search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94931"

    கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற தயாநிதிமாறன், தி.மு.க. எம்.பி.க் கள் தமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என்று கூறினார்.
    சென்னை:

    மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதிமாறன் நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அதன்பின்னர், நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்கள் தந்திருக்கிறார்கள். தமிழக மக்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து இந்த பெரிய வெற்றியை தந்துள்ளார்கள். இந்த வெற்றிக்கு காரணம் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் வகுத்த தேர்தல் யுக்தி தான்.

    சென்ற முறை அ.தி.மு.க. கூட்டணி இதே அளவில் வெற்றி பெற்றார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்காக அவர்கள் வாதாடவில்லை. தமிழ்நாட்டின் உரிமையை பறிகொடுத்தார்கள். இனி அது நடக்காது. நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும். உங்களின் குரலாக உங்களுக்காக நாங்கள் எல்லோரும் உழைப்போம்.

    தொடர்ந்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, அது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்பை பெருக்குகின்ற வகையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் உழைத்து உங்களுக்காக குரல் கொடுத்து காப்போம் என்று உறுதியளிக்கிறோம். ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் அ.தி.மு.க.வை ஓரம் கட்டி விட்டார்கள். அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

    ஒரு இடத்தில் மட்டும் தப்பித்து இருக்கிறார்கள். அதுவும் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தான். பண பலத்தால் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். மற்ற இடங்களில் எல்லாம் உதறி தூசி தட்டி விடப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மக்கள் இன்னும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

    இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் யாரும் ஜெயித்தது கிடையாது. ஒருமித்த கருத்தோடு மக்கள் தெளிவாக தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும். அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் வாக்களித்தார்கள். சில தொகுதிகளில் நாம் வெற்றி பெற முடியாத காரணத்தால் இன்று மக்கள் நினைத்த மாற்றம் நடக்கவில்லை. மக்கள் எதிர்பார்த்தது இந்த எடப்பாடி பழனிசாமி அரசு போய்விட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தான் ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். அது தான் ஜனநாயக விருப்பம். இதை உணர்ந்து தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தால் அவர் நல்ல மனிதர்.

    எப்படியாவது ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்று தான் அவர் பார்க் கிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக அவர்கள் சண்டை போட்டதே கிடையாது. இப்போது அவர்கள் செய்ய மாட்டார்கள். தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவில் ஒரு பகுதி மக்கள் ஏன்? இவ்வாறு வாக்களித்தார்கள் என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உணரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்கின்றனர்.
    சென்னை:

    22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில், வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்கின்றனர். தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் 13 திமுக எம்எல்ஏக்களும் பதவியேற்கிறார்கள். 

    எம்எல்ஏக்கள் பதவியேற்பு நகழ்ச்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

    கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் உள்பட புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் நினைவிடத்தை சுற்றி வலம்வந்தனர். அதைத்தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து வணங்கினர்.

    அங்கிருந்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்த அவர்கள் அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வணங்கினர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லத்துக்கு சென்றனர். பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி கிடைத்ததற்காக மு.க. ஸ்டாலினுக்கும், வெற்றிபெற்ற அனைவருக்கும் க.அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.
    திமுகவின் மக்களவை குழு தலைவராக டிஆர் பாலு எம்பியும், மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா எம்பியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு செய்யப்பட்டார். திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டார்.

    திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.



    இதேபோல் திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார்.
    தமிழகத்தில் நடந்து முடிந்த 38 பாராளுமன்ற தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீதம் குறித்து பார்ப்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் பாராளுமன்றத்தில் பா.ஜனதா, காங்கிரசை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 ஓட்டுகள் கிடைத்தன. இது 44.34 சதவீதம் ஆகும்.

    கடந்த தேர்தலில் தி.மு.க. 34 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது. தி.மு.க.வுக்கு அப்போது 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 ஓட்டுகள் கிடைத்தன. இது 23.61 சதவீதம் ஆகும்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து அ.தி.மு.க. போட்டியிட்டது. அ.தி.மு.க. 20 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன.



    தி.மு.க. இந்த தேர்தலில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அ.திமு.க. 78 லட்சத்து 30 ஆயிரத்து 520 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது 18.5 சதவீதம் ஆகும். கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட இந்த தேர்தலில் அ.தி.மு.க. 1 கோடியே 1 லட்சத்து 52 ஆயிரத்து 648 வாக்குகளை இழந்துள்ளது.

    அதே நேரத்தில் தி.மு.க. தனது வாக்கு வங்கியை 23.61 சதவீதத்தில் இருந்து 32.78 சதவீதமாக உயர்த்தியுள்ளது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    திராவிட கோட்டைக்குள் பாரதிய ஜனதாவால் நுழைய முடியவில்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் தி.மு.க. 3-வது இடத்தை பெற்று இருக்கிறது. தலைமை ஆளுமை என்பதை இந்த தேர்தல் மூலம் தமிழக மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள். தமிழக நலன்களை தி.மு.க. காக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.


    திராவிட கோட்டைக்குள் பா.ஜனதாவால் நுழைய முடியவில்லை. அடுத்து முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வருவார் என்பதை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் தார்மீக உரிமையை எடப்பாடி பழனிசாமி இழந்து இருக்கிறார்.

    தி.மு.க. கூட்டணியின் வெற்றி ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையை காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆளும் கட்சியின் அறை கூவலுக்கு எதிராக தி.மு.க. கூட்டணியின் வெற்றியை கண்டு மற்ற மாநிலத்தவர் கூட வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

    நியூட்ரினோ, மேகதாது அணை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றாத வண்ணம் தமிழகத்திற்கான அரணாக தி.மு.க. கூட்டணி இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த விஷால், ஏற்கனவே அரசியலில் இருப்பதாக கூறினார்.
    சென்னை:

    மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க பாராளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்றது.

    நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் நேற்று மாலை முக.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் பத்திரிகையாளர்களிடம் விஷால் அளித்த பேட்டி பின்வருமாறு:-

    தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றமைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

    சமூக சேவையில் விருப்பம் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன் என்றார்.
    தேர்தல் முடிவுகள் மூலம் தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்து உள்ளதாக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்றுச் சிறப்புமிக்க, நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் சீரிய இடம் உருவாக்கப்பட்டிருப்பது இந்திய அளவில் போற்றுதலுக்கு உரிய பொருள் ஆகியிருக்கிறது.

    ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தி.மு.க. கூட்டணி ஈர்த்திருக்கிறது. அத்தகைய மாபெரும் வெற்றியை அடைந்ததற்கு, தொடர்ந்து நல்லிதயங்களின் வாழ்த்துகள் பொழிந்த வண்ணம் உள்ளன.

    22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் 13 இடங்களை கழகம் கைப்பற்றி உள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் தி.மு.க பெறுகிறது. 1971, 2004 பாராளுமன்றத் தேர்தல்களில் கழகம் பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றி இது.

    சட்டமன்றத்தில் நம்முடைய பலம் 101ஆக உயர்கிறது. அ.தி.மு.க.வசம் இருந்த 12 தொகுதிகளை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியிருப்பது தமிழ்நாட்டின் இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

    இவற்றை செரிமானம் செய்துகொள்ள முடியாத ஆட்சியாளர்களும் அரசியல் எதிரிகளும், ‘தி.மு.க.வின் நோக்கம் நிறைவேறவில்லை’ என தங்கள் புண்ணுக்குத் தாங்களே புணுகு தடவி புளகாங்கிதம் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் மிகவும் தற்காலிக இன்பத்திற்குத் தடையாக இருக்க நான் விரும்பவில்லை. நமக்கான பெரும்பணிகள் நிறைய காத்துக் கொண்டு இருக்கின்றன.


    தலைவர் கலைஞர் இல்லாத நிலையில், கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சுமக்க வேண்டிய கடுமையான பணியுடன், தலைவர் இல்லாத காரணத்தால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகவும் கழகத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்றும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவர் வருவார் இவர் வருவார் என்றும் சூழ்ச்சி எண்ணத்துடன் திட்டமிட்டு தி.மு.க.வை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயக ரீதியாக கொடுக்கப்பட்ட தக்க பதிலடிதான் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களங்களில் நமக்கு மக்கள் அளித்துள்ள இந்த அருமையான வெற்றி.

    மத்திய - மாநில ஆட்சியாளர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு துன்பத்தில் உழலும் தமிழ்நாட்டு மக்கள் நம்மை நம்பினர். பொதுக்கூட்டங்களில், நடைப்பயணங்களில், திண்ணைப் பிரசாரத்தில், தேநீர்க்கடை உரையாடலில் என நான் சென்ற இடமெல்லாம் தங்கள் வீட்டுப் பிள்ளையாக சகோதரனாக, குடும்பத்தில் ஒருவனாகக் கருதி ஓடோடி வந்து அரவணைத்து அன்பைப் பொழிந்தனர். ஆதரவை உறுதி செய்தனர். தமிழ்நாட்டு மக்களின் வற்றாத அன்பும் வாஞ்சைமிகு ஆதரவுமே வாக்குகளாக மாறி இந்த வெற்றியைத் தந்துள்ளது.

    மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் வகுத்தளித்த வழியில், தேர்தல் களப்பணியில் தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்த கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களாம் அன்பு உடன்பிறப்புகளும் இல்லாமல், இந்த வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, வாக்கு எண்ணிக்கை முடியும்வரை உண்ணாமல் உறங்காமல் ஓய்வு கொள்ளாமல் உழைத்த உடன் பிறப்புகள் அனைவரின் முயற்சியாலும் கிடைத்த இந்த வெற்றியை உச்சி மோந்து மெச்சிப் பாராட்டிட தலைவர் கலைஞர் நம்மிடம் இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டதே என்ற ஏக்கத்துடன், அவரது நினைவிடத்தில், இந்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்குவதே எனது கடமை!

    எதற்காக இந்த வெற்றியைத் தமிழக மக்கள் நமக்கு வழங்கினார்களோ, என்ன வாக்குறுதிகளை நாம் மக்களிடம் அளித்தோமோ, அவர்களின் உத்தரவினைப் பெற்று நம் கடன் தொண்டூழியம் செய்வதே எனக் கொண்டு, நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

    பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் நலன் காக்கும் உரிமைக் குரலாக தி.மு.க. ஓங்கி ஒலிக்கும். மக்களுக்கெதிரான பிளவு சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக்காதவாறு விழிப்புடன் காவல்காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட கொள்கை தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். மாநில நலன்களும் உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும், பறிபோனவற்றை மீட்டெடுக்கவும் ஜனநாயகம் காக்கவும் அமைதியான அறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும்.

    மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு வியூகத்தை’ பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட தி.மு.க. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் தி.மு.க.வின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும்!

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
    சென்னை:

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு பேரணியாக சென்றார்.



    அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ஸ்டாலின் வருகையை கேள்விப்பட்டு அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் வெற்றி கோஷங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    பாராளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக ஒலிப்பேன் என தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, தனது தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் கணவர் அரவிந்தனுடன் நேற்று காலை கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து ஆசி பெற்றார். அப்போது கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கருணாநிதியின் நினைவுகளை மனதில் தாங்கி கொண்டு, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நான் பெற்றிருக்கும் வெற்றியை அவரது காலடியில் சமர்ப்பிக்க வந்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும், தி.மு.க. நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    என் மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றிபெற செய்த தூத்துக்குடி வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். தொடர்ந்து பாராளுமன்றத்திலும் அவர்களது குரலாக ஒலிப்பேன். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அத்தனை முயற்சிகளையும் முன்வைப்பேன். தமிழகம் மற்றும் கேரளா மக்கள் மாற்று சிந்தனை உள்ளவர்கள் என நிரூபித்து விட்டார்கள். தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் உழைப்பு இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சீபுரம் வேட்பாளர் ஜி.செல்வம், மயிலாடுதுறை வேட்பாளர் ராமலிங்கம், தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திருவாரூர் வேட்பாளர் பூண்டி கலைவாணன், திருப்போரூர் வேட்பாளர் இதயவர்மன் உள்ளிட்டோரும் தங்களது சான்றிதழ்களை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றனர்.

    மேலும் கனிமொழி எம்.பி. அண்ணா அறிவாலயத்தில் தன்னுடைய வெற்றி சான்றிதழை மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். 
    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் யார் என்பதை பார்ப்போம்...
    சென்னை:

    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றுள்ளனர்.

    தூத்துக்குடி தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி வெற்றிபெற்றார். அவர் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    மத்திய சென்னை தொகுதியில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் பா.ம.க. வேட்பாளர் சாம்பாலை விட 3 லட்சத்து 1520 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

    தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெயவர்தனைவிட 2 லட்சத்து 62 ஆயிரத்து 223 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

    வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை விட 4 லட்சத்து 60 ஆயிரத்து 691 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


    தேனி தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத் குமார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை விட 76 ஆயிரத்து 693 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

    ஆரணி தொகுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் அ.தி.மு.க. வேட்பாளர் ஏழுமலையை 2 லட்சத்து 30 ஆயிரத்து 806 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை விட 3 லட்சத்து 32 ஆயிரத்து 142 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி, தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை விட 3 லட்சத்து 99 ஆயிரத்து 919 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    தர்மபுரி தொகுதியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி தி.மு.க. வேட்பாளர் செந்தில் குமாரை விட 63 ஆயிரத்து 460 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    மதுரை தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசனை விட 1 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    திருநெல்வேலி தொகுதியில் சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பண்டியன் தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்தை விட 1 லட்சத்து 85 ஆயிரத்து 457 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? என்பதை தெரிந்து கொள்வோம்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இதில் பல தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவைவிட கூடுதலாக 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    வேலுசாமி பெற்ற வாக்குகள் 7 லட்சத்து 46,523 ஆகும். ஜோதிமுத்துவுக்கு கிடைத்தது 2 லட்சத்து 7 ஆயிரத்து 551 ஆகும்.

    இதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 5 லட்சத்து 7 ஆயிரத்து 955 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    டி.ஆர்.பாலுவுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 281 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வைத்திலிங்கத்துக்கு 2 லட்சத்து 85 ஆயிரத்து 326 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

    வடசென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் கலாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜாவை 4 லட்சத்து 61 ஆயிரத்து 518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    டாக்டர் கலாநிதிக்கு 5 லட்சத்து 90 ஆயிரத்து 986 ஓட்டுகளும், மோகன்ராஜிக்கு ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 468 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.

    திருச்சி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 4 லட்சத்து 59 ஆயிரத்து 286 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    திருநாவுக்கரசுவுக்கு மொத்தம் 6 லட்சத்து 21 ஆயிரத்து 285 ஓட்டுகளும், அவரை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட இளங்கோவனுக்கு ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 999 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

    கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 4 லட்சத்து 20,546 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    ஜோதிமணிக்கு மொத்தம் 6 லட்சத்து 95,697 ஓட்டுகளும் அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தம்பிதுரைக்கு 2 லட்சத்து 75,151 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.


    பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் 4 லட்சத்து 3,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

    பாரிவேந்தருக்கு 6 லட்சத்து 83,697 ஓட்டுகளும் அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிவபதிக்கு 2 லட்சத்து 80,179 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

    தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்து 47,209 ஓட்டுகள் வித்தியாசத்திலும், கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கவுதமசிகாமணி 3 லட்சத்து 99,919 ஓட்டுகள் வித்தியாசத்திலும், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 3 லட்சத்து 28,956 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் 3 லட்சத்து 1,520, திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் 3 லட்சத்து 56,955, திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை 3 லட்சத்து 4,187 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

    அவருக்கு 5 லட்சத்து 229 ஓட்டுகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகருக்கு 4 லட்சத்து 97,010 ஓட்டுகளும் கிடைத்துள்ளது. வித்தியாசம் 3,219 ஓட்டுகள் ஆகும்.
    ×