search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94930"

    சீன பேரரசின் ஆதரவுடன் இந்தியாவில் எதிர் விளைவுகளை ஏற்படுத்த ராஜபக்சே முயற்சிப்பார் என்று திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #Rajapaksa
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றிருப்பது இந்திய அரசின் வெளி விவகார கொள்கைக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவாகும். இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கை நெருக்கடி மூலம் வெளியேற்றி விட்டு தங்களின் ஆதரவாளரை சீன பேரரசின் விசுவாசிகள் ஆட்சி பீடத்தில் அமர வைத்துள்ளனர்.

    இலங்கையில் தங்களுக்குத் தான் செல்வாக்கு உள்ளது என்பதை சீன பேரரசு, இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளது. பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜ பக்சே, மீண்டும் ஈழத் தமிழர்களை துன்புறுத்துவார். மேலும் சீன பேரரசின் ஆதரவுடன் இந்தியாவிலும் எதிர் விளைவுகளை ஏற்படுத்த முயற்சி செய்வார். அதை ஆரம்பத்திலேயே மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ரணில் விக்ரமசிங்கே ஒரு புறமும், மற்றொரு பகுதியில் சிறிசேனா மற்றும் ராஜபக்சேயும் களத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 15 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட சம்பந்தம் தலைமையிலான குழுவினர் மிகுந்த நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொலை நோக்கு பார்வையுடன் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கை செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். ஒரு வேளை 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது. தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடும்.

    சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் ஜனாதிபதி மேடைக்கு வந்த போது பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகியிருந்தது. இது தனிநபர் அவமதிப்பல்ல. ஜனாதிபதிக்கு செய்யும் அவமதிப்பாகும். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று இருக்கையில் அமர்ந்து அவரை அவமதித்துள்ளனர்.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதனால் மாவட்டங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ViduthalaiChiruthaigalKatchi #Thirumavalavan
    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மைய ஒன்றிய செயற்குழு கூட்டம் செயலாளர் குரு தலைமையில் குள்ளஞ்சாவடியில் நடைபெற்றது.

    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மைய ஒன்றிய செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குரு தலைமையில் குள்ளஞ்சாவடியில் நடைபெற்றது.

    குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநில துணை செயலாளர் ஜான்சன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் புதியவன், ஒன்றிய பொருளாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் வீரபாபு, வரதராஜன், இடிமுரசு, சேகர், கண்ணன், வேல் முருகன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற டிசம்பர் 10-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள தேசம் காப்போம் மாநாட்டில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று மாநாட்டில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கும் வழிபாட்டு உரிமை வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #sabarimalatemple

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மானம்பாடி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 500 பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி அன்று திருச்சியில் ‘‘தேசம் காப்போம்’’ என்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அடுத்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் 17-ந் தேதிக்குள் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கப்படும்.


    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து, பாம்பும் சாகக்கூடாது, தடியும் நோகக்கூடாது என்ற அடிப்படையில் உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கும் வழிபாட்டு உரிமை வேண்டும். கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் ஐதீகமும், பாரம்பரியமும் பாதிக்காது. அது பெண்களுக்கான ஜனநாயக உரிமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் தமிழருவி, மண்டல செயலாளர் விவேகானந்தன், கும்பகோணம் சட்டசபை தொகுதி செயலாளர் முல்லை வளவன், வடக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி தமிழ், விவசாய அணஇ பொருளாளர் வெண்மணி, தஞ்சை மைய மாவட்ட செயலாளர் சொக்கா. ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirumavalavan #sabarimalatemple

    ஆளுநர் கொடுத்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள கண்டனம் தெரிவித்துள்ளனர். #NakheeranGopal #MKStalin #Thirumavalavan
    சென்னை:

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரை, சர்வாதிகார பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தின் கழுத்தில் ஏறி அமர்ந்து சவாரி செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசும், தமிழக ஆளுநரும் எண்ணுவது, தமிழ்நாட்டில் நடப்பது பா.ஜ.க. ஆட்சியே என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

    அ.தி.மு.க ஆட்சியின் அனைத்து வகை ஊழல்களுக்கும், சட்டத்திற்குப் புறம்பாக முட்டுக் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள ஆளுநரும் “பொம்மை” எடப்பாடி பழனிசாமி அரசைப்பயன்படுத்தி, ஜனநாயகத்தைக் குழி தோண்டிப்புதைக்கும் வேலையில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.



    ஆளுநர் கொடுத்த புகாரின் பேரில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தையே கொச்சைப்படுத்திப் பேசிய எச்.ராஜாவை கைது செய்யவில்லை. போலீஸ் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஆளுநரே அவரை சந்தித்துப் பேசுகிறார். இன்னொரு பக்கம் “பாசிச பா.ஜ.க” என்றதால் மாணவி சோபியா கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை பற்றி, தொடர் எழுதினால் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். என்னதான் நடக்கிறது தமிழகத்தில்?

    தமிழ்நாடு என்ன ஜனநாயக நாடா என்றே கேட்கத்தோன்றுகிறது. ஊழல் அ.தி.மு.க அரசும், பாசிச பா.ஜ.க. அரசின் முகவராக இருக்கும் ஆளுநரும் தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தி, பத்திரிகைச் சுதந்திரத்திற்கு பகிரங்கமான அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.

    பொம்மை அரசை வைத்துக் கொண்டு தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத்தூண்டும் மத்திய பா.ஜ.க. அரசும், மாநில ஆளுநரும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு நேரடியாகவே பா.ஜ.க. வழிகாட்டுதலில் மாநில அரசை நடத்தலாம். அதை விடுத்து விட்டு, கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அரசைப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது.

    பொறுப்பான மாநில ஆளுநர் பதவியில் இருப்பவர் மறைமுகமாக அரசியல் செய்ய நினைக்கும் போது, விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். அப்படி பொறுத்துக்கொள்ள இயலாமல், முதலமைச்சரை ராஜ்பவனுக்கே அழைத்து, நக்கீரன் கோபாலை கைது செய்யச் சொல்லியிருப்பது ஒரு மாநில ஆளுநருக்கு அதுவும் அரசியல் சட்டப் பதவியை வகிப்பவருக்கு அழகா?

    ஆகவே, கைது செய்யப்பட்ட திரு நக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கினை நிபந்தனையின்றி திரும்பபெற வேண்டும் என்றும் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருந்து வருகிறது. அதனால் தான் நக்கீரன் கோபாலை விமான நிலையத்தின் உள்ளேயே போலீசார் கைது செய்து இருக்கிறார்.

    பாஷிச அதிகாரத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நக்கீரன் கோபாலுக்கு தெரியும். பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலில் கவர்னர் ஈடுபட்டு வருகிறார்.

    கவர்னர் மாளிகையில் இருந்து எந்த ஒரு அதிகாரியும் உத்தரவு போட முடியாது. நக்கீரன் கோபாலை கைது செய்யக்கோரி கவர்னர் தான் சொல்லி இருக்கிறார்.

    நக்கீரன் கோபாலை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசையும், காவல்துறையையும் கவர்னர் தனக்காக பயன்படுத்துகிறார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:-

    உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான புகார்கள், குற்றச்சாட்டுகள் எழும் போது அதை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதும், அதன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதும் பத்திரிகை சுதந்திரத்தின் உயிர் நாடியாகும்.

    அதை பறிக்கும் வகையில் இன்று நக்கீரன் கோபால் கைது செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

    குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் மீது இத்தகைய தாக்குதல்கள் தொடுப்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும். எனவே, ஆளுநர் தமிழகத்திலிருந்து திரும்ப அழைக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

    தமிழகத்தில் எதிர்கட்சியினர் மற்றும் மக்கள் உரிமைகளுக்காக போராடுகிற பல அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அலைக்கழிக்கப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது அன்றாட நடவடிக்கைகளாக மாறியுள்ளது.

    இத்தகைய தாக்குதல்களின் மூலம் தமிழக மக்களின் உரிமை போராட்டங்களை முடக்கி விட நினைப்பது பகல் கனவாகவே முடியும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    எனவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால்லை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    தமிழக ஆளுநர் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக் கிறோம். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    ஆளுநர் அலுவலகத்திலிருந்து பத்திரிகையாளர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்படுவது இந்தியாவில் வேறெங்குமே நடந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இப்படி ஒரு மிக மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

    பல்கலைகழகத்துணை வேந்தர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாக ஆளுநர் கூறியிருந்தார். துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட ஆளுநரே அப்படி சொன்னது எல்லோருக்கும் வியப்பளித்தது. அது குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதை திசை திருப்புவதற்காகவே இப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருகிறதோ என்ற அய்யம் நமக்கு எழுகிறது.

    தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கு ஆளும் தரப்பினரால் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து நெருக்கடிகள் தரப்படுகின்றன. இதைப்பற்றி பிரதமரிடமே சென்று ஊடக வியலாளர்கள் முறையிட்டு உள்ளனர்.

    இந்தச் சூழலில் பத்திரிக்கை சுதந்திரத்தை நெரிக்கும் செயலில் ஆளுநர் அலுவலகமே ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. இது கருத்துரிமைக்குப் பேராபத்தாகும். இதை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் குரலெழுப்ப முன்வரவேண்டும் என்று அழைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கூறியதாவது:-

    பத்திரிகை சுதந்திரத்திற்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. நக்கீரன் கோபாலை தமிழக காவல்துறை கைது செய்து, வழக்கும் பதிவு செய்திருக்கிறது. இது கண்டிக்கத் தக்கது.

    அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கினை வாபஸ் பெற வேண்டும். பத்திரிக்கையாளர்களை அடக்கினால் அது பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்கும் செயலாகும்.

    நக்கீரன் ஆசிரியர் கோபால் புனே செல்லுவதற்காக சென்னை விமான நிலையத்திற்குச் சென்றபோது, காவல்துறையினரால் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவரிடம் என்ன குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

    நக்கீரன் கோபாலின் கைதினைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு விரைந்தார். வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்கவேண்டும் என்று வைகோ கூறியதையும் காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

    வேறு வழியின்றி வைகோ காவல் நிலையத்திலேயே அமர்ந்து மறியல் செய்தார். அதனைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நடக்கின்ற நடவடிக்கைகளை பார்த்தால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளதா? பத்திரிகையாளர்களையும், கருத்துக்கூறக் கூடியவர்களையும் நசுக்கலாம், ஒடுக்கலாம், அச்சுறுத்தலாம் என்று நினைப்பது ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்படாதவையாகும்.

    அண்ணா பெயரில் உள்ள ஆட்சிக்கு இது அழகல்ல; கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவா ஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது ஆளுநர் அலுவலகத்தின் பதட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கோபால் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்ச நிலையாக அமைந்துள்ளது.

    நாட்டின் நீதி பரிபாலன சபையான உயர்நீதி மன்றத்தையும், காவல் துறையையும் மிக மோசமாக விமர்சித்த பா.ஜ.கவின் தேசிய செய லாளர் எச். ராஜாவை கைது செய்யாத காவல்துறை, ஆளுநர் அலுவலகம் புகார் அளித்த உடனேயே நக்கீரன் கோபாலை கைதுச் செய்திருப்பது தமிழக அரசின் பாரபட்சப் போக்கை அம்பலப்டுத்தியுள்ளது.

    தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஜனநாயக நாட்டில் ஆளுநரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான். ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்தால் அது அவரது பணியில் தலையிடுவதாக குறிப்பிடுவது தமிழகத்தில் ஜனநாயகம் கேள்வி குறியாக்கப்ட்டுள்ளது என்பதன் அடையாளமாக அமைந்துள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முத்தரசன் கூறியதாவது:-

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதை மிக வன்மையாக கண்டிப்பதுடன் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற்று, உடனடியாக அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், ‘ஜனநாயக குரலை அடக்க நினைக்கும் ஆளுநர் மற்றும் மாநில அரசின் செயலை ஊடகத் துறையினரும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து முறியடிக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #NakheeranGopal #MKStalin #Thirumavalavan
    பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து மோடி அரசு ஆடும் மோசடி நாடகம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #PetrolDieselPrice
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பெட்ரோல் டீசல் விலையில் ரூ.2.50 குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. அதில் ரூ.1.50 மத்திய கலால் வரியில் குறைப்பதாகவும் மீதமுள்ள ஒரு ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமாறும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.



    இது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம். மத்திய பா.ஜ.க. அரசு கலால் வரியை முற்றிலுமாக ரத்து செய்வதற்கு முன் வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் பத்து ரூபாய் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தனது பங்கிலிருந்து ரூ1.50 குறைப்பதாக சொல்வது மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ஆடப்படும் மோசடி நாடகம்.

    கர்நாடகா தேர்தலின் போது ஒரு மாதத்துக்கும் மேல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் வைத்துவிட்டு தேர்தல் முடிந்ததும் ஒரேயடியாக பாஜக அரசு உயர்த்தியது. அந்த துரோகத்தை மக்கள் மறக்கவில்லை.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரியளவில் உயராமல் இருக்கும் போது மக்களிடம் அநியாய வரிவிதிப்பின் மூலம் மோடி அரசு பகல் கொள்ளை அடிக்கிறது.

    ஏழை-எளிய மக்களிடம் வரி என்ற பெயரில் வழிப்பறி செய்து கார்ப்பரேட்டுகளின் கடன்கள் தள்ளுபடி செய்ய அதைப் பயன்படுத்துகிறது. கடந்த 4 ஆண்டில் மட்டும் பொதுத்துறை வங்கிகளில் 3.16லட்சம் கோடி கடன்கள் கார்ப்பரேட்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

    பெட்ரோல் - டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளும் கொள்கையைக் கைவிட்டு சர்வதேச விலைக்கு ஏற்றபடி அவ்வப்போது அரசாங்கமே விலை நிர்ணயம் செய்துகொள்ளும் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan #PetrolDieselPrice


    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள தேசம் காப்போம் மாநாட்டிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் அழைப்பு விடுத்தார். #Thirumavalavan #MKStalin
    சென்னை:

    பயங்கரவாதத்தை எதிர்த்து டிசம்பர் 10-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அழைப்பு விடுத்தார்.

    பின்னர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு கடிதம் அளித்தோம். அவர் பங்கேற்பதாக இசைவு அளித்திருக்கிறார். மேலும் தி.மு.க. கூட்டணியில் தோழமை கட்சிகளின் தலைவர்களையும் மாநாட்டில் பங்கேற்க நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளோம்.

    தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை விரைவில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளோம். தேசிய அளவில் ராகுல் காந்தியையும் அழைக்க திட்டமிட்டுள்ளோம்.

    இந்த கட்சிகள் அனைத்தும் பாராளுமன்ற தேர்தலிலும் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அப்போது தான் மதவாத சக்திகளை முறியடிக்க முடியும்.

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையிலும் தற்போது வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை மீண்டும் திறப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் துணை போவதாக தெரிகிறது. இதனை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நியாயமானது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #MKStalin

    திருமாவளவன் அதிமுக பக்கம் நெருங்கி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, திருமாவளவன் பதில் அளித்துள்ளார். #ADMK #VCK #Thirumavalavan #MinisterJayakumar
    சென்னை:

    சென்னை தங்கசாலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் நாளை நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என குறிப்பிட்டார்.



    மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு அழைத்தால் தானும் பங்கேற்பேன் என தொல்.திருமாவளவன் கூறியிருப்பதாகவும், இதன் மூலம் திருமாவளவன் தங்கள் பக்கம் நெருங்கி வருவதை காட்டுவதாகவும் கூறினார்.

    இதுபற்றி திருமாவளவனிடம் கேட்டபோது, ‘எம்ஜிஆர் பொதுவானவர். அவர் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அதனால் அவரது விழாவில் கலந்துகொள்ள நான் ஆர்வம் காட்டினேன், மற்றபடி எதுவும் இல்லை’ என்றார். #ADMK #VCK #Thirumavalavan #MinisterJayakumar 
    விளாத்திகுளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் காந்திராஜன், மாதவன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . 

    ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்தில் அனைத்து டெண்டர்களும் பெயரளவில் மட்டும் அறிவிப்பு செய்துவிட்டு கையூட்டு பெற்றுக்கொண்டு மறைமுகமாக டெண்டர் விடுவதை தடுத்து விட வேண்டும், விளாத்திகுளம் மருத்துவமனையில் 24  மணி நேரமும் பணியில் மருத்துவர் இருக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மோகன், குமாரவேல் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினர். முடிவில் நகர செயலாளர் அழகு முனியசாமி நன்றி கூறினார்.
    கருணாஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைதும் செய்த காவல்துறை எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்ய தயங்குவது ஏன்? என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Karunas #HRaja
    சென்னை:

    சென்னையில் அரசியல் தலைவர்கள் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-



    ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் 1 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இந்த உண்மை வெளியே வந்ததால் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் காங்கிரசை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. ஒரு சமுதாயத்தை குறிப்பிட்டு பேசியது கண்டனத்துக்குரியது. அவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் இதைவிட மோசமாக விமர்சனம் செய்த எஸ்.வி. சேகர், எச்.ராஜாவை கைது செய்யவில்லை. அவர்கள் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

    இதற்கு காரணம் தமிழக அரசு பா.ஜனதாவின் அடிமை அரசாக இருப்பது தான். அ.தி.மு.க. அரசு தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக எதிர்கட்சிகளை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

    இது மக்களை ஏமாற்றும் நாடகம் இதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-



    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த பிறகும் கவர்னர் காலம் தாழ்த்துவது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது. இதுதொடர்பாக விரைவில் கவர்னரை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைதும் செய்த காவல்துறை எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்ய தயங்குவது ஏன்? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

    இதன்மூலம் ஜாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்திய அளவில் சனாதன பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. இதை முறியடித்து தேசத்தை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டிசம்பர் 10-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருச்சியில் தேசம் காப்போம் என்ற பெயரில் மாநாடு நடக்கிறது.

    அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:-



    7 தமிழர்கள் விடுதலை வி‌ஷயத்தை சட்டத்தின் அடிப்படையில் இல்லாமல், கருணைகண் கொண்டு பார்க்க வேண்டும். அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் உள்ளதாக சுப்ரீம் கோர்டு கூறியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

    இலங்கை தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் காங்கிரஸ், தி.மு.க.வுக்கு தொடர்பு இருப்பதாக அ.தி.மு.க. போராட்டம் அறிவித்துள்ளது. இது இப்போதுதான் தெரிந்ததா? நாங்கள் ஏற்கனவே பலமுறை இதுபற்றி தெளிவாக சொல்லி இருக்கிறோம். 7 தமிழர்களையும் விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. பேசியது தவறுதான். அவர் வருத்தம் தெரிவித்த பிறகும் கைது செய்து இருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் ஏன் கைது செய்யவில்லை.

    சட்டம் அனைவருக்கும் சமம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

    த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் கூறும்போது, ‘‘7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில், 4 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் ராஜீவை கொல்வதற்காக திட்டம்போட்டு வந்தவர்கள். பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 3 பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். சந்தர்ப்ப வசத்தால் சிக்கியவர்கள். அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Karunas #HRaja
    தேசபாதுகாப்பு மாநாட்டுக்கு ராகுல்காந்தியை அழைப்பதன்மூலம் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகம் மறந்துவிட்டதா? என திருமாவளவனுக்கு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். #TamilisaiSoundararajan
    பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    எஸ்.வி.சேகர், எச்.ராஜாவை கைது செய்யவில்லை என்று இப்போது ஆவேசப்படும் கட்சிகள், எச்.ராஜாவை கண்டித்தது போல், கருணாசை கண்டிக்காதது ஏன்?

    எச்.ராஜா வழக்கில் அவரை 4-ந்தேதி கோர்ட்டில் ஆஜர் ஆகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் வழக்கை சந்திப்பார்.

    சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையென்று திரும்பத்திரும்ப கூறி வரும் கட்சிகளைப் பார்த்து கேட்கிறேன். பெரும்பான்மை மக்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை.

    இந்து மதத்தவர்களை கொலை செய்ய போவதாக பட்டியலுடன் 5 பேர் கைது செய்யப்பட்டார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மோடி ஆட்சிக்கு வந்தால் மத கலவரம் வரும் என்று கனவு கண்டார்கள். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. அந்த ஆத்திரத்தில் எதை எதையோ பேசுகிறார்கள்.


    தேச பாதுகாப்பு மாநாட்டுக்கு திருமாவளவன், ராகுலை அழைக்கப் போகிறாராம். தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகம் மறந்துவிட்டதா. அவரை அழைப்பது தமிழர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #Thirumavalavan #RahulGandhi
    விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் டிசம்பர் 10-ந் தேதி திருச்சியில் தேசிய பாதுகாப்பு மாநாடு நடத்த உள்ளோம் என்று விழுப்புரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசினார். #thirumavalavan #vck

    விழுப்புரம்:

    மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அகில இந்திய ரீதியில் சனாதன அமைப்பை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை. நான் மட்டும் சமரசம் இல்லாமல் எதிர்க்கிறோம். மாயவதியோ, ராம் விலாஸ் பஸ்வானோ எதிர்க்கவில்லை. விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் டிசம்பர் 10-ந் தேதி திருச்சியில் தேசிய பாதுகாப்பு மாநாடு நடத்த உள்ளோம். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்ள அழைப்பு விடுப்போம். ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளித்த புதுவை முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #thirumavalavan #vck

    நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். #Thirumavalavan #Minorities
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டிசம்பர் 10-ந்தேதி ‘தேசம் காப்போம்’ மாநாடு நடத்தப்படும் என்று தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் மு.முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    கடந்த ஆகஸ்டு 17-ந் தேதி நடைபெற்றிருக்க வேண்டிய இவ்விழா, தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடைபெறுகிறது. ஆகஸ்டு 17-ந் தேதி தமிழகம் தழுவிய அளவில் ‘ஒரு லட்சம் பனை விதைகள்’ ஊன்றுவது என்னும் செயல்திட்டத்தை அறிவித்தோம். அதனை மிகுந்த ஆர்வத்தோடு நமது தோழர்கள் நடைமுறைப்படுத்தி சாதனை படைத்ததற்காக பாராட்டுகிறேன்.

    தற்போது நாடு முழுவதும் சனாதன பயங்கரவாதம் தலைதூக்கி உள்ளது. ஜனநாயகத்துக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்ட பூர்வீகக் குடிகளுக்கும், இதர விளிம்புநிலை மக்களுக்கும் பாதுகாப்பில்லை. தபோல்கர், பன்சாரே, கல்புர்க்கி, கவுரிலங்கேஷ் போன்ற கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகளை குறிவைத்து படுகொலை செய்த கொடூரமான போக்கு தலைவிரித்தாடுகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் நடந்தேறி வருகின்றன.


    இதற்கெல்லாம் காரணம் சங்பரிவார் அமைப்புகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த அமைப்புகளின் அடிப்படை நோக்கம் இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரமாக’ பிரகடனம் செய்ய வேண்டும் என்பது தான். இது மிகவும் தீங்கான வலதுசாரி பயங்கரவாத அரசியலாகும். இதில் சனாதன் சன்ஸ்தா எனும் பயங்கரவாத அமைப்பு இந்திய அளவில் 34 பேரை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமாரும் ஒருவர் என அவர்களின் பட்டியலில் கண்டறியப்பட்டுள்ளது.

    தற்போது தமிழகத்திலும் அது தலைதூக்கி உள்ளது. அண்மையில் தென்காசி, செங்கோட்டை, வந்தவாசி, வேலூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அறிவோம்.

    தமிழ்நாடு உள்பட இந்திய தேசத்தை சூழ்ந்துள்ள வலதுசாரி பயங்கரவாத தீங்குகளில் இருந்து மக்களை பாதுகாப்பது நமது கடமையாகும். ஆகவே, சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து ‘தேசம் காப்போம்’ என்ற மாநாட்டை நமது கட்சியின் சார்பில் வருகிற டிசம்பர் 10-ந் தேதி நடத்த உள்ளோம்.

    தேர்தலுக்காக அல்லாமல் தேசத்துக்காக மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் மதசார்பற்ற சக்திகளை தேசிய அளவில் ஒருங்கிணைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். #Thirumavalavan #Dalit #Minorities
    ×