search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்சம்"

    பாகப்பிரிவினை அசல் ஆவணங்களை வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சார் பதிவாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சின்னப்பா நகரை சேர்ந்தவர் சுமதி. இவரது தந்தை பெருமாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சுமதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, தந்தை பெருமாள் பெயரில் உள்ள நிலத்தை, பாகப்பிரிவினை செய்தார்.

    பின்னர் அதற்கான ஆவணத்தை கடந்த 5-ந்தேதி புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் முதல்நிலை சார் பதிவாளர் சுசீலாவிடம், சுமதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தாக்கல் செய்தனர். பின்னர் அதற்கான கட்டணத்தையும் செலுத்தி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து ஆவணங்களை அன்றே சார் பதிவாளர் சுசீலா பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பதிவு செய்த அசல் ஆவணங்களை கடந்த 6-ந்தேதி மதியம் சார் பதிவாளர் சுசீலாவை சந்தித்து சுமதி கேட்டுள்ளார்.

    அப்போது, அவரிடம் ரூ.3 கோடிக்கு மேல் சொத்துகளை பாகப்பிரிவினை செய்துள்ளதால், தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் எனவும், இதில் முன்பணமாக ரூ.20 ஆயிரத்தை சார் பதிவாளர் அலுவலகம் வந்து தன்னிடம் கொடுக்க வேண்டும் எனவும், மீதி பணத்தை விரைவில் கொடுத்துவிட்டு, அசல் ஆவணங்களை வாங்கி செல்லும்படியும் சுமதியிடம், சார் பதிவாளர் சுசீலா கூறியதாக கூறப்படுகிறது.

    ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சுமதி, இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமதியிடம் ரசாயனப்பொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்து, புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சுமதி, அங்கு பணியில் இருந்த சுசீலாவிடம், ரசாயன பொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மற்றும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார் பதிவாளர் சுசீலாவை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 6.15 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.

    பின்னர் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிபதி அகிலா ஷாலினி வீட்டில், அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சுசீலா திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதேபோல திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள சுசீலா வீட்டிலும் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் நூற்றுக்கணக்கான பட்டுப்புடவைகளையும் போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. ஆனால் எவ்வளவு நகைகள் கைப்பற்றப்பட்டது என்ற விவரத்தை போலீசார் கூற மறுத்து விட்டனர்.
    தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டுக்கு செல்லும் உறவினர்களை அனுமதிக்க தனியார் நிறுவன காவலாளிகள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. #Bribe

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கீழ் இயங்கி வரும் ராசா மிராசுதார் மருத்துவ மனைக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    தஞ்சை நகரின் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளதால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்ல இந்த மருத்துவமனை வசதியாக உள்ளது.

    இங்கு பிரசவ பிரிவு, கண், பல், குழந்தைகள் நலம் ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு என தனி சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக ராசா மிராசுதார் மருத்துவமனை உள்ளது. தினமும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.

    இங்கு அனைத்து வார்டுகளுக்கும் தனியார் நிறுவனத்தின் மூலம் காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து முக்கியமான வார்டுகளுக்கும் ஒரு நாளுக்கு ஒரு காவலாளி வீதம் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் பிரசவ வார்டுகளில் பிரசவித்த பெண்களை பார்க்க செல்லும் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் ரூ.50 முதல் 200 வரை லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

    இதுகுறித்து மருத்துவ மனைக்கு குழந்தையை பார்க்க வந்த சிலர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவ மனை தொடங்கிய நாள் முதலே குழந்தைகளுக்கு என்று தனி பிரிவுகள் உள்ளன. மேலும் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளதால் எளிதில் வந்து சிகிச்சை பெற்று செல்ல முடிகிறது.

    ஆனால் இங்கு தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் மூலம் காவலாளிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஆஸ்பத்திரிக்கு பிறந்த குழந்தையை பார்க்க உறவினர்கள் மற்றும் குழந்தையின் தந்தை ஆகியோரை மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ளே அனுமதிக்கின்றனர். இரவு நேரங்களில் ஒருவரையும் அனுமதிப்பதில்லை. அவ்வாறு அனுமதித்தால் உள்ளே செல்வதற்கு ரூ.50 முதல் 200 வரை செக்யூரிட்டிகள் பணம் வாங்குகின்றனர். பணம் கொடுக்க மறுத்தால் தகாத வார்த்தையால் திட்டி உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர். எனவே இதுகுறித்து கலெக்டர் மற்றும் மருத்துமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குட்கா வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #GutkaScam
    குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ், அவரது தொழில் கூட்டாளிகளான பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும், அதிகாரிகளான செந்தில் முருகன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 5 பேரையும் காவலில் எடுக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) மனுதாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.

    குட்கா ஊழலுக்கு துணை போனவர்கள் யார்-யார்? என்பது பற்றிய கூடுதல் தகவல்களை மாதவராவிடம் திரட்ட வேண்டி இருப்பதாகவும், அதற்காகவே அவரை காவலில் எடுக்க சி.பி.ஐ. முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அதிகாரிகள் செந்தில் முருகன், பாண்டியன் ஆகியோர் குட்கா ஊழலில் எவ்வளவு பணத்தை லஞ்சமாக பெற்றனர் என்பது பற்றி மேலும் தகவல்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. லஞ்ச பணத்தில் 2 அதிகாரிகளும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்களா? என்பது பற்றியும் இருவரிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேரை 7 நாட்கள் காவலில் எடுக்க சி.பி.ஐ. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. போலீஸ் காவலில் இவர்களிடம் விசாரணை நடத்தும் போது குட்கா ஊழல் வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkaScam
    அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு உதவியாக இருந்த மாதவராவின் 2 தரகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #GutkaScam
    குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ், அவரது தொழில் கூட்டாளிகளான பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும், அதிகாரிகளான செந்தில் முருகன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் குட்கா அதிபர் மாதவராவ், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு இடைத்தரகர்களாக ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோர் செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நேற்று காலையில் இவர்கள் இருவரும்தான் சி.பி.ஐ. பிடியில் முதலில் சிக்கினர். இவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைக்க இருப்பதாகவே தகவல் வெளியானது. ஆனால் மாதவராவ் அவரது பங்கு தாரர்கள், அதிகாரிகள் ஆகியோர் மட்டுமே கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். தரகர்களான நந்தகுமார், ராஜேந்திரன் இருவரிடமும் தொடர்ந்து சி.பிஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    இன்று 2-வது நாளாக விசாரணை நீடிக்கிறது. குட்கா வழக்கில் இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் சாட்சிகளாக சேர்க்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. #GutkaScam
    வாழப்பாடியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கணபதி நகரை சேர்ந்தவர் இந்திராணி (வயது 40). இவர் கடந்த 2006-ம் ஆண்டு மற்றும் 2013-ம் ஆண்டுகளில் நிலம் வாங்கி இருந்தார். அந்த நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்க கோரி இ-சேவை மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை பார்த்த வாழப்பாடி நில அளவையர் சவுந்தரராஜன் (30) என்பவர், இந்திராணியை அழைத்தார். அவரிடம் உரிய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த, நில அளவையர் சவுந்தரராஜன், நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதற்கு இந்திராணி அவ்வளவு தொகை தர இயலாது என்று தெரிவித்தார். பின்னர் ரூ.15 ஆயிரம் தருவதாக தெரிவித்தார்.

    எனினும் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத இந்திராணி, இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் துணை சூப்பிரண்டு சபரிராஜன், இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் இந்திராணியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர்.

    வாழப்பாடி பஸ்நிலையம் எதிரே உள்ள பூக்கடை சந்துக்குள் இந்திராணி, நிலஅளவையர் சவுந்திரராஜனிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக சவுந்திரராஜனை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை வாழப்பாடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் வாழப்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
    சிவகங்கை:

    மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 2.5.2011 அன்று தன்னுடைய காரில் காரைக்குடி அருகே உள்ள புதுவயலுக்கு சென்றார். அப்போது கார் பழுதானதால் அங்கேயே விட்டுவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டார். பின்னர் 10 நாட்கள் கழித்து புதுவயல் சென்று பார்த்தபோது, அந்த காரை சாக்கோட்டை போலீசார் கைப்பற்றி சென்றது தெரிந்தது.

    இதனால் முருகன் அந்த காரை எடுக்க போலீஸ் நிலையம் சென்றபோது, அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனை யடுத்து காமாட்சியிடம் ரசாயனம் தடவிய பணத்தை முருகன் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி மற்றும் போலீஸ்காரர் சிவ முருகன் ஆகியோரை கைதுசெய்தனர்.

    மேலும் இதுதொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சசிரேகா, குற்றம்சாட்டப்பட்ட காமாட்சிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிவமுருகன் விடுதலை செய்யப்பட்டார். 
    வெளிநாட்டு நோயாளிகளுக்கு உடல் உறுப்புகளை வழங்க ரூ.12 கோடி லஞ்சம் வாங்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். #PMK #AnbumaniRamadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நடைபெறும் உடல் உறுப்புதான ஊழல்கள் குறித்து மீண்டும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த நோயாளிகள் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், சேலம் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து கட்டாயமாகப் பெறப்பட்ட உடல் உறுப்புகள் வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதில் விதிமீறல்கள் நடந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

    கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த மே 18-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் சாலைவிபத்தில் சிக்கி காயமடைந்தார். சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அடுத்த இரு நாட்களில் மூளைச்சாவு அடைந்தார்.

    மணிகண்டனிடமிருந்து பெறப்பட்ட இதயமும், நுரையீரலும் விதிகளை மீறி வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நோயாளிக்காக பெறப்பட்ட இதயம் சட்டவிரோதமாக லெபனான் நாட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது.

    அதேபோல், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்ட நுரையீரல் அங்கு காத்திருப்புப் பட்டியலில் இருந்த 5 உள்ளூர் நோயாளிகளுக்கு வழங்கப்படாமல் இஸ்ரேல் நாட்டு நோயாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த இரு உறுப்பு பொருத்தப்பட்ட நோயாளிகளும் இறந்து விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல், உள்ளூர் நோயாளி ஒருவருக்கு பெறப்பட்ட சிறுநீரகமும் இன்னொருவருக்கு வழங் கப்பட்டது உறுதியாகியுள்ளது.

    ஆட்சியாளர்கள் மற்றும் உயரதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், உடலுறுப்பு மாற்று ஆணையத்திற்கு அயல் பணியில் வந்த இரு பணியாளர்கள் தான் இவை அனைத்துக்கும் காரணம் என்றும், அவர்கள் இருவரும் தாங்களாகவே பதவி விலகி விட்டனர் என்றும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகள் அனைவரும் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவின் உடல் உறுப்பு மாற்று சந்தையாக தமிழகம் மாறியுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை கொடையாக பெற்று உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு பொருத்தி அவர்களின் உயிரைக் காப்பது புனிதமான செயலாக கருதப்படுகிறது.

    ஆனால், அந்த உறுப்புகளை உள்ளூர் ஏழை நோயாளிகளுக்கு வழங்காமல் வெளிநாட்டு நோயாளிகளுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு பொருத்துவதன் மூலம் புனிதமான செயலை சில மருத்துவமனைகளும், மருத்துவர்களும் வணிகமாக்கியுள்ளனர். இதற்கு அரசு உயரதிகாரிகள் சிலரும் துணை போய் உள்ளனர்.

    கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 95 பேருக்கு 127 உறுப்புகள் விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை; எந்த மருத்துவமனை மீதும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சென்னை அடையாறு, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் தான் இத்தகைய முறைகேடுகள் அதிக அளவில் நடப்பதாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டு பயணிகளிடமிருந்து சராசரியாக ரூ.12 கோடி வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    உடல் உறுப்புதான ஊழலில் தமிழக அரசின் உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகள் சிலருக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாற்றுகள் பற்றி தமிழக அரசின் விசாரணைக்குழு எந்த விசாரணையும் நடத்தியதாக தெரியவில்லை.

    உடல் உறுப்பு தான ஊழல் குறித்து கடந்த சில மாதங்களாக நான் தொடர்ந்து குற்றச்சாற்றுகளைக் கூறி வருகிறேன். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுப்பதைத் தடுக்கும் நோக்குடன் தான் தமிழக அரசு மேலோட்டமாக விசாரணை நடத்தி, அயல்பணியில் வந்த பணியாளர்கள் மீது பழியைப் போட்டு, முக்கிய அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் காப்பாற்றியுள்ளது. உறுப்பு தான ஊழலின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது.

    இதன் பின்னணியில் பல பெரிய மனிதர்கள் இருப்பதாலும், கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டிருப்பதாலும் இது குறித்த உண்மைகளை மத்தியப் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கப்பிரிவு ஆகிய அமைப்புகளின் விசாரணையால் தான் வெளிக்கொண்டு வர முடியும்.

    தமிழ்நாட்டில் நடைபெறும் உடல் உறுப்பு தான ஊழல்கள் என்பது ஊடகங்களில் வெளியாகியுள்ளதைப் போன்று சாதாரணமான ஒன்றல்ல. ஒவ்வொரு ஆண்டும் பலநூறு கோடி ரூபாய் அளவுக்கு இதில் ஊழல் நடைபெறுகிறது.

    அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை பலரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். உலகில் யாருக்கு உடல் உறுப்பு தேவைப்பட்டாலும் பணத்தை மூட்டைக் கட்டிக் கொண்டு தமிழகத்திற்கு வந்தால் சாதித்து விடலாம் என்ற அவப்பெயர் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

    இதைத் தடுத்து நிறுத்தி, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், தமிழ்நாட்டு காவல்துறையால் இது சாத்தியமில்லை என்பதால் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இதுகுறித்து தமிழக ஆளுனரிடமும், சி.பி.ஐ. இயக்குனரிடமும் விரிவான புகார் மனுவை அளிக்க உள்ளேன்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #AnbumaniRamadoss
    அரூரில் லஞ்சம் வாங்கி கைதான பெண் அதிகாரியை சஸ்பெண்டு செய்து தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டு உள்ளார்.
    தருமபுரி:

    அரூரில் வனக்கோட்ட பொறியியல் பிரிவில் வனவராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன். இவர், தன்னுடைய பொது சேம நல நிதியில் (ஜி.பி.எப்.) இருந்து ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் கடன் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்த கடனுக்கான பட்டியல் அனுமதிக்கோரி (பில் பாஸ் செய்வதற்காக) அதே துறையில் பணிபுரியும் கண்காணிப்பாளர் தனலட்சுமியை வனவர் ரவிச்சந்திரன் அணுகியுள்ளார்.

    இந்த கடனுக்கான பட்டியல் அனுமதி அளிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கண்காணிப்பாளர் தனலட்சுமி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வனவர் ரவிச்சந்திரன் தருமபுரியில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், டி.எஸ்.பி.க்கள் சுப்பிரமணியன் (தருமபுரி), கிருஷ்ணராஜன் (கிருஷ்ணகிரி), போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வனக்கோட்ட பொறியியல் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழங்கிய ரசாயன பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் நான்கினை கண்காணிப்பாளர் தனலட்சுமியிடம், வனவர் ரவிச்சந்திரன் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தனலட்சுமியை கையும் களவமாக பிடித்தனர். தொடர்ந்து, அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தனலட்சுமியை கைது செய்தனர். பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். தற்போது அவரை சஸ்பெண்டு செய்து தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டு உள்ளார்.
    தொழில் அதிபரிடம் ரூ.33 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Bribe

    அம்பத்தூர்:

    வேளச்சேரியை அடுத்த கீழ்கட்டளை எஸ்.ஆர். வி.எஸ். காலனியை சேர்ந்தவர் சுனில்குமார். தொழில் அதிபர்.

    இவர், மரம் அறுக்கும் தொழிற்சாலைக்காக ரூ.20 லட்சம் மதிப்புள்ள நவீன எநதிரம் வாங்க ஏற்பாடு செய்து இருந்தார். மாவட்ட தொழில் மையம் மூலம் இந்த எந்திரத்தை வாங்கினால் ரூ.2 லட்சம் மானியம் கிடைக்கும்.

    எனவே மானியம் பெறுவதற்காக சுனில்குமார், காஞ்சீபுரம் மாவட்ட தொழில் மையத்தில் மனுதாக்கல் செய்தார். தொழில் மைய உதவி இயக்குனர் அருள் இதுகுறித்து விசாரணை செய்தார்.

    அப்போது, தனக்கு ரூ.33 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் மானியம் பெறுவதற்கான உத்தரவை வழங்குவதாக கூறியுள்ளார். இதுகுறித்து சுனில்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அவர்களுடைய ஆலோசனைப்படி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் அருள் குடியிருக்கும் அம்பத்தூர் வெங்கடாபுரத்திற்கு சுனில்குமார் சென்றார். பணம் தருவதாக கூறி அவரை அழைத்தார்.

    அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே அருள் வந்தார். அவரிடம் சுனில் குமார் ரசாயனம் தடவிய 33 ஆயிரம் ரூபாயை கொடுத்தார்.

    அப்போது அங்கு ஆட்டோவில் பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து லஞ்ச பணத்துடன் தொழில் மைய உதவி இயக்குனர் அருள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    சின்னசேலம் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக பெண் அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் தாலுகா வி.அலம்பளம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 42). இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் 30 சென்ட் நிலம் உள்ளது.

    இந்த நிலத்திற்குரிய சிட்டா அடங்கலை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய சின்னசேலம் தாலுகா அலுவலகத்துக்கு சுமதி சென்றார். அங்கு முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த உமாமகேஸ்வரி (39) என்பவரிடம் இதுபற்றி கூறினார்.

    அப்போது அவர் சிட்டா அடங்கலை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்து கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று சுமதியிடம் கேட்டார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுமதி விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பொடி தடவிய பணத்தை சுமதியிடம் கொடுத்து அதை உமாமகேஸ்வரியிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினார்கள். அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று மாலை சுமதி எடுத்துக்கொண்டு சின்னசேலம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பெண் அதிகாரி உமாமகேஸ்வரியிடம் கொடுத்தார்.

    அவர் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அங்கு விரைந்து சென்று உமாமகேஸ்வரியை கைது செய்தனர்.

    பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #Tamilnews
    லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் 3 பேர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    திருவொற்றியூர்:

    சென்னை மாதவரம், மஞ்சம்பாக்கம், மணலி மற்றும் எண்ணூர் விரைவு சாலை வழியாக சென்னை துறைமுகம் செல்லும் கன்டெய்னர் லாரிகள் முன்னேறி செல்வதற்காக ஒரு லாரிக்கு ரூ.100-ம், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் தலா ரூ.200-ம் போக்குவரத்து போலீசார் லஞ்சமாக பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றவரை போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதமாக வசூலித்தனர்.

    ஆனால் அதற்குரிய ரசீதை போலீசார் வழங்கவில்லை. இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது.

    இதையடுத்து இந்த விவகாரம் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அதனை தொடர்ந்து அவர் சம்பவத்தன்று பணியில் இருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, சிறப்பு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் ஏட்டு வெங்கடாச்சலம் ஆகிய 3 பேரையும் பணிஇடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 
    சென்னையில் உயர் அதிகாரிகள் நடத்திய அதிரடி லஞ்ச வேட்டையில் போக்குவரத்து போலீசார் பிடிபட்டு இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TrafficPolice
    சென்னை:

    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் முறைப்படி அபராதம் விதிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

    குறிப்பாக போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்களை வழிமறித்து நிறுத்தி வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். காவல் துறையில் இது தீராத கறையாகவே படிந்துள்ளது.

    போக்குவரத்து போலீசாரின் இந்த முறைகேடான நடவடிக்கை காரணமாக பல இடங்களில் வாகன ஓட்டிகள் போலீசாருடன் மோதலில் ஈடுபடும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறியுள்ளன.

    இதனை கருத்தில் கொண்டும், போக்குவரத்து போலீசார் மீது படிந்துள்ள லஞ்ச புகார் கறையை போக்க சென்னை போலீஸ் அதிகாரிகள் கடந்த மே மாதம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பணம் வசூலிக்கும் முறைக்கு முடிவு கட்டினர். ரொக்கமில்லா பணபரிவர்த்தனை மூலம் அபராதம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தினர்.

    புதிய திட்டத்தின்படி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டியிடம் ரொக்கமாக பணம் வாங்க கூடாது என்றும் அதனை மீறி பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போக்குவரத்து கூடுதல் கமி‌ஷனர் அருண் ஆகியோர் போக்குவரத்து போலீசாருக்கு சுற்றறிக்கையும் அனுப்பி இருந்தனர்.

    புதிய நடைமுறையின்படி வாகன ஓட்டிகளிடம் வங்கி ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக பெரும் அளவில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பே.டி.எம்., அஞ்சலகம், இ-சேவை மையம் மூலமாகவும் அபராதம் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.


    சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் இதனை பின்பற்றியே வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

    இருப்பினும் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் இந்த விதிமுறையை மீறி முறைகேடாக வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து கூடுதல் கமி‌ஷனர் அருண் அதனை கண்காணிப்பதற்கு தனிப்படைகள் அமைத்தார். இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து போலீசார் பல இடங்களில் ரொக்கமில்லா பணபரிவர்த்தனையை மீறி லஞ்சமாக பொது மக்களிடம் இருந்து பணம் வாங்கியது தெரிய வந்தது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் ஏட்டு, ஆகியோர் கையும் களவுமாக கேமரா மூலமாக சிக்கியுள்ளனர்.

    இந்த குற்றச்சாட்டுக்குள்ளான சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, முருகன், இருதயராஜ், ஏட்டு வெங்கடாசலம் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் உதவி கமி‌ஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    அவர்கள் மீது விரைவில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட உள்ளார்.

    இதற்கிடையே லஞ்ச புகாரில் போக்குவரத்து போலீசார் சிக்கியது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

    திருவொற்றியூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தென்னரசு, ஏட்டு வெங்கடாசலம், தண்டையார்பேட்டை போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் நேற்று முன்தினம் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை எல்லையம்மன் கோவில் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது ஏட்டு வெங்கடாசலம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை வழிமறித்துள்ளார். அவரிடம் ரூ.2 ஆயிரத்தை வாங்கி கொண்டு 1,800 ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார்.

    இதன் மூலம் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் இருந்து ரூ.200 லஞ்சமாக பெற்றது அம்பலமானது. இதனை தொடர்ந்து 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதே போல சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் இ-செலான் மூலம் ரூ.100 அபராதம் விதித்து விட்டு 200 ரூபாய் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களிலும் பரவியுள்ளது.

    லஞ்ச புகாரில் சிக்கியுள்ள அடையாறு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் இருதய ராஜ் விபத்து வழக்கு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் உயர் அதிகாரிகள் நடத்திய அதிரடி லஞ்ச வேட்டையில் போக்குவரத்து போலீசார் பொறியில் சிக்கியது போல பிடிபட்டு இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த நடவடிக்கை தொடரும். எனவே போக்குவரத்து போலீசார் பொது மக்களிடம் இருந்து ரொக்கமாக பணத்தை வாங்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
    ×