search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95380"

    திருமானூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர். இதில் வெற்றி பெற்றவர்கள் பரிசு பொருட்களை அள்ளிச் சென்றனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள திருமழபாடியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி மடத்துவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகள் முட்டியதில் கோவண்டாகுறிச்சியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 35), திருமழபாடியை சேர்ந்த கார்த்திக் (23), லால்குடியை சேர்ந்த சுரேஷ் (22), மெலட்டூரை சேர்ந்த கதிரேசன் (25) உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர் களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் நாற்காலி, கட்டில், சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டிக் கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் திருமழபாடி பொதுமக்கள் செய்திருந்தனர். 
    அன்னமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 24 பேர் காயமடைந்தனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. கால்நடை டாக்டர்களின் பரிசோதனைக்கு பிறகு தகுதியான 281 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.

    அதேபோல பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 257 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களை 2 குழுக்களாக பிரித்து மாடுகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர்.

    இதில் சில காளைகள் மாடு பிடி வீரர்களை கொம்பால் குத்தி தூக்கி வீசி பிடிபடாமல் பந்தய எல்லைக்கோட்டை சென்றடைந்தன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் நீண்டநேரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இதில் காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்களான தொண்டமாந்துறையை சேர்ந்த ஆண்டனிசாமி (வயது 50), பூலாம்பாடி பாஸ்கர்(21), லால்குடி சதீஷ் (30), ஜெஸ்டின்ராஜ் (27), தம்மம்பட்டி கருப்பண்ணன்(53) உள்பட 12 பேரும், பார்வையாளர்களான அன்னமங்கலம் ராபின் (23), அரசலூர் அரவிந்த்(19) உள்பட 12 பேர் என மொத்தம் 24 பேர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவக்குழுவினர் உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் நாற்காலி, சைக்கிள், கியாஸ் அடுப்பு, வேட்டி மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் பரிசு, அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரும்பாவூர் போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சேதுராமன், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் செல்வராஜ், தாசில்தார் பாரதிவளவன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். 
    கறம்பக்குடி அருகே உள்ள வாண்டான் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வடக்களூர் நாட்டை சேர்ந்த வாண்டான்விடுதியில் முத்துகருப்பையா, முத்து முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிவாசல் அமைப்பது, பாதுகாப்பு வேலிகள் அமைப்பது உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நிறைவுபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கலெக்டர் கணேஷ் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து நேற்று காலை ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வந்த அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதைபோல மாடுபிடி வீரர்களையும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து களத்தில் செல்ல அனுமதித்தனர். மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் அடக்க முன்வரவில்லை. தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 604 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிபாய்ந்து சென்றன. அதனை 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் இளம்பரிதி, அழகர்சாமி உள்பட 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, குக்கர், வெள்ளி நாணயம், குத்துவிளக்கு, ரொக்கப்பரிசு உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம், கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், கறம்பக்குடி, வாண்டான்விடுதி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிபு தலைமையில், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    அன்னமங்கலம்-குளத்தூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் அளிக்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தில் வருகிற 20-ந்தேதியும், குளத்தூர் கிராமத்தில் வருகிற 31-ந்தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டை பாதுகாப்பாகவும், அரசு விதிகளுக்கு உட்பட்டு நடத்துவது குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினருடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வோர் தங்கள் பகுதியின் வருவாய்த்துறை வட்டாட்சியரிடம் தங்களது பெயரினை பதிவு செய்யவேண்டும். மேலும், தங்களது உடல்தகுதி குறித்து உரிய மருத்துவரிடம் சான்று பெற்ற பின்னரே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். காளைகள் உடல் தகுதி பெற்றுள்ளதா என்பதனை பரிசோதித்து கால்நடை மருத்துவர் சான்று அளித்தால் மட்டுமே காளைகள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.

    ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் முக்கிய இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, நிகழ்வுகள் பதிவு செய்யப்படவேண்டும். பார்வையாளர்களும், சுற்றுப்புறத்தாரும் பாதிக்கப்படாத வகையில், உறுதியான இரும்பு சட்டங்கள் மற்றும் மரக்கட்டைகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு வசதியாக காலரி வசதி ஏற்படுத்தப்படவேண்டும். மாடுபிடி வீரர்களுக்கு சீருடை வழங்கப்படவேண்டும். எனவே, ஜல்லிக்கட்டு நடத்தும் விழாக் குழுவினர் அரசு வகுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்றி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) செல்வராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    ×