search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    நடிகர் கமலுக்கு திரைப்படத்திலும், அரசியலிலும் நாகரீகம் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார். அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழ் மக்களின் விருப்பத்துக்காகவே தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 



    தமிழகத்தில் விஷ விதைகளை விதைத்து கமல் குளிர் காய நினைக்கிறார். அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மதக்கலவரம் ஏற்படுத்த கமல் விரும்புகிறாரா?

    தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் பேசக்கூடாது. கமல் நடித்த படங்களிலும், அரசியலிலும் நாகரீகம் இல்லை. அ.ம.மு.க.வில் சேர்ந்தவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என தெரிவித்தார்.
    வரலாற்று உண்மையை துணிவுடன் கூறிய கமல்ஹாசனை பாராட்டுகிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி உள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசிய கருத்துஅரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிற நிலையில் ‘தான் சொன்னது சரித்திர உண்மை’ என்று அவர் உறுதிபட கூறியுள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலைமலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- கோட்சே குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- அவர் ஒரு வரலாற்று உண்மையை துணிச்சலாக பேசி இருக்கிறார். அதை வரவேற்று பாராட்டுகிறேன். இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது அவருடைய நோக்கமல்ல.

    இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் நடந்த முதல் பயங்கரவாத நடவடிக்கை காந்தி படுகொலையாகும். அதைத்தான் கமல்ஹாசன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

    கே:- கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று தற்போது கமல்ஹாசன் சொல்லி இருப்பது ஒட்டுமொத்த இந்துக்களையும் காயப்படுத்துவதாக கூறுகிறார்களே?

    ப:- இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது அவரது நோக்கமில்லை. கோட்சே இந்து மதத்தை சார்ந்தவர் தான் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய நிலை தற்போது எழுந்துள்ளது. கோட்சே வாழ்க, காந்தி ஒழிக என்று அண்மையில் உத்தரபிரதேசத்தில் இந்து மகாசபையை சேர்ந்த ஒரு பெண்மணி முழக்கமிட்டார். காந்தி படத்தை பொது இடத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் தான் கமல்ஹாசன் போன்றவர்களை பேச வைத்துள்ளது.

    நாதுராம் கோட்சே கிறிஸ்தவரோ, முஸ்லீமோ அல்ல. அவர் இந்து மதத்தை சார்ந்தவர் என்பது உலகறிந்த உண்மை. அந்த வரலாற்று உண்மையை அவர் சுட்டிக் காட்டியதில் என்ன தவறு இருக்கிறது. சங்பரிவார் அமைப்புகளே அவரை இந்து என்பதால்தானே தூக்கிவைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

    அவர் கோட்சேவை இந்து என்று உரிமை கொண்டாடலாம், ஆனால் கமல்ஹாசன் அவரை இந்து என்று சொல்லக்கூடாதா?

    கே:- கோட்சேவை தீவிரவாதி என்பதை விட பயங்கரவாதி என்றுதான் சொல்லியிருக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது ஏன்?

    ப:- நானும் வரலாற்று உண்மையைத் தான் கூறுகிறேன். உண்மையில் காந்தியடிகளை இந்து தீவிரவாதி என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் இந்து மதத்தின் மீது தீவிர பற்றுதலை கொண்டிருந்தார். ஆனால் கோட்சே இந்து தீவிர பற்றாளரான காந்தி அடிகளையே சுட்டுக் கொன்றார்.

    எனவே கோட்சேவிடம் இருந்தது தீவிரவாதம் அல்ல பயங்கரவாதம். எனவே அவர் ஒரு பயங்கரவாதி என்பதுதான் உண்மை.



    கே: பிரதமர் மோடி நடிகர் கமல் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறாரே?

    ப: அவர் வட இந்தியாவில் நடைபெறும் இறுதி கட்ட தேர்தலுக்கு கமல் எதிர்ப்பை பயன்படுத்தி கொள்ள விரும்புகிறார். இந்துக்களின் வாக்கு வங்கியை குறி வைத்து நாடகம் ஆடுகிறார். ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒரு தீவிரவாதி இந்துவாக இருக்க முடியாது என்று வேதாந்தம் பேசுகிறார். இது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் என்ற பழமொழியை நினைவூட்டுகிறது.

    மோடி சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு வான் உயர சிலை நிறுவி இருக்கிறார். அந்த பட்டேல் தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று சொன்னவர். அவர் காலத்தில்தான் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது.

    கோட்சேவை பட்டேல் உள்ளிட்ட இந்து தீவிரவாத சிந்தனையாளர்கள் பயங்கரவாதி என்றே கண்டித்து இருக்கிறார்கள். இவையெல்லாம் வரலாற்று உண்மைகளாகும். வரலாற்றை திரித்து ஆதாயம் தேடுவதை சங்பரிவார் கும்பல் தொழிலாக கொண்டு இருக்கிறது. ஆகவேதான் கமலை அச்சுறுத்துகிறார்கள்.

    கே: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலை கடுமையாக எச்சரித்து இருக்கிறாரே?

    ப: இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றுதான். தன்னுடைய பதவிக்கான பொறுப்பை உணர்ந்து அவர் பேசியதாக தெரியவில்லை. கலைஞரின் நாக்கை அடக்க வேண்டும் என்று வட இந்திய சாமியார் ஒருவர் எச்சரித்தது போல அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசி இருக்கிறார். இதிலிருந்து அ.தி.மு.க.வும் சங்பரிவார் அமைப்பின் ஒன்றாக மாறி வருகிறது என்பதை அறிய முடிகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கே: கமலை ஆதரிப்பதில் உங்களுக்கு அரசியல் நோக்கம் இருக்கிறதா?

    ப: வரலாற்று உண்மையை பேசும் கமலை வரவேற்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அவரை அச்சுறுத்தி தனிமைப்படுத்துவதற்கு மதவெறி சக்திகள் முயற்சிக்கின்றன. இந்த இக்கட்டான நிலையில் அவருக்கு ஆதரவு கொடுப்பதை ஒரு ஜனநாயக கடமையாகவே கருதுகிறேன். வேறு எந்த அரசியல் நோக்கமும் எனக்கு இல்லை.

    காந்தியடிகளை கொன்ற கோட்சேவை உயர்த்தி பிடிப்பது காந்திக்கு செய்கிற துரோகம் என்பதைவிட ஜனநாயகத்துக்கும், தேசத்துக்கும் செய்கின்ற துரோகம். இன்னும் பல 10 ஆண்டுகள் ஆனாலும் இந்த விவாதம் இன்னும் விரிவாகவும் வெளிப்படையாகவும் நடந்தே தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் சொன்னது சரித்திர உண்மை என்று கமல் மீண்டும் கூறி உள்ளதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பள்ளப்பட்டி என்ற ஊரில் பேசுகையில் இந்து தீவிரவாதம் என்பது பற்றி குறிப்பிட்டு பேசினார்.

    அவர் கூறுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அவர் காந்தியை கொலை செய்ததற்கு நியாயம் கேட்டு வந்துள்ளேன்” என்றார்.

    நடிகர் கமல்ஹாசனின் பேச்சு இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இதையொட்டி பல இடங்களில் கமல்ஹாசன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஊர்களில் கமல்ஹாசன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மன்னார்குடி ஜீயர் உள்பட ஏராளமானவர்கள் கமல்ஹாசனுக்கு கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதற்கிடையே இந்து தீவிரவாதி என்று கூறியதால் கமல்ஹாசனால் அடுத்த 2 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    தாக்குதல் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர் 2 நாட்கள் பிரசாரத்தை ரத்து செய்தார்.

    இந்த நிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்ததைத் தொடர்ந்து நேற்று கமல்ஹாசன் பிரசாரத்தை தொடர முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.



    அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் சொன்னது சரித்திர உண்மை” என்று உறுதிபட கூறினார். கமல்ஹாசன் மீண்டும் இந்து தீவிரவாதி பற்றி பேசியதால் அவருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    கமல்ஹாசன் நாக்கை மக்கள் அறுப்பார்கள் என்று முதல் ஆளாக எச்சரித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    சட்டை கலையாமல் கமல்ஹாசனை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) மாலை கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்வது உறுதியாகியுள்ளது. பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கி விட்டதாக கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.

    இன்று மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன் ராஜீக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார்.

    பின்னர் வேலாயுதம்பாளையம் மலை வீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் கமல்ஹாசன் பங்கேற்று பேசுகிறார். இதற்கிடையே இந்து முன்னணியினர் அரவக்குறிச்சியில் கமல்ஹாசனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளனர். அனுமதி கிடைக்காவிட்டாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளனர்.

    கமல்ஹாசன் பிரசாரத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அரவக்குறிச்சி தொகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    சட்டை கலையாமல் கமல்ஹாசனை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    இந்து தீவிரவாதம் என்று பேசிய கமல்ஹாசனின் பேச்சுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கமல்ஹாசனை விட சிறப்பாக படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சரித்திர உண்மை என்று சொல்லி சரித்திரத்தை திரித்து பார்க்கிறார். திரித்து வெளியிடுகிறார். ரணத்தை ஆற்றுகிற ரணமாக இருக்கிறது இந்து தீவிரவாதம் என்று சொல்கிறார்.



    ரணமாக இல்லை. அது ஆறிக்கொண்டிருப்பதை குத்திக்கிளறி ரத்தம்வர வைத்து பிரிவினைவாதத்தை தூண்டிக் கொண்டு இருக்கிறார்.

    தேர்தல் பிரசாரத்தில் பேசியதை சாதனை என்று சொல்லி பேசிக்கொண்டு இருக்கிறார். ஆட்சியாளர்களை சட்டை கலையாமல் வீட்டுக்கு அனுப்புவாராம். சட்டை கலையாமல் அவரை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சரித்திர உண்மை, சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
    ஒட்டப்பிடாரம்:

    தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சரித்திர உண்மை, சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்று கூறுவது சரித்திர உண்மையா. அதற்கு முன்பெல்லாம் நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் நிறைய உண்டு.

    அதற்குள் நாம் போக வேண்டாம். அந்த சம்பவங்கள் கசப்பான, மறைக்கப்பட வேண்டிய மன்னிக்கப்பட வேண்டிய சம்பவங்கள். அதை நாம் மீண்டும் பேசினால் மதநல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும்.

    அந்த சம்பவங்களுக்குள் ஒரு சாதாரண மனிதனே போகக்கூடாது. அதுவும் ஒரு நடிகர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விஸ்வரூபம் படம் வெளிவந்த போது இஸ்லாமியர்களை எப்படி பயங்கரவாதிகளாக சித்தரித்து காண்பித்தார் என்பதை அவர்கள் மறக்க மாட்டார்கள். சிறுபான்மையினர் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக கமல் தொடர்ந்து இப்படி பேசி வருகின்றார்.


    வேஷ்டி கசங்காமல் வீட்டிற்கு அனுப்புவேன் என்று கமல் கூறுகின்றார். ராஜ தந்திரி என பெயர் எடுத்த கருணாநிதியாலேயே அ.தி.மு.க.வை அழிக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த ஆட்சி போய்விடும் என்று கூறினர். எடப்பாடி ஆட்சி வெற்றிகரமாக நடந்து வருகின்றது.

    கமல் கத்துக்குட்டி. ஒரு கருத்தை கூறிவிட்டால் பெரிய ஆளாகிவிட முடியாது. கமல் கட்சி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. இந்த தேர்தலில் இவரது கட்சிக்கு எவ்வளவு ஓட்டு விழும் என்று பார்த்து விடுவோம். இவருக்கு யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். எடப்பாடியின் ஏழைகளுக்கான ஆட்சி தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம் மேற்கொள்வார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர்கள் மீது அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நிர்ணயித்தபடி அரவக்குறிச்சி தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்வாரா? என தொண்டர்களிடையே குழப்பம் நிலவியது. எனினும் தேர்தல் விதிகளை பின்பற்றி பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கிவிட்டதாக கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.



    மேலும் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன்ராஜிக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார். வேலாயுதம்பாளையம் மலைவீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார்.
    மதுரை:

    அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 13-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் இது போல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


    இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்  மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும் வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமீன்  கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
    சென்னை:

    இந்து தீவிரவாதி என பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து அமைப்பினர் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.

    இன்று சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் வக்கீல் தமிழ்வேந்தன் மற்றும் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    நடிகர் கமல்ஹாசன் கட்சியை கலைத்து விட்டு கலைச்சேவை செய்ய வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் செல்லூர்ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் கமல்ஹாசன் சினிமா துறையில் பல்வேறு விருதுகள், பட்டங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் அவருக்கு அரசியல் ஞானம் இல்லை. அனுபவம் இல்லை. கமல்ஹாசனுக்கு அரசியல் ஒத்துவராது. அவர் அரசியலுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.

    தற்போது இந்து மதம் குறித்து பேசிய கமல்ஹாசன் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்து விட்டார். அவர் சினிமா துறையில் நல்ல கலைஞன். எனவே கட்சியை கலைத்து விட்டு மீண்டும் கலைச்சேவை செய்ய வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னை அகில இந்திய தலைவர் போல காட்டிக் கொள்ள நினைக்கிறார். அவருக்கு நிலையான கொள்கை, கருத்து என்று எதுவும் கிடையாது.

    இந்த தேர்தலில் தி.மு.க. வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அ.தி.மு. க.வை பொறுத்தவரை என்றும் மதச்சார்பற்ற நிலை தான். ஆனால் தி.மு.க.வினர் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் போல ஏமாற்று நாடகம் போடுகிறார்கள். அதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கும் நிலையில், வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
    கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் - ‌ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது.

    இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால் நிறுத்தப்பட்டதாகவும் மேக்கப் சரியில்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.



    தேர்தல் முடிந்த பிறகும் படப்பிடிப்பு இன்னமும் துவங்கப்படவில்லை. படத்தை தயாரிக்க ஒப்பந்தமான லைகா புரொடக்‌ஷன்ஸ் பின்வாங்கியதால், படத்தை வேறு நிறுவனத்தை வைத்து தயாரிக்க பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    ரிலையன்ஸ நிறுவனம் அல்லது சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க வாயப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து போன்ற சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பேசினால் தமிழகத்தில் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கடந்த 12-ந்தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி பகுதியில் பேசினார்.

    அப்போது அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. பா.ஜனதா சார்பில் அவரது கட்சிக்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக கோவில்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதன் மூலம் அனைத்து இந்துக்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசு மீது நம்பிக்கை வந்துள்ளது.

    மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றது அவரது தேசபக்தியை காட்டுகிறது. அதாவது பிரிவினைவாதத்திற்கு எதிராக அவர் வைத்திருந்த தேச பக்தி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால் நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றது தவறுதான்.


    தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துக்கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என்கிறார். அவரது கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவர் இதுபோன்று சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பேசினால் தமிழகத்தில் நடமாட விடமாட்டோம். கமல்ஹாசன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டது. அதனால்தான் அவர் தொடர்ச்சியாக இந்துக்களுக்கு எதிராக பேசி வருகிறார்.

    கமல்ஹாசன் மட்டுமல்ல, இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம். கமல்ஹாசன் கட்சிக்கு தடை விதிக்க கோரி அகில இந்திய துறவியர் பேரவை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்போம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி கோவிலை விட அதிகமான நகைகள் இருக்கிறது. அதனை முழுமையாக கணக்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மதங்களுக்கிடையே பிரச்சனை வரும் வகையில் பேசியது கண்டனத்திற்குரியது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு, மே. 15-

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று நிருபர் களுக்கு பேட்டியளித்தார்.

    மக்கள் நீதிமய்ய தலைவர் கமலஹாசன் மதங்களுக் கிடையே பிரச்சனை வரும் வகையில் பேசியது கண்ட னத்திற்குரியது.

    அரசியல் கட்சி தொடங்கிய ஒருவர் இப்படி பேசியது வருத்தமாக உள்ளது. நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பது அனைவரின் ஆசை. தேர் தலில் வாக்குகளை பெறும் நோக்கில் பேசியது ஏற்று கொள்ள கூடியது அல்ல.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கமல ஹாசன் பேசியதை விட குற்றம். ஊடகத்தின் கவனத் தை ஈர்க்க இவ்வாறு பேசி யுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்டும் இவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.

    தேர்தலுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி யினருக்கும் தெரியும்.தமிழ கத்தில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொண்டதால் தி.மு.க.வை கூட்டணிக்கு போட்டி போட்டு அழைக் கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    ×