search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94930"

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதல்வரிடம் திருமாவளவன், ஏ.சி.சண்முகம் நிதிஉதவி வழங்கினர். #gajacyclone #thirumavalavan #acshanmugam
    சென்னை:

    ‘கஜா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அதிகமானோர் பணம் அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தனது மகன் ஏ.சி.எஸ்.அருண்குமாருடன் சேர்ந்து சந்தித்து ரூ.20 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். 

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கினர்.

    நடிகர் விவேக் ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். #gajacyclone  #thirumavalavan #acshanmugam
    ஓசூர் அருகே நந்தீஸ், சுவாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். #HonourKilling #Thirumavalavan
    ஓசூர்:

    நந்தீஸ்-சுவாதி ஆணவ படுகொலையை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.

    முன்னதாக அவர் கொலை செய்யப்பட்ட நந்தீஸ் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியை திருமாவளவன் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மேலும் ஒரு ஆணவக்கொலை ஓசூர் அருகே நிகழ்ந்து உள்ளது. அண்மை காலமாக சாதியின் பெயரால் இத்தகைய படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. நந்தீஸ், சுவாதி ஆகிய இருவரும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் குடும்பத்தார் ஆவேசம் அடைந்து இருவரையும் கடத்தி சென்று மிகவும் கொடூரமாக கொலை செய்து, கை கால்களை கட்டி காவிரி ஆற்றில் வீசி உள்ளனர்.

    நந்தீஸ் குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல் கூறிய காட்சி.

    இதுபோன்ற கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த வழக்கை கர்நாடகா போலீசார் விசாரிப்பதா? அல்லது தமிழக போலீசார் விசாரிப்பதா? என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

    நந்தீஸ்-சுவாதியை ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்றதால் இந்த வழக்கை தமிழக போலீசுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த வழக்கை ஓசூர் போலீசார் விசாரித்தால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கூலிப்படையினரின் தலையீடும் உள்ளது. தமிழகத்தில் கூலிப்படைகளை தடுப்பதற்கு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கொலை செய்துவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். திட்டம் தீட்டியவர்கள் போலீசில் சிக்குகின்றனர். இதனால் கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கூலிப்படை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

    இத்தகைய ஆணவ கொலைகளை தடுப்பதற்கு தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். ஜாமீனில் வெளிவராதவாறு சிறையில் வைத்து வழக்கை விரைவாக முடித்து தண்டனை வழங்க வேண்டும்.

    இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவின் (சி.பி.ஐ.) வசம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கில் சரணடைந்தவர்களை தவிர, இன்னும் பலர் சம்மந்தப்பட்டு இருப்பதால், சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரித்து தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

    தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தொடர்புடைய 3 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது, தமிழக அரசுக்குரிய நன்மதிப்பை சீர்குலைப்பதாகவே உள்ளது என்று நான் கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #HonourKilling #Thirumavalavan
    ஓசூரில் 20-ந்தேதி ஆணவக்கொலையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #HonourKilling #Thirumavalavan

    சென்னை:

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஓசூரில் நடந்துள்ள ஆணவப்படுகொலைகளைக் கண்டித்து வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெறும்.

    ஓசூருக்கு அருகே உள்ள சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த நந்தீஸ்-சுவாதி ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதற்கு சுவாதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓசூர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நந்தீஸ்- சுவாதி ஆகிய இருவரையும் கடந்த பத்தாம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

    இதனிடையே நந்தீஸ்- சுவாதி ஆகியோரின் சடலங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கம்பியால் கைகள் பின் புறமாக வைத்து கட்டப்பட்டுள்ள நிலையில் அந்த சடலங்கள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக சுவாதியின் தந்தை மற்றும் சில உறவினர்களைப் போலீஸ் கைது செய்துள்ளது. ஆனால், கொலை நடந்திருப்பதைப் பார்க்கும் போது திட்டமிட்ட முறையில் கூலிப்படையினரின் உதவியோடு இக்கொலை நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

    எனவே, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து வழக்கு முடியும் வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்காமல் விரைவு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையை வலியுறுத்துகிறோம்.

    தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரம் பெருகி விட்டதாகவும், மகராஷ்டிரா கர்நாடகா முதலான மாநிலங்களில் அதற்கெனக்கடுமையாக சட்டம் இருப்பதைபோல தமிழ் நாட்டிலும் சட்டம் இயற்றப்படவேண்டும் எனவும் சில நாட்களுக்கு முன்னால் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றங்களுக்கு சிலர் அரசியல் லாபம் கருதி செய்து வரும் வெறுப்பு பிரச்சாரமே காரணம். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு இதில் காட்டி வரும் மெத்தனம் அப்படியானவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

    2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் வழங்கிய தீர்ப்பில் தமிழ் நாட்டில் நடைபெற்ற 47 ஆணவக்கொலைகளை தேதிவாரியாகப்பட்டியலிட்டுக் காட்டியிருந்தார். ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒன்பது கட்டளைகளையும் அவர் பிறப்பித்திருந்தார்.

    27.03.2018 அன்று அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில்,“கலப்புமணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்பி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்; இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி இருக்கவேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்” என உத்தரவிடப்பட்டது.

    ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் வழங்கிய வழி காட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு இதுவரைப் பின் பற்றவில்லை.

    இனிமேலாவது அவற்றைப் பின்பற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறஉள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #HonourKilling #Thirumavalavan

    தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இது முக்கியம்தான். எனினும் தேர்தல் வாக்குகளை காட்டிலும், நாட்டை காப்பது முக்கியம் என்று திருமாவளவன் பேசினார். #thirumavalavan #vote #election

    தருமபுரி:

    தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    இன்றைய சூழலில் தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இது முக்கியம்தான். எனினும் தேர்தல் வாக்குகளை காட்டிலும், நாட்டை காப்பது முக்கியம்.

    அம்பேத்கார் இயற்றிய அரசியல் அமைப்பு சட்டம் ஜனநாயகத்தை நமக்களிக்கிறது. ஆனால், பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இந்திய நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயகத்தை மறுத்து, மீண்டும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த கோட்பாடுகளுடன் இந்த நாட்டை இட்டுச் செல்ல முயற்சிக்கின்றன.

    இதனை முறியடித்து, ஜனநாயகத்தையும், நாட்டையும் காக்க வேண்டிய கடமை தற்போது எழுந்துள்ளது. இதற்காக நாட்டிலுள்ள மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து வரும் டிசம்பர் 10-ந்தேதியில் தேசம் காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து விடுதலைச் சிறுத்கைள் கட்சியின் சார்பில் திருச்சியில் மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளனர்.

    எனவே இந்த மாநாட்டை சிறப்பிக்க தருமபுரி மாவட்டத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #thirumavalavan #vote #election

    விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் உள்ளது என்பதை திமுக தான் அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #thirumavalavan #dmk #bjp #rajinikanth

    வேலூர்:

    வேலூரில் பொய்கையில், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்க திருமாவளவன் வேலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை அதிபர் சிறிசேனா பதவி விலகுவது தான் சரியாக இருக்கும்.

    பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையில் மோடி சர்வாதிகார போக்குடன் செயல்பட்டார். 2019 நாடாளுமன்ற பொது தேர்தலில் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.


    தி.மு.க.வுடன், விடுதலை சிறுத்தை கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கக்கூடிய பொறுப்பு தி.மு.கவு.க்கு தான் உண்டு. தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணக்கமாக தான் இருந்து வருகிறது.

    பா.ஜ.க கொள்கை கோட்பாடு இந்திய தேசத்திற்கு, இந்திய மக்களுக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக தி.மு.க உள்ளிட்ட எதிர் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட முன் வந்துள்ளது.

    பா.ஜ.க ஆபத்தான கட்சியா என்பதற்கு நேரடியாக பதில் சொல்ல விரும்பாமல் பலசாலியா இல்லையா என்று திசை திருப்பி இருக்கிறார் ரஜினிகாந்த்.

    பாம்பை கண்டால் படையுமே நடுங்கும் என சொல்லுவார்கள். அப்படி என்றால் படையை விட பாம்பு வலிமையானது என்பது பொருள் அல்ல,

    படையே நடுங்கும் அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது, ஆபத்தானது என்பது பொருள். ஆகவே 10 பேர் சேர்ந்து பாம்பை அடிப்பதால் பாம்பு பலசாலியாகி விடாது. இப்படி தான் பா.ஜ.கவை பார்க்கிறோம். 

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #dmk #bjp #rajinikanth

    வி‌ஷத்தன்மைக் கொண்ட பாம்பை 10 பேர் சூழ்ந்துக் கொண்டு அடித்தால் பாம்பு பலமானது என கூற முடியுமா? எனவே பா.ஜ.க. ஆபத்தான கட்சிதான் என திருமாவளவன் கூறியுள்ளார். #BJP #Thirumavalavan
    திருவள்ளூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற் குழு கூட்டம் திருவள்ளூரில் மாவட்டச் செயலாளர் சித்தார்தன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது.

    சனாதன என்பது நவீன காலத்துக்கு பொருந்தாத இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாடு. அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட ஜனநாயகத்தை காப்போம் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இந்த மாநாட்டில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.

    இந்தியாவில் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு உலகிலேயே உயரமான சிலை இல்லை. பட்டேல் உள்துறை அமைச்சராக இருந்து சுற்றியுள்ள சாம்ராஜ்ஜியங்களை இணைத்து முழு இந்தியாவை உருவாக்கினார். அதனால் அவருக்கு சிலை அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை.

    அதே நேரத்தில் மகாத்மா காந்திக்கு சிலை அமைக்காமல் பட்டேலுக்கு உயரமான சிலை அமைப்பது ஏற்புடையதல்ல. பட்டேலுக்கு அமைத்த சிலை உலகிலேயே மிக உயர்ந்த சிலை என்ற நிலையை உருவாக்கியதன் மூலம் காந்தியடிகளுக்கு மாற்றாக பட்டேலை பாஜக தூக்கி நிறுத்தியுள்ளது ஏற்புடையதல்ல.

    நடிகர் ரஜினிகாந்திடம் பா.ஜ.க. ஆபத்தான கட்சியா? என்ற கேள்விக்கு, அவர் ஆமாம், இல்லை என்ற பதில் கூறியிருக்க வேண்டும். அதைவிடுத்து 10 கட்சிகளை தனியாக எதிர்த்து நிற்கும் கட்சி என்பதால் பலமான கட்சி என ஒரு சம்மந்தமில்லாத பதிலை கூறியுள்ளார்.

    பாம்பு வி‌ஷத்தன்மைக் கொண்டது. அதை 10 பேர் சூழ்ந்துக் கொண்டு அடித்தால் பாம்பு பலமானது என கூற முடியுமா? எனவே பா.ஜ.க. ஆபத்தான கட்சிதான்.அதற்கான பதிலை ரஜினி காந்த் நேரடியாக கூற வேண்டும்.



    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒன்று சேர்ந்து தீர்மானித்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. தேர்தல் எப்போது நடந்தாலும், அதை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள், தி.மு.க. இடது சாரிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணியினர் தயாராக உள்ளோம். எங்களது கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.

    திருச்சி மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட பல மாநில தலைவர்களை அழைத்துள்ளோம். அவர்களும் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Thirumavalavan
    ஜாதிகளின் பெயரில் திரைப்படம் எடுக்கக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #Kamalhassan
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- அன்மையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடுவை திடீரென சந்தித்ததின் நோக்கம் என்ன?

    பதில்:- எங்கள் கட்சி சார்பில் டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் ஜனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற சந்திரபாபு நாயுடுவை சந்தித்து அழைப்பு விடுத்தோம்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சீத்தாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி ஆகியோரையும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைத்துள்ளோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த தோழமை கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துள்ளோம்.

    சந்திரபாபு நாயுடு ஒரு சில நாட்களில் தான் பங்கேற்பது தொடர்பாக தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

    கே:- வேறு ஏதேனும் அவருடன் அரசியல் தொடர்பாக பேசினீர்களா?

    ப:- தேசிய ஜனநாயக முன்னணியில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறியதை வரவேற்றதோடு அன்மையில் ராகுல்காந்தியை சந்தித்ததையும் பாராட்டினோம். அகில இந்திய அளவில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைவது ஜனாதன சக்தியிடம் இருந்து தேசத்தை பாதுகாப்பதும் அவசியமானது என கூறினோம். ராகுல்காந்தியை சந்தித்த போது இந்த தேசத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று தாங்கள் கூறியது எங்கள் மாநாட்டின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக இருந்தது என்று கூறினோம்.

    தமிழ்நாட்டில் தி.மு.க. காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க. இஸ்லாமிய கட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறோம் என்பதையும் தெரிவித்தோம். அவர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    கே:- தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை இடம் பெறுவதில் சிக்கல் இருக்கிறதா?

    ப:- ஒரு சில ஊடகங்கள் அவ்வாறு வதந்திகளை பரப்பி வருகின்றன. தி.மு.க.வுடன் எங்களுக்கு நல்ல இணக்கமான உறவு உள்ளது. ஜனாதன சக்திகளை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவதால் எங்களுக்கு எதிராக சிலர் இப்படி திட்டமிட்டு வதந்தியை பரப்புகிறார்கள்.

    கே:- கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினீர்களா?

    ப:- நேற்று மாலை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

    கே:- கமல்ஹாசன் தேவர் மகன்-2 படம் எடுக்கப் போவதாக கூறியுள்ளாரே?

    ப:- ஜாதிகளின் பெயரில் திரைப்படம் எடுப்பது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. தேவர் மகன், சின்னக் கவுண்டர், கவுண்டர் பொண்ணா கொக்கா இது போன்ற படங்கள் ஏற்கனவே வெளி வந்துள்ளன. தலைப்புகளில் மட்டுமின்றி கதைகளிலும் ஜாதிகளை மையமாக வைத்து படங்கள் வெளி வந்திருக்கின்றன. இதனால் ஜாதி பிரச்சினைகள் அவ்வப்போது தலைதூக்கி உள்ளன. நடிகர்களும் ஜாதி அடிப்படையில் அடையாளப்படுத்தப்படுவது, ஜாதி அடிப்படையில் ரசிகர் மன்றங்களை அமைப்பது மேலோங்கி உள்ளன.



    இந்த நிலை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. ஜாதி பிரச்சினைகள், அதனால் உருவாகும் பாதிப்புகள் தொடர்பாக திரைப்படங்களில் மட்டுமின்றி இலக்கிய தளம் உள்ளிட்ட பிற தளங்களிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்பது வரவேற்க கூடியதாகும்.

    ஆனால் வியாபார நோக்கத்தோடும் அரசியல் ஆதாயத்தோடும் கலை இலக்கிய துறைகளில் செயல்படுவது, திரைப்படங்கள் தயாரிப்பது சமூக நல்லிணக்கத்திற்கு உகந்தது அல்ல.

    உழைக்கிற மக்கள் மோதிக்கொள்ளட்டும் தங்களுக்கு ஆதாயம் கிடைத்தால் போதும் என்று நினைப்பது சமூக விரோத போக்காகும். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது தெருக்களுக்கும், கடைகளுக்கும் கூட ஜாதி பெயரை சூட்டக்கூடாது என்று அரசாணை பிறப்பித்தார். அவர் வழியில் இன்று ஆட்சி நடத்தக்கூடியவர்கள் திரைப்படங்களுக்கு ஜாதி பெயர் சூட்டுவதை வேடிக்கை பார்க்ககூடாது.

    எம்.ஜி.ஆரின் அந்த அரசாணையை தற்போதைய அ.தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இல்லையென்றால் இதை வைத்து ஜாதியவாதிகள் அப்பாவி மக்கள் இடையே மோதலை தூண்டி விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #Kamalhassan
    ஆத்தூரில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோருடன் விரைவில் முதல்-அமைச்சரை சந்திப்பேன் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #ViduthalaiChiruthaigalkatchi #Thirumavalavan
    சேலம்:

    சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டி கிராமத்தில் 8-ம் வகுப்பு மாணவி ராஜலெட்சுமி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை கண்டிக்கத்தக்கது. அதே பகுதியை சேர்ந்த வாலிபர் தினேஷ் குமார் (26) என்பவர் ராஜலெட்சுமியை அவரது தாய் கண்முன்பே துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். இந்த வழக்கை பெண் டி.எஸ்.பி. தலைமையில் விசாரிக்க வேண்டும்.

    சேலம் மாவட்டம் முதல்-அமைச்சருடைய சொந்த மாவட்டம். இதனால் நானும், ராஜலெட்சுமியின் பெற்றோரும் விரைவில், முதல்-அமைச்சரை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் உடனே ஜாமீனில் வெளியே வருகிறார்கள். குறைந்தது ஒரு ஆண்டு ஜாமீன் கிடையாது. தற்போது ஒரு மாதத்தில் ஜாமீனில் வருகிறார்கள்.

    தினேஷ்குமார் மீதான வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரணை நடத்தி அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

    சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் தரப்பில் அவர்களுக்கு வாதாட நேர்மையான அரசு வக்கீல் நியமிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் முதல்-அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    காவல் துறையினர் தினேஷ் குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. சிறுமியை கொலை செய்தவுடன், அங்கு இருசக்கர வாகனத்தில் தயார் நிலையில் இருந்த மைத்துனர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் இந்த கொலையை முன் கூட்டியே திட்டமிட்டு செய்தார்களா? எண்ணும் அளவிற்கு உள்ளது.

    தலையை துண்டித்து ஏன் வீட்டிற்கு கொண்டு வந்தாய்? வீதியில் வீசு என்று அவரது மனைவி கூறியதாக உறவினர்கள் தரப்பில் சொல்கிறார்கள். எனவே அவரது மனைவி மற்றும் சகோதரரிடம் போலீசார் விசாரிக்க வேண்டும்.

    இந்த வழக்கை கால தாமதம் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும். ஒருவர் மீது மட்டும் வழக்குப் போட்டு முடிக்கக் கூடாது.


    முதல்-அமைச்சர் இந்த பிரச்சனையில் ஏதாவது கருத்து சொல்வார் என்று நினைத்தேன். தலித் பாதிக்கப்பட்டால் யாரும் வாய் திறப்பதில்லை. சிறுமி கொலையை யாரும் கண்டிக்கவில்லை. முதல்-அமைச்சர் அமைதியாக உள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் விரும்பும் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். மக்களுக்கு பா.ஜ.க. அரசு ஒன்றும் செய்யவில்லை. மதசார்பற்ற அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். மீண்டும் பாஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல கட்சிகள் உள்ளது. கூட்டணியில் இருப்பது பற்றி தி.மு.க. அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். தி.மு.க. எடுக்கும் முடிவுக்கு துணை நிற்போம்.

    ராஜபக்சேவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளிக்கக் கூடாது. இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்த அதிபர் சிறிசேனா திட்டமிட்டுள்ளார்.

    தமிழக அரசியலில் திரை கவர்ச்சி எடுபடாது. எடப்பாடி அணி- தினகரன் அணியால் வாக்கு வங்கி சிதறும். பாராளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரும். அதற்கு முன்பு இடைத்தேர்தல் வராது.

    இவ்வாறு அவர் கூறினார். #ViduthalaiChiruthaigalkatchi #Thirumavalavan
    13 வயது சிறுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருமாவளவன் பங்கேற்றார். #ViduthalaiChiruthaigalKatchi #Thirumavalavan
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்பட்டியை சேர்ந்தவர் சாமிவேல். இவரது மகள் ராஜலெட்சுமி (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பவர் ராஜலெட்சுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்ததுடன் கடந்த 22-ந்தேதி அவரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார்.

    இது குறித்து விசாரணை நடத்திய ஆத்தூர் போலீசார் போக்சோ மற்றும் கொலை வழக்கும் அவர் மீது பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தற்போது குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ராஜலெட்சுமியை கொடூரமாக கொலை செய்த தினேஷ்குமாரை உடனே தூக்கில் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    மாணவியின் கொடூர கொலைக்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் மவுனம் காப்பதாக கூறியும், கொலையாளி தினேஷ்குமாருக்கு அதிகபட்ச தண்டனையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள், திராளக பங்கேற்றனர். #ViduthalaiChiruthaigalKatchi #Thirumavalavan
    படேலின் சிலை அமைத்து காந்தியின் புகழை மறைக்கும் பா.ஜனதாவை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #BJP
    திருச்சி:

    திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டிசம்பர் 10-ந்தேதி நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு தொடர்பாக மண்டல ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று காலை திருச்சி வந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

    திருச்சியில் டிசம்பர் 10-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க அரைக்கூவல் விடுக்கும் மாநாடாக இந்த மாநாடு அமையும்.

    இதில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். அதே போன்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பங்கேற்கவும் அழைப்பு விடுத்துள்ளோம். திருச்சியில் நடைபெறும் இந்த மாநாடு ஜனநாயக சக்திகளை இணைப்பதில் திருப்பு முனையை ஏற்படுத்தும் மாநாடாக அமையும்.

    தேசத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது. பாரதிய ஜனதா ஆட்சி மீண்டும் வந்து விடக்கூடாது. இதற்கான முயற்சிகளில் அகில இந்திய அளவில் அனைத்து தோழமை கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தது வரவேற்கத்தக்கது.


    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளோம். 3-வது அணி அமைத்து, யாரும் மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பளிக்க கூடாது. தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.விற்கு ஆதரவு அளித்துள்ளது. மற்ற தோழமை கட்சிகளும் தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் வேட்பாளராக போட்டியிடுகிறீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். நான் தி.மு.க. கூட்டணியில் அங்கு போட்டியிடுவேன் என்றேன். இதில் எந்த முரண்பாடும் இல்லை.

    ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த மத்திய பா.ஜனதா அரசு அதற்கு நேர்மாறாக ரூ.3 ஆயிரம் கோடியில் பட்டேலுக்கு சிலை அமைத்தது ஏழை மக்களை அவமதிக்கும் செயல். தற்போது அயோத்தியில் மீண்டும் 100 அடியில் ராமர் சிலை வைப்பதாக கூறி உள்ளார்கள்.

    படேலின் சிலை அமைத்து காந்தியின் புகழை மறைக்கும் பா.ஜனதாவை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ViduthalaiChiruthaigalkatchi #Thirumavalavan
    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதால் நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #neutrinoproject

    அவனியாபுரம்:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நியூட்ரினோ திட்டத்துக்கு பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்தது வர வேற்கத்தக்கது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும்.

    சேலத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிற 5-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்வர் விலகி, ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். தேர்தலுக்கு பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமையும். திருச்சியில் 10-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், சீதாராம் யெச்சூரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எடுக்கும் முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் உறுதுணையாக இருக்கும். பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளதால் தொழிலாளர்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 2 மணி நேரம் பட்டாசு வெடித்தால் காற்று மாசு பாடு ஏற்படாதா? எனவே எந்தெந்த வெடிகளை வெடிக்க வேண்டும் என வரையறை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #neutrinoproject

    டிசம்பர் மாதத்திற்குள் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். #Thirumavalavan #ElectionCommission
    சென்னை:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்திருப்பதால் அந்தத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

    அவற்றுடன் ஏற்கனவே காலியாக உள்ள இரண்டு தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இந்த 18 தொகுதிகளும் கடந்த ஓராண்டாக பிரதிநிதி இல்லாமல், மக்கள் பணி எதுவும் செய்யப்படாமல் மோசமான நிலையில் உள்ளன. இந்நிலையில் அங்கு தேர்தலை நடத்த தாமதித்தால் அது அந்த தொகுதி மக்களை எல்லாம் வஞ்சிப்பதாகவே இருக்கும். அதுமட்டுமின்றி தேர்தல் ஜனநாயகத்தையும் சிதைப்பதாகிவிடும்.

    தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு என்ற மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது அதன் பொறுப்பாகும். ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஏற்ப தேர்தல் தேதியை அறிவிப்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிடும்.



    எனவே, டிசம்பர் மாதத்திற்குள் இந்த 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan #ElectionCommission
    ×