search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி ரஜினி மற்றும் கமலுக்கு விடுத்துள்ள அழைப்பு தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சி என வைகோ கூறியுள்ளார்.
    நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். ஜனாதிபதி மாளிகையில் மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

    தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.  இதேபோன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சி என வைகோ பேட்டியளித்து உள்ளார்.
    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி டெல்லியில் வரும் 30ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு நாடு முழுவதிலும் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள், முதல் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.



    இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தனிக்கட்சி தொடங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கவும் திட்டமிட்டுள்ளார்.

    ரஜினி எப்போதுமே பா.ஜனதா தலைவர்களுக்கு நெருக்கமாக இருந்து வருகிறார். அந்த அரசுக்கு ஆதரவான கருத்துகளையே தெரிவித்து வருகிறார். ரஜினிகாந்த், மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வாரா என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:-

    ரஜினி மும்பையில் தொடங்க இருக்கும் தர்பார் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்புக்காக நாளை மதியம் மும்பை செல்ல இருக்கிறார். அழைப்பை ஏற்றுக்கொள்வாரா இல்லை படப்பிடிப்பை காரணம் காட்டி செல்ல மாட்டாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

    ஒருவேளை பங்கேற்கவில்லை என்றாலும் கூட மனைவி லதாவை அனுப்பி வாழ்த்துகள் தெரிவிப்பார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க  வருமாறு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.



    தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு சரியாக பணியாற்ற தவறிய தொண்டர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 14,74,916 வாக்குகளை பெற்றது.

    கட்சி தொடங்கி 14 மாதங்களில் 3.78 சதவீத வாக்குகளை பெற்று இருப்பதால் அக்கட்சியினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு கமல்ஹாசன் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அனைவருக்கும் மதிய விருந்து கொடுத்தார்.

    இந்த விருந்தில் மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் என சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    கோவை, வடசென்னை, தென் சென்னை, மதுரை ஆகிய 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளை தாண்டி கமல் கட்சி பெற்றுள்ளது.

    11 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை அக்கட்சி பெற்றுள்ளது. நிறைய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி இருக்கிறது.

    கமல்ஹாசனையும் இந்த தேர்தல் முடிவுகள் உற்சாகப்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பின் தனது பொறுப்பு கூடியிருப்பதை அவர் உணர்ந்துள்ளார்.

    ஆலோசனை கூட்டங்களில் கமல் பேசும்போது, நாம் நல்ல வாக்கு சதவீதம் பெற்று இருக்கிறோம். ஆனால் டெல்டா மாவட்டம், வடமாவட்டங்களில் வாக்குகளை மிகக் குறைவாகப் பெற்றுள்ளோம்.

    அதற்கான காரணம் என்ன என்று ஆலோசிக்க வேண்டும். தேர்தல்தான் முடிந்துவிட்டதே... இனி அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் போனால் போதும் என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டாம். தினந்தோறும் மக்கள் பணி செய்யுங்கள்.

    மக்களின் குறையைக் கேளுங்கள், ஒவ்வொரு நாளும் களத்தில் நில்லுங்கள். தொகுதிக்கு சென்று மக்கள் குறையைக் கேட்டு செய்யுங்கள். அப்படி முடியாதவர்கள் ஒதுங்கிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

    மக்கள் கூப்பிடும் நேரத்திற்கு போய் குறைகளைக் கேளுங்கள். என்னை அதிகாலை 4 மணிக்கு அழைத்தாலும் வருவேன், இரவு 12 மணிக்கு அழைத்தாலும் வருவேன், அதுபோல் நீங்களும் மக்கள் பணிக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

    இந்த தேர்தலில் நமக்குக் கிடைத்தது பெரிய வெற்றி தான். நம்பிக்கையுடன் மக்கள் பணியைத் தொடருங்கள். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு சிறப்பாக வேலை செய்தவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வாய்ப்புகள் உண்டு என்றும் கூறினார்.

    இந்த தேர்தலில் கடுமையாக வேலை செய்தது யார், ஓய்வு எடுத்தது யார், வேலை செய்யாமல் ஏமாற்றியது யார் என்பது எல்லாம் எனக்கு தெரியும். அவர்கள் பெயர்களை குறிப்பிட நான் விரும்பவில்லை.

    இனியும் இப்படி இருக்கக்கூடாது. என்னுடைய ஒரு முகத்தைத்தான் பார்த்திருக்கிறீர்கள். இன்னொரு முகத்தை நீங்கள் பார்த்ததில்லை. அது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் முகம். நமது பொறுப்பு கூடியிருக்கிறது. 14 மாதத்தில் நம்மை மக்கள் இவ்வளவு வாக்குகள் கொடுத்து ஆதரித்திருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல் நாமும் நடக்க வேண்டும். இல்லை என்றால் கட்சியில் இருந்து நீக்கவும் தயங்க மாட்டேன் என்று எச்சரித்தார்.

    தலைமை நிர்வாகிகளுக்கு மட்டும் விருந்தா? என்று என்று யாரும் கேள்வி கேட்க வேண்டாம்.

    விரைவில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் வர இருக்கிறேன். அப்போது ஆலோசனை கூட்டமும் விருந்தும் நடைபெறும். நிர்வாகிகள் பசியை மட்டும் அல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரும் பசி காத்திருக்கிறது. அதை தீர்க்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

    இனி என் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும். தீவிரமாக கட்சி பணியாற்றுபவர்களுக்கு பரிசும் ஏமாற்றுபவர்களுக்கு தண்டனையும் உறுதி. மக்கள் நம் மீது வைத்த நம்பிக்கையை சரியாக பயன்படுத்தி அந்த நம்பிக்கையை அதிகமாக்க வேண்டும் இவ்வாறு கமல் பேசியதாக நிர்வாகிகள் கூறினர்.

    தேர்தலுக்கு முன்னர் கமல்ஹாசனை சினிமாவில் இருந்து வந்து தோற்றுப்போன அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டார்கள். ஆனால் அவருக்கு செல்வாக்கு இருப்பதை அவர் நிரூபித்து விட்டார்.

    ஜெயலலிதா போல கட்சியை நடத்துவதில் இனிதான் அவரது நிர்வாகத்திறமை தெரிய வரும். சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி வெல்லும் என்ற நம்பிக்கையும் உத்வேகமும் ஏற்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.
    பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற உதவிய மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் விருந்து வைத்தார்.
    சென்னை:

    கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். கட்சி தொடங்கி 14 மாதத்துக்குள் தேர்தலில் குதித்தார்.

    கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு முழுமை பெறாவிட்டாலும் கூட தேர்தலில் அந்த கட்சிக்கு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது.

    கமலோடு மூன்றாம் இடத்துக்கு போட்டியிட்ட மற்ற கட்சிகளான அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி இரண்டும் ஓரளவு செல்வாக்கும் அனுபவமும் உள்ள கட்சிகள். அப்படி இருந்தும் கமல் கட்சி 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்தது.

    4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளை கடந்தது. மக்கள் நீதி மய்யம் பெற்ற மொத்த வாக்குகள் சுமார் 14,74,946.

    இந்த அளவுக்கு அதிக வாக்குகள் பெற உதவிய கட்சி நிர்வாகிகளுக்காக நேற்று விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.

    தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த விருந்துக்கு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கட்சி தலைமை அலுவலக நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நேற்று மதியம் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடைபெற்றது.

    கமல்ஹாசன் அடுத்து வரும் தேர்தல்களுக்காக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்காக மாநிலம் முழுவதும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

    வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்க திட்டமிட்டு உள்ளார். நேற்று அளித்த விருந்தில் இதற்காக சில ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.
    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அசத்தலாக பேசியுள்ளார். அப்படி அவர் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. கட்சி துவங்கி 14 மாதங்களே ஆன நிலையில், கணிசமான அளவு வாக்குகளை பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்தின் எழுச்சியே எங்கள் இலக்கு. விவசாயிகளுக்கு எதிரான திட்டம் கூடாது. தேர்தல் வரும் போகும். ஆனால், எங்கள் இலக்கு தமிழகத்தின் வளர்ச்சியே ஆகும்.



    நேர்மையாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படிதான், நான்  மக்களை வழி நடத்துவேன். நம் கட்சி தொண்டர்களும் அப்படிதான் செயல்பட்டனர். இன்று தமிழகத்தில் மூன்றாவது இடம் மாற்று என மக்கள் நினைக்கும் அளவிற்கு மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுள்ளது. இன்னும் அயராது பாடுபடும்.

    நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு  நாங்கள் பேசக்கூடிய அளவிற்கு இந்த தேர்தலில் வாக்குகள் பெற்றுள்ளோம். மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக கருத வேண்டும். அரசியலை நான் தொழிலாக நினைக்கவில்லை. தொழிலாக நினைத்தால் அது மாபெரும் தவறு.

    14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓட விட்டுள்ளனர். மக்களின் வாக்குகள், நாங்கள் நேர்மையான வழியில் பயணித்து பணிகளை மேற்கொள்ள மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.  தமிழக மக்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.  

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தினகரன் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளை பார்ப்போம்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி,  தி.மு.க. கூட்டணி, தினகரன் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளை பார்ப்போம்.
    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளை தவிர்த்து 36 தொகுதிகளில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி  கணிசமான வாக்குளை பெற்றுள்ளது.

    பல இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். அவ்வகையில் ஒட்டுமொத்தமாக 36 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 15 லட்சத்து 32 ஆயிரத்து 992 வாக்குகளை பெற்றனர்.

    சில வேட்பாளர்கள் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர். கட்சி ஆரம்பித்து ஒன்றரை ஆண்டு நிறைவடையாத மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த மக்கள் செல்வாக்கை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த வெற்றிகுறித்து சென்னையில் இன்று பேட்டியளித்த கமல்ஹாசன், ‘தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.



    பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல, 14 மாதத்தில் எங்களால் என்ன முடியுமோ, அதை செய்துள்ளோம். எதிர்ப்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி.

    மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம், நல்ல வழியில்தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் கமல் கட்சிக்கு சென்னையின் 3 தொகுதிகள் மற்றும் கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் 3 வது இடம் கிடைத்து வருகிறது.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கமல் கட்சிக்கு சென்னையின் 3 தொகுதிகள் மற்றும் கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் 3 வது இடம் கிடைத்து வருகிறது. முக்கியமாக பிரபலங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் மூன்றாமிடமும் மற்ற தொகுதிகளில் நான்காவது, ஐந்தாம் இடங்களும் கிடைத்து வருகின்றன.

    இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 3 முதல் 4 சதவீத வாக்குகள் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்று இருக்கிறது. சட்டமன்ற இடைத்தேர்தலில் அந்த கட்சிக்கு 4 மற்றும் 5 ஆம் இடங்களே கிடைத்துள்ளன. சில தொகுதிகளில் வாக்குகளே பதிவாகாத நிலையும் இருந்து வருகிறது.
    இந்துக்கள் பற்றிய இழிவான கருத்துக்களை பரப்பி வரும் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்புல்லாணி போலீசில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    இந்து மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் முருகபூபதி, செயலாளர் நாகராஜ், ஒன்றிய தலைவர் ஜெயமுருகன், இளைஞரணி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் திருப்புல்லாணி போலீஸ் நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது புகார் அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மே 12-ந்தேதி அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கமல் பேசியுள்ளார். 2017-ம் ஆண்டு வார இதழுக்கு அளித்த பேட்டியில் காவி தீவிரவாதம் பரவிவருகிறது என கூறியுள்ளார்.

    தனது பேச்சின் மூலமாகவும், திரைப்படங்கள் மூலமாகவும் இந்துக்களை இழிவுபடுத்தும் வேலையை திட்டமிட்டு செய்து வருகிறார். இது எங்களைப் போன்ற இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. உரிய சட்டப்பிரிவின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.


    கோட்சே பற்றிய கருத்துக்கு பின் கமலுக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் கூறி உள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சுற்றி அகில இந்திய அளவில் சர்ச்சைகளும் பரபரப்புகளும் சூழ்ந்துள்ள நிலையில் அந்த கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- சூலூர் தொகுதியின் இறுதிகட்ட பிரசாரத்துக்கு கமல்ஹாசனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதே?

    பதில்:- எந்த ஒரு தொகுதியிலுமே கடைசி நாள் பிரசாரம் என்றால் முக்கிய தலைவர்கள் வருகையை எதிர்பார்ப்பார்கள். அப்படி கமல் மக்களை சந்திப்பதை தடுக்கும் முயற்சி தான் இது.

    கே:- இது சூலூர் தொகுதி மக்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதா?

    ப:- சூலூர் தொகுதி மட்டும் அல்ல தமிழ்நாடு முழுக்கவே வரக்கூடிய நாட்களில் மக்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். கமல் கூறியது முழுக்க முழுக்க சரித்திர உண்மை என்பது மக்களுக்கு புரியும். இந்த கருத்து சொல்லப்பட்டதே தேசிய ஒற்றுமையை மனதில் வைத்துதான் என்பதும் மக்களுக்கு தெளிவாகத் தெரியும்.



    கே:- கமல்ஹாசன் கருத்துக்கு பிரதமரே கண்டனம் தெரிவித்து இருக்கிறாரே?

    ப:- பிரதமர் கண்டனம் தெரிவித்ததாக தெரியவில்லை. அவரது கருத்தை மட்டுமே தெரிவித்துள்ளார். அது அவர் ஏற்கனவே ஏப்ரல் 2-ந்தேதி கூறியது. எனவே அது அவரது நிலைப்பாடு தான். காந்தி மரணத்துக்கு காரணம் யார் என்பதில் அவர் மாற்றுக்கருத்து தெரிவிக்கவில்லை.

    கே:- அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வன்முறை பேச்சுக்கு பெரிதாக எதிர்ப்பு வரவில்லையே?

    ப:- அவர்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மற்றபடி பல இடங்களில் இருந்தும் அவருக்கு எதிர்ப்புகள் வந்தன. அவர் கட்சியின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கு அவரை கண்டிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஆனால் கண்டிக்கவில்லை. கண்டித்தால் தங்களையே தாக்குவார் என்ற பயமாக இருக்கலாம்.

    கே:- பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வின் மேல்மட்ட தலைவர்கள் சொல்லி கூட ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கலாம் என்று யூகங்கள் ஏற்பட்டுள்ளதே?

    ப:- இருக்கலாம். அவர்களது தூண்டுதலின் பேரில் பேசி இருக்கலாம்.

    கே:- இந்த சர்ச்சையில் மற்ற கட்சியினர் கமலுக்கு எந்த அளவுக்கு ஆதரவாக இருந்தார்கள்?

    ப:- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் தங்களது நியாயமான கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. தி.மு.க.வினர் கமலை ஆதரிக்காததற்கு அவர்களது அரசியல் நோக்கம் காரணமாகவும் இருக்கலாம்.

    கே:- கமல் கருத்து அகில இந்திய அளவில் சர்ச்சையானதன் பின்னணி என்னவாக இருக்கலாம்?

    ப:- இதை சர்ச்சை என்று சொல்ல விரும்பவில்லை. விவாதமாக மாறி இருக்கிறது என்று சொல்லலாம். பா.ஜனதா தவிர வேறு எந்த கட்சியினரோ தலைவரோ இந்த கருத்துக்கு வேறுபாடு தெரிவிக்கவில்லையே? கமல் கருத்துக்கு ஆதரவு தான் பெருகி உள்ளது. தி.மு.க போன்ற சிலர் வேண்டுமானால் அரசியலுக்காக ஆதரிக்காமல் இருக்கலாம். கமல் பேசியது தவறு என்று யாரும் சொல்லவில்லையே? பா.ஜனதா மட்டுமே இதை அரசியலாக்குகிறது.

    தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டு எந்த மதத்தில் இருந்தாலும் தீவிரவாதம் தவறுதான் என்று கமல் சொன்ன கருத்தை ஒருமதத்துக்கு எதிரான கருத்தாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

    கே:- இது இந்துக்களுக்கு எதிரியாக கமல்ஹாசனை காட்டும் முயற்சியா?

    ப:- ஆமாம். அப்படி ஒரு பொய் பிம்பத்தை உருவாக்க எடுத்த முயற்சி. காரணம் கமல்ஹாசனுக்கு பெருகும் ஆதரவையும் கட்சியின் வளர்ச்சியையும் கண்டு அதன் மீதான பொறாமையால் இப்படி ஒரு பொய் பிம்பத்தை உருவாக்க முயற்சித்தார்கள். அந்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.

    கே:- இந்த சர்ச்சைக்கு பிறகு கமலின் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம்?

    ப:- எதுவும் இல்லை. வழக்கமான பணிகளை செய்துகொண்டு இருக்கிறார்.

    கே:- இந்த சர்ச்சைக்கு பிறகு மக்கள் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறதா? குறைந்துள்ளதா?

    ப- அதிகரித்துதான் இருக்கிறது. பா.ஜனதாவின் கூச்சல் என்பது நூற்றில் ஒன்று தான். மீதம் உள்ள 99 சதவீதத்தினர் அமைதியாக இருந்தாலும் கமலுக்கு தான் ஆதரவு. கட்சி அலுவலகத்துக்கு போன் கால்கள், கடிதங்கள் என மக்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கட்சியை தாண்டி ஆதரவு பெருகுகிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கமலின் கருத்துக்கு ஆதரவுதான் தெரிவிக்கின்றனர்.

    கே:- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வந்துள்ளதே? உங்கள் கட்சிக்கு 5 சதவீத வாக்கு கிடைக்கலாம் என்று வருகிறதே?

    ப:- கடந்த தேர்தல்களில் இந்த கருத்துக்கணிப்புகள் 10 சதவீதம் கூட பலித்தது இல்லை. இன்னும் 3 நாட்கள் கூட இல்லாத நிலையில் இதை வைத்து பேச வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் ஆர்வத்தையும் கவனத்தையும் ஈர்க்கும் முயற்சி தான் இந்த கணிப்புகள்.

    கே:- உங்கள் தயாரிப்பில் கமல் நடிக்க தேவர் மகன் 2 படம் உருவாக இருப்பதாக செய்தி வந்ததே?

    ப:- அது முழுக்க முழுக்க பொய்யான செய்தி. எனக்கும் சினிமாத்துறைக்கும் தொடர்பே கிடையாது. அதை படித்துவிட்டு சிரித்தேன். அப்படி ஒரு எண்ணமே இல்லை’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    கமல்ஹாசனின் புரோமோ வீடீயோ வெளியானது முதலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளரை உறுதி செய்திருக்கிறார்கள்.

    அந்தப் போட்டியாளர் `ஓ.கே. ஓ.கே.’ படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த காமெடி நடிகை `ஜாங்கிரி’ மதுமிதா. சின்னத் திரையில் `சின்ன பாப்பா பெரிய பாப்பா’வில் காமெடி செய்தவர். சில மாதங்களுக்கு முன்பு உதவி இயக்குனர் மோசஸ் ஜோயலைத் திருமணம் செய்துகொண்டார்.



    `மணமாகி கொஞ்ச நாளிலேயே கணவரை மூன்று மாதங்கள் பிரிந்து எப்படி பிக் பாஸ் வீட்டுக்கு’ என்றால், ``அவங்களுக்கு சவால்னா ரொம்ப பிடிச்ச வி‌ஷயம். இந்த வாய்ப்பை ஒரு சவாலா எடுத்து பண்ணணும்னு நினைக்கிறாங்க. தவிர, இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கறதில்லையே! பொதுவாகவே வர்ற வாய்ப்புகளைத் தவற விடக்கூடாதுன்னு நினைக்கிறவங்க அவங்க’’ என்கின்றனர் மதுமிதாவுக்கு நெருக்கமானவர்கள்.
    பார்த்திபனின் ஒத்த செருப்பு பட விழாவில் கலந்துக் கொண்ட கமல், ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
    பார்த்திபன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஒத்த செருப்பு’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கமல், இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    இதில் கமல் பேசும்போது, எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். அதை நான் திரும்பி திரும்பி படித்தேன். அதில், காந்தி அவர்கள் ரெயிலில் செல்லும் போது, ஒரு செருப்பு தவறி விழுந்துவிட்டது. உடனே அவர் மற்றொரு செருப்பையும் கழற்றி வீசி விட்டார். ஏன் என்று கேட்டதற்கு ஒரு செருப்பு இருந்தால் யாருக்கும் உபயோகப்படாது என்று கூறியிருக்கிறார். அவரின் ரசிகர் நான்.



    அவர் போட்ட செருப்பில் ஒன்று வந்து சேர்ந்துவிட்டது. இன்னொன்றும் வரும். அதற்கான அருகதை எனக்கு உண்டு. அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என் மேல் செருப்பு வீசியதை பலரும் பயந்து பயந்து பேசுகிறார்கள். இதில் ஒரு பயமும் இல்லை. செருப்பு போட்டவருக்கே அவமானம்’ என்றார்.
    கமல்ஹாசன் நாக்கை அறுப்பேன் என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    மக்கள் நீதி மய்யம் கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சரவணன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முகமது ரபிக் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 13-ந்தேதி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அவரது நாக்கை அறுப்பேன் என்றும் மற்றும் மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் மக்கள் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பார்கள் எனவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். எனவே அமைச்சர் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
    ×