search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்சம்"

    லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 4 ஆண்கள் சிறை தண்டனை விடுத்து திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    திண்டுக்கல்:

    பழனி அருகில் உள்ள சின்னகலையம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டு மனையை அளவீடு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு நெய்க்கா ரபட்டி பிர்கா சர்வேயர் வெற்றிவேலை அணுகினார். அப்போது அளவீடு செய்து பட்டா மாறுதல் தருவதற்கு பரிந்துரை செய்ய ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். சுப்பிரமணி இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தெரிவிக்கவே வெற்றிவேலை கையும் களவுமாக அவர்கள் கைது செய்தனர்.

    இது குறித்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவரும், சிறப்பு நீதிபதியுமான நம்பி தீர்ப்பு அளித்தார்.

    ஊழல் தடுப்பு சட்டம் 1988 சட்டப்பிரிவு 7 மற்றும் 13-க்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    லஞ்சப்புகார் வழக்கில் இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் உள்ளிட்ட 6 பேரை நேற்று சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது. #CBI #SAI #Corruption
    புதுடெல்லி:

    இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிலுவையில் உள்ள ரூ.19 லட்சம் ‘பில்’ தொகையை வழங்க 3 சதவீதம் கமிஷன் கேட்டதாக சி.பி.ஐ. யிடம் புகார் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய தலைமை அலுவலகத்துக்கு நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென்று சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். டெல்லி லோதி சாலையில் உள்ள ஒரு அலுவலகத்திலும் சோதனை போட்டனர்.

    இதைத்தொடர்ந்து, இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குனர் எஸ்.கே.சர்மா, இளநிலை கணக்கு அதிகாரி ஹரிந்தர் பிரசாத், சூப்பர் வைசர் லலித் ஜாலி, மற்றொரு அதிகாரியான வி.கே.சர்மா மற்றும் தனியார் நிறுவன காண்டிராக்டர் மன்தீப் அகுஜா, அவரது அலுவலக ஊழியர் யூனுஸ் ஆகிய 6 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.#CBI #SAI #Corruption
    போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறுவேடத்தில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சம்பவத்தின் பின்னணியில் உள்ள தகவலை தெரிந்து கொள்ளலாம். #TrafficInspector
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பதி (வயது 47). இவர் சத்தியில் இருந்து பண்ணாரி, திம்பம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் லாரிகளை வாகன சோதனை செய்வது போல் தடுத்து நிறுத்தி டிரைவர்களை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது.

    அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டார்கள்.

    அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 பேர் டிரைவர், கிளீனர் போல் மாறுவேடத்தில் நேற்று முன்தினம் இரவு லாரியில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி சென்றார்கள். அப்போது சிக்கரசம்பாளையம் அருகே அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி தனது சொந்த காரில் சென்று தனியாக வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாறுவேடத்தில் ஓட்டி வந்த லாரியையும் அவர் தடுத்து நிறுத்தி டிரைவராக இருந்தவரிடம் மாமூல் கேட்டார். உடனே லாரியில் மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கீழே இறங்கினார்கள்.



    அதன்பின்னர் டிரைவர் போல் மாறுவேடத்தில் இருந்தவர் தான் கொண்டுவந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பதியிடம் கொடுத்தார். அதை அவர் பெற்றுக்கொண்ட போது மாறுவேடத்தில் இருந்த 2 பேரும், ‘நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். உங்களை விசாரிக்க வேண்டும். சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள்’ என்று கூறி சுற்றி வளைத்தார்கள்.

    அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் பதி, ‘சரி நான் என்னுடைய காரிலேயே போலீஸ் நிலையத்துக்கு வருகிறேன்’ என்று கூறினார். அதை நம்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாங்கள் வந்த லாரியிலும், அவர்களின் பின்னால் பதி தன்னுடைய காரிலும் சத்தியமங்கலத்துக்கு சென்றுகொண்டு இருந்தனர்.

    சிக்கரசம்பாளையம் தாண்டி கெஞ்சனூர் செல்லும் சாலை வந்தபோது, பதி திடீரென காரை கெஞ்சனூர் நோக்கி திருப்பினார். அதன்பின்னர் கார் மின்னல் வேகத்தில் கெஞ்சனூர் நோக்கி சென்றுவிட்டது. இதைப்பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் லாரியில் காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றார்கள். ஆனால் காரை தடுத்து நிறுத்த முடியவில்லை. வேகமாக சென்றபோது பதியின் கார் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி படுகாயம் அடைந்தார். அந்த பகுதி பொதுமக்கள் ஆம்புலன்சை வரவழைத்து வேலுச்சாமியை சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். இன்ஸ்பெக்டர் பதி லஞ்ச ஒழிப்புதுறை போலீசாரிடம் சிக்காமல் தப்பி சென்று விட்டார்.

    இதைத்தொடர்ந்து லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், விபத்தை ஏற்படுத்தி வேலுச்சாமி படுகாயம் அடைந்ததற்காக சத்தியமங்கலம் போலீசாரும் பதி மீது வழக்குப்பதிவு செய்தனர். காரில் தப்பி ஓடிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை வலைவீசி தேடி வருகிறார்கள். #TrafficInspector

    உடுமலையில் வீட்டு மனைக்கு அங்கீகாரம் பெற ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கண்ணம நாயக்கனூர் சவுந்தர்யா கார்டனை சேர்ந்தவர் ஜெகன். இவர் உடுமலை ஸ்ரீராம் நகர் பகுதியில் 4.54 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார். இந்த மனைக்கு அங்கீகாரம் இல்லாததால் அங்கீகாரம் பெற கடந்த டிசம்பர் 20-ந் தேதி உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமாரை அணுகி உள்ளார்.

    அதற்கு அவர் வளர்ச்சி கட்டணமாக ரூ. 10,118 மற்றும் கூடுதலாக தனக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறி உள்ளார். ஜெகன் பல முறை ஒன்றிய அலுவலகத்திற்கு மனை அங்கீகாரம் பெற வந்த பிறகு ரூ. 5 ஆயிரத்தை குறைத்து கொண்டு ரூ .15 ஆயிரம் வழங்கினால் மட்டுமே மனை அங்கீகாரம் தர இயலும் என்று ரமேஷ்குமார் உறுதியாக கூறி உள்ளார்.

    இது குறித்து ஜெகன் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் ஜெகனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ. 15 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினார்கள்.

    அலுவலகம் சென்ற ஜெகன் பணத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமாரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் கவுசல்யா, எழில் அரசி மற்றும் போலீசார் ரமேஷ் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு கணக்கில் வராத ரூ. 14 ஆயிரத்து 500- ஐ பறிமுதல் செய்தனர். 5 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. ரமேஷ் குமாரின் வீடு உடுமலை ராமசாமி நகரில் உள்ளது. அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அரை மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. அங்கு பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை.

    பின்னர் ரமேஷ் குமாரை திருப்பூர் மாவட்ட குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். லஞ்ச வழக்கில் வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டதால் அவரை சஸ்பெண்டு செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    வேலூர் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்க சமூக நலத்துறை ஊழியர்கள் மூலம் பொதுமக்களிடம் லஞ்சம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது. #Thalikkuthangam
    வேலூர்:

    வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பேருக்கு தாலிக்கு தங்கம், உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக கடந்த 22-ந் தேதி 707 பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம், திருமண நிதியுதவி ஆகியவற்றை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் வழங்கினர். அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் 690 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.

    பயனாளிகளிடம் சமூக நலத்துறை அலுவலர் சாந்தி மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வேலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், எஸ்.விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று மாலை 6 மணியளவில் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றனர்.

    முதற்கட்டமாக அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றினர். பின்னர் வெளியாட்கள் உள்ளேயும், அலுவலக ஊழியர்கள் வெளியேயும் செல்லாதபடி அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    இச்சோதனையில் பீரோவின் அடியில், சாமி படத்தின் பின்புறம், கழிவறை, மேசையின் அடியில் என பல பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.76,500 லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது.

    இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி, கணக்காளர் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.



    நேற்று தாலிக்கு தங்கம் பெற்ற 690 பேரிடமும் இருந்து ரூ.500 முதல் ரூ.1,500 வரை சமூகநலத்துறை அதிகாரிகள் லஞ்சமாக பெற்று தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள சமூக நலத்துறை ஊழியர்கள் மூலம் இந்த பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    பண வசூல் செய்த சமூக நலத்துறை ஊழியர்கள் குறித்து விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.  #Thalikkuthangam

    சேலம் மாவட்டம் பன மரத்துப்பட்டி அருகே உடும்பு கறி சமைத்தவரை கைது செய்யாமல் இருக்க ரூ.2500 லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் சிறையில் அடைக்கப்பட்டார். #bribe

    சேலம்:

    சேலம் மாவட்டம் பன மரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டியை சேர்ந்தவர் மலையன். இவரது வளர்ப்பு நாய் அங்குள்ள மலைப்பகுதியில் ஒரு உடும்பை பிடித்து வந்தது. அதனை மலையன் வீட்டில் சமைத்து வைத்திருந்தார்.

    தகவல் அறநித ராசிபுரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட திருமானூர் வனக்காப்பாளர் சுப்பிரமணி மலையன் வீட்டிற்கு சென்று உடும்பை பிடித்து சமைத்ததற்காக வன விலங்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்போவதாக மிரட்டினார்.

    மேலும் கைது செய்யாமல் இருக்க ரூ.20 ஆயிரம் கொடுக்குமாறு ம் கூறினார். இதனால் பயந்து போன மலையன் ரூ.1500 கொடுத்தார். அப்போது மேலும் 10 ஆயிரம் ரூபாய் கேட்ட வனக்காப்பாளர் சுப்பிரமணி உடனே ரூ. 2500 தர வேண்டும் என கூறி மிரட்டினார்.

    மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத மலையன் இந்த சம்பவம் குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் படி நேற்று தும்பல்பட்டிக்கு வந்த வனக்காப்பாளர் சுப்பிரமணியனிடம் ரூ.2500 -ஐ மலையன் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வேறு நபர்களிடம் இப்படி மிரட்டி பணம் வாங்கினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணை முடிவில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சுப்பிரமணி விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார் என வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #bribe

    நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரரின் செல்போனை பறித்து லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சியை போக்குவரத்து காவலர் அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவள்ளூர்:

    மணலி எம்.எப்.எல். ஜங்சன் அருகே போக்குவரத்து போலீஸ்காரர் செந்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது விதிமுறை மீறிவந்த வாகன ஓட்டிகளிடம் அவர் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது.

    அந்த நேரத்தில் அங்கு வந்த எண்ணூர் நுண்ணறிவு பிரிவில் போலீஸ்காரர் வேலைபார்க்கும் வெற்றி என்பவர் இந்த காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    இதனை கவனித்த போலீஸ்காரர் செந்தில், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வெற்றி வைத்திருந்த செல்போனை பறித்து அதில் பதிவாகி இருந்த தான் லஞ்சம் வாங்கும் வீடியோவை அழித்தார். பின்னர் செல்போனையும் உடைத்து எறிந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வெற்றி, நுண்ணறிவு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் லஞ்சம் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக 125 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. #RajivGandhiHospital
    சென்னை:

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், பணிவிடை செய்வதற்கும் ஊழியர்கள், வார்டு ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதேபோல் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளிலும் இதே நிலை காணப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆஸ்பத்திரி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது முறைகேடு குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் லஞ்சம் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக 125 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


    இது தொடர்பாக மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் ஏற்கனவே 62 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    தற்போது லஞ்சம், ஊழல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக 125 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மருத்துவமனை வளாகம் முழுவதும் கண்காணிப்பில் இருக்கும்.

    21 கேமராக்கள் மருத்துவமனை வெளி வளாகத்திலும், 104 கேமராக்கள் மருத்துவமனை கட்டிடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

    வெளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் 280 மீட்டர் வரை பார்க்கக்கூடிய திறன் கொண்டது. இந்த கேமராக்கள் இரவு நேரங்களிலும் தெளிவாக படம் பிடிக்கும் வசதிகள் கொண்டவை.

    ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் வகையில் தினமும் 2 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது.

    இந்த குழு தினமும் மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் ஆய்வு மேற்கொண்டு அவர்களது அறிக்கையை கொடுக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அவர்களிடம் இருந்து உரிய அறிக்கை வந்தவுடன் அதன்பேரில் ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajivGandhiHospital
    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வருகிற பிப்ரவரி 26-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். #DoubleLeafCase
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணை நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிபதி (ஊழல் தடுப்பு) அருண் பரத்வாஜ் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணை தொடங்கியதும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பி.குமார் தரப்பில், தற்போது நடைபெற்று வரும் இந்த விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 29-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உள்ளதாக கூறி, அது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் நகல் நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜூனா, பி.குமார் ஆகியோர் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்கள் வருகிற பிப்ரவரி 21-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருவதாகவும், அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை தள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருகிற பிப்ரவரி 26-ந் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தார். #DoubleLeafCase
    அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட நர்சை பணியிட மாற்றம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த நாலூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நர்சாக வேலை பார்த்து வருபவர் தங்கரத்தினம். இவர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் 20 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரிடம் மகப்பேறு அரசு உதவி தொகை பெறுவதற்கான அட்டவணை வழங்க ரூ.2000 லஞ்சமாக கேட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணி பெண் மற்றும் சிகிச்சைக்கு வந்தவர்கள், கிராம மக்கள் ஆராம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு தங்கரத்தினத்தை அறையில் பூட்டி சிறை வைத்தனர்.

    மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய மருத்துவ அலுவலர் ராஜேஷ் பேச்சுவார்த்தை நடத்தி நர்சு தங்கரத்தினத்தை விடுவித்தனர்.

    இதற்கிடையே லஞ்சம் கேட்ட அவரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்.

    நர்சு தங்கரத்தினம் ஏற்கனவே மூன்று மாத குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    அரியலூர் அருகே ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளர் மற்றும் டிரைவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்ல நாயகபுரம் பாசனதாரர் சங்க தலைவராக இருப்பவர் தமிழ்வேல். இவர் சங்கத்தின் மூலம் டெண்டர் எடுத்து அங்குள்ள பெரிய ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தி உள்ளார். இப்பணி முடிவடைந்ததை அடுத்து அதற்கான தொகையை அரியலூர் செந்துறை சாலையில் உள்ள மருதையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் அவர் கேட்டுள்ளார். 

    அப்போது அந்த தொகையை வழங்குவதற்கு செயற்பொறியாளர் மணிமாறன் ரூ.18ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு இடைத்தரகராக மணிமாறனின் கார் டிரைவர் சக்திவேல் செயல்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத தமிழ்வேல், இது குறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயன பொடி தடவிய ரூ.18 ஆயிரத்தை மருதையாறு வடிநில கோட்ட நீர்வளத்துறை அலுவலகத்தில் இருந்த மணிமாறனிடம் தமிழ்வேல் கொடுத்துள்ளார். அதனை மணிமாறன் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த போலீசார் மணிமாறன் மட்டும் டிரைவர் சக்திவேல் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். 

    பின்னர் அவர்களை அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சஞ்சீவி பாஸ்கர்,2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
    கோவையில் ரோட்டோர கடைகளில் போலீஸ்காரர் ஒருவர் மாமூல் வாங்கும் வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    கோவை:

    கோவையில் ஏராளமான இடங்களில் ரோட்டோர கடைகள் உள்ளது. இந்த கடைகளில் ரோந்து செல்லும் போலீசார் மாமூல் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் ரோட்டோர கடைகளில் போலீஸ்காரர் ஒருவர் மாமூல் வாங்கும் வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் சைரன் ரோந்து மோட்டார் சைக்கிளில் சீருடையில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் ரோட்டோர இளநீர் கடைக்காரரிடம் மாமூல் கேட்கிறார். அவருக்கு இளநீர் கடைக்காரர் பணத்தை எடுத்து எண்ணி மறைவாக கொடுக்கிறார்.

    அதனை போலீஸ்காரர் கைநீட்டி வாங்கி தனது கைக்குள் மறைத்து வைத்து கொண்டு பேசுவது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளது. இவை அனைத்தும் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த வீடியோ ரேஸ் கோர்ஸ்- சுங்கம் சாலையில் எடுக்கப்பட்டு உள்ளது.

    இளநீர் கடைக்கு சென்ற பொதுமக்கள் சிலர் போலீஸ்காரரின் வெளிப்படை மாமூலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

    இந்த வீடியோ காட்சியை பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இளநீர் கடைக்காரரிடம் மாமூல் வசூலித்தது ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு போலீஸ்காரராக பணியாற்றி வரும் விஜய் ஆனந்த் என்பது தெரிய வந்தது. அவரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இது குறித்து துணை போலீஸ் கமி‌ஷனர் பாலாஜி சரவணன் கூறும் போது, போலீஸ்காரரிடம் மாமூல் வாங்கும் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #tamilnews
    ×