search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2ம் பாகத்தை தொடந்து மீண்டும் பிரபலமான படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Kamal #Kamalhaasan
    தமிழில் இப்போது 2 - ம் பாகம் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன. விக்ரமின் சாமி படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமும் வந்தது. ரஜினிகாந்த் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் நடித்துள்ளார். இது நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது. 

    விஷால் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். சதுரங்க வேட்டை இரண்டாம் பாகமும் தயாராகி உள்ளது. நடிகர் கமல்ஹாசனும் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து இயக்குவது பற்றி ஆலோசிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர்.

    இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. இதில் போற்றி பாடடி பெண்ணே, வானம் தொட்டு போனா, அட புதியது பிறந்தது, இஞ்சி இடுப்பழகி ஆகிய இனிமையான பாடல்களும் இடம்பெற்று இருந்தன. கமல்ஹாசன் தற்போது டெலிவி‌ஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இரண்டு வாரத்தில் இது முடிய இருக்கிறது. 



    அதன்பிறகு ‌ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் - 2 படத்தில் நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்க உள்ளது. இந்த படத்தோடு தேவர் மகன் - 2 படப்பிடிப்பையும் தொடங்குவார் என்றும் தேர்தலுக்கு முன்பு இரண்டு படங்களையும் திரைக்கு கொண்டு வருவார் என்றும் பேசப்படுகிறது.
    அரசியலை புரிந்து கொள்ளாமல் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து வருகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #MinisterKadamburRaju
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பிரமாண்டமான கோட்டை வடிவிலான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை நேற்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    தொழில்துறை தொடர்பாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அரசியலை புரிந்து கொள்ளாமல், எந்த கருத்தையும் தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்த பிறகு தான் உலக தொழிலாளர்கள் மாநாட்டை முதன் முதலாக நடத்திக் காட்டினார். தமிழகத்தில் மின்தட்டுப்பாடு இல்லை. தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

    2016-ம் ஆண்டு தேர்தலில் முதல்-அமைச்சராக ஆகிவிடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு கண்டார். அது நிராசையாகிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஏதாவது பிளவு ஏற்பட்டு ஆட்சி மாற்றம் வராதா? என அவர் கனவு காண்கிறார். மக்கள் பணிகளை செய்ய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அவர் கூறவும் இல்லை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்படவும் இல்லை.

    ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது நடந்த பாராளுமன்ற தேர்தலில் வரலாற்று சாதனை வெற்றியை அ.தி.மு.க. பெற்றது. அவருடைய வழியில் மக்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை போல் வருகிற தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterKadamburRaju
    ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் என்னைப் பொறுத்தவரை அதை விளையாட்டாக கூட பயன்படுத்தக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவன தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் என்னைப் பொறுத்தவரை அதை விளையாட்டாக கூட பயன்படுத்தக்கூடாது. கருணாஸ் அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.



    ஜாதியைப் பற்றி பேசும் காலம் முடிந்து விட்டது. என்னைப் பொருத்தவரை அதைப்பற்றி பேசவே கூடாது.

    எந்த தேர்தலாக இருந்தாலும் ஆயத்தம் இல்லாமல் எதையும் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளவன் நான். அது உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி. ஆயத்தம் இல்லாமல் செய்யக்கூடாது என்பதால் தான் எங்களுடைய பயிலரங்க தேதியை மாற்றி இருக்கிறேன்.

    உள்ளாட்சி தேர்தல் வரும்போது அதைப் பற்றி பேசலாம். இவர்கள் நடத்தும் தேர்தலை வேடிக்கையாகத் தான் பார்க்க வேண்டும்.

    நான் மக்களை சந்திக்க கிராமங்களுக்கு சென்றேன். அங்கு நாங்கள் நடத்தும் கூட்டத்துக்கு அனுமதி எளிதாக கிடைக்கவில்லை. அதனால் இடங்கள் மாற்றப்பட்டது.

    மேடை அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் சந்தோ‌ஷமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தார்கள்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதையை ‘அயர்ன் லேடி’ என்ற பெயரில் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் கட்சியினர் படமாக எடுக்கிறார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 13 பேர் குண்டு பாய்ந்துதான் இறந்துள்ளனர். அதைத்தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பண்டு வந்ததா? செண்டு வந்ததா? என்று கேட்டுக் கொண்டிருக்க முடியாது. குற்றத்திற்கு மன்னிப்பு கோர வேண்டிய நேரத்தில் குற்றத்தை மக்கள் பக்கமே திருப்பக்கூடாது.

    ஊழலை ஒழிப்பது என்பதை ஆதாரங்களுடன் கையும் களவுமாக பிடிக்க வேண்டும். அதுதான் ஒரே வழி. ஆனால் ஊழல் செய்பவர்கள் சாதுர்யமாக செய்வதால் ஆதாரங்களை திரட்டுவது கஷ்டமாக இருக்கிறது. ஊழலை ஒழிக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    மோடி அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் தொழில்கள் முடங்கிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #GST #Demonetization
    திருப்பூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.

    தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே கமல்ஹாசன் பேசினார். பின்னர் தாராபுரம் மற்றும் எல்லப்பாளையத்தில் அரச மரத்தடியில் அமர்ந்து கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

    தொடர்ந்து காங்கேயம், பல்லடம், வீரபாண்டி, திருப்பூர் சி.டி.சி. கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி கமல்ஹாசன் பேசினார். இறுதியாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஏற்றுமதியாளர்களை சந்தித்து கமல்ஹாசன் பேசினார். அவர் பேசியதாவது:-

    கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு பின்னலாடை துறை சரிவை கண்டிருக்கிறது. பணமதிப் பிழப்பு , ஜி.எஸ்.டி உள்ளிட்ட மும்முனை தாக்குதலால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சினிமாத் துறையும் இதில் பாதிக்கப்பட்டது. அதற்கான கடுமையான குரலை நானும் எழுப்பியிருக்கிறேன். உங்களுக்கான உரிமையை நீங்கள் கேட்டுபெறுங்கள் அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழகத்தின் தொழில் துறை மற்ற மாநிலங்களை நோக்கி செல்கிறதென்றால் அதற்கு மத்திய மாநில அரசுகளே காரணம். இழந்தபின்பு ஆறுதல் தெரிவிப்பதை விடுத்து இழப்பு ஏற்படும் முன் அதனை சரிசெய்ய கவனம் செலுத்தவில்லை.

    மேற்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மக்கள் பல குறைகளை தெரிவித்திருக்கின்றனர் . அவற்றை சரி செய்ய மக்கள் நீதி மய்யம் முனைப்பு காட்டும்.

    தமிழக வளர்ச்சிக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் மக்கள் நீதி மய்யம் செயல் திட்டங்களை உருவாக்கி வருகிறது. அதனை தொழில் துறையோடு கலந்து பேசி செயல்படுத்த முனைப்பு காட்டுவோம்.

    மக்கள் நீதி மய்யத்தின் ஸ்லோகமான ‘நாளை நமது’ என்பதை மக்கள் உணர்ந்து கொண்டதால் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் எங்களுக்கான பலம் அதிகமாக இருப்பதை உணர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பல்வேறு இடங்களில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    கிராமங்கள் தான் நகரங்களுக்கு உணவு அளிப்பவர்கள். எல்லாம் செய்தது போல சிலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழலை நாம் தான் ஒழிக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் செய்வது மட்டுமல்ல, மக்கள் அனைவரும் இணைந்து செய்ய வேண்டும்.

    படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும். நகரத்தார் எல்லாம் கிராமம் நோக்கி நகரும் காலம் விரைவில் வரும். முன்னேற்றங்கள் கிராமத்தை நோக்கி நகர வேண்டும். நல்லது எல்லாம் ஒன்று கூட ஆரம்பித்து விட்டது. அது தான் நாம் ஒன்று சேர்ந்திருப்பது.

    கிராமசபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கிராமங்களை நோக்கி செல்கிறேன். கிராம சபை கூட்டங்கள் புதைக்கப்பட்டுள்ளது. அதை தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

    சட்டமன்றத்துக்கு இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமலே மக்கள் நீதி மய்யம் கட்சி மக்கள் நலனுக்காக கேள்விகளை கேட்டது. யார் தடுத்தாலும் தடைகளை வென்று சரித்திரம் படைப்போம். என்னைப் பல இடங்களில் நான் மக்கள் முன் பேசுவதற்கு பல தடைகளை இடுகின்றனர். நாம் சந்தித்து பேசி விடப்போகிறோம் என்ற பயத்தில் நான் பேசப்போகும் இடங்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர்.

    கல்வியை தாங்கிபிடிக்க வேண்டிய அரசு அதை விடுத்து மதுக்கடைகளை தாங்கி நிற்கிறது. இளைஞர்கள் அனைவரையும் நான் வேலை தேடும் இளைஞர்களாக பார்க்கவில்லை. வருங்கால முதலாளிகளாக தான் பார்க்கிறேன்.

    எனக்கு தெரியும் முதலாளிகளை எங்கு வைக்க வேண்டும், திருடர்களை எங்கு வைக்க வேண்டும் என்று. இது மின்னல் போல் வந்து மறைந்து செல்லும் பயணம் அல்ல. இது தொடரும். பல்வேறு இடையூறுகளிடையே காவல்துறையினர் நமக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். காவல்துறையினருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்கள் பணிக்கு நாம் இடையூறு செய்ய அளிக்க கூடாது. நமது இயக்கம் கட்டுப்பாடு நிறைந்த இயக்கம்.

    இவ்வாறு அவர் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #GST

    யாரும், யாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கருணாஸின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Karunas
    பீளமேடு:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசினார். மேலும் கல்லூரி மாணவர்கள், தொழில்துறையினருடன் கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து இன்று சென்னை செல்வதற்காக பீளமேடு விமானநிலையத்துக்கு வந்த கமல்ஹாசனிடம் நடிகர் கருணாஸ் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து நிருபர்கள் கேட்டனர்.


    அதற்கு பதில் அளித்து பேசிய கமல்ஹாசன், இன்னும் அந்த பேச்சை கேட்கவில்லை. அதற்கு முன்னர் அதுகுறித்து பேசுவது நியாயமாக இருக்காது. இருப்பினும் யாரும், யாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் அளித்தார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Karunas
    நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் போதாது. மாணவர்களாகிய நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று தாராபுரத்தில் கமல்ஹாசன் பேசினார். #Kamalhaasan #MakkalNeedhiMaiam
    தாராபுரம்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவன தலைவர் கமல்ஹாசன் திருப்பூர் மாவட்டத்தில் இன்று மக்களுடனான பயணம் மேற்கொண்டார்.

    தாராபுரம் மகாராணி கல்வி நிறுவனத்தில் அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். திறந்த வெளியில் நின்று அவர் பேசியதாவது:

    நான் கல்லூரிகளில் பேசக்கூடாது என கூறி மேடை கொடுக்க மறுத்து தடை விதிக்கிறார்கள். மாணவர்கள் திறந்த வெளியில் நிற்கிறீர்கள். அதனால் தான் நானும் திறந்த வெளியில் நின்று பேசுகிறேன்.



    நாளைய பற்றிய சிந்தனையை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். அதை சொல்வதற்காகவே இங்கு உங்கள் முன் வந்திருக்கிறேன். இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். இளைஞர்கள் பங்கு அரசியலுக்கு தேவை.

    நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் போதாது. மாணவர்களாகிய நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும். என் மக்கள், என் தமிழகம் என்று அனைவரும் நினைத்து பாடுபட வேண்டும்.

    மாணவர்கள் அரசியல் புரிந்து கொள்வார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு பயம் வந்து விட்டது. நாளைய தமிழகத்தை உருவாக்கும் வலிமை உங்களிடம் உள்ளது. அதனை மறந்து விடாதீர்கள்.

    நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த மகிழ்ச்சி டி.வி.யில் கிடைக்காது. வெயிலில் நிற்கும் இந்த அன்பு உன்னதமானது. பிக்பாசும், சினிமாவும் எனக்கு புகழை தேடி தரலாம். ஆனால் நேரில் இங்கே வந்திருக்கும் இந்த மக்கள் கூட்டம் தான் எனக்கு அன்பை தருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பொன்னிவாடி எல்லப்பாளையம் சென்றார். அங்குள்ள நல்ல தங்காள் அணையில் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசும் போது, தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சபை உள்ளது. கிராம சபை குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    நான் மட்டும் லஞ்சத்தை ஒழிக்க வரவில்லை. உங்களுடன் இணைந்து லஞ்சத்தை ஒழிக்க வந்துள்ளேன். நீங்கள் சேர்ந்தால் தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்றார்.


    தினகரனுடைய அ.ம.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேசவும் இல்லை. அவர்களுடன் இணைந்து போட்டியிடுவது குறித்துச் சிந்திக்கவும் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #TTVDhinakaran
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம் கோவையில் நடை பெற்றது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    கேள்வி :- எதற்காக இந்த பயிலரங்கம்?

    பதில் :- நிர்வாகிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட பயிலரங்கம் இது. வெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டு அறிவுரை வழங்கினர். தேர்தலை எதிர்கொள்ளும் முறைகளையும் கூறினர்.

    அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகராக இருந்த அவினாஷும் இங்கு வந்து பயிற்சியளித்தார். இன்னும் நிறைய கற்க வேண்டியுள்ளது என்பதைத் தெரிந்துகொண்டோம். அடுத்த பயிலரங்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

    கேள்வி :- தினகரன் கட்சியுடன் கூட்டணி என்று தகவல் வருகிறதே?

    பதில்:- தினகரனுடைய அ.ம.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேசவுமில்லை. அவர்களுடன் இணைந்து போட்டியிடுவது குறித்துச் சிந்திக்கவும் இல்லை.

    கே:- பாஜகவினர் மாற்றுக் கருத்துக்கு ஆற்றும் எதிர் வினை குறித்து?

    ப:- பா.ஜ.கவினர் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லக் கூடாது என நினைக்கின்றனர். அது, ஜனநாயக நாட்டில் ஒத்துவராத ஒரு வி‌ஷயம்.

    கே:- அ.தி.மு.கவினர் சப்பாணி என படத்தின் கேரக்டரைச் சொல்லி உங்களை கிண்டல் செய்கிறார்களே?

    ப:- பதிலுக்கு நாங்கள் ஏதாவது சொன்னால் வருத்தப்படுவார்கள்.

    ப:- தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் இந்தப் பயிலரங்கில் ஆலோசித்து வருகிறோம். இடைத்தேர்தலைவிட பெரிய களத்தில் இறங்குவோம். அதற்கான நேரம் வந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என நிர்வாகிகள் சொல்கின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு விட்டது. மாற்றம் மாற்றம் எனப் பேசிக் கொண்டு இருக்காமல் மாற்றமாகவே செயல்பட்டு வருகிறோம்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையும், பெட்ரோல்-டீசல் விற்கப்படும் விலைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இதை பார்க்கும் போது மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை என்பது அழுத்தமாக தெரிகிறது. தலைமை செயலகத்தில் இருந்த ஊழல் தற்போது சிறை வரை பரவி விட்டது.

    பின்னர் குனியமுத்தூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அவர் பேசியதாவது:-

    உங்களையும், எங்களையும் உரையாடுவதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. நமக்கு வெட்டவெளி போதும். நாம் அங்கே நின்று பேசுவோம். நீங்கள் திரளுங்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் தகர்த்துக் கொண்டு நீங்கள் சொல்கிற இடத்துக்கு வருவேன்.

    இளைஞர்கள் இளம் வயதில் அரசியலுக்கு வர வேண்டும். தற்போதைய அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும். கறைபடாத ஆட்சியும், மக்களுக்கு பயன்படும் அரசும் தான் இனி வர வேண்டும். வருங்காலத்தில் அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டு வருவதில் இளைஞர்களின் பங்கு மிகவும் அவசியமானது. இளைய தலைமுறை நினைத்தால் அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

    இளைஞர்கள் யாருக்கும் லஞ்சம் தரக்கூடாது. ஊழலை நீக்க நாம் சரியாக இருக்க வேண்டியது அவசியம். நல்ல வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர் கமல்ஹாசன் பொள்ளாச்சியில் மக்களுடனான பயணத்தை தொடங்கினார். அங்கு அவர் பேசியதாவது:-

    பொள்ளாச்சியில் மக்களை சந்திக்க விடாமல் இருக்க இடையூறுகள் செய்யப்பட்டது. மக்களை சந்தித்து பேச 10 நிமிடம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்கு வழங்கப்பட்ட 10 நிமிடங்கள் வேண்டாம், 3 நிமிடங்களில் கூட புரட்சி உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #TTVDhinakaran
    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான 2 நாள் பயிலரங்கம் கோவையில் இன்று தொடங்கியது.
    கோவை:

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான 2 நாள் பயிலரங்கம் கோவையில் இன்று தொடங்கியது.

    அவினாசி சாலையில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் நடைபெற்ற இந்த பயிலரங்கத்தில் கட்சியின் செயற் குழு உறுப்பினர்களாக ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும், சிறப்பு அழைப்பாளராக கவிஞர் சினேகன் கலந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சி திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்த ஆலோசனைகளை செயற் குழு உறுப்பினர்கள் வழங்கினர். சிறப்பு அழைப் பாளரான கவிஞர் சினேகன் பொறுப்பாளர்கள் மத்தியில் பேசினார். இந்த கூட்டத்தில் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    நாளை(19-ந் தேதி) நடைபெறும் 2-வது நாள் பயிலரங்கத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.

    கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்கு சென்று பயிலரங்கில் பங்கேற்கிறார். தொடர்ந்து மாலை 3 மணிக்கு குனியமுத்தூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மக்களுடனான பயணத்தை தொடங்கி பேசுகிறார். அதன்பின்னர் பொள்ளாச்சி மின்னல் மகாலில் நடைபெறும் அரிமா சங்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்.

    நாளை மறுநாள்(20-ந் தேதி) காலை 11 மணிக்கு திருப்பூர் மாவட்டம் பொன்னிவாடியில் மக்களுடனான பயணத்தை தொடங்குகிறார்.

    அங்கிருந்து தாராபுரம், காங்கேயம், பல்லடம், திருப்பூர் நகரில் சின்னாண்டிபாளையம், வீரபாண்டி பிரிவு, சி.டி.சி. டெப்போ, புதிய பஸ் நிறுத்தம், எஸ்.ஏ.பி. தியேட்டர் சந்திப்பு, பாப்பீஸ் ஓட்டல் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து உரையாடுகிறார்.
    தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு இணையாக கைவசம் பல்வேறு படங்களை வைத்திருக்கும் வரலட்சுமி அடுத்ததாக நடித்து வரும் படத்திற்காக கமல் தனது படத் தலைப்பை விட்டுக் கொடுத்திருக்கிறார். #RaajaPaarvai #Varalakshmi
    விஜய்யின் ‘சர்கார்’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, `மாரி 2' விமலின் கன்னி ராசி, ஜெய்யின் ‘நீயா 2’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்கள் தற்போது வரலட்சுமி கைவசம் உள்ளன. 

    கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நடிப்பதற்கு சவாலான வேடங்களில் நடிக்கும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் குவிகின்றன. வரலட்சுமி அடுத்து ஜே.கே. இயக்கத்தில் பார்வை திறனற்றவராக ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் வரலட்சுமி தான் கதையின் நாயகி. இந்த படத்துக்கு முதலில் ராஜபார்வை என்று தலைப்பு வைக்க விரும்பினார்கள். 



    ஆனால் கமலின் அனுமதிக்காக காத்திருந்ததால் தலைப்பு இல்லாமலேயே படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இந்த தலைப்புக்கு கமல் சம்மதமும் அனுமதியும் அளித்துவிட்டார். படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்க இருக்கிறது. #RaajaPaarvai #Varalakshmi #KamalHaasan

    கோவை,திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் கமல்ஹாசன் வருகிற 19, 20-ந் தேதிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கிறார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

    கோவை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மதுரையில் “மக்கள் நீதி மய்யம்” எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

    அன்றே நடந்த முதல் அரசியல் மாநாட்டில், அவர் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார். வெள்ளை நிறத்தின் மத்தியில் 6 இணைந்த கைகள் இருப்பது போன்று அவரது கட்சிக்கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து கடந்த 7 மாதங்களாக தனது கட்சிப் பணிகளை நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக செய்து வருகிறார். முக்கிய பிரச்சினைகள் மீது தனது கருத்தையும் வெளியிட்டு வருகிறார்.

    சமீபத்தில் கட்சியின் உள் கட்டமைப்பை மாற்றி அமைத்த கமல்ஹாசன், கட்சி உறுப்பினர்கள் சேர்க்கையையும் தீவிரப்படுத்தியுள்ளார். தேர்தல்கள் நெருங்குவதால் அடுத்தக்கட்டமாக அவர் மக்களை சந்திக்க தயாராகி வருகிறார்.

    அதன்படி தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற் கொண்ட சுற்றுப் பயணம் பொதுமக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது.

    இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக கமல்ஹாசன் கொங்கு மண்டலத்தில் தனது மக்கள் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    அதன்படி கமல்ஹாசன் வருகிற 19, 20-ந் தேதிகளில் 2 நாட்கள் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். கோவையில் வருகிற 18, 19-ந் தேதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் பயிலரங்கம் அவினாசி சாலையில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் நடைபெறுகிறது.

     


    இதில் 2-வது நாள் (19-ந்தேதி) பயிலரங்கில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். பயிலரங்கில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடி கட்சியின் வளர்ச்சி பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கி பேச உள்ளார்.

    அன்று மதியம் கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கமல்ஹாசன் பேசுகிறார். இதன்பின்னர் பொள்ளாச்சி செல்லும் அவர் அங்கு மக்களுடனான பயணத்தை தொடங்குகிறார்.

    பொதுமக்களை சந்தித்து பேசிய பின்னர் பொள்ளாச்சி மின்னல் மகால் மண்டபத்தில் நடைபெறும் அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். அன்று இரவு பொள்ளாச்சியில் தங்குகிறார்.

    மறுநாள்(20-ந்தேதி) திருப்பூர் மாவட்டத்தில் அவர் மக்களுடனான பயணத்தை தொடங்குகிறார். அன்று திருப்பூர் பொன்னிவாடி, தாராபுரம், காங்கயம், பல்லடம், திருப்பூர் மாநகரில் சின்னான்டி பாளையம், வீரபாண்டி பிரிவு, சி.டி.சி. கார்னர், புதிய பஸ் நிலையம், எஸ்.ஏ.பி. தியேட்டர், பாப்பீஸ் ஓட்டல் அருகில் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து கமல்ஹாசன் உரையாடுகிறார்.

    கமல்ஹாசன் கடந்த ஜூன் மாதமே கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சுற்றுப் பயணம் திடீரென தள்ளி வைக்கப்பட்டது.

    தற்போது கமல்ஹாசன் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சியினர் கமல் ஹாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்ட மிட்டுள்ளனர்.

    சுற்றுப் பயணத்தின் போது பொது மக்கள் பிரச்சினை குறித்து கமல்ஹாசனிடம் எடுத்து கூறவும் திட்டமிட்டு உள்ளனர். கொங்கு மண்டலத்தில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் கமல்ஹாசனின் மக்கள் பயணம் சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KamalHaasan #MakkalNeedhiMaiam

    சினிமாவில் இனி நான் வேலை பார்ப்பது என்றால் என் கட்சியை நடத்துவதற்கான செலவுக்காக மட்டும்தான். அரசியலை தவிர எனக்கு வேறு வேலைகள் இருக்கக்கூடாது. இருக்காது என்று கமல்ஹாசன் கூறினார். #KamalHassan #MakkalNeedhiMaiam
    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் கலை விழா நேற்று நடந்தது. கமல்ஹாசன் விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    மருத்துவர்களின் பெருமை, பெயர் இல்லாவிட்டாலும் பல 100 வரு‌ஷம் வாழும். இந்த மருத்துவக் கல்லூரியை உருவாக்கிய ஐடாஸ்கடர் பெயர். அவர் முகம் மறந்து போகலாம். ஆனால் அவர் விட்டுச்சென்ற இந்த கல்வி காட்டில் மலர்கள் மலர்ந்து கொண்டும், கனிகள் கனிந்து கொண்டே இருக்கும்.

    நாளைய மருத்துவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நாங்கள் எல்லாம் இந்த மருத்துவ கல்லூரியில் நடனம் ஆடினோம் என்றுதான் பெருமைகொள்ள முடியும். ஆனால் உங்கள் பெருமை 100 ஆண்டுகள் ஆனாலும் நீடிக்கும்.

    8-ம் வகுப்பு கூட மிதிக்காத நான் இங்கு வந்தது உங்களுக்கு மகிழ்ச்சி. எனக்கு பெருமை. நான் இங்கு வந்தது ஒரு தாகத்தால். எனக்கு நல்ல தமிழகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் தாகமும் இருக்கிறது. அது எனக்கு மட்டும் இல்லை. கைதட்டும் அனைவருக்கும் இருக்கிறது.

    நல்ல தமிழகம் என்பது ஒரு மனிதரிடம் இருந்து வருவது அல்ல. பலர் அதை நினைக்க வேண்டும். நாங்கள் திட்டமிடுவது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறது அரசு அல்ல. அன்புஅரசு 100 ஆண்டுகள் கூட இருக்கும். மருந்து, மாத்திரை தாண்டி ஏழைகளை நோக்கி உங்கள் மருத்துவம் நீள இருக்கிறது.

    மனிதநேயம் உங்கள் மூலம் இன்னும் வாழும். அதை காப்பாற்ற வேண்டியது என் கடமை. அதற்காக எந்த மூலையில் இருந்தாலும் உங்களைத் தேடி வருவேன்.

    நான் இப்போது செய்துகொண்டிருப்பதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருந்தால் நான் இப்படி உங்களுடன் சேர்ந்து புலம்பிக்கொண்டிருக்க மாட்டேன். தமிழகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதை பற்றி சிந்தித்துகொண்டிருப்போம்.

    நமக்கு எதுக்கு, இது எல்லாம் ஏன் என்று யோசித்தேன். என் சலவை சட்டை கசங்கிவிடுமோ என்று பயந்தேன். இனி பயப்பட மாட்டேன். ஏதோ சினிமா வசனம் பேசுவது போல் தோன்றலாம். ஆனால் அப்படி இல்லை. இதை எல்லாம் எப்போதோ சினிமாவில் பேசிவிட்டேன்.

    நாங்கள் மற்றவர்களுக்காக சிரிப்பவர்கள், அழுபவர்கள். எனவே நான் இப்போது பேசுவதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். மீதம் இருக்கும் என் நாட்கள் என்னை வாழ வைத்த மக்களுக்காகத்தான்.



    இனி நான் சினிமாவில் வேலை பார்ப்பது என்றால் என் கட்சியை நடத்துவதற்கான செலவுக்காக மட்டும்தான். அரசியலை தவிர எனக்கு வேறு வேலைகள் இருக்கக்கூடாது. இருக்காது. இதை உங்களிடம் சொல்லக் காரணம் இவரே செய்யும்போது நான் செய்யக்கூடாதா என்ற எண்ணம் உங்களுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான்.

    நான் ஒரு சினிமா நடிகனாக சம்பாதித்து செட்டில் ஆகி நிம்மதியாக சென்று இருக்கலாமே... 63 வயதில் ஏன் இங்கே வரவேண்டும்? இதை சிந்தியுங்கள். 23, 24 வயதில் நான் செய்யக்கூடாதா என்று உங்களுக்கு தோன்ற வேண்டும்.

    கல்லூரியில் அரசியல் பேசக்கூடாது என்பார்கள். கட்சி அரசியல் தான் பேசக் கூடாது. மக்கள் அரசியல் பேசலாம். உங்களை ஆட்டுவிப்பதே அரசியல் தான். அதை பேச ஏன் தயங்க வேண்டும்?

    உங்கள் பங்களிப்பு இருந்தால் தான் நாட்டை மாற்ற முடியும். அரசியலை அசிங்கம் என்று நினைத்து விடக்கூடாது. ஒதுங்கக்கூடாது.

    மாணவர்கள் அரசியல் பேசியே ஆக வேண்டும். வருங்காலம் உங்களை ஆட்டி வைக்க போகிறதா? நல்லதாக அமைய போகிறதா? என்பதை அரசியல் தான் முடிவு செய்கிறது.

    அரசியலை கண்டு ஒதுங்காதீர்கள். புரிந்து கொள்ளுங்கள். அரசியலில் மாணவர்கள் பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் நாட்டை திருத்த முடியும்.

    ஏழைகள் காசு வாங்கி கொண்டு ஓட்டுபோடும் அந்த கொடுமையை மூழ்கடிக்க மாணவர்களின் வெள்ளத்தால் தான் அடித்து செல்ல முடியும்.

    இப்போது ஒதுங்கிவிட்டால் வயதான பிறகு என்னை போல் வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும். இது என்னோடு போகட்டும்.

    அந்த வருத்தம் இந்த தலைமுறையினருக்கு இல்லாமல் போக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #KamalHassan #MakkalNeedhiMaiam

    ஸ்வராஜ் இந்திய கட்சி தலைவரும், சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நேரில் சந்தித்தார். #KamalHassan #YogendraYadav
    சென்னை:

    ஸ்வராஜ் இந்திய கட்சி தலைவரும், சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது இருவரும் தமிழக விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்கச் சென்ற யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு, கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு கமல்ஹாசனுக்கு இந்த சந்திப்பில் யோகேந்திர யாதவ் நன்றி கூறினார். அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த யோகேந்திர யாதவ், “மக்கள் நீதி மய்யத்தின் தேவை தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிற்கும் இன்றியமையாததாக இருக்கும்”, என்று கூறினார்.

    மேற்கண்ட தகவல் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #KamalHassan #YogendraYadav
    ×