search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு விஞ்ஞானி என்றும் தான் ஒரு சமூக சேவகர் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #TamilisaiSoundararajan
    திருச்சி:

    தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக அவர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அரசு எந்திரம் இன்னும் முடுக்கி விடப்பட வேண்டும். நான் சொல்வதெல்லாம் அரசின் காதுக்கு எட்டுமா? என்று தெரியவில்லை. மிகச்சிறிய 10-க்கு 10 அறையில் 150-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இது நல்லதல்ல, ஆரோக்கியமானதல்ல. இன்று பெய்துள்ள மழை மேலும் பொதுமக்களை பாதிக்க செய்யும். எனவே தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்ற போது பல்வேறு இடங்களில் பொது மக்கள் பலர் கோ‌ஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். நான் செல்லும் போது அவர்கள், நாங்கள் எதற்காக செல்கிறோம் என்பதை அறிந்து வழிவிட்டார்கள். இது அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பின்னர் அவரிடம், இந்த அரசு மக்களை ஏழ்மையாக ஆக்கி வருகிறது என்று நேற்று நீங்கள் பேட்டியளித்தீர்கள். இதற்கு பதில் அளித்துள்ள பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர் ஆராய்ச்சி செய்து சொல்லட்டும் என்று கூறியிருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழிசை சவுந்தரராஜன் ஒரு விஞ்ஞானி. நான் ஒரு சமூக சேவகர் என்று கூறி விட்டு சென்றார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #TamilisaiSoundararajan
    மத்திய குழு புயல் சேதங்களை நேரில் ஆய்வு செய்து உடனடியாக நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #GajaCyclone #MakkalNeedhiMaiam #KamalHaasan
    திருச்சி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார்.

    பின்னர் அவர் தனியார் ஓட்டலில நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சேதமும் இவ்வளவு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கவில்லை. முதலில் சேதம் குறித்து சரியான தகவல் தெரியவில்லை. கடந்த 6 நாட்களாக எங்கள் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் கிராமங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அவர்கள் நிவாரண பணிகளை தொடர்ந்தபோது தான் சேதம் குறித்த முழுமையான தகவல் தெரிய வந்தது. அதிகாரிகள் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளதை விட அதிக சேதம் ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

    மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் இதுவரை ரூ.60 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். இன்று மேலும் 70 வாகனங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல உள்ளோம். அவர்களுடன் நானும் செல்ல உள்ளேன்.

    ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை பொருட்களாக வழங்கி வருகிறோம். இன்னும் பல மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை பணமாக இல்லாமல் பொருட்களாக பெற்று வருகிறோம். அதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து வழங்குவோம்.

    இதுவரை நிவாரண உதவிகள் சென்று சேராத, நிவாரண பொருட்கள் கிடைக்காத குக்கிராமங்களுக்கும் நாங்கள் சென்று வழங்க உள்ளோம். தேவைப்பட்டால் நான் அங்கேயே தங்கி பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன்.

    நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கும் செல்லும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை மக்கள் விரட்டி அடிப்பதாகவும், அரசு வாகனங்களை தீ வைத்து எரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. அவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இதனை சரியாக புரிந்து கொண்டு அரசும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும்.

    அமைச்சர்களுக்கு எதிராக மக்களை போராட எதிர்க்கட்சி தூண்டி விடுகிறதா என்பது பற்றி எனக்கு தெரியாது. நிவாரண பணிகள் மக்களிடம் கொண்டு சேர விடாமல் சிலர் தடுக்கிறார்கள் என்று கூறப்படுவதை நான் நேரில் சென்று பார்த்த பிறகுதான் கூறமுடியும்.

    புயல் சேத பாதிப்பு, மக்கள் பாதிப்பு ஒரு புறம் இருந்தாலும் வருடந்தோறும் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானவர்கள் குடிசை வாசிகள். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. பசுமையை காப்போம் என்று அரசு கூறுவதை போல், குடிசைகளையும், ஏழ்மையையும் காப்போம் என நினைக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.

    நான் புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்த்த பின்பு அங்கு இன்னும் நிறைய சேதம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஐ.நா. அமைப்பில் இருந்து ஏற்கனவே உலகம் முழுவதுக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுத்திருந்தனர். இயற்கையால் பேரழிவு ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

    உலக வெப்பமயமாதலில் ஒரு டிகிரி உயர்ந்தால் கூட என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று அவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதுபோன்றது இந்த கஜா புயல். இனியும் இதுபோன்று பேரழிவுகள் வரும், அது பேரிடியாக இருக்கும். எனவே இதுபோன்ற பேரழிவுகளில் இருந்து காப்பாற்றி கொள்வது குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கவேண்டும்.

    தற்போது கஜா புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதத்தை முழுமையாக கணக்கிட வேண்டும். தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் மற்றும் இழப்பீடு போதுமானதாக இல்லை. தென்னைக்கு ரூ.1,100 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது போதுமானது கிடையாது.

    கஜா புயலால் இன்னும் 4 ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. இதனை அரசு கணக்கில் கொண்டு நிவாரணம் வழங்கவேண்டும். அதே போல் புயலால் உயிரிழந்தவர்களுக்கு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் நிவாரண தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும்.

    இதுபோன்ற புயல் பாதிக்கப்பட்ட நேரங்களில் வெளி மாநிலங்களில் எவ்வாறாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதோ, அதேபோல் தமிழக அரசும் வழங்கவேண்டும். புயல் பாதித்து கடந்த 7 நாட்கள் ஆகியும் மத்திய அரசிடம் இருந்து சேதத்தை பார்வையிடவோ, மதிப்பிடவோ யாரும் வரவில்லை.

    மத்திய அரசு தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவேண்டும். மத்திய புயல் நிவாரண குழு தமிழகத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து உடனடியாக நிவாரண நிதியை வழங்கவேண்டும். இன்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமரை சந்தித்து நிவாரண உதவி கோருகிறார்.

    அப்போது தமிழகத்தின் நிலைமையை தெளிவாக எடுத்துக்கூறி வலியுறுத்த வேண்டும். மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும்.

    சாய்ந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு, மேஸ்திரி வேலை பார்ப்பது போல புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை கையாளக்கூடாது. அது சரியல்ல, பாதிப்பின் தன்மையை உணர்ந்து மக்களுக்கு உதவவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

    கே: புயலால் பாதித்த மக்களுக்கு நடிகர்-நடிகைகள் ஒன்று செய்யாமல் இருக்கிறார்களே? நடிகர் சங்கமும் ஒன்றும் செய்யவில்லையே?

    ப: நடிகர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள், நடிகர் சங்கமும் செய்யும்.

    கே: தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம், புயல் பாதித்த மக்களுக்கு நடிகர்கள் உதவ முன்வராதது குறித்து கேட்ட கேள்விக்கு, நடிப்பது அவர்கள் தொழில். நடப்பது அரசியல் என்று பதில் அளித்துள்ளாரே?


    ப: அவர் நன்றாக பேசுவார்.

    கே: புயல் சேத நிவாரண பணிகளின் போது அமைச்சர்கள்-அதிகாரிகள் விரட்டப்படுகிறார்கள். வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது போன்ற காரணங்களால் நிவாரண பணிகள் பாதிக்கப்படுகிறதே?

    ப: மக்களுக்கு சரியான நேரத்தில் நிவாரண பணிகள், உதவிகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம்தான் அது. சரியான முறையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கே : தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிவாரண பணிகளை படிப்படியாகத்தான் செய்ய முடியும் என்று கூறியிருக்கிறாரே?

    ப: நிவாரண பணிகளை தேவைப்படும் நேரத்தில் உடனடியாக செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MakkalNeedhiMaiam #KamalHaasan
    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தானும் தங்கள் கட்சியும் உயிராகவும் உணர்வாகவும் உடனிருப்பதாகவும் விரைவில் நேரில் சந்திப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #GajaCyclone #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ‘கஜா புயலின் கொடுமையான தாக்கத்தால், தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகள் மிகவும் மோசமான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. பேரிடருக்குப் பின்னான மீட்புப்பணிகள், மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை மீட்டெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை புனரமைப்பதிலும் அரசு சுணக்கம் காட்டியுள்ளது.

    அரசு நேற்று வெளியிட்ட புள்ளி விவர கணக்கை விட, பாதிப்புகள் பன்மடங்கு அதிகமாக உள்ளன. அரசு உண்மை விவரத்தை உடனடியாக வெளியிட வேண்டும். மக்கள் நீதி மய்யம், ஒரு பொறுப்பான அரசியல் கட்சியாக, மீட்புப்பணிகளில் அரசு செய்யத்தவறியதை சுட்டிக்காட்ட வேண்டியது இன்றியமையாத கடமை ஆகிறது.

    1. கஜா புயலினை தேசிய பேரிடராக அறிவித்திட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதோடு மாநில அரசினையும் இது குறித்து வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறது.


    2. தமிழக முதல்வர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு உடனடியாக நேரடியாகச் செல்வதன் மூலம் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் ஏனைய குடிமை வசதிகள் விரைவாக சீரமைக்கப்படும். இதனை முதல்வர் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

    3. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாயும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் பாதிப்பிற்கு ஏற்ற வகையில் நிதி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

    4. புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்துக் குடிமை பொருட்களும் கட்டணமின்றி 3 மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

    5. மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவற்றை உடனடியாக சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

    6. வீடுகள் இழந்தவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு மேற்கூரைகள் மற்றும் புனரமைப்பு பணிகளை அரசு உடனடியாக செய்திடவேண்டும்.

    7. மருத்துவ வசதிகள், பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள அனைவருக்கும் உடனடியாக கிடைத்திடும் வகையில் மருத்துவ முகாம்கள் இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும். முக்கியமாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு வகைகள் போர்க்கால அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

    8. பயிர்க்காப்பீட்டுத் தொகை உடனடியாக கிடைத்திடும் வகையில் அரசு செயல்படவேண்டும். பயிர் சேதாரத்திற்கான தொகையினையும் அரசு உடனடியாக வழங்கவேண்டும்.

    9. நீண்ட நாள் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் தென்னை மரம், மற்றும் இதர மரங்களை வாழ்வாதாரமாக கொண்ட விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக அரசு நிவாரண திட்டத்தை அறிவித்து, உடனே செயல்படுத்த வேண்டும்.

    10. உயிரிழந்த கால்நடைகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடுகள் விரைவில் மக்களுக்கு கிடைத்திடும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    11. இது போன்ற மக்கள் இன்னலுக்குள்ளாகும் நேரங்களில், தனியார் நிறுவனங்கள், தன்னார்வல நிறுவனங்கள் மற்றும் சேவை அமைப்புகள் மனிதாபிமான அடிப்படையில், கருணை உள்ளத்தோடு, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் உதவி செய்ய முன் வரவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது.

    மக்கள் நீதி மய்யக் கட்சியினால் மேலே எழுப்பப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசு, தன்னார்வல நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைத்திடும் வகையில் வழி வகுக்க வேண்டும்

    மக்கள் நீதி மய்யக் கட்சிப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் தாங்கள் செய்து வருகின்ற கஜா புயல் நிவாரணப் பணிகளை தொடர்ந்து முழுவீச்சுடன் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் நானும் எங்கள் கட்சியும் உயிராகவும் உணர்வாகவும் உடனிருக்கிறோம். விரைவில் நேரில் சந்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். #GajaCyclone #MakkalNeedhiMaiam #KamalHaasan
    கமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிகர் சிம்பு போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #STR
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் இந்தியன். நல்ல வரவேற்பைபெற்ற இந்த படத்தில் கமல் சுதந்திர போராட்ட வீரராகவும், லஞ்சம் வாங்கும் மகனாகவும் நடித்திருந்தார்.

    நேர்மையே கொள்கையாக வைத்து இருக்கும் தந்தை தனது கொள்கைக்கு எதிராக இருக்கும் மகனையே கொல்வதுபோல படத்தின் முடிவு அமைந்து இருந்தது.

    1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 உருவாக இருக்கிறது. கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கமல் நடிக்க ‌ஷங்கர் இயக்குகிறார்.

    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. அந்த படம் வெளியான சில நாட்களில் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக செட் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.



    இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போதைய தகவல்படி கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்றும் மேலும் துல்கர் சல்மான், சிம்பு ஆகியோரும் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

    சிம்பு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருவார் என்றும் செய்தி வருகிறது. ‌ஷங்கர் படங்களில் கதாநாயகர்களுக்கு சமமாக வில்லன்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும். இந்தியன் முதல் பாகத்தில் தந்தை கமலுக்கு மகன் கமலே வில்லனாக அமைந்திருப்பார்.

    முதல் பாகத்தின் கதையே லஞ்சத்துக்கு எதிரானதாக இருந்தது. இரண்டாம் பாகம் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கிறார்கள். 21 ஆண்டுகள் கழித்து திரும்பும் சேனாபதி, நாடு முழுவதும் பரவியுள்ள ஊழலை ஒழிப்பதே கதை என்கிறார்கள்.

    கமல் தனது கட்சியின் கொள்கைகளில் முக்கியமாக ஊழல் ஒழிப்பையே முன்மொழிந்து வருகிறார். கமலின் தீவிர அரசியலுக்கும் அவரது கொள்கைகளுக்கும் உதவும் வகையிலேயே கதை, வசனம் அமைந்திருக்கும் என்கிறார்கள். #Indian2 #KamalHaasan #STR

    கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசு நன்றி என்று டுவிட்டரில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #GajaCyclone #KamalHaasan #TNGovt
    சென்னை:

    கஜா புயல் தொடர்பாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

    இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி.


    பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.

    அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஊடகங்கள், தன்னார்வலர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaCyclone #KamalHaasan #TNGovt
    என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன் என்று குழந்தைகள் தின விழாவில் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #ChildrensDay
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள ஊர்களுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று பேசி வரும் அவர் இன்று குழந்தைகள் தினத்தையொட்டி கதீட்ரல் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டார்.

    லிட்டில் பிளவர் மேல் நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    நான் இந்த பள்ளிகளுக்கு 37 வருடங்களாக தொடர்புடையவன். ராஜபார்வை படம் எடுக்க இந்த பள்ளி உதவியாக இருந்தது. தன்னம்பிக்கை விடாமுயற்சி அனைத்தும் எனக்கு பாடமாக இருந்தது. நானும் இந்த பள்ளியில் வெளியில் உள்ள மாணவன் என்றால் மிகையாகாது.



    இந்த குழந்தைகளுக்கு இருக்கும் நம்பிக்கை சாதாரண மனிதர்களுக்கு இருந்தால் இந்தியா பல் மடங்கு முன்னேறிவிடும். இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இதற்கு ஆசிரியர்களை பாராட்டுகிறேன். இங்கு வந்துசெல்லும் போதெல்லாம் என் மனதை இறுகும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அவர்கள் சந்தோ‌ஷம் தொடரட்டும். இவர்கள் என்னை விட நீண்ட ஆயுள் உடையவர்கள். அவர்கள் வாழ்த்தும்போது என் ஆயுளும் நீளும்.

    ஆட்டத்துடன் சம்பந்தப்பட்டவன் நான். இங்கு நடனம் ஆடிய மாணவர்களுக்கு பாராட்டுக்கள். இங்கு வாழ்த்து பெற வந்தேன். வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. நான் சினிமாவில் பாடிய பாடல் இன்று எனக்கே நம்பிக்கை அளிக்கக்கூடியதாக மாறியுள்ளது. புத்தகம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வைத்திருந்தார்கள். அது விரைவில் அவர்களுக்கு அளிக்கப்படும்.

    புகழ் எனக்கு போதுமான அளவில் கொடுத்துவிட்டீர்கள். தகுதிக்கு அதிகமான புகழை தமிழகம் எனக்கு சேர்த்துள்ளது. இனி தமிழகத்திற்கு புகழ் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    முன்னதாக விழாவில் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடினார்கள். கமல் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் கமல் நடிப்பில் இடம்பெற்ற உன்னால் முடியும் தம்பி பாடலையும் பாடினார்கள்.

    சக்தி என்னும் மாணவர் கமலிடம் பார்வைத் திறனற்றவர்களுக்கு படிக்க உதவும் பிரெய்லி புத்தகங்களை அச்சிடும் கருவி பழுதாகி விட்டதாகவும் அதனை தங்களுக்கு வாங்கித் தருமாறும் கோரிக்கை விடுத்தார். கமல் அந்த வேண்டுகோளை ஏற்று மும்பையில் இருந்து இறக்குமதி செய்து தருவிப்பேன் என்று உறுதி அளித்தார். #KamalHaasan #ChildrensDay

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan #STR
    22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் லஞ்சம் வாங்கும் இளம் கமலை தாத்தாவாக வரும் கமல் விமானநிலையத்தில் புகுந்து கத்தியால் குத்துவார். பின்னர் அவர் தப்பி செல்லும் வேன் டேங்கர் லாரியில் மோதி தீப்பிடிக்கும். அந்த விபத்தில் இந்தியன் தாத்தா செத்து விட்டதாக கருதுவார்கள். 

    ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதுபோல் படத்தை முடித்தனர். இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா இந்தியா திரும்புவது போல் கதையை ஆரம்பிக்கின்றனர்.

    இந்தியன் 2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.



    அதேநேரத்தில் இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வாலிடமும், கமலின் இளமை தோற்றத்தில் நடிக்க துல்கர் சல்மானிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. படத்திற்காக கமல்ஹாசன் தயாராகி வருகிறார். #Indian2 #KamalHaasan #STR

    பிச்சைக்காரர்களுக்கு இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. #ADMK #KamalHaasan #NamadhuAmma
    சென்னை:

    பிச்சைக்காரர்களுக்கு இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா வில் வெளியாகியுள்ள கட்டுரை வருமாறு:-

    பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் தேவை என்கிறாரே கமல்ஹாசன். அப்படியென்றால் ஊனமுற்ற ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்குகிறாரே அவர், அது எதற்காக?

    மக்களால் அரசுக்கு வருவாயாக வழங்கப்படுகிற வரிப்பணம், அவர்களுக்கான மக்கள் நலத்திட்டங்களாகி மீண்டும் அவர்களுக்கே உரிய பலன்களாக, திரும்பக் கிடைக்கிறபோது, அதனை ஒருபோதும் இலவசம் என்று சொல்லக்கூடாது என உத்தரவிட்டு அவற்றிற்கு விலையில்லா பொருட்கள் என்கிற பெயரைச் சூட்டியவர் ஈகைக்கும், வாகைக்கும் இலக்கணம் வகுத்த எங்கள் அம்மா.

    இதையெல்லாம் உள் வாங்கிக் கொள்ளாத உள்நோக்க உளறல் நாயகன். ஈரிலை அரசு மீது தொடர்ந்து வன்மத்தைக் கக்குவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

    எங்கள் அம்மாவின் அரசு, கல்வியை, மருத்துவத்தை, ஏழை, எளியோருக்கு விலையில்லாமல் தொடர்ந்து பல்லாண்டுகளாக வழங்குகிறது.

    அதன் மூலம் கல்வி பயின்று உயர்ந்த பதவிகளால் உச்சம் தொட்டு நிற்பவர்களை எல்லாம் கமலின் கருத்து பிச்சைக்காரர்கள் என்கிறதா?

    தொடர்ந்து மூன்றாண்டுகள் இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தமிழகமே முதலிடம் என்கிற ஹாட்ரிக் சாதனையைப் புரிவதற்கு விவசாயப் பெருமக்களுக்கு விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை எல்லாம் தமிழக அரசு இலவசமாக தந்து உழவர்களை ஊக்க மூட்டுகிறதே, இதனையெல்லாம் விவசாயிகள் பெறுகிற பிச்சை என்கிறாரா? வில்லங்க ரூப கமல்ஹாசன்.


    சரி அதெல்லாம் போகட்டும், “கட்சி தொடங்கிய நீங்க, கட்சியை நடத்துவதற்கு பணத்திற்கு என்ன செய்வீங்க” என்று பத்திரிகையாளர் கேட்டபோது, “எனக்கான நிதியை என் கட்சித் தொண்டர்கள் தருவார்கள்” என்று இலவசத்திற்கு தன் தொண்டர்களிடமே துண்டு விரிக்கிற திருவாளர் கமல்ஹாசனை வேண்டுமானால், அரசியல் பிச்சைக்காரர் என்று அழைக்கலாம்.

    தாங்கள் அமைத்த அரசாங்கத்திடமிருந்து நலத் திட்டங்களை பெறுபவர்கள் ஆட்சி அதிகாரத்தின் பங்காளர்களே தவிர, அவர்கள் கையேந்திகள் அல்ல என்பதை கருத்துக் குருடர் கமல்ஹாசன் உணர்ந்து கொள்வது உத்தமம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #KamalHaasan #NamadhuAmma
    20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ஊத்தங்கரை:

    20 தொகுதி இடைத்தேர்த லில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று கமல்ஹாசன் அறிவித்து உள்ளார். ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டு சேருவோம் என்று அறிவித்து இருந்த நிலையில் அவர் திடீரென்று மனம் மாற காங்கிரசும், தி.மு.க.வும் தான் காரணம் என்று தெரிய வந்து உள்ளது.

    பாரதிய ஜனதா பேச்சை கேட்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை உடைக்க பாரதீய ஜனதாவில் ஊதுகுழலாக கமல்ஹாசன் செயல்படுகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி இருந்தார்.

    மேலும் கமல்ஹாசனுடன் கூட்டணி கிடையாது என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அறிவித்தார். இந்த நிலையில்தான் கமல்ஹாசன் தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்து விட்டார்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    அரூர் தொகுதியில் தனியாக போட்டியிடுவோம். இதேபோல 20 சட்டமன்ற தொகுதிகளிலும் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெறுவோம். தமிழகத்தை புதிதாக செதுக்கும் சிற்பிகள் மக்கள் தான். அந்த மக்கள் பணத்துக்காக ஓட்டுகளை விற்க கூடாது.

    தேர்தல் நேரத்தில் வெறும் ஓட்டு என்று நினைத்து 5 ஆயிரம், 10 ஆயிரம் வாங்கி கொண்டு மேலும் 5 ஆண்டுகள் கொடுங்கோலர்கள் கையில் குத்தகைக்கு விட்டுவிடாதீர்கள். நீங்கள் வாங்கும் 5 ஆயிரத்தை 5 ஆண்டுகளுக்கு கணக்கு போட்டு பார்த்தால் தினசரி காபி அருந்துவதற்கு கூட கணக்கு வராது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைந்தால்தான் மக்கள் குறைகளை தீர்க்க முடியும். எனவே மக்களை நம்பி மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. நான் சினிமாவில் கிடைத்த புகழை வைத்து கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களை நம்பி தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேன்.

    செல்லும் இடங்களில் எல்லாம் எனக்கு மக்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். மக்களாகிய உங்களின் கோரிக்கையை நிறைவேற்ற உங்களுக்கு நீங்களே வாக்கு சீட்டு மூலம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்களை வெற்றி பெற செய்யுங்கள். அதன்மூலம் உங்கள் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினோம். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் `இந்தியன்-2' படத்தின் கலை பணிகள் பூஜையுடன் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
    22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இயக்குநர் ‌ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை சமீபத்தில் ஆய்வு செய்தார்கள்.

    இந்த நிலையில், படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் இன்று துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் கலை பணிகளை டி.முத்துராஜ் கவனிக்கிறார். இவர் முன்னதாக ஷங்கர் இயக்கிய ஐ, 2.0 படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



    இந்தியன்-2 முழு அரசியல் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கமல் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், இந்தியன் தாத்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    கமலுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனை அணுகி இருக்கிறார்கள். படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan

    எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் ரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று டைரக்டர் கவுதமன் தெரிவித்துள்ளார். #Gowthaman #Rajinikanth
    சென்னை:

    சினிமா டைரக்டர் கவுதமன் அரசியல் பிரவேசம் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்பதற்காக யார்-யாரோ வருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். இதற்காக புதிய அரசியல் கட்சியை தான் தொடங்க உள்ளேன்.

    தை பொங்கலுக்கு பிறகு நடைபெறும் கட்சியின் மாநாட்டில் பெயரும், கொடியும், கொள்கைகளும் அறிவிக்கப்படும்.
    நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மதிப்புமிக்க கலைஞர்கள். ஆனால் அவர்களுக்கு இந்த மண்ணை ஆள தகுதி இல்லை. விஸ்வரூபம் படம் வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறிய கமல் இந்த நாட்டை எப்படி காப்பாற்றுவார்.

    ரஜினிகாந்தையும் எப்போதும் ஏற்க முடியாது. அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்.

    தொடர்ந்து இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வந்தாரை வாழவும், ஆளவும் வைத்த தமிழினம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவர்கள் எங்களை ஆண்டதும், ஆள நினைப்பதும் இனி ஒரு போதும் நடக்காது.

    இவ்வாறு கவுதமன் கூறினார்.  #Gowthaman #Rajinikanth
    தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்து காட்டட்டும் என்று தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் கமலுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால் விடுத்துள்ளார். #ADMK #TNMinister #RajendraBalaji
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற தேர்தல் வரும் போது ஆட்சி அமைக்க கூட்டணி முயற்சி செய்வர். அதற்கான சந்திப்பு தான் சந்திரபாபு நாயுடு, மு.க. ஸ்டாலின் இடையேயானது. இது அதிசயம் கிடையாது.

    அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக அதற்கான வியூகங்களை முதல்வர் நடத்தி வருகிறார். விரைவில் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து பேசி பலமான கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்.

    ஸ்டாலினுக்கு பிரதமர் ஆகும் தகுதி உண்டு என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

    நாட்டில் உள்ள அத்தனை வாக்காளர்களும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளவர்கள். சந்திரபாபு நாயுடுதான் மோடியை பிரதமராக்க விடிய விடிய நடந்து ஓட்டு கேட்டார். பாஜகவின் அலையை வைத்து தான் முதல்வர் ஆனார்.

    மத்திய ஆட்சியில் பெரிய அளவில் குற்றங்கள், குறைகள் இல்லை. மக்கள் பணியில் அக்கறையோடு உள்ளனர். ஆன்மீக ரீதியான ஆட்சியைத்தான் நடத்தி வருகிறார்கள்.

    குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர் கட்சிகள் சொல்லலாம். இடைத்தேர்தல் நிறுத்தப்படும் என்று தங்க தமிழ்செல்வன் கூறி வருகிறார்.

    இந்த 2 வருடம் மட்டும் அ.தி.மு.க. ஆட்சி அல்ல. 200 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சி தொடரும்.


    கமல் தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்து விட்டு பேசட்டும். பிக் பாஸ் போல் அரசியல் களத்திலும் மீசையை முறுக்கி விட்டு நடத்தி பார்க்கிறார். அது எடுபடாது.

    மது விற்பனையை நிறுத்தினால் பாண்டிச்சேரிக்கோ, கர்நாட கத்திற்கோ சென்று குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், முன்னாள் கவுன்சிலர் முத்தையா, கூட்டுறவு சங்க தலைவர் தங்கம், உள்பட கட்சி நிர் வாகிகள் உடனிருந்தனர். #ADMK #TNMinister #RajendraBalaji
    ×