search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    சிறுபாக்கம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிறுபாக்கம்:

    சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலை மகன் பிச்சன்(வயது 50), விவசாயி. இவர் தனது வயலில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டது. இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்குகளை மாலையில் ஒரு லாரியில் ஏற்றி, அதனை சேலம் கிழங்கு ஆலைக்கு எடுத்து செல்வதற்காக புறப்பட்டார். அப்போது புறப்படுவதற்கு முன்பாக பிச்சன் லாரியின் முன்புறம் கற்பூரத்தை பற்ற வைத்து கீழே குனிந்த படி சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார்.

    இதை கவனிக்காத டிரைவர், லாரியை இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கிய பிச்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதற்குள் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதற்கிடையே இதுபற்றி அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான பிச்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சை அருகே பஸ்சுக்காக காத்திருந்த போது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சாவூர்:

    திருச்சி கள்ளர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கவுரி (வயது 56).

    இவர் தனது உறவினர்களான புதுக்கோட்டை வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்த கருப்பையன் (55), மாரிமுத்து (65) ஆகியோருடன் நேற்று மாலை தஞ்சைக்கு வந்தார்.

    தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அவர்கள் 3 பேரும் வந்திருந்தனர். பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 பேரும் இரவு 11.30 மணியளவில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    அந்த சமயத்தில் தஞ்சையில் இருந்து பாபநாசம் உடையார் கோவிலுக்கு ஒரு கார் தாறுமாறாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார், திடீரென பஸ்சுக்காக காத்திருந்த கவுரி, கருப்பையா, மாரிமுத்து ஆகிய 3 பேர் மீதும் மோதியது. இதில் கவுரி, கருப்பையா ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மாரிமுத்து காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் மாரிமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து பற்றி தஞ்சை தாலுகா போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கவுரி, கருப்பையா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் , பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ரமணி (48) என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    ஆரணி அருகே போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த கீழ்அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 50). இவர் போளூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கரண் (6), முகில் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    முனியன் கடந்த 18 நாட்களாக விடுப்பு எடுத்து வீட்டில் தங்கி இருந்தார். மேலும் முனியனுடன் பணிபுரிந்து வரும் ஏட்டுகள் அனைவருமே சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுவிட்டனர். மனைவியும் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இதனால் அவர் மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் நேற்று காலை கீழ்அய்யம்பேட்டை பகுதியில் உள்ள குளக்கரை அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியன் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இன்று அதிகாலை அரசு பஸ்- வேன் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மயிலம்:

    சிவகங்கை மாவட்டம் எஸ்.காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் அங்குசாமி (வயது 50). இவர் தனது குடும்பத்தினருடன் சிவகங்கையில் இருந்து தனக்கு சொந்தமான வேனில் சென்னை நோக்கி புறப்பட்டார். அந்த வேனை அங்குசாமி ஓட்டினார்.

    இந்த வேனில் அங்குசாமியின் மனைவி லட்சுமி (48), அவரது உறவினர் சிவகங்கை அருகே உள்ள கட்டான்குளத்தை சேர்ந்த உமாபதி (35), உமாபதியின் மனைவி விஜி (28) மற்றும் பலர் இருந்தனர்.

    இவர்கள் வந்த வேன் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள விலங்கம்பாடி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

    அதேபோல் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு விரைவு பஸ் ஒன்று திருச்சி நோக்கி சென்றது. அந்த பஸ்சை திண்டுக்கல் மாவட்டம் வக்கிரபட்டியை சேர்ந்த அருணானந்தன் என்பவர் ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவராக குப்பத்துபட்டியை சேர்ந்த பிரபு (37) என்பவரும் இருந்தார்.

    அந்த பஸ் மயிலம் அருகே உள்ள விலங்கம்பாடி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது விலங்கம்பாடி என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது அரசு பஸ் டிரைவர் எதிர்பாராதவிதமாக மறுபுறம் உள்ள சாலைக்கு பஸ்சை திருப்பினார்.

    சிறிது தூரம் பஸ் சென்றது. அப்போது அந்த பஸ் மாற்றுச்சாலையில் செல்வதை உணர்ந்த அரசு பஸ் டிரைவர் என்ன செய்வது என்று தெரியாமல் பஸ்சை அங்கேயே நிறுத்தினார்.

    அப்போது அந்த சாலையில் அங்குசாமி குடும்பத்தினர் வேன் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. விபத்தில் வேனில் பயணம் செய்த அங்குசாமி, அவரது மனைவி லட்சுமி, உறவினர் உமாபதி, உமாபதியின் மனைவி விஜி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் வேனில் பயணம் செய்த விக்னேஷ்வரன் (31), ரேகா (28), 1½ வயது குழந்தை நித்திஷ், பவித்ரன் (4), அரசு பஸ்சில் பயணம் செய்த டிரைவர்கள் அருணானந்தன், பிரபு, சென்னை சோளிங்கநல்லூரை சேர்ந்த குமரவேல், கரூரை சேர்ந்த நவீன் (25) உள்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலம் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 24 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கென்யாவில் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரியும் மினி பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானதில் மினி பஸ்சில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர். #KenyaAccident
    நைரோபி:

    கென்யாவின் கிசுமு பகுதியில் இருந்து நைரோபி நோக்கி எரிவாயு ஏற்றிக்கொண்டு நேற்று மாலை ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. கெரிசோ-நகுரு நெடுஞ்சாலையில் கப்மகா பகுதியில் வந்தபோது, பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் மினி பஸ் கடுமையாக சேதம் அடைந்து, இடிபாடுகளில் பயணிகள் சிக்கி உடல் நசுங்கியது.

    இந்த விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    விபத்து தொடர்பாக கெரிசோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #KenyaAccident
    ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே அருகே கடோமா நகரில் உள்ள 2 சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டு இருந்த அணை உடைந்ததில் 23 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ஹராரே :

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இதில் தலைநகர் ஹராரேயில் இருந்து 145 கி.மீ. தொலைவில் உள்ள கடோமா நகருக்கு அருகே உள்ள 2 சுரங்கங்கள் நீண்ட காலமாக பயன்பாடின்றி கிடக்கின்றன.

    இந்த சுரங்கங்களில் சமீபத்தில் சட்ட விரோதமாக நுழைந்த சிலர் தங்க வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால், சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டு இருந்த அணை ஒன்று கடந்த 12-ந்தேதி இரவு திடீரென உடைந்தது. அதிலிருந்து கரைபுரண்டு ஓடிய வெள்ளம் 2 சுரங்கங்களிலும் நிறைந்தது. இதில் 23 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஜிம்பாப்வேயில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    லாரியில் ஏற்றிச்சென்ற நெல் அறுவடை எந்திரம் மீது மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்.
    கீழப்பழுவூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா நாகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மகன் மோகன்ராஜ்(வயது 22). இவர் தனது தாய் மாமா மாரியப்பனுக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரத்தை, அறுவடைக்காக ஓட்டி வந்தார். இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தை சேர்ந்த சுதாகரின் வயலுக்கு, நெற்பயிர்களை அறுவடை செய்வதற்காக நேற்று மாலை மோகன்ராஜ், அவருடைய தாய்மாமா மகன் மகேந்திரனுடன்(25) டிப்பர் லாரியில் அறுவடை எந்திரத்தை ஏற்றிக்கொண்டு சென்றார். லாரியை மகேந்திரன் ஓட்டினார். மோகன்ராஜ், லாரியில் ஏற்றப்பட்டிருந்த நெல் அறுவடை எந்திரத்தில் அமர்ந்திருந்தார். சுதாகரின் வயலுக்கு செல்லும் வழியில் மின்சார கம்பிகளை கவனிக்காமல் லாரியை, மகேந்திரன் ஓட்டியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மின்சார கம்பிகள் நெல் அறுவடை எந்திரத்தின் மீது உரசியது. இதனால் நெல் அறுவடை எந்திரத்தில் அமர்ந்திருந்த மோகன்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் லாரியை ஓட்டிய மகேந்திரன் கீழே குதித்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மின்வாரிய ஊழியர்கள் மூலம் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதையடுத்து மோகன்ராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இன்று காலை கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 45). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை 8 மணியளவில் விருத்தாசலம்-சேலம் புறவழிச்சாலையில் பொன்னேரி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அதேபோல் செந்துறை தாலுகா கடந்தைப்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான வரதராஜன்(35) என்பவர் இன்று காலை தான் ஓட்டி வந்த லாரியை விருத்தாசலம் புறவழிச்சாலையில் நிறுத்தி விட்டு அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.

    அப்போது வடலூரை சேர்ந்த டிரைவர் சிவக்குமார்(50) புதுக்கூரைப் பேட்டையில் இருந்து ஈரோட்டை நோக்கி காரை ஓட்டி சென்றார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ராஜேந்திரன், லாரி டிரைவர் வரதராஜன் ஆகியோர் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் கார் டிரைவர் சிவக்குமார் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விருத்தாசலம் போலீசில் சரண் அடைந்தார்

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று கார் மோதி இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சிரியா நாட்டின் டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 70 பேர் உயிரிழந்தனர். #USledairstrike #civilianskilled #Syriaairstrike
    டமாஸ்கஸ்:

    சிரியா நாட்டில் முன்னர் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். எஞ்சியுள்ள சிலர் யூப்ரட்டஸ் நதிக்கரையின் ஓரத்தின் உள்ள மறைவிடங்களில் பதுங்கி வாழ்கின்றனர்.

    அவ்வகையில், டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக பாகோவ்ஸ் நகரம் உள்ளிட்ட இடங்களில் வசித்துவந்த சுமார் 20 ஆயிரம் வெளியேற்றப்பட்டனர்.



    இந்நிலையில், இப்பகுதியில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான உள்நாட்டு விமானப்படை இன்று  தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது அங்குள்ள தற்காலிக முகாமின் மீது குண்டுகள் விழுந்ததில் பொதுமக்களில் 70 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். #USledairstrike #civilianskilled #Syriaairstrike
    ராஜஸ்தானில் பரவி வரும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. #SwineFlu
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. பார்மர், ஜெய்சால்மர், ஜெய்ப்பூர், உதய்பூர் மற்றும் சிட்டோர்கர் ஆகிய பகுதிகளில் நேற்று 5 பேர் பலியாகினர். இதன்மூலம் இந்த ஆண்டின் துவக்கம் முதல் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 112 பேர் உயிரிழந்துள்ளனர்.  

    இதுதவிர நேற்று மட்டும் 79 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஜெய்பூரில் 36 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. பார்மரில் 9 பேர், ஜுன்ஜுனுவில் 4 பேர்,  டவுசா, பிகானர், கங்காநகர் மற்றும் உதய்பூரில் தலா 3 பேர், சிகார், ஜோத்பூர், ஜெய்சால்மர், கோட்டா, நாகவுர், அஜ்மீர் மற்றும் ராஜ்சமந்த் பகுதிகளில் 14 பேர், பில்வாரா, பரான், பரத்பூர் மற்றும் அல்வர் பகுதிகளில் 4 பேரும் பன்றிக்காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஹச்1என்1 வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. #SwineFlu  
    மெக்சிகோவில் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். #Mexico #PlaneCrash
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அதிசாபன் டி ஸரகோசா நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. இதில் 2 பேர் இருந்தனர்.

    விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. #Mexico #PlaneCrash  
    மேல்மலையனூர் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
    மேல்மலையனூர்:

    சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இசக்கி மனைவி ஞானாம்பாள்(வயது 52). இவர் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(39), லாவண்யா(25), சென்னை கடப்பேரியை சேர்ந்த உதயசங்கர்(51), ராஜாத்தி(48), அக்‌ஷயா(5), கவின்(3), கார்த்திக்ராஜன்(19), சீதாபுரத்தை சேர்ந்த சரவணன்(29), பாபு(38) ஆகியோருடன் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அரசு பஸ் மூலம் செஞ்சிக்கு வந்தார். பின்னர் அவர்கள் 10 பேரும் ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு செஞ்சியில் இருந்து மேல்மலையனூருக்கு புறப்பட்டனர்.

    மேல்மலையனூர் அடுத்த கன்னலம் பாலம் அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஞானாம்பாள், சுரேஷ்குமார் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர். அக்‌ஷயா, கவின், கார்த்திக்ராஜன் மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    இதற்கிடையே தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் ஞானாம்பாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மீதமுள்ள 6 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×