search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94930"

    கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதி படுகொலையை கண்டித்து திருமாவளவன் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சென்னை:

    கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதி கடந்த 8-ந்தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, செல்வம், அன்புச்செழியன், அம்பேத் வளவன், ரவிசங்கர், ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவி திலகவதி படுகொலையை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தின் போது திருமாவளவன் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி கடந்த மே 8-ந்தேதி காட்டுமிராண்டி கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதனை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை நியாயப்படுத்த முடியாது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    படுகொலை செய்யப்பட்ட திலகவதியின் குடும்பத்தினருக்கு நீதி வழங்க வேண்டும். கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். திலகவதியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சாதி வெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவாண்டுதுறை கிராமத்தை சேர்ந்த இளைஞர் கொல்லி மலை சாதிய வெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது வாயில் மனித கழிவுகளை திணித்து கேவலமாக அநாகரீகமாக நடத்தி உள்ளார்கள். இது போன்ற சாதி வெறி கும்பல் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்கள் மீதான தாக்குதல் தொடருமானால் விடுதலை சிறுத்தைகள் பொறுத்துக் கொள்ளாது.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
    அரியலூர் அருகே பொன்பரப்பி கலவரம் பற்றிய அறிக்கையில் பாமக மற்றும் இந்து முன்னணி மீதான குற்றச்சாட்டு உண்மையாகி விட்டது என்று திருமாவளவன் கூறியுள்ளார். #ponparappiissue #thirumavalavan #pmk

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    அரியலூர் அருகே பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் தினத்தன்று தலித்துகள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல், ஜாதி வன்கொடுமைகள் சம்பவத்தை பல்வேறு தரப்பினர் நேரில் ஆய்வு செய்தனர்.

    அதுமட்டுமல்ல பேராசிரியர் லட்சுமணன், பேராசிரியர் கதிரவன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினரும் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

    அதில் பா.ம.க.வும், இந்து முன்னணியும் சேர்ந்து இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தியது என்பதை உறுதி படுத்தி உள்ளது.

    கலவரத்துக்கு யார் காரணம் என்பதை நாங்கள் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறோம். தேர்தலில் சிதம்பரம் தொகுதி முழுவதும் ஒட்டு மொத்தமாக வாக்குச்சாவடிகளை கைப்பற்ற பா.ம.க.வினர் திட்டமிட்டனர்.

    எங்கெங்கு எதிர்ப்பு இல்லையோ அங்கெல்லாம் வாக்கு சாவடிகளை கைப்பற்றி பா.ம.க.வினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அவர்களின் முயற்சி பலிக்க வில்லை.

    பொன்பரப்பியில் காலை 8 மணிக்கே ஓட்டு போட வந்த தலித்துகளை அச்சுறுத்தி உள்ளனர். 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குச்சாவடி அருகே பானைகளை போட்டு உடைத்துள்ளனர். 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் தலித் குடியிருப்பு அருகே விடுதலை சிறுத்தைகள் கொடிக்கம்பத்தின் அருகில் இருந்த பானைகளையும் விட்டு வைக்காமல் உடைத்துள்ளனர்.

    இதை தட்டிக் கேட்ட குணசீலன் என்பவரை பா.ம.க. வினரும், இந்து முன்னணியினரும் தாக்கிய தோடு சேரிக்குள் புகுந்தும் பானை சின்னத்துக்கா ஓட்டு போட்டாய் என கேட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் அபாண்டமாக ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் மீது அவதூறுகளை பரப்பி வருகிறார். போலீசாரும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வில்லை.

    ஆனால் நான் அந்த கிராமத்துக்கு வரக்கூடாது என்று வாய்வழி உத்தரவு போட்டுள்ளனர். போலீசார் ஒருதலைபட்சமாக செயல் படுகின்றனர்.

    நெல்லிக்குப்பம் அருகே குச்சிப்பாளையத்திலும் விடுதலை சிறுத்தைக்கு சம்பந்தம் இல்லாத சம்பவத்தை தொடர்பு படுத்தி எங்கள் மீது ராமதாஸ் அபாண்டமாக பழி சுமத்துகிறார்.

    என் படமும், டாக்டர் அம்பேத்கர் படமும் பொறிக்கப்பட்ட இரு சக்கர வண்டியில் சென்ற தலித் இளைஞர்களை வழி மறித்து பா.ம.க.வினர் தாக்கி உள்ளனர். வண்டியையும் உடைத்துள்ளனர். தட்டிக் கேட்டவர்களையும் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

    ஆனால் தலித் தாக்கியதாக எங்கள் மீது ராமதாஸ் அபாண்டமாக பழி சுமத்துகின்றார்.


    இப்போது விருத்தாசலம் அருகே திலகவதி என்ற பெண் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது.

    இந்த கொலைக்கும் விடுதலை சிறுத்தைக்கும் சம்பந்தம் இல்லை. அந்த பெண்ணுக்கும் ‘ஆகாஷ்’ என்ற வாலிபருக்கும் காதல் இருந்ததாகவும், அதனால் அந்த நபருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் எனவும் கூறி போலீசார் கைது செய்துள்ளனர்.

    அந்த வாலிபர்தான் குற்றவாளியா? என உறுதிப்படுத்தாத நிலையில் வழக்கம் போல் ராமதாஸ் பழி சுமத்தி பேசுகிறார். அரசியல் ஆதாயம் பெற குறியாக உள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை எல்லாவற்றிலும் தொடர்புபடுத்துவதையும் வம்புக்கு இழுப்பதையும் டாக்டர் ராமதாஸ் தொழிலாக கொண்டுள்ளார். இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

    திலகவதி கொலையில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விருத்தாசலத்தில் 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ponparappiissue #thirumavalavan #pmk

    எந்தவொரு அரசியல் கட்சியும் புகாரோ கோரிக்கையோ முன்வைக்காமல் தன்னிச்சையாக 46 வாக்குச் சாவடிகளில் முறைகேடு நடந்திருக்கிறது என தலைமைத் தேர்தல் அதிகாரி கூறுவது வியப்பளிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். #Thirumavalavan
    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் போக்கு சந்தேகம் அளிப்பதாக உள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகத்துக்கு வேறு ஒரு அதிகாரியை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும்.

    சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ரகசியமாக கோவையிலிருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    அது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது 13 மாவட்டங்களில் 46 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அவற்றில் மறுவாக்குப் பதிவு நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் அதற்காகத் தான் அந்த இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன எனவும் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

    இது தேர்தல் ஆணையத்தின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. அரசியல் கட்சிகள் எதுவும் கோராமல், வாக்குப்பதிவு குறித்து புகார் ஏதும் அளிக்கப்படாமல் மறுவாக்குப்பதிவு எப்படி நடத்தப்படும் என்பது புதிராக உள்ளது.

    தர்மபுரி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் பத்து வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்து சுமார் இரண்டு வாரமான பின்பும் அது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

    சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் கலவரம் நிகழ்த்தப்பட்ட பொன்பரப்பி வாக்குசாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் என்று சுமார் நூறு வாக்காளர்களின் கோரிக்கைகளோடு மனு அளித்தும் அதை தலைமை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார்.

    இந்த நிலையில் எந்தவொரு அரசியல் கட்சியும் புகாரோ கோரிக்கையோ முன்வைக்காமல் தன்னிச்சையாக 46 வாக்குச் சாவடிகளில் முறைகேடு நடந்திருக்கிறது என தலைமைத் தேர்தல் அதிகாரி கூறுவது வியப்பளிக்கிறது.

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக முறைகேடுகள் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள முக்கியமான 21 அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கும் சூழலில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைகள் வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடக்குமா என்ற அய்யத்தை நமக்கு எழுப்பியுள்ளது.

    எனவே, தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டுமென்றால் தற்போதுள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்குப் பதிலாக வேறு ஒருவரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Thirumavalavan
    பாராளுமன்ற தேர்தலில் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைத்தது. இதற்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் தாமோதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ம.தி.மு.க. சார்பில் ஆவடி அந்திரிதாஸ், திராவிடர் கழக தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    அரசியல் ஆதாயத்துக்காக பா.ம.க. வன்முறையை உருவாக்குகிறது. சிதம்பரம் தொகுதியில் எப்போது தேர்தல் நடந்தாலும் அங்கு வன்முறையை ஏற்படுத்தி தலித்துகளை வாக்களிக்க விடாமல் அடித்து விரட்டப்படுகிறார்கள். தலித்துகளின் வாக்குரிமையை தடுக்கும் செயல்களில் பா.ம.க. பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    பொன்பரப்பியிலும் வெறியாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். தலித்துகளின் வாக்குகளை தட்டி பறிக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இத்தகைய அராஜகத்தை பா.ம.க. மூடி மறைக்க முயற்சி செய்கிறது.

    பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கேட்டோம். ஆனால் தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கிறது. அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை. பா.ம.க. போட்டியிடும் 7 தொகுதிகளில் தோல்வி அடைவார்கள். அதிக ஓட்டு வித்தியாசத்தில் சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி பெறுவார்.

    பொன்பரப்பியில் மறு வாக்கு பதிவுக்கு உத்தரவிட்டு நடுநிலையை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் காசி முத்துமாணிக்கம், காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு, உஞ்சையரசன், பாவரசு, பாலவன், செல்லத் துரை, ஆதவன், இரா. செல்வம் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
    பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து சென்னை, அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொன்பரப்பியில் நடந்த தாக்குதல் கட்சிகளுக்கிடையில் நடந்த வழக்கமான தேர்தல் வன்முறையல்ல. சாதியின் பெயரால் தலித் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட பாசிச ஒடுக்குமுறையாகும்.

    தலித்துகளின் வாக்குரிமையைப் பறிப்பது, வன்முறை வெறியாட்டம் நடத்துவது, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள வாக்குகள் போடுவது போன்ற சட்டவிரோத, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அனைத்துத் தரப்பு எளியோரையும் அச்சுறுத்தும் அடக்குமுறை போக்காகும்.

    இருபத்தோராம் நூற்றாண்டிலும் அரசியல் ஆதாயத்திற்காக சாதியின் பெயரால் எளிய மக்களின் வாக்குரிமையைத் தடுப்பது, அம்மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்துவது போன்ற வெட்கக்கேடான கொடூர ஒடுக்குமுறைகள் தொடர்வது ஜனநாயகத்துக்கு நேர்ந்த பேரிழிவாகும். இந்திய தேசத்துக்கே நேர்ந்த பெரும் தலைக்குனிவாகும்.

    இந்நிலையில், இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிக்கவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு, பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்க வலியுறுத்தவும், சாதிய மதவாத சக்திகளுக்கு உரிய தண்டனையளிக்க வற்புறுத்தவும் கோரி, விடுதலைச்சிறுத்தைகளின் ஒருங்கிணைப்பில் தி.மு.க. தலைமையிலான மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், நாளை (24-ந்தேதி) சென்னையிலும் 25-ந்தேதி அரியலூரிலும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பொன்பரப்பியில் நடந்த வன்முறை காரணமாக மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் கமிஷனில் திருமாவளவன் புகார் அளித்துள்ளார். #Thirumavalavan
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை கோட்டையில் தலைம தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொன்பரப்பியில் 280 தலித் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக 95 பேர் தனித்தனியாக புகார் மனு தந்துள்ளார்கள். அதை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளேன்.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 57-வது பிரிவின் படி வாக்குச்சாவடிக்கு வெளியே வன்முறை நடந்து வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். எனவே அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். அவரும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் தலையிடவோ, ஊழல், முறைகேடு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கவோ போதிய அதிகாரம் இல்லை.

    காவல்துறை மற்றும் இதர அரசு நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்கிறது. பொன்பரப்பியில் மொத்தம் 680 தலித் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 400 பேர் மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு செய்துள்ளார்கள். அதன்பிறகு பதிவான வாக்குகள் அனைத்தும் கள்ள ஓட்டுகள்.

    பொன்பரப்பியில் வன்முறைக்கு காரணமானவர்கள் பற்றி பெயர் குறிப்பிட்டவர்களில் 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் இந்து முன்னணியினரும் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அவர்களது பெயரை குறிப்பிட்டும் இதுவரை கைது செய்யவில்லை.



    கூட்டணி கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தும் அந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று முதல்வரும், துணை முதல்வரும் கூறியதில் இருந்தே அங்கு எவ்வளவு பெரிய வன்முறை வெறியாட்டம் நடந்து இருக்கும் என்று அறிந்து கொள்ள முடியும்.

    பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் வருகிற (24-ந்தேதி) புதன்கிழமை தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு நான் தலைமை தாங்குகிறேன். கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan
    தமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம. கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்டதலை நகரிலும் வரும் 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #Ponparappi #pmk

    அரியலூர்:

    தமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம. கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்டதலை நகரிலும் வரும் 24-ந் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து அரியலூரில் அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும். அதேபோல் 18 தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைதேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.


    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணிராமதாஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதே வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. தர்மபுரி உட்பட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்ற திட்டமிட்டனர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராம வாக்கு சாவடியில் வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    மேலும் பா.ம.க.வினர் பானை சின்னத்தை போட்டு உடைத்தனர். ஆதிதிராவிடர் பகுதிக்குள் நுழைந்து பானை சின்னம் போடப்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்திருந்தனர். இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளன.

    பத்திரிகையாளர்கள் யார்? என்று தெரியாமல் தாக்கியுள்ளனர். அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளரை பார்த்து ஆறுதல் கூறி வந்துள்ளேன்.

    தமிழகம் முழுவதும் பா.ம. க.வினர் வன்முறையை தூண்டி வருகிறார்கள். தேர்தல் தோல்வி பயத்தால் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அரசும், காவல் துறையும் மெத்தனம் காட்டி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் வருகின்ற 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது தலைமையிலும், அரியலூரில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., அனைத்து தோழமைக் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு திருமாளவளவன் கூறினார்.

    பேட்டியின்போது தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் கிட்டு, மேலிட பொறுப்பாளர் கோவேந்தன், துணை பொது செயலாளர் கனி அமுதன், மாவட்ட செயலாளர் செல்வநம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பா நந்தம், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் லூயிகதிரவன் உட்பட ஏராளமானோர் இருந்தனர். #thirumavalavan #Ponparappi #pmk

    2 ஆயிரம் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதால் அரியலூர் பொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #ariyalurponparappi

    கும்பகோணம்:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கும்பகோணத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். இதனால் தமிழகத்திலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மேலும் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டு மென்றால் பா.ம.க வாக்குச் சாவடிகளில் கைப்பற்ற வேண்டும் சாதிய வன்முறைகளை தூண்டி விட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிகளில் கைப்பற்ற வட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன சில இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளது .நேற்று நடைபெற்ற சிதம்பரம் தொகுதியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி இடத்தில் காலை 10 மணிக்கு தலித் மக்களை வாக்களிக்காமல் தடுத்துள்ளனர். இந்த வன்முறையால் குடிசைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தீ இட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

    இதுபோல் தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை, நீலத்தநல்லூர் போன்ற பகுதிகளிலும் தலித்துகள் மீது வன்முறை நடைபெற்றுள்ளது. அரசியல் ஆதாயம் தேட அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளது. இதை கடுமையாக முயற்சித்து இவர்கள் தோல்வி அடைந்தனர்.

    அரியலூரில் நடைபெற்ற பொன்பரப்பியில் இந்து முன்னணியினர் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. மேலும் 2 ஆயிரம் வாக்குகள் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. இதனால் கள்ள ஓட்டு போட்டது கூட காரணமாக இருக்கலாம். இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும்

    இது குறித்து சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரி அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் இன்று சந்தித்து மனு அளிக்க இருக்கிறேன்.

    சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சிறப்பாக பணியாற்றின.

    தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து விடக்கூடாது என்று பலர் பகிரங்க முயற்சியில் இறங்கினர். அதை நாங்கள் தெளிவாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளோம்.

    இந்த கூட்டணியில் இணைந்த பிறகு நாங்கள் வெற்றிக்கரமாக கடந்து இருக்கிறோம். அவர்கள் செய்த வன்முறைகள் எல்லாம் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம். பா.ம.க. போன்ற ஜாதி வெறி கட்சி. பா.ஜ.க. போன்ற மதவெறி கட்சிகள் செயல்படுகிற வரை சமூக நல்லிணக்கம் சமூக ஒற்றுமை ஏற்படாது .

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #ariyalurponparappi

    தேர்தல் அதிகாரிகள் இன்று ஒரு நாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #thirumavalavan
    செந்துறை:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தை சேர்ந்த இவர் இன்று காலை அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது தாயார் பெரியம்மா என்பவருடன் வந்து வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்கு எந்திரங்கள் பழுதாகி உள்ளது. சில இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தேர்தல் அதிகாரிகள் இதுவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இன்று ஒரு நாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #thirumavalavan
    எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவனுக்கு மட்டும் தான் என்று கமல்ஹாசனுக்கு மாணவி அனிதாவின் அண்ணன் பதில் அளித்துள்ளார். #LokSabhaElections2019 #KamalHaasan
    சென்னை:

    கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசார வீடியோ வெளியிட்டு வருகிறார். நேற்று ஒரு வீடியோவை வெளியிட்ட அவர், ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகளை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.

    அதில், ‘மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பெண்ணை கொலை செய்தார்களே அந்தப் பெண்ணோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு ஓட்டு போடணும்னு” என்று கூறியிருந்தார்.

    கமலின் இந்தக் கேள்விக்கு அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அண்ணன் கமலின் உண்மையான ரசிகன் நான். நடிப்புக்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞர், மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதைச் செய்யும் துணிச்சல்காரர்.

    ரசிகர் மன்றங்களைக் கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவர். அவரைப் பார்த்துதான் 18 முறை ரத்ததானம் செய்துள்ளேன். உடல்தானம் செய்துள்ளேன்.

    புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமலுக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கும் என் வாழ்த்துகள். அண்ணன் கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம்.



    அனிதா இறந்தபோது ‘திருமாவளவன் இதைச் சும்மா விடக்கூடாது’ என்றார். அதே திருமாவளவன்தான் எங்கள் தொகுதியின் வேட்பாளர். மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட ஒரே கட்சி தி.மு.க மட்டுமே.

    தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது அது எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது, ஆதலால், எங்களின் வாக்கு தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவனுக்கு மட்டும் தான்.”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அனிதாவின் தந்தை சண்முகம் கூறும்போது, கமல்ஹாசனின் பேச்சுக்கு அனைத்து கட்சிகளும் அதிருப்தி தெரிவித்து உள்ளன. ஆனால் அவரது பேச்சு சரியானதுதான். ஆனாலும் எங்களது குடும்பம் தி.மு.க. கூட்டணிக்குதான் ஓட்டு போடுவோம் என்றார். #LokSabhaElections2019 #KamalHaasan
    வாக்குச்சாவடிகளை எதிர்கட்சியினர் கைப்பற்றினால் தி.மு.க.வினர் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள் என்று திருமாவளவன் பேசியுள்ளார். #Thirumavalavan #dmk
    திண்டிவனம்:

    திண்டிவனம் வண்டி மேடு வ.உ.சி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி பரிசுத்தமான கூட்டணி. நம்மை எதிர்க்கும் கூட்டணியானது சீட்டும் நோட்டும் பேரம் பேசி உருவாக்கப்பட்ட கூட்டணி. நமது கூட்டணி மோடியை விரட்டியடிக்க உருவாக்கப்பட்ட கூட்டணி. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் காங்கிரஸ் உள்ள மதச்சார்பற்ற கூட்டணியில் இடது சாரிகள் இடம் பெற்றுள்ளனர். கொள்கையுடன் உருவாக்கப்பட்ட கூட்டணி. 
    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி. வியாபார கூட்டணி.

    தி.மு.க.விற்கு எங்களுக்கும் உள்ள உறவு தேர்தலுக்கு மட்டுமல்ல கொள்கை ரீதியானது. வாக்குசாவடிகளை கைப்பற்றுங்கள் என்று கூறும் தலைவரை பார்க்கின்றீர்கள் வாக்கு சாவடிகள் கைப்பற்றினால் தி.மு.கவினர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். 100 கோடி கொடுத்தால் கூட ஒரு ஓட்டிற்கு ஈடாகாது. ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பெயரை மாற்றுவதே நோக்கம். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்துக்கள் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும். வேறு எந்த மாநிலத்தில் இல்லாத வகையில் தமிழகத்தில் மோடிக்கு எதிர்பு அலைவீசுகின்றது. 

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thirumavalavan #dmk
    சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க அ.தி.மு.க. - பா.ஜனதாவும் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர் என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். #thirumavalavan #bjp #admk

    சிதம்பரம்:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

    பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஆயிபுரம் கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க சதி திட்டம் தீட்டுகின்றனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரும் பாராளு மன்றத்துக்குள் நுழையக் கூடாது என்று பா.ஜனதா வினர் நினைக்கின்றனர். இதனால் என்னை தோற்கடிக்க அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் சிதம்பரம் தொகுதியில் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.

    அதற்கு காரணம் நான் பா.ஜனதா, அ.தி.மு.க. மதவாதம் ஆகியவற்றை எதிர்த்து பேசுவதுதான். ஏழை மக்களுக்காக, விவசாயிகளுக்காக பேசுவதாலும் எதையும் கண்டித்து பேசுவதாலும் ஆத்திரத்தில் என்னை தோற்கடிக்க பணத்தை இறக்கி உள்ளனர்.

    திருச்சியில் எங்கள் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் காரை சோதனையிட்டு அவர் தொழிலுக்காக வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து அந்த சம்பவத்தை தேர்தலோடும் என்னோடும் முடிச்சு போட்டு வேண்டு மென்றே என் மீது களங்கத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினர் முயற்சி செய்கின்றனர்.

    அவர் அந்த பணத்தை தொழிலுக்காக எடுத்துச் செல்கிறேன் என கூறியுள்ளார்.

    விடுதலைச் சிறுத்தை கட்சியிலே தொழில் அதிபர்கள் இருக்கக் கூடாதா? ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எவரிடமாவது இது வரை சோதனை நடந்துள்ளதா? அவர்கள் தேர்தல் விதி முறைகளுக்கு உட்பட்டுதான் செலவு செய்கிறார்களா?

    அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சியினர் தேர்தல் செலவுகளுக்கு உட்பட்டுதான் செலவு செய்கின்றனர் என வருவாய்துறை அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்களா? எத்தனை களங்கத்தை சுமத்த நினைத்தாலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.  #thirumavalavan #bjp #admk

    ×