search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்சம்"

    கொடைகானலில் சுற்றுலா பயணியிடம் ரூ.2000 லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு மாநில மனித உரிமை ஆணையம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.
    திண்டுக்கல்:

    கேரளாவை சேர்ந்தவர் பைசல்ரகுமான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு குடும்பத்துடன் கொடைக்கானல் வந்தார். அப்போது பல்வேறு இடங்களை சுற்றிபார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்துடன் சென்றார்.

    அப்போது போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவரை வழிமறித்தார். மோட்டார் வாகனத்திற்குரிய ஆவணங்களை பைசல் ரகுமானிடம் கொடுத்தார். உடனே அவரும் உரிய ஆவணங்களை கொடுத்தார்.

    ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் உங்களது வாகனத்தில் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியாகிவிட்டது. எனவே ரூ.2000 வழங்கவேண்டும் என்று தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் சப்-இன்ஸ்பெக்டர் அவரை விடுவித்தார்.

    இதுகுறித்து பைசல்ரகுமான் சென்னையில் உள்ள மாநிலமனித உரிமை ஆணையத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் என்னை வழிமறித்து லஞ்சம் கேட்டு அவமதித்தார். இதனால் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைதொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றேன்.

    தேவையில்லாமல் எனக்கு ரூ.2லட்சம் வரை செலவாகிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மீது ஒழுங்கு நடவடிக்கையும், ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை விசாரித்த நீதிபதி துரைஜெயசந்திரன் சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது நிரூபணமானது. இதற்காக சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் வழங்கிவிட்டு சப்-இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துகொள்ளலாம் என உத்தரவிட்டார். #tamilnews
    குமரியில் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆலங்கோட்டை பகுதியில் மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடன் பெற்று ஜெனரேட்டர் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜெனரேட்டர் இயக்குவதற்கான பாதுகாப்பு சான்றை நெல்லையில் உள்ள தொழிற்சாலைகளுக்கான மண்டல மின்வாரிய ஆய்வாளர் வழங்க வேண்டும்.

    இதையடுத்து மீன் வலை தொழிற்சாலையில் எலக்ட்ரிக் காண்டிராக்டராக உள்ள வடசேரி அசம்பு ரோட்டை சேர்ந்த நாகராஜன் நெல்லையில் உள்ள மண்டல மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அப்போது அந்த அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த குமரி மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் சிகினி (வயது 52) என்பவரை அணுகினார். கிறிஸ்டோபர் சிகினி தற்போது நெல்லையில் வசித்து வருகிறார்.

    கிறிஸ்டோபர் சிகினி தொடர்ந்து சான்று வழங்காமல் தாமதம் செய்து வந்தார். மேலும் நாகராஜனிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து நாகராஜன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜனிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து கிறிஸ்டோபர் சிகினியிடம் கொடுக்கும் மாறு கூறினர். நாகராஜன் மின்வாரிய ஆய்வாளர் கிறிஸ்டோபர் சிகினியை தொடர்பு கொண்டு பேசினார். அவர் அழகப்பபுரத்தில் உள்ள சலவையகத்திற்கு வருமாறு தெரிவித்தார்.

    நாகராஜன் அங்கு சென்று ரசாயன பொடி தடவிய ரூபாய்நோட்டுகளை கிறிஸ்டோபர் சிகினியிடம் வழங்கினார். அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மதியழகன், இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார் கிறிஸ்டோபர் சிகினியை கையும், களவுமாக பிடித்தனர்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கிறிஸ்டோபர் சிகினியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் சிகினியின் நெல்லையில் உள்ள வீட்டிலும் போலீசார் சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. கைதான கிறிஸ்டோபர் சிகினியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். அவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மின்வாரிய ஆய்வாளர் கிறிஸ்டோபர் சிகினி சஸ்பெண்டு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
    ரூ.300 லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு டாக்டருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 2005-ம் ஆண்டு டாக்டராக வேலை பார்த்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜன். இவரது மனைவி நல்லம்மாள். 2005-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தெருவில் தண்ணீர் பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் நல்லம்மாள் தலையில் காயம் ஏற்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இவருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்று ஸ்கேன் எடுப்பதற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக வேலை பார்த்த டாக்டர் ரமேஷ் பரிந்துரைக்க வேண்டுமாம்.

    இதனால் ஜோதிராஜன், டாக்டர் ரமேசை அணுகினார். டாக்டர் ரமேஷ், விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஸ்கேன் பார்ப்பதற்கு பரிந்துரைக்க ரூ.300 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ஜோதிராஜன், இதுகுறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    இதைதொடர்ந்து போலீசாரின் ஆலோசனைப்படி ஜோதிராஜன், ரமேசிடம் ரூ.300-ஐ கொடுக்க சென்றார். ராஜபாளையம் சிவகாமிபுரத்தில் உள்ள தனது மருத்துவமனையில் இருந்த டாக்டர் ரமேசிடம், ஜோதிராஜன் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் சுற்றிவளைத்து ரமேசை கைது செய்தனர்.

    இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.சம்பத்குமார், லஞ்சம் பெற்ற அரசு டாக்டர் ரமேசுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
    லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    விழுப்புரம்:

    உளுந்தூர்பேட்டை தாலுகா ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 34). இவர் அதே கிராமத்தில் கடந்த 2009-ம் ஆண்டு புதியதாக வீடு கட்டினார்.

    இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு ஆசனூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இவருடைய வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு அதே பகுதியில் சென்ற உயர்அழுத்த மின்கம்பி இடையூறாக இருந்ததால் அதை வேறு இடத்திற்கு மாற்றி இணைப்பு கொடுக்கும்படி மின்வாரிய அலுவலகத்தில் அப்போதைய போர்மேனாக பணியாற்றி வந்த குமார் (53) என்பவரிடம் ராதாகிருஷ்ணன் முறையிட்டார்.

    அதற்கு உயர்அழுத்த மின்கம்பி இணைப்பை மாற்று இடத்தில் வைப்பதற்காக ராதாகிருஷ்ணனிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது குமாரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, குமார் துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

    இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, குற்றம் சாட்டப்பட்ட மின்வாரிய ஊழியர் குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட குமார், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    பட்டா மாற்றம் செய்ய ரூ.600 லஞ்சம் வாங்கிய ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெரம்பலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் உசேன். இவரது மகன் முகமது சலீம். இவர், தனது தந்தை பெயரில் உள்ள நிலப்பட்டாவை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி கடந்த 2008–ம் ஆண்டு பாடாலூர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த மணியை அணுகினார். இதற்காக தனக்கு ரூ.600 லஞ்சம் தருமாறு, முகமது சலீமிடம் மணி கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத அவர், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து கடந்த 30.4.2008 அன்று கிராம நிர்வாக அதிகாரி மணியிடம், ரசாயன தடவிய ரூ.600–ஐ முகமது சலீம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் மணி மீது பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் மணி பணி ஓய்வு பெற்றார். இதனிடையே இந்த வழக்கை தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி முரளிதரன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மணிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். #tamilnews
    லஞ்சம் கொடுப்பதிலும், வாங்குவதிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். #TamilnaduCorruption
    புதுடெல்லி:

    இந்தியாவில் எந்த மாநிலத்தில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    வடகிழக்கு மாநிலங்கள் சிக்கிம், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர், மாநிலங்கள் தவிர 15 மாநிலங்களில் மட்டும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    இந்தியாவில் லஞ்சம் அதிகமாக வாங்கப்படும் உத்தரபிரதேச மாநிலத்தில் சொத்துப்பதிவு, வரித்துறை, போக்குவரத்து, மின்சாரத்துறை போன்றவைகளில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் 59 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

    பஞ்சாப் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 56 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த பிறகே தங்களுக்கு வேலைகள் முடித்துத் தரப்படுவதாக கூறியுள்ளனர். பஞ்சாப்பில் போலீசாருக்கு தான் அதிகம் லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.


    லஞ்சம் கொடுப்பதிலும், வாங்குவதிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் சொத்துப்பதிவுக்கு தான் அதிகம் லஞ்சம் பெறப்படுவது தெரியவந்துள்ளது.

    போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது தேசிய அளவில் குறைந்து இருப்பது சர்வேயில் தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் சொத்துப்பதிவுக்காக லஞ்சம் வாங்குவது பலமடங்கு அதிகரித்து விட்டது.

    2017-ல் காவல்துறையினர் லஞ்சம் பெறுவது 30 சதவீதமாக இருந்தது. அது 25 சதவீதமாக குறைந்துவிட்டது. ஆனால் சொத்து பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் எண்ணிக்கை 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்ந்து இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.  #TamilnaduCorruption
    இந்தியாவில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க ஆங்கிலேயர் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று காந்தியின் செயலாளர் கல்யாணம் கூறியுள்ளார். #GandhiJayanti150 #MahatmaGandhi #Bribe

    மதுரை:

    மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சி யகத்தில் மகாத்மா காந்தியின் 150-வது ஜெயந்தி விழா நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட காந்தியின் செயலாளர் கல்யாணம் மகாத்மா காந்தியுடனான பல்வேறு வரலாற்றுத் தகவல்களை மாணவ-மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    நாட்டில் வாழும் ஏழை மக்களின் நலன்களை சுற்றியே காந்தியின் சிந்தனையும், பேச்சும், செயலும் இருந்தது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் மவுன விரதம் கடைபிடிப்பார்.

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது காந்தியை கொலை செய்வதற்கு 6 முறை முயற்சி நடந்தது. அவர்கள் காப்பாற்றிக் கொடுத்த காந்தியை நாம் விடுதலை பெற்ற 5 1/2 மாதங்களில் இழந்தோம்.


    சுதந்திரத்துக்கு பின்னர் தான் இந்தியாவில் லஞ்சம், ஊழல் வரத்தொடங்கியது. தற்போது அது தலை விரித்தாடுகிறது. சுதந்திரம் அடைந்த பின்னர் நம்மால் நல்ல ஆட்சியை கொடுக்க முடியவில்லை.

    அந்த வெள்ளைக்காரன் ஆட்சி மறுபடியும் வந்தால் இந்தியா நன்றாக இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.

    தவறு செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கும் நிலை ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது. அவர்கள் நம்மை கொள்ளையடித்தது உண்மை தான்.

    அப்போது அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள்.

    நமது நாட்டில் இப்போது காந்தியை முற்றிலுமாக மறந்து விட்டார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் தற்போது காந்தியை தெய்வமாக வணங்குகிறார்கள்.

    3 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நமக்கு இன்னொரு காந்தி கிடைக்க மாட்டார். இந்தியா விடுதலையடையும் போது நேதாஜி தலைமையிலான ஆட்சிமுறை 5 ஆண்டுகளுக்கு அமைந்திருந்தால் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியிருக்கும். ஜெனரல் கரியப்பாவும் இதே கருத்தை தான் கூறினார்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார். #GandhiJayanti150 #MahatmaGandhi #Bribe

    திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் பொது மேலாளர் லஞ்சம் வாங்கியது குறித்து அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது.
    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அலிபிரி பகுதியில் சிம்ஸ் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரியின் பொது மேலாளராக மோகன் முரளி என்பவர் இருந்து வந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு திருப்பதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் சிம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் மருந்துகடை வைப்பதற்கு அனுமதி கேட்டு மோகன் முரளியிடம் மனு கொடுத்தார்.

    அப்போது மருந்து கடை வைக்க அனுமதி தரவேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டுமென கூறினார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத புருஷோத்தமன் திருப்பதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சங்கர் ரெட்டியிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை புருஷோத்தமனிடம் கொடுத்து அனுப்பினர்.

    அவர் மோகன் முரளியிடம் பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்தனர்.

    இந்த வழக்கு நெல்லூர் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    அதில் லஞ்சம் பெற்ற சிம்ஸ் ஆஸ்பத்திரி பொது மேலாளர் மோகன் முரளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். #tamilnews
    கள்ளக்குறிச்சியில் புதிய வேனுக்கு பதிவுச்சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைதான வாகன ஆய்வாளர் ஜாமீன் மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சியில் புதிய வேனுக்கு பதிவுச்சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு (வயது 55) என்பவரையும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட அவரது உதவியாளர் செந்தில்குமாரையும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

    அதனை தொடர்ந்து இருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி லட்சக்கணக்கான ரூபாயை கைப்பற்றினர். மேலும் இருவருடைய வங்கி கணக்குகளையும், பாதுகாப்பு பெட்டகங்களையும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மூலமாக போலீசார் முடக்கி வைத்தனர்.

    இதனிடையே பாபு, செந்தில்குமார் ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி விழுப்புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

    இந்த மனு நீதிபதி பிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜரானார். இவ்வழக்கு புலன் விசாரணையில் உள்ளது.

    வங்கி பாதுகாப்பு பெட்டகங்களை திறந்து ஆய்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் அவர்கள் சாட்சியங்களையும், ஆவணங்களையும் கலைத்து விடக்கூடும் என்று வாதிட்டார். இதையடுத்து பாபு, செந்தில்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிரியா உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவை துறை ரீதியாக சஸ்பெண்டு செய்து சென்னை போக்குவரத்துத்துறை ஆணையர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
    வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தால் அவர்கள் மீது இந்தியாவால் நடவடிக்கை எடுக்க முடியாது என ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச அளவில் நாடுகள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு லஞ்சம் கொடுப்பது உண்டு. ஊழல் எதிர்ப்பு சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு இது தொடர்பாக நடத்திய ஆய்வில் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    சீனா, ஹாங்காங், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 2 சதவீதத்துக்கும் மேல் ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளன.

    ஆனால் கடந்த 1997-ம் ஆண்டு ஐ.நா.சபை நிறை வேற்றிய ஊழல் எதிர்ப்பு தீர்மானத்தில் இந்த நாடுகள் கையெழுத்துப் போடவில்லை.

    இதனால் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட இந்த 4 நாடுகளுக்கும் லஞ்சம் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் இந்த நாடுகளில் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு பிரச்சினைகள் வரும். சட்ட அமல் நடவடிக்கைகள் பாதிக்கும்.

    இதற்கு உதாரணமாக சில வழக்குகள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட விமானங்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டும், இந்தியாவால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.

    எனவே வெளிநாட்டவரால் லஞ்சம் வழங்கப்படுவதை கிரிமினல் குற்றமாக இந்தியா அறிவிக்க வேண்டும்.

    அத்துடன் தனியார் துறையில் இடித்துரைப்பாளர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். #tamilnews
    ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பணம், நகைகள் மற்றும் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. #RTO #DVACRaid

    கடலூர்:

    லஞ்சம் வாங்கி கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கோடிக் கணக்கில் சொத்து குவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். புதிய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்குதல், வாகனங்களை ஆய்வு செய்து சான்று வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    கூத்தக்குடியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது புதிய டூரிஸ்ட் வேனுக்கு தகுதி சான்றிதழ் பெற விண்ணப்பித்து இருந்தார். கள்ளக்குறிச்சியில் தனியார் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வரும் முத்துக் குமார் மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவை அணுகினார்.

    அவர் வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துக்குமார் இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

    பின்னர் ரூ.25 ஆயிரத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவிடம் கொடுக்க முயன்றார். பணத்தை உதவியாளர் செந்தில் குமாரிடம் வழங்கும் படி கூறினார்.

    இதைத் தொடர்ந்து ரூ.25 ஆயிரத்தை செந்தில்குமார் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் செந்தில்குமாரையும், பாபு வையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

    அவருக்கு கடலூரில் வீடு இருப்பது தெரியவந்தது. நேற்று மதியம் 2 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

     


    அப்போது குடும்பத்தினர் யாரையும் வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. கதவுகளை மூடிக்கொண்டு வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற் கொண்டனர். இரவு 10 மணிவரை சோதனை நீடித்தது.

    8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் கட்டுகட்டாக ரூ.35 லட்சம் பணம், 15 கிலோ வெள்ளி பொருட்கள், 200 பவுன் தங்க நகைகள், 45 வங்கி கணக்குகள், மேலும் 6 வங்கி லாக்கர்களுக்கான சாவிகள், 500-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் மற்றும் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    பாபுவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்காக எந்திரம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் பணம் எண்ணப்பட்டது. மேலும் கைப்பற்றப்பட்ட நகைகளின் உறுதிதண்மையை அறிய நகை மதிப் பீட்டாளர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தங்க நகைகளையும், வெள்ளி பொருட்களையும் மதிப்பீடு செய்து போலீசாரிடம் தெரிவித்தனர்.

    பாபுவுக்கு பல வங்கிகளில் 6 பெட்டகங்கள் இருப்பதும், அதில் 300 பவுனுக்கு மேல் நகைகளும், லட்சக்கணக்கான பணம் இருப்பதற்கான ஆதாரங்களும் சிக்கியது.

    மேலும் பாபுவுக்கு சென்னையில் கோடிக் கணக்கான மதிப்புள்ள பங்களா வீடு, வணிக வளாகம் இருப்பது தெரிய வந்தது. கடலூர் நகரில் மட்டும் 6 வீடுகளும், சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான காலி மனைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிவரும் பாபு பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்தது எப்படி என்பது குறித்து அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.

     


    சோதனை முடிந்து இரவு 10 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியே வந்தனர். கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் பணங்களை மூட்டை மூட்டையாக கட்டிக் கொண்டும், ஆவணங்களை சூட்கேசிலும் கொண்டு சென்றனர்.

    அவற்றை இரவோடு இரவாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கைது செய்யப்பட்ட வாகன ஆய்வாளர் பாபு, உதவியாளர் செந்தில் குமார் ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆய்வாளர் பாபு இதற்கு முன்பு சேலம் மற்றும் தூத்துக்குடியில் பணியாற்றி உள்ளார். அங்கு பணியாற்றிய போதும் அவர் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    பாபுவின் வங்கி கணக்குகள் மற்றும் கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர். #RTO #DVACRaid

    வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் லஞ்சம் வாங்குவதற்காக லஞ்சப் பணத்தில் ஆட்களை நியமித்து தனியாக அலுவலகம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Bribe

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பழைய முருகன் தியேட்டர் பகுதியில் வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு துணை இயக்குனராக சுப்பிரமணியன் கடந்த 1½ ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

    இந்த அலுவலகத்தில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளித்தல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வழக்கம்போல் நேற்று துணை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    இந்த அலுவலகத்தில் முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெற்று வருவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி உள்பட போலீசார் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

     

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம்.

    மேலும் அலுவலகத்திற்குள் இருந்து ஊழியர்கள் வெளியே யாரும் செல்லாத வகையிலும், வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லாத வகையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    போலீசாரின் விசாரணையில் சுப்பிரமணியன் வேலூர் வள்ளலார் டபுள்ரோடு விவேகானந்தர் முதல் தெருவில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

    அந்த வீட்டில் உள்ள அறைகள் நகரமைப்பு அலுவலகம் போலவே அமைக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகத்தில் உள்ள டேபிள், சேர்கள் அங்கே போடப்பட்டிருந்தன.

    மேலும் நகர் அமைப்பு அலுவலகத்தில் உள்ள அனைத்து பதிவேடுகள் ஆவணங்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுப்பிரமணியன் லஞ்சம் வாங்குவதற்காகவும் முறைகேடுகள் செய்வதற்காகவும், மிகவும் சாமர்த்தியமாக தனியாக அலுவலகம் நடத்தியுள்ளார்.

    ரூ.8 ஆயிரம் மாத வாடகைக்கு இந்த வீட்டை எடுத்துள்ளார். அரசு அலுவலகம் போல உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ4 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

    பிறகு அரசு அலுவலகத்திற்கு புதியதாக வந்த டேபிள், சேர்களை இங்கு போட்டுள்ளார். நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியை பணிக்கு அமர்த்தி அவருக்கு கீழ் 37 பேரை வேலையில் சேர்த்துள்ளார். இவர்கள் மூலம் அலுவலகத்தில் நடக்க வேண்டிய அனைத்து பணிகளும் இங்கே நடந்துள்ளது. 38 ஊழியர்கள் தனியாக லேப்டாப் கொண்டு வந்து வேலை செய்து விட்டு வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

     

    வள்ளலாரில் சுப்பிரமணியன் வாடகைக்கு எடுத்து அலுவலகம் நடத்திய வீட்டை படத்தில் காணலாம்.

    ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் மற்ற 37 ஊழியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் என லஞ்ச பணத்தில் மாதம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் போனஸ் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கியதாக தெரிகிறது.

    இந்த பணிகள் எல்லாம் சுப்பிரமணியன் பணியில் சேர்ந்த 1½ ஆண்டுகளாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில மாதங்களாகத்தான் தனியாக அலுவலகம் நடத்தி வந்ததாக அவர் கூறியுள்ளார்.

    இதனையடுத்து வாடகை வீட்டில் நடத்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மீண்டும் சுப்பிரமணியனை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மண்டல நகர் ஊரமைப்பு அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அங்கு தொடர்ந்து சோதனையும் நடத்தப்பட்டது. அங்கிருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 28 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய சோதனை 8 மணி நேரத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு நிறைவு பெற்றது.

    லஞ்சம் வாங்கவும், முறைகேடுகள் செய்யவும் தனியாக அலுவலகம் நடத்திய சுப்பிரமணியன் கோடி கணக்கில் லஞ்சம் வாங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சுப்பிரமணியன் தனியாக வேலைக்கு அமத்திய ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உள்பட 38 பேர் குறித்த விவரங்களை சேகரித்துள்ளனர். அவர் களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Bribe

    ×