search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்த்திபன்"

    நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். இதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

    விஜய் - பார்த்திபன்

    இந்நிலையில் ஒரு ஊடகத்தில் பார்த்திபன் பேசும்போது, எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படத்தை பார்த்த இயக்குனர் பார்த்திபன், படக்குழுவை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டினர். ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜெய்பீம்’ படம் குறித்து ‘என்னத்த சொல்றது’ என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “சட்டத்தை நீதி/நிதி எதுக்கும் பயன்படுத்தலாம். அப்படியே சினிமாவையும்... நிறைய காசுக்கும் நல்ல cause-க்கும்! ஒரு சினிமா மூலமாக சட்டத்தின் பயன்பாடு, அதுவும் ஏற்கனவே (இருளர்கள்) இருண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் ‘இது ஒரு கமர்ஷியல்’ என்று வண்ணம் பூசிக் கொள்ளா வண்ணம் உலக அளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை பார்க்கத் துவங்கி கரைந்தேப் போனேன்.

    பார்த்திபனின் டுவிட்டர் பதிவு
    பார்த்திபனின் டுவிட்டர் பதிவு

    சந்துரு சார்! - இது பெயரல்ல. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு! அவரை நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகராக அமர்த்தி கௌரவம் தேடிக் கொண்டுள்ளேன். அவரின் வாழ்க்கையை படமாக்கவும் ஆசைப்பட்டுள்ளேன். அது இன்று திரு த.செ.ஞானவேல் மூலம் நிறைவேறி பிரபஞ்சம் சந்துருவை பாராட்ட, மெய் சிலிர்க்கிறேன். சினிமா மூலம் சமூகத்திற்கு கோடானு கோடி நன்மை செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன்”. இவ்வாறு இயக்குனர் பார்த்திபன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் ஒத்த செருப்பு படத்தின் அறிமுக விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், பார்த்திபன் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று பாராட்டினார்.
    பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் இயக்குநர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இடம்பெறும்படியாக 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. 

    சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், ஷங்கர், பாக்யராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



    விழாவில் பாக்யராஜ் பேசியதாவது,

    இந்த விழாவை பொறுத்தவரை பார்த்திபனை விட எனக்கு தான் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனென்றால் பார்த்திபன் என் சிஷ்யன். சிஷ்யன் என்பதை தாண்டி அவர் குருவை மிஞ்சிய ஒரு சிஷ்யன். 16 வயதினிலே படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்த போது ஒரு காட்சியில் நான் சொன்ன ஒரு விஷயத்தை ஏற்று, கமல் சார் அப்படியே செய்தார். 

    உதவி இயக்குனர்கள் என்பவர்கள் படத்தின் இயக்குனராக தன்னை நினைத்து வேலை செய்ய வேண்டும். கடமைக்கு வேலை செய்யக்கூடாது என்றார்.

    பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் ஒத்த செருப்பு படம் பற்றி பேசிய ரஜினிகாந்த், ஒரு படம் வெற்றி பெற நான்கு விஷயங்கள் முக்கியம் என்றும், அவை பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தில் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
    ஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது:-

    “என் அருமை நண்பர் பார்த்திபன், நல்ல படைப்பாளி. புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். சிறிது காலம் படங்களை இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவர் படம் இயக்க வேண்டும் என்று நான் கேட்டேன். இப்போது தனி ஒருவர் மட்டும் நடிக்கும் வித்தியாசமான ஒத்த செருப்பு படத்தை எடுத்துள்ளார். 

    1960-ம் ஆண்டில், இந்தியில் சுனில்தத் ‘யாதே’ என்றொரு படத்தில், தனி ஒருவராக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தியாவிலேயே இந்த ‘ஒத்தசெருப்பு’ 2-வது படம். பார்த்திபனே தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நடித்தும் இருப்பது உலகிலேயே இல்லாத ஒன்று.



    ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும். படத்தின் கரு புதிதாக இருக்க வேண்டும். இதுவரை எவரும் சிந்திக்காததாக இருக்க வேண்டும். நல்ல கருத்து சொல்வதாக இருக்க வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருக்க வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டும். நான்காவதாக படத்துக்கு நல்ல விளம்பரம் செய்ய வேண்டும். 

    இந்த நான்குமே பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தில் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாக அவர் வெற்றிகளும் விருதுகளும் பெறுவார். இந்த படம் ஆஸ்கார் செல்லும், அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    ரஜினிகாந்த் பேசிய வீடியோ:

    பார்த்திபனின் ஒத்த செருப்பு பட விழாவில் கலந்துக் கொண்ட கமல், ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
    பார்த்திபன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஒத்த செருப்பு’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கமல், இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    இதில் கமல் பேசும்போது, எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். அதை நான் திரும்பி திரும்பி படித்தேன். அதில், காந்தி அவர்கள் ரெயிலில் செல்லும் போது, ஒரு செருப்பு தவறி விழுந்துவிட்டது. உடனே அவர் மற்றொரு செருப்பையும் கழற்றி வீசி விட்டார். ஏன் என்று கேட்டதற்கு ஒரு செருப்பு இருந்தால் யாருக்கும் உபயோகப்படாது என்று கூறியிருக்கிறார். அவரின் ரசிகர் நான்.



    அவர் போட்ட செருப்பில் ஒன்று வந்து சேர்ந்துவிட்டது. இன்னொன்றும் வரும். அதற்கான அருகதை எனக்கு உண்டு. அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என் மேல் செருப்பு வீசியதை பலரும் பயந்து பயந்து பேசுகிறார்கள். இதில் ஒரு பயமும் இல்லை. செருப்பு போட்டவருக்கே அவமானம்’ என்றார்.
    விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோக்யா திரைப்படத்தின் கதை பற்றி கூறிய பார்த்திபன் கருத்து அப்படத்தின் இயக்குனர் பதில் அளித்துள்ளார்.
    விஷால், ராசி கண்ணா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் அயோக்யா. இப்படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்து இருந்தார். 

    அயோக்யா படத்தின் கதை தனது உள்ளே வெளியே படத்தின் சாயல் தான் என்று பார்த்திபன் பதிவிட பரபரப்பானது. தனது படத்தை திருடி தெலுங்கில் படமாக்கி அதை தமிழில் எடுக்கும்போது தன்னையே வில்லனாக்கியது அயோக்கியத்தனம் என்று கூறி இருந்தார்.

    அடுத்த பதிவுகளில் தான் படத்தின் விளம்பரத்துக்காகவே இப்படி செய்ததாகவும் விஷாலுக்கும் தனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இருந்தாலும் பார்த்திபனின் கருத்து சர்ச்சையானது.



    இதுகுறித்து அயோக்யா படத்தின் இயக்குனர் வெங்கட் மோகனிடம் கேட்டோம். ‘அவரது பதிவை நானும் பார்த்தேன். அது அவரது கருத்து. உள்ளே வெளியேயின் கதை சாயல் இதில் இருந்து இருக்கலாம். நான் கதை எழுதவில்லை. தெலுங்கில் கதையை எழுதிய வக்கந்தம் வம்சியிடம் தான் கேட்கவேண்டும். நான் அந்த கதையில் கிளைமாக்சை மாற்றி இருக்கிறேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

    முன்னணி கதாநாயகன் ஒருவர் இப்படி ஒரு நெகட்டிவ் கிளைமாக்சில் நடித்ததற்காக விஷாலுக்கு தான் எல்லா பாராட்டுகளும் சேரும்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் விமர்சனம்.
    தாய், தந்தையை இழந்த விஷால் தனது சிறுவயதில் ஆனந்த
    ராஜ் சொல்லைக் கேட்டு சிறிய அளவில் திருடி வருகிறார். ஒருமுறை திருட்டு வழக்கில் சிக்கும் விஷாலை, ஆனந்த்ராஜ் வந்து மீட்டுச் செல்கிறார். அதுவரை ஆனந்த்ராஜ் தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷால், காவல் நிலையத்திற்கு சென்று வந்த பிறகு போலீஸாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று போலீசாக வேண்டும் என்று நினைக்கிறார்.

    பின்னர் ஆனந்த்ராஜிடம் இருந்து விலகி, படிப்பில் கவனம் செலுத்துகிறார். 10-வது வரை படித்து பின்னர், சில தில்லுமுல்லு செய்து போலீசாகி விடுகிறார். சென்னையில் ரவுடியாக இருக்கும் பார்த்திபன், தனது 4 தம்பிகளை வைத்து கடத்தல் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் இடைஞ்சல் கொடுக்க, பிரச்சனை பண்ணாத போலீஸ் ஒருவரை அனுப்பும்படி பார்த்திபன், மந்திரியான சந்தானபாரதியிடம் கேட்கிறார்.



    இதையடுத்து அந்த பகுதிக்கு போலீஸ் அதிகாரியாக விஷால் செல்கிறார். விஷால், பார்த்திபன் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல், அவர்களிடம் கையூட்டு வாங்கி நலுவுகிறார். இது நேர்மையான போலீஸ் அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனாலேயே அவர் விஷாலுக்கு மரியாதை கொடுக்க மறுக்கிறார்.

    பார்த்திபன் கொடுத்த ஒரு வீட்டில் தங்கி வரும் விஷாலுக்கு, அவர் வீட்டிற்கு அருகே தங்கியிருக்கும் ராஷி கண்ணாவுடன் காதல் ஏற்படுகிறது. இந்த நிலையில், பூஜா தேவரியா தனது தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்த பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார். இதனால் அவரை கடத்தி கொலை செய்ய நினைக்கின்றனர். பூஜா தேவரியாவுக்கு பதில் ராஷி கண்ணாவை பார்த்திபனின் ஆட்கள் கடத்தி செல்கின்றனர்.



    ராஷி கண்ணாவை விஷால் காப்பாற்றுகிறார். பின்னர் பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

    கடைசியில், விஷால் தனது போக்கை மாற்றிக் கொண்டு திருந்தினாரா? பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விஷால் படம் முழுக்க காக்கிச்சட்டை அணியாத போலீஸ் அதிகாரியாகவே வலம் வருகிறார். முதல் பாதி முழுவதும் அயோக்யத்தனம் கொண்ட போலீஸ் அதிகாரியாகவும், பின்னர் தனது தவறை உணர்ந்து அவர் செய்யும் தியாகம், அவர் மீதான வெறுப்பை மாற்றும்படியாக அமைகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைத்திருக்கிறார். ராஷி கண்ணா அழகு தேவதையாக வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.



    பார்த்திபன் வில்லத்தனத்திலும், கே.எஸ்.ரவிக்குமார் நேர்மையிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவரியா, சோனியா அகர்வால், ஆனந்த்ராஜ் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றியிருக்கின்றனர். யோகி பாபு காமெடியில் ஆங்காங்கு சிரிக்க வைக்கிறார்.

    தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இந்த படம், இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. வெங்கட் மோகன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். படத்தில் இடம்பெறும் வசனங்கள் மட்டும் மிகைப்படுத்தியிருப்பது போல தோன்றுகிறது.

    சாம்.சி.எஸ். இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. விஐ கார்த்திக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `அயோக்யா' குற்றம் குற்றமே.

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் இன்று வெளியாக இருந்த `அயோக்யா' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. #Ayogya #Vishal
    ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் `அயோக்யா'. விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படம் இன்று (மே 10) திரைக்கு வர இருந்தது.

    ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பாளரின் முந்தைய பட பாக்கியை செலுத்திய பிறகே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், ராதாரவி, ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை  ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் பெற்றுள்ளது. #Ayogya #Vishal #Raashikhanna

    இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மீது உதவி இயக்குனர் ஜெயம் கொண்டான் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். #Parthiban
    பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன். இவரிடம் உதவியாளராக பணிபுரியும் ஜெயம் கொண்டான், தன்னை பார்த்திபன் கொலை செய்ய முயற்சி செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

    அந்த புகார் மனுவில், நான் பாடல் ஆசிரியராக இருக்கிறேன். நடிகர் பார்த்திபன் இயக்குனர் என்ற முறையில் 10 வருடமாக பழகி வருகிறேன். அவருக்கு ஆபிஸ் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை என எல்லா வேலைகளையும் எடுத்துக்கட்டி செய்து வந்தேன். இப்போது எடுத்துக் கொண்டு இருக்கும் ‘ஒத்த செருப்பில்’ தொடர்ந்து பணிபுரிந்து வருகிறேன்.

    பார்த்திபனால் வேலையில் இருந்து நீக்கப்பட்டவரிடம் இவரது தோட்ட வேலை காரணமாக ஒரு அட்ரஸ் கேட்டேன். இவருக்காக அட்ரஸ் கேட்ட என்னை நுங்கம்பாக்கம் 4 பிரேம் தியேட்டரில் 3வது மாடியில் வைத்து 8/5/2019 சுமார் 3 மணியளவில் இவரும் இவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் என்னை அடித்து உதைத்து மாடியில் இருந்து தள்ளிவிட பார்த்தனர். நான் அவரிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டேன். 4 பிரேம் தியேட்டரில் 3வது மாடியில் உள்ள சிசிடிவி-யில் இந்த காட்சி பதிவாகியிருக்கும்.



    என்னைப் போல் எத்தனையோ உதவி இயக்குனர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இவரால் என் உயிர்க்கு ஆபத்து நேரிடும் என்பதால் எனக்கு தக்க பாதுகாப்பு கேட்டு இவ்விண்ணப்பத்தை கோருகிறேன்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறியிருக்கிறார்.
    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் முன்னோட்டம். #Ayogya #Vishal #RaashiKhanna
    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள படம் `அயோக்யா'.

    விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடித்திருக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவாரியா, சோனியா அகர்வால், சச்சு, அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சனா கான் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

    இசை - சாம்.சி.எஸ்., ஒளிப்பதிவு - வி.ஐ.கார்த்திக், படத்தொகுப்பு - ரூபன், கலை - எஸ்.எஸ்.மூர்த்தி, சண்டைப்பயிற்சி - ராம்-லக்‌ஷ்மன், கதை - வக்கந்தம் வம்சி, ஆடை வடிவமைப்பு - உத்ரா மேனன், பாடல்கள் யுகபாரதி, விவேக், ரோகேஷ், இணை இயக்குநர் - துரை கண்ணன், நடனம் - சோபி, பாஸ்கர், ஒலி - உதயகுமார், நிர்வாக தயாரிப்பு - டி.முருகேசன், தயாரிப்பு மேற்பார்வை - அந்தோணி சேவியர், இணை தயாரிப்பாளர் - பிரவீண் டேனியல், தயாரிப்பு - பி.மது, எழுத்து, இயக்கம் - வெங்கட் மோகன்.



    பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. 

    இதில் விஷால் எதிர்மறை போலீஸ் கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது.



    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வருகிறது. #Ayogya #Vishal #RaashiKhanna

    அயோக்யா டிரைலர்:

    நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். #Parthiban #Election2019
    நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ’பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கூறி இருப்பதாவது:-

    ‘மாம்பழமோ? மாபெரும் பழமோ? பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் வாதிகளுக்கு, தேர்தல் என்பது தேத்துதல் (பணம்). வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள். அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம் மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு...



    ஓட்டைப் போடாதீர்கள் ஓட்டைப் போடாதீர்கள் வல்லரசாகப் போகும் இந்தியாவின் கூகுள் வரை படத்தில் ஓட்டைப் போடாதீர்கள் தேர்தல் வந்துடுச்சி துட்டுக்கு ஓட்டைப்போட்டு நம் பிள்ளைகளின் ஆரோக்கிய வாழ்வில் (ஸ்கேன் ரிப்போர்ட்டில்) ஓட்டைப் போடாதீர்கள்’

    இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயோக்யா’ படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் உறுதிப்படுத்தியுள்ளார். #Ayogya #Vishal
    ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் அயோக்யா படத்தில் விஷால் - ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். 

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக படத்தை ஏப்ரல் 19-ல் வெளியிட முடிவு செய்திருந்தனர். தற்போது படம் வருகிற மே 10-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. #Ayogya #Vishal #Raashikhanna

    ×