search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    தமிழக சட்டசபைக்கு தான் சென்றால் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வரமாட்டேன் என்று மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #TNAssembly #MakkalNeedhiMaiam
    சென்னை:

    மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கல்லூரி மாணவ மாணவிகளின் அமைப்பான ரோட்ட ராக்ட் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    நான் வித்தியாசமான, வினோதமான அரசியல் வாதி. நான் ஒரு திறந்த புத்தகம். அரசியலில் எதுவும் சரியில்லை அதை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தாலே நீங்கள் அரசியலுக்குள் வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அரசியல் நம் வாழ்க்கையின் ஒரு அங்கம். தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    அரசியல் மாணவர்களுக்கு தேவையில்லை என்று சொல்வதை ஏற்க மாட்டேன். மாணவர்களைப்போல நாட்டில் அனைவருக்கும் அரசியல் தேவை. சாதி பெருமை பேசக் கூடாது என எனக்கு வீட்டில் கற்றுக் கொடுத்தார்கள். அதற்காக பெருமைப்படுகிறேன். சாதி பெருமை பற்றி பேசாமல் இருந்தாலே கலவரம் குறையும்.

    உங்கள் முகத்தினை பார்க்கும் போது நல்லவர்கள் தலைவராக தெரியாவிட்டால் கெட்டவர்கள் தலைவராக தெரிவார்கள்.

    முதலமைச்சர் என்பவர் மக்களுக்காக உழைக்கும் அதிகாரி. ஆட்சியில் இருப்பவர்கள் 5 ஆண்டுகள் சரியாக ஆட்சி செய்கிறார்களா? என்பதை கவனியுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால் நிச்சயம் வாக்களியுங்கள்.

    சமூக வலைதளங்களில் நீங்கள் குரல் கொடுப்பதே அரசியல்தான். நேரத்தை வீணடிப்பதற்கு பதில் வாக்குச்சாவடி செல்லுங்கள். வாக்களியுங்கள். அரசியலில் என்னையும், என்னுடைய நேரத்தையும் முதலீடு செய்துள்ளேன்.



    அரசியலுக்கு வந்ததால் 4 படங்கள் நடிப்பதற்கு பதில் 1 படத்தில் மட்டும் நடிக்கிறேன். சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன்.

    வாழ்க்கையில் சிறு சிறு விசயங்களில் விட்டுக் கொடுத்து போக வேண்டும். அரசியல் மாண்பின் கடைசி கோட்டைச்சுவர் மாணவர்கள். தமிழகத்தில் அரசியல் என்னும் குழந்தை தடுமாறுகிறது. அதை கவனிக்க வேண்டும். மாணவர்களால் இதை சரிசெய்ய முடியும்.

    தமிழன் என்பது தகுதி அல்ல. ஒரு விலாசம். தமிழன் என்ற தகுதியை வைத்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகம் இல்லாமல் டெல்லி ஆட்சி அமையாது. டெல்லி இல்லாமல் தமிழகம் ஆட்சி அமைக்க நினைக்க கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #KamalHaasan #TNAssembly #MakkalNeedhiMaiam
    தி.மு.க.வை விட்டு வெளியே வந்தால் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் தயார் என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #Snehan #Congress
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 12 இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கவிஞர் சினேகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட நினைத்தது. ஆனால் மக்கள் நீதி மய்யம் நினைத்தது நடக்கவில்லை. எதிர்பார்த்தவாறு கூட்டணி அமையவில்லை.

    தற்போதும் தி.மு.க.வை விட்டு காங்கிரஸ் வெளியேறினால் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளது. இந்த தேர்தலில் ஊழல் கட்சியான பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் விருப்பம்.

    பா.ஜ.க.வோடு காங்கிரஸ் ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரஸ் ஊழல் கட்சி கிடையாது. தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறியவர் டி.டி.வி. தினகரன். அவர் அரசியல் ஆதாயத்திற்காக வெளி வந்து கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சி எந்த பயனையும் தராது.

    பா.ஜ.க.வை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. கோபத்தின் வெளிப்பாடுதான் பா.ஜ.க. எதிர்ப்பு நிலை.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #Snehan #Congress
    நடிகர் கமல்ஹாசன் 16 வயதில் இருந்தே பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவர் என அவரது சகோதரர் சாருஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #Charuhasan
    திருவனந்தபுரம்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன்.

    80 வயதுடைய சாருஹாசன் நடிகராகவும் உள்ளார். இவர், கேரள மாநிலம் கொச்சியில் நடந்த சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்து கொண்டார். அங்கு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில், அவர் கமல்ஹாசன் பற்றியும், கேரளாவின் முன்னணி நடிகர் பிரேம் நசீர் குறித்தும் தமிழக-கேரள மக்களின் சினிமா மோகம் பற்றியும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

    கேரள மக்கள் கல்வியில் சிறந்தவர்கள். பள்ளிகளில் சென்று படித்தவர்கள். கல்வியில் சிறந்து விளங்கியதால் மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த பிரேம் நசீர் கேரளாவின் முதல்-மந்திரியாக ஆக முடியவில்லை.

    கேரள மக்களுக்கு இருந்த கல்வி அறிவே இதற்கு காரணமாகும். கேரள மக்கள் பள்ளிகளுக்கு சென்றபோதும், பெரும்பாலான தமிழர்கள் சினிமா என்னும் பள்ளிக்குதான் சென்றார்கள். அரசியல் கலாச்சாரத்தில் தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையேயான வித்தியாசத்திற்கு இதுவே காரணமாகும்.

    நான், சினிமா உலகில் நுழைந்தபோது இந்தியா முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்கள் இருந்தன. இதில் 3 ஆயிரம் தியேட்டர்கள் தமிழ்நாட்டில் இருந்தது. மொத்த இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தென் மாநிலங்களில்தான் சினிமா தியேட்டர்கள் அதிகமாக இருந்தது.

    கர்நாடகாவில் 1,400 தியேட்டர்களும், கேரளாவில் 1,200 தியேட்டர்களும் இருந்தன. கேரளாவில் 1,200 தியேட்டர்கள் இருந்தாலும் இங்கு அதற்கேற்ப பள்ளிக் கூடங்களும் இருந்தது.

    கல்வி கற்பதன் மூலமே வேற்றுமைகளை களைய முடியும். இதுவே கேரளாவின் முன்னேற்றத்திற்கு காரணமாகும். தமிழ் நடிகர்களை காட்டிலும் மலையாளத்தில் மோகன்லாலும் மம்முட்டியும் முன்னணி நடிகர்களாக திகழ்கிறார்கள்.

    எனது சகோதரரும், நடிகருமான கமல்ஹாசன் ஒரு நாத்திகர். பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவர். அவரது 16 வயதில் இருந்து பெரியாரின் ரசிகராக மாறியவர்.

    கடவுள் மிகப்பெரியவர் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. அதே நேரம் என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த நான் விரும்புவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #Charuhasan
    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் டுவிட்டரில் சாதி, மதம் அற்றவர் என சான்று பெற்ற வழக்கறிஞர் சினேகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். #KamalHaasan #NoCasteNoReligion
    சென்னை:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன் பேட்டையை சேர்ந்தவர் சினேகா. வழக்கறிஞரான இவர் ‘சாதி, மதம் அற்றவர்’ என்கிற சான்றிதழை போராடி பெற்று இருக்கிறார்.

    கடந்த 2017-ம் ஆண்டு சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்குமாறு விண்ணப்பித்திருந்தார். பல்வேறு விசாரணைக்கு பின்னர் அவருக்கு திருப்பத்தூர் சார்-ஆட்சியாளர் பிரியங்கா பங்கஜம் பரிந்துரையின் பேரில் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, ‘சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழை வழங்கினார்.

    இது குறித்து சினேகா கூறும்போது, “பள்ளியில் முதல் வகுப்பு சேர்க்கையின் போது என்ன சாதி என்று கேட்டனர். அப்போது எனக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை என்று பெற்றோர் கூறினர்.

    பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் சாதி, மதம் குறிப்பிட்டதில்லை. இந்தியர் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கும். எனது சகோதரிகள் இருவரின் பிறப்பு சான்றிதழ், பள்ளி- கல்லூரி சான்றிதழ்களிலும் இந்தியர் என்று மட்டுமே குறிப்பிட்டு இருக்கும்” என்றார்.

    இந்தியாவிலேயே முதன்முறையாக இப்படி ஒரு சான்றிதழ் வாங்கி இருப்பதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. ‘சாதிய அமைப்பிற்கு அடையாளமாக சாதி சான்றிதழ் இருப்பதை போல சாதி,மதம் அற்றவர்களின் வாழ்விற்கு ஒரு அடையாளமாக இந்த சான்று அமைந்திருப்பதாகவும், என்ன சாதி என்று சொல்வதற்கே உரிமை இருக்கும் நிலையில், சாதி இல்லை, மதம் இல்லை என்று சொல்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்கிறாய்’ என்றும் பல்வேறு தரப்பிலிருந்து சினேகாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.



    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் டுவிட்டரில் வழக்கறிஞர் சினேகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். ‘தமிழ் மகள் சினேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மதம் மாறுவதைவிட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா... புதுயுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம்பிடிப்போர்க்கு இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே. நிச்சயம் நமதே’’ என்று கமல்ஹாசன் ‘டுவீட்’ செய்துள்ளார். #KamalHaasan #NoCasteNoReligion
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தமாகி இருக்கிறார். #Indian2 #KamalHaasan #RJBalaji
    இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. அதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கமல்ஹாசனுடன் நடிக்க காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்துக்கு அக்‌‌ஷய் குமார், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலரை ‌ஷங்கர் அணுகியதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை யாருமே அந்த கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. தற்போது கமலுக்கு வில்லனாக நடிக்க அஜய் தேவ்கன் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



    தனக்குப் பரிச்சயம் இல்லாத மொழிகளில் நடிப்பதில்லை என்பதால் மட்டுமே முடியாது என அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். `இந்தியன்’ முதல் பாகத்தில் சேனாதிபதியாக நடித்த கமல் இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் தொடர்கிறார்.



    சேனாதிபதியைப் பிடிக்க முயலும் போலீஸ் வேடத்தில் நடித்த நெடுமுடி வேணுவும் அதே வேடத்தில் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். நெடுமுடி வேணுவின் உதவியாளராக இருக்கும் போலீஸ் வேடத்தில்  ஆர்.ஜே.பாலாஜி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Indian2 #KamalHaasan #RJBalaji

    பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா-பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வைத்திலிங்கம் எம்பி தெரிவித்துள்ளார். #vaithilingammp #admk #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க. ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் ஒரு அணியும், தி.மு.க.-காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகிறது.

    இதேபோல் டி.டி.வி. தினகரன் தனி அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனியாக தேர்தலை சந்திக்க உள்ளார்.

    ஆளும் கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளை சேர்க்க ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கூட்டணி குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினருமான வைத்திலிங்கம் எம்.பி.யிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே:- அ.தி.மு.க. கூட்டணி பேச்சு வார்த்தை எந்த அளவில் உள்ளது. பாரதீய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறதா?

    ப:- கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பேச்சு வார்த்தை முடிந்தவுடன் அறிவிப்பு வரும்.

    கே:- அ.தி.மு.க. எந்தெந்த கட்சிகளுடன் பேசி வருகிறது?

    ப:- நீங்கள் சொன்ன கட்சிகளுடன் (பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க.) பேசி வருகிறோம்.

    கே:- குறிப்பாக பாரதீய ஜனதா, கூட்டணி பேச்சு வார்த்தையில் வலுவாக உள்ளதா? அ.தி.மு.க. இதில் மவுனமாக உள்ளதே? மவுனத்துக்கான காரணம் என்ன?


    ப:- கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே இது குறித்து கூட்டணி பேச்சு வார்த்தை ரகசியமாக நடப்பதாக சொல்லி உள்ளார். பேச்சுவார்த்தை முடிந்தவுடன் வெளிப்படையாக சொல்லி விடுவார்கள்.

    கே:- இதில் காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

    ப:-இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில் கால தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இவ்வளவுதான் சொல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு. தி.க. கட்சிகளுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளும் இடம் பெறும் என தெரிகிறது. #vaithilingammp #admk #parliamentelection

    திமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பு இல்லை. அரசியலில் கமல்ஹாசன் செய்திருப்பது மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். #KSAlagiri #KamalHaasan
    கடலூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கே.எஸ்.அழகிரி, அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த கீரப்பாளையத்துக்கு நேற்று மாலை வந்தார். அப்போது காங்கிரசார் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

    அதனை தொடர்ந்து கே.எஸ்.அழகிரி, கடைவீதியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர், கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். பின்னர் அவர், சேத்துக்கால் செல்லியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து திருப்பணி நத்தம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு கே.எஸ்.அழகிரி சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பொதுமக்கள் எங்களது கூட்டணிக்கு மகத்தான ஆதரவு அளிக்க வேண்டும்.

    இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியை கமல்ஹாசன் விமர்சித்து உள்ளார். இதனால் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பு இல்லை. அரசியலில் கமல்ஹாசன் செய்திருப்பது மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும்.

    காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் பிரதமர் மோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வது குறித்து அறிவிக்காமல் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக கூறி இருக்கிறார்.

    மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்கின்ற ஆற்றல் மோடிக்கு கிடையாது. சர்வாதிகார ஆட்சியில் ஜனநாயகவாதிகள் மீது வழக்கு பதிவு செய்வதும், சிறைக்கு அனுப்புவதும் தொடர்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #KSAlagiri #KamalHaasan

    அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் தலைவர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் இன்று திருமண விழாவில் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடினர். #StalinMeetsKamal #TNPolitics
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்க்க காங்கிரஸ் விரும்புவதாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே தி.மு.க. பற்றி கருத்து தெரிவித்த கமல், அழுக்கு மூட்டை கட்சி என்றும் அதனுடன் கூட்டணி இல்லை என்றும் கருத்து தெரிவித்து உள்ளார். இதனால் கமலை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. விரும்புமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அழகிரி கூறும்போது, காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் கமல்ஹாசனை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி  பேட்டி அளிக்கும்போது மேலும் கமல் தங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்து இருந்தார்.



    அதன்பின்னர், பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்ததாகவும், கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும்போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது தன் கவனத்திற்கு வரவில்லை என்றும் கூறினார் அழகிரி. அத்துடன், கமல் தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை கண்டிப்பதாகவும் கூறினார்.

    திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும். மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில் திமுக கட்சி நாளேடான முரசொலியில் கமலை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. பூம் பூம் காரனின் மாடு என்ன செய்து விடும் என்ற தலைப்பில் அந்த கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில்  சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கமல் ஆகியோர் பங்கேற்றனர். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி ஸ்டாலின், கமல்ஹாசன் அருகருகே அமர்ந்து சகஜமான முறையில் உரையாடினர். இது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.  #StalinMeetsKamal #TNPolitics

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரையில் காரசாரமான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது. #DMK #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் தி.மு.க. ஊழல் கட்சி என்றும், அழுக்கு பொதி மூட்டை என்றும் குற்றம் சாட்டி இருந்தார். இதன் காரணமாகவே தி.மு.க. கூட்டணியில் இடம்பெற விரும்பவில்லை என்றும் கமல் தெளிவுபடுத்தினார். இது தி.மு.க. தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கமலை விமர்சித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தது. தி.மு.க. எம்.எல்.ஏ.வும், நடிகருமான வாகை சந்திரசேகர், கமல்ஹாசனை கடுமையாக சாடி இருந்தார்.

    இந்த நிலையில் கமல் மீது தி.மு.க. மீண்டும் பாய்ந்துள்ளது. இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியாகி உள்ள கட்டுரையில் கமல் மீது காரசாரமான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    கலைஞானி கமல்ஹாசனின் தோல் உரியத் தொடங்கி உள்ளது.

    திரையில் பல்வேறு வேடங்களைக் காட்டினார். நடிப்பாற்றல் என்று மகிழ்ந்து அவரைப் பாராட்டினோம். இப்போது அரசியல் பிரவேசம் நடத்தி, அதேபோல வேடங்களை மாற்றி வித்தை காட்டத் தொடங்கி உள்ளார். ஜென்மத்தோடு பிறந்ததை எதைக் கொண்டும் சீர் செய்ய முடியாது என்பார்கள்.

    உதாரணமாக, ‘நாய் வாலை நிமிர்த்த இயலுமா?- என்று கேட்பார்கள். ஆனால், அதிசயமாக நிமிர்ந்து நின்ற வாலைப் பார்த்து, வா.ராவைப் போல இதோ ஒரு அதிசய மனிதர் தோன்றி இருக்கிறார் என வியந்தோம்.

    ஆனால், இப்போதுதான் வாலில் கட்டிய சிம்பு விலகியதால் வால் மீண்டும் வளைந்துள்ளது.

    ஊடக விவாதங்களிலும், சில அரசியல் மேடைகளிலும் பேசி வரும் தோழர் மதிமாறன், கமல் அரசியல் வேடம் கட்டிய நாளிலிருந்து, இவர்களெல்லாம் பி.ஜே.பி.யால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை சுட்டிக்காட்டி வருகிறார். நம்மில் சிலர் கூட நினைத்தோம், ஏன் நாம் கூட எண்ணினோம். கமல்ஹாசனை தேவையின்றி ஏன் சீண்ட வேண்டும். திராவிட இயக்க உணர்வோடு ஒத்துப் போகும் அவரை நோக்கி, ஏன் இது போன்ற குண்டூசித் தாக்குதலை நடத்த வேண்டும் என்றெல்லாம் நம்மிடையே கருத்துக்கள் நிலவின.

    மதிமாறன் போன்றோர் கொண்ட கருத்து, எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை நிரூபித்திடும் வகையில், கலைஞானி கமல்ஹாசனின் இன்றைய பேச்சு துல்லியமாக அமைந்துள்ளது. அரிதாங்கள் மேல் உடலை மாற்றலாம். ஆனால், உள்ளுணர்வை மாற்ற இயலாது என்பதற்கு சிறப்பான எடுத்துக் காட்டாகி விட்டார் கமல்ஹாசன்.


    மூட்டைகளைச் சுமக்கும் பிராணிக்கு கனம் தெரியுமே தவிர, அதனுள் இருப்பது என்ன என்பதை உணர முடியாது. மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாது. எஜமான் தூக்கி வைப்பதைச் சுமந்து செல்வது தான் அதன் வழக்கம்.

    சில பிராணிகள் கூட மோப்பத்தில் எஜமானை அறிந்து விசுவாசத்தில் வால் ஆட்டும். மூட்டை சுமக்கும் பிராணியோ கோல் தூக்கியவனை எல்லாம் எஜமானாகக் கருதிச் செல்லும். கோல் தூக்கி மிரட்டிய எஜமானுக்கு பயந்து கோலோச்சப் புறப்பட்ட கமல்ஹாசனுக்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாது போய் விட்டது. பாவம், அவரைச் சொல்லிக் குற்றமில்லை, கட்சி தொடங்கி பல மாதங்கள் கடந்த பின் இப்போதுதான் தி.மு.க. ஊழல் கட்சியாகக் காட்சி தருகிறது அவருக்கு.

    ‘பத்மஸ்ரீ’ பட்டம் பெற்ற போதும், பாராட்டு விழாவுக்கு அன்றைய முதல்வர் கலைஞரை அழைத்த போதும், தி.மு.க. ஊழல் கட்சியாகத் தோன்றவில்லை.

    மருதநாயகம் படப்பிடிப்பைத் தொடங்க அன்றைய தி.மு.க. முதல்வரை அழைத்தபோது, ஊழல் தெரியவில்லை. ஏன் அவ்வை சண்முகியாக வேடம் கட்டி, தலைவர் கலைஞரைச் சந்தித்து ஆசிபெற்ற போதும் ஊழல் தெரியவில்லை.

    ஆனால் இப்போது திடீரென தி.மு.க. ஊழல் கட்சியாக அவர் முன் உருவெடுத்திருக்கிறது என்றால், என்ன காரணம்? ஆட்சியில் இருந்த போதெல்லாம் ஊழல் கட்சியாகத் தோன்றாத ஒன்று, ஆட்சி அதிகாரத்தை இழந்த 7 ஆண்டுகள் முடிந்தபின் திடீரென ஊழல் கட்சியாக கமலுக்குக் காட்சி அளிக்கிறது என்றால், அது அவரது சொந்தக் கருத்தாக இருக்க முடியுமா?

    சினிமா பாணியில் சொல்ல வேண்டுமெனில், நாம் பல படங்களில் பார்த்த காட்சி மூலமே இதனை விளக்கிட இயலும்.

    நாயகனின் நண்பன் பாத்திரத்தில் தோன்றுபவன், திடீரென நாயகனுக்கு எதிராகப் பேசுவான். நாயகன் குற்றவாளி என்பான். படம் பார்ப்பவர்கள் திகைப்பார்கள். என்ன இப்படி நேரம் பார்த்து காலை வாரி விட்டு விட்டானே எனப் படம் பார்ப்பவர்கள் எல்லாம் திகைத்திருக்க, அதுவரை இரு பாத்திரங்களை மட்டும் ‘குளோசப்’பில் காண்பித்த கேமரா பின் நோக்கிச் செல்லும்- அப்போது மூன்றாவது பாத்திரம் ஒன்று, நாயகனின் நண்பனுக்குப் பின்னால் அவர் முதுகின் மீது கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ வைத்து அழுத்திக் கொண்டிருப்பது காண்பிக்கப்படும்.

    அதே நிலைதான், பின்னால் பி.ஜே.பி.யின் துப்பாக்கி அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கி உள்ளார் கலைஞானி. ஆனானப்பட்டதாகக் கருதப்பட்ட புரட்சி நடிகர்கள் கூட அமலாக்கத்துறை, வருமானத் துறை மிரட்டலுக்குப் பயந்து, அவர்களை வளர்த்த கட்சியின் மார்பில் பாய்ந்த வரலாற்றைத் தெரிந்தவர்கள் நாம். “வளர்த்த கடா மார்பில் பாய்ந்த தடா” - எனத் தன் வெண்கலக் குரலால் மறைந்த நாகூர் ஹனீபா பாடிய பாடல் கேட்டிருப்போம்.

    அதனையே, எதிர் கொண்டு போராடி இந்தப் பேரியக்கத்தைக் காப்பாற்றி வந்தவர்கள் நாம். நம்மை இந்த “பூம் பூம்”காரனின் மாடு என்ன செய்து விடும்.

    தலைவர் கலைஞர் அடிக்கடி கூறுவது போல, புலி வேட்டைக்குச் செல்பவன், இடையில் பன்றிகள் வீசும் சேற்றைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. அது நமது கவனத்தை, குறியை திசை திருப்பும் செயலாகும். அவற்றை அலட்சியப்படுத்தி லட்சியத்தை எட்டி, பீடு நடைபோடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MakkalNeedhiMaiam #KamalHaasan
    தேவர் மகன் படப்பிடிப்பு நடத்தப்பட்ட சிங்காநல்லூர் அரண்மனைக்கு நடிகர் கமல்ஹாசன் சென்றுள்ளார். #Kamal #KamalHaasan #DevarMagan
    கமல்ஹாசன், சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தேவர் மகன். இந்த படத்தில் ஒரு பெரிய அரண்மனை காட்டப்படும்.

    பொங்கல் பண்டிகையின் போது கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு சென்றிருந்த கமல், தேவர் மகன் படம் எடுக்கப்பட்ட ‘சிங்கா நல்லூர் அரண்மனைக்கு’ செல்ல வேண்டும் என விரும்பியுள்ளார். ஆனால் நேரம் இல்லாததால் அங்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.



    இதையடுத்து தற்போது மீண்டும் பொள்ளாச்சி சென்றுள்ள அவர், தேவர் மகன் எடுத்த அந்த அரண்மனைக்குச் சென்றுள்ளார். 27 வருடங்களுக்குப் பிறகு அந்த இடத்தை சுற்றிப்பார்த்துள்ளார்.

    பின்னர் அந்தப் படம் உருவாக்கப்பட்டபோது நடிகர் சிவாஜியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும் படம் பற்றிய பழைய நினைவுகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் பகிர்ந்துள்ளார்.



    கமலின் இந்தப் புகைப்படங்கள் வெளியான பிறகு ’தேவர் மகன் 2’ உருவாக உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் இந்த செய்தி மறுக்கப் பட்டுள்ளது. இருந்தும் அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    திமுகவை குறித்து விமர்சித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri #KamalHaasan
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.
     
    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்க்க காங்கிரஸ் விரும்பியது.

    இதற்கிடையே, காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியிருந்தார்.

    இந்நிலையில், திமுகவை குறித்து விமர்சித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கேஎஸ் அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



    பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன். கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும்போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது என் கவனத்திற்கு வரவில்லை.

    அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக மீதான விமர்சனம் தேர்தல் நேரத்தில் பாஜகவுக்குதான் உதவும். 

    எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான கூட்டணிதான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri #KamalHaasan
    கமல்ஹாசன் உறுதியாக கூறிவிட்ட பிறகும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு விடுப்பது ஏன்? என்று முத்தரசன் கூறியுள்ளார். #KamalHaasan #Congress #DMK

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜ.க. தங்களது கட்சியை வளர்க்க அ.தி.மு.க.வை மிரட்டி குரல்வளையை நெரித்து தேர்தலில் போட்டியிட அதிக இடங்களை கேட்டு வருகிறது. இருப்பினும் பா.ஜ.க. தமிழகத்தில் ஒரு போதும் வளராது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் உள்ளன. தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக இது வரை பேசவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் தொடர்ந்து கூட்டணி தொடர்பாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சில கருத்துக்களை கூறிவருவது ஏன் என்று புரியவில்லை.


    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று கூறிய பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கமலஹாசன் கூட்டணியில் சேரவேண்டும் என்று கூறியது ஏன்? என்று தெரியவில்லை

    கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான். தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களின் போது நேரில் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார். அவருக்கு மக்கள் தகுந்த பதிலை சொல்வார்கள்.

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் பல கட்சிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூட்டணிகள் தொடர்பான கருத்துக்கள் வெளிவந்தாலும் அவை அனைத்தும் மர்மங்களாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்று நிருபர்கள் கேட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் 39 தொகுதிகளையும் கேட்கும் என்று சிரித்துக் கொண்டே கூறினார். #KamalHaasan #Congress #DMK

    ×