search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    சத்தியமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை செய்து கொண்டார்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை செய்து கொண்டார். அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன். இவருடைய மகள் நிவேதா (வயது 21). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். மேலும் ஆஸ்பத்திரி அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நிவேதா ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார். அப்போது அவர் மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்பக்கமாக கதவை தாழ் வைத்துக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அந்த அறைக்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தார்கள். அப்போது அவர் அங்குள்ள மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் இதுபற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தூக்கில் பிணமாக தொங்கிய நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதல் தோல்வி காரணமாக நிவேதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆரல்வாய்மொழி அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரசுதன் (வயது 34). இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாத கைக்குழந்தை உள்ளது.

    ஹரிகரசுதன் குமாரபுரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நேற்று ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார்.

    பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வெள்ளமடத்தை அடுத்த விசுவாசபுரம் வரும்போது எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஹரிகரசுதன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் தேவஇறக்கம் (வயது 75). இவர் நேற்று தோவாளை அருகே உள்ள கிறிஸ்தவ சபைக்கு சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்புவதற்காக ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட தேவஇறக்கம் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவஇறக்கம் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து தேவஇறக்கம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் யாருடையது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துடியலூர் அருகே யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    மதுரை மாவட்டம் மனக்காலகுடியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தடாகம் அருகே உள்ள ஆனைகட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த யானை லட்சுமணனை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டெல்லியில் வேலை கிடைக்காததால் விரக்தியடைந்த வாலிபர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Mancommitssuicide
    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தின் போஜ்பூரி பகுதியைச் சேர்ந்தவர்  சவுரவ்(30). பீகாரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பக் கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் வேலை தேடி பீகாரில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார்.

    டெல்லியின் அசோக் நகர் பகுதியில் வீடு ஒன்று எடுத்து தங்கி கடந்த 2 மாதங்களாக வேலை தேடி வந்துள்ளார்.  எங்கும் வேலை கிடைக்காததால் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி நேற்று காலை மயூர் விகார் மேம்பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து மையூர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை 9 மணி அளவில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சவுரவை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சவுரவ் உயிரிழந்ததையடுத்து, அவர் தங்கியிருந்த அசோக் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர். அவரது டைரியை கைப்பற்றினர். அதில், வேலை கிடைக்காததால் கடும் விரக்தியில் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சவுரவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. #Mancommitssuicide

    விமான விபத்தில் உயிரிழத்ந அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலாவின் உடல் மீட்கப்பட்ட நிலையில், விமானியைத் தேடும் பணிகளுக்காக கால்பந்து வீரர் ஒருவர் 27000 பவுண்டு அளித்துள்ளார். #Argentinianfootballer #EmilianoSala #pilotmissing
    கார்டிப்:

    அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் வாங்கியது. கடந்த ஜனவரி 19 அன்று  கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ கையெழுத்திட்டார். பின்னர் பிரான்ஸ் திரும்பிய எமிலியானோ சலா, ஜனவரி 21 மாலை ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

    சானல் தீவுகளுக்கு அருகே திடீரென அவரது விமானம் மாயமானது. விமானத்தில் பயணம் செய்த எமிலியானோ மற்றும் பைலட் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இதையடுத்து எமிலியானோ சலாவின் உடல் கடந்த 7ம் தேதி கடலுக்கடியில் கண்டறியப்பட்டது. ஆனால் விமானி டேவிட் இபோட்சன் குறித்து எந்த தகவலும் இன்றும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தேடுதல் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.



    இந்நிலையில் காணாமல் போன விமானியை தேடும் பணிகளுக்காக பிரெஞ்சு கால்பந்து வீரர் கைலன் மப்பே 27000 பவுண்டு (இந்திய ரூபாய் மதிப்பில் 24,87,547) நிதியுதவி வழங்கியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேரி லிங்கர் 1000 பவுண்டு வழங்கி உள்ளார்.

    விமானியை தேடும் பணிக்காக அவரது குடும்பத்தினர் நிதி திரட்டி வருகின்றனர். 3 லட்சம் பவுண்டுகள் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை 7000க்கும் மேற்பட்டோரிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டுகள் வரை நிதி வந்துள்ளது. #Argentinianfootballer #EmilianoSala #pilotmissing

    சீனாவின் கிழக்கு பகுதியில் இன்று 23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய சம்பவத்திலும் மற்றொரு சாலை விபத்திலும் சிக்கிய 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #13killed #Chinahighwayaccidents #23vehiclespileup
    பீஜிங்:

    சீனாவின் சந்திர புத்தாண்டு விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற லட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பிக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வந்த 23 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்மீது ஒன்றாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

    இதேபோல், குயிஸோவ் மாகாணத்தின் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு மினி பஸ் காரின் மீது மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர். அவசரமாக தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பி செல்லும் நோக்கத்தில் பனி உறைந்திருக்கும் சாலைகளில் வாகன ஓட்டிகள் மிதமிஞ்சிய வேகத்தில் சென்றதால் இந்த விபத்துகள் நேர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #13killed #Chinahighwayaccidents #23vehiclespileup
    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய வான் தாக்குதலில் தலீபான் தளபதி உள்ளிட்ட 6 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. #Afghanistan #Taliban #AirStrike
    கஜினி:

    ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணத்தில் காராபாக் மாவட்டத்தின் ஜமால் கில் பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நாசவேலை நடத்த சதி செய்து கொண்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பு படைகள் அதிரடியாக வான்தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகினர். பலியானவர்களில் தளபதி ரபியுல்லாவும் ஒருவர் என தகவல்கள் கூறுகின்றன. தலீபான்கள் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப் படுகிறது.

    இந்த தாக்குதல் பற்றி மாகாண அரசு செய்தி தொடர்பாளர் ஆரிப் நூரி கூறும்போது, “வான்தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதி ரபியுல்லா மிகவும் கொடூரமானவர். அவர் கொல்லப்பட்டு விட்டதால், அந்தப் பகுதியில் இனி பாதுகாப்பு நிலை மேம்படும்” என குறிப்பிட்டார்.

    இந்த தாக்குதல் பற்றி தலீபான்கள் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.  #Afghanistan #Taliban #AirStrike 
    குத்தாலம் அருகே வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    குத்தாலம்:

    குத்தாலம் அருகே திருவாவடுதுறை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் மகன் சரவணன் (வயது 29). சரக்கு ஆட்டோ டிரைவர். கடந்த 3 மாதங்களாக சரவணன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமாகவே சரவணன், பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சரவணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மூலனூரில் தொழிலாளி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி விசாரணை நடத்தி வருகின்றார்.
    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஈஸ்வரன்கோவில் வீதியை சேர்ந்த தண்டபானி என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன்(38) இவர் மூலனூரில் இரும்பு பட்டறையில்வேலை பார்த்து வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், சக்திவேதாஷ்(7)என்ற மகனும், சக்திஷ்னா(3), சக்திஸ்ரீ(2) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் மூலனூர்-அக்கரைப்பாளையம் சாலையில் மூலனூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். இவருக்கு முன்னால் ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது வஞ்சிவலசு பிரிவு அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி வளைவில் திடீர் என நின்றதால் பின்னால் வந்த பாலசுப்பிரமணியன் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கத்தில் பலமாக மோதியதில் பாலசுப்பிரமணியனில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

     தகவல் அறிந்த மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலா பயணம் செய்த விமானம் மாயமானதையடுத்து, தற்போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. #Argentinianfootballer #EmilianoSaladead
    கார்டிப்:

    அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் வாங்கியது. கடந்த ஜனவரி 19 அன்று  கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ கையெழுத்திட்டார். பின்னர் பிரான்ஸ் திரும்பிய எமிலியானோ சலா, ஜனவரி 21 மாலை ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

    சானல் தீவுகளுக்கு அருகே திடீரென அவரது விமானம் மாயமானது. விமானத்தில் பயணம் செய்த எமிலியானோ மற்றும் பைலட் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஞாயிறு காலை மாயமான விமானம் விபத்துக்குள்ளானது என கண்டறிந்தனர். இந்த விமானத்தின் இடிபாடுகளில் சிக்கி இருந்த சடலம் திங்கள் அன்று மீட்கப்பட்டது.  இதையடுத்து நேற்று சடலத்தினை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது , அது எலிமியானோ சலா என்பது உறுதி செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Argentinianfootballer #EmilianoSaladead

    திருச்சுழி அருகே தந்தை திட்டியதால் கல்லூரி மாணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    திருச்சுழி:

    திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரையைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 19). அருப்புக்கோட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் சரியாக படிக்காததால் இவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த கார்த்திகேயன் பூச்சி மருந்து குடித்தார். பின்னர் அருப்புக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    வண்டலூர்:

    பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கோகுல் சந்திரன் (வயது 19). தனியார் பஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் முத்துராமன் (வயது 23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவர்கள் இருவரும் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு ஓரே மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை நோக்கி நேற்றுமுன்தினம் சென்று கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு மறைமலைநகர் அருகே செல்லும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோகுல் சந்திரன், முத்துராமன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்து போன 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×