search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95411"

    ஜெயலலிதா மரணம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்தார். #jayalalithaadeath #jayalalithaa #Jayakumar #CVShanmugam
    சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘ஜெயலலிதா மரணம் குறித்து, அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-

    அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து நல்ல விஷயம் தான். அதனை நான் வரவேற்கிறேன். அந்த கருத்தில் விசாரணைக்கு உட்பட்டு நடத்தவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார். விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்பது தனி. மாநில அமைப்பு இதனை நடத்தலாம்.

    சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் பரிசீலனைக்கு எடுத்து விசாரிக்கட்டும். அதில் தவறு இல்லை.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தை திசை திருப்பவேண்டும் என்பதற்காக சி.வி.சண்முகம் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது சசிகலா குடும்பம் 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் 5 நட்சத்திர ஓட்டல் போன்று பல அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, சாப்பிட்டதால் தான் ரூ.1¼ கோடி கட்டணம் வந்தது.

    ஜெயலலிதா சாப்பிட்டது கிடையாது. இதுதான் சட்டத்துறை அமைச்சரின் கருத்து. அமைச்சர்களுக்குள் யார் பிளவு ஏற்படுத்த முயன்றாலும் நடக்காது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.



    விசாரணை ஆணையம் அழைத்து கேட்டாலும், ஆஞ்சியோ செய்திருந்தால் ஜெயலலிதா பிழைத்திருப்பார் என்ற கருத்தை சி.வி.சண்முகம் தெரிவிப்பார். சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தை ஆணைய தலைவர் கருத்தில்கொண்டு விசாரிக்கட்டும். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் போட்ட அறைகளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் என நாங்கள் யாருமே தங்கவில்லை. சி.வி.சண்முகம் கூறியது போல அங்கு தங்கியது சசிகலா மற்றும் அவருடைய குடும்பம் தான்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷன் அமைக்கபட்டதால் சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இல்லையே. அதன்படி பார்த்தால் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தில் தவறு இல்லை. இதுதொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யும். ஒரு நாள் அதிகாரம் கொடுத்தால் மீனவர் பிரச்சினைகளை தீர்த்துவிடுவேன் என்று சீமான் கூறியிருப்பது 2018-ம் ஆண்டின் தலைசிறந்த ‘ஜோக்’.

    இவ்வாறு அவர் கூறினார். #jayalalithaadeath #jayalalithaa #Jayakumar #CVShanmugam
    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் நீக்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர். #ADMK #EdappadiPalanisamy
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் க.பொன்னுசாமியும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.பி.யும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.



    அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக ஆர்.லட்சுமணன் எம்.பி.யும், கொள்கை பரப்பு துணை செயலாளராக க.பொன்னுசாமியும், ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக ஆர்.வி.என்.கண்ணனும், துணை செயலாளராக கே.சேதுராமானுஜமும், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளராக பி.கருணாகரனும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.வி.சண்முகமும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

    தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #EdappadiPalanisamy
    வருகிற 20-ந் தேதிக்குள் நாகை மாவட்டம் முழுவதும் மின் வினியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். #Gajastorm

    வேதாரண்யம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இங்கு ஒரு மாதமாகியும் மின் இணைப்பு பெறமுடியாமல் பல கிராமங்கள் உள்ளன. புயலில் பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதால் அவைகளை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மின் மாற்றிகளும் சேதமானதால் திருவாரூர் மாவட்ட மின் மாற்றி மூலம் பிராந்தியக்கரை, மூலக்கரை ஆகிய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக வேதாரண்யத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வேதாரண்யம் தாலுகாவில் புயலால் விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் 4300 பேர் ஈடுபட்டுள்ளனர். 6 மின் மாற்றிகள் நாளை முதல் செயல்பட தொடங்கும். இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட மின் மாற்றியில் இருந்து மின் சாரம் பெறும் பிராந்தியக்கரை, மூலக்கரை பகுதிகளுக்கும் நாகை மாவட்ட மின் மாற்றி மூலம் மின்சாரம் வினியோகிக்கப்படும்.

    வருகிற 20-ந் தேதிக்குள் நாகை மாவட்டம் முழுவதும் மின் வினியோகம் வழங்கப்படும். படகு மூலம் வண்டல், அவரிகாடு பகுதிகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால் அங்கு பூமிக்கடியில் கேபிள் அமைத்து மின்சாரம் வழங்க மின்துறை அமைச்சர் மூலம நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உயர் அழுத்த மின் சம்பவங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நிறைவடைந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm

    ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்தில் மாற்றப்படும் என்று அறிவித்த அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். #MinisterPandiarajan #Ramadoss
    சென்னை:

    தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள ஊரின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது நல்ல நடவடிக்கை. பாராட்டத்தக்கது. இந்த மாற்றங்கள் பெரிதல்ல. தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான சட்டம் என்னவானது?. அதை உடனே நிறைவேற்றி நடைமுறைப்படுத்துங்கள்.


    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அதைபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காலநிலை மாற்ற பேரழிவுகளை தடுக்கவும், அதனால் அதிகரித்துவரும் இயற்கை பேரிடர்களை சமாளிக்கவும் உறுதியான விதிமுறைகளை உருவாக்குவதற்காக போலந்து நாட்டில் கூடியுள்ள ஐ.நா. காலநிலை மாநாட்டில், என்னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் குழுவினர் பங்கேற்கின்றனர்.

    ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமுதாயமும் போர்க் கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம். ‘அடுத்து வரும் 10 ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறோம் என்பது தான், இனி இந்த பூமியில் வாழப்போகும் பல நூறு தலைமுறையினரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்’ என்று ஐ.நா. அறிவியலாளர்கள் குழு அறிவித்தது. இத்தகைய முக்கியமான சூழலில் நடைபெறும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் உறுதியான முடிவுகளை மேற்கொண்டு காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MinisterPandiarajan #Ramadoss
    தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். #MinisterPandiarajan
    சென்னை:

    தமிழகத்தில் சில ஊர்களின் பெயர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெவ்வேறாக குறிப்பிடப்படுகின்றன. இதனை தமிழில் குறிப்பிடுவது போன்றே மாற்றம் செய்யவேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானோர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த தமிழக அரசு, வெவ்வேறாக குறிப்பிடப்படும் ஊர்களின் பெயர்களை ஒரே மாதிரியாக தமிழில் குறிப்பிடும் வகையில் மாற்றம் செய்ய முடிவு எடுத்தது.

    இதையடுத்து எந்தெந்த ஊர்களின் பெயர்களை மாற்றம் செய்யவேண்டும் என்பது தொடர்பாக அரசு தரப்பில் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் நிறைவடைந்து, சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


    இதுகுறித்து சென்னையில் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய உலக தமிழாராய்ச்சி நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய உள்ளோம். இதற்காக வருவாய்த்துறை, செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை இணைந்து பணியாற்றி வருகிறோம். ஊர்களின் பெயர்களை மாற்றுவதற்கு, வைப்பதற்கு அதிகாரம் படைத்த அமைப்பு வருவாய்த்துறை தான்.

    கலெக்டர் அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தி மாற்றம் செய்வதற்கான பெயர்களை தேர்வு செய்து அனுப்பியிருக்கிறார்கள். அதன்படி ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்வதற்கான அரசாணை இன்னும் 2 வாரத்தில் பிறப்பிக்கப்படும். அப்போது ‘டிரிப்ளிகேன்’ என்பது திருவல்லிக்கேணியாகவும், ‘டூட்டிக்காரின்’ என்பது தூத்துக்குடியாகவும் உருமாறும். இதேபோல தமிழகத்தில் ஆங்கிலத்தில் இருக்கும் 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன்படி ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம், கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் பெயர்கள் மாற்றப்படலாம் என்று தெரிகிறது. #MinisterPandiarajan
    குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss #Vijayabaskar #Gutka
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குட்கா ஊழல் வழக்கின் விசாரணைக்காக நேரில் முன்னிலையாகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தரகர் சரவணன் ஆகியோருக்கு மத்தியப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை அனுப்பியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. தரகர் சரவணன் நாளையும், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றொரு நாளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    தமிழகத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய குட்கா ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அகாரிகள் பெயர் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி, இவ்வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரிகளும் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இதனால், குட்கா ஊழலில் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் குவித்த பெரும்புள்ளிகள் தப்ப வைக்கப்படுவரோ என்ற ஐயம் எழுந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவரது தரகருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது இந்த வழக்கில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை கையூட்டு வாங்கிக் கொண்டு விற்பனை செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் இளைஞர் சமுதாயத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கரும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் செய்த தீமையும், துரோகமும் மன்னிக்கப்படக் கூடாதவை.


    சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் மக்களின் நலவாழ்வை உறுதி செய்ய வேண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர், சட்ட விரோதமாக குட்கா போதை பாக்குகளை விற்பனை செய்ய அனுமதித்ததன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களை போதைப் பாக்கு பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக சிதைத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு சில மாதங்களில் மட்டும் ரூ.40 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பி வைத்துள்ளது.

    இது நடந்து ஈராண்டு ஆன பிறகும் ஊழல் அமைச்சர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிலிருந்தே தமிழகத்தில் எவ்வளவு தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். சட்டவிரோத குட்கா விற்பனையை அனுமதிக்க கையூட்டு தரப்பட்டது தொடர்பான வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் 2016-ம் ஆண்டில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த அசோக்குமார் துணிச்சலாக நடவடிக்கை எடுக்க முயன்றார்.

    ஆனால், அந்த ஒரே காரணத்திற்காக அவரை விருப்ப ஓய்வில் செல்லும்படி அப்போது மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். குட்கா ஊழல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் ஜெயலலிதா தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை அனைவரும் ஒரே மாதிரியான அணுகு முறையைத் தான் கடைபிடிக்கின்றனர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் கையூட்டாக வாங்கிய பணம் அவருடன் மட்டும் நின்றுவிடவில்லை. அதிகாரப் படிக்கட்டுகளின் உச்சத்தில் இருந்தோர், இப்போது இருப்போர் வரை பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் இதற்கெல்லாம் காரணமாகும்.

    குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. விஜயபாஸ்கருக்கு எதிராக வருமானவரித்துறை அறிக்கை அளித்தது மட்டுமின்றி, அவரது வீட்டில் வருமானவரித்துறையும், சி.பி.ஐ.யும் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளன.

    இப்போது விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அழைப்பாணையும் அனுப்பியுள்ளது. இதற்குப் பிறகும் விஜயபாஸ்கர் பதவியில் தொடருவதும், தொடர அனுமதிப்பதும் முறைதானா? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதிகார மமதையில் உள்ள முதல்வருக்கு இது கேட்டிருக்க வாய்ப்பில்லை.

    காமராஜரும், கக்கனும் வீற்றிருந்த அமைச்சர் நாற்காலியில் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் நீடிப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம் ஆகும். அவரை தமிழக அமைச்சரவையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நீக்க வேண்டும். விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட குட்கா ஊழல் வழக்கை விரைவாக நடத்தி குற்றமிழைத்தோருக்கு சி.பி.ஐ. தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #PMK #Ramadoss #Vijayabaskar #Gutka
    சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய தவறான செய்தியை நீக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் நாடார் அமைப்புகள் சார்பில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய தவறான செய்தியை நீக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் நாடார் அமைப்புகள் சார்பில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் தி.நகர் ஹரிநாடார் தலைமை தாங்கினார். நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் நாடார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரதத்தை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் தொடங்கி வைத்தார்.

    இதில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், மண் பாண்ட சங்க தலைவர் சே.ம. நாராயணன், சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.

    இதில் பேசிய தலைவர்கள் சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய அவதூறு செய்திகளை முழுமையாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    உண்ணாவிரதத்தில் த.மா.கா. பொருளாளர் கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.கே.வெங்கடேஷ், ஆர்.எஸ்.முத்து, கொட்டிவாக்கம் முருகன், மனோகரன், சென்னை நாடார் சங்க தலைவர் கரண்சிங் நாடார், அம்பத்தூர் விஜயகுமார், புழல் தர்மராஜ், கே.சி.ராஜா, ராகம் சவுந்தரபாண்டியன், மயூரா, டாக்டர் ஜெமிலா, சிலம்பு சுரேஷ், சாத்தான் குளம் முன்னாள் சேர்மன் ஆனந்தராஜ், சத்ரிய பெருமாள், மால் மருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சி.பி.எஸ்.சி. பாடத்தில் நாடார் பற்றிய பொய் செய்திகளை வரும் கல்வி ஆண்டில் மத்திய அரசு நீக்க வேண்டும்.

    ஆன்மிகம், கல்வி, விளையாட்டு, இதழியல் துறையில் பல சாதனைகள் படைத்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் சேவையை போற்றும் வகையில் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    சென்னையில் இருந்து திருச்செந்தூர் பகுதிக்கு குலசை எக்ஸ்பிரஸ் எனும் புதிய ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாது மணல் தொழிற் சாலைகளை மத்திய- மாநில அரசுகள் உடனடியாக திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்கிட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    குட்கா ஊழலில் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது. #CBI #GutkhaScam

    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் பாக்கு வடிவிலான போதைப் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை செய்து கடந்த 2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

    உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு சரியாக அமல் படுத்தப்படவில்லை. தமிழகம் முழுவதும் ரகசியமாக குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சென்னையில் உள்ள குட்கா தயாரிப்பாளர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்தன. அதன் பேரில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் எம்.டி.எம். குட்கா தயாரிப்பாளர் மாதவராவின் வீடு மற்றும் செங்குன்றத்தில் உள்ள தயாரிப்பு ஆலைகள், சேமிப்புக் கிடங்குகளில் மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

    அதோடு ரகசிய டைரி ஒன்றும் சிக்கியது. அந்த டைரியில் தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல்கள் இருந்தன. லஞ்சம் பெற்றவர் பெயர், தொகை ஆகியவை தெளிவாக இருந்தன. தேதி வாரியாக இந்த தகவல்கள் இடம் பெற்று இருந்தது.

    வருமான வரித்துறை அதிகாரிகள், அந்த தகவல்களை தீவிரமாக ஆய்வு செய்தபோது தமிழக அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் அடிக்கடி குட்கா தயாரிப்பாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றிருப்பது உறுதியானது. அமைச்சர்களும், போலீஸ் அதிகாரிகளும் ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த டைரி பக்கத்தை நகல் எடுத்து, தமிழக அரசுக்கு அனுப்பிய வருமான வரித்துறை, லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.

    ஆனால் அந்த டைரி பக்கத்தின் அடிப்படையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


    அதன் பேரில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா ஊழல் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே வருமான வரித் துறையினர், தமிழக போலீசார் சேகரித்திருந்த தகவல்களைப் பெற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் புதிய பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்தனர். அதோடு சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அந்த சோதனையின் பலனாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு பல புதிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சிலர் கைது செய்யப்பட்டனர். சுமார் 25 பேர் வரவழைக்கப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். அவர்கள் சொன்ன பதில்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, “இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் தெரிவிக்க” உத்தரவிட்டார். அதை ஏற்று சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் சி.பி.ஐ. கூறியிருப்பதாவது:-

    குட்கா ஊழல் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. 31 இடங்களில் சோதனை நடத்தியது. குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 165-ன் கீழ் அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரத்தின்படி மேலும் 11 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல ஆவணங்கள் கிடைத்தன.

    அதன் பேரில் 25-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரிக்கப்பட்டது. இதில் குட்கா முறைகேடுகளில் தமிழக அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    குட்கா விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. பலரது வாக்கு மூலங்களும் அதை உறுதிபடுத்துவதாக இருக்கின்றன.

    உணவு பாதுகாப்பு, சுங்கத் துறை, வணிக வரித்துறை அதிகாரிகளுக்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு இருக்கிறது. சட்ட விரோதமாக குட்கா தயாரிக்கவும், தடையை மீறி குட்காவை விற்பனை செய்யவும் அரசு அதிகாரிகளே உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் ஆவணங்களை அழித்துள்ளனர். குற்றச்சாட்டை உறுதிப்படுத்த தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

    இவ்வாறு சி.பி.ஐ. கூறி உள்ளது. சி.பி.ஐ.யின் இந்த தகவல் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மீதான பிடியை இறுகச் செய்துள்ளது. #CBI #GutkhaScam

    கமல்ஹாசனின் அறிக்கைகளும், நடவடிக்கைகளை பார்க்கும் போது, அவர் இன்னும் அரசியல்வாதிக்கான அந்தஸ்தினை பெறவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். #Minister #KadamburRaju #KamalHassan
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கம்மவார் சங்கம் சார்பில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வாழும் கம்மவார் மக்களை இணைக்கும் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடுக்கு அவர் சொந்த ஊரான வையம்பாளையத்தில் நினைவு மண்டபம் அமைக்கும் பணி, முடியும் தருவாயில் இருக்கிறது. விரைவில் அதனை முதல்வர் திறந்து வைப்பார்.

    அவர் கோவில்பட்டியில் உயிர் நீத்ததால் அவருக்கு சிலை நிறுவப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலை அமைக்கப்படும்.

    மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் மக்களுக்கு தவறான கருத்துக்களை, மக்களின் யதார்த்த நிலையை தெரியாமல் நடிகர் கமலஹாசன் பேசி வருகிறார். இன்னும் நடிகராக தான் இருக்கிறார். அரசியல்வாதியாக மாறியதாக தெரியவில்லை. அவருடைய அறிக்கைகளும், நடவடிக்கைகளை பார்க்கும் போது, இன்னும் அரசியல்வாதிக்கான அந்தஸ்தினை அவர் பெறவில்லை என்பது தெரிகிறது.

    கஜாபுயல் குறித்து அறிவிப்பு வந்ததும் அரசு நடவடிக்கை எடுத்த காரணத்தினால் உயிர் சேதம் அதிகளவில் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ பாராட்டியுள்ளனர். கஜா புயல் சேதம் குறித்து போர்கால நடவடிக்கையாக தமிழக முதல்வர் பார்வையிட்டு, பிரதமரிடம் எடுத்துரைத்து ரூ.15 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.

    மத்திய குழு தற்போது ஆய்வு செய்து வருகிறது. மக்களின் இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அமைச்சர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதனை அரசியலாக பார்ப்பது நல்லது கிடையாது. எதிர்கட்சிகள் பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு அர்ப்பணிப்புடன் தனது கடமையை செய்து வருகிறது.

    மத்திய அரசு சார்பில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பா.ஜ.க தலைவர் தமிழிசை ஆகியோர் பாதித்த பகுதிகளை பார்த்து உள்ளனர். முதல்வர் பாதிப்பு குறித்து அறிக்கை அளித்துள்ளார். பிரதமருக்கு திட்டமிட்ட அலுவல் இருக்கும், கஜாபுயல் பாதித்த மாவட்டங்களை இயற்கை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் மத்திய அரசு இணக்கமான முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Minister #KadamburRaju
    கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் நடவடிக்கை பணிகளை செய்வதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். #GajaCyclone
    தஞ்சாவூர்:

    கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் நடவடிக்கை பணிகளை செய்வதில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளை நேரில் வந்து பார்வையிடவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர், மின்சார வசதி செய்து தர வேண்டும், மீட்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாபேட்டையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியினர் தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.

    இந்த மறியல் போராட்டததில் பெண்கள், குழந்தைகள், கட்சி நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் முழுவதும் உள்ள 33 வார்டுகளிலும் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.

    ஏராளமான டிரான்ஸ் பார்மர்கள் பழுதாகின. இதன் காரமணாக மின்சாரம் முழுமையாக தடைபட்டு குடீநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. வெளிமாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

    இதற்கிடையே நகரத்தில் படிப்படியாக மின் விநியோகம் கொடுக்கப்பட்டது. லாரிகள் மூலம் குடிநீரும் விநியோகிக்கப்பட்டது. இருந்தாலும் பல்வேறு வார்டுகளில் மீட்பு பணிகளை அதிகாரிகள் தொடங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



    அந்த வகையில் மன்னார்குடி நகரம் 23-வது வார்டு தெற்கு வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புயல் அடித்து 7 நாட்களை கடந்தும் பாதிப்புகளை பார்வையிட எந்த ஒரு அதிகாரிகளும் வராததை கண்டித்தும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியமான தேவைகளை உடனடியாக வழங்க கோரியும் திரையரங்கம் எதிரில் பொதுமக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் போராட்டம் நடந்த இடம் அருகே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தங்கியிருந்த தனியார் விடுதி இருந்தது. உடனே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அமைச்சர் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு தங்களை அதிகாரிகள் நேரில் வந்து சந்திக்கவில்லை என்று வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பாதுகாப்பிற்கு நின்ற டி.எஸ்.பி. அசோகன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு நகராட்சி ஆணையர் விசுவநாதன், மின்வாரிய அதிகாரி கண்ணன் ஆகியோர் வந்து மீட்பு பணிகளை உடனடியாக தொடங்குவதாக உறுதியளித்தனர்.

    இதைத் தொடர்ந்து ஏராளமான பணியாளர்கள் அந்த பகுதியில் மீட்பு பணிகளை உடனே தொடங்கினர். அதன் பின் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி பகுதியில் புயல் தாக்கிய நாளில் இருந்து இன்று வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 7 நாட்கள் ஆகியும் மின்சார விநியோகம் தொடங்கப்படாததால் விரக்தியடைந்த பட்டினச்சேரி மீனவர்கள், நாகூர் வாஞ்சூர் சோதனைச்சாவடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காரைக்கால், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.

    தகவலறிந்த தாசில்தார் இளங்கோவன், நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உடனே அந்த பகுதியில் மின்சாரம் வழங்கப்படுவதாக உறுதியளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதே போன்று முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மெயின்ரோட்டில் பொதுமக்கள் திரண்டு வந்து இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் முத்துப்பேட்டை அடுத்துள்ள ஆலங்காடு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    மழை தொடர்ந்து பெய்தாலும் மீட்பு, நிவாரணப்பணிகள் பாதிக்காமல் நடைபெறும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #MinisterUdhayaKumar
    சென்னை:

    ஜகா புயல் மீட்பு நிவாரப் பணிகள் குறித்து வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 2 லட்சத்து 15 மரங்கள் விழுந்தன. அவற்றில் 93 ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து பெய்தாலும் மீட்பு, நிவாரணப்பணிகள் பாதிக்காமல் நடைபெறும்.

    தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. 270 வார்டுகளில் 250 வார்டுகளில் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மீட்பு பணிகள் ஜே.சி.பி. எந்திரம், டிராக்டர் மற்றும் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் நடைப்பெற்று வருகிறது.



    பேரூராட்சி, மாநகராட்சிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து ஜெனரேட்டர் மூலம் நீரை வெளியேற்றப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterUdhayaKumar
    புயல் நிவாரண பொருட்களை பஸ்களில் இலவசமாக எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GajaStorm #Minister

    சென்னை:

    போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 15-ந்தேதி அன்று ‘‘கஜா’’ புயலால் தமிழகத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை ஆகிய கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.

     


    முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான பொருட்களை தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நிவாரண பொருட்களை எடுத்துச் செல்ல உரிய உதவிகளை செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaStorm #Minister

    ×