search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94886"

    திராவிட கோட்டைக்குள் பாரதிய ஜனதாவால் நுழைய முடியவில்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் தி.மு.க. 3-வது இடத்தை பெற்று இருக்கிறது. தலைமை ஆளுமை என்பதை இந்த தேர்தல் மூலம் தமிழக மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள். தமிழக நலன்களை தி.மு.க. காக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.


    திராவிட கோட்டைக்குள் பா.ஜனதாவால் நுழைய முடியவில்லை. அடுத்து முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வருவார் என்பதை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் தார்மீக உரிமையை எடப்பாடி பழனிசாமி இழந்து இருக்கிறார்.

    தி.மு.க. கூட்டணியின் வெற்றி ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையை காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆளும் கட்சியின் அறை கூவலுக்கு எதிராக தி.மு.க. கூட்டணியின் வெற்றியை கண்டு மற்ற மாநிலத்தவர் கூட வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

    நியூட்ரினோ, மேகதாது அணை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றாத வண்ணம் தமிழகத்திற்கான அரணாக தி.மு.க. கூட்டணி இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காவிரி பாசனப் பகுதியில் கெயில் குழாய் பதிக்க பயிர்களை அழித்திருப்பதற்கு தினகரன், ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    காவிரி பாசனப் பகுதியில் கெயில் குழாய் பதிக்க பயிர்களை அழித்திருப்பதற்கு தினகரன், ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:- 

    காவிரி டெல்டாவில் பயிர் இருக்கிற வயல்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்குரியது.

    சீர்காழியை அடுத்த மாதானம் முதல் செம்பனார் கோவில் அருகிலுள்ள மே மாத்தூர் வரை விளை நிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிக்க வேண்டும் என கெயில் நிறுவனம் ஒற்றைக்காலில் நின்று வருகிறது.

    ஆனால் அப்பகுதி விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதனையும் மீறி நாற்றாங்கால்களிலும், நடவு செய்யப்பட்டிருக்கிற வயல்களிலும் எந்திரங்களைக் கொண்டு வந்து இறக்கி, எரிவாயு குழாய்களைப் பதிப்பதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் துணையோடு மேற்கொண்டிருக்கிறார்கள்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கெயில் எரிவாயு குழாய்களை விளை நிலங்களில் பதிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த இரண்டொரு நாட்களுக்குள்ளாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.

    விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற இந்தப் பணியை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். அங்கே குவிக்கப்பட்டிருக்கிற கனரக வாகனங்களையும், எந்திரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    நாகப்பட்டினம் மாவட்டம் மாதானத்திலிருந்து நரிமனம் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணையை கொண்டு செல்வதற்காக, உழவர்களின் எதிர்ப்பையும் மீறி, குறுவை நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் காவல்துறை துணையுடன் குழாய்ப் பாதை அமைக்கும் பணிகளை கெயில் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

    உழவர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்காமல் அத்துமீறி வயலில் நுழைந்து, பயிர்களை அழித்து, குழாய்ப் பாதை அமைப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் எண்ணைக் குழாய்ப் பாதை அமைப்பதால் அப்பாதை நெடுகிலும் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும்.

    இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். உழவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து விட்டு, எண்ணை குழாய்ப் பாதைகளை அமைப்பது கண்களை பறித்து விற்று விட்டு, அந்தக் காசில் கண்மை வாங்குவதற்கு இணையான அபத்தமான, அழிவுச் செயலாகும்.

    விவசாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.

    எனவே, இனியாவது விழித்துக் கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:-

    விவசாயிகள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், கெயில் நிறுவனம் மே 16 -ம் தேதி, மேமாத்தூர், காளகஸ்தி நாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதை விட்ட மற்றும் நடவு செய்த வயல்களில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி பயிர்களை நாசப்படுத்தி, குழாய் பதிக்க முனைந்தபோது, மக்கள் கொதித்து எழுந்தனர்.


    நேற்று முன்தினம் உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய் பதிக்கும் வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை இறக்கிப் பயிர்களை அழித்துள்ளது கெயில் நிறுவனம்.

    கொச்சியிலிருந்து பெங்களூருக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்ல மேற்கு மாவட்ட விளைநிலங்களில் குழாய் அமைக்க கெயில் நிறுவனம் முயற்சித்தபோது, விவசாயிகள் போராடிய தால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கெயில் நிறுவனத்துக்கு தடை விதித்தார்.

    காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை ரத்துச் செய்யக்கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    காவிரி டெல்டாவில் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    சென்னை:

    ம.திமு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள பழையபாளையத்தில் விளைநிலங்களில் எரிவாயு எடுப்பதற்கான ஆழ்குழாய் கிணறுகளை இந்திய எண்ணைய் மற்றும் எரிவாயு நிறுவனம் அமைத்துள்ளது.

    இங்கு எடுக்கப்படும் எரிவாயு, செம்பனார் கோவில் அருகே மேமாத்தூரில் உள்ள கிடங்குக்குக் கொண்டு சென்று சேமிக்கப்படுகிறது. இதற்காக பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை சுமார் 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    விவசாயிகள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், கெயில் நிறுவனம் மே 16 -ம் தேதி, மேமாத்தூர், காளகஸ்தி நாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதை விட்ட மற்றும் நடவு செய்த வயல்களில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி பயிர்களை நாசப்படுத்தி, குழாய் பதிக்க முனைந்தபோது, மக்கள் கொதித்து எழுந்தனர்.

    நேற்று முன்தினம் உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய் பதிக்கும் வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை இறக்கிப் பயிர்களை அழித்துள்ளது கெயில் நிறுவனம்.

    கொச்சியிலிருந்து பெங்களூருக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்ல மேற்கு மாவட்ட விளைநிலங்களில் குழாய் அமைக்க கெயில் நிறுவனம் முயற்சித்தபோது, விவசாயிகள் போராடியதால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கெயில் நிறுவனத்துக்கு தடை விதித்தார். உச்சநீதிமன்றம் வரையில் சென்று கெயில் நிறுவனம் அனுமதி பெற்றிருந்தாலும், கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் இன்னமும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    இச்சூழலில் காவிரி டெல்டாவிலும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.


    காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை ரத்துச் செய்யக் கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். இதன்மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படஉள்ளது. மாநில கட்சிகளுடன் இணைந்து மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று யூகிக்கிறேன். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை. கொடியவன் கோட்சே பற்றி பதிவு செய்து உள்ளார். காந்தியின் உருவப்படத்தை சுட்டுக்கொளுத்தி கோட்சேவுக்கு சிலை அமைப்போம் என்று இந்து மகாசபை தலைவி கூறியபோது மோடி, யோகி ஆதித்யாநாத் ஆகியோர் ஏன் கண்டிக்கவில்லை?. கமல்ஹாசன் சரித்திர உண்மையை பதிவு செய்தார். அவர் மீது செருப்பு, மூட்டை வீசியது அக்கிரமம் அல்லவா?. இதை பா.ஜ.க. தலைமை ஏன் கண்டிக்கவில்லை?.



    கோட்சே கொடியவன் என்று பதிவிட்டவரை நடமாடவிடக்கூடாது, நாக்கை அறுப்பேன் என்று பேசுவது, கூட்டத்தில் ஆட்களை அனுப்பி செருப்பு வீச செய்வது என்பது அநாகரிகமான அரசியல். ஆரோக்கியமற்ற ஒரு வன்முறை வெறியாட்டத்தை தூண்டி விடுகின்ற இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பாரதிய ஜனதா கட்சியின் கைப்பொம்மையாகச் செயல்பட்டு வருகிறது என வைகோ கூறியுள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேற்கு வங்க மாநிலத்தில் மே 14-ந்தேதி பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பேரணியின்போது, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், கொல்கத்தா பல்கலைக் கழகம், மற்றும் வித்யா சாகர் கல்லூரி அருகில் முழக்கங்களை எழுப்பினர்.

    இதனை சகித்துக்கொள்ள முடியாத பா.ஜ.க.வினர், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இருதரப்புக்கும் மோதல் உருவானது.

    வித்யாசாகர் கல்லூரிக்கு உள்ளே நுழைந்த பா.ஜ.க. குண்டர்கள், வங்கத்து மக்கள் போற்றி வணங்கி வரும் சமூக சீர்திருத்தவாதி, தத்துவவாதி, கல்வியாளர், எழுத்தாளர் போன்ற பன்முகச் சிறப்புகளைப் பெற்று, வங்க மறு மலர்ச்சிக்கு வித்திட்ட ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்து நொறுக்கி இருக்கின்றனர்.

    மேற்கு வங்க மக்களின் பேராதரவுடன் இரண்டாம் முறையாகவும் முதல்வர் பொறுப்பை ஏற்ற மம்தா பானர்ஜியை வீழ்த்த வேண்டும் என்று நரேந்திர மோடி, அமித்ஷா இருவரும் துடிக்கிறார்கள்.எனவேதான், வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க. திட்டமிட்டு வன்முறைகளை அரங்கேற்றி வருகிறது.

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களின் அத்துமீறல் பேச்சுக்கள், தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து திரும்பத் திரும்ப முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பாராளுமன்றத் தேர்தலின் கடைசி 7-வது கட்டத்தில் மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கு 19 -ந்தேதி தேர்தல் நடை பெறுகிறது. இத்தேர்தல் பரப்புரை 17 ஆம் தேதிதான் முடிவுக்கு வரவேண்டும். ஆனால் கொல்கத்தா வன்முறையைக் காரணம் காட்டி, அங்கு நிலவும் சூழல் காரணமாக தேர்தல் பரப்புரையை ஒரு நாள் முன்னதாக இன்று முடித்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் சதிகார செயலாகும்.



    மேற்கு வங்காளம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாகவே இருந்தன.

    நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்புமிக்க தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாகச் செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பரப்புரையில் மதவாத அரசியல், ராணுவ நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் தொடர்ந்து பேசினர்.

    தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து, மே 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏப்ரல் 15-ந்தேதி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட, அவர்களின் பேச்சுக்களை வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, இருவர் பேச்சிலும் விதி மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் சான்று அளித்தது வெட்கக்கேடான நியாயப்படுத்த முடியாத செயலாகும்.

    இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய மோசமான செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்கு உரியது; ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டதாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்து விட்டு, லட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம் பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமி அரசும் சதித் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து இருக்கின்றன.

    இத்திட்டத்தில் தமிழகத்தில் 3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள தரைப்பகுதி வட்டாரத்தில் 731 சதுர கி.மீ. ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.

    1794 சதுர கி.மீ. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடல் பகுதி வட்டாரத்திலும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. நிலப்பகுதி வட்டாரத்திலும் என ஆக மொத்தம் இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது.

    மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா குழுமம் ஆகியவை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மே 10 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இதனால் வளம் கொழிக்கும் காவிரி பாசனப் பகுதியின் நிலங்களில் நீர் வளம் பாதிக்கப்படும். கடல்நீர் உட்புகும் ஆபத்து நேரும். விளை நிலங்கள் பாழாகி பயிர் சாகுபடி செய்ய முடியாத பேராபத்து உருவாகும். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். சொந்த மண்ணிலேயே நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.

    வேளாண்மையை அழித்து பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல இலட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் லட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேர் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிசாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது?

    தூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பலிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது.

    காவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள்.

    எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
    மு.க.ஸ்டாலினின் அரசியல் சதுரங்கத்தால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வெஞ்சமாங் கூடலூர், ஈசநத்தம், சின்னதாராபுரம் உள்ளிட்ட இடங்களில் திறந்தவேனில் நின்ற படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி காவிரிக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் தளபதி வீட்டு வசதி திட்டத்தின்கீழ் உதயசூரியன் நகரில், வறுமையில் வாடுவோர், ஒரு குடிசைக்குள் 3 குடும்பங்களாக நெருக்கடியில் வசிப்பவர்கள் உள்ளிட்டோரை கணக்கெடுத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 செண்ட் நிலம் வழங்கி வீடு கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் என்கிற அவரின் அறிவிப்பு வரவேற்கதக்கது. அதனை மு.க.ஸ்டாலின் வழிமொழிந்திருப்பதால், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களுக்கு வீடு கட்டித் தரப்படுவது உறுதி.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தற்போதுகூட வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் திணிக்கின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாட்டு மக்களுக்கு எதிரான மோடி ஆட்சி மத்தியில் தூக்கி எறியப்படும். முல்லை பெரியாறில் புதிய அணைகட்ட மோடி ஆட்சி பச்சை கொடிகாட்டி விட்டார்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி தஞ்சை தரணி உள்பட காவிரி டெல்டாவை பஞ்ச பகுதிகளாக மாற்ற துடிக்கிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நகர்த்துகின்ற அரசியல் சதுரங்ககாய்களை பொறுத்து, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது தமிழகத்தில் மக்கள் விரோத திட்டங்களை தட்டிக்கேட்க முடியாமல் திராணியில்லாமல் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.

     


    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. குழந்தைகளை விற்பனை செய்வது பற்றிய செய்திகள் வருகிறது. இதை நினைத்து பார்த்தாலே நெஞ்சம் வெடித்து விடும் போல் இருக்கிறது.

    ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என குழந்தைகளை விலைக்கு வாங்கி லட்சக்கணக்கில் விற்கின்ற கொடுமை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரங்கேறி இருக்கிறது. அந்த குழந்தைகளின் நிலைமை என்ன? அவர்களை பிச்சை எடுக்கக்கூட பயன்படுத்தலாம். இதையெல்லாம் பார்க்கும் போது சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டு விட்டதை பார்க்க முடிகிறது.

    மருத்துவம் படிக்க விரும்பும் தமிழக மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு பெரும் சவாலாக உள்ளது. நீட் தேர்வு எழுதபோகிற இடத்தில், மாணவிகள் காதிலே போட்டிக்கிற கம்மலை கழற்ற சொல்கிறார்கள். அதில் என்ன கம்யூட்டரா வைத்திருக்க முடியும். இதைவிட அந்த பெண் வெட்கி தலை குனியும்படி துப்பட்டாவை எடுத்து சோதனை போட்டிருக்கிறார்கள்.

    தேர்வு எழுதப் போகும் போது எத்தனை பதற்றம் இருக்கும். நானும் கல்லூரிகளிலே தேர்வு எழுதியவன் தான். ஆனால் நீட் தேர்வு எழுத செல்வதற்கு முன்னரே, இப்படி சோதனை போட்டால் அவர்கள் எப்படி பதற்றமின்றி தேர்வெழுத முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி. எஸ். தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத போகிறவர்களுக்கு சோதனை செய்கிறார்களா? என்றால் இல்லை.

    அரியலூர் மாணவி அனிதா மற்றும் பிரதீபா ஆகியோர் நீட் தேர்வினால் தங்களுக்கு இன்னுயிரை மாய்த்து கொண்டதை மறக்க இயலுமா? 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் முதல்-அமைச்சராவார். அது பேரறிஞர் அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் முன்னெடுத்து செல்கிற மாநில சுயாட்சியாக தான் இருக்கும். மத்தியிலும் ஆட்சி மாற்றம் உறுதி எனும்போது நீட் உள்ளிட்டவற்றில் பறிபோன தமிழக உரிமைகள் மீட்கப்படுவது உறுதி.

    நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கேபிள் டி.வி. கட்டணம், கியாஸ் சிலிண்டர் உயர்வு ஆகியவற்றால் மக்கள் படும் அவதி தீர்க்கப்படும்.

    மத்திய பாரதீய ஜனதா அரசும், மாநில அ.தி.மு.க. அரசும் விரைவில் அகற்றப்படும் என்று சூலூரில் வைகோ பேசியுள்ளார்.

    சூலூர்:

    சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து சூலூர் சீரணி அரங்கில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசியதாவது-

    மத்திய பாரதீய ஜனதா அரசும், மாநில அ.தி.மு.க. அரசும் விரைவில் அகற்றப்படும். தேர்தல் ஆணையம் நடு நிலைமை தவறிவிட்டதாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி குற்றம் சாட்டியுள்ளார். மோடி ஓட்டு வாங்குவதற்காக ராணுவத்தை பயன்படுத்துகிறார்.

    தமிழகத்தில் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மோடி வரவில்லை. பாரதீய ஜனதா மக்களிடையே பேதங்களை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட மத்திய அரசுக்கு அடிமையாக செயல்படுகிறது தமிழக அரசு.

    கொங்கு மண்டலத்தில் உயர் மின் கோபுரங்களை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது. கெயில் எண்ணை நிறுவன குழாய்கள் விளை நிலங்கள் வழியாக பதிக்கப்படுகின்றன.

    இடைமலை ஆறு திட்டத்தை நடைமுறைப்படுத்த கேரள அரசுடன் பேசினேன். ஆனைமலை - நல்லாறு திட்டத்தை இன்னும் செயல்படுத்தாமல் தற்போதைய அரசு தாமதப்படுத்துகிறது.

    மீத்தேன் திட்டத்தால் காவிரி படுகை சிதைக்கப்படுகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தமிழக மக்கள் மறக்கவில்லை.

    முல்லை பெரியாறு அணையை உடைக்கவும், அங்கு புதிய அணை கட்டவும் தமிழகத்துக்கு விரோதமாக கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. புதிய தொழிற்சாலைகள் இங்கு வர முடியவில்லை. இதற்கு காரணம் எடப்பாடி அரசின் கமி‌ஷன் அணுகுமுறையால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டன. நீட் தேர்வு எழுத போன மாணவர்களை மனிதாபிமானத்துடனா நடத்தினார்கள்?

    இத்தனை கொடுமைக்கும் காரணமான எடப்பாடி அரசை அப்புறப்படுத்த வேண்டிய பொறுப்பு வாக்காளர்களாகிய உங்களுக்கு உள்ளது.


    நீட் தேர்வை கொண்டு வரும் நரேந்திர மோடியை தமிழகத்துக்குள் வர கூடாது என்று கூறும் தைரியம் எடப்பாடிக்கு உண்டா? ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மகத்தான வெற்றியை பெறுவார்கள் என்றும் இந்தியா முழுவதும் மோடி அணி தோற்கும் என்றும் வைகோ பேசினார்.
    தூத்துக்குடி:

    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் வல்லநாட்டில் திரண்டு இருந்த மக்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்கள் தீர்க்கப்படவில்லை. கல்வி கடன்கள் நீக்கப்படவில்லை. பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்யாமல் உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது.

    இளைஞர்கள் 80 லட்சம் பேர் வேலையின்றி தவிக்கிறார்கள். காரணம் இங்குள்ள அரசு ஊழல் அரசாக இருக்கிறது. இவர்களின் அணுகுமுறையால் தமிழகத்துக்கு வர வேண்டிய பல தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதனால் இருக்கின்ற நகைகளை அடமானம் வைத்து படிக்கவைத்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காததால் தாய்மார்கள் கஷ்டப்படுகிறார்கள்.

    தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற உடன், 5 பவுன் வரை வங்கியில் தங்க நகை கடன் பெற்றவர்களுக்கு அவர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்து, தங்க நகைகளை பெற்று கொடுப்பதாக அறிவித்து உள்ளார்.

    இந்தியாவில் மற்ற மாநிலங்களில் ஏற்படும் பிரச்சனை குறித்து கேட்டறிய செல்லும் பிரதமர் மோடி, தமிழகத்தில் கஜா புயலால் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக போராடிய மக்கள் மீது போலீசை ஏவி, இனி யாரும் போராடக்கூடாது என்று 13 பேரை சுட்டுக் கொலை செய்தது. அந்த ரத்தத்துளிகளை நினைவுபடுத்தி கேட்கிறேன். அந்த செயலுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். தண்டனை கொடுக்கும் நீதிபதிகள் நீங்கள்.

    தமிழகத்துக்கு வருகிற கேடுகளை இந்த அரசால் தடுக்க முடிகிறதா? நியூட்ரினோ திட்டத்தை கொண்டு வந்து தேனி மாவட்டத்தை பாழ்படுத்த துடிக்கிறார்கள். முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது. இதனை தடுக்கக்கூடிய, எதிர்க்கக்கூடிய துணிச்சல் இந்த அ.தி.மு.க. அரசுக்கு இல்லை. இதனால் பாதிக்கப்படுவது தமிழகம் தான். இந்த அரசை தூக்கி எறிய வேண்டும்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மகத்தான வெற்றியை பெறுவார்கள். இந்தியா முழுவதும் மோடி அணி தோற்கும். நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். அதேபோல் ஒட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து அவர் தெய்வச்செயல்புரம், மேலதட்டப்பாறை, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், ஓசநூத்து ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
    பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். #EdappadiPalaniswami #ADMK

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.

    தொகுதிக்குட்பட்ட ஐராவதநல்லூரில் பிரசாரம் செய்தபோது பேசியதாவது:-

    இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல் 23-ந்தேதி வர உள்ள வெற்றிச்செய்தி இப்போது கேட்கிறது.

    தேர்தல் முடிவுக்குப்பின் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மோடி ஆட்சியிலும் எடப்பாடி ஆட்சியிலும் விலைவாசி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.


    இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை. இந்த தொகுதியில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதற்கு காரணம் இந்த அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டுமென்றால் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    எனவே நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அவர்களுக்கு பொதுமக்கள் ஓட்டு மூலம் பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #EdappadiPalaniswami #ADMK

    தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மோடிக்கு காவடி தூக்கி வருகிறது என தேர்தல் பிரசாரத்தின் போது வைகோ கூறியுள்ளார். #TNAssemblyByElection #EdappadiPalanisamy #Vaiko
    மதுரை:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். நாகமலை புதுகோட்டையில் அவர் திரண்டிருந்த மக்களிடையே பேசியதாவது:-

    தேர்தல் முடிவு வந்த பின் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் தி.மு.க.வின் படை வீடாக மாறும். புதுச்சேரி உள்பட 39 பாராளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும்.

    தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனை மாநில அரசும் கண்டு கொள்வதில்லை. தமிழ் மொழியே தெரியாத ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் தமிழகத்தில் மத்திய அரசு பணிகளிலும், ரெயில்வேயிலும் வேலை பார்த்து வருகின்றனர்.

    ஆனால் மத்திய அரசு தேர்வுகளில் கஷ்டப்பட்டு படிக்கும் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இதனை தட்டிக் கேட்க எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தைரியம் இல்லை.

    பா.ஜனதா தேர்தலில் தோல்வி அடையும். மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மோடிக்கு காவடி தூக்கி வருகிறது.

    தற்போது உள்ள ஆட்சி குட்கா உள்ளிட்ட ஊழல்களில் சிக்கியுள்ளது. எனவே மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssemblyByElection #EdappadiPalanisamy #Vaiko
    தமிழக சட்டசபைக்கு நடைபெறுகின்ற இடைத்தேர்தலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 6 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கின்றார். #MDMK #Vaiko #TNByPolls
    சென்னை:

    ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக சட்டசபைக்கு நடைபெறுகின்ற இடைத்தேர்தலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கீழ்காணும் நாட்களில் பிரசாரம் மேற்கொள்கின்றார்.

    திருப்பரங்குன்றத்தில் மே 8, 9-ந்தேதியும், ஒட்டப்பிடாரத்தில் 10-ந்தேதியும், சூலூரில் 11-ந்தேதியும், அரவக்குறிச்சியில் 12, 13-ந்தேதியிலும் பிரசாரம் செய்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MDMK #Vaiko #TNByPolls
    ×