search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95440"

    குடும்ப சூழ்நிலை காரணமாக ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகுவதாக டேவிட் வில்லே கூறினார். #IPL2019 #CSK #DavidWilley
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் 29 வயதான டேவிட் வில்லே இடம் பெற்றிருந்தார். அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் அவர் அணியுடன் இணைவது தாமதம் ஆகும் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் குடும்ப விஷயம் காரணமாக இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அவர் நேற்று அறிவித்தார். ஏற்கனவே காயத்தால் நிகிடி ஆட முடியாத நிலையில், சென்னை அணிக்கு இன்னொரு பின்னடைவாக டேவிட் வில்லேயும் விலகி இருக்கிறார். #IPL2019 #CSK #DavidWilley

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று ஐதராபாத்தில் நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. #IPL2019 #SRHvRR
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று ஐதராபாத்தில் நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளன.

    ஐதராபாத் அணி கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ராஜஸ்தான், பஞ்சாப்பிடம் 14 ரன் வித்தியாசத்திலும் தோற்றன. முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.

    வில்லியம்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணியில் வார்னர், மனிஷ்பாண்டே பேர்ஸ்டோவ், புவனேஸ்வர்குமார், விஜய் சங்கர், ரஷித்கான், கவுல், யூசுப் பதான் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது கடைசி கட்டத்தில் ஐதராபாத்தின் பந்து வீச்சு மோசமாக இருந்தது.

    இதனால் பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அந்த அணிக்கு அவசியமாகும். சொந்த மண்ணில் விளையாடுவது ஐதராபாத்துக்கு கூடுதல் உத்வேகம்.

    ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ்பட்சர், ஸ்டீபன் சுமித், பென் ஸ்டோக்ஸ், சாம்சன், ஆர்ச்சர், ஜெய்தேவ் உன்கட் குல்கர்னி போன்ற வீரர்கள் உள்ளனர்.

    அந்த அணி முதல் ஆட்டத்தில் வெற்றியை நோக்கி சென்ற போது ஜோஸ் பட்லர் (69), மன்கட் முறையில் ரன் அவுட் செய்யப்பட்டது. பின்னடைவாக அமைந்தது. அந்த சர்ச்சையில் இருந்து வெளியே வந்து முதல் வெற்றியை ருசிக்க ராஜஸ்தான் போராடும். #IPL2019 #SRHvRR
    நடுவர்கள் நோ-பாலை சரியாக கவனிக்கவில்லை என்றும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் விராட் கோலி அதிருப்தி தெரிவித்துள்ளார். #IPL2019 #ViratKohli
    பெங்களூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று பெங்களூரில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது. ரோகித் சர்மா 48 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 38 ரன்னும், ஹர்த்திக் பாண்ட்டே 32 ரன்னும், யுவராஜ்சிங் 23 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. டி.வில்லியர்ஸ் நிலைத்து நின்று விளையாடினார்.

    பெங்களூருக்கு கடைசி 2 ஓவரில் 22 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய பும்ரா 5 ரன் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

    இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. களத்தில் டிவில்லியர்ஸ், துபே இருந்தனர். அந்த ஓவரை மலிங்கா வீசினார். முதல் பந்தில் துபே சிக்சர் அடித்தார். அடுத்து 4 பந்தில் 4 ரன் எடுக்கப்பட்டது.

    கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. சிக்சர் அடித்தால் ஆட்டம் ‘டை’ ஆகும் சூழ்நிலை இருந்தது. அந்த பந்தை எதிர்கொண்ட துபே ரன் எதுவும் எடுக்கவில்லை. புல் டாசாக வீசப்பட்ட பந்தை துபே அடித்தபோதும் கீழேயே சென்றது.

    இதனால் மும்பை 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி வீரர்கள் திரில் வெற்றி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். டிவில்லியர்ஸ் 41 பந்தில் 70 ரன் குவித்தும் வீணானது.



    அப்போது மலிங்கா கடைசி பந்தை நோ-பாலாக வீசியது டி.வி. ரீப்ளேயில் தெளிவாக தெரிந்தது. அவர் கீரிசை விட்டு சில இன்ச் காலை வைத்து பந்தை வீசி இருந்தார். ஆனால் அதை நடுவர் கவனிக்க தவறி விட்டார்.

    நடுவர் நோ-பாலை கவனித்து இருந்தால் ஒரு ரன் மற்றும் பிரீ-ஹிட் பெங்களூர் அணிக்கு கிடைத்து இருக்கும். இதனால் ஆட்டத்தின் முடிவும் மாறி இருக்கலாம்.

    இதனால் பெங்களூர் கேப்டன் விராட்கோலி மற்றும் வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் மைதானத்தில் ஒருவித ஆவேசத்துடன் நின்று இருந்தனர்.

    இது தொடர்பாக கோலி நடுவர்களிடம் சென்று பேசினார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் தோல்வி குறித்து கோலி ஆதங்கத்துடன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறோம். கிளப் கிரிக்கெட் போட்டி அல்ல. கடைசி பந்தை நோ-பால் என்று அறிவிக்காதது கேலிக் குரியது.

    நடுவர்கள் தங்களது கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும். கடைசி பந்தை கிரீசை விட்டு சில இன்ச்சுகள் தள்ளி காலை வைத்து வீசப்பட்டுள்ளது. இது ஆட்டத்தை முற்றிலும் மாற்றி விட்டது. அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. நடுவர்கள் இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, உண்மையிலேயே நான் எல்லை கோட்டை தாண்டிய போது தான் நோ-பால் வீசப்பட்டது தெரியும்.

    இதுபோன்ற தவறுகள் விளையாட்டுக்கு நல்லதல்ல. பும்ரா வீசிய 19-வது ஓவரில் ஒரு பந்து வைடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது வைடு பந்து கிடையாது.

    இந்த ஆடுகளத்தில் 180 ரன் என்பது சவாலான இலக்கு கிடையாது. இந்த ஆடுகளத்தில் 200 ரன் இலக்குடன் செல்ல வேண்டும். ஆனாலும் எங்க ளது பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர்.

    விராட்கோலி, டிவில்லியர்ஸ் பார்டன்ஷிப்பை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. எங்களது திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று நம்பினேன் என்றார். #IPL2019 #ViratKohli
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.#IPL2019 #KKRvKXIP
    கொல்கத்தா:

    8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் மோதியது. பஞ்சாப் அணியில் 4 மாற்றமாக நிகோலஸ் பூரன், சாம் குர்ரன், அங்கித் ராஜ்பூத், முஜீப் ரகுமான் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டேவிட் மில்லர், ஹர்டஸ் வில்ஜோன், வருண் சக்ரவர்த்தி, ஆண்ட்ரூ டை சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார்.

    இதன்படி கொல்கத்தாவின் இன்னிங்சை சுனில் நரினும், கிறிஸ் லின்னும் அதிரடியாக ஆரம்பித்தனர். புதுமுக வீரரான தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் முதல் ஓவரில் சுனில் நரின் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்களை திரட்டினார். அந்த ஓவரில் கிறிஸ் லின்னும் ஒரு ரன் எடுத்தார். இதன் மூலம் ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வருண் சக்ரவர்த்தி, ஐ.பி.எல்.-ல் அறிமுக ஓவரிலேயே அதிக ரன்களை வாரி வழங்கிய (25 ரன்) பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். கிறிஸ் லின் 10 ரன்னிலும், சுனில் நரின் 24 ரன்னிலும் வெளியேறினர்.



    இதன் பின்னர் ராபின் உத்தப்பாவும், நிதிஷ் ராணாவும் இணைந்து அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். 10-வது ஓவருக்கு பிறகு ராணா அடுத்தடுத்து சில சிக்சர்களை பறக்க விட்டார். இதனால் ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாக உயர்ந்தது. தொடர்ந்து 2-வது அரைசதத்தை கடந்த நிதிஷ் ராணா 63 ரன்களில் (34 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனார்.

    அதைத் தொடர்ந்து வந்த ‘அதிரடி புயல்’ ஆந்த்ரே ரஸ்செல் 3 ரன்னில் முகமது ஷமியின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அந்த சமயத்தில் குறிப்பிட்ட உள்வட்டத்திற்குள் 4 பீல்டர்கள் நிற்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் 3 பீல்டர் மட்டுமே நின்றதால் அந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக மறுவாழ்வு பெற்ற ரஸ்செல், அதன் பிறகு பஞ்சாப் பந்து வீச்சை பஞ்சராக்கினார். குறிப்பாக முகமது ஷமியின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர்களை விரட்டியடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார். ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் எகிறியதுடன் 200 ரன்களை தாண்டியது. ஆந்த்ரே ரஸ்செல் 48 ரன்களில் (17 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் நேர்த்தியாக ஆடி 24-வது அரைசதத்தை எட்டிய ராபின் உத்தப்பா 67 ரன்களுடன் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார்.
     


    20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. ஈடன்கார்டனில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். கடைசி 4 ஓவர்களில் மட்டும் அந்த அணி 65 ரன்களை சேகரித்தது. பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, வில்ஜோன், ஆண்ட்ரூ டை தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. லோகேஷ் ராகுல் ஒரு ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 20 ரன்னிலும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), சர்ப்ராஸ் கான் 13 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 60 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்திற்கு உள்ளானது.

    அடுத்து வந்த மயங்க் அகர்வால் (58 ரன்), டேவிட் மில்லர் (59 ரன், நாட்-அவுட்), மன்தீப் சிங் (33 ரன், நாட்-அவுட்) உள்ளிட்டோர் கடுமையாக போராடிய போதிலும் அது அந்த அணியின் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

    20 ஓவர்களில் பஞ்சாப் அணியால் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

    ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து இருந்தது. அதே சமயம் 2-வது லீக்கில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணியை சாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றியை பெற்றது. #IPL2019 #CSKvDC

    புதுடெல்லி:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. டெல்லி அணியில் டிரென்ட் பவுல்டுக்கு பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். வேகமாக ரன்கள் எடுக்கும் முனைப்புடன் ஆடிய பிரித்வி ஷா, ஷர்துல் தாகூரின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 24 ரன்களில் (16 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார். வேகம் குறைந்த (ஸ்லோ) இந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக எழும்பவேவில்லை.

    சென்னை வீரர்கள் பந்து வீச்சில் கொடுத்த குடைச்சலில் டெல்லி அணியின் ஸ்கோர் மந்தமானது. முதல் 9 ஓவர்களில் அந்த அணி 55 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களில் (20 பந்து) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து நுழைந்த இளம் புயல் ரிஷாப் பான்ட் ரன்ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஹர்பஜன்சிங்கின் பந்து வீச்சில் ஒரு சிக்சரை பறக்க விட்ட ரிஷாப் பான்ட் 25 ரன்களில் (13 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிராவோவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த காலின் இங்ராமும் (2 ரன்) அதே ஓவரில் காலியானார். மறுமுனையில் தனது 33-வது அரைசதத்தை கடந்த ஷிகர் தவான் 51 ரன்களில் (47 பந்து, 7 பவுண்டரி) பிராவோவின் பந்து வீச்சில் வீழ்ந்தார். இதற்கிடையே கீமோ பால் ரன் ஏதுமின்றி வெளியேற்றப்பட்டார். 7 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்ததால் டெல்லி அணி இறுதி கட்டத்தில் தகிடுதத்தம் போட்டது. 150 ரன்களை எளிதில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி அதற்கு முன்பாகவே அடங்கிப்போனது.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் வெய்ன் பிராவோ 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். முந்தைய ஆட்டத்தின் நாயகன் ஹர்பஜன்சிங் 4 ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.



    பின்னர் 148 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. அம்பத்தி ராயுடு 5 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் ஷேன் வாட்சனும், சுரேஷ் ரெய்னாவும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். இஷாந்த் ஷர்மாவின் ஓவரில் ரெய்னா தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை ஓடவிட்டு மிரட்டினார். இஷாந்த் ஷர்மா மற்றும் ரபடாவுடன் களத்தில் வாக்குவாதம், உரசலில் ஈடுபட்டு சூடு கிளப்பிய வாட்சன், அமித் மிஸ்ராவின் பந்து வீச்சில் அட்டகாசமாக 2 சிக்சர்களை விரட்டியடித்தார். வாட்சன் 44 ரன்களும் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ரெய்னா 30 ரன்களும் (16 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி நெருக்கடியை தணித்தனர்.



    இதன் பின்னர் டோனியும், கேதர் ஜாதவும் நிதானமாக ஆடியதால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. ஜாதவ் 27 ரன்களில் (34 பந்து) கேட்ச் ஆனார். சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி 32 ரன்களுடனும் (35 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), பிராவோ 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    ஆட்டம் முடிந்ததும் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடிவந்து டோனியின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த ரசிகரை பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து சென்றனர்.

    சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லிக்கு இது முதல் தோல்வியாகும்.

    சேப்பாக்கத்தில் 31-ந்தேதி நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரண்டு இருந்தனர். #IPL2019 #CSK #CSKvRR
    சென்னை:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் 7 ‘லீக்’ ஆட்டங்கள் நடக்கிறது.

    கடந்த 23-ந்தேதி நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

    வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு 2-வது ஆட்டம் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகின்றனர்.



    சேப்பாக்கத்தில் 31-ந்தேதி நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8.45 மணிக்கு தொடங்கியது.

    டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரண்டு இருந்தனர். அவர்கள் நீண்ட கியூவில் நின்று மிகவும் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கினார்கள். குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 ஆகும். இந்த விலையிலான டிக்கெட்டுகள் வாங்குவதற்காகவே ரசிகர்கள் ஸ்டேடியம் முன்பு குவிந்து இருந்தனர்.

    இதேபோல ஆன்லைனிலும் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. #IPL2019 #CSK #CSKvRR
    ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர் ஹர்பஜன்சிங், ‘தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்’ என்று உருக்கமாக கூறியுள்ளார். #IPL2019 #HarbhajanSingh
    சென்னை:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனை நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் ஆட்டத்தின் போக்கு தான் சொத்தையாக அமைந்து விட்டது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.1 ஓவர்களில் 70 ரன்னில் சுருண்டது. பார்த்தீவ் பட்டேல் (29 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. சென்னை தரப்பில் மூத்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த எளிய இலக்கையும் சென்னை அணி திக்கித் திணறி வெற்றி கண்ட விதம் குழுமியிருந்த ரசிகர்களை எரிச்சல் அடையச் செய்தது.

    இந்த இலக்கை சென்னை அணி 17.4 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி தொடர்ச்சியாக ருசித்த 7-வது வெற்றி இதுவாகும்.

    போட்டிக்கு பிறகு சேப்பாக்கம் ஆடுகளம் (பிட்ச்) குறித்து அதிருப்தி வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறுகையில், ‘இந்த ஆடுகளத்தன்மை எந்த மாதிரி ஒத்துழைக்கும் என்பதை உறுதியாக கணிக்க முடியவில்லை. இதே ஆடுகளத்தில் எங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது பந்து இந்த அளவுக்கு அதிகமாக சுழன்று திரும்பவில்லை. ஆடுகளம் மிகவும் மெதுவான தன்மையுடன் இருக்கும் என்று ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. பந்து பேட்டுக்கு ஏதுவாக வரவில்லை. இது எனக்கு, 2011-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டுக்குரிய ஆடுகளத்தை நினைவூட்டியது. ஆடுகளத்தன்மை ஒரே மாதிரியாக நீடித்தால், ரன் எடுப்பது கஷ்டம் என்பதை உணர்ந்தோம். இந்த ஆடுகளத்தை நிச்சயம் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் எடுக்கும் விதத்தில் இருக்க வேண்டும்’ என்றார்.

    பெங்களுரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘எந்த ஒரு அணியும் இந்த மாதிரியான தொடக்கத்தை விரும்பமாட்டார்கள். ஆனாலும் பீல்டிங்கில் வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளித்தது. குறைந்த இலக்கு என்றாலும் 18 ஓவர்கள் வரை ஆட்டத்தை நகர்த்தி சென்றோம்.

    இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. 140 முதல் 150 ரன்கள் எடுத்தால் நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். பேட்டிங்கில் நாங்கள் நன்றாக செயல்பட்டிருக்க வேண்டும். குறைந்தது 110 முதல் 120 ரன்கள் எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்’ என்றார்.

    ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட சென்னை சுழற்பந்து வீச்சாளர் 38 வயதான ஹர்பஜன்சிங் கூறுகையில், ‘பந்து சுழன்று திரும்பியதுடன், பவுன்சும் ஆனதால் ஆடுகளம் பேட்டிங்குக்கு கடினமாக இருந்தது உண்மை தான். ஆனால் விளையாட முடியாத அளவுக்கு இருந்ததாக சொல்ல முடியாது. ஒரு ஆடுகளத்தில் 170 அல்லது 180 ரன்கள் குவிக்கும் போது யாரும் புகார் கூறமாட்டார்கள். சுழற்பந்து வீச்சுக்கோ அல்லது வேகப்பந்து வீச்சுக்கோ ஆடுகளம் சாதகமாக இருக்கும் போது ஒவ்வொருவருக்கும் பிரச்சினை வந்து விடும். பந்து வீச்சாளர்களுக்குரிய பணியை மக்கள் மறந்து விடுகிறார்கள். பேட்ஸ்மேன்கள் சில நேரம் இது மாதிரி தடுமாறுவது இயல்பு தான். ஏனெனில் இது பேட்டுக்கும், பந்துக்கும் இடையிலான போட்டியாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெங்களூரு வீரர்கள் அவசரகதியான சில ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இது 70 ரன்களுக்குரிய ஆடுகளம் அல்ல. பெங்களூரு பேட்ஸ்மேன்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் ஆடியிருந்தால் 120 ரன்கள் வரை எடுத்திருக்கலாம். ஆனாலும் இந்த ஆடுகளம் இந்த அளவுக்கு சுழலுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை’ என்றார்.

    ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘என்னுடைய சீருடையின் எண் 27. இன்றைய ஆட்டத்தில் எனது பந்து வீச்சு 4-0-20-3 என்று அமைந்தது. இதன் கூட்டுத்தொகை 27. எனது மகள் ஹினாயாவின் பிறந்த நாள் தேதி 27. இவையாவும் தற்செயல். ஆனால் நான் சம்பாதித்த உங்களோட அன்பும், ஆதரவும் இது போன்ற தற்செயலையும் தாண்டிய மாறா நிரந்தரம். வெகு நாட்கள் கழித்து தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன் இன்று’ என்று குறிப்பிட்டுள்ளார். #IPL2019 #HarbhajanSingh

    12-வது ஐ.பி.எல். போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது. #IPL2019 #CSK #RCB
    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 12-வது தொடர் இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

    தொடக்க நாளான இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதின. 

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட்கோலியும், பர்திவ் பட்டேலும் களம் இறங்கினர். சுழலில் ஹர்பஜன் சிங் கலக்கினார். தடுமாறிக் கொண்டிருந்த கோலி 6 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த மொயீன் அலியை 9 ரன்னில் திருப்பி அனுப்பினார். 

    தொடர்ந்து மிரட்டிய இவர் அபாயகரமான டிவிலியர்சையம் 9 ரன்னில் அவுட்டாக்கினார். ஹெட்மயர் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 2 ரன்னுக்கு இம்ரான் சுழலில் சிக்கினார். இறுதியில் பெங்களூரு அணி 17.1 ஓவரில் 70 ரன் எடுத்து சுருண்டது. 

    சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், பிராவோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்

    பின்னர் 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சனும், அம்பதி ராயுடும் நிதானமாக விளையாடினர். 10 பந்தை சந்தித்த வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா 19 ரன் எடுத்து நடையை கட்டினார். அடுத்ததாக களம் இறங்கிய ஜாதவ், ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில் ராயுடு 28 ரன் எடுத்திருந்த நிலையில் போல்டாகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து வந்த ஜடேஜா ஜாதவ்வுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17. 4 ஓவரில் 71 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. #IPL2019 #CSK #RCB
    ஐபிஎல் கோப்பையை வீராட் கோலி வெல்லவில்லை என்று கவுதம் காம்பீர் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதற்கு கோலி தக்க பதிலடி கொடுத்துள்ளார். #kohli #Gambhircomment

    சென்னை:

    இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது இந்திய அணி கேப்டன் வீராட்கோலியை விமர்சனம் செய்து இருந்தார்.

    அவர் கூறும்போது, கோலி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வில்லை. ஆனால் அவர் பெங்களூர் அணி கேப்டனாக நீடிப்பது அதிர்ஷ்டம் தான். இதற்காக அவர் அணி நிர்வாகத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளார் என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் காம்பீர் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீராட்கோலி அளித்த பேட்டி வருமாறு:-

    ஐ.பி.எல். கோப்பையை வெல்லவில்லை என்பது எனக்கு ஏதோ வெறுப்பை தருகிறது என்று கூறுவது தவறு. நிச்சயம் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே விருப்பம். நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதை செய்கிறேன்.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்வது அல்லது வெல்வதில்லை என்பதை வைத்து என்னை எடைபோட்டால் அதுபற்றி கவலையில்லை. அளவு கோல்களை யாரும் நிர்ணயிக்க முடியாது.

    எனது வேலை சிறப்பாக ஆடுவது தான். எல்லா கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பல நேரங்களில் அது நடப்பதில்லை.


    நாங்கள் ஏன் வெல்லவில்லை என்பதை எதார்த்தமாக யோசித்து பார்க்க வேண்டும். எனக்கு கேப்டன் என்ற பொறுப்பு உள்ளது. ஐ.பி.எல். கோப்பையை வெல்வது எனக்கு பிடித்தமானது தான். அதை சாதிக்க இந்த விமர்சனங்கள் உதவினால் நல்லது.

    நாங்கள் 5 அரை இறுதி ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். நாங்களும் கோப்பைக்கு அருகில் வந்துள்ளோம். கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி தான். நல்ல முடிவுகளை எடுத்தால் அதனை தாண்டியும் செல்லலாம் என்றார். #kohli #Gambhircomment

    மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. #IPL2019 #CSK #RCB
    சென்னை:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் உலக கோப்பை முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டி வந்தது. ஆனால் முதல்முறையாக இந்த ஆண்டு உலக கோப்பைக்கு முன்பாக ஐ.பி.எல். நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். முடிந்து அடுத்த இரண்டரை வாரங்களில் உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதனால் இந்த ஐ.பி.எல்.-ல் முன்னணி வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி நல்ல ஆட்டத்திறனோடு தேசிய அணிக்கு திரும்ப முயற்சிப்பார்கள். அந்த வகையில் இந்த ஐ.பி.எல். தனித்துவம் பெற்றுள்ளது.

    தொடக்க லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று கோதாவில் இறங்குகின்றன.

    பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சீசனில் அம்பத்தி ராயுடு (602 ரன்), ஷேன் வாட்சன் (555 ரன்), கேப்டன் டோனி (455 ரன்), சுரேஷ் ரெய்னா (445 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் அளித்த கணிசமான பங்களிப்பு கோப்பையை வெல்ல உதவிகரமாக இருந்தது. இந்த முறையும் இவர்களை தான் சென்னை அணி அதிகமாக நம்பி இருக்கிறது. சென்னை அணியில் 12 வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். இதில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு 39 வயது ஆகிறது. ஆனாலும் அவர்களின் அனுபவம் அணிக்கு அனுகூலமாக இருக்கும்.

    உள்ளூரில் ரசிகர்களின் ஆரவாரம் சென்னை அணிக்கு எப்போதும் கூடுதல் உத்வேகம் அளிக்கும். காவிரி நதிநீர் பிரச்சினை போராட்டம் காரணமாக கடந்த ஆண்டில் சென்னையில் ஒரு ஆட்டம் மட்டுமே நடந்தது. எஞ்சிய ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த முறை இங்கு 7 லீக்கிலும் சென்னை அணி விளையாட இருப்பது சாதகமான அம்சமாகும்.

    பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வலுவாகவே இருக்கிறது. ஆனால் சென்னைக்கு எதிராக மோதுவது என்றாலே பெங்களூரு அணி வதங்கி போய் விடுகிறது. சென்னைக்கு எதிராக இதுவரை 22 ஆட்டங்களில் மோதியுள்ள பெங்களூரு அணி அதில் 7-ல் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 14-ல் தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. அதுவும் சென்னை அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களிலும் பெங்களூரு அணிக்கு தோல்வியே மிஞ்சியது. இந்த தோல்விப்பயணத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் பெங்களூரு அணியினர் ஆயத்தமாகியுள்ளனர்.

    சென்னை வீரர் சுரேஷ் ரெய்னாவும், பெங்களூரு கேப்டன் விராட் கோலியும் சாதனையின் விளிம்பில் உள்ளனர். ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு ரெய்னாவுக்கு 15 ரன் தேவைப்படுகிறது. 52 ரன்கள் எடுத்தால் கோலி இந்த இலக்கை அடைவார்.

    பொதுவாக சேப்பாக்கம் ஆடுகளம் வேகம் குறைவாக இருக்கும். அதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்த ஸ்டேடியத்தில் பெங்களூரு அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், டேவிட் வில்லி, மொகித் ஷர்மா அல்லது ஹர்பஜன்சிங்.

    பெங்களூரு: பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஹெட்மயர், ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், பவான் நெகி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஷிவம் துபே அல்லது மொயீன் அலி.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #IPL2019 #CSK #RCB
    ஐ.பி.எல். போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #IPL2019 #CSK #RCB
    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    ஐ.பி.எல். போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்கள் 4 அடுக்கு பாதுகாப்பை கடந்த பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    நுழைவு வாயில் இருந்து ஸ்டேடியத்தில் உள்ள இருக்கை வரை இந்த 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    கமாண்டோ உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் மைதானத்தை சுற்றிலும் சிறப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது காவிரி போராட்டம் காரணமாக மைதான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து ஐ.பி.எல். போட்டி புனேக்கு மாற்றப்பட்டது.


    கடந்த முறையை போல தற்போது எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஸ்டேடியத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சேப்பாக்கம் ஸ்டேடியத்தை சுற்றிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு நிபுணர்களும் மோப்பநாயும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். ரசிகர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.



    வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல்களுக்கும் கூடுதலான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல போலீசாருடன் தனியார் தன்னார்வ தொண்டர்களும் இணைந்து பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். போட்டி முடிந்து ரசிகர்கள் செல்வதற்கு வசதிக்காக இந்த ரெயில்கள் இயக்கப்படுகிறது. #IPL2019 #CSK #RCB 
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. #PSL #IPL2019
    இஸ்லாமாபாத்:

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல்நாள் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    மே மாதம் நான்காம் தேதிவரை நடைபெறும் ஐ.பி.எல். லீக் போட்டிகளை உலக நாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் எங்கள் அணி வீரர்கள் விளையாடிய போட்டிகளை ஒளிபரப்ப இந்தியாவை சேர்ந்த பிரபல ஒளிபரப்பு நிறுவனம் மறுத்து விட்டது. 

    இதை எல்லாம் சகித்துகொண்டு இருக்க முடியாது என்பதால் ஐ.பி.எல். போட்டிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பவாத் அஹமத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பார்க்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது (பாகிஸ்தானை சீண்டிப்பார்க்கும் வகையில்) இந்திய ராணுவ வீரர்கள் அணியும் தொப்பிகளுடன் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்மீது அந்நாட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பவாத் அஹமத் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ் இ முகமது பங்கரவாத இயக்கத்தின் அதரவுபெற்ற பயங்கரவாதியால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது கடந்த 14-2-2019 அன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதனால், நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கொந்தளிப்பான நிலை ஏற்பட்டிருந்த வேளையில் பிப்ரவரி 14 முதல் மார்ச் 17 வரை நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் இந்திய உரிமத்தை பெற்றிருந்த டிஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அந்த தொடரின் ஒளிபரப்பை தடை செய்திருந்தது நினைவிருக்கலாம். #PSL #IPL2019
    ×