search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபராதம்"

    சென்னை அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #TNGovt #NationalGreenTribunal
    சென்னை:

    சென்னை அடையாறு, கூவம் ஆற்றிலும் பக்கிங்காம் கால்வாயிலும் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் வீதிகளுக்கு வந்து விடுகிறது.

    இதனால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க கோரியும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கு நீதிபதி ஆகாஸ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அடையார் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் அளித்துள்ள அறிக்கை தெளிவற்று உள்ளதாக நீதிபதிகள் கூறினர். இதில், பிரச்சனைகளை குறைப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் அறிய முடிகிறது என்று தெரிவித்தனர்.

    பருவமழை முன்னேற்பாடு பணிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.603 கோடி நிதியில் ரூ.80 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த தொகையில் கூட ஆற்றில் மிதக்கும் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    25,892 ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், வழக்குகள் இருப்பதால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.

    எனவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேரடியாக பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிபடுத்த வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டனர்.

    இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்த தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்த நீதிபதிகள் இந்த தொகையை பொதுப்பணித்துறை அடுத்த 15 நாட்களுக்குள் தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கட்ட வேண்டும் என்று ஆணையிட்டனர். #TNGovt #NationalGreenTribunal
    ஆந்திராவில் கிராமத்தில் வட்டி என்கிற இனத்தை சார்ந்த மலைவாழ் மக்கள் பகலில் நைட்டி அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவருக்கு ரூ.1000 சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #NightyBan #AndhraVillage
    நகரி :

    பெண்கள் இரவில் தூங்கும் போது அணிந்துகொள்வதற்காக கண்டறியப்பட்ட இலகுவான உடை ‘நைட்டி’. ஆனால் தற்போது பெரும்பலான பெண்கள் நைட்டியை பிரதான உடையாக மாற்றிக்கொண்டு பகல் நேரங்களிலும் அதனை அணிந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தோகலபள்ளி என்கிற கிராமத்தில் பெண்கள் பகலில் நைட்டி அணிய தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கிராமத்தில் வட்டி என்கிற இனத்தை சார்ந்த மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அந்த இனத்தை சேர்ந்த 9 பேரை வட்டி இனத்தின் தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவர்கள் கூறுவதை வேத வாக்காக எண்ணி அதன்படி செயல்படுவது மக்களின் வழக்கம்.



    அந்த வகையில், தோகலபள்ளி கிராமத்தில் உள்ள பெண்கள் பகலில் அதாவது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிய வட்டி இன தலைவர்கள் தடை விதித்து உள்ளனர். அதனை மீறி பகலில் நைட்டி அணியும் பெண்கள் ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். பெண்கள் பகலில் நைட்டி அணிந்திருப்பதை பார்க்கும் நபர் வட்டி இன தலைவர்களுக்கு அதனை தெரியப்படுத்தினால் அவருக்கு ரூ.1000 சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடையை விரும்பாத அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் இதுபற்றி அரசு அதிகாரிகளுக்கு சமீபத்தில் தெரியப்படுத்தினர். அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்த போது, அங்குள்ள யாரும் வட்டி இன தலைவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வரவில்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். #NightyBan #AndhraVillage
    தீபாவளிக்கு சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 2190 பேரிடம் அபராதம் வசூலிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் பொதுமக்கள் இதனை கண்டு கொள்ளாமல் விரும்பிய நேரங்களில் எல்லாம் பட்டாசு வெடித்தனர்.

    இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 2190 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவரும் கண்டிப்பாக கோர்ட்டில் அபராதம் செலுத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். விதிமுறைகளை மீறிய அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதன்படி பட்டாசு வழக்கில் சிக்கிய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக ஏற்கனவே 343 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் மேலும் 15 பேர் பட்டாசு வெடித்த குற்றத்துக்காக போலீசில் சிக்கியுள்ளனர். #tamilnews
    கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கலெக்டர், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். #Dengu
    திருவாரூர்:

    திருவாரூர் காட்டுக்கார தெரு, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட நகர் பகுதிகளில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் இன்று காலை டெங்கு கொசு ஒழிப்பு குறித்து நேரடி ஆய்வு நடத்தினார்.

    அப்போது கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கலெக்டர், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

    மேலும் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்க வேண்டும் என்று பள்ளி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பார்வையிட்டு தேவையற்ற குப்பைகளை பொது வெளியில் கொட்ட வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengu
    காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் ஒருசில இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

    மாவட்ட கலெக்டர் பொன்னையா குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையம் பகுதியில் கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில் நிலையத்தில் ஒருசில இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ. 20 ஆயிரம் அபராதத்தை கலெக்டர் பொன்னையா விதித்தார். மேலும் அப்பகுதியில் இருந்த பொருட்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்.

    இதேபோல் ரெயில்வே குடியிருப்பு பகுதியை பார்வையிட்டார். இதில் ஒரு வீட்டின் தொட்டியில் கொசு உற்பத்தியாகும் ஆதாரம் காணப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
    செங்கல்பட்டில் நடந்த டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் போலீஸ் நிலையம், பழைய தாலுக்கா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    செங்கல்பட்டு:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பொன்னையா செங்கல்பட்டு பகுதியில் அதிரடி ஆய்வு செய்தார்.

    முதலில் செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட அரசு பொது மருத்துவமனையை பார்வையிட்டு வளாகத்தை சுற்றிப்பார்த்தார்.

    அப்போது அங்கு குப்பைகள், மருத்துவ கழிவுகள் குவிந்து கிடந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் நிலையம், போலீஸ் குடியிருப்பு, தாலுக்கா அலுவலகம், பொதுப் பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களை கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

    இதில் குப்பைகள் தேங்கி சுகாதாரமின்றி காணப்பட்ட செவிலியர் குடியிருப்புக்கு ரூ.5 ஆயிரம், போலீஸ் குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம், தாலுக்கா போலீஸ் நிலையம், பழைய தாலுக்கா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு தலா ரூ.10 ஆயிரம், வட்டார போக்குவரத்துறை அலுவலகத்திற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.80 ஆயிரம் விதித்தார்.

    இந்த அபராத தொகையை சொந்த பணத்தில் ஒவ்வொரு அரசு துறையும் கட்ட வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

    தண்ணீர் தேங்காமலும், குப்பைகள் சேராமலும், பிளாஸ்டிக், ரப்பர்,தேங்காய் ஓடுகள் போன்றவற்றை தேக்கி வைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குற்ற வழக்கில் சிக்கிய பழைய வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இந்த ஆய்வின் கோட்டாட்சியர் முத்து வடிவேலு, தாசில்தார் பாக்கியலட்சுமி, கமி‌ஷனர் மாரிச்செல்வி, சுகாதாரத்துறை அதிகாரி, சித்ரா சேனா மற்றும் நகராட்சி ஊழியர்கள் வருவாய்துறை ஊழியர்கள் உடன் சென்றனர்.
    திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்துக்கு டெங்கு கொசுக்களை உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார். #DengueFever
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் சுகாதார குழுவினர் அந்தந்த பகுதிகளில் முகாமிட்டு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் , பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று டெங்கு ஆய்வு நடத்தி வருகிறார். இதில் சுகாதாரமற்ற முறையிலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருக்கும் வீடு- கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் நகரில் மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் இன்று காலை டெங்கு ஆய்வு மேற்கொண்டார்.

    திருவாரூர் மேலவடம்போக்கித் தெரு, தென்றல் நகர், காகித காரத்தெரு உள்ளிட்ட நகர்புற பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அப்போது மேலவடம்போக்கித் தெருவில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்துக்கு டெங்கு கொசுக்களை உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் ரூ 35 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    இதேபோல் நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்துக்கு ரூ. 15 ஆயிரம் அபராதமும் கலெக்டர் விதித்து உத்தரவிட்டார்.

    இதுபற்றி கலெக்டர் நிர்மல்ராஜ் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தடுக்க 24 மணி நேரமும் சுகாதார துறையினர், மருத்துவ குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DengueFever
    டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்காத வாகனம் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். #DenguFever
    விழுப்புரம்:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கலெக்டர் சுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இதன் தொடர்ச்சியாக, இன்று காலை விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வழுதரெட்டி, கவுதம் நகர் ஆகிய பகுதிகளுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் சென்றார். அங்கு வீடு, வீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா எனவும், கழிவுநீர் வாய்க்கால்கள், பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டுஉரல்கள் ஆகியவற்றில் நீர் தேங்கி உள்ளதா என அவர் ஆய்வு செய்தார்.

    மேலும், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தாங்கள் வசிக்கும் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளை சுகாதாரமாக பராமரிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களை அவர் எச்சரித்தார்.

    இதைத்தொடர்ந்து வழுதரெட்டி கவுதம் நகரில் இருந்த ஒரு தனியார் வாகனம் பழுதுபார்க்கும் கடைக்கு சென்று சோதனை செய்தார். அதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மற்றும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டயர்களில் சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்காத அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து கலெக்டர் சுப்பிரமணியன் புறப்பட்டு சென்றார். #DenguFever
    செங்கல்பட்டில் பஸ் டெம்போவை சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பழைய டயர், பிளாஸ்டிக் கழிவு குவிந்து இருந்தை கண்ட அதிகாரிகள் பஸ் உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

    செங்கல்பட்டு:

    கொசுக்களால் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் உருவாவதை தடுக்க செங்கல்பட்டு நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    செங்கல்பட்டு 33-வது வார்டு அண்ணாநகரில் 6-வது தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான பஸ் டெப்போவை சுகாதார துறை அதிகாரி சித்ரா சேனா தலைமையில் துப்புரவு ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், மேற்பார்வையாளர் ஜெயதேவி, கொசு ஒழிப்பதற்கான பெண்கள் சுயஉதவிக்குழு ஊழியர்கள் பார்வையிட்டனர்.

    அப்போது நீண்ட நாட்களாக பழுதடைந்து நிற்க வைக்கப்பட்டுள்ள பஸ், பிளாஸ்டிக் கேன்கள், பஸ் டயர்கள், பஸ் இருக்கை கள், நாற்காலி போன்ற பொருட்களை அப்புறப்படுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.

    எங்கள் பஸ் செட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தும்படி உத்தர விடுவதற்கு நீங்கள் யார் என்று கேட்டு அவர்களை பஸ் முதலாளி மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் உள்பட 5 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.

    உடனடியாக வருவாய் கோட்டாட்சியர் முத்து வடிவேலு, தாசில்தார் பாக்கியலட்சுமி, நகராட்சி கமி‌ஷனர் மாரிச்செல்வி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பஸ் செட்டை ஆய்வு செய்தனர்.

    அங்கு கொட்டிக்கிடந்த பிளாஸ்டிக் கேன்கள், டயர்கள், பஸ்சின் இருக்கைகள், ஒரு வருடத்துக்கும் மேலாக பழுதடைந்து கிடக்கும் பஸ் ஆகியவற்றை கண்டனர்.

    இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் தனியார் பஸ் டெப்போருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். மற்றும் பஸ் டெப்போவுக்கு ‘சீல்’ வைக்கவும் உத்தரவிட்டார்.

    ஊழியர்களை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பஸ் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெங்களூருவில் பொது இடங்களில் குப்பை வீசினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா எச்சரிக்கை விடுத்துள்ளார். #Parameshwara
    பெங்களூரு :

    பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதில் மேயர் கங்காம்பிகே, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நகரில் சிலர் கண்ட இடங்களில் குப்பைகளை வீசுகிறார்கள். இதனால் குப்பை குவிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு, பொது இடங்களில் குப்பைகளை வீசினால், அபராதமாக ரூ.500 விதிக்க மாநகராட்சி அனுமதி கேட்டுள்ளது. இதற்கு மாநில அரசு விரைவில் அனுமதி வழங்கும். பொது இடங்களில் குப்பை வீசினால் ரூ.500 அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்களை பிடிக்க ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரரை நியமிக்க முடிவு செய்துள்ளோம். குப்பைகளை அகற்றும்படி மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். குப்பைகளை அகற்றும் பணி தற்போது நல்ல முறையில் நடந்து வருகிறது. தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

    பெங்களூருவில் 1.30 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 29 லட்சம் வீடுகளும், 5 லட்சம் வணிக நிறுவன கட்டிடங்களும் உள்ளன. நகரில் தினமும் மொத்தம் 5,700 டன் குப்பைகள் சேருகின்றன. இதில் வீடுகளில் இருந்து 4,200 டன் குப்பைகள் சேகரமாகிறது. குப்பைகளை அகற்ற 4,213 ஆட்டோ டிப்பர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றன. 566 குப்பை சேகரிக்கும் லாரிகள், 8 தானியங்கி தூய்மை எந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன.

    நகரில் 18 ஆயிரத்து 500 துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 11 இடங்களில் உயிரி எரிவாயு தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குப்பையை சேகரிக்கும் லாரிகளுக்கு ஜி.பி..எஸ். கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆட்டோக்களுக்கு அத்தகைய தொழில்நுட்பத்தை பொருத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    புதிய குப்பை லாரிகள் மற்றும் ஆட்டோக்களை வாங்கும்போது, அவற்றை பராமரிக்கும் பொறுப்பை ஒப்பந்ததாரர்களே நிர்வகிக்கும் அம்சம் சேர்க்கப்படும். புதிதாக தூய்மைபடுத்தும் எந்திரங்களை வாங்க டெண்டர் விடப்படும். இப்போது பெல்லஹள்ளியில் உள்ள குப்பை கிடங்கு மூடப்படும். அதற்கு பதிலாக தொட்டபள்ளாபுராவில் குப்பை கிடங்கு நவீனபடுத்தப்படும்.

    குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 6 மாதத்திற்குள் அமல்படுத்தப்படும். பிடதியில் அமைக்கப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையம் இன்னும் சில நாட்களில் திறக்கப்படும். குப்பையை பிரச்சினையை கவனிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு செயற்பொறியாளர் நியமிக்கப்படுவார்.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #Parameshwara
    கோழித்தீவன உற்பத்தி ஆலையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருந்ததையடுத்து காஞ்சீபுரம் கலெக்டர் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். #Dengu
    காஞ்சீபுரம்:

    டெங்கு-பன்றி காய்ச்சலால் ஏற்படும் உயிர் பலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு-பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதார அதிகாரிகள் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் அதிரடி ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலு செட்டிசத்திரம், திருப்புட்குழி, ஆரியபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

    ஆரிய பெரும்பாக்கத்தில் உள்ள கோழித்தீவன உற்பத்தி ஆலையில் ஆய்வு செய்த போது அங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த ஆலைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் ஆலையை உடனடியாக சுகாதாரமாக வைக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் அருள் மொழி, வட்டார வளர்ச்சி அலவலர் திருஞானசம் மந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் ஒரகடம் தொழிற்சாலை பகுதிகள், காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு ஏற்கனவே ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது இருந்தார். #Dengu
    டெங்கு கொசு உருவாக காரணமானவர்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் நடவடிக்கை எடுத்தார்.
    கரூர்:

    கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 29-வது வார்டு திருமாநிலையூர் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புப்பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன், நேற்று வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது வீடுகளுக்குள் வைக்கப்பட்டிருந்த குடிநீர்த்தொட்டி, குளிர்சாதனப்பெட்டியின் பின்புறம் நீர் இருக்கும் டப்பாக்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கான வாய்ப்பினை கலெக்டர் சுட்டி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியில் பழைய சாயப்பட்டறை இருந்த இடத்தில் தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மட்டைகள், கழிவுப்பொருட்கள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட மாவட்ட கலெக்டர், இதுபோன்ற கழிவு பொருட்களில் மழைநீர் தேங்கினால் டெங்கு கொசு உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் என கூறியும் இதனை அப்புறப்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களே?. இனி அபராத நடவடிக்கை எடுத்தால் தான் சரிபட்டு வரும் என அந்த இடத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். பின்னர் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப் பட்டது.

    இதேபோல் ஆட்டோவிற்கான உதிரிபாகங்கள், டயர்கள் போன்ற கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சாலையின் ஓரம் போட்டு வைத்திருந்த நபருக்கும், வீடுகளில் உள்ள தண்ணீர்த்தொட்டியில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் உரிய பராமரிப்பின்றி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் இருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.2,000 அபராதத்தொகையாக வசூலிக்க நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், அடுத்த முறை ஆய்வுக்கு வரும்போது இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட நபர் களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், அங்கு தேவையில்லாத டயர்களை மழைநீரில் நனையாமலும், நீர் தேங்காமலும் அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் நிர்மல்சன், நகர்நல அதிகாரி ஆனந்தகுமார், வட்டாட்சியர் ஈஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
    ×