநாட்டை டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 19-ந் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை ஏற்று இருப்பதால் அதை வெற்றிகரமாக நடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த மாநாட்டுக்கு தயாராகும் வகையில் நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாக மாநாட்டு யுக்திகளை வரையறுப்பதற்காக 40 கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

    தமிழகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வுக்கு தலைமை யார்? என்ற சர்ச்சை எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே நீடித்து வரும் நிலையில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட தால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் முதல் முன்னுரிமை கொடுத்து கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையை அனுப்பி வைக்கவே முதலில் திட்டமிட்டு இருந்தார். ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. சார்பில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பா.ஜனதா மேலிடம் அங்கீகரித்து இருப்பதாக கருதப்படுகிறது.

    இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்து உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில் மத்திய அரசும், பா.ஜனதா மேலிடமும் அங்கீகரித்து இருப்பதால் எடப்பாடி பழனிசாமியும் உற்சாகம் அடைந்து உள்ளார்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அ.தி.மு.க. முன்னாள் ஒருங்கிணைப்பாளரான அவர் இது தொடர்பாக பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரலகாத் ஜோஷிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. தலைமைக்கு சட்ட ரீதியாக நான்தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இன்னமும் நான்தான் நீடிக்கிறேன். கடந்த டிசம்பர் மாதம் நடந்த கட்சி கூட்டத்தில் நான் போட்டியின்றி ஏக மனதாக அந்த பதவிக்கு தேர்வானேன்.

    இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அ.தி.மு.க. தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்பதை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அ.தி.மு.க.வுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க.வில் உள்ள சிலரது நடவடிக்கைகளால் கட்சி தலைமை தொடர்பாக சர்ச்சை உருவாகி உள்ளது. சிலர் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் (தற்காலிக) பதவிக்கு தேர்வு செய்து இருப்பதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க.வின் சட்ட விதிகளுக்கு இது முழுக்க முழுக்க விரோதமானதாகும்.

    எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதை தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே எதிர்காலத்தில் இத்தகைய தவறு நடக்காமல் மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று மனப்பூர்வமாக நான் நம்புகிறேன்.

    மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை இனியும் மத்திய அரசு அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க. தலைமை யார் என்பது தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அறிவித்திருப்பது துரதிருஷ்டமாகும்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு சிறிய அணிதான் இருக்கிறது. எனவே அவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தை மத்திய அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. இது தொடர்பாக இதுவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த பதில் கடிதமும் அனுப்பி வைக்கப்படவில்லை.

    இதனால் ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    • தமிழகத்தில் பா.ஜ.க.வினர் நிறைய காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
    • தமிழ்நாட்டை குறி வைத்து உள்ள பா.ஜ.க. இளையராஜா போன்றவர்களை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு காண்கிறார்கள்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக மகிழ்ச்சி அடைகிறோம். பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறேன்.

    தமிழகத்தில் பா.ஜ.க.வினர் நிறைய காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க. நகைச்சுவை செய்து, அவர்களே சிரித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை.

    தமிழ்நாட்டை குறி வைத்து உள்ள பா.ஜ.க. இளையராஜா போன்றவர்களை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு காண்கிறார்கள். காசியில் தமிழ்சங்கம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். தமிழக மக்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட அ.தி.மு.க. தற்போது 4 குழுக்களாக சிதறி இருப்பது அவருக்கு செய்யும் துரோகம். ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் செய்யும் துரோகம். அ.தி.மு.க.வை உடைப்பது, அக்கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாடு திராவிட அரசியலுக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். பா.ஜ.க. அதை பயன்படுத்தும் என்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜி20 தலைவர் பதவியை நமது நாடு பெற்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்.
    • ஜி20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக அரங்கில் வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜி20 அமைப்பு நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அ.தி.மு.க. சார்பாக எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரதமரின் கடின உழைப்பால், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் உயர்மட்ட பிரமுகர்களுடன் நல்லுறவைப் பேணி, இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியதன் காரணமாக, ஜி20ன் தலைமைப் பொறுப்பு சாத்தியமானது. இது 130 கோடி இந்தியர்களை தலைநிமிரச் செய்துள்ளது.

    ஜி20 தலைவர் பதவியை நமது நாடு பெற்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும். மேலும் ஜி20 தலைமைப் பொறுப்பு என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டிய அளவுக்கு பெருமைக்குரியதாகும்.

    பிரதமர் தலைமையில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில், ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற உள்ள ஜி20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. அழிவதற்கு முக்கிய காரணமே வைத்திலிங்கம் தான்.
    • ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கோவை மாவட்டத்தை 4 ஆக பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

    கோவை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டு இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.

    இதில் அ.தி.மு.க செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.கோவை செல்வராஜ் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றார்.

    இதையடுத்து அவருக்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாகவே பன்னீர்செல்வம் அணி சார்பில் நடக்கும் எந்த ஒரு கூட்டத்திலும் கோவை செல்வராஜ் பங்கேற்காமல் இருந்து வந்தார். இதனால் அவர் கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும் தகவல் பரவி வந்தது.

    இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கோவை மாவட்டத்தை 4 ஆக பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இதில் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த கோவை செல்வராஜ் பதவியும் பறிக்கப்பட்டு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கோவை செல்வராஜ் தான் அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் 1972-ல் அ.தி.மு.க.வில் இணைந்து கட்சிக்காக கடுமையாக உழைத்து வந்தேன். கோவையில் அரங்கநாதன் என்பவர் எம்.எல்.ஏ. தேர்தலில் நின்றபோது அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். அப்போது எதிர்கட்சிகள் என்னை தாக்கி மண்டையை உடைத்தனர்.

    இதையடுத்து அரங்கநாதன் என்னை எம்.ஜி.ஆரை சந்திக்க அழைத்து சென்றார். அப்போது எனக்கு 16 வயது. முதல் முறையாக எம்.ஜி.ஆரை சந்தித்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். 1984-ம் ஆண்டு எம்.எல்.ஏ. சீட் கேட்டேன். ஆனால் அங்கு மறுக்கப்பட்டது. காங்கிரசில் சேர்ந்து எம்.எல்.ஏ. ஆனேன். அப்போது ஒருமுறை ஜெயலலிதா என்னை அழைத்து பேசினார். இதனை தொடர்ந்து நான் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தேன். தொடர்ந்து கட்சிக்காக பணியாற்றி வந்தேன்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தலைமயில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டது. இதில் நான் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்தேன். இதுவரை அவருக்கு விசுவாசமாகவே இருந்து வந்தேன்.

    இந்தநிலையில் தான் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி ஆணைய விசாரணை அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தால் ஜெயலலிதா உயிர் பிழைத்திருப்பார் என்ற தகவல் தெரியவந்தது. இதை கேட்டதும் தான் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    ஏனென்றால் அப்போது அ.தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது. முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் நினைத்திருந்தால் ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் அவர்கள் அனைவரும் ஜெயலலிதா உயிரை விட தங்கள் பதவியே முக்கியம் என நினைத்து செயல்பட்டுள்ளனர். இப்படிபட்டவர்களுடன் இதுவரை நான் இணைந்து பணியாற்றியதை நினைத்து வேதனை அடைந்தேன்.

    எனவே இவர்களோடு இனியும் பணியாற்ற விரும்பவில்லை. அதன் காரணமாகவே ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து மட்டுமில்லை. அ.தி.மு.க.வில் இருந்தே விலகுகிறேன்.

    அ.தி.மு.க. அழிவதற்கு முக்கிய காரணமே வைத்திலிங்கம் தான். ஆனால் ஓ.பன்னீர்செல்வமும், வைத்திலிங்கமும் சேர்ந்து தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளை கொடுத்து வருகிறார்கள். ஓ.பி.எஸ் அணியில் இருந்து அவர்கள் என்னை நீக்கவில்லை. நான் கடந்த 2 மாதங்களாகவே எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தேன். நேற்று என்னிடம் கோவை மாநகர் மாவட்டத்திற்கு வேறு பொறுப்பாளரை நியமிக்கட்டுமா என கேட்டனர். அதற்கு நான், தாராளமாக நியமித்து கொள்ளுங்கள். எனக்கும், உங்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டதால் தி.மு.க.வில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, நான் எந்த ஒரு மதவாத கட்சியிலும், தேசிய கட்சியிலும் இணைய மாட்டேன். திராவிட பாரம்பரியத்தில் இருந்தும் விலக மாட்டேன். அப்படியே சேர்ந்தாலும் திராவிட பாரம்பரியமுள்ள கட்சியிலேயே சேருவேன். எனக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்களுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பேன் என்றார்.

    • அரசு ‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும்.
    • எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேறவில்லை. அ.தி.மு.க. தொண்டர்களின் கட்சி.

    பொன்னேரி:

    பொன்னேரியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    நெசவாளர்களின் துயரத்தை போக்க எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதனை ஜெயலலிதா கடைப்பிடித்தார். இதன் காரணமாக நெசவாளர்கள் பயனடைந்தனர்.

    அதேபோன்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கியபோது குறை கூறிய தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்தபின் ரூ.1000 மட்டும் வழங்கினால் போதும் என்று நினைக்கிறது.

    இதனால், கரும்பு, மஞ்சள், பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை விளைவித்த ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

    விவசாய தொழிலுக்கு மூடுவிழா செய்துவிட்டு ஏழைகள் வயிற்றில் அடிக்கக்கூடாது. எனவே அரசு ‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும்.

    காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போன்று சிலர் அங்கும் இங்கும் பதவி சுகத்திற்காக செல்வார்கள்.

    ஆனால் எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேறவில்லை. அ.தி.மு.க. தொண்டர்களின் கட்சி.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். பாராளுமன்ற தேர்தலிலும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது நிச்சயம். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவையும் அதிருப்தியில் இருக்கின்றன.

    அந்த கூட்டணியில் உள்ள 11 கட்சிகளும் கட்டி வைத்துள்ள நெல்லிக்காய் மூட்டை. அதை அவிழ்த்து விட்டால் சிதறி போய்விடும். தி.மு.க. கூட்டணி வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குள் தேய்ந்து போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே நேரத்தில் சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர்.
    • மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். அல்லது கைவிட வேண்டும்.

    கோவை:

    மின்கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டி கோவை சிவானந்தா காலனியில் இன்று அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சரும், எதி்ர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

    அ.தி.முக. கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் முடக்கும் பணியில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து எழவே இந்த உண்ணாவிரத போராட்டம். தி.மு.க. ஆட்சியில் மக்கள் துன்பப்படுகின்றனர். அல்லல்படுகின்றனர்.

    எனவே மக்களின் கோபங்களை, கொந்தளிப்பை உணர்ந்து முதல்-அமைச்சர், செயல்பட வேண்டும்.

    தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகிறது. 18 மாதங்களில் அவர்களால் கோவைக்கு என்ன நன்மை கிடைத்தது. கோவை மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் என்ன நன்மை கிடைத்தது. அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? அதனால் மக்கள் பெற்ற பலன்கள் ஏதாவது உண்டா என்று கேட்டால் ஒன்றுமே கிடையாது.

    2 தினங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அதில் ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கும், ஒரு முதல்-அமைச்சர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு முன்னாள் ஆட்சி என்றார்.

    அதனை யார் சொல்கிறார் பார்த்தீர்களா தற்போதைய பொம்மை முதல்-அமைச்சர், திறமையற்ற முதல்-அமைச்சர். நாங்கள் சொல்கிறோம் ஒரு ஆட்சி எப்படி செயல்படக்கூடாது. ஒரு முதல்-அமைச்சர் எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு இந்த 18 மாத கால தி.மு.க. ஆட்சியே சான்று. இந்த ஆட்சியில் மக்கள் என்ன பலனை கண்டனர். எங்கள் மீது திட்டமிட்டே அவதூறு பிரசாரத்தை முதல்-அமைச்சர் பேசி வருகிறார். அ.தி.மு.க. மீதான அவதூறு பிரசாரத்தை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. 10 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தை பாதாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டதாக குற்றம் சாட்டி வருகிறார்.

    நான் சொல்கிறேன். 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சி பொற்கால ஆட்சி. அந்த ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    வரலாற்று சிறப்புமிக்க அ.தி.மு.க இயக்கத்தை பற்றி பேசுவதற்கும் தகுதி வேண்டும். தற்போதைய முதல்-அமைச்சருக்கு எங்கள் இயக்கத்தை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

    கோவையில் குடிமராமத்து திட்டம், உயர்மட்ட பாலங்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளில் அள்ளி வழங்கியது அ.தி.மு.க ஆட்சிதான்.

    அது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா. எல்லாம் கொண்டு வந்தது நாங்கள். அதனை நீங்கள் திறந்து வைக்கிறீர்கள். அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து வருகிறார் ஸ்டாலின்.

    வெள்ளலூரில் பஸ் நிலையம் கொண்டு வந்து 50 சதவீத பணிகள் முடிந்தது. தற்போது அ.தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்பதால் அதனை முடக்கி வேறுபகுதிக்கு கொண்டு செல்ல பார்க்கிறார்கள். ஜி கொயர் என்ற நிறுவனம் 200 ஏக்கர் இங்கு வாங்கி வைத்துள்ளனர். அங்கு வெள்ளலூர் பஸ் நிலையத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். அதனை தி.மு.க அரசு கைவிட வேண்டும். திட்டத்தை நிறைவேற்றினால் கோவை மக்கள் கொந்தளித்து அதனை எதிர்கொள்வார்கள்.

    அன்னூரில் விவசாய நிலத்தில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும்.

    18 மாத ஆட்சியில் கோவை மாவட்டம் முழுவதையும் தி.மு.க.வினர் புறக்கணித்து வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்துள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது 520 வாக்குறுதிகளை அள்ளிவீசினார். அதில் எதையும் நிறைவேற்றவில்லை. மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை அறிவித்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை கொடுக்கவில்லை. கேட்டால் ஆய்வு செய்து வருவதாக கூறுகின்றனர். எல்லாம் ஏமாற்று வேலை.

    முதியோர்களுக்கு மாதம் 1000 கொடுத்து வந்தோம். அதனை இப்போது நிறுத்தி உள்ளனர். சுமார் 7 லட்சம் பேருக்கு வழங்கப்படுவதில்லை என தகவல் வந்துள்ளது.

    100 நாள் திட்ட பணிகளை முடக்கி மக்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறது தி.மு.க அரசு.

    ஒரே நேரத்தில் சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர். மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். அல்லது கைவிட வேண்டும்.

    மாதந்தோறும் சிலிண்டர், கட்டுமான பொருட்கள் அத்தியவாசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு மக்கள் வாங்குகிற அளவுக்கு குறைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.

    அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வேண்டுமேன்றெ பொய் வழக்கு போடுகின்றனர். அப்படி வழக்கு போட்டால் அ.தி.மு.க முடங்கி விடுமா. அ.தி.மு.க.வை முடக்க ஓராயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் அ.தி.மு.க.வை முடக்க முடியாது.

    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425.40 சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு வழங்குவதை அரசு கைவிட வேண்டும்.

    ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை விவசாயிகள் நலன் கருதி நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வந்தததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து கையெழுத்துதான் என்றனர். அது என்னவானது? நாங்கள் செய்ததையே தான் அவர்களும் செய்துள்ளனர்.

    2017-18 வெறும் 9 பேருக்கு தான் டாக்டர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை எண்ணி பார்த்து தான் அரசு பள்ளி மாணவர்கள் கனவு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தான் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். அதன் மூலம் இந்த ஆண்டு 565 பேர் டாக்டர் படித்து வருகிறார்கள்.

    10 ஆண்டு கால ஆட்சி பாதாளத்தில் செல்லவில்லை. மிளிர்ந்து மீறுநடை போட்டது அ.தி.மு.க ஆட்சியிலே. தி.மு.க. ஆட்சி அமையும் போது எல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும். அது இன்றும் தொடர்கிறது.

    இதுகுறித்து கேட்டால் ஸ்டாலின், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே பழி சுமத்துகின்றனர். வயிறு எறிகிறது என்கிறார். எங்களது வயிறு எரியவில்லை. மக்களின் வயிறு எரிகிறது ஸ்டாலின் அவர்களே.

    மு.க.ஸ்டாலின் ஒரு நடைபயணம் சென்றார். அப்போது அவருடன் சுகாதாரத்துறை அமைச்சரும் செல்கிறார். அவரிடம் எனது மகன் நடித்த கலகத்தலைவன் படம் எப்படி போகிறது என்று கேட்கிறார்.

    மருத்துவமனைகளில் மக்கள் மருந்து மாத்திரை இல்லாமல் அவதிப்படும் நிலையில் மகனின் படம் குறித்து சிந்திக்கிறார். கலகத்தலைவன் படம் தான் நாட்டிற்கு அவசியமான முக்கியமான விஷயமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    அ.தி.மு.க ஆட்சியில் நல்ல திட்டங்கள் மற்றும் மக்கள் பெற்ற பலன் குறித்து நான் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன். நீங்கள் செய்த திட்டங்கள் மக்கள் பெற்ற பலன்கள் குறித்த என்னுடன் பேச நீங்கள் தயாரா?

    இந்த போராட்டத்திற்கு வந்தவர்கள் வாகனத்தை இங்கு நிறுத்தினார்கள். அந்த வாகனத்தை திட்டமிட்டு எடுத்து சென்றுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். விடுவிக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம்.

    மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். வருகிற 9-ந்தேதி பேரூராட்சி பகுதிகளிலும், 12-ந்தேதி அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.

    அதேபோன்று வருகிற 13-ந்தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    பொங்கல் பரிசு தருவதற்கு முதல்-அமைச்சர் தடுமாறி வருகிறார். கடந்த பொங்கலுக்கு கொடுத்த வெல்லம் தரமற்றதாக இருந்ததது. இது மக்களுக்கு தெரியும். பொங்கல் தொகுப்பில் இருந்த அரிசியில் பூச்சி, பல்லி இருந்தது.

    தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்து உள்ளது. சுமார் ரூ.500 கோடிக்கு மேல் ஊழல் நடந்து உள்ளது. இவ்வாறு ஏழை-எளிய மக்களுக்கு வழங்க கூடிய பொருட்களில் கூட ஊழல் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாலை 5 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முடித்து வைக்கிறார்.

    உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தனபால், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், வி.பி.கந்தசாமி, டி.கே.அமுல்கந்தசாமி முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செ.ம.வேலுசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி.ராமலிங்கம், எம்.எஸ்.எம். ஆனந்தன், கே.சி. கருப்பணன், கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    • ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவான நிலையில் உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமித்து வருகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அழிக்க துடித்து வருகிறார். அவர் அ.தி.மு.க.வை ஒரு சமுதாய கட்சியாக மாற்ற நினைக்கிறார்.

    பெரியகுளம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

    ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நீக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவான நிலையில் உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமித்து வருகிறார்.

    அவர்களுடன் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கருத்து கேட்டு வருகிறார். மேலும் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை கொண்டு பொதுக்குழு கூட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டார்.

    இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் எடப்பாடி தொகுதி, சங்ககிரி தொகுதியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட சேலம் மேற்கு புறநகர் மாவட்ட செயலாளர் எடப்பாடி ராஜேந்திரன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

    அதன்பின் எடப்பாடி ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அழிக்க துடித்து வருகிறார். அவர் அ.தி.மு.க.வை ஒரு சமுதாய கட்சியாக மாற்ற நினைக்கிறார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா எந்த நோக்கத்திற்காக இந்த கட்சியை உருவாக்கினார்களோ அதற்காக தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒன்று சேர தயாராகி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் தவறான அணுகுமுறையால் தி.மு.க. அரசின் தவறுகளை கூட சுட்டிக்காட்ட முடியாத நிலை உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. விரைவில் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் பொதுக்கூட்டத்தை எடப்பாடி தொகுதியில் நடத்த வேண்டும். அப்போதுதான் தமிழகம் முழுவதும் மாபெரும் எழுச்சி ஏற்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவையில் நடைபெறும் போராட்டத்தை வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான அச்சாரமாக கோவை அ.தி.மு.க.வினர் கருதுகின்றனர்.
    • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்துவதற்கு திட்டமிட்டு தொண்டர்களை திரட்டி வருகிறார்.

    கோவை:

    கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து நாளை (2-ந்தேதி) கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

    இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

    முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டம் தொடங்குகிறது. இதில் முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க அரசு கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், கோவையில் எந்தஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று கூறியும், தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த உண்ணாவிரத போராட்டமானது நடக்கிறது.

    போராட்டத்தையொட்டி சிவானந்தா காலனி பகுதியில் பந்தல் போடும் பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.கவினர் செய்து வருகிறார்கள்.

    கோவையை பொறுத்தவரை அ.தி.மு.க. கோவை மாநகர் மாவட்டம், புறநகர் வடக்கு மாவட்டம், புறநகர் தெற்கு மாவட்டம் என 3 ஆக உள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் மொத்தம் 11 தொகுதிகள் உள்ளன.

    3 மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்களை திரட்டி வரும்படி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு தொகுதிக்கும் 5 ஆயிரம் பேரை அழைத்து வருவதற்கு கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அ.தி.மு.க வகுத்து வருகிறது.

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    அந்த வகையில் கோவையில் நடைபெறும் இந்த போராட்டத்தை வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான அச்சாரமாக கோவை அ.தி.மு.க.வினர் கருதுகின்றனர். அதற்கு ஏற்றார் வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்துவதற்கு திட்டமிட்டு தொண்டர்களை திரட்டி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலை போன்று கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளை கைப்பற்றுவதற்கு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அ.தி.மு.க.வில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ள ஓ.பி.எஸ். பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது என்று தனது வக்கீல்கள் மூலம் வாதாடி வெற்றி பெற முயன்று வருவார்.
    • தனது வக்கீல்களுடன் தீவிரமாக ஆலோசித்து வரும் ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றியும் விவாதித்து வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஐகோர்ட்டு பெஞ்சில் அப்பீல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டு உள்ளது என்றும் எனவே பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி அளித்த தீர்ப்பில் ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை மையமாக வைத்து சுப்ரீம் கோர்ட்டில் தேவையான கூடுதல் ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்ய ஓ.பி.எஸ். தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வரும் பட்சத்தில் அதனை வைத்து அ.தி.மு.க.வை கைப்பற்றி விடலாம் என்று ஓ.பி.எஸ். கணக்கு போட்டு வைத்து உள்ளார்.

    அ.தி.மு.க.வில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ள ஓ.பி.எஸ். பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது என்று தனது வக்கீல்கள் மூலம் வாதாடி வெற்றி பெற முயன்று வருவார். இதற்காக தனது வக்கீல்களுடன் தீவிரமாக ஆலோசித்து வரும் ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றியும் விவாதித்து வருகிறார்.

    இதற்கு முன்பு பொதுக்குழு கூட்டங்கள் எப்படி நடந்தன? எடப்பாடி கூட்டிய பொதுக்குழு கூட்டம் எப்படி நடந்தது என்பதை எல்லாம் ஒப்பிட்டு சுப்ரீம் கோர்ட்டில் வாதாட ஓ.பி.எஸ். வக்கீல்கள் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் அதிரடியாக வியூகம் வகுத்து வருகிறார். ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தங்களுக்கு சாதகமாக வந்துள்ள தீர்ப்பை சுட்டிக் காட்டி அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது என்பதை எடுத்துக் கூற உள்ளனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்காக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவுப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தயாரித்து வைத்துள்ள எடப்பாடி ஆதரவு வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி நிச்சயம் என்கிற நம்பிக்கையோடு காய் நகர்த்துகிறார்கள். டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்களும் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து கோர்ட்டிலும் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    இதனால் எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவு நிர்வாகிகள் 6-ந் தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணையை மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. தலைமை கழகம் தொடர்பான வழக்கில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது போல, பொதுக்குழு வழக்கிலும் நிச்சயம் எங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பது தமிழக அரசியல் அரங்கிலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

    • அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திலே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது. மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம்.
    • தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி லட்சக்கணக்கான முதலீட்டில் தொழில் தொடங்க வழி செய்தோம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

    கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் பாதாளத்துக்கு சென்று விட்டது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கின்றார். அவர் கவனத்துக்கு நான் சில தகவல்களை சொல்கிறேன்.

    10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இதற்கு ஆங்கில பத்திரிக்கை ஆய்வு நடத்தி சான்று அளித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் இன்றைய நிலை என்ன?

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 36 மணி நேரத்தில் 12 கொலைகள் நடந்துள்ளது. ஆகவே சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என முதல்-அமைச்சர் சொல்ல வேண்டும். தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து படுபாதாளத்துக்கு விட்டது. தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கிறது. 2,138 பள்ளி, கல்லூரி வளாகத்திலேயே கஞ்சா விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ஏன் அனைவரையும் இதில் கைது செய்யவில்லை. இதில் ஆளுங்கட்சியினரே ஈடுபட்டு இருக்கின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க. கவுன்சிலருக்கு தொடர்பு உள்ளது என தெரியவந்துள்ளது. ஆனால் இது முதல்-அமைச்சருக்கு தெரியவில்லை. எனவே பொம்மை முதல்-அமைச்சர், திறமையற்ற முதல்-அமைச்சர். உள்துறையை கையில் வைத்துள்ள முதல்-அமைச்சர் இன்று போதை பொருள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

    தி.மு.க. பொதுக்குழு நடந்தபோது மு.க.ஸ்டாலின், நான் உறங்கி காலையில கண்விழ்கின்ற பொழுது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கின்றேன். நம்முடைய கட்சிக்காரர்களால் என்ன நடக்குமோ? என்று பயத்தில் கண்விழிக்கிறேன் என்றார். இது அவர் கொடுத்த வாக்குமூலம், நாங்கள் சொல்லவில்லை. எதிர்க்கட்சிகள் சொல்லவில்லை.

    எனவே போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வினர் ஈடுபடுவது தெள்ளத்தெளிவாகிவிட்டது. அந்த கட்சியின் தலைவரே ஒப்புதல் அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமை அன்றாட நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வருகின்ற அன்றாட செய்தியை வைத்து தான் இதை நாங்கள் சொல்கிறோம்.

    எதிர்க்கட்சியாக எங்கள் கடமையை நாங்கள் முழுமையாக நிறைவேற்றுகிறோம். ஆனால் அவர்கள் நாட்டு மக்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவதில்லை. ஒரு முதலமைச்சரின் கடமை என்ன? நாட்டு மக்களை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக வீட்டு மக்களை பற்றியே சிந்திக்கக்கூடிய முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

    தமிழகத்தில் பல அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்பில்லை. அதை நான் அறிக்கை வாயிலாக வெளியிட்டேன் அதையெல்லாம் அவர் அமைச்சருடன் ஆலோசிக்காமல் தனது மகன் நடித்த திரைப்படம் எப்படி உள்ளது? அது அதிக வசூலை கொடுக்குமா? என்று அமைச்சரிடம் விவாதிக்கிறார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திலே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது. மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி லட்சக்கணக்கான முதலீட்டில் தொழில் தொடங்க வழி செய்தோம். பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தினோம்.

    விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். புயல், வெள்ள பாதிப்புகளின்போது உரிய நிவாரணம் உடனடியாக வழங்கினோம். விவசாயிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவர்கள் பயிரிட்ட அந்த பயிர்கள் எல்லாம் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே அதிகமான காப்பீட்டை அ.தி.மு.க. அரசுதான் விவசாயிகளுக்கு பெற்றுத்தந்தது. குடிமராமத்து திட்டம் மூலம் தண்ணீரை நீர்நிலைகளில் சேமிக்க செய்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டப் பணிகளும் நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாமல் ஒரு கட்சி பொதுக்குழுவை கூட்ட முடியுமா? என்ற கேள்வி வரும்.
    • கட்சியின் கிளை கழகம் முதல் மாவட்ட பொறுப்பு வரை தேர்தல் நடைபெற்றதா? அந்த தேர்தல் செல்லுமா? என்ற கேள்விகளும் எழும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு தனி நீதிபதி அந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவித்தார்.

    அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல் முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அந்த தடையை நீக்க கோரி ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு வருகிற 30-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் தன் தரப்பை வலுப்படுத்துவதற்காக புதிய நிர்வாகிகள் நியமனம், பொதுக்குழுவை கூட்டுவது ஆகிய பணிகளில் ஓ.பி.எஸ். தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    ஆனால் இந்த பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதுமட்டுமல்ல தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தான் அடிமட்டத்தில் இருந்து புதிய நிர்வாகிகளை நியமித்து கடைசியில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும்.

    இதற்கு ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தரப்பு கையெழுத்து போட வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்கனவே காலியாகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவை விரைவில் கூட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் இப்போது தள்ளி வைத்து இருப்பதாகவும் கோர்ட்டு முடிவை பொறுத்து வருகிற ஜனவரி மாதம் நடத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த தயக்கத்துக்கு காரணம் கோர்ட்டு வழக்கில் சிக்கி விசாரணைக்கு ஆஜராக நேரிட்டால் இடியாப்ப சிக்கலுக்குள் சிக்க நேரிடும் என்பதுதான்.

    அதாவது தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்றும் எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளர் என்றும் தான் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டு வருகிறார். அப்படியானால் இருவரது கையெழுத்தும் பொதுக்குழுவை கூட்ட தேவை. இருவரும் கையெழுத்து போடாமல் தன்னிச்சையாக எப்படி பொதுக்குழுவை கூட்டினீர்கள் என்று கேள்வி வரும்.

    தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாமல் ஒரு கட்சி பொதுக்குழுவை கூட்ட முடியுமா? என்ற கேள்வியும் வரும். கட்சியின் கிளை கழகம் முதல் மாவட்ட பொறுப்பு வரை தேர்தல் நடைபெற்றதா? அந்த தேர்தல் செல்லுமா? என்ற கேள்விகளும் எழும்.

    இந்த மாதிரியான கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்துவதை ஓ.பி.எஸ். விரும்பவில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

    ×