search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டு"

    கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் நாட்டுவெடிகுண்டு வீசியதால் பதட்டம் உருவானது. #Fishermen #SriLankaNavy #TNFishermen

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை இங்கு மீன்பிடிக்க கூடாது திரும்பி செல்லுங்கள் என எச்சரித்தனர்.

    இதனைத்தொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குள் நுழைந்து அங்கு இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் தூக்கி எறிந்தனர். மேலும் மீனவர்கள் மீது இரும்பு பைப், கற்களை வீசி தாக்கினர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில் ஒரு படகில் ‘டமார்’ என வெடி சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அந்த படகின் அடிப்பகுதியில் தீ பிடித்தது. மீனவர்கள் உடனடியாக அதனை அணைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக கரை திரும்பினர்.

    கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே இலங்கை கடற்படையினர் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று அவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை. ஆனால் படகு மட்டும் சேதம் அடைந்தது. இதே நிலை நீடித்தால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்றனர். #Fishermen #SriLankaNavy #TNFishermen

    இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 450 கிலோ எடையிலான வெடிக்காத குண்டு கொல்கத்தாவில் தூர்வாரும் பணியின்போது கண்டெடுக்கப்பட்டது. #WWIIbomb #Kolkataport
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் ஹூக்ளி நதியை ஒட்டியுள்ள கரைப்பகுதியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில், நதியையொட்டியுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துறைமுகம் பகுதி அருகே நேற்று நடைபெற்ற இந்தபணியின்போது  450 கிலோ எடையிலான நான்கரை மீட்டர் நீளமுள்ள வெடிக்காத குண்டு கொல்கத்தாவில் அகழ்வு பணியின்போது கண்டெடுக்கப்பட்டது.


    இரண்டாம் உலகப்போரின்போது இந்த பகுதியை அமெரிக்க கப்பல்படையினர் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த வெடிகுண்டினை செயலிழக்க வைப்பதற்காக ராணுவம் மற்றும் கடற்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா துறைமுகம் தலைவர் வினீத் குமார் தெரிவித்துள்ளார். #WWIIbomb #Kolkataport
    ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகளை நிரப்பியபோது கார் வெடித்து சிதறியதில் 35 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். #AfghanistanTaliban #Talibankilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால் ராணுவ முகாம்கள் மற்றும் ரோந்து வாகனங்கள் மற்றும் போலீசார் மீது தலிபான்கள் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டியுள்ள கந்தஹார் மாகாணம், மருஃப் மாவட்டத்தில்  ராணுவத்தினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக ஒரு காரில்  தலிபான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டிருந்தனர்.

    அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கார் வெடித்து சிதறியதில் 35-க்கும் அதிகமான தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. எனினும், இந்த தகவலை தலிபான்கள் மறுத்துள்ளனர். #AfghanistanTaliban #Talibankilled
    பெட்ரோல் பங்கை தகர்த்து விடுவேன் என வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் 4-வது முறையாக கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பீர் முகமது (வயது 36).

    இவர் உக்கடம் அருகே பாலக்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்குக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். பெட்ரோல் நிரப்பியதும் ஊழியர் பணம் கேட்ட போது பீர் முகமது தகாத வார்த்தைகளால் திட்டினார். பங்க் ஊழியர்கள் அவரை கண்டித்தனர்.

    இதனால் ஆவேசமடைந்த பீர்முகமது நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் வெடிகுண்டு வைத்து இந்த பங்கை தகர்த்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    இதுகுறித்து ஊழியர்கள் பங்க் உரிமையாளர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர் முகமதுவை கைது செய்தனர்.

    கைதான பீர் முகமது மீது ஏற்கனவே இதுபோல 3 வழக்குகள் உள்ளன. கடந்த ஜூன் மாதம் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து குனியமுத்தூரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியதாக கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பின்னர் ஜூலை மாதம் மீண்டும் ஒரு முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதானார்.

    ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோல வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இவர் மீது வழக்கு உள்ளது. தற்போது 4-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிளாரி கிளிண்டன் உட்பட பலருக்கும் வெடிகுண்டுகளை தபால் மூலம் அனுப்பிய நபரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary #FBI
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    அந்த வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பார்சல்களை இடைமறித்து அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர்.



    இவர்கள் மட்டுமின்றி, ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹாலிவுட் நடிகருக்கும் இதுபோன்ற தபால்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரமாக தேடுதல் வேட்டையை துவங்கிய போலீசார், 56 வயதான சீசர் சாயோக் என்பவரை கைது செய்துள்ளனர்.

    வெடிகுண்டு பார்சல் ஒன்றில் இருந்த இவரது கைரேகையை வைத்து இவரை கைது செய்துள்ளதாக எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். இவர் மீது வெடிமருந்து கடத்தல், சட்டவிரோதமாக வெடிமருந்துகளை தபால் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் இவருக்கு 58 ஆண்டுகள் சிறைவாசம் தண்டனையாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    மேலும், இவரை கைது செய்ததன்மூலம் இந்த விவகாரம் முடியவில்லை எனவும், தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary #FBI
    கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #BombThreat #TrainBombThreat

    போரூர்:

    சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு இன்று காலை 6.50 மணிக்கு ஒரு மர்ம போன் வந்தது.

    அதில் பேசியவர், சென்னையில் இருந்து செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு போன் தொடர்பை துண்டித்து விட்டார்.

    இதுகுறித்து வடபழனி இன்ஸ்பெக்டர் சந்துரு விசாரணை செய்தார். கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட போன் நம்பரை வைத்து அது யார் என்பதை கண்டுபிடித்தார்.

    வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான நவின் குமார் என்பவர் போனில் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நவின் குமார் கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் காட்பாடி. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த மூன்று மாதங்களாக தங்கி வேலை தேடி வந்தேன். தற்போது விடுமுறை நாள் என்பதால் சொந்த ஊர் செல்வதற்காக கோடம்பாக்கத்தில் இருந்து மின்சார ரெயில் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடி செல்ல முடிவு செய்தேன்.

    இன்று காலை கிளம்பினேன். ஆனால் நான் செல்வதற்கு சற்று நேரமாகி விட்டதால் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறினால் ரெயில் புறப்பட காலதாமதமாகும். எனவே கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #BombThreat #TrainBombThreat

    கே.கே.நகரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ADMK #Bombthreat

    போரூர்:

    சென்னை கே.கே. நகர் ராணி அண்ணா நகர் குடியிருப்பு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு ரூ. 1 லட்சத்து 42 ஆயிரம் நிதி வழங்கும் நிகழ்ச்சி அப்பகுதியில் நடந்தது.

    இதில் விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. வி.என். ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ‘கே.கே. நகரில் எம்.எல்.ஏ. பங்கேற்கும் நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதுபற்றி உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அசோக் நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜ், கே.கே. நகர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஜூலியுடன் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் சோதனை நடத்தினர்.

    ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என்பது கண்டறியப்பட்டது.இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய மர்ம நபர் குறித்து கே.கே. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது. #ADMK #Bombthreat

    ஆப்கானிஸ்தானில் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்ததில் 5 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். #Afganistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்களினால் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என பலர் உயிரிழந்துவருகின்றனர். அவர்களை ஒடுக்க அரசும், அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நங்கர்ஹார் மாகாணத்தில் சாலையில் வெடிகுண்டு ஒன்று பதுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த வழியாக வந்த போலீஸ் வாகனம் அந்த வெடிகுண்டின் மீது ஏற, வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 5 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் தான் இதுபோன்று வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து தாக்குதல் நடத்துவார்கள் என போலீஸ் அதிகாரி கைஸ் சைஃபி தெரிவித்துள்ளார்.

    கடந்த புதன்கிழமை அன்று இதேபோல் மறைத்துவைக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. #Afganistan
    வந்தவாசி சிவன் கோவிலில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடி பகுதியில் ஜலகண்டேஸ்வரர், பெருமாள் சன்னதி உள்ள பிரசித்திப் பெற்ற கோவில் உள்ளது. சமீபத்தில் தான் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக வந்தனர். அப்போது, பிரகாரத்தில் பந்து வடிவில் உள்ள ஐஸ்கிரீம் டப்பா கிடந்தது.

    எப்போதும், கோவிலில் இருக்கும் பவுனம்மாள் என்ற 70 வயது மூதாட்டி, குழந்தைகள் விளையாடும் பந்து என்று நினைத்து அதை எடுத்து கோவிலில் உள்ள பாறை மீது வைத்தார்.

    அப்போது, அந்த பந்தில் இருந்து வெடி மருந்துகள் கீழே கொட்டின. இதனால் வெடிகுண்டு என்று நினைத்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து, கோவிலில் இருந்து வெளியே தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    தகவலறிந்ததும் வந்தவாசி டி.எஸ்.பி. பொற்செழியன், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். வெடி மருந்து நிரப்பப்பட்ட பந்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், கற்களையே பிளக்கும் வெடி மருந்துகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.

    சமூக விரோத கும்பல் யாரேனும் சதி திட்டம் தீட்டி கோவிலில் பந்து வடிவிலான வெடிகுண்டை பதுக்கி தாக்குதலுக்கு நடத்த முயற்சித்தனரா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, வெடி மருந்து பந்து மீது தண்ணீரை ஊற்றிய போலீசார், மருந்தை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெடி மருந்து பந்தை வீசிவிட்டு சென்ற மர்ம நபர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் வந்தவாசி பகுதியில் பெரும் பீதியும், பரபரப்பான சூழலும் காணப்படுகிறது.
    ×