search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95119"

    குன்னூரில் மிட்டாய் குடோனில் பதுக்கி வைத்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் கைது செய்தனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பல பெட்டிக் கடைகளில் தடைசெய்யப்பட்ட போதை பொருளான குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்பட்டது. அவ்வப்போது போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். ஆனால் அவைகள் எங்கிருந்து விற்பனைக்கு வருகிறது என்று தெரியாமல் இருந்தது.

    இதனையடுத்து குன்னூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்குமார், பாலு, சுரேஷ் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். விசாரணையில் குன்னூர் வி.பி. தெருவை சேர்ந்த மொத்த வியாபாரி தியாகராஜன் (வயது 58) என்பவரது குடோனில் இருந்து குட்கா, பான்மசாலா சப்ளை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

    நேற்று போலீசார் அதிரடியாக குடோனில் சோதனை செய்தனர். மிட்டாய், சோப்பு உள்ளிட்டவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பொருள்களுக்கு இடையே ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பண்டல் பண்டல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து தான் பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் தியாகராஜனிடம் குட்கா, பான்மசாலா எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டபோது அவர் பதில் கூறவில்லை.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தியாகராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் எங்கிருந்து குட்கா, பான்மசாலா வாங்கினார் என்பது தெரியவந்தால் கும்பல் சிக்கும் என்று தெரிகிறது.
    புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வசித்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில் உதவி ஆணையர் தலைமையில் 150 போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். #MaduraiCentralPrison

    மதுரை:

    மத்திய சிறையில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. கைதிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை சிறைக்குள்ளேயே அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

    சென்னை புழல் சிறையில் சொகுசு மெத்தை, பீடி, சிகரெட், செல்போன் போன்றவை கைதிகளுக்கு தாராளமாக கிடைத்துள்ளன. இதனை சில கைதிகள் செல்போனில் படம் பிடித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து கடந்த 13-ந் தேதி புழல் சிறையில், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சிறைக்குள் முறைகேடுகள் நடந்தருப்பது தெரியவந்தது. அங்கிருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து கோவை, சேலம், கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை மத்திய சிறைகளிலும் போலீசார் அடுத்தடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின் போது சிறைக்குள் தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சிறைத்துறை டி.ஜ.ஜி. பழனி தலைமையில் திலகர் திடல் போலீஸ் உதவி கமி‌ஷனர் வெற்றிச் செல்வம் கரிமேடு இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் காலை 6.30 மணிக்கு மத்திய சிறைக்கு வந்தனர்.

    மத்திய சிறையின் ஒவ்வொரு பிளாக்குகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மோப்ப நாய் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் பங்கேற்றனர்.

    தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பயங்கரவாதிகள் அறை போன்றவற்றில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையின் போது, சிறையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா, பீடி, சிகரெட் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    காலை 8.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின்போது மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, ஜெயில் அதிகாரி ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். #MaduraiCentralPrison

    சென்னையில் போலீசார் நடத்திய சோதனையில் குடோனில் பதுக்கி வைத்து இருந்த 5 டன் அளவிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #GutkaCaptured #Chennai
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது.

    இந்த குட்கா விவகாரத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதற்கு அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் துணை போனதாகவும் ஒரு வழக்கு விசாரணையில் உள்ளது. பூதாகரமாக மாறிவரும் இந்த குட்கா விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டவிரோத குட்கா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, இன்று போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை நெமிலிச்சேரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் பலனாக 5 டன் அளவிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    குட்காவை பறிமுதல் செய்த காவல்துறை அதிகாரிகள், முத்து ராஜ், முத்து மனோகர் ஆகிய இருவர்ரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #GutkaCaptured #Chennai
    கோவை அருகே மளிகை கடை ஒன்றில் 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரில் இருந்து குட்கா மூட்டைகள் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கோவை:

    கோவை புலியகுளம் பகுதியில் மளிகை கடை ஒன்றில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

    அதன்பேரில் கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு குட்கா விற்பனைக்காக இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக கடை உரிமையாளர் சுயம்புவிடம் (வயது 36) விசாரணை நடத்தினர்.

    அப்போது கடைக்கு அருகே உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து விற்பனைக்காக குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கிருத்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இது குறித்து சுயம்புவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக கோவையில் உள்ள 55 ஆவின் பாலகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது 14 கடைகளில் இருந்து 12.5 கிலோ கலப்பட டீத்தூள், 15 கிலோ அதிக நிறம் கலக்கப்பட்ட உணவு பொருட்கள், 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளனர். சோதனை குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    புலியகுளத்தில் சுயம்பு என்பவரது பெட்டிக்கடையில் இருந்து 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    பெங்களூரில் இருந்து தனியார் பஸ்கள், ரெயில்களில் குட்கா மூட்டைகள் கொண்டு வரப்படுவதாக புகார் கூறப்படுகிறது. எனவே கோவைக்கு வரும் ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் அதிகாலை நேரத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gutka
    கோவை அருகே சட்டவிரோதமாக இயங்கிய குட்கா ஆலையின் உரிமையாளர் அமித் ஜெயின் வெளிநாடு தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    கோவை:

    கோவை சூலூர் கண்ணம் பாளையத்தில் இயங்கி வந்த குட்கா ஆலையில் கடந்த ஏப்ரல் 27-ந் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அங்கிருந்து 650 கிலோ எடை கொண்ட ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா மற்றும் குட்கா தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆலையில் இருந்து சட்ட விரோதமாக கடந்த 5 ஆண்டுகளாக குட்கா தயாரிக்கப்பட்டு, 4 மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

    இதுதொடர்பாக ஆலை மேலாளர் ரகுராம் மற்றும் வடமாநில ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    ஆலை உரிமையாளரான டெல்லியை சேர்ந்த அமித் ஜெயின்(வயது 38) கூறிய நபர்களுக்கு மட்டும் குட்கா சப்ளை செய்யப்பட்டதாக மேலாளர் ரகுராம் கூறினார். இதைத்தொடர்ந்து அமித் ஜெயின் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு டெல்லி விரைந்தனர்.

    போலீஸ் தேடும் தகவல் அறிந்து அமித்ஜெயின் செல்போனை சுவிட்ச்-ஆப் செய்து விட்டு தலைமறைவானார். தனிப்படை போலீசார் அமித்ஜெயினின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அமித்ஜெயினை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    அமித்ஜெயின் வெளிநாடு சென்று விட்டதாக அவரது சகோதரர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளிடம் கூறி உள்ளார். ஆனால் அமித்ஜெயின் எங்கு சென்றார் என்று எங்களுக்கு தெரியாது என அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.

    எனவே அமித்ஜெயின் வெளிநாடு தப்பி சென்றது உண்மை தானா? அவ்வாறு சென்றிருந்தால் எந்த நாட்டில் பதுங்கி உள்ளார்? என்பதை கண்டு பிடிப்பதற்காக பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டு வருகின்றனர்.

    இந்த விவரம் கிடைத்ததும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்ப போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இதன் மூலம் அமித்ஜெயின் நாடு திரும்பினால் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே அமித் ஜெயின் தரப்பில் முன்ஜா மீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


    கோவையில் லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 850 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 வட மாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை பெரியகடை வீதி போலீசார் நேற்று இரவு ராஜவீதி தேர்முட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பண்டல், பண்டல்களாக இருந்ததை கண்டுபிடித்தனர்.

    ஆட்டோவில் இருந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், ஜோதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். லோடு ஆட்டோவில் 28 பண்டல்களில் மொத்தம் 850 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் அங்கு சென்று குட்கா பண்டல்களை ஆய்வு செய்தனர். பின்னர் அவற்றை கைப்பற்றி ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கண்ணம்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டவிரோதமாக இயங்கி வந்த குட்கா ஆலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர். இந்த ஆலையில் இருந்து தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு குட்கா அனுப்பி வைக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்தநிலையில் கோவை மாநகருக்குள் விற்பனைக்காக கடத்தி வந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குட்கா பண்டல்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? யாருக்காக கொண்டு வரப்பட்டது? என விசாரித்த போது, ஆட்டோவில் இருந்த 2 வாலிபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    வெளிமாநிலத்தில் இருந்து வாகனங்கள் மூலம் இந்த குட்கா பண்டல்கள் கடத்தி வரப்பட்டதா? அல்லது கோவை மாவட்டத்திலேயே மேலும் குட்கா ஆலைகள் இயங்கி வருகிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
    ×