search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94931"

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 3-ந்தேதி கருணாநிதி பிறந்தநாள் விழா, புதிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடக்கிறது.
    சென்னை:

    கருணாநிதி பிறந்தநாள் விழா வருகிற 3-ந்தேதி பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கருணாநிதி பிறந்தநாள் விழா, புதிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடக்கிறது.

    இதற்கான மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகளை தென்சென்னை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள்.

    இந்த விழாவுக்காக 120 அடியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. அதை 3 மேடைகளாக வடிவமைக்கிறார்கள். நடுமேடையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமர்வார்கள்.

    இன்னொரு மேடையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 எம்.பி.க்கள் அமர்வார்கள். மற்றொரு மேடையில் புதிதாக வெற்றிபெற்ற தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்.

    மேடையின் முன்பு 100 அடி உயரத்தில் தி.மு.க. கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. அதேபோல் 100 அடி உயரத்தில் தி.மு.க. தலைவரின் வண்ண மின்விளக்கு கட்-அவுட் அமைக்கப்படுகிறது.

    மேலும் 70 அடி உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட தி.மு.க. கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் உதயசூரியன் வடிவ ஒளி விளக்குகள் அமைக்கப்படுகிறது.

    இதேபோல் மேடை அருகில் 70 அடி உயரத்தில் 12 கூட்டணி கட்சிகளின் கொடிக்கம்பங்களும் இடம் பெறுகிறது. இந்த கம்பங்களில் ஏற்றுவதற்கான அனைத்து கட்சிகளின் கொடிகளும் பூனாவில் தயாராகி வருகிறது.

    சைதாப்பேட்டையில் கலைஞர் பொன்விழா வளைவு உள்ளது. 45 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த வளைவையும் கருணாநிதி பிறந்தநாளையொட்டி புதுப்பிக்கின்றனர். அந்த பணிகளை மாவட்ட செயலாளரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். அவருடன் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி வைகோ மேல்- சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார். இன்னொரு இடத்துக்கு தி.மு.க. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
    சென்னை:

    தமிழகத்தில் இருந்து டெல்லி மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவி காலம் ஜூன் மாதம் முடிகிறது.

    அ.தி.மு.க.வில் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுன், டி.ரத்தினவேல், ஆர்.லட்சுமணன், தி.மு.க.வில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் டி.ராஜா ஆகியோரது பதவி காலம் முடிகிறது.

    கனிமொழி பாராளுமன்ற எம்.பி.யாகி விட்டதால் அவரது மேல்-சபை எம்.பி. பதவி முடிவுக்கு வந்து விட்டது.

    புதிய 6 மேல்- சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) நடைபெறுகிறது.

    சமீபத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த கட்சி மேல்-சபையில் ஒரு இடத்தை இழக்கிறது. தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மேல்-சபை எம்.பி. பதவியை பெறுகிறது.

    இதன் மூலம் மேல்-சபையில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்க உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க.வுக்கு ஒரு மேல்-சபை தொகுதி வழங்குவதாக அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதன்படி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி மேல்-சபை எம்.பி.யாக வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து 2 மேல்-சபை உறுப்பினர்களாக கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


    தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேல்- சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.

    இன்னொரு இடத்துக்கு தி.மு.க. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் (தொ.மு.ச.) எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    மீதம் உள்ள ஒரு எம்.பி. பதவியை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்காக காங்கிரஸ் கேட்கும் என தெரிகிறது. இதுகுறித்து தி.மு.க. தலைமை விரைவில் முடிவை அறிவிக்கும்.
    மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை முறையான அழைப்பு வராததால் மோடி பதவி ஏற்பு விழாவை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க உள்ளனர்.
    சென்னை:

    நரேந்திர மோடி இன்று 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் செய்யப்பட்டு வருகிறது.

    விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் இவ்விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் 20 பேருக்கும் அழைப்பிதழ் வந்துள்ளது.


    ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை முறையான அழைப்பு வரவில்லை. எனவே மோடி பதவி ஏற்பு விழாவை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 20 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 3 பேர் என தி.மு.க. வுக்கு மொத்தம் 23 எம்.பி.க்கள் உள்ளனர்.

    இதன் மூலம் பா.ஜனதா, காங்கிரசை அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. விளங்குகிறது. ஆனாலும் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்காதது தி.மு.க. தலைவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தால் மட்டும் தான் நாங்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்போம் என தி.மு.க. செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

    மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் பிரசாரத்தின்போது மோடியை கடுமையாக தாக்கி பேசி இருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து பேசினார். என்றாலும் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றபோது மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது என தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

    பா.ஜனதா நிர்வாகிகள் கூறும்போது, மு.க.ஸ்டாலினின் மோடிக்கு எதிரான பிரசாரத்தால் எங்கள் மேலிடம் வருத்தம் அடைந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் எங்கள் கட்சியை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

    எங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு சமூக வலைதளங்களில் சரியான பதிலடி கொடுக்க தயாராகி வருகிறோம். மு.க.ஸ்டாலின் தான் எங்களுக்கு முதல் எதிரி என்றனர்.
    பாரதிய ஜனதா கூட்டணியில் இருப்பதால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக பெற்றுத்தருவோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தக வளாகத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையவில்லை. இந்தியா முழுவதும் மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் இங்கு தமிழகத்துக்கு எதிராக பாரதிய ஜனதா இருப்பது போல சித்தரிப்பு, தொடர்ந்து பல்வேறு வகையில் எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரம் செய்த காரணத்தால் தமிழக மக்கள் ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். தேசிய நீரோட்டத்தோடு சேர்ந்து நாமும் வாக்களித்து இருக்கலாம் என்று இன்று மக்கள் வருத்தப்படுகின்றனர்.

    அதேபோல மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர்.

    தி.மு.க.வை பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவுகள் பெருத்த ஏமாற்றம்தான். மே 23-ந் தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும் என ஸ்டாலின் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார். ஆனால் மாற்றம் வரவில்லை. ஸ்டாலினுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.

    தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும், நாங்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருப்பதால் தமிழர்களின் நலன் கருதி தமிழர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறாமல் தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதனை கண்டிப்பாக பெற்றுத் தருவோம்.

    இந்த பணியை நாங்கள் தான் செய்ய முடியும். தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும் அவர்களால் இதனை செய்ய முடியாது. எப்படி அவர்கள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்கிறார்களோ? அதே போல் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்யலாம். அதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் சாதிக்க முடியாது. தி.மு.க. பெற்றுள்ளது பயனில்லாத வெற்றி.

    தூத்துக்குடியை பொருத்தவரை கனிமொழி வெற்றி பெற்றிருந்தாலும் கூட, கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிலுக்கும், கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கும் அவர்களால் குரல் கொடுக்க முடியாது. வெற்றி -தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தமிழகத்துக்கு தேவையான திட்டங்களைப் பெற்று தரும் வகையில் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே சாதிப்பது நாங்கள்தான். தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவோம், தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் எங்களது ஸ்லீப்பர் செல்கள் மறுபடியும் வருவார்கள் என தினகரன் கூறியது நல்ல ஜோக்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு வரவில்லை என்று டி.ஆர்.பாலு நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. அமைப்பு செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது:-

    மத்திய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. அப்படி இருக்கும்போது பிரதமர் பதவி ஏற்பு விழாவில் நானும், ஆ.ராசாவும் பங்கேற்பதாக ஆதாரமற்ற தகவலை சொன்னால் எப்படி?.



    ஜனாதிபதி அல்லது பிரதமரிடம் இருந்து இதுவரை எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அழைப்பு வந்தால் விழாவில் பங்கேற்பது குறித்து தி.மு.க. தலைவர்தான் முடிவு செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதல்வராக பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    சென்னை:

    ஆந்திர முதல்-மந்திரியாக  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்  ரெட்டி  வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை ஏற்று, நாளை மறுநாள் நடைபெறும் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.


    ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது பாமக முன்வைத்த பத்து அம்சத் திட்டத்தை ராமதாஸ் நிறைவேற்றுவாரா? என திமுக கேள்வி எழுப்பி உள்ளது.
    சென்னை:

    தி.மு.க. நாளேடான முரசொலியில் டாக்டர் ராமதாசை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

    குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஓட்டவில்லையே என பெருமிதம் பேசுவதில் நமது மருத்துவர் அய்யாவுக்கு நிகர் அவரேதான் இருக்க முடியும்.

    தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தைத்தான் ஏற்படுத்தியதே தவிர, எனக்குள் எந்தவிதக் கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உண்மைதான். அய்யாவுக்கு எப்படி கவலை வரும்.

    மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால் மத்தியில் மீண்டும் அமைய உள்ள நரேந்திரமோடி தலைமையிலான அரசின் துணையோடு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம் என்று கூறி சாதுர்யமாக வழக்கம்போல நழுவுகிறார் மருத்துவர் அய்யா.

    மத்தியில் வரவேண்டும் என நீங்கள் விரும்பிய ஆட்சியே வந்து விட்டது. அப்படி இருக்க, உங்கள் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன தயக்கம். எம்.பி.யாக இருந்தால் தான் செய்ய முடியுமா?

    மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வுக்கு உங்கள் திருமகன், உங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி மற்றும் உங்கள் கூட்டணியில் அங்கம் வகித்த கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம் புடைசூழ ஒரே விமானத்தில் டெல்லிக்குப் பயணித்தாரே, அதே போன்று அனுப்பி தமிழக மக்கள் நலனுக்குப் பங்காற்றக் கூடாதா?

    உண்மையிலேயே நீங்கள் தமிழக வளர்ச்சிக்கும், தமிழக மக்கள் நலனுக்கும் பணியாற்றும் தலைவராக இருந்தால், என்ன சொல்லியிருக்க வேண்டும்?

    “தோல்வி அடைந்திருந்தாலும் பரவாயில்லை, தமிழக நலனே என் நலன். நாம் எதிர்பார்த்த ஆட்சி மத்தியிலே அமைந்து விட்டது. மத்தியில் மீண்டும் அமைந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு நமது அரசு. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழக மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்ற, அந்த அரசிடம் எடுத்துச் சொல்லி தேவையான அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்றியே தீருவோம் எனக் கூறியிருந்தால், உங்கள் உயரிய நோக்கத்தைப் பாராட்டியிருக்கலாம்.

    ஆனால் பொறுப்பை நீங்கள் உதறித் தள்ளிவிட்டு, கூட இருக்கும் ஒரு சில அப்பாவி பாட்டாளிச் சொந்தங்களைத் தக்க வைத்துக் கொள்ள நினைத்து, பொறுப்பற்ற நிலையில் ஒரு அறிக்கை விடுகிறீர்களே, இது நியாயமா?

    மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது மக்களுக்கு எதையும் செய்யாத தி.மு.க. என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியிருக்கிறார். பாவம், தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி, அய்யாவிற்கு நினைவிழப்பை உருவாக்கியுள்ளது போலும்.


    மத்தியில் அதிகாரத்தில் தி.மு.க. இருந்தபோது அய்யாவின் ஆசை மகன் அன்புமணியும் தி.மு.க.வின் தயவால் பதவி பெற்று மத்தியில் அமைச்சராக இருந்தார் என்பதை மறந்து விட்டுப் பிதற்றுவது என்ன நியாயம்?

    அறிக்கையின் முடிவில் பாட்டாளிகளை வீறு கொண்டு எழக் கேட்டுள்ளீர்கள். அத்துடன் விடவில்லை. மக்களின் பிரச்சனைக்காக தொடர்ந்து போராட அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்.

    கட்சித் தொண்டர்கள் காதிலே பூச்சுற்ற ஒரு அளவில்லையா? மருத்துவர் அய்யா, முழம் முழமாகச் சுற்றத் தொடங்கியுள்ளீர்களே, நியாயமா?

    நீங்கள் ஆதரித்த கட்சிகளின் ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும். அப்படி இருக்க, மக்களின் பிரச்சனைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவற்றிற்குத் தீர்வு காண வேண்டியதுதானே. அதை விடுத்து போராட அழைப்பதேன்? சரி, அதை எல்லாம் விடுங்கள்.

    தேர்தலில் கூட்டணி அமைத்தபோது ஒரு பத்து அம்சத் திட்டத்தைக் கூறி, அதனை ஏற்றுக் கொண்டதால்தான் நான் அ.தி.மு.க. அணியோடு கூட்டணி சேர்ந்தேன் என்று பேட்டி தந்தீர்களே. அந்த பத்து அம்சங்களையாவது நிறைவேற்றிடுவீர்களா, அதற்கும் “பெ....பெ....”தானா?

    தேர்தல் தோல்விக்குத் துவள வேண்டாம் என அறிக்கை விட்டுவிட்டீர்கள். பத்து அம்சமும் பஞ்சாய்ப் பறக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டால் முடியுமா? அடுத்து கூட்டணிப் பங்கீட்டுப் பேச்சு உடன்படிக்கைப்படி ஒரு ‘ராஜ்ய சபா’ சீட்டு பாக்கியிருக்கிறது. அதை அன்புமணிக்குத் தயார் செய்யுங்கள்.

    கூட்டணி வைத்துத் தோல்விதானே கண்டோம் என அந்த ‘சீட்’டைத் தராது கைவிரித்து விடப் போகிறார்கள்.

    இதை எழுதிக் கொண்டிருக்கும்போது, எங்கோ தூரத்தில் ஒலிபரப்பாகும் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே...” எனும் பாடல் காதிலே விழுகிறது. அய்யாவுக்கு அந்தப் பாடலை சமர்ப்பணமாக்குகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என ராகுல் காந்தியிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததால் கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் அதிர்ச்சி அடைந்தார். தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலக முன்வந்தார். இது தொடர்பாக காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தபோது, அவரது ராஜினாமா முடிவை காரிய கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று காரிய கமிட்டி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    மேலும், கட்சியில் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்வதற்கு ராகுல் காந்திக்கு முழு அதிகாரமும் அளிக்க, காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனினும், ராஜினாமா செய்வதில் ராகுல் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. சோனியா உள்ளிட்ட தலைவர்கள் சமாதானம் செய்தும் தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தேசிய அளவில் காங்கிரஸ் தோல்வியடைந்தாலும் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது காங்கிரசுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொலைபேசி மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பும் ராகுல் காந்தியை சமாதானம் செய்தார்.



    காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்றும், தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் அவர் கேட்டுக்கொண்டார். தேர்தலில் தோற்றாலும் மக்களின் மனங்களை நீங்கள் வென்றுள்ளீர்கள் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இதையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியையும் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

    சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, வெய்ட் அண்ட் சீ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
    சென்னை:

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்ற பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- எதிர்க்கட்சியான தி.மு.க.வின் செயல்பாடு இனி சட்டசபையில் எப்படி இருக்கும்?

    பதில்:- சட்டமன்றம் கூடும்போது நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். தொலைக்காட்சியிலும் அதை ஒளிபரப்பத்தான் போகிறார்கள்.


    கேள்வி:- சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்திருக்கிறீர்கள். அதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?

    பதில்:- பொறுத்து இருந்து பாருங்கள்.

    கேள்வி:- அரசு மீது தி.மு.க.நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா?

    பதில்:- சட்டசபையில் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அறிவித்த பிறகு அது குறித்து நாங்கள் முடிவு எடுப்போம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
    20 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்களது பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

    இதற்கிடையே, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்க சட்டசபை செயலகத்திடம் தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.



    இந்நிலையில், தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். சபாநாயகர் தனபால் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து தற்போது சட்டசபையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக, அண்ணா அறிவாலயம் சென்ற 13 எம்.எல்.ஏ.க்களும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  
    தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். அவர்கள் சபாநாயகர் முன்னிலையில் இன்று பதவி ஏற்கின்றனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்கள் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

    இந்நிலையில், 28-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்பதாக சட்டசபை செயலகத்திடம் தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.

    அதை தொடர்ந்து தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
    தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் மற்றும் கருணாநிதி 96-வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 3-ந் தேதி 4 மணிக்கு நடக்கிறது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. போட்டியிட்ட 19 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    இதையடுத்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் மற்றும் கருணாநிதி 96-வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) 4 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வரவேற்கிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சித்தலைவர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
    ×