search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வில் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு என்ன நிலை இருந்ததோ அந்த நிலையே இனி தொடர்ந்து நீடிக்கும்.
    • அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லாது.

    சென்னை:

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் கடந்த மாதம் 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    இதையடுத்து ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை ஐகோர்ட்டே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது.

    இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் சார்பில் ஐகோர்ட்டு பதிவுத்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

    மேலும் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியிடமும் முறையிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

    அதன்பேரில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

    பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில் விசாரித்தார். அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு மீது இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை 10.50 மணிக்கு கோர்ட்டு அறைக்கு வந்தார். அவர் வந்ததும் தீர்ப்பில் பிழை திருத்தங்கள் செய்ய வேண்டி இருக்கிறது என்று கூறி தீர்ப்பை காலை 11.30 மணிக்கு ஒத்திவைத்தார்.

    அதன் பிறகு காலை 11.30 மணிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அப்போது, "ஜூன் 23-ந்தேதி, ஜூலை 11-ந்தேதிகளில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும், அ.தி.மு.க.வில் ஜூன் 23-ந் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும்" என்றும் உத்தரவிட்டார்.

    நீதிபதி ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க.வில் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு என்ன நிலை இருந்ததோ அந்த நிலையே இனி தொடர்ந்து நீடிக்கும்.

    அ.தி.மு.க. சார்பில் ஜூன் 23-ந்தேதி, ஜூலை 11-ந்தேதிகளில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டங்கள் செல்லாது. ஜூலை 11-ந்தேி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லாது. அதே போல் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது. அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது.

    அ.தி.மு.க. கட்சி விதிகளின்படி அ.தி.மு.க. பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும்.

    ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து இந்த பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.

    புதிதாக அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்காக ஒரு ஆணையரை நான் நியமிக்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

    சென்னை ஐகோர்ட்டு இன்று வெளியிட்ட தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சட்டரீதியாக முதல் வெற்றியை பெற்றுள்ளனர். இன்று அவர்கள் இந்த வெற்றியை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

    • எல்லா துறையிலும் தோற்றுப்போன அரசு தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்க கூடாது.
    • தொழிலாளர்கள் நினைத்தால் ஆட்சிக்கே முடிவு கட்டி விடுவார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் தமிழக அரசையும், தமிழக போக்குவரத்து துறையையும் கண்டித்து இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய உயர்வு வழங்குவதற்கான பேச்சுவார்த்தையை முடிக்காததை கண்டித்தும், ஊழியர்களுக்கான குழுவில் அண்ணா தொழிற்சங்கம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும் சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.

    உண்ணாவிரதத்தை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்றி வைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களாக உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் இந்த ஆட்சியின் அவல நிலையை மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் நிலைமை என்ன ஆகும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

    இந்த ஆட்சியில் எல்லா தொழிலாளர்களுமே நலிவடைந்து போய் இருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதல்-அமைச்சருக்கு தினமும் 'போட்டோ ஷூட்' மட்டும் தான் முக்கியம். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தான் இந்த அரசு திறந்து வைக்கிறது.

    நகைக்கடன் தள்ளுபடியில் அத்தனை பேருக்கும் தள்ளுபடி செய்யவில்லை. கியாஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ.100 தருவேன் என்றார்கள் கொடுக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். செய்தார்களா? அதன் சூட்சுமம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.

    எல்லா துறையிலும் தோற்றுப்போன இந்த அரசு தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்க கூடாது. தொழிலாளர்கள் நினைத்தால் இந்த ஆட்சிக்கே முடிவு கட்டி விடுவார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் 80 சதவீத அ.தி.மு.க.வினர் இல்லை. 80 பேர் மட்டுமே உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் முடிந்தால் 1000 பேரை திரட்டி போராட்டம் நடத்தி காட்டட்டும்.

    அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி.தினகரனை எந்த நிலையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் அளித்த தேனீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை.

    இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.

    உண்ணாவிரதத்தில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், கோகுல இந்திரா, மாதவரம் மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜாராம், கே.பி.கந்தன், பாலகங்கா, சிட்லபாக்கம் ராஜேந்திரன், பென்ஜமின், வி.என்.ரவி, ராஜேஷ், வாலாஜாபாத் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. புரசை வி.எஸ்.பாபு, மாநில வர்த்தக அணி இணை செயலாளரும், சாத்தான் குளம் முன்னாள் சேர்மனு மான ஏ.எம்.ஆனந்தராஜா, பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், வடக்கு பகுதி செயலாளர் நொளம்பூர் இம்மானுவேல், மாணவர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் ஆ.பழனி, வடசென்னை மாவட்ட பொருளாளர் வக்கீல் எம்.பாலாஜி, ஆயிரம் விளக்கு 117-வது செயலாளர் பி.சின்னையன் என்ற ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து வந்து ஓ.பி.எஸ். கூட்டம் நடத்தி அவர்களை ஏமாற்றி கொள்கிறார்கள்.
    • ஒரு மாய தோற்றத்தினை உருவாக்குவதினால் பயன் எதுவும் இல்லை.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., இன்று தேசிய கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    யார் யாருடன் (டி.டி.வி.-பா.ஜ.க) இணைந்தாலும் அ.தி.மு.க. தனித்தன்மையுடன் இருக்கும். எங்களுடைய நிலைப்பாட்டில் எங்கள் பயணம் சீராக செல்லும்.

    அ.தி.மு.க. தலைமை ஏற்று டி.டிவி.தினகரன் கட்சி கூட்டணி வர விரும்பினால் அதை தலைமை தான் முடிவு செய்யும். தற்பொழுது எவ்வித தேர்தலும் இல்லை.

    இதனால் கூட்டணி பற்றி பேச வேண்டிய, சிந்தக்க வேண்டிய அவசியம் எழவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஊர் தோறும் கிராம சபை கூட்டம் நடத்தினர். ஆனால் தற்பொழுது அப்படி எதுவும் செய்யவில்லை.

    முதல்-அமைச்சர் கூட கிராம சபை கூட்டத்திற்கு செல்வதில்லை. தாழ்த்தப்பட்ட, பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறுவது ஜனநாயகத்திற்கு அவமதிப்பு. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அவ்வாறு செய்பவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து வந்து ஓ.பி.எஸ். கூட்டம் நடத்தி அவர்களை ஏமாற்றி கொள்கிறார்கள். ஒரு மாய தோற்றத்தினை உருவாக்குவதினால் பயன் எதுவும் இல்லை. அ.தி.மு.க. என்று ஓ.பி.எஸ் கூறுவதால் அவருக்கு தான் காலம் வீணாகி வருகிறது.

    அ.தி.மு.க. என்ற பெயரை பயன்படுத்தினால் ஓ.பி.எஸ்.-க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

    சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. அதனை காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்பதனை எதிர்கட்சியாக நாங்கள் சுட்டிகாட்டுவோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் அனிதா என்ற மாணவி இறப்பினை வைத்து தி.மு.க. அரசியல் செய்தது. அனிதா இறப்பு என்பது மிகவும் வருந்தக்கூடிய விஷயம். ஆனால் இன்றைக்கு 11 மாணவர்கள் இறந்துள்ளார்கள்.

    அவர்களை போன்று இறப்பினை வைத்து நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். மக்கள் பிரச்சினைகளை தினந்தோறும் அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? என்பது நாளை தெரியவரும் என்பதில் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சட்ட போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இது போன்ற பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழு தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணை நடத்த அறிவுறுத்தியது.

    இதன்படி வழக்கு விசாரணை கடந்த வாரம் 2 நாட்கள் நடைபெற்றது. கடந்த 11-ந்தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இருதரப்பு வக்கீல்களும் காரசாரமாக தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். இதனை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நாளை வழக்கு விசாரணை பட்டியலில் பொதுக்குழு தொடர்பான வழக்கு இடம்பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் திக், திக் மனநிலையுடன் காத்திருக்கின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? என்பது நாளை தெரியவரும் என்பதில் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

    அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சட்ட போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    கடந்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி இருந்தார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கிலேயே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் தான் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டு நாளை தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இதனால் அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாகவும், போதை வியாபாரிகளின் கேந்திரமாகவும் மாறிவிட்டது என்று நான் பலமுறை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் எடுத்து வைத்தேன்.
    • மழுப்பலான வார்த்தைகளைப் பேசி பிரச்சினையை திசை திருப்பிய முதல்-அமைச்சர் இன்றைக்கு, அவரே போதைப் பொருள் விழிப்புணர்வு தினத்தை கடைபிடிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த அம்மாவின் ஆட்சியின்போது, தங்களுக்கு வேண்டியவர்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு வந்த குட்கா பாக்குப் பொட்டலங்களை சரங்களாக கழுத்தில் அணிந்து சட்டசபையில் நாடகம் ஆடிய தி.மு.க. அரசின் முதல்-அமைச்சருக்கு தற்போது தமிழகமே கஞ்சா காடாக, போதைப் பொருட்களின் விற்பனைக் கூடாரமாக மாறி இருப்பது தெரியவில்லையா?

    2021-ம் ஆண்டு சட்டமன்றத்தில் போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக சுமார் 7,000 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாகவும் அதில் சுமார் 9,500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் இந்த அரசு கூறியபோது, இதில் எத்தனை பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? என்றும், எத்தனை பேருக்கு தண்டனை வாங்கித் தரப்பட்டுள்ளது என்றும் நான் வினா எழுப்பினேன்.

    அது போலவே, சட்டமன்றத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக சுமார் 2,150 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், வெறும் 150 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக இந்த அரசு கூறியபோது, ஏன் இவ்வளவு குறைவான நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற வினாவையும் சட்டமன்றத்தில் நான் எழுப்பினேன்.

    ஆனால், இதுவரை எனது இரண்டு வினாக்களுக்கும் முழுமையான பதில் வரவில்லை. இப்புள்ளி விவரம் இந்த ஆண்டு மேலும் அதிகரித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த 14 மாதங்களில் நிர்வாகத் திறமையின்மையாலும் தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாகவும், போதை வியாபாரிகளின் கேந்திரமாகவும் மாறிவிட்டது என்று நான் பலமுறை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் எடுத்து வைத்தேன். அப்போதெல்லாம் மழுப்பலான வார்த்தைகளைப் பேசி பிரச்சினையை திசை திருப்பிய முதல்-அமைச்சர் இன்றைக்கு, அவரே போதைப் பொருள் விழிப்புணர்வு தினத்தை கடைபிடிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முடியாத, இந்த அரசு போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை என்று நாடகமாடுவதை இத்துடன் கைவிட வேண்டும்.

    மேலும் நான் 'சாப்ட்' முதல்-அமைச்சர் அல்ல என்றும், சர்வாதிகாரி என்றும், வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு, இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க, ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைக் கையாண்டு, தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க, காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுவாகவே எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இறை பக்தி அதிகம் உண்டு.
    • நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு யாகம் வளர்த்தார்கள்.

    அ.தி.மு.க.வை வலிமைமிக்க இயக்கமாக மாற்றிய மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பூஜைகள், யாகங்கள் செய்வதில் மிகுந்த ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டவர். தேர்தல் வெற்றிக்காகவும், எதிரிகளை ஒடுக்கவும் அவர் பூஜைகள், யாகங்கள் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். அவரது வழித்தோன்றல்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அதை அப்படியே பின்பற்றுகிறார்கள்.

    பொதுவாகவே எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இறை பக்தி அதிகம் உண்டு. அதிலும் குல தெய்வ வழிபாட்டில் அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. தற்போது அ.தி.மு.க.வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர்கள் நடத்தி கொண்டிருக்கும் யுத்தம் பூஜை, யாகங்கள் வரை போய்விட்டது. சமீபத்தில் இருவருமே சத்ரு சம்ஹார யாகம் நடத்தியதாக சொல்கிறார்கள்.

    இதைப்பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களது ஆதரவாளர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு யாகம் வளர்த்து பூஜைகள் போட ஆரம்பித்து விட்டனர்.

    அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடந்த விசாரணையில் இரு தரப்பு வக்கீல்கள் வாதம் முடிந்து தீர்ப்பு தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அந்த தீர்ப்பு எப்படி வருமோ என்று இரு தரப்பு அணித் தலைவர்களும் தவியாய் தவித்தபடி உள்ளனர்.

    கோர்ட்டு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வர வேண்டும் என்று கடந்த 2 நாட்களாக எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்களும், ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்களும் யாகம் வளர்த்து பூஜைகள் செய்வதை தொடங்கி உள்ளனர். நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு யாகம் வளர்த்தார்கள். எந்த அணி நடத்திய யாகத்துக்கு அதிக சக்தி உள்ளது என்பது கோர்ட்டு வெளியிடப்போகும் தீர்ப்பு மூலம் தெரிந்துவிடும்.

    • அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக டி.டி.வி. தினகரன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை மறுநாள் (15-ந்தேதி) நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்துக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அ.ம.மு.க.வினர் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    பொதுக்குழுவில் பங்கேற்கும் டி.டி.வி.தினகரனுக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக டி.டி.வி. தினகரன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

    இதனால் இது தொடர்பாக தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் பிரச்சினையை மையமாக வைத்து முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் எப்போதும் இல்லாத வகையில் அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத்துக்கு பிறகு தென் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
    • சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி சென்று அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனியாக ஆதரவாளர்களை திரட்டி செயல்பட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

    சென்னையில் இருந்து சேலம் செல்லும் போதும், சேலத்தில் இருந்து திரும்பி சென்னை வரும் போதும் வழி நெடுக ஆதரவாளர்கள் திரண்டு நின்று எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் அவரது முக்கிய ஆதரவாளர்களும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் காரசாரமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத்துக்கு பிறகு தென் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி சென்று அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களிலும் மதுரை மற்றும் தேனி மாவட்ட பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்வதற்கு ஆயத்தமாகி வருகிறார்.

    அவரது இந்த சுற்றுப் பயணத்தின் போது அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த அ.தி.மு.க. வக்கீல் மணிகண்டன் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 5 மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துள்ளார். அவர் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆகஸ்டு 15-ந் தேதிக்கு பிறகு தென் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இந்த சுற்றுப் பயணத்தின் போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களாலும் மற்ற சமூக விரோதிகளாலும் எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

    முன்னாள் முதல்-அமைச்சராகவும், தற்போது எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அவரது பாதுகாப்பை அதிகரித்து உச்சபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை இன்று 2-வது நாளாக நடந்தது.
    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய் ஆஜராகி வாதம் செய்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அ.தி.மு.க. சார்பிலும், அதன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் மூத்த வக்கீல் விஜய் நாராயண், எஸ்.ஆர்.ராஜ கோபால், நர்மதா சம்பத், இன்பதுரை ஆகியோர் ஆஜரானார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், திருமாறன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

    அப்போது நீதிபதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி தகுதி வாய்ந்த நபர்களால் கூட்டப்பட்டதா, இல்லையா என்பது குறித்து இரு தரப்பு வக்கீல்களும் வாதிட வேண்டும் என்று கூறினார். அதன்படி இரு தரப்பு வக்கீல்களும் நேற்று வாதாடினார்கள்.

    இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவித்ததை ரத்து செய்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு சரமாரி கேள்விகளை கேட்டார். அதன் பிறகு இந்த வழக்கை வக்கீல்கள் வாதத்துக்காக இன்று தள்ளி வைத்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை இன்று 2-வது நாளாக நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய் ஆஜராகி வாதம் செய்தார். அவர் வாதாடும் போது கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இது சம்பந்தமான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 18 நாட்களுக்கு முன்பு ஜூன் 23-ந் தேதியே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27-ந்தேதியே தயாரிக்கப்பட்டது.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜூன் 23-ந் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை. 23 வரைவு தீர்மானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன், "ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதி ஆனது" என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் விஜய் நாராயண் பதில் அளித்து வாதாடியதாவது:-

    2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகி விடுகின்றன. அதற்கு பதிலாக 2017-ம் ஆண்டு நியமனத்தை எடுத்துக்கொள்ள முடியாது.

    இரட்டை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமைதான் தேவை என்பது ஜூன் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் போது, பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம். ஆனால் ஐகோர்ட்டு தடை உத்தரவு காரணமாக அன்று அதை நிறைவேற்ற முடியவில்லை.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் செயல்பட வேண்டும். இருவரின் பதவிகள் காலாவதியாகி விட்டதால் தலைமை கழக நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பார்கள் என்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் போல, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை. ஏனென்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் திருத்த விதிகளின்படி நடத்தப்பட்டது. அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை.

    ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று கூற முடியாது. ஜூன் 23-ந் தேதி கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நோட்டீஸ் தபால் மூலம் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டம் நடப்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் நோட்டீஸ்.

    2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர். ஒருவரின் சூழலை தனியாக பார்க்காமல் ஒட்டு மொத்த கட்சியின் நிலையைதான் பார்க்க வேண்டும் மற்ற கட்சிகள் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க.வில்தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டுள்ளது.

    எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கியே செல்கின்றன. எனவே ஒருவரின் விருப்பத்தை பார்க்காமல் ஒட்டுமொத்த கட்சிகளின் நலனை பார்க்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அதன் பிறகு அ.தி.மு.க. சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.ஆர்.ராஜகோபால் வாதாடியதாவது:-

    எதிர்மனுதார்களில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு விட்டு மனுதாரராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு நடைபெறும் என்பது ஜூன் 23-ந் தேதி பொதுக்குழுவிலேயே ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரிந்திருக்கிறது.

    கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பு வழங்க வேண்டும். 5-ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க அவசியம் இல்லை.

    கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை ஏற்கப்பட்டால் பெரும்பான்மையான உறுப்பினர்களின் முடிவுக்கு எதிரானதாகி விடும்.

    அ.தி.மு.க.வுக்கு எதிரான ஓ.பன்னீர் செல்வம் நடத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது. ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதி குறுக்கிட்டு, "அவரது நடத்தை பற்றி பேச வேண்டாம். இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதது" என்றார்.

    பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் விதிகளில் எந்த திருத்தமும் செய்யாததால் அவர்களின் தேர்தல் செல்லும்.

    அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள். அடிமட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் எடுக்கும் முடிவு என்பதை ஒட்டு மொத்த உறுப்பினர்களின் முடிவாகத்தான் பார்க்க வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை ஆதரிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் வக்கீல் நர்மதா சம்பத் வாதாடினார்.

    • 2004 முதல் 2014 வரையிலான தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட தொகை 4156 கோடி ரூபாய்.
    • கடந்த 8 ஆண்டுகளில் மீட்கப்பட்ட தொகை 1,04,845 கோடி ரூபாய்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'மாலைமலருக்கு' சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ச்சியை பற்றி...

    பதில்:-கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் நல்லாட்சியில் மத்திய அரசின் நலத்திட்டங்களால் தமிழகத்தில் குறைந்த பட்சம் 4 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். ஆனால் இங்கு பொய்களை மட்டுமே வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி வரும் பலர், பல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு இந்த சாதனைகளை இருட்டடிப்பு செய்ய முயற்சித்தனர் என்பது தமிழகத்தில் அனைவரும் அறிந்ததே.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு மக்களுக்கு திமுகவின் இரட்டை நிலைப்பாடுகள், மக்கள் விரோத போக்குகள், இவர்கள் கட்டவிழ்த்து விட்ட பொய்கள் ஆகியவை புரிய தொடங்கிவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு மூன்றாம் பெரிய கட்சியாக பா.ஜ.க. முன்னேற்றம் கண்டது. மக்கள் பாஜக பக்கம் திரளாக வரத் தொடங்கி விட்டதற்கான சான்று.

    இதற்கு முன்னர் தமிழக பா.ஜனதாவின் தலைவர்களாக இருந்தவர்கள் போட்ட விதை தான் இன்றைய வளர்ச்சி.

    கேள்வி:- பா.ஜனதாவை 2-வது பெரிய கட்சி என்று நினைக்கிறீர்களா? அல்லது 3-வது பெரிய கட்சி என்று நினைக்கிறீர்களா?

    பதில்:- இன்று தமிழகத்தில் மக்களின் குரலாக ஒலிப்பது பா.ஜ.க. தான். மத்திய அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மாநில அரசின் தவறுகளை தரவுகளுடன் சுட்டி காட்டி மக்கள் அவதிக்குள்ளாதவாறு மாநில அரசு செயல்பட வேண்டும் என்பதில் தான் முனைப்புடன் இருக்கிறோம்.

    இதைத் தான் மக்களும் ஒரு அரசியல் கட்சியிடம் எதிர்பார்க்கிறார்கள். இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது எங்கள் இலக்கல்ல. தமிழகத்தில் மக்களின் நல்லாதரவுடன் ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு.

    கேள்வி:- அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு பா.ஜ.க.விற்கு சாதகமா?

    பதில்:- பா.ஜனதா என்றைக்குமே மற்ற கட்சியில் உள்ள பிரச்சினைகளில் தலையிடுவது இல்லை. அ.தி.மு.க. தமிழகத்தை ஆட்சி செய்த ஒரு கட்சி. மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த பல தலைவர்களை கொண்ட ஒரு கட்சி. தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. பலமாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோமே தவிர அவர்களின் பிளவை சாதகமாக்கிக் கொள்ள நினைத்ததில்லை.

    தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகளை சாராத லட்சக்கணக்கானோர் உள்ளனர். அவர்களை சென்றடைய தான் தமிழகத்தில் பாஜக வேலை செய்து வருகிறது. இன்று இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. அதனால் இளைஞர்கள் திரளாக வந்து பா.ஜ.க.வில் இணைகிறார்கள். இது வேறொரு கட்சியை பிளவுபடுத்துவதாக எண்ணுவது தவறு.

    கேள்வி:-திராவிட கட்சிகளை வீழ்த்தி அதிகாரத்திற்கு வரமுடியுமா ? எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?

    பதில்:-தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. காவேரி, வைகை கரைகளில் பல நூற்றாண்டுகளாக சீரும் சிறப்புமாக வாழ்ந்த ஒரு மண். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பண்படுத்திய மண். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பிளவுபட்ட பூமி இது. 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த தி.மு.க.வினால் இன்றுவரை சமூக நீதியையும் சம உரிமையையும் வழங்க முடியவில்லை.

    இங்கு நடப்பது தேர்தல் கணக்கு. வளர்ந்த மாநிலம் என்று கூறப்படும் தமிழகத்திற்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் இதுவரை 13,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கிராமபுறங்களில் 2019ஆம் ஆண்டு வரை 17 சதவீதம் வீடுகளில் குடிநீர் வசதி இருந்துள்ளது. இன்று 2 ஆண்டுகளில் 50 சதவீத வீடுகளுக்கு குடிநீர் வசதி ஜல்ஜீவன் திட்டம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

    மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய கூட ஒரு மோடி தேவைப்படுகிறார். காமராஜர் போட்ட கனமான அடித்தளத்தில் தான் தமிழகம் தொழில்துறை மற்றும் கல்வித்துறையில் வளர்ந்தது.

    மாற்றம் என்பது வருவதற்கு காலதாமதம் ஆகலாம் ஆனால் மாற்றம் கண்டிப்பாக வரும். ஏற்றம் என்று ஒன்று இருந்தால், இறங்கி தான் ஆகவேண்டும். இது இயற்கையின் விதி. தி.மு.க. மட்டும் இயற்கைக்கு அப்பாற்பட்டதா?

    கேள்வி:- திராவிட கட்சிகளே கூட்டணியை நம்பிதான் உள்ளன. பா.ஜ.க.வால் கூட்டணி இல்லாமல் சாதிக்க முடியுமா?

    பதில்- கேள்வியில் பதிலும் உள்ளது. இங்கு கூட்டணி இல்லாமல் தி.மு.க. தேர்தலை சந்திக்குமா? 70 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தி.மு.க.வுக்கு கூட்டணி தேவைப்படுகிறது, அது அவர்களின் பலவீனத்தின் வெளிப்பாடு. தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வரும் ஒரு கட்சி. திமுக தனியாக போட்டியிட முன்வரட்டும் அவர்களை தனியாக எதிர்கொள்ள நாங்கள் காத்திருக்கிறோம்.

    கேள்வி:-அ.தி.மு.க. பிளவுபட்டுள்ள நிலையில் 2024 தேர்தலில் கூட்டணி மாற வாய்ப்பு உண்டா?

    பதில் :-இன்று பா.ஜனதாவின் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. உள்ளது. அவர்களின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது.

    இன்று எங்கள் சிந்தனை செயல் தமிழக பா.ஜ.க.வின் வளர்ச்சியை சுற்றியே உள்ளது. அது மட்டும் அல்லாது, கூட்டணி முடிவுகளை எங்கள் தேசிய தலைமை தான் முடிவு செய்யும், கட்சியை மாநிலத்தில் வலுப்படுத்துவது மட்டுமே எங்கள் குறிக்கோள்.

    கேள்வி:- மதசார்புள்ள கட்சி என்ற திரையை இன்னும் உங்களால் முற்றிலுமாக நீக்க முடியவில்லையே?

    பதில்:-மற்ற சாட்சிகளுக்கு சிறுபான்மையினர் வாக்கு வங்கி உள்ளது. பா.ஜ.க.வை பொறுத்தவரை இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களும் சமம்.

    இங்குள்ள சில கட்சிகளின் இரட்டை நிலைப்பாடுகளை நாம் ஒரு நாள் முழுவதும் பேசலாம். குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி. ஆனால் அதே சட்டத்திற்கு எதிராக சிறுபான்மையினரிடம் பொய்களை பரப்பி அவர்களை போராட்டத்தில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்தவர்களும் தி.மு..க மற்றும் காங்கிரஸ் தான் என்பதை மறுக்கமுடியுமா?

    சிறுபான்மை மக்களுக்கு திமுக மற்றும் காங்கிரசின் இரட்டை நிலைப்பாடு விரைவில் புரியும்.

    கேள்வி :- ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அரசுக்கு பலன் அளித்திருக்கலாம். மக்களுக்கு பலன் இல்லையே!

    பதில்:-ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க நமது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பல நலத்திட்டங்களை மக்களின் பயனுக்காக வகுத்து அதை செயல்படுத்த முற்படும் போது அதற்கு நிதி தேவைபடுகிறது. ஒரு பகுதியை மக்களிடம் வரியாகவும் மீதமுள்ள தொகையை கடனாக பெற்று நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது மத்திய அரசு.

    சமீபத்தில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரித்திருத்தங்கள் தமிழக நிதி அமைச்சரின் ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்பட்டது.

    ஆனால் இங்கோ ஆவின் பொருட்களின் விலை ஜி.எஸ்.டி. விலை உயர்வை விட கூடுதலாக உள்ளது என்று நான் உட்பட நமது மத்திய நிதி அமைச்சர் கூட பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதுவரை திமுக அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

    கேள்வி:- கருப்புப்பண மீட்பில் தோல்வி தானே!

    பதில்:-இந்தியாவில் நேரடி வரி வருவாய் பண மதிப்பிழப்பீடு நடவடிக்கைக்கு பிறகு அதிகரித்துள்ளது. முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் இப்போது அதிக மக்கள் வருமான வரி செலுத்துகிறார்கள்.

    பண மதிப்பிழப்பீடு நடவடிக்கைக்கு 5 வருடங்களுக்கு பிறகு, இன்று இந்தியாவில் புதிய வீடுகள் வாங்குவதில் 2016-க்கு முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் கருப்பு பணத்தின் பங்கு 75 முதல் 80 சதவீதம் குறைந்துள்ளது.

    ரியல் எஸ்டேட் தொழிலில் தான் அதிகமாக கருப்பு பணம் முதலீடாக மாறும். அதில் கருப்பு பணத்தின் தாக்கம் குறைந்துள்ளது என்பது கருப்பு பணத்தின் புழக்கத்தின் குறைவாகவே நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

    2004 முதல் 2014 வரையிலான தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட தொகை 4156 கோடி ரூபாய். கடந்த 8 ஆண்டுகளில் மீட்கப்பட்ட தொகை 1,04,845 கோடி ரூபாய்.

    கடந்த 8 ஆண்டுகளில் கருப்பு பணத்தை பாதுகாக்க முடியாமல் பணமுதலைகள் தோல்வியுற்றுள்ளார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    கேள்வி:- நாடுமுழுவதும் எதிர்கட்சிகளை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே?

    பதில்:-அவர்களின் குற்றங்களை, ஊழலை மக்கள் மன்றத்தில் நாங்கள் வைப்பது அவர்களை பலவீனப்படுத்தினால் அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்.

    கேள்வி:-2024 தேர்தலில் தமிழகத்தில் உங்கள் லட்சியம்?

    பதில்:- இதற்கு முன் பல மேடைகளில் சொன்னது போல, குறைந்தபட்சம் 25 பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழகத்திலிருந்து அனுப்புவதே எங்கள் லட்சியம்.

    கேள்வி:- பா.ஜனதா மாடல் எப்படி இருக்கும்?

    பதில்:- ஊழலற்ற உன்னதமான ஆட்சியின் எடுத்துக்காட்டாக விளங்கி வரும் மோடியின் நல்லாட்சியின் பிரதிபலிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி இருக்கும்.

    காலம் காலமாக அடிப்படை தேவைகளுக்காக ஏங்கி வரும் மக்கள் முதல் முறையாக முன்னேற்றம் காண்பார்கள். குடும்ப கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத மக்கள் ஆட்சியே பா.ஜ.க. மாடல் ஆட்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், போலீசாரும் செயல்படுகின்றனர்.
    • மனுதாரர் சி.வி.சண்முகம் சார்பில் வக்கீல் ரியாஸ் முகமது ஆஜராகி வாதிட்டார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ந் தேதி வானகரத்தில் நடந்தது. அப்போது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வர தீர்மானம் இயற்றப்பட்டது.

    அதே நேரம் ஓ. பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தார். இதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தடுத்ததால் அங்கு மிகப்பெரிய கலவரம் நடந்தது. பின்னர் அதிமுக அலுவலகம் மூடப்பட்டது. அலுவலக கதவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உடைத்து உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச்சென்று விட்டதாக குற்றச்சாட்டு இருந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை போலீசில் திருட்டு புகார் செய்யப்பட்டது.

    போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்காததால் இந்த புகாரை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் சட்டதுறை அமைச்சர் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்தார்.

    அதில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், போலீசாரும் செயல்படுகின்றனர். ஆவணங்களை திருடிய சம்பவத்தை சிவில் பிரச்சினையாக கொண்டு வருகின்றனர்.

    எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் தான் சரியாக இருக்கும். அதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சி.வி.சண்முகம் சார்பில் வக்கீல் ரியாஸ் முகமது ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து, சி.வி. சண்முகம் கொடுத்த புகாரின் மீது பதிவான வழக்கின் நிலை அறிக்கையையும், இந்த மனுவுக்கு பதில் மனுவும் தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வமும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
    • தென் மாவட்டங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது பயணத்தை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டு செல்லும் போதும் சேலத்தில் இருந்து சென்னை வரும் போதும் அ.தி.மு.க. நிர்வாகிகளை தவறாமல் சந்தித்து பேசி வருகிறார். ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றவும் தவறுவதில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வடமாவட்டங்களை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். ஆனால் மற்ற வெளி மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்னும் செல்லவில்லை. இதை தொடர்ந்து இந்த சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகளை ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    அடுத்த கட்டமாக தென் மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளார். சுதந்திர தினத்துக்கு பிறகு அடுத்த வாரம் இந்த சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வமும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். தென் மாவட்டங்களில் இருந்து அவர் தனது பயணத்தை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சுற்றுப் பயணத்துக்கு போட்டியாகவே எடப்பாடி பழனிசாமி தென் மாவட்ட சுற்றுப்பயண திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையொட்டி அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×