search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95411"

    புயல் பாதிப்பு இல்லை என்று சொன்னதால் அமைச்சர்கள் மீது மக்கள் கோபம் திரும்பியது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #Gajastorm

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரிப் பாசன மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிக மோசமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததால், அங்குள்ள மக்களிடையே எழுந்துள்ள கோபமும், அக்கோபம் ஆட்சியாளர்கள் மீது திரும்புவதையும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

    கஜா புயலால் காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், சேதங்களும் வரலாறு காணாதவை. அங்குள்ள மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக சேர்த்த அனைத்தையும் ஒற்றை இரவில் இழந்து விட்டனர்.

    கஜா புயல் தாக்குவதற்கு முந்தைய நாள் இரவு வரை கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் அடுத்த நாள் காலையில் ஒன்றுமில்லா தவர்களாக மாறி விட்டனர். அவர்கள் வாழ்வாதாரம் முழுவதையும் புயல் வாரிச் சுருட்டி வீசி விட்டது. முதல் நாள் இரவு வரை ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் உணவு வழங்கியவர்கள் அடுத்த நாள் காலையில் ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாதவர்களாகி விட்டனர். இந்த வலி எவ்வளவு கொடுமையானது என்பதை அனுபவிக்கும் மக்களால் மட்டுமே உணர முடியும்.

    இந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசிடமிருந்து எதிர்பார்ப்பது ஆதரவையும், ஆறுதலையும் தான். ‘பாதிக்கப்பட்ட உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்’ என்று கூறி அவர்கள் மனதில் நம்பிக்கையை மட்டும் விதைத்து விட்டால், அது கொடுக்கும் தைரியத்தில் இழந்தவற்றை மறு உருவாக்கம் செய்யும் பணிகளில் அவர்கள் முழுவீச்சில் இறங்கியிருப்பார்கள்.

    ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் ஒருவேளை உணவு வழங்குவதற்குக் கூட தமிழக அரசு ஏற்பாடுகளை செய்ய வில்லை. புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற அமைச்சர்கள், சுற்றுலா சென்றதாக கருதிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்களே தவிர மக்கள் குறைகளை களையவில்லை.

    புயலால் ஏற்படும் பாதிப்புகள் சரி செய்யப்படும் என்று கூறியிருக்க வேண்டிய அமைச்சர்கள், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியதால் தான் அவர்கள் மீது மக்களின் கோபம் திரும்பியது. சொந்தத் தொகுதியான வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள் துரத்தியடித்ததற்குக் காரணம் இந்த கோபம் தான். தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜு ஆகியோர் முற்றுகையிடப்பட்டதற்கு காரணமும் இதே கோபம் தான்.

    அ.தி.மு.க.வின் துணை அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்தி லிங்கத்தின் சொந்த ஊரிலேயே மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் மக்கள் கோபமடைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள் என்றால், மற்ற பகுதிகளில் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருந்திருக்கும் என்பதை யூகிக்கலாம்.

    மக்கள் கோபத்துடன் போராட்டம் நடத்தும் இடங்களில் அவர்களை சமாதானப்படுத்த வேண்டிய அமைச்சர்கள் தங்களின் அதிகாரத் தோரணையை காட்டியது தான் நிலைமையை மோசமாக்கியுள்ளது.

     


    அதிலும் குறிப்பாக தஞ்சை மாவட்டம் தெலுங்கன் குடிக்காடு என்ற இடத்தில் முற்றுகையிட்ட மக்களை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தகாத வார்த்தைகளால் திட்டியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடும் தமக்கும் இத்தகைய வரவேற்பு தான் கிடைக்கக் கூடும் என்பதை உணர்ந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் கோபத்தை தணிக்கும் வகையில் நேற்றிரவு பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறார். இது மக்கள் கோபத்தை தணிக்கவில்லை; மாறாக மக்களின் கோபத்தை அதிகரித்திருக்கிறது என்பது தான் உண்மை.

    நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, அதாவது ஏக்கருக்கு ரூ.5400 வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். இது சேதமடைந்த பயிர்களை அகற்றி நிலத்தை சீரமைப்பதற்குக் கூட போதாது. ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டுவழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்படும் போது ஒரு தென்னைக்கு ரூ.50,000 வழங்குவதாக அறிவித்த அரசு, இப்போது அதில் கிட்டத்தட்ட நூற்றில் ஒரு பங்கு மட்டுமே இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? தென்னை மரங்களில் ஒருமுறை தேங்காய் பறித்தாலே இதைவிட அதிக வருமானம் கிடைக்கும் எனும் நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி யானைப்பசிக்கு சோளப் பொறியாகவே அமையும். இது போதுமானதல்ல.

    சேதமடைந்த குடிசைகள், படகுகள், மீன்வலைகள் உள்ளிட்ட எந்தப் பொருட்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல. இது மக்களின் கண்ணீரைத் துடைக்காது. துயரங்களைப் போக்காது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடும் முதல்-அமைச்சர் மக்களின் பாதிப்புகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து அதனடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கேற்ற வகையில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளர்.  #Ramadoss #Gajastorm

    அ.தி.மு.க.வை நம்பி வந்தவர்கள் வீழ்ந்தாக என்றைக்கும் சரித்திரம் கிடையாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். #ministerrajendrabalaji #admk

    காரியாபட்டி:

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் யூனியன் தலைவர் உருவப்படம் திறப்பு விழா கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. ராதாகிருஷ்ணன் எம்பி, சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    காரியாபட்டி ஊராட்சி யில் பல்வேறு பொது சேவைகள் மூலம் பொதுமக்களின் நன் மதிப்பை பெற்ற மறைந்த முன்னாள் யூனியன் தலைவரின் படத்தைதிறந்து வைப்பதில் பெருமை அடைகிறோம்.

    அவர் தி.மு.க.வில் நீண்ட காலமாக பணியாற்றி தொடர்ந்து அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றினார். அ.தி.மு.க.வில் அவர் சேர்ந்த போது ஜெயலலிதா மிகவும் சந்தோசம் அடைந்தார். பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த அவர், காரியாபட்டி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து நல்ல நிர்வாகத்தை கொடுத்துள்ளார்.

    அவர் மறைந்து விட்டாலும் அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம்.

    நான் நல்லவர்களை நல்லவர்கள் என்று கட்டாயம் சொல்வேன். நான் திருத்தங்கல் நகராட் சியில் துணை தலைவராக வெற்றிபெற்ற போது அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்த தங்கப்பாண்டியன் இருந்தார்.

    அன்றைக்கு என் பதவியை பறிக்க வேண்டும் என்று தங்கப் பாண்டியனிடம் சிலர் கூறினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து எனக்கு ஆதரவாக இருந்தார்.

    தங்கப்பாண்டியன் உருவப்படத்தை திருத்தங்கல் நகராட்சியிலும், தற்போது காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நான்தான் திறந்து வைத்தேன்.

    எந்த இயக்கத்தில் இருப்பது என்பது முக்கியம் அல்ல. எப்படி செயலாற்றினோம் என்றுதான் பார்க்க வேண்டும். அ.தி.மு.க.வை நம்பி வந்தவர்கள் வீழ்ந்தாக என்றைக்கும் சரித்திரம் கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார். #ministerrajendrabalaji #admk

    அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் கொடுத்தும் கவர்னர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். #Ramadoss #Governor

    பொன்னேரி:

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    வாக்காளர்கள் நேர்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். வாக்குக்கு பணம் கொடுக்க வரும் வேட்பாளரிடம் இந்த பணம் எப்படி வந்தது? என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

    தற்போது உள்ள தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் செய்து சேலம் மலை, திருவண்ணாமலை போன்று மலையளவு பணத்தை குவித்து வைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டியில் இருந்து கன்னியாகுமரி வரை சாலை வழியே 10 அடி உயரத்திற்கு 2000ரூபாய் நோட்டுக்களை அடுக்கி வைக்கும் அளவிற்கு அமைச்சர்கள் ஊழல் செய்து சொத்து சேர்த்து வைத்துள்ளனர்.

    மக்கள் நல்வாழ்வு, சாலை, சுகாதாரம், பாதாள சாக்கடை திட்டம், கல்வி உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்ய வேண்டிய தொகையில் 75 சதவீதம் கொள்ளையடித்து ஊழல் செய்து விடுகின்றனர்.

    கடந்த ஆண்டில் 600 மதுக்கடைகளை திறந்தது இந்த ஆட்சியின் அவலம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஊழலில் 3-வது இடத்தை பிடித்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளனர்.

    அமைச்சர்கள் மீதான ஊழல்கள் குறித்து பா.ம.க. சார்பில் கவர்னரிடம் ஊழல் பட்டியல் வழங்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    காமராஜர் போன்று தமிழகத்திற்கு பெருமை தேடி தந்த முதல்வர்கள் இருந்த நிலைமாறி சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்வர் ஆளாகியுள்ளது வெட்கக்கேடு. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    விவசாயத்திற்கு இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுவதில்லை, விதைகள் கிடைப்பதில்லை. ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் செயல்படாமல் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில துணைப்பொதுசெயலாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் குபேந்திரன் மாநில தலைவர் ஜி.கே.மணி. முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, நடிகர் ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Ramadoss #Governor

    சென்னையில் இன்று காலமான முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். #ParithiIlamvazhuthi #MKStalin
    சென்னை:

    முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மாரடைப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.

    சில ஆண்டுகளுக்கு முன்பு நீரழிவு நோயால் அவரது கால் பாதிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மலர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

    அவரது உடல் பெசன்ட் நகர் 35-வது தெருவில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

    மறைந்த பரிதிஇளம்வழுதி தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பள்ளி படிப்பை வெஸ்லி மேல்நிலைப்பள்ளியில் முடித்த அவர் தமிழக சட்ட மன்றத்திற்கு 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    25 வயதில் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் சத்திய வாணிமுத்துவை எதிர்த்து போட்டியிட்டு பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    துணை சபாநாயகர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக தி.மு.க. அமைச்சரவையில் இடம் பெற்றார். எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

    இவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய 1991-1996 கால கட்டத்தில் சட்டமன்றத்தில் ஒரே ஒரு தி.மு.க. உறுப்பினராக செயல்பட்டார்.

    தி.மு.க.வில் துணைப் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தவர். தி.மு.க.வில் ஏற்பட்ட கசப்பின் காரணமாக 2013-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்தார்.



    அடுத்த நாளே தலைமை செயற்குழு உறுப்பினராக இவரை ஜெயலலிதா நியமித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டி.டி.வி. தினகரன் அணியில் சேர்ந்தார். அக்கட்சியில் அமைப்பு செயலாளர் பொறுப்பு வகித்தார்.

    மறைந்த பரிதிஇளம் வழுதிக்கு 3 குடும்பங்கள் உள்ளன. முதல் மனைவி இறந்து விட்டார். அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 2-வது மனைவிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    3-வது மனைவிக்கு ஒரு மகள் உள்ளார். 3 குடும்பங்களும் தனித்தனியே வசித்து வருகின்றன.

    பெசன்ட் நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள பரிதிஇளம் வழுதியின் உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அரசியல் கட்சி பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அவரது உடல் அடக்கம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மைலாப்பூர் கிருஷ்ணன்பேட்டை மயானத்தில் நடைபெறுகிறது.

    பரிதிஇளம் வழுதி மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவரும், கழக அமைப்பு செயலாளருமான பரிதி இளம்வழுதி உடல் நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு கழக பொதுச்செயலாளரின் சார்பிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#ParithiIlamvazhuthi #MKStalin

    விராலிமலை தொகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிய அமைச்சருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் அருகே உள்ள சீகம்பட்டி, குடுமியான்மலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அவற்றை மனுக்களாக பெற்று கொண்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட மருங்கிப்பட்டி, அரிய முத்துப்பட்டி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொண்டர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் திடீரென ஏறி சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    அப்போது அங்கு கூடிநின்ற பெண்கள் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும், நெற்றியில் குங்கும் வைத்தும் அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்றனர். திடீரென அமைச்சர் விஜயபாஸ்கர் மோட்டார் சைக்கிளில் வந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்போது அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரு விளக்கு வசதி, சாலைவசதி பசுமைவீடு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொடுத்தனர். இதையடுத்து அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார்.

    இதைத்தொடர்ந்து குடுமியான்மலையில் மக்களை சந்திக்க சென்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில், “மக்களின் குறைகளை நேரடியாக கேட்கும் வகையில் தான் இது போன்ற மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். தற்போது ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி எந்த குழப்பமும் இல்லை. யாராலும் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது. மக்களும், தொண்டர்களும் தெளிவாக உள்ளனர். மக்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது போதாது. மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் வரை குறைக்க முடியும். விலை குறைப்பை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் பிரச்சினை தொடர்பாக பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் சந்திப்பு என்பது வழக்கமான ஒன்று தான். இந்த சந்திப்பில் 7 பேர் விடுதலை குறித்தும் முதல்-அமைச்சர் பேசி இருக்கலாம்” என்றார்.
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் நந்தனத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். #MGRCenturyFestival #ADMK

    சென்னை:

    நந்தனத்தில் இன்று மாலை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர்.

    முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது.

    சென்னை நந்தனம் ஒய். எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 3.30மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ் நாடு 50-ம் ஆண்டு பொன் விழா நடைபெறுகிறது.

    விழாவுக்கு சபாநாயகர் பி.தனபால் தலைமை வகிக்கிறார். முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை திறந்து வைத்து நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிடுகிறார்.

    தமிழ்நாடு பொன்விழா ஆண்டையொட்டி நடை பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவித்து காசோலை, பாராட்டு சான்றிதழ், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விழா பேருரையாற்றுகிறார்.

    விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி. ஆருடன் சினிமா துறையில் பயணித்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.

    விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை ஆகியோர் பேசுகிறார்கள்.

     


    சென்னை நந்தனம் ஒய். எம்.சி.ஏ. மைதானத்தில் விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் செய்யப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து எம்.ஜி.ஆர். ரசிகர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 1 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல், சேர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    விழாவையொட்டி அண்ணா சாலை முழுவதும் வாழை மரங்கள், தோரணங்கள், அலங்காரங்கள், பேனர்கள் அமைக்கப்பட்டு சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இருந்து வரும் தொண்டர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்காக போலீசார் சார்பில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    வாகன நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து வரும் அ.தி.மு.க.வினர் பஸ்கள், வேன்கள், கார்கள் கிண்டி தொழிற் பேட்டை பகுதியிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவுத் திடல், சுவாமி சிவானந்தா சாலை, கடற்கரை இணைப்பு சாலை ஆகிய இடங்களில் நிறுத்தப்பட வசதி செய்யப்பட்டுள்ளது.

    தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் நந்தம்பாக்கம் வர்த்தக மையம், ஐ.டி.பி.எல். மைதானம் ஆகிய இடங்களில் நிறுத்தப்படுகிறது.

    தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள வாகன நிறுத்துமிடங்களிலும், சி.பி.டி. வளாகத்திலும் நிறுத்தப்படும்.

    விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் ஒய்.எம். சி.ஏ. ராணுவ மைதானம், டாக்டர் எம்.ஜி.ஆர். பல் கலைக்கழக வளாகம் ஆகிய இடங்களில் நிறுத்தலாம்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் 17 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #MGRCenturyFestival #ADMK

    குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர், டி.ஜி.பி. ஆகியோர் நீதிமன்ற நடவடிக்கை மூலமே பதவி விலகுவார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #GutkhaScam #TTVDhinakaran
    சுவாமிமலை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று (24-ந் தேதி) முதல் 26-ந் தேதி வரை 3 நாட்கள் நாகை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்குகிறார்.

    கும்பகோணம் அருகே திம்மக்குடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அம்மாவின் அரசு என்று கூறி ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி ஆட்சியில் 33 அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது அ.தி.மு.க.வின் ஊழல் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசிடமே இருக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும். நீர்ப்பாசனத்தை சீர் செய்தாலே விவசாயிகள் தற்கொலை முற்றிலும் தவிர்க்கப்படும்.

    குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சரோ, டி.ஜி.பி. யோ இதுவரை பதவி விலகவில்லை. நீதிமன்ற நடவடிக்கை மூலமே அவர்கள் பதவி விலகுவார்கள்.

    கருணாஸ் உணர்ச்சி வசப்பட்டு பேசியதாக கூறி உடனே மன்னிப்பு கோரினார். ஆனால் இந்த அரசாங்கம் கருணாசுக்கு ஒரு நிலைப்பாடு, எச். ராஜா, எஸ்.வி. சேகருக்கு ஒரு நிலைப்பாடு கொண்டுள்ளது. இது அடிமை அரசாங்கம் என்பது தான் உண்மை.

    திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்.

    டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட விவசாய பகுதியாக அறிவிக்கப்பட்டு விவசாயமும் விவசாயம் சம்மந்தப்பட்ட தொழில்களை மட்டுமே நடைபெற வேண்டும். ஏற்கனவே உள்ள திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தினாலும், ஊழலை தடுத்தாலும் அதிக விவசாய பிரச்சனைகள் தீர்த்து விடலாம்.

    நீர் ஆதாரங்களை சரிவர செயல்படுத்தி ஆறு, குளங்களை சீர் செய்து மழை காலங்களில் நீரை சேமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான விதை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GutkhaScam #TTVDhinakaran
    அமைச்சருக்கு பணம் கொடுத்துவிட்டு சிறையில் கைதிகள் உல்லாசமாக இருக்க அதிகாரிகள் அனுமதி அளித்திருக்கிறார்கள் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். #CPI #Mutharasan #PuzhalJail
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு பேச்சு மற்றும் கருத்துரிமையை பறித்து வருகிறது. தமிழகத்தில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியை பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் எடுத்து வருகிறது. நேற்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, புதுக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் காவல் துறையையும் நீதிமன்றத்தையும் இழிவாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர் மீது உடனடியாக காவல் துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மின்சார தட்டுப்பாடே இல்லை என்று கூறுவது நகைப்புக்கு உரியது. நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகையின் கருத்து என்பது அவர்கள் விடுதலையை காலதாமதப்படுத்தும் முயற்சியாகும்.

    டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் பயிர்கள் கருகி வருகிறது. எனவே டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து போதிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    சிறைத்துறை அதிகாரிகள் அமைச்சருக்கு, நாங்கள் மாதம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஆகையால் கைதிகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு உல்லாசமாக இருங்கள் என்று கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து துறைகளிலும் இந்த ஆட்சியில் ஊழல் செய்து வருகின்றனர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும் அவருக்கு கட்சியின் உயர் பதவி அளித்து இருப்பது ஊழல் செய்தால் அவருக்கு பதவி என்ற ரீதியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அவர் மீது கை வைத்தால் அவர் மற்றவர்கள் தலையில் கை வைத்து விடுவார் என்று தான், அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

    இலங்கையின் இறுதி போரின் போது மத்திய அரசு உள்ளிட்ட பல நாடுகள் எங்களுக்கு உதவி செய்தது என்று ராஜபக்சே கூறியிருப்பது அகம்பாவத்தின் உச்சகட்டம். போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில் பின்பற்றிய டெண்டர் முறை தான் தற்போதும் பின்பற்றபடுகிறது என்றும் மேலும் சிங்கிள் டெண்டர் முறை தி.மு.க. ஆட்சியில் தான் இருந்தது என்றும் அதனால் தி.மு.க. ஆட்சியில் தான் ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் கூறியிருக்கிறார். அப்படி தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்தது என்றால் ஏன்? இதுநாள் வரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போதைய தமிழக அரசில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள் உள்ளதால் அவர்கள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இனி ஒரு நொடியும் இந்த ஆட்சி தமிழகத்தில் நீடிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #CPI #Mutharasan #PuzhalJail
    மதுரையில் நாளை அண்ணாவின் 110-வது பிறந்தநாளை யொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அமைச்சர் செல்லூர்ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார். #ADMK #Sellurraju
    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (15-ந்தேதி) காலை 9 மணிக்கு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    நிகழ்ச்சியில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இதில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள், முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பிக்கும்படி வேண்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ADMK #Sellurraju
    அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. வீட்டில் நடைபெற்ற சோதனையால் தமிழகத்துக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். #thirunavukkarasar #Congress
    அவனியாபுரம்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட பந்த் வெற்றி என்பது மோடி அரசை தோற் கடிக்க பெற்ற வெற்றியாக நினைக்கிறேன்.

    இன்றைய தேதி வரை பெட்ரோல் விலையை உயர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது அதன் விலையை மட்டும் உயர்த்தியதோடு அல்லாமல் அனைத்து போக்குவரத்து மற்றும் அத்தியாவாசிய பொருட்கள் விலைகளையும் உயர்த்தும்.

    அமைச்சர், டிஜி.பி போன்றவர்கள் வீட்டில் நடைபெற்றுள்ள சோதனையால் தமிழ்நாட்டிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை என்பது மற்ற குற்றங்களுக்கு முன் உதாரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #Congress
    குட்கா விற்க லஞ்சம் கொடுத்தவரை கைது செய்யும் போது லஞ்சம் வாங்கிய அமைச்சர், அதிகாரிகளை கைது செய்யாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். #GutkhaScam #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குட்கா வழக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில், ஊழல் வழக்கின் அடிப்படையில் சி.பி.ஐ சோதனை நடத்திய பிறகும், இருவரையும் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யாமல் இருப்பதும், அதை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

    கான்ஸ்டபிள் ஒருவர் மீது புகார் வந்தாலே “சஸ்பெண்ட்” செய்யும் நிலையில், காவல்துறைத் தலைவர் மீதே ஊழல் குற்றச்சாட்டு வந்த பிறகும் அரசும், ஆளுநர் அவர்களும் அமைதி காப்பது அரசியல் சட்டத்தின் படி செயல்பட வேண்டிய அரசுக்கு ஒரு போதும் ஏற்ற செயலாக இருக்க முடியாது.


    சுகாதாரத்துறை அமைச்சருக்கும், டி.ஜி.பி.க்கும் லஞ்சம் கொடுத்த மாதவராவையும், அந்த லஞ்சத்தைக் கொண்டு போய் கொடுத்த ராஜேந்திரன் உள்ளிட்ட இடைத்தரகர்களையும், மத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்து அவர்கள் எல்லாம் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு விட்டார்கள்.

    ஆனால், லஞ்சம் பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனையும் கைது செய்யாத மர்மம் என்ன என்பது இன்னும் விளங்கவில்லை. ஊழல் வழக்கில் லஞ்சம் பெற்றவர்களை முதலில் கைது செய்வதுதான் வழக்கம்.

    ஆனால், “குட்கா ஊழல்” வழக்கில் லஞ்சம் பெற்றவர்களை பதவியில் நீடிக்க அனுமதித்து விட்டு, லஞ்சம் கொடுத்திருப்பவர்களையும், அந்த லஞ்சப் பணத்தை கொண்டு போய் கொடுத்த இடைத்தரகரையும் முதலில் கைது செய்திருக்கிறது சி.பி.ஐ.

    “குட்கா டைரி”, “குட்கா மாதவராவின் வாக்குமூலம்” மற்றும் “சோதனை” அடிப்படையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் “லஞ்சம் கொடுத்தவர் கைது” “லஞ்சப் பணத்தை கொண்டு போய் சேர்த்த இடைத்தரகர் கைது” “ஊழல் பணத்தைப் பெற்ற மத்திய அரசு அதிகாரிகள் கைது” என்று தீவிர நடவடிக்கை எடுத்து வரும் சி.பி.ஐ. மாநில அமைச்சரிடமும், மாநிலத்தில் உள்ள டி.ஜி.பி.யிடமும் நெருங்கி விடாமல் தயங்கி நிற்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

    ஆகவே, ஆவணங்கள் மற்றும் வாக்கு மூலங்களின் அடிப்படையில் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் பேரணி வகுத்து நிற்கும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் அவர்களை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில் அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் குட்கா வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GutkhaScam #DMK #MKStalin
    ஸ்மார்ட் சிட்டி திட்டம் முறைகேடு நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முன்னேற்றத்திற்கான “ஸ்மார்ட் சிட்டி” திட்டப் பணிகளை நிறைவேற்றவிடப்படும் டெண்டர்களில், ஆழமான உள்நோக்கத்துடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தலையீடும், குறுக்கீடும் தாண்டவமாடுகிறது.

    ஒரு தனியார் கம்பெனி “மெட்டல் ஷீட்” தயாரிப்பதை முதன்மைத் தொழிலாகக் கொண்ட கம்பெனி என்றும், அந்த தனியார் கம்பெனிக்கு “மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப்” பணிக்கான டெண்டரை வழங்க இயலாது என்றும் டுபிட்கோ மறுத்திருக்கிறது.

    இதனால் டுபிட்கோவின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகாந்த் காம்ப்ளே அதிரடியாக மாற்றப்பட்டார். ஏற்கனவே, சர்ச்சைக்குரிய இந்த தனியார் கம்பெனிக்கு சென்னை மாநகரத்தில் மின்னணு நிர்வாக ஒப்பந்தம் வழங்கியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் டுபிட்கோவின் கூடுதல் நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சீர்மிகு நகரங்கள் அமைக்கும் பணிகளில் மாதங்கள் பல ஆகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று மாநிலங்களவையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டுபிட்கோவின் இந்த “சீர்மிகு நகரங்கள்” டெண்டரிலும், சீர்கெட்ட முறையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரடியாக தனது பினாமி கம்பெனிக்காக தலையிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

    அதிலும் குறிப்பாக இயந்திரங்கள் தயாரிக்கும் ஒரு தனியார் கம்பெனிக்கு “ஸ்மார் சிட்டி மின்னணு நிர்வாகம்” தொடர்பான பணிகளை அளிக்க அழுத்தம் கொடுப்பதும், தனது பதவியை அமைச்சர் துஷ்பிரயோகம் செய்வதும், லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைக்குரிய குற்றங்களாகும்.


    உள்ளாட்சித் துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் எஸ்.பி.வேலு மணியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும் டெண்டர் முறைகேடுகள் தொற்றுநோய் போல் பரவி, பெரும் பாதிப்பை உண்டாக்கி வருகின்றன. எல்.ஈ.டி விளக்குகள் பொருத்துவதற்கான ஒப்பந்தங்கள் எந்தத் துறையைச் சார்ந்ததாக இருந்தாலும், அது அமைச்சர் வேலுமணியின் பினாமிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத உத்தரவு போடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் இந்த “சீர்மிகு நகரங்களின்” மின்னணு நிர்வாகம் தொடர்பான டெண்டர் விவகாரம் உள்ளிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் அனைத்திலும் இதுவரை வழங்கப்பட்டுள்ள டெண்டர்கள், அந்த டெண்டர்களை பெற்றுள்ள தனியார் கம்பெனிகளுக்கும் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து “நேர்மையான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி” தலைமையில் ஒரு சிறப்புக் குழுவினை அமைத்து விசாரணை நடத்தி, அதனடிப்படையில் லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும், அவருக்குத் துணை போகும் அதிகாரிகள் மீதும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin
    ×