search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95440"

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. #IPL2019 #KXIPvSRH

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

    இந்த நிலையில் மொகாலியில் நேற்று இரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் ஆன்ட்ரூ டை, முருகன் அஸ்வின் நீக்கப்பட்டு முஜீப் ரகுமான், அங்கித் ராஜ்பூத் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.





    ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் ஆர்.அஸ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினார்கள். பஞ்சாப் அணியினர் தொடக்கத்தில் சிறப்பான பந்து வீச்சு மற்றும் நேர்த்தியான பீல்டிங் மூலம் எதிரணிக்கு நெருக்கடி அளித்து ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்கள். 2-வது ஓவரில் முஜீப் ரகுமான் பந்து வீச்சில் பேர்ஸ்டோ (1 ரன்) கேப்டன் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்து களம் கண்ட விஜய் சங்கர் 2-வது ஓவரின் கடைசி பந்தில் முதல் பவுண்டரியை விரட்டினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட்டுக்கு 27 ரன்னே எடுத்து இருந்தது. 10 ஓவர்களில் அந்த அணி 50 ரன்னை தொட்டது. அணியின் ஸ்கோர் 56 ரன்னாக இருந்த போது விஜய் சங்கர் (26 ரன், 27 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) அஸ்வின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து களம் இறங்கிய முகமது நபி 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

    அடுத்து மனிஷ் பாண்டே, தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் டேவிட் வார்னர் நிலைத்து நின்று அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 15.3 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை எட்டியது. டேவிட் வார்னர் 49 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இந்த சீசனில் அவர் அடித்த 4-வது அரைசதம் இதுவாகும், மனிஷ் பாண்டே 15 பந்துகளில் 2 பவுண்டயுடன் 19 ரன் சேர்த்து முகமது ஷமி பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் களம் இறங்கிய தீபக் ஹூடா அதிரடியாக மட்டையை சுழற்றினார்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 62 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 70 ரன்னும், தீபக் ஹூடா 3 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் முஜீப் ரகுமான், முகமது ஷமி, ஆர்.அஸ்வின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் (16 ரன், 14 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ரஷித் கான் பந்து வீச்சில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால், தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். 13 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை கடந்தது. லோகேஷ் ராகுல் 34 பந்திலும், மயங்க் அகர்வால் 40 பந்திலும் அரைசதத்தை எட்டினார்கள்.

    அணியின் ஸ்கோர் 132 ரன்னாக உயர்ந்த போது மயங்க் அகர்வால் (55 ரன், 43 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால்-லோகேஷ் ராகுல் இணை 114 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த டேவிட் மில்லர் (1 ரன்), மன்தீப் சிங் (2 ரன்) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். 19.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் 53 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 71 ரன்னும், சாம் குர்ரன் 3 பந்துகளில் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 6-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.


    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ள நிலையில், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார். #IPL2019 #RR
    ஐபிஎல் 2019 சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது.

    ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெற்றி பெற போராடி வருகின்றன. இரு அணிகளும் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தன. நான்காவது போட்டியில் இரு அணிகளும் மோதின. இதில் ஒரு அணி வெற்றி பெற்றே தீரும் என்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் வெற்றியை பெற்றது.

    அதன்பின் கொல்கத்தாவுக்கு எதிராக சரணடைந்தது. ஐந்து போட்டியில் நான்கில் தோல்வியடைந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் இருந்த போதிலும், இன்னும் பயப்பட தேவையில்லை என்று அந்த அணியின் கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே கூறுகையில் ‘‘எங்களுக்கு இன்னும் எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நாங்கள் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளோம். ஒரு போட்டியில் மட்டுமே மோசமாக தோல்வியடைந்துள்ளோம். மற்ற நான்கு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். அவற்றில் மூன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.



    தொரடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும்போது முன்னேற்றத்திற்கான வழிகளைத் தேடுவது கடினமானதாகிவிடும். ஆனால் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அதிக அளவில் யோசிக்க வேண்டியதில்லை. எங்கள் வீரர்கள் அவர்களுடைய சிறப்பாக செயல்பாட்டை வெளிப்படுத்தினால், மகிழ்ச்சியான முடிவு வந்து சேரும்’’ என்றார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஜடேஜாவின் ‘நியூ லுக்’கை பார்த்து சக வீரர்கள் கிண்டல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. #IPL2019 #CSK
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். இதில் ஜடேஜா தனது தோற்றத்தை அடிக்கடி மாற்றுவார். குறிப்பாக தாடி மீசையில் விதவிதமான ஸ்டைலை அறிமுகம் செய்வார். ரசிகர்களும் அதை ரசிப்பார்கள். நீண்ட காலமாக தாடியுடன் காட்சியளிக்கும் அவர் கடந்த முறை தாடியை சேவிங் செய்துவிட்டு, அதை ஒரு சவாலாக அறிமுகப்படுத்தினார்.

    தற்போது அவர் வெளிநாட்டுக்காரர்களை போல் தாடியை பிரவுன் கலரில் மாற்றியுள்ளார். இதை சக வீரர்கள் கிண்டல் செய்துள்ளனர். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
    இந்திய அணிக்கு என்னை அழைத்தால் எப்போதும் தயாராக இருக்கிறேன் என மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #IPL2019 #CSK
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். அனில் கும்ப்ளேவுக்குப் பின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருந்தார். அஸ்வின் வந்த பின் இந்திய அணியில் ஹர்பஜன் சிங்குக்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த 2015-ம் ஆண்டுக்குப்பின் சர்வதேச போட்டிக்கான இந்திய அணியில் விளையாடவில்லை.

    ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் மூன்று போட்டிகளில் மட்டுமே களம் இறங்கிய ஹர்பஜன் சிங், இரண்டு முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் விளையாட அழைத்தால், நான் எப்போதுமே தயார்தான் என்று தெரிவித்துள்ளார்.



    இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் முதன்மை பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகின்றனர். டெஸ்டில் மட்டுமே அஸ்வின் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 57 சிக்சர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளது. #IPL2019
    ஐபிஎல் 2019 சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கியது. நேற்றோடு 21 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நான்கு வெற்றிகள் பெற்றுள்ளன.

    இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அந்த்ரே ரஸல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் போட்டிக்கு போட்டி சிக்சர் மழையாக பொழிந்து வருகிறது. ஐந்து போட்டிகளில் நான்கில் களம் இறங்கிய அவர் 22 சிக்சர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார். மேலும் அந்த அணியின் நிதிஷ் ராணா 12 சிக்கர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.



    மொத்தமாக 57 சிக்சர்கள் அடித்து கொல்கத்தா முதலிடம் வகிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் 32 சிக்சர்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி 31 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 30 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் 29 சிக்சர்களுடன் ஐந்தாவது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 29 சிக்சர்களுடன் 6-வது இடத்திலும், சிஎஸ்கே 25 சிக்சர்களடன் 7-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 24 சிக்சர்களுடன் 8-வது இடத்திலும் உள்ளன.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை சாய்த்தது கனவு போன்று உள்ளது என்று மும்பை இந்தியன்ஸ் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் கூறினார். #IPL2019 #AlzarriJoseph
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது. இதில் மும்பை அணி நிர்ணயித்த 137 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 17.4 ஓவர்களில் 96 ரன்களில் சுருண்டது. ஐ.பி.எல்.-ல் ஐதராபாத் அணி 100 ரன்னுக்குள் முடங்குவது இதுவே முதல் நிகழ்வாகும்.

    மும்பை வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 3.4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் வார்னர் (15 ரன்) கிளன் போல்டு ஆனதும் அடங்கும். ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு பவுலரின் அற்புதமான பந்து வீச்சாக இது பதிவானது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் சோகைல் தன்விர் 14 ரன் கொடுத்து 6 விக்கெட் எடுத்ததே (சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக) சிறந்த பந்து வீச்சாக இருந்தது. அந்த 11 ஆண்டு கால சாதனையை ஜோசப் முறியடித்தார்.

    வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 22 வயதான ஜோசப்புக்கு இது தான் முதல் ஐ.பி.எல். ஆட்டமாகும். மலிங்கா தாயகம் திரும்பியதால் களம் காணும் வாய்ப்பை பெற்ற ஜோசப் தனது அறிமுக ஆட்டத்திலேயே பிரமாதப்படுத்தி விட்டார்.

    ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட அல்ஜாரி ஜோசப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல்.-ல் எனது முதல் ஆட்டத்திலேயே 6 விக்கெட் வீழ்த்தியதை என்னால் நம்ப முடியவில்லை. கனவு போன்று உள்ளது. இதை விட பெரிதாக நான் எதையும் எதிர்பார்க்க முடியாது. நிச்சயம் இது மறக்க முடியாத நினைவாக இருக்கும்.

    எனது திறமை மீது நம்பிக்கை வைத்து திட்டமிட்டு பந்து வீசினேன். அதற்குரிய பலன் தான் இது. வார்னரின் விக்கெட்டை வீழ்த்தியதும் ஏன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை என்று கேட்கிறீர்கள். எனது கவனம் எல்லாம் ஆட்டத்தில் வெற்றி பெறுவதில் தான் இருந்தது. உண்மையிலேயே நான் விக்கெட் வீழ்த்துவதை கொண்டாடுவதில்லை. வெற்றியைத் தான் கொண்டாடுகிறேன்.

    எனது குறிக்கோள் விக்கெட் வீழ்த்துவது மட்டுமல்ல, அதன் மூலம் அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும். வெற்றிக்காக மட்டுமே விளையாடுகிறேனே தவிர, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த கோப்பையை வெல்ல விரும்புகிறேன்’ என்றார்.

    6 விக்கெட்டுகளில் எதை சிறந்ததாக கருதுகிறீர்கள் என்று அவரிடம் கேட்ட போது, வெற்றியை உறுதி செய்த கடைசி விக்கெட் தான் என்று பதில் அளித்தார். ஜோசப்புக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ‘இன்னொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் எங்களை பெருமைப்படுத்தி விட்டார்’ என்று ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.

    ஐதராபாத் அணியின் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர்குமார் கூறுகையில், ‘நல்ல தொடக்கம் கிடைத்தும் (முதல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்தனர்) அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். மும்பை வீரர் பொல்லார்ட் ஆரம்பத்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை( 8 ரன்னில் தப்பியவர் பிறகு 4 சிக்சருடன் 46 ரன் எடுத்தார்) நழுவ விட்டது பின்னடைவாகி விட்டது. அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் இதை விட குறைந்த ஸ்கோரை சேசிங் செய்ய வேண்டியது வந்திருக்கும்.

    இந்த ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. ஆடுகளம் ஈரப்பதத்துடன், வேகம் குறைந்து காணப்பட்டது. இத்தகைய ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல. ஆனாலும் 137 ரன்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்கு தான். நாங்கள் முழு திறமையை வெளிபடுத்தி நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக்கி இருக்க வேண்டும். முதல் 3 ஓவர்களுக்கு பிறகு எங்களது பேட்டிங் சொதப்பி விட்டது’ என்றார்.  #IPL2019 #AlzarriJoseph
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை பந்தாடி கொல்கத்தா அணி 4-வது வெற்றியை ருசித்தது. #IPL2019 #RRvKKR

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின.

    ‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் ராஜஸ்தானை பேட் செய்ய அழைத்தார். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பயங்கரமாக காற்று வீசி புழுதி கிளம்பியது. இதனால் கொல்கத்தா விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா முககவசம் அணிந்தபடி களம் கண்டார்.

    இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவின் (5 ரன்) விக்கெட்டை சீக்கிரம் பறிகொடுத்தது. அடுத்து வந்த வீரர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு ஆடினர். ஆனால் விக்கெட் கைவசம் இருந்தும் கொல்கத்தாவின் பந்து வீச்சை அடித்து நொறுக்க முடியாமல் தவித்தனர். ஜோஸ் பட்லர் 37 ரன்களும், திரிபாதி 6 ரன்னும் எடுத்து கேட்ச் ஆனார்கள்.





    ஸ்டீவன் சுமித் 73 ரன்களுடனும் (59 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 7 ரன்னுடனும் (14 பந்து) களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவர்கள் முழுமையாக ஆடி 3 மற்றும் அதற்கு குறைவான விக்கெட்டுடன் ஒரு அணி எடுத்த குறைந்த ஸ்கோர் இது தான்.

    அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரின் (47 ரன், 25 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), கிறிஸ் லின் (50 ரன், 32 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) இருவரும் அதிரடியில் வெளுத்து வாங்கினர். இவர்களின் சரவெடி ஆட்டம் கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கியது.

    கொல்கத்தா அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராபின் உத்தப்பா 26 ரன்களுடனும், சுப்மான் கில் 6 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 5-வது ஆட்டத்தில் ஆடி 4-வது வெற்றியை பெற்ற கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தானுக்கு இது 4-வது தோல்வியாகும்.


    கேப்டன் பதவியில் விராட் கோலி இன்னும் ‘அப்ரன்டிஸ்’-தான் என கவுதம் காம்பிர், மீண்டும் அவரது திறமை குறித்து சாடியுள்ளார். #IPL2019 #ViratKohli
    ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன், ஆர்சிபி-யில் தொடர்ந்து கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை. டோனி, ரோகித் சர்மா தலா மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். அவர்களுடன் விராட் கோலியை ஒப்பிட இயலாது. இன்னும் கேப்டன் திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இதுவரை அவரை ஆர்சிபி கேப்டனாக வைத்திருப்பதால், அவர் அணிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கவுதம் காம்பிர் கூறியிருந்தார். இதுகுறித்து விராட் கோலியிடம் கேட்டபோது, ‘‘வெளியில் உள்ள நபர்கள் கூறியதை கருத்தில் கொண்டால், நான் வீட்டில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும்’’ என்றார்.

    இந்த சீசனில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஐந்து போட்டிகளிலும் ஆர்சிபி தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் கேப்டன் பதவியில் விராட் கோலி இன்னும் ‘அப்ரன்டிஸ்’தான் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘பேட்டிஸ்மேன் என்பதில் விராட் மாஸ்டர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கேப்டன் பதவியில் அவர் அப்ரன்டிஸ். அவர் இன்னும் ஏராளமாக கற்றுக்கொள்ள வேண்டும். பந்து வீச்சாளர்கள் மீது சாடுவதை விட்டுவிட்டு, தோல்விக்கு காரணத்தை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    அவர்கள் எங்கே சறுக்கினார்கள் என்பது நான் எடுத்துக் கூறகிறேன். தொடர் தொடங்கும்போது மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் கவுல்டர்-நைல் ஆகியோரால் விளையாட முடியாது என்பது தெரிந்தும், ஏன் அவர்களை தேர்வு செய்தார்கள்.

    பிளாட் ஆடுகளமான சின்னசாமி மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுடன் முழு பலத்தில் களம் இறங்க வேண்டும். கொல்கத்தாவுக்கு எதிராக சிராஜ் பந்து வீச முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டாய்னிஸை பந்து வீச கோலி அழைத்தார்.

    அதற்குப் பதிலாக பவன் நெஹியை பந்து வீச அழைத்திருக்க வேண்டும். ஏனெனில், ஆடுகளத்தில் கிரிப்பிங் இருந்தது. ரஸல் வேகப்பந்து வீச்சை துவம்சம் செய்வார் என்பதை தெரிந்து கொள்ள பெரிய மூளை தேவையில்லை’’ என்றார்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக 6 விக்கெட் வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு என்ற சாதனையைப் படைத்தார் அல்ஜாரி ஜோசப். #IPL2019 #MI
    ஐபிஎல் தொடரில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 136 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது. மும்பை அணியில் மலிங்கா இடம் பெறாததால் வெஸ்ட் இண்டீஸின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அல்ஜாரி ஜோசப் இடம்பிடித்தார். இவருக்கு இதுதான் ஐபிஎல் அறிமுகம் போட்டி. ஐபிஎல் ஏலத்தின் போது இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. ஆடம் மில்னே-வை மும்பை அணி ஏலம் எடுத்திருந்தது. அவர் காயம் அடைந்ததால் அல்ஜாரியை மாற்று வீரராக தேர்வுசெய்தது.

    ஆட்டத்தின் 5-வது ஓவரை அல்ஜாரி ஜோசப் வீசினார். முதல் பந்திலேயே வார்னரை க்ளீன் போல்டாக்கினார். இதன்மூலம் அறிமுகம் போட்டி முதல் பந்திலே விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதோடு மட்டுமல்ல தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி 3.4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.



    இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய முதல் வீரர் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் அறிமுக ஐபிஎல் தொடரான 2008-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய தன்வீர் சோஹைல் செனனைக்கு எதிராக 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாக இருந்தது. தற்போது 11 வருடங்கள் கழித்து அல்ஜாரி ஜோசப் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜம்பா 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தொடர்ந்து 6-வது தோல்வியை சந்தித்துள்ளது.#IPL2019 #RCBvDC
    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முதலில் களம் இறங்கியது. ரபாடா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே அடித்தது. விராட் கோலி 41 ரன்னும், மொயீன் அலி 32 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து பிரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது பிரித்வி ஷா 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த இங்கிராம் 22 ரன்னிலும், ரிஷப் பந்த் 18 ரன்னிலும், கிறிஸ் மோரிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 6 பந்தில் மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால் ஆட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    என்றாலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 18.4 ஓவரில் 152 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி தான் விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
    205 ரன் குவித்தும் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது குறித்து பந்துவீச்சாளர்கள் மீது கோலி கடுமையாக பாய்ந்துள்ளார். #Kohli #ipl2019

    பெங்களூர்:

    கொல்கத்தா வீரர் ரஸ்சலின் அதிரடியால் பெங்களூர் அணி 5-வது தோல்வியை தழுவியது.

    பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது.

    வீராட்கோலி 49 பந்தில் 84 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), டிவில்லியர்ஸ் 32 பந்தில் 63 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். சுனில்நரீன், குல்தீப்யாதவ், நிதிஷ் ராணா தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    206 ரன் இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பின்னர் களம் இறங்கியது.

    ஆந்தரே ரஸ்சலின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 5 பந்து எஞ்சி இருந்த நிலையில் 206 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரஸ்சல் 13 பந்தில் 48 ரன்னும் (1 பவுண்டரி, 7 சிக்சர்), கிறிஸ் லின் 43 ரன்னும், ராணா 23 பந்தில் 37 ரன்னும் எடுத்தனர். சைனி, நெகி தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    17 ஓவர் வரை பெங்களூர் அணிக்கே வெற்றி வாய்ப்பு இருந்தது. கொல்கத்தாவுக்கு 18 பந்தில் 53 ரன் தேவை. 18-வது ஓவரிலும், 19-வது ஓவரிலும் ரஸ்சல் அதிரடி ஆட்டத்தை மாற்றினார். 18-வது ஓவரில் 2 சிக்சருடன் 23 ரன்னும், 19-வது ஓவரில் 4 சிக்சர், 1 பவுண்டரியுடன் 29 ரன்னும் எடுக்கப்பட்து. ரஸ்சலின் அதிரடியை பெங்களூர் பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    பெங்களூர் அணி தொடர்ந்து 5-வது தோல்வியை தழுவியது. 205 ரன் குவித்தும் தோற்றதால் பெங்களூர் அணி கேப்டன் கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர் பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக கோலி கூறியதாவது:-

    இந்தப்போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திப்போம் என்று நினைத்துக்கூட பார்க்க விலலை. கடைசி 4 ஓவர்களில் நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. பவுலர்கள் இன்னும் கொஞ்சம் புத்தாலித் தனத்துடன் செயல்பட்டு இருக்க வேண்டும். கடைசி கட்டங்களில் துணிச்சலாக பந்து வீசவில்லை என்றால் ரஸ்சல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களால் சிக்கல் ஏற்படும்.

    ஒரு வெற்றிக்கூட பெறவில்லை என்பதால் மிகுந்த நெருக்கடியில் உள்ளோம். இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை. முதலில் 205 ரன் போதுமானது என்று நினைத்தேன். கூடுதலாக இன்னும் 25 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

    ஆட்டத்தில் என்ன தவறு நடந்தது என்பதை கலந்து ஆலோசிப்போம். இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே இதுவரை ஏமாற்றம் தான் மிஞ்சியது.

    இவ்வாறு அவர் கூறினார். #Kohli #ipl2019

    உலக கோப்பை அணி தேர்வுக்கு ஐ.பி.எல். செயல்பாட்டை கவனத்தில் கொள்வதா? வேண்டாமா? என்று இந்திய தேர்வு குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். #BCCI #IPL
    புதுடெல்லி:

    10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான அணிகளை ஏப்ரல் 23-ந்தேதிக்குள் அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘கெடு’ விதித்துள்ளது.

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 11 பேருக்கு அணியில் நிச்சயம் இடம் உண்டு. எஞ்சிய 4 இடத்திற்கு அம்பத்தி ராயுடு, லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், கலீல் அகமது உள்ளிட்டோர் இடையே போட்டி நிலவுகிறது. தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வீரர்களின் செயல்பாடு உலக கோப்பை அணித்தேர்வில் எடுத்துக் கொள்ளப்படாது என்று இந்திய கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஏற்கனவே கூறியிருக்கிறார்கள்.

    அப்படி பார்த்தால் முந்தைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜொலிக்கவில்லை. ஆனால் ஐ.பி.எல்.-ல் அதிரடி காட்டுகிறார். மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து பிரமிப்பூட்டினார். ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரை எடுத்துக் கொண்டால், ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் ஓரளவு நன்றாக ஆடினார். ஐ.பி.எல்.-ல் அவரது பேட்டிங் இதுவரை பெரிய அளவில் வெளிப்படவில்லை. அம்பத்தி ராயுடுவின் பேட்டிங் ஐ.பி.எல்.-ல் சொதப்புகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அவர் கடைசி 3 ஆட்டத்தில் ஒற்றை இலக்கத்தை கூட தாண்டவில்லை.

    இதனால் உலக கோப்பை அணி தேர்வுக்கு ஐ.பி.எல். செயல்பாட்டை கவனத்தில் கொள்வதா? வேண்டாமா? என்று இந்திய தேர்வு குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் ஆடுகிறார்கள். அதனால் ஐ.பி.எல். தான் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில், சில வீரர்களின் இடங்களை தீர்மானிக்கும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆருடம் கூறியுள்ளார். #BCCI #IPL
    ×