search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜனதா தலைவர்கள் நிர்பந்திப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை.
    • கடந்த வாரம் சென்னைக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திப்பதையும் தவிர்த்து விட்டார்.

    சென்னை:

    அ.தி.மு.க.-பாரதிய ஜனதா கூட்டணி நீடித்தாலும் இரு கட்சிகளிடையேயும் உரசலும், சலசலப்பும் தொடங்கி இருக்கிறது.

    2024 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    இதற்கு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைய வேண்டும் என்று பா.ஜனதா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக டெல்லி மேலிட தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்பந்தம் கொடுத்து வருகிறார்கள்.

    ஒற்றைத் தலைமை பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராததால் ஓ.பன்னீர் செல்வம் பா.ஜனதா தலைவர்களுடன் இருக்கும் நெருக்கத்தின் காரணமாக தன்னை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால் அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி விட்டார்.

    மேலும் அ.தி.மு.க. என்றால் நான்தான். என்னிடம் தான் கட்சி ரீதியான தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி விட்டார். இதுபற்றி டெல்லி பா.ஜனதா தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது.

    அதன் பிறகும் பா.ஜனதா தலைவர்கள் நிர்பந்திப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. இதனால் கடந்த வாரம் சென்னைக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திப்பதையும் தவிர்த்து விட்டார்.

    இதுபற்றி எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அதன் தலைவர்கள் வரும் போதெல்லாம் சந்திக்க அவசியமில்லை. பிரதமர் மோடி வருகையின் போது எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் வரவேற்க சென்றேன் என்றார்.

    இந்த உரசல் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை இருந்தால் மட்டுமே தி.மு.க.வை எதிர்க்க முடியும். எங்களுக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் எந்த சிக்கலும் இதுவரை இல்லை. தேவையில்லாமல் நெருக்கடி கொடுத்தால் கூட்டணிதான் உடையும்.

    எங்களை பொறுத்தவரை 2024 பாராளுமன்ற தேர்தல் ஒரு பொருட்டே இல்லை. எங்கள் குறிக்கோள் 2026 சட்டசபை தேர்தல்தான்.

    கழகம் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்களையும், சோதனைகளையும் சந்தித்து விட்டது. எனவே எத்தகைய நெருக்கடிகளையும் சந்திக்கும் வல்லமை கட்சிக்கு உண்டு.

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் வலிமையான தலைவராக இருக்கிறார். எத்தகைய சவால்களையும் அவர் சந்திப்பார் என்றார்கள்.

    கூட்டணியை பற்றி கவலை இல்லை என்பதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவுக்கு இந்த அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளார். அடுத்து பா.ஜனதா தலைவர்களின் அணுகுமுறையை பொறுத்துதான் இந்த கூட்டணியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்கிறார்கள்.

    • பா.ஜனதாவின் நெருக்கடியில் இருந்து விலகி செயல்படும் மன நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டதாக கூறப்படுகிறது.
    • வருகிற 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் முடிவை பொறுத்து மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணிகளை நோக்கி நகர தொடங்கி விட்டன.

    தேர்தல் நேரங்களில் கூட்டணி கட்சிகள் மாறுவது வழக்கமானது தான். இந்த மாற்றங்களுக்கு திரை மறைவு ரகசியங்கள், வெளிப்படையான பிரச்சினைகள் காரணமாக அமையும்.

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதாவும், தி.மு.க.வுடன் காங்கிரசும் சேர்ந்தன. இந்த கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்தன.

    இதில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் இடம்பெற்றன.

    தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் கூட்டணிகளில் மாற்றங்கள் வரலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் காங்கிரசுக்கு 'சீட்'களை கேட்டு பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கான தேர்தல் என்பதால் கூடுதல் தொகுதியை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால் அந்த அளவுக்கு தொகுதிகளை விட்டுக்கொடுக்க தி.மு.க. முன்வராது.

    அதற்கு காரணம் காங்கிரசின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் தடம் பதிக்க விரும்புவதால் கூடுதலான எம்.பி.களுடன் பாராளுமன்றத்தில் வலுவான கட்சியாக இருப்பதையே விரும்பும்.

    இந்த நெருக்கடியில் தான் கூட்டணியில் எதிர்பார்த்த எண்ணிக்கையில் 'சீட்' கிடைக்காவிட்டால் கூட்டணி மாறுவது பற்றி யோசிக்கலாம் என்ற மனநிலையில் காங்கிரசார் உள்ளனர்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜனதா கூட்டணியில் இருப்பதால் பலன் இல்லை என்றே நினைக்கிறது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க பா.ஜனதா மேலிடம் வற்புறுத்துவதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

    டி.டி.வியும் வேண்டாம், ஓ.பி.எஸ்.சும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து டெல்லி தலைவர்களை சந்தித்து வலியுறுத்துவதால் பா.ஜனதா தலைவர்களும் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

    முக்கியமாக அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியை விட ஓ.பன்னீர்செல்வம் தான் நமக்கு ஆதரவாக இருப்பார் என்ற கருத்தும் பா.ஜனதா தலைவர்களிடம் உள்ளது.

    பா.ஜனதாவின் நெருக்கடியில் இருந்து விலகி செயல்படும் மன நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டதாக கூறப்படுகிறது.

    வருகிற 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் முடிவை பொறுத்து மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது.

    காங்கிரசை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம், முன்னேறியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் ஆகியவற்றில் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் தி.மு.க. உள்ளது.

    எனவே தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாமா? என்ற தயக்கத்தில் இருக்கும் காங்கிரசையும், பா.ஜனதா கூட்டணியில் தொடர தயங்கும் அ.தி.மு.க.வையும் சேர்த்து விடுவதற்கான வேலை டெல்லி அளவில் ஜரூராக நடப்பதாக கூறப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் பட்சத்தில் பா.ம.க., தி.மு.க. அணிக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் வெளியேறும். அந்த கட்சி காங்கிரஸ் அணியில் இடம் பிடிக்கும்.

    இப்படி ஒரு சூழ்நிலை உருவானால் 2014 தேர்தலை போல் வருகிற தேர்தலிலும் பா.ஜனதா தனித்து விடப்படும். அது மும்முனை போட்டிக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த கூட்டணி மாற்றங்கள் நிகழும் பட்சத்தில் எந்த அணியில் இடம் கிடைக்கும் என்று சில சிறிய கட்சிகள் தவிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

    • ஜெயலலிதா தலைவராக இருந்த அ.தி.மு.க.வில் இன்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள்.
    • எடப்பாடி பழனிசாமி ஒரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.ம.மு.க. சுதந்திரமாக இயங்கக் கூடிய இயக்கம். நாங்கள் மற்றவர்களுடன் கூட்டணி தான் போக முடியும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மெகா கூட்டணி பற்றிய பேச்சு வந்துள்ளதால் அதில் சேர தயார் என்றேன். எனவே பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணியில் அ.ம.மு.க. சேரும்.

    ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் ஓரணியில் திரண்டு தி.மு.க. அணியை எதிர்க்க வேண்டும்.

    அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என்பதை காண்பிக்கிறார். நான் அரைக்கால் சதவீதம் கூட எடப்பாடி பழனிசாமியுடன் செல்வேன் என்று எங்கும் சொல்லவில்லை.

    நீங்கள் அ.தி.மு.க. கூட்டணியுடன் செல்வீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் திரும்ப திரும்ப கேட்கிறார்கள். அ.தி.மு.க. என்பது இன்று செயல்படாத கட்சியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்.

    ஒரு கட்சி பெரிய கட்சியாக இருந்தாலும் சரி, சின்ன கட்சியாக இருந்தாலும் சரி இடைத்தேர்தல் வரும்போது கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும். அங்கு அந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனியாக போட்யிட்டோம். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாததாலேயே தோல்வியை சந்தித்தோம். தேர்தல் பின்னடைவுக்கு அதுவும் ஒரு காரணம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. ஒரு அணியை போல செயல்படும். இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அ.ம.மு.க. தமிழ்நாட்டில், சிறப்பாக பணியாற்றும். எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    ஏற்கனவே தேர்தலில் நாங்கள் பின்னடைவை சந்தித்ததால் வருங்காலத்தில் நாங்கள் தேர்தலில் பின்னடைவை தான் சந்திப்போம் என்று யாராவது நினைத்தால் அது அவர்களின் எண்ணம். எங்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

    ஜெயலலிதா தலைவராக இருந்த அ.தி.மு.க.வில் இன்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஒரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார்.

    அ.தி.மு.க. தலைவர் யார் என்பதை நீதிமன்றம் போய் முடிவு செய்யும் இடத்தில் அந்த கட்சி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க ஆட்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வாக்காளர் முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது,

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசி உயர்வை வைத்தே மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர். ஆவின்பால் விலையை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்திவிட்டனர். மின்சார கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி போன்ற அனைத்தையும் உயர்த்திவிட்டனர்.

    தி.மு.கவுக்கு வாக்களித்த மக்களும், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது என்று தி.மு.கவினர் கூறிவருகின்றனர். மழைநீரே இல்லை என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சென்னை மழைநீரில் தத்தளிக்கிறது. ஆனால் அ.தி.மு.க. 4ஆக உடைந்துவிட்டது. இவர்கள் ஒன்றுசேர்ந்தால்தான் வெற்றிபெற முடியும் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

    இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.கவின் 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் 70 பேர் உள்ளனர். 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர் உள்ளனர். தி.மு.க ஆட்சியின் அவலத்தை மக்கள் தற்போது நன்றாக உணர்ந்து உள்ளனர். எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவது உறுதி. இதற்காக அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று அவர் தெரித்தார். இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அபார வெற்றிபெறும். இந்த கூட்டணியில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோருக்கு இடமில்லை. அவர்கள் வருவதால் அ.தி.மு.கவுக்கு எந்த லாபமும் இல்லை. தி.மு.க ஆட்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களை கைது செய்யும் போலீசாரை ஆளும்கட்சியினர் மிரட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான சிறப்பு முகாம்களில் கட்சி நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, அபிராமி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • அ.ம.மு.க.வை எங்கள் கூட்டணியில் இணைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் தலச்சங்காட்டில் நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைவது உறுதி. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வை எங்கள் கூட்டணியில் இணைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.

    தமிழகத்தில் போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி டிஜிட்டல் சேவையை தொடங்கி வைத்து விலையில்லா செட்டாப் பாக்ஸ் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
    • 16 ஆயிரத்து 702 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 36.40 லட்சம் டிஜிட்டல் தர நிலை வரையறை மற்றும் உயர் வரையறை செட் ஆப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    மதுரை:

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தனது சேவையை தொடருவதற்கு முன்னர் ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அதிகளவு கட்டணத்தை வசூலித்து வந்தன.

    2011-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் குறைந்த கட்டணத்தில், நிறைந்த கேபிள் டி.வி. சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புனரமைத்து புத்துயிர் அளித்தார்.

    இதனால் 4.94 லட்சமாக இருந்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 474 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக கீழ் இணைப்புகள் வழங்கப்பட்டு 70.52 லட்சமாக உயர்ந்தது.

    இந்தியா முழுவதும் கேபிள் டி.வி. சேவைகளை நான்கு கட்டங்களில் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்தது.

    இதையடுத்து 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி டிஜிட்டல் சேவையை தொடங்கி வைத்து விலையில்லா செட்டாப் பாக்ஸ் விநியோகத்தை தொடங்கி வைத்தார். அதன் மூலம் 16 ஆயிரத்து 702 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 36.40 லட்சம் டிஜிட்டல் தர நிலை வரையறை மற்றும் உயர் வரையறை செட் ஆப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    சென்னை, சேலம், கோவை, திருச்சி மதுரை ஆகிய நகரங்களில் உயர் வரையறை கேபிள் டிவி சேவையை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதுதான் படிப்படியாக இன்றைக்கு ஆலமரம் போல் வளர்ந்திருக்கிற அரசு கேபிள் டி.வி. நிறுவனம். பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 595 அரசு இ சேவை மையங்களை நிர்வாகித்து வந்தது.

    அரசு கேபிள் டிவியின் கீழே 2017 ஏப்ரல் முதல் 36 லட்சம் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 21 லட்சம் செட்டாப் பாக்ஸ் மட்டுமே செயலில் உள்ளன. 11 லட்சம் பாக்ஸ்கள் செயல்பாட்டில் இல்லை. தி.மு.க. அரசுக்கு ஏழை எளிய மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை தான் இது காட்டுகிறது.

    அரசு கேபிள் டி.வி. வாடிக்கையாளர்கள் 5 லட்சம் பேர்களை தனியாருக்கு மாற்றம் செய்திருப்பது அரசு கேபிள் டிவிக்கு மூடுவிழா நடத்துகிற உள்நோக்கத்தோடு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தனியாருக்கு சிவப்பு கம்பளம் விரித்து தனியாருக்கு தாரைவார்க்கும் இந்த செயலுக்கு ஒப்புக்கு தப்பாக சேர்மனை நீக்கி இருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஆலமரமாக வளர்ந்திருக்கிற அரசு கேபிள் நிறுவனத்தின் மீது மறைமுகமாக கொடுக்கப்பட்டிருக்கிற ஒரு யுத்தமாக பார்க்கிறோம். இந்த நடவடிக்கை அரசு கேபிள் டிவியை காப்பாற்றவா? அல்லது மூடுவிழா நடத்துவதற்கா? என்று அரசு விளக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் ஏழை மக்களுக்காக செயல்படும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நான் முதல்வராக இருக்கும் வரை ஏழை மக்களுக்காக பணி செய்தோம்.

    சிதம்பரம்:

    வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக சிதம்பரம் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. ஒரே நாளில் 30 செ.மீ.மழை பெய்ததால் அந்த பகுதி முழுவதும் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. இந்த பகுதியை பார்வையிடுவதற்காக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டம் வந்தார்.

    சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் அவர் வெள்ள சேதங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் ஏழை மக்களுக்காக செயல்படும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நான் முதல்வராக இருக்கும் வரை ஏழை மக்களுக்காக பணி செய்தோம். பருவமழை காலங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் கனமழைக்கு பாதிக்காத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வெள்ளபாதிப்புகளை தடுத்தது அ.தி.மு.க. அரசு.

    குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஆதனூர், குமாரமங்கலம் இடையே ரூ.500 கோடி செலவில் கதவணை அமைத்து வெள்ள பாதிப்பை தடுத்தது அ.தி.மு.க. அரசு. ஒரே ஆண்டில் 2 முறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்கடனை முறையாக தள்ளுபடி செய்தது அ.தி.மு.க. அரசு.

    எம்.ஜி.ஆர். காலம் தொட்டு ஏழை மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருவது அ.தி.மு.க. அரசு. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை காழ்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசு கைவிட்டது. குறிப்பாக அம்மா கிளினிக் மூடப்பட்டது. ஏழை மக்களுக்காக தி.மு.க. அரசு எதையும் செய்யவில்லை.

    மக்கள் விரோத அரசை அ.தி.மு.கவினர் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது எம்.எல்.ஏ.க்கள் பாண்டியன், அருண்மொழிதேவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன், செல்வி ராமஜெயம், அருள் ஆகியோர் இருந்தனர்.

    • சசிகலாவும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
    • தி.மு.க.வை வீழ்த்த எந்த அணியுடனும் கூட்டுசேர தயார் என்று டி.டி.வி.தினகரனும் பேசி வருகிறார்.

    தேசிய கட்சியான பா.ஜனதாவுக்கு இரு திராவிட கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால்தான் பலம் என்பது தொடர்ந்து வரும் அரசியல் வரலாறு. முதல் முதலாக 1998 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் 3 இடங்களில் வெற்றியும் பெற்றது.

    அந்த தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததால் மறு ஆண்டே தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உருவானது. அப்போது பா.ஜனதாவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு 4 இடங்களில் வெற்றிபெற்றது.

    மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி 2014 பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதா சந்தித்தது. அந்த தேர்தலில் இரு திராவிட கட்சிகளின் ஆதரவும் கிடைக்காத நிலையில் பா.ஜனதா சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.

    நாடுமுழுவதும் மோடி அலை வீசிய நிலையில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. தனித்து நின்ற அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் அ.தி.மு.க.வுக்குள் குழப்பம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை மோடி சமரசப்படுத்தினார். அதன் விளைவாக எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் 4 ஆண்டுகளையும் நிறைவு செய்தார்கள்.

    2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து நின்ற டி.டி.வி. தினகரனையும் இணைத்துக்கொள்ளும்படி பா.ஜனதா வற்புறுத்தியது. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஏற்கவில்லை.

    தேர்தலில் தி.மு.க. வென்றது. ஆனால் 50 தொகுதிகளுக்கு மேல் மிக குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. அப்போது பா.ஜனதாவின் வேண்டுகோளை அ.தி.மு.க. நிராகரித்ததே தோல்விக்கு காரணம் என்று பா.ஜனதா கூறியது.

    அ.தி.மு.க. கூட்டணியால் சட்டமன்றத்துக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சென்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பிளவு அந்த கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.

    நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிக அளவில் இருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஒன்றுபட்ட அ.தி.மு.க. இரட்டை தலைமைதான் வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. ஒற்றைத்தலைமை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

    சசிகலாவும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார். தி.மு.க.வை வீழ்த்த எந்த அணியுடனும் கூட்டுசேர தயார் என்று டி.டி.வி.தினகரனும் பேசி வருகிறார்.

    2024 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பூர்வாங்க பணிகளை பா.ஜனதா தொடங்கிவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்களை பா.ஜனதா மேலிடம் கண்காணித்து வருகிறது. அதில் பா.ஜனதாவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத தமிழகத்தில் வரும் தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது.

    இதில் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை பா.ஜனதா மேலிடம் சரிகட்ட விரும்புகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைப்பதற்காக பலமுறை முயற்சி எடுத்தும் பலன் அளிக்கவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை வந்த பிரதமர் மோடியை வழியனுப்ப இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரும் அருகருகே நின்றும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதை கூட தவிர்த்தனர்.

    மறுநாள் சென்னை வந்த அமித்ஷா சமரச முயற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. ஓ.பன்னீர் செல்வம் மட்டும் அமித்ஷா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எப்படியும் பா.ஜனதா தலையிட்டு சேர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார்.

    இதற்கிடையில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷாவை ஆடிட்டர் குரு மூர்த்தி தனியாக சந்தித்து 10 நிமிடங்களுக்கும் மேல் பேசி இருக்கிறார்.

    இந்த சந்திப்பின் போதும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருப்பது கட்சி ரீதியாக பலம் பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பா.ஜனதாவுக்கும் சாதகமாக இருப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    அந்த கருத்துக்களை கேட்ட அமித்ஷா கட்சி நிர்வாகிகளிடம் 'பூத்' அடிப்படையில் இப்போதே பணியை தீவிரப்படுத்துங்கள். குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் வருகிறேன். அப்போது தொடர்ந்து விவாதித்து செயல்திட்டங்களை வகுக்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. ஒன்றுபடாவிட்டால் ஓ.பி.எஸ். தரப்பு எடப்பாடி தரப்பை தோற்கடிப்பதற்கான வேலைகளை செய்யும். சட்ட மன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரனால் சில தொகுதிகளில் அ.தி.மு.க. தோற்றதை போல் பாராளுமன்ற தேர்தலில் நிகழ்ந்தால் அது பா.ஜனதாவுக்குத்தான் பலவீனத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைய வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக இருக்கிறது.

    சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் கட்சியை பெருமளவுக்கு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவின் வற்புறுத்தலை ஏற்பாரா? வேறு ரூட்டை போடுவாரா? என்ற பேச்சு கட்சியினர் மத்தியில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

    • வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
    • நிவாரண உதவிகளுக்கு மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஏற்பாடு செய்திருந்தார்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது.

    சென்னை புறநகர் பகுதிகளான மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேல் தளங்களில் குடியிருந்தவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

    அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, பெஞ்சமின், சோமசுந்தரம், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் உள்பட பலர் உடன் சென்றனர்.

    முதலில் மணப்பாக்கம் திருவள்ளுவர் நகரில் தொடங்கினார். மெயின் ரோட்டில் இறங்கி தெருக்களுக்குள் சென்றபோது முட்டளவு தண்ணீர் தேங்கி நின்றது. அதில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்து சென்று பொதுமக்களின் சிரமங்களை நேரில் பார்த்தார்.

    அப்போது மின்சாரம் உள்ளதா? அரசு உதவிகள் கிடைத்ததா? வேறு ஏதேனும் உதவிகள் வேண்டுமா? என்று கேட்டார்.

    அப்போது, பொதுமக்கள் 3 நாட்களாகியும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளத்தை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவில்லை. வீடுகளில் தங்க முடியாமல் உறவினர் வீடுகளுக்கும், சிலர் லாட்ஜூகளிலும் தங்கி இருக்கிறார்கள்.

    எல்லா ஊர்களில் இருந்தும் தண்ணீர் இந்த பகுதிக்குத்தான் வருகிறது. முதலில் தண்ணீரை வடிய செய்ய வேண்டும். அதன்பிறகு தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.

    அதை தொடர்ந்து காவியா நகர், பெல்நகர் பகுதிகளை பார்த்துவிட்டு மதனந்தபுரம், சிந்து காலனி, கொளப்பாக்கம் கணேஷ் நகர், ராமமூர்த்தி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளையும் பார்த்தார்.

    வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு நிவாரண உதவிகளுக்கு மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஏற்பாடு செய்திருந்தார்.

    ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 25 கிலோ அரிசி மூட்டை, காய் கறிகள், பால், ரொட்டி ஆகிய நிவாரண பொருட்களை 500 குடும்பங்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எந்தவொரு இடஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்கக்கூடாது.
    • சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற தி.மு.க.வின் கபட நாடகத்தையும், இரட்டை வேடத்தையும் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து ஆராய 2006-ம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியிலான மத்திய அரசு.

    அந்த கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை உருவாக்கியதும் காங்கிரஸ்-தி.மு.க. மத்திய கூட்டணி அரசு. அப்போது, திமுக சார்பில் பதவியில் இருந்த மத்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததும் நாடறிந்த உண்மை.

    இந்த சட்டத்தைத்தான் தற்போதைய பா.ஜனதா அரசு 2019-ல் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.

    தி.மு.க. தலைமை, தற்போது பா.ஜனதா தேவையில்லை என்பதால் இந்த சட்டத்தை எதிர்ப்பதுபோல் நடிக்கிறது.

    இன்றைய நிலையில் தமிழக சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தி.மு.க.வின் தயவால் அங்கு இடம்பெற்றவை. அவைகளில், இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முதல்வரின் இரட்டை வேடத்தை புரிந்துகொண்டு, அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது. பொருளாதார அடிப்படையிலான, இந்த பொருளாதார இட ஒதுக்கீட்டை மனமுவந்து வரவேற்பதாகவும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எந்தவொரு இடஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்கக்கூடாது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மண்டல் கமிசன் பரிந்துரை அடிப்படையில் பிரச்சினை வந்தபோது, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்தாலோசித்து, அவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க வைத்து நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து வைத்தார்.

    மேலும், அரசியல் சாசன சட்டத்தின் 9-வது அட்டவணையில் இதை சேர்த்து அதை உறுதிப்படுத்தினார். அதன் காரணமாகத்தான் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தினார்.

    ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன் என்று கூறி மக்களை ஏமாற்றியது போல், இந்த காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது கொண்டு வந்த இந்த பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு விஷயத்திலும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு / மறு சீராய்வு செய்வதற்கு என்று ஆலோசனை பெறும், சட்ட மன்ற அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற இந்த தி.மு.க.வின் கபட நாடகத்தையும், இரட்டை வேடத்தையும் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
    • அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நகரமான மதுரையில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தனித்தனியாக சந்தித்து பேசுவது அ.தி.மு.க.வின் அரசியல் நகர்விலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    மதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார்.

    விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் மோடியை வரவேற்கிறார்கள். வரவேற்பு முடிந்த பின்னர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை செல்கிறார். மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையம் முதல் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    ஒருவேளை ஹெலிகாப்டர் பயணத்திற்கு உகந்த வானிலை இல்லாத பட்சத்தில் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி செல்வதற்கும் மதுரை-திண்டுக்கல் நான்கு வழி சாலை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மதுரை வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏற்கனவே பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். பிரதமர் மோடியும் மதுரை விமான நிலையத்தில் இருவரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து இன்று மதியம் 2.30 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு புறப்படும் முன்பு எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திக்கிறார். மாலை 4.30 மணியளவில் திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வரும் போது ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் 1.30 மணிக்கும் விமானத்தில் மதுரை வருகிறார்கள்.

    இருவரும் தனித்தனியாக பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மோடியை சந்திக்க முடியாத நிலையில் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மோடி வரும்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் மதுரை விமான நிலையத்தில் இருக்கும் நிலையில் அவர்கள் 2 பேரையும் ஒரே நேரத்தில் அழைத்து மோடி பேச வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் மோடி சந்திப்புக்கு பிறகு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் ஆகியோரிடம் மனமாற்றம் ஏற்படுமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்றும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நகரமான மதுரையில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தனித்தனியாக சந்தித்து பேசுவது அ.தி.மு.க.வின் அரசியல் நகர்விலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிகட்ட அமித் ஷா பல முறை முயன்றும் முடியவில்லை.
    • எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டார்.

    சென்னை:

    மத்திய மந்திரி அமித்ஷா நாளை மறுநாள் (12-ந்தேதி) சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக நாளை இரவு 10 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். இரவில் அங்கு தூங்குகிறார்.

    பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிகட்ட அமித் ஷா பல முறை முயன்றும் முடியவில்லை.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டார்.

    இருந்தாலும் இருவரும் சேர்ந்து இருப்பதே கட்சிக்கு பலம் என்ற கருத்தும் நிலவுகிறது.

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமித்ஷா தமிழ்நாட்டிலும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிக்கட்ட மீண்டும் முயற்சிக்கிறார்.

    அதற்காகவே நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே சென்னை வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் அவர் அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    நாளை இரவு இருவரும் அமித்ஷாவை சந்தித்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமித்ஷாவின் முயற்சி பலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில் இதுபற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறும்போது, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவார். இணைப்பு என்ற கருத்து முன்வைக்கப்பட்டால் ஒற்றைத்தலைமை அது எடப்பாடி பழனிசாமி. அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்பதில் உறுதியாக இருப்பார் என்றனர்.

    ×