search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல்"

    தொண்டாமுத்தூரில் கணவர் 10ம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ளதால் மனமுடைந்த பெண் என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை சுண்ட பாளையம் கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சவுந்தர்யா (23). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்களுக்கு கடந்த 14.11.2018 அன்று திருமணம் நடந்தது. தலை பொங்கலுக்காக சவுந்தர்யா தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    நேற்று மாலை வீட்டில் சவுந்தர்யா மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. வேல்முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    என்ஜினீயரான சவுந்தர்யாவுக்கு தனது கணவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளது வேதனையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    இதேபோல் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் மாசாணம். டிரைவர். இவரது மனைவி தீபிகா(25). இவர்கள் காதலித்து கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சம்பவத்தன்று தீபிகா வீட்டில் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. மணி விசாரணை நடத்தினார். குடும்ப பிரச்சினை காரமணாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி 1½ வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    காங்கயத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தி.மு.க. பெண் பிரமுகர் வீட்டில் வைர நகை மற்றும் பணம் திருட்டு போனது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம்- ஈரோடு சாலை வரதப்பம் பாளையத்தை சேர்ந்தவர் ஹரி. இவரது மனைவி பவித்ரவள்ளி. இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி ஹரி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் ஹரி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 2 வைர வளையல், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    வெளியூர் சென்று வீடு திரும்பிய ஹரி தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். அங்கு பதிவாகி இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.

    இந்த திருட்டு தொடர்பாக பவித்ரவள்ளி வீட்டில் வேலை பார்த்து வரும் 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தான் வைர நகை -பணத்தை திருடி சென்று இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    சீர்காழி அருகே காணும் பொங்கலையொட்டி கிராம மக்கள் திடீரென மோதிக் கொண்டனர். இதில் கார்-மோட்டார் சைக்கிள்கள் உடைக்கப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தாண்டவன் குளத்தை சேர்ந்த பெரியசாமி மகன் அருண், தர்காஸ் பகுதியை சேர்ந்த ஹரி, அவரது தம்பி வெங்கடேசன் உள்பட சிலர் காணும் பொங்கலையொட்டி நேற்று மோட்டார் சைக்கிளில் பழையாறு கடற்கரைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் பழையாறு பஸ் நிலையம் அருகே சென்றபோது அப்பகுதயை சேர்ந்த 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை மறித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பழையாறு வாலிபர்கள் எதிர்ப்பை மீறி தர்காஸ் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பழையாறு கடற்கரைக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாடி விட்டு இரவு 7 மணி அளவில் தங்கள் ஊருக்கு புறப்பட்டு பழையாறு பஸ்நிலையம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது பழையாறு பகுதியை சேர்ந்த 4 வாலிபர்களும் மீண்டும் தகராறு செய்து 2 மோட்டார் சைக்கிளையும், ஒரு காரையும் உடைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பினரும் மோதி கொண்டனர். இதில் அருண் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    மேலும் இந்த மோதலில் காயமடைந்த ஹரி, வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நாகை எஸ்.பி. விஜயகுமார், சீர்காழீ டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து மீனவ கிராமங்களில் மோதலை தடுக்கும் வகையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 30 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    2 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் மோதி கொண்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லிக்குப்பம் அருகே காணும் பொங்கலையொட்டி மது குடிக்கும் தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ளது கீழ்அருங்குணம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 35). இவர் அண்ணா கிராமம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (50). அ.தி.மு.க. பிரமுகர்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே தேர்தலையொட்டி முன்விரோதம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருபிரிவுகளாக பிரிந்து அடிக்கடி மோதி வந்தனர்.

    காணும் பொங்கலையொட்டி நேற்று இரவு தாமோதரன் தரப்பினரும், சுபாஷ் தரப்பினரும் தனித்தனியாக மது குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களுக்கிடையே திடீரென்று வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இருதரப்பினரும் கத்தி, கம்பு, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.

    இந்த தாக்குதலில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தங்கவேல் (37), முத்துக்குமரன் (30), சுபாஷினி (10), ஞானவேல் (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    சுபாஷ் தரப்பை சேர்ந்த மணிகண்டன், சேதுபதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 6 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த தங்கவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மணிகண்டனை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த மோதல் சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கீழ்அருங்குணம் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் 10 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மது குடிக்க பணம் தராததால் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த பொன்னி (24) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2½ வயதில் பிரத்தீப் ராஜ் என்ற மகனும், 4 மாதத்தில் மீரா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். மதியழகனுக்கு குடிபழக்கம் இருந்தது.

    அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்தார். மேலும் சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் பொன்னிக்கும் மதியழகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக மதியழகன் வேலைக்கு செல்லவில்லை. நேற்று மாலை அவர் கோபத்துடன் வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மதியழகன் தொட்டிலில் தூங்கிகொண்டிருந்த கைகுழந்தை மீராவை தூக்கினார். பின்பு குழந்தையின் கால்களை பிடித்துக் கொண்டு நெல் கதிர் அடிப்பதுபோல் சுவற்றில் ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் மதியழகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    உயிருக்கு போராடிய குழந்தை மீராவை தூக்கிக் கொண்டு தாய் மற்றும் உறவினர்கள் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் பொன்னி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    பின்பு குழந்தை கொலை செய்யப்பட்டது குறித்து மரக்காணம் போலீசில் பொன்னி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) சரவணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய மதியழகனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அப்போது மதியழகன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    காணும்பொங்கலையொட்டி நண்பர்களுடன் மதுகுடிக்க விரும்பினேன். இதற்காக வீட்டுக்கு சென்று மனைவி பொன்னியிடம் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டேன். ஆனால் அவர் மதுவாங்க பணம் தர மறுத்து விட்டார். இதனால் அவள் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    உடனே நான் தொட்டிலில் தூங்கிகொண்டிருந்த கைகுழந்தை மீராவை தூக்கி சுவற்றில் ஓங்கி அடித்தேன். இதில் குழந்தை இறந்து விட்டது.

    இவ்வாறு மதியழகன் போலீசில் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்ற குழந்தையை தந்தை சுவற்றில் அடித்து கொலை செய்த சம்பவம் மரக்காணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் மட்டும் ‘டாஸ்மாக்’ மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டின் விற்பனையை விட 10 சதவீதம் அதிகம் ஆகும். #Tasmac
    சென்னை:

    பொதுவாக விழாக்கள் என்றாலே மதுப்பிரியர்கள் உற்சாகமாகி விடுவது வழக்கமான ஒன்றாகும். அதுவும், தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் விழாவை கொண்டாடுகின்றனர்.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை விடுமுறை கிடைத்தது. இதனால், இந்த ஆண்டு மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

    இதன்காரணமாக பொங்கல் விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 5,140 மதுபான கடைகள் மூலம் போகி, பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் ஆகிய 3 நாட்களில் மட்டும் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது.

    இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு போகி பண்டிகை(14-ந்தேதி) அன்று 143 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்தது. கடந்த ஆண்டு இந்த விற்பனை 133 கோடியாக இருந்தது. அதேபோன்று பொங்கல் தினத்தன்று(15-ந்தேதி) 209 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது. திருவள்ளுவர் தினமான 16-ந்தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    காணும் பொங்கல் தினமான 17-ந்தேதி(நேற்று) மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. இதனால், இந்த ஆண்டு மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டும். இது, கடந்த ஆண்டு விற்பனையை விட 10 சதவீத உயர்வு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. தீபாவளி பண்டிகையை விட பொங்கல் பண்டிகையின் போது கூடுதலாக ரூ.175 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
    கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர்.
    கடலூர் முதுநகர்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் வீடுகளில் பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். நேற்று மாட்டுப்பொங்கல் திருவிழா நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காணும் பொங்கல் விழா நடக்கிறது. இந்த விழாவையொட்டி பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுகள் சமைத்து குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடுவார்கள்.

    இதற்காக நேற்று கடலூர் துறைமுகம், அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் மீன் மார்க்கெட், முதுநகர் மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர். ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.600, சங்கரா ரூ.350, ஷீலா ரூ.300, கனவா ரூ.150-க்கு விலை போனது. மற்ற மீன்கள் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்பட்டன.

    நேற்று கிருத்திகை என்பதால் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுக்கு பதிலாக சைவ உணவுகளே சமைத்தனர். இருப்பினும் காணும் பொங்கலுக்காக முன்கூட்டியே சிலர் மீன்களை வாங்கிச்சென்றதையும் காண முடிந்தது. இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்ததாலும் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டுக்கு வெளியே சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு மீன்கள் வாங்க சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று (வியாழக்கிழமை) காணும் பொங்கல் முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். இதனால் பெரும்பாலான பொதுமக்கள் நேற்றே மீன்களை வாங்கிச்சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி வர தொடங்கி விட்டனர்.
    திருச்சி அருகே கல்லூரி மாணவர் கொலையில் 2 வாலிபர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். 4 பேரையும் தூக்கில் போடவேண்டும் என காதலி ஆவேசமாக கூறியுள்ளார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள திண்ணக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தமிழ்வாணன் (வயது 23). இவரும் அருகில் உள்ள கோதண்டகுறிச்சியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி 15-ந்தேதி மாலை இருவரும் கொணலை அருகே உள்ள திருப்பட்டீஷ்வரர் கோவில் மற்றும் மணல் மாதா கோவிலுக்கு சென்றனர். பிறகு வரும் வழியில் சிறுகனூரில் இருந்து லால்குடி செல்லும் சாலையில் தச்சங்குறிச்சி காட்டுப்பகுதியை பார்த்ததும் ரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு காட்டுப்பகுதிக்குள் சென்று தனிமையில் இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் காட்டுப்பகுதிக்குள் மோட்டார் சைக்கிள் தனியாக நிற்பதை பார்த்த அந்த வழியாக வந்த 4 பேர் கும்பல் தமிழ்வாணன் அவரது காதலியுடன் தனிமையில் அறிந்து அந்த மாணவியை அனுபவிக்க துடித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்வாணன் முதலில் அவர்களை கெஞ்சி கேட்டு விட்டு விடும்படி கேட்டுள்ளார். அந்த மாணவியும் ஒன்றும் செய்யாதீர்கள், நாங்கள் இங்கிருந்து போய்விடுகிறோம் என கெஞ்சினார். ஆனாலும் அந்த 4 காம கொடுரன்களும் மாணவியை பலாத்காரம் செய்தனர்.

    தமிழ்வாணன் அவர்களை தடுத்தார். அப்போது அவர்கள் தமிழ்வாணனை தாக்கினர். தமிழ்வாணன் விடாமல் அவர்களுடன் போராடவே அவர் எழுந்து வராதபடி காலில் கத்தியால் குத்தினர். இதனால் தமிழ்வாணன் அலறினார். அதன்பிறகு அந்த கும்பல் மாணவியை பலாத்காரம் செய்துள்ளது.

    மாணவி காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டுள்ளார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இரவு 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் உதவிக்கு யாரும் வராததாலும், அந்த மாணவி மற்றும், தமிழ்வாணன் காலில் கத்தி குத்து ஏற்பட்டதாலும் இருவராலும் உடனே அங்கிருந்து வெளியே வரமுடியவில்லை. இதற்கிடையே காலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறிதால் தமிழ்வாணன் மயக்கம் அடைந்தார். அதன்பிறகு மாணவி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். சுமார் 5 மணி நேரம் காட்டுக்குள் உதவி கிடைக்காமல் தவித்துள்ளனர்.

    ஆம்புலன்சில் தமிழ்வாணனை லால்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதிக அளவிலான ரத்தம் வெளியேறிவிட்டதால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். திருச்சி அருகே காட்டுக்குள் கல்லூரி மாணவரை குத்தி கொன்று விட்டு அவரது காதலியை 4 பேர் சூறையாடிய சம்பவம் பொங்கல் நாளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்தை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    சம்பவம் நடந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாகும். மது அருந்தும் கும்பல், அழகிகளை அழைத்து வந்து ஜாலியாக இருக்கும் கும்பல் இந்த காட்டுப் பகுதியை பயன் படுத்தி வந்தனர். கோவிலுக்கு போய்விட்டு வந்த தமிழ் வாணனும் அவரது காதலியும், காட்டுப்பகுதியை பார்த்ததும் சிறிது நேரம் ஜாலியாக இருந்து விட்டு செல்ல நினைத்து காமுகர்களிடம் மாட்டிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டுள்ளார்.

    தனிப்டை போலீசார் அந்த சுற்றுவட்டார பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மாணவரை கொன்று அவரது காதலியை சீரழித்த கும்பல் அவர்களை கோவிலில் இருந்தே பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதை அறியாத காதல் ஜோடி காட்டுப்பகுதிக்குள் ஒதுங்கியுள்ளனர்.

    அந்த கும்பல் மாணவியை அடையமுயன்றுள்ளது. இதற்கு இடையூறாக தமிழ்வாணன் இருந்ததால் அவர் அருகில் வராமல் இருக்க காலில் குத்தியுள்ளனர். எனவே 4 பேரும் தினமும் அதே பகுதியில் சுற்றித்திரியும் நபர்களாக இருக்கலாம். அல்லது தமிழ்வாணனுக்கு தெரிந்த நபர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக நடத்திய விசாரணையில் சிலர் மீது சந்தேகம் வந்துள்ளது. இது தொடர்பாக 2 பேர் நேற்று போலீசில் சிக்கினர். அவர்களிம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர்கள் பிடி படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவம் குறித்து கூறும்போது கண்ணீர்விட்டு கதறினார். 4 பேரையும் பிடித்து தூக்கில் போடும்படி கண்ணீர் விட்டார். நடந்த சம்பவத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. ஆவேசத்துடனும், அழுகையிடனும் காணப்படும் அவரை பெண் போலீசார் தேற்றி வருகிறார்கள்.

    ஸ்ரீரங்கம் கொள்ளிடம் காவிரி ஆற்றங்கரையில் தோழியுடன் சென்ற மாணவி 4 பேரால் சீரழிக்கப்பட்டார். அதே பகுதியில் சில வருடத்துக்கு முன்பு அழகியை அழைத்துச் சென்ற கண்டக்டர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தது.

    ஆனாலும் காதல் ஜோடிகளும் விழிப்புணர்வின்றி செயல்படுவதால் இதுபோன்ற ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று போலீசார் வருத்தப்பட்டனர்.

    தருமபுரி அருகே பொங்கல் நாளில் உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்த கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரியை அடுத்த செட்டிக்கரை அருகே உள்ள பள்ளக்கொல்லை பகுதியை சேர்ந்த ராஜாமணி மகன் அர்ஜுணன் (வயது 25). இவர் பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக இருந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.

    ஊருக்கு வந்த இவர் இங்கும் குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்த இவர் பொங்கல் நாளான நேற்று மாலை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்த அர்ஜுணனுக்கு பிரியங்கா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
    பொங்கல் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் சென்னை திரும்ப வசதியாக நாளை (17-ந் தேதி) முதல் 3776 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. #Pongal
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட அரசு சிறப்பு பஸ்களை இயக்கியது.

    கடந்த 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 13,871 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டன.

    இதில் 7 லட்சத்து 17 ஆயிரத்து 392 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 785 பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.39 கோடியே 2 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 3 நாட்கள் பஸ்கள் இயக்கியதன் முலம் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.

    இந்த வருடம் பொங்கல் பண்டிகை விடுமுறையை கொண்டாட ஏதுவாக கூடுதலாக ஒருநாள் அரசு விடுமுறை அளித்ததால் வெளியூர்களுக்கு அதிகளவு மக்கள் பயணம் செய்துள்ளனர்.

    அரசு போக்குவரத்து கழக பஸ்கள் தவிர ஆம்னி பஸ்கள், ரெயில்களிலும் பல லட்சம் பேர் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்றனர்.



    வெளியூர் சென்ற பயணிகள் சென்னை திரும்ப வசதியாக நாளை (17-ந் தேதி) முதல் 3776 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு வருகின்றன.

    நாளை காணும் பொங்கல் கொண்டாடி விட்டு பிற்பகல் முதல் பயணத்தை தொடங்குவார்கள். 18-ந்தேதி பள்ளி, கல்லூரிகள் தொடங்குவதால் வெளியூர் சென்றவர்கள் இன்று முதலே சென்னை திரும்ப தொடங்கி விட்டனர்.

    சென்னை நோக்கி வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை போலீசாரும் போக்குவரத்து கழக அதிகாரிகளும் செய்துள்ளனர்.

    வெளியூர்களில் இருந்து நாளை முதல் 20-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆந்திரா மார்க்கத்தில் இருந்து வரக்கூடிய பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்திற்கும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக வருகின்ற பஸ்கள் கே.கே.நகர் பஸ் நிலையத்திற்கும் வந்து சேரும்.

    நாளை காலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தால் வேலூர் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் பூந்தமல்லியில் நிறுத்தப்படும். மற்றபடி அனைத்து பஸ்களும் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Pongal
    தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஸ்டைலிஷ் இயக்குனர் நடிக்க இருக்கிறார். #DulquerSalmaan #HappyPongal2019
    துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங் பெரியசாமி இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஸ்டைலிஷான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

    இதுகுறித்து இயக்குனர் தேசிங் பெரியசாமி கூறும்போது, ‘கௌதம், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்கு மெசேஜ் அனுப்பி, அவரை நடிக்க கேட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் நான் நம்பிக்கை இழந்தபோது, அவர் பொதுவாக அவரை சந்திக்க அழைத்தார். நாங்கள் கதையைத் தவிர்த்து வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசினோம். ஆனால் கடைசியாக, அவர் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தக் கட்டத்தில் கனவு மெய்ப்பட ஆரம்பமானது, இப்போது ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது" என்றார்.



    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை ரிது வர்மா ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் நிரஞ்சனி அகத்தியன் நடிகையாக அறிமுகமாகிறார். ரக்‌ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். #DulquerSalman #HappyPongal2019
    கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. #KadaramKondan #HappyPongal2019
    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் `கடாரம் கொண்டான்'. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் இரவு விருந்தை முடித்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதாக தெரிவித்தார்.

    தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார். இந்த டீசர் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவை செய்துள்ளார்கள். படத்தை வருகிற ஏப்ரல் 2019-ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். #KadaramKondan #HappyPongal2019
    ×