search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    பொள்ளாச்சி அருகே விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள கிட்டி மல்லன் புதூர் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. கூலி தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று மாலை வி‌ஷம் குடித்து விட்டார்.

    அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திருமூர்த்தியை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் அம்பராம் பாளையத்தை சேர்ந்த சுப்பு லட்சுமி (50), பேச்சியம்மாள் (40), கஞ்சிமலை (60), மாசாணி (55), அம்மாசை (50), சக்திவேல் (27), பிரேம் குமார் (24) ஆகியோர் ஒரு ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆட்டோவை கனகராஜ் ஓட்டி வந்தார். இந்த ஆட்டோ நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பொள்ளாச்சி திருவள்ளூவர் திடல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கேரளா நோக்கி சென்ற வேன் ஆட்டோ மீது மோதியது.

    இதில் ஆட்டோ டிரைவர் கனகராஜ் மற்றும் அதில் பயணம் செய்த 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த டிரைவர் கனகராஜ், பேச்சியம்மாள், கஞ்சிமலை, மாசாணி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால் வழியிலே டிரைவர் கனகராஜ் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரிவிக்கக்கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    குன்னம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா காங்கையன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் உத்தாண்டம். இவருடைய மகன் உதயநிதி(வயது 17). இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கியிருந்து பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் உதயநிதி நேற்று முன்தினம் இரவு பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உதயநிதியுடன் அறையில் தங்கி இருக்கும் மாணவர்கள் அங்கு சென்று பார்த்தபோது உதயநிதி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் கூறினர். இதையடுத்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த மாணவனின் உறவினர்கள் உதயநிதி இறந்ததற்கான காரணம் தெரிவிக்கக்கோரி பெரம்பலூர்- அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த மறியலால் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் விசாரணையில், உதயநிதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 474 மதிப்பெண் பெற்றுள்ளார். இருப்பினும் தற்போது புதிய பாடதிட்டத்தில் அதிக மதிப்பெண் எடுக்கவில்லை. இதனால் கடந்த வாரம் வந்த அவரது தாய் தேன்மொழி நன்றாக படிக்க வேண்டும் என உதயநிதியை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் உதயநிதி தங்கி இருந்த 6 மாணவர்களின் பெற்றோர்கள் வந்து அவர்களை பார்த்து சென்றதாகவும், அப்போது உதயநிதி விடுதி அறை தோழனின் தந்தையிடம் செல்போன் வாங்கி தனது தாய், தந்தையிடம் பேசியதாகவும், அதன் பின்னர் சோகத்துடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த மாணவர் உதயநிதியின் உடலை பார்ப்பதற்கு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் நேற்று மதியம் வந்தனர். அப்போது மாணவர் உதயநிதி சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரேத பரிசோதனை மையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகையை கைவிட வைத்தனர். பின்னர் மாலையில் டாக்டர்கள் உதயநிதியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து உதயநிதியின் உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பார்வதி நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 43). லாரி டிரைவர் மனைவி பெயர் மல்லிகா (24). மைதிலி (8) என்ற ஒரு மகளும் பிரதீப்குமார் (6) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு 9.15 மணியளவில் பாஸ்கர் தனது மகனுடன் சத்தியமங்கலம் சென்று விட்டு சிக்கரசம்பாளையம் சென்று கொண்டிருந்தார்.

    சத்தியமங்கலம் அருகே கள்ளுக்கடை பிரிவில் வந்தபோது தாளவாடியிலிருந்து திருப்பூர் நோக்கி காய்கறிகள் ஏற்றி கொண்டு ஒரு மினி வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது.

    இதில் இருவருக்கும் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் பலியான தந்தை-மகன் உடல்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மணமேல்குடி அடுத்த ஏகனிவயலில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
    மணமேல்குடி:

    மணமேல்குடி அடுத்த ஏகனிவயல் கிராமத்தை சேர்ந்தவர் லூக்காஸ் மகன் சார்லஸ் (வயது 30). இவரது உறவினர்கள் மார்கோனிராஜ் (31), லியோ. இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் கட்டுமாவடிக்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். ஆடலை பகுதி அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜவேலு என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சார்லஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதில் படுகாயமடைந்த மார்கோனிராஜ், ராஜவேலு ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லியோ லேசான காயமடைந்தார். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்த மார்கோனிராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 
    காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
    கரூர்:

    கரூர் அருகே உள்ள ரெங்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 30). சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் புவனேசுவரி (25). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கரூர் பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக தீனதயாளன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனையடைந்த புவனேசுவரி வீட்டின் ஒரு அறையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் புவனேசுவரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறார். புவனேசுவரிக்கு திருமணமாகி 4 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதால், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார். புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள தேவர்முக்குலம் பகுதியை சேர்ந்தவர் காவேரி. இவரது மகன் விஜய்குமார் (வயது28). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். சுருளிஅள்ளி பகுதியை சேர்ந்த சேட்டு மகன் மணிகண்டன் (23). இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை விஜய்குமாரும், மணிகண்டனும் சுருளி அள்ளியில் உள்ள பெருமாள் கோவில் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் அங்கு நள்ளிரவு திருவிழாவை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது ஏரிக்கரை என்று இடத்தில் சாலையோர மின்கம்பம் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆம்புலன்சில் போகும் வழியிலேயே விஜய்குமார், மணிகண்டன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பிரேசில் நாட்டில் இரும்புத் தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. #BrazilDamCollapse
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது. அங்கு தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    இதுதவிர அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி  நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகள் சேதமடைந்ததால், அப்பகுதியில் சகதியில் சிக்கிய பொதுமக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பாதுகாப்பு காரணமாக அங்கு வசிக்கும் பலர் வெளியேற்றப்பட்டனர். அருகில் உள்ள மற்றொரு அணையும் மோசமான நிலையில் இருந்ததால், நேற்று மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இன்று மீட்பு பணி மீண்டும் தொடங்கியது.



    நேற்று நிலவரப்படி இந்த விபத்தில் 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் மேலும் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 58 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புக்குழு அறிவித்துள்ளது. தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் என 305 பேரைக் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 192 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில், 23 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

    காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சகதிக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. #BrazilDamCollapse
    பீகார் மாநிலத்தில் குடியரசு தினவிழாவில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். #RepublicDay #Electrocuted
    பாட்னா:

    பீகார் மாநிலம் கோபால்கன்ஜ் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று குடியரசு தினவிழா நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதேபோல் பைகுந்த்பூரில் உள்ள அரசு அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், அருகில் உள்ள உயர்அழுத்த மின்கம்பியில் கொடி கம்பம் உரசியதால், மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    அரியாங்குப்பத்தில் காய்கறி வியாபாரி மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலியான சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் என்.ஆர். நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது81). இவர் தள்ளுவண்டி மூலம் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் ரோட்டில் தள்ளுவண்டியை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது காளியப்பன் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட காளியப்பன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் இன்றுகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குடியாத்தம் ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி மோட்டார் சைக்கிளோடு 40 அடி பள்ளத்தில் விழுந்த 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    குடியாத்தம்:

    பள்ளிகொண்டா செல்லியம்மன் நகரை சேர்ந்த ஜெயசீலன் மகன் பிரதீப் (வயது 20), பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சரவணன் மகன் நவீன் (20), அய்யாவூ நகரை சேர்ந்த சேட்டு மகன் அபிநாஸ் (20) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் நோக்கி சென்றனர்.

    குடியாத்தம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்புச்சுவரில் மோதியது.

    அப்போது நிலைதடுமாறி சுமார் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து மோட்டார்சைக்கிளுடன் 3 பேரும் கீழே விழுந்தனர்.

    அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்ப முயன்றனர்.

    அதற்குள் படுகாயம் அடைந்த வாலிபர்கள் 3 பேரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புஜங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவருடைய மனைவி சுதாராணி(வயது 32). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சுதாராணி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று சுதாராணிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதாராணி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 2,360 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கேரளா உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வந்து சிகிச் சை பெற்று செல்கின்றனர்.

    இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 2,360 பேருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தான் அதிகளவு வருகின்றனர். இங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நவீன கருவிகள் வாங்கப்பட்டு சிறந்த முறையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து நோய்களுக்கும் தனித்தனி பிரிவுகள் தொடங்கப்பட்டு சிகிச்சை அளிப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடும்ப தகராறு உள்பட பல்வேறு விதமான பிரச்சினைகள் காரணமாக மனவேதனை அடையும் சிலர் தற்கொலை என்ற விபரீத முடிவை எடுக்கின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 2,507 பேர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2,360 பேர் நல்ல முறையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடுதிரும்பினர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த 147 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். இதில், எலி மருந்து, தென்னை மரத்துக்கு போடப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றவர்கள் அதிகம்.

    வாழ்க்கையில் எவ்வளவு தான் பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் தற்கொலை முடிவை எடுக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
    ×