search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    பாதயாத்திரையாக வந்து முருகனின் தாள்பணிந்து வணங்கினால் வாழ்வும் செழிப்படையும், நினைத்த காரியமும் கைகூடும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பழனிக்கு வருகிறார்கள்.
    வேலன் வெறியாட்டு நிகழ்வில் முருகப்பெருமானை மலைக்கடவுளாக சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. ‘திக்கற்றவருக்கு தெய்வமே துணை’ என்று நினைத்து திருவிழாக்காலங்களில் காவடி எடுத்து ஆடி வருவது முருக பக்தர்களின் வழக்கமாக உள்ளது. இவ்வாறு வரும் பக்தர்கள் விரதம் இருந்து, ஐம்புலன்களையும் ஒருமுகப்படுத்தி அலகு மற்றும் நாக்கில் வேல் குத்தியும், அன்னதானம் வழங்கியும், மாடு, சேவல் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    கொற்றவையின் செல்வன் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலக நாடுகள் சிலவற்றிலும் கந்தன், சுப்ரமணியன், கார்த்திகேயன் என பல்வேறு பெயர்களில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்த கடவுளாக உள்ள முருகப்பெருமானை இந்த தை மாதத்தில் விரதமிருந்து, காவடி எடுத்து, காவி உடை மற்றும் ருத்ராட்சை மாலை அணிந்து பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை போற்றி கீர்த்தனைகள் பல பாடி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    10 நாட்கள் நடக்கும் இந்த தைப்பூச திருவிழாவின் போது யாத்திரை நிகழ்வு, தீர்த்தம் ஆடல், தர்ம காரியங்கள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் நடைபெறும். நாட்டுப்புற மக்கள் இந்த திருவிழாவை ‘தேர் நோம்பு’ என குறிப்பிடுகின்றனர். பாதயாத்திரையாக வந்து முருகனின் தாள்பணிந்து வணங்கினால் வாழ்வும் செழிப்படையும், நினைத்த காரியமும் கைகூடும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பழனிக்கு வருகிறார்கள்.

    பக்தர்களின் ஆசைகளை பூர்த்தி செய்யும் முகம், அறியாமையை நீக்கி அறிவை நிலை நிறுத்தும் முகம், அடியவர்களின் ஆழ்மன எண்ணங்களை வெளிக்கொணரும் முகம், யாகங்களை காக்கும் முகம், நல்லவர்களை காத்தும், தீயவர்களை தண்டிக்கும் முகம், பக்தர்களிடம் அன்பு காட்டி அருளும் மற்றொரு முகம் என்று ஆறுமுகங்களை கொண்டு அருளாட்சி செய்பவர் முருகப்பெருமான் ஆவார்.

    தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று முருக திருவிழா முருகனின் அறுபடைவீடுகளிலும் நடைபெறுகிறது. இவ்விழா பழனி முருகன் கோவிலிலும், பெரியநாயகி அம்மன் கோவிலிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்நாளில் உமா தேவியார் தனது மகன் முருகனுக்கு வேலினை எடுத்துக் கொடுத்து ‘தாரகன்’ எனும் அரக்கனை வென்று வரும்படி அனுப்பிய நிகழ்ச்சியே தைப்பூச விழாவாக கொண்டாடப்படும்.

    யோகிகளுக்கு பழனியாண்டியாகவும், கடவுளர்களுக்கு தேவசேனாதிபதியாவும், குழந்தைகளுக்கு குழந்தை வேலனாகவும், பாலசுப்ரமணியனாகவும், ஞானம் வேண்டுவோருக்கு சுவாமி நாதனாகவும், இல்லறத்தாருக்கு வள்ளி-தெய்வானையாகவும், துறவிக்கு பழனியாண்டவனாகவும், அருள்பாலிக்கிறார். இந்நாளில் பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...! வீரவேல் முருகனுக்கு அரோகரா...! என்ற முழக்கத்தோடு வந்து தண்டாயுதபாணியின் திருவருளை பெற அன்புடன் அழைக்கின்றோம்.
    தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் பல்வேறு பெயர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். முருகனுக்கு உகந்த சிறப்பு வாய்ந்த பெயர்களை பார்க்கலாம்.
    தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் பல்வேறு பெயர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். அதன் விவரம் வருமாறு:-

    அண்ணல், அயன்குரு, அரன்மகன், அருணகிரிக்கருள்வோன், அழகன், அழலின் வந்தோன், அறுபடை வீட்டினன், அறுமீன் காதலன், அறுவடிவு ஒரு வடிவானோன், அன்றில் வேல் பட்டோன், ஆறுதலன், இருட்பகை வென்றோன், இளையோன், இறையோன், இறை மகன், இறைவர்க்கோர் எழுத்து உணர்த்திய மேலோன், ஈசன் குரு, உம்பர் இருஞ்சிறை மீட்டோன், கடம்பன், கந்தன், கலையறிபுலவன், காங்கேயன், காந்தளணிந்தோன், காந்தளர் தாரோன், கார்த்திகேயன், கீரனை மீட்டோன், குகன், குமரன், குரா அணிந்தோன், குழகன், குறத்தி மணாளன், குறிஞ்சிக்கிழவன், குறிஞ்சிநாதன், குறிஞ்சிமண், குறிஞ்சி வேந்தன், குன்றெறிந்தோன், கோழிக் கொடியோன், கவுரிதனையன், கவுரி மைந்தன், சண்முகன், சரவணத்துதித்தோன், சரவணத் தோன்றுமீன் காதலன், சாமி, சிலம்பன், தேவசேனாதிபதி, பண்ணவன், பவள வடிவினன், புலவன், புனல் மகள் செல்வன், மஞ்சை ஊர்தி, மயிலாளி, மயிலூர்தி, மயிலோன், மரா அலங்கலன், மாமயிலூர்தி, மாமையூர்தி, மாயோன் மருகன், முதல்வன் சேய், முருகன், முருகு, வரைபக எறிந்தோன், வள்ளிகேள்வன், வள்ளி துணைவன், வள்ளிநாயகன், வள்ளி மணவாளன், வன்னிப்பூக்குமரன், வாசவன் மருகோன், வாரண கேதனன், வானவர் கோன் மகள் கணவன், வானவர் மீளி, விசாகன், விறலோன், வெட்சி அணிந்தோன், வெட்சி நாள் மலரோன், வேலன், வேலுடைக்கடவுள், வேதாவை சிறையிட்டோன், வேற்படையோன். இந்த பெயர்கள் தமிழ் நிகண்டுகளில் காணப்படுகிறது.
    அடியார்களுக்கு நல்ல பெருமான் திருமகன் முருகன். முருகனை வழிபட்டு திருநாமத்தை இடைவிடாது சொல்கிறவர்களின் துன்பங்களை விலக்கிடுவான்.
    அடியார்களுக்கு நல்ல பெருமான் திருமகன் முருகன். வேண்டியவருக்கு வேண்டிய பொழுது அவர்கள் வேண்டியவாறே நல்குபவன். முருகனை வழிபட்டு திருநாமத்தை இடைவிடாது சொல்கிறவர்களின் துன்பங்களை விலக்கிடுவான். ‘முருகா’ என்று சொல்லும்போது அடியார்களின் வாயில் இன்பம் ஊறும். இறைவன் திருவுருவம் நேரே வந்து நிற்கும். யாத்திரை வரும் பக்தர்களுக்கு வழித்துணை, தைரியம், உண்டாகும்.

    முருகனை காண ஒரு முறை பழனி திருத்தலம் வந்தால் அன்புத்தேன் பொங்க முன்னே வந்து நின்றுவிடுவான். அடியார்களுக்கு அச்சமும், துன்பமும் உண்டானால் அவர்கள் ஆறுதல் பெறும்படி தன்னுடைய ஆறுமுகங்களை காட்டி அருள்புரிவான். நோய்நொடியும் அஞ்சும், வறுமை, பிணி, பகை முதலியவற்றை போக்கும் அருள் முருகன் ஒருவனுக்கே உண்டு. ‘முருகா’ என்று ஒதும் அடியார்களுக்கு அச்சம் என்பது இல்லை. மனப்போராட்டம் இல்லை. திருமார்பில் கடம்ப மாலை அணிந்தவன். முருகன் அமைதியாக வள்ளி, தெய்வானையோடு எழுந்தருளும் போது கடம்ப மாலையோடு விளங்குபவன். இக்காட்சி மனைவியோடு இன்ப வாழ்வு வாழவேண்டும் என்பதை போதிக்கின்றது.

    முருகன் ஞானசக்தியை கையில் ஏந்தியிருப்பவன். தன்னை அடைந்தாருடைய துயரத்தை போக்கும் அற்புதம் அவன். கதிர்வேலனாகிய அவனை பழனி திருத்தலத்தில் மூலத்திருவுருவத்தில் தரிசிக்கலாம். ஆசைகளை அடக்குவதும், இறைவனிடம் நம்பிக்கை பக்தி செய்வதும், குறைவில்லா நிறைவை அடையும் வழியாகும். நமக்கான குறைகளை, கஷ்டங்களை முருகனிடம் சொல்லும்போது மனப்பாரம் நிச்சயமாக நீங்குவதோடு உன்னை மட்டுமே நம்புகிறேன். பின்னை ஒருவரையான் பின் செல்வேன் என்று நம்பியவர்களுக்கு அருள் செய்து துன்பத்தை போக்கும் பேராற்றல் உடையவன் தண்டாயுதபாணி.

    தேவர்களும், தங்களின் இன்பங்களை இழந்து துன்புற்று சிறைபட்டு வாழும் நிலை வந்தது. அறுபத்தாறு கோடி அசுரர்களுக்கு தலைவனாக, ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கு அரசனாக வரத்தினால் வலிமையும், படைகளால் பெற்ற பலமும் நிரம்பிப்பெற்ற சூரபத்மன், வானவர்களின் வளங்களை பெற்று கொடுமை செய்தான். முருகன் அவனையும், அவனது படைகளையும் அழித்து இன்னல்களை தீர்த்தருளினான்.

    துன்பமுற்ற தேவர்களுக்கு நன்மை கிடைக்க செய்தவன் முருகப்பெருமான். முருகனின் ஞானசக்தியாகிய வேல் புறப்பகையாகிய அசுரர்களையும், அகப்பகையாகிய அசுர சம்பத்துகளையும் அடியோடு ஒழிக்கக்கூடிய வானவர்க்கு உண்டாகிய கொடிய வினைகளை தீர்த்து அருள்செய்த முருகனை நம்பியவர்களுக்கு வேறு ஒரு துணை வேண்டாம். மலைபோன்ற துன்பங்கள் நீங்கிட பழனி வரும் பக்தர்களுக்கு இன்பமே தவிர எந்நாளும் துன்பம் இல்லை என்று வாழ்வாங்கு வாழ்ந்திட வருகை தாருங்கள். முருகனின் அன்பும், அருளும் பெற அன்புடன் அழைக்கிறோம்.
    பொதுவாகவே எல்லோரும் தங்களின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நினைப்பது வழக்கம். அந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற வைப்பது பூச வழிபாடு தான்.
    ஐப்பசி மாதம் வரும் சஷ்டி திதியில் தான் முருகப் பெருமான், சூரபதுமர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்காக பார்வதிதேவி, ஞான வேலை வழங்கிய நல்ல நட்சத்திர நாள் தான் பூசம் நட்சத்திரமாகும். பூச நட்சத்திரம் ஒரு போற்றும் நட்சத்திரம். போராட்டமான வாழ்வைப் பூந்தோட்டமாக மாற்றும் நட்சத்திரம். அந்த நட்சத்திரத் திருநாள் வருகிற 21.1.2019 (திங்கட்கிழமை) வருகிறது.

    பொதுவாகவே எல்லோரும் தங்களின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நினைப்பது வழக்கம். அந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற வைப்பது பூச வழிபாடு தான்.

    நமது ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானாதிபதி இருக்கும் நிலையறிந்து, அதன் பலம் அறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சி கூடும். இதைக் காட்டிலும் ஒவ்வொரு மாதங்களிலும் வரும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் உடனுக்குடன் நற் பலன் காணலாம்.

    தை மாதம் என்றதும் நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது தைப்பூசம் தான். உலகமெங்கும் உள்ள முருகப்பெருமானை வழிபாடு செய்தால் செல்வ நிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் தான் தை மாதமாகும். அந்த மாதத்தில் வரும் பூசத்தைத் தான் மாதப் பெயரோடு இணைத்து ‘தைப்பூசம்’ என்று அழைக்கின்றோம். அந்த அற்புதமான நாளில் முருகப் பெருமானை வழிபட்டு கொண்டாட மார்கழி மாதத்திலேயே பக்தர்கள் மாலைபோடுவார்கள். காலை, மாலை இரு வேளைகளிலும் குளித்துக் கவசப் பாராயணங்களைப் படித்து வழிபடுவார்கள். பதிகம் பாடி பரவசமடைவார்கள்.

    முருகப்பெருமானை ‘ஆறுமுகசாமி’ என்றும் அழைக்கின்றோம். திருநீறு அணிந்த முகத்தோடு அவரைச் சென்று வழிபட்டால் அருளும் தருவார்; பொருளும் தருவார். அருணகிரிநாதர் ஆறுமுகத்திற்கும் அழகான விளக்கம் சொல்கிறார். சிவனுக்கு ஓம்காரம் உரைத்த முகம் ஒன்று. அடியவர்களின் வினைகளைத் தீர்க்கும் முகம் ஒன்று. சூரனைச் சம்ஹாரம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று. சூரனை வதைத்த முகம் ஒன்று. வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று. தனது வாகனமான மயில் மீது ஏறி நின்று விளையாடும் முகம் ஒன்று.

    இப்படி ஆறுமுகங்களைப் பெற்ற அழகனை, முருகனை, குமரனை, ஆதிசிவன் மைந்தனை, கார்த்திகேயனை, கடம்பனை, கதிர்வேலனை தைப்பூச தினத்தில் வழிபாடு செய்தால், வையகம் போற்றும் வாழ்வு அமையும்.

    தைப்பூசத்தன்று முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநிக்குச் சென்று, அங்கு தங்க ரதத்தில் பவனி வரும் கந்தனை கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வழிபடுவர். குன்றக்குடி, பழநி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை போன்ற ஆலயங்களுக்கும் சென்று ஆறுபடைவீடுகளில் அருகில் இருக்கும் கந்தப் பெருமானை பாத யாத்திரையாகச் சென்று வழிபட்டு வந்தால் ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும். பாத யாத்திரையாக செல்ல முடியாதவர்கள் உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வரலாம்.

    பூச நட்சத்திரம் அன்று சூரபத்மனை வென்று மயிலும் சேவலுமாக மாற்றினார். அந்த நாளில் வழிபாடு செய்தால் இனிய வாழ்க்கை அமையும். காலையில் விரதம்இருந்து பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி கந்தரப்பம் நைவேத்தியம் செய்து முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    தொட்டதெல்லாம் துலங்கவும், சொல்லும் வார்த்தை வெல்லவும் பட்ட துன்பம் தீரவும், பகைஅனைத்தும் மாறவும், வெற்றி வாய்ப்பு சேரவும், வேலன் வள்ளியோடு நீ சுற்றி வந்து காக்கவா! சுகம் அனைத்தும் சேர்க்கவா! என்று பாடுங்கள். வள்ளி மணாளன் உங்களுக்கு வரங்களை அள்ளி, அள்ளித் தருவான். தெள்ளுத் தமிழ் முருகன் திருவருளைப் பெறுவதற்கு பூசத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். அன்றைய தினம் இல்லத்தில் வழிபடுவோர் பஞ்சமுக விளக்கில், 5 வகை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, 5 வகை நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.

    சிவல்புரி சிங்காரம்
    கோவில்கள் தோறும் காலையில் ‘கோ பூஜை’ செய்வது வழக்கம். பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடிப்புண்ணியம் கிடைக்கும்.
    கோவில்கள் தோறும் காலையில் ‘கோ பூஜை’ செய்வது வழக்கம். பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். அது மட்டுமல்ல அது தரக்கூடிய மூன்றுவிதப் பொருட்களான பால், சாணம், கோமியம் ஆகியவை நமக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பொருளாக அமைகின்றன என்று மருத்துவம் கூறுகிறது. எனவே, வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது.

    பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்து தயாரிக்கப்படும் “பஞ்சகவ்யம்” சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன. பசுவிற்கு சேவை செய்தால் பலவிதமான நன்மைகளைப் பெறலாம்.

    பசுவின் உடல் பலவிதமான தெய்வங்கள் வசிப்பதாக ஐதீகம். காமதேனு வழிபாடு, பொங்கலின் மறுநாள் மாட்டுப் பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருந்தது. கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடிப்புண்ணியம் கிடைக்கும்.
    கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார். அப்போது கோவிலில் ரூ.92.22 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். #PMModi #PadmanabhaswamyTemple
    திருவனந்தபுரம்:

    கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. விஷ்ணு பகவானின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கேரளா வந்தார். அவர் கொல்லத்தில் 13 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு உள்ள புறவழிச்சாலையை திறந்து வைத்தார்.



    அதைத்தொடர்ந்து அவர் பத்மநாபசுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு மத்திய அரசின் சுவதேஷ் தரிசன் திட்டத்தின் கீழ் ரூ.92.22 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ள வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்தார். சுமார் 20 நிமிடம் அங்கே அவர் செலவிட்டார்.

    பிரதமர் மோடியுடன் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம், மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் உள்பட பலர் சென்றனர். அத்துடன் கேரள பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் டெல்லி திரும்பினார்.

    முன்னதாக கொல்லத்தில் புறவழிச்சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தில் மாநில அரசையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக ஒட்டுமொத்த நாடும் சபரிமலை பற்றித்தான் பேசி வருகிறது. சபரிமலை விவகாரத்தை ஆளும் இடதுசாரி முன்னணி அரசு கையாளும் முறையானது, வரலாற்றிலேயே எந்த ஒரு அரசோ, கட்சியோ செய்திராத மிகவும் வெட்கக்கேடான செயல் ஆகும்’ என குற்றம் சாட்டினார்.

    அவர் மேலும் கூறும்போது, ‘இந்திய வரலாறு, கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை கம்யூனிஸ்டுகள் மதிக்கமாட்டார் கள் என்பது நமக்கு தெரியும். ஆனாலும் இத்தகைய வெறுப்பு செயலானது யாரும் கற்பனை செய்திட முடியாதது. இதைப்போல காங்கிரஸ் கட்சியும் சபரிமலை விவகாரத்தில் இரட்டை நிலையை கொண்டிருக்கிறது. அந்தவகையில் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்’ எனவும் குறிப்பிட்டார்.

    பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதற்கு மோடி கண்டனம் தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது என கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.

    இதைப்போல சபரிமலை விவகாரத்தை அரசியல் வாய்ப்பாக பா.ஜனதா பயன்படுத்துவதையே பிரதமரின் பேச்சு எடுத்துரைப்பதாக காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளது.
    பல்வேறு ஊர்களில் ஆனைமுகன் வித்தியாசமான உருவில் காட்சி தருகிறார். எந்த ஊரில் எந்த வடிவில் காட்சி தருகிறார் என்று அறிந்து கொள்ளலாம்.
    விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் ஆலயம் இருக்கிறது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள விநாயகரை ‘நெற்குத்தி விநாயகர்’ என்றும் அழைப்பார்கள். பொய் சொல்பவர்களை தண்டிப்பவர் என்பதால் ‘பொய்யாமொழி விநாயகர்’ என்று பெயர் பெற்றார். இங்குள்ள லிங்கம் போன்ற பாணத்தில் கணபதியின் உருவம் கொண்டிருப்பது விசேஷமான அமைப்பாகும்.

    திருநெல்வேலி காரையாரில் உள்ள அருவிக்கரையில், தன் அன்னையாரான கங்காதேவி மற்றும் பார்வதி தேவி ஆகியோருடன் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமானை தரிசிக்கலாம்.

    கங்கைகொண்ட சோழபுரம் சிவாலயத்தில் உள்ள விநாயகருக்கு ‘கணக்கு விநாயகர்’ என்று பெயர். இந்த ஆலயத்தின் திருப்பணி நடைபெற்றபோது, திருப்பணியை மேற்பார்வை செய்து வந்த கணக்குப் பிள்ளையிடம் மன்னன், சந்தேகத்தோடு கணக்கு கேட்டு கெடு விதித்தான். அதுவரையிலும் கணக்கு எழுதி வைக்காத கணக்கர், விநாயகரிடம் வேண்டிக்கொள்ள, துல்லியமான கணக்கை அவருக்கு அளித்தாராம் இந்த விநாயகர். இதனால் இந்த பெயர் வந்திருக்கிறது.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நவக்கிரக சன்னிதியில் நெல்லிக்காய் பிள்ளையார் அருள்புரிகிறார். தன்னுடைய கழுத்தில் நெல்லிக்காய் மாலை அணிந்திருப்பதால் இவருக்கு இந்த திருநாமம் ஏற்பட்டிருக்கிறது. இவருக்கு நெல்லிக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால், நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

    காலகூத்தர்

    அமிர்தம் கிடைப்பதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். மந்தரை மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக பயன்படுத்தி பாற்கடல் கடையப்பட்டது. வாசுகி பாம்பின் வால் பகுதியில் தேவர்களும், தலைப்பகுதியில் அசுரர்களும் நின்று கொண்டு பாற்கடலை கடையத் தொடங்கினர். அப்போது வாசுகி பாம்பிற்கு உடல் வலி அதிகரித்தது. அதன் காரணமாக அது தன்னுடைய வாயில் இருந்து அதிகப்படியான விஷத்தைக் கக்கியது. அதே நேரத்தில் கடலில் இருந்தும் விஷம் தோன்றியது. இரண்டு விஷமும் இணைந்து ‘ஆலகாலம்’ என்னும் விஷமாக மாறியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் அழியும் நிலை உருவானது. இதைத் தடுக்கும் விதமாக சிவபெருமான் அந்த விஷத்தை பருகினார். அது அவரது தொண்டை பகுதியிலேயே நின்று கொண்டது. பின்னர் சிவபெருமான் திருநடனம் ஆடினார். இதனால் அவர் ‘காலகூத்தர்’ என்று பெயர் பெற்றார்.

    கேதகி

    மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் யார் பெரியவர் என்பதில் பலத்த போட்டி நிலவியது. அந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக ஜோதி லிங்கமாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக வளர்ந்து நின்றார் சிவபெருமான். அந்த நேரத்தில் சிவபெருமானின் தலையில் இருந்த பூவின் பெயர் தான் கேதகி என்னும் தாழம்பூ. சிவபெருமான் ஜோதிலிங்கமாக அவதரித்த போது அவரது தலையில் இருந்த பூ கேதகி. விஷ்ணுவும் சிவபெருமானின் பாதத்தை பார்க்க வராக வடிவம் கொண்டு புறப்பட்டார்.



    பிரம்மன், ஈசனின் தலையை கண்டு வருவதற்காக அன்னப் பறவை உருவம் கொண்டு வானில் பறந்து சென்றார். ஆனால் விஷ்ணுவாலும், பிரம்மனாலும் பல ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இலக்கை அடைய முடியவில்லை. விஷ்ணு தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் சிவபெருமானின் தலையில் இருந்து விழுந்து தரையை நோக்கி வந்து கொண்டிருந்த கேதகி மலரை சந்தித்த பிரம்மன், அதனிடம் தான் சிவனின் தலையைக் கண்டு விட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி கேதகி மலரும் பொய் சாட்சி சொன்னது. இதனால் சிவபெருமானின் சாபத்தைப் பெற்ற அந்த மலர், இறைவனின் பூஜையில் பயன்படுத்த முடியாமல் ஆனது.

    கர்ணன்

    துர்வாச முனிவரின் மூலமாக குந்திக்கு ஒரு வரம் கிடைத்தது. அதன்படி அவள் எந்த தேவர்களை நினைக்கிறாளோ அவர்கள் அவள் முன்பாகத் தோன்றி வரம் அளிப்பார்கள். அதன்படி சூரிய தேவனின் மூலமாக குந்திக்கு பிறந்தவன் கர்ணன். திருமணத்திற்கு முன்பாகவே கர்ணன் பிறந்ததால், அவனை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விட்டாள் குந்தி. கர்ணனை ஒரு தேரோட்டி எடுத்து வளர்த்து வந்தார். இருப்பினும் கர்ணன் போர் பயிற்சி அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான். ஒரு முறை அவன் பாண்டவர்களால் அவமதிக்கப்பட, கவுரவர்களில் மூத்தவனான துரியோதனன் கர்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தான்.

    அந்த நட்பின் காரணமாகத்தான், பாண்டவர்கள் அனைவரும் தன் தம்பிகள் என்று தெரிந்த பின்னரும் கூட, துரியோதனனுக்கு ஆதரவாக மகாபாரத யுத்தத்தில் பங்கேற்றான் கர்ணன். அவன் பிறக்கும் போதே கவச குண்டலத்துடன் பிறந்தவன். அது பிறர் கண்ணுக்குப் புலப்படாது. அந்த குண்டலம் அவன் உடலில் இருக்கும் வரை அவனை அழிக்க முடியாது. எனவே தேவேந்திரன், புலவர் வேடத்தில் சென்று அதனை தானமாகப் பெற்றான். மகாபாரதப் போரில் அர்ச்சுனனின் அம்பால் கர்ணன் வீழ்த்தப்பட்டான்.
    விவசாயத்தில் இருந்து மண் பிரிக்க முடியாத அங்கமாக இருப்பது போலவே தைப்பொங்கலில் இருந்து மண் பானையும் பிரிக்க முடியாத ஒன்றாகும். #PongalFestival #Pongal
    “புத்தரிசி குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு” என்று கூறுவார்கள். இதோ இன்றைய பொங்கல் திருநாளுக்கு பொங்கல் உண்டு. புத்தரிசி இல்லை. புதுப் பானை இல்லை. பானை என்றால் அது மண்ணால் வனைந்த கலையத்தையே குறிக்கும். 

    மர உறியாலும், தோலாலும் செய்த பாத்திரங்களுக்கு அடுத்து மனிதன் கண்டுபிடித்த முதல் பாத்திரம் மண் பாத்திரம். பல்லாயிரமாண்டுப் பாரம்பரியமிக்கத் தமிழர்களது வாழ்க்கையில் மண் பாத்திரத்திற்கு முக்கிய இடமுண்டு.

    வடிக்க, வறுக்க, பொறிக்க, தோசை வார்க்க ஏன் இட்டிலி அவிக்கக் கூட நம் முன்னோர்கள் மண்ணால் செய்த பாண்டங்களைப் பயன்படுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு கீழடி அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட மண் பானை ஓட்டில் கடல் மீது பயணிக்கும் படகு ஒன்று கீறல் சித்திரமாகத் தீட்டப்பட் டுள்ளது. அந்த அளவிற்கு மண் பாத்திரம் நமது வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அம்சமாக இருந் திருக்கிறது.

    ஆனால் இன்றோ தமிழரின் தனித்துவமான கொண்டாட்டமாகிய தைப் பொங்கல் திருநாளை ஏதோ உன்னைப் பிடி என்னைப் பிடி என்றளவில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். நாம் ஒரு புறம் நிலத்தில் இருந்து அந்நியப்பட்டுக் கொண்டே வருகிறோம். சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் மழைப் பொழிவு குறைந்து விட்டது ஒரு புறம் இருக்க மறுபுறம் விவசாய விளைபொருளுக்குக் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. எனவே பலரும் விவசாயத்தைக் கை விட்டு வருகின்றனர். ஆனாலும் சமீப காலங்களில் ஏற்பட்டு வரும் பாரம்பரிய மீட்பு உணர்வால் நம்முடைய பழைய அடையாளங்கள் மிக வேகமாக மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன.

    2017 தை எழுச்சிக்குப் பின்னர் நம்முடைய மரபு, புதிய விளக்கமும், புத்தொளியும் பெற்று வருகிறது. அமெரிக்க சென்று தகவல் தொழில் நுட்பத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது வேலையை விட்டு விட்டு கிராமங்களுக்கு வந்து குத்தகைக்கு நிலம் எடுத்து பாரம்பரிய முறையை நவீனப்படுத்தி இரசாயனக் கலப்பற்ற விவசாயம் செய்து விவசாயத்திற்கு புத்துயிர் பாய்ச்சி வருகின்றனர். 

    அந்த வகையில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் தைப்பொங்கல் மிகப் பெரிய எழுச்சி மிக்க விழாவாகப் பரிணமிக்கப் போகிறது. விவசாயத்தில் இருந்து மண் பிரிக்க முடியாத அங்கமாக இருப்பது போலவே தைப் பொங்கலில் இருந்து மண் பானையும் பிரிக்க முடியாத ஒன்று. இன்றைய நகர்ப்புற அடுக்கங்களில் குக்கரில் பொங்கல் வைத்தால் அது விசில் மூடியெங்கும் சர்க்கரைப் பாகினைக் வழியவிடுகிறது. ஒரு வழியாக மூடியை நீக்கி குக்கரின் அடிப்பாகத்திற்கு கரண்டியை விட்டால் அடியில் கருப்பாக அட்டுப் பிடித்து பொங்கலுக்கான எந்த அடையாளமும் அதில் இருப்பதில்லை. 

    பொங்கல் வைக்க மண்பானையே மிகவும் உகந்தது. பொங்குதல் என்றாலே பானைக்குள் ஒரு சீராக வெந்து பொங்கி வருவதையே குறிக்கும். மண் பானை மட்டுமே அடுப்பில் எழும் தணலை ஒரே சீராக உள்ளுக்குள் கொடுத்து அரிசியை இதமாகக் குழையச் செய்யும். அதேபோல அரிசி வெந்த பிறகு வெல்லத்தின் சுவையை நிதானமாக அரிசிக்குள் ஏற்றும். 

    ஏனென்றால் சுட்ட மண்ணானது வெளியில் இருந்து ஏற்றப்படும் வெப்பத்தை அப்படியே உள்ளே கடத்துவதில்லை. அது வாங்கி தன்னில் இருத்தி, அதன் பிறகு நிதானமாக உள்ளே கடத்துகிறது. எனவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் எதுவானாலும் அதற்குத் தனிச் சுவை இருக்கும். இன்றைய நகர வாழ்க்கையில் வீட்டுக்குள் விறகடுப்பு கூட்டி பொங்கல் சமைக்க வாய்ப்பு இல்லை என்று நம்மில் சிலர் சலித்துக் கொள்வார்கள். அவர்களில் அக்கம் பக்கம் ஒரு பத்து வீட்டினர் கூடி, கூட்டாகத் தெருவில் பொங்கல் பொங்கி கூட்டாகப் படைத்து அனைவருமாகப் பகிர்ந்து உண்ணலாம். பகிர்ந்து உண்பது தானே மனித நாகரீகத்தின் சிறப்பு. 

    நகரமானாலும் கிராமம் ஆனாலும் தெருவில் அடுப்புக் கூட்டி, மண் பானையில் பாலூற்றி உலை வைத்து பொங்கல் வைத்து, கூடிக் குலவையிட்டு முக் கரும்பினைக் கட்டி இந்தப் புவிக் கோளத்துக்கே தந்தையாம் கதிரவனுக்குப் படைத்து ஆவி பறக்கும் பொங்கலினை அனைவருக்கும் பரிமாறி உண்பதே நாம் வாழும் காலத்திற்குப் பெருமை சேர்க்கும்.

    மண்பானையில் பொங்கும் பொங்கல் மட்டுமல்ல, மண் பாத்திரத்தில் சமைக்கும் பண்டங்கள் அத்தனையும் தனித்துவமான கூடுதல் சுவையைத் தரும். அதுபோக மண் பாண்டத்தில் சமைக்கிற பொருள் எதுவும் எளிதில் கெடாது. ஏனென்றால் புறத் தட்ப வெப்பம் எதுவும் மண் பாண்டத்தில் உள்ள பொருளைத் தாக்காது என்பதால் சமைத்த பொருளின் தன்மை மாறாமல் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

    உலோகப் பாண்டங்களில் இருந்து எழும் கதிர் வீச்சு மற்றும் அதன் உலோகப் பண்பு இரண்டுமே சமைத்த பொருளைப் பாதித்து உடலுக்குத் தீமை விளைவிக்கும். ஆனால் மண் பாண்டமானது மண்ணின் தாதுச் சத்துக்களை நமது உடலின் ஏற்பு திறனுக்கு ஏற்ப வெளிப்படுத்தும். அதே போல சுத்திகரிக்கப்பட்ட நீரை மண் குடுவையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குடித்தால் மண்ணின் தாதுக்கள் நீரில் ஏற்றம் பெற்று நமது சிறு நீரகத்திற்கு ஆற்றலை வழங்கும். அதேநேரத்தில் சுத்திகரிக்கப்படாத நீரை மண் பாண்டத்தில் ஊற்றி வைத்திருந்தால் நீரில் உள்ள மாசுக்களை மண் பாண்டத்தில் நுண் துளைகள் ஈர்த்து நமக்கு சுத்தமான நீரை வழங்கும்.

    மண்பாண்டப் பயன்பாடு என்பது நமக்கு ஆரோக்கியத்தை வழங்குவதோடு அதனை உருவாக்கும் எளிய தமிழகத்துக் கலைஞர்களுக்கு பொருத்தமான வாழ்வாதாரத்தையும் வழங்கும். நமது நகரங்கள் கலைஞர்களை காவு கொள்பவையாக மாறிக் கொண்டிருக்கின்றன. மண்பானை வனையும் கலைஞர்கள் மண்ணையும் கிராமங்களையும் தமது மூலாதாரமாகக் கொண்டவர்கள். எனவே அவர்கள் நகர்புறத்திற்கு இடம் பெயராத வண்ணம் மண்பாண்டத் தொழிலைச் செழிக்கச் செய்ய முடிந்தவரை மண் பாண்டங்களைப் பயன்படுத்துவோம். மரபை மீட்டெடுப்போம். #PongalFestival #Pongal
    திருவக்கரை தலத்தில் உள்ள பெருமாள் சன்னதி மேற்கு திசையைப் பார்த்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    வைணவத் தலங்களில் பெருமாள் கிழக்கு முகமாக பார்த்தே பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதற்கு ஏற்ப பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டிருக்கும். ஆனால் திருக்கரை தலத்தில் உள்ள பெருமாள் சன்னதி மேற்கு திசையைப் பார்த்த நிலையில் கட்டப்பட்டுள்ளது.

    திருவக்கரை தலத்தில் எல்லா சன்னதிகளும் வக்கிரமாக மாறுபட்ட நிலையில் கட்டப்பட்டதற்கு ஏற்ப, பெருமாள் சன்னதியும் மாறுபாடாக உள்ளது. இத்தலத்து பெருமாள், வரதராஜபெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

    வக்கிராசூரனை சம்ஹாரம் செய்யும் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால், பெருமாள் வழக்கமாக பார்க்கும் கிழக்கு திசையை தவிர்த்து விட்டு மேற்கு முகமாக நிற்கிறார். அவர் ஏந்தியுள்ள சக்கராயுதம், வக்கிராசூரனை வதம் செய்தபோது, எப்படி பிரயோகப்படுத்தப்பட்டதோ, அதே தோற்றத்துடன் உள்ளது.

    அதாவது மற்ற வைணவத் தலங்களில் சக்கராயுதம் பெருமாளை நோக்கி இருக்கும். ஆனால் திருவக்கரை தலத்தில் மட்டும் பக்தர்களை நோக்கியபடி சக்கரம் இருக்கிறது. அசுரனை சக்கரத்தால் வதம் செய்து விட்டு வந்து அப்படியே அவர் காட்சி கொடுப்பதாக ஐதீகம்.

    தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருளும் வரதராஜ பெருமாள் இங்கு தனியாக உள்ளார். அருகில் தாயார் இல்லை. இந்த சன்னதியின் ஒரு ஓரத்தில் ராமகிருஷ்ணன் சிலை உள்ளது. ராம அவதாரத்திலும், கிருஷ்ணர் அவதாரத்திலும் அந்த அவதாரங்கள் இங்கு காட்சி கொடுத்ததாக சொல்கிறார்.

    ராமகிருஷ்ணர் சிலையின் ஒரு கையில் வில் உள்ளது. மற்றொரு கையில் புல்லாங்குழல் இருக்கிறது. கிருஷ்ணருக்கு அருகில் ருக்மணியும் ராமருக்கு அருகில் சீதையும் உள்ளனர். ஆலயத்தின் எதிரில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் உள்ளனர்.

    மேற்கே பார்த்த வரதராஜபெருமாளை வழிபாடு செய்தால் தடைபட்ட திருமணம் உடனே கைகூடும் என்பது ஐதீகம். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் வரதராஜபெருமாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    கார்த்திகை மாதங்களில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் ஜோதி வடிவில் காட்சி தருவார் ஐயப்பன்.









    15-1-2019 அன்று மகர ஜோதி

    திருமால் மோகினியாக அவதாரம் எடுத்தபோது, அவர் மேல் சிவபெருமான் மோகம் கொண்டதால் அவதரித்தவர் ஐயப்பன். ஹரனுக்கும், ஹரிக்கும் பிறந்தவர் என்பதால் ‘ஹரிஹரசுதன்’ என்று அழைக்கப்பட்டார். இவரது அவதார நோக்கம் மகிஷி என்ற அரக்கியின் வதத்திற்காக உருவானதாகும். எனவே பம்பை நதிக்கரையோரத்தில் அந்த குழந்தையை திருமாலும், ஈசனும் விட்டுச் சென்றனர். அப்போது அந்தக் குழந்தையின் கழுத்தில் மணி ஒன்றை கட்டி விட்டனர்.

    அந்த நேரத்தில் காட்டுக்கு வேட்டையாட வந்தார், பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியன். மன்னனுக்கு பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாத வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் பம்பா நதிக்கரை பகுதியில் குழந்தை அழுகுரல் கேட்டு அங்கு விரைந்து சென்றான் பந்தள மகாராஜா. அங்கு அழகிய குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடந்தது கண்டு, அந்த குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்றார்.

    குழந்தையைப் பார்த்ததும் ராணிக்கு அளவில்லாத சந்தோஷம். கழுத்தில் மணியுடன் கண்டெடுக்கப்பட்டதால் குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். குழந்தைக்கே உரிய குறும்புகளுடனும், அபரிமிதமான அழகுடனும், அறிவார்ந்த கேள்வி ஞானத்துடனும், ஒப்பற்ற அரசகுமாரனாகவும் வளர்ந்து வந்தார் ஐயப்பன்.

    இதற்கிடையில் பந்தளத்து ராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்படியிருந்தும் மணிகண்டனின் மீது ராஜசேகர பாண்டியனுக்கு இருந்த பாசம் இம்மியும் குறையவில்லை. தனக்குப் பின் ஐயப்பனுக்கே பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். இது மகாராணிக்கு பிடிக்கவில்லை. தனக்கென்று ஒரு பிள்ளை வந்ததும், இதுவரை இருந்த பிள்ளையை பிடிக்காமல் போய்விட்டது ராணிக்கு. இதனால் அவரது மனது வேறு கணக்கு போட்டது.

    அரசவையின் அமைச்சர்களில் ஒருவருக்கும் மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுவதில் விருப்பமில்லை. அந்த அமைச்சர், ராணியிடம் சென்று, ‘மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டால், நீங்கள் பெற்ற பிள்ளைக்கு எதுவும் கிடைக்காமல் போய்விடும்’ என்று தூபம் போட்டார். இதுவரை தனது எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்று எண்ணிக்கொண்டிருந்த ராணிக்கு, அமைச்சரின் வார்த்தைகள் தேனை வார்ப்பது போல் இருந்தது. இருவரும் சேர்ந்து மணிகண்டனை மண்ணுலகை விட்டு அனுப்ப முடிவு செய்தனர். அதற்காக ஒரு நாடகத்தையும் அரங்கேற்றினர்.

    ராணி கடுமையான தலைவலியால் அவதிப்படுவது போல் நடித்தார். தலைவலி தீர அதற்கான மருந்தை புலிப்பாலில் கலந்து கொடுத்தால் தான் குணமாகும் என்று அரண்மனை வைத்தியர்கள் மூலமாக கூறவைத்தார் அமைச்சர். காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டு வருவது என்பது யாரால் முடியும்?. அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றனர்.

    அப்போது, தாயின் தலைவலி தீர தானே காட்டிற்குச் சென்று புலிப்பால் கொண்டுவருவதாக கூறி புறப்பட்டார் மணிகண்டன். மன்னன் ராஜசேகரபாண்டியன் பதறிப்போனார். “வேண்டாம்! புலியின் பாலை கொண்டு வருவது எளிதானதல்ல. உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது” என்றார்.

    எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்லாது, அவதாரத்தின் நோக்கம் இறுதி கட்டத்தை எட்டி விட்டதையும் உணர்ந்த மணிகண்டபிரபு, தானே சென்று வருவதாக கூறி காட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு தேவர்களை துன்புறுத்தி வந்த மகிஷியை அழுதா நதிக்கரை பகுதியில் சந்தித்தார். இருவருக்கும் கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் ஐயப்பனின் வில்லுக்கு வீழ்ந்தாள் மகிஷி.

    இறந்த மகிஷி அழகிய பெண்ணாக வடிவெடுத்து ஐயப்பனிடம் வந்தாள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினாள். ஆனால், ‘நான் சபரிமலையில் வசிக்க போகிறேன். என்னைத் தேடி ஆண்டுதோறும் பல கோடி பக்தர்கள் வருவார்கள். நாட்டில் சண்டை சச்சரவுகள் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கமே என்னைத்தேடி வரும் பக்தர்களிடம் விதைக்கப்படும். இந்த அவதாரத்தில் நான் பிரம்மசாரியாகவே வாழ்வேன். எனவே நீ என்னருகில் மாளிகைப்புறத்து அம்மனாக வீற்றிருப்பாய்’ என்று கூறி அருளினார்.

    பின்னர் மகிஷியின் துன்பத்தில் இருந்து விடுபட்ட தேவர்கள் தேவேந்திரன் புடைசூழ காட்டிற்கு வந்தனர். அவர்களில் தேவேந்திரன் ஆண் புலியாக மாற, அதில் ஏறி ஐயப்பன் அமர்ந்து கொண்டார். தேவர்கள் அனைவரும் பெண் புலியாக மாறி ஐயப்பனை சூழ்ந்து கொண்டு பந்தளம் நோக்கி படையெடுத்தனர். ஐயப்பன் புலி மீது அமர்ந்து வருவதை பார்த்ததும் அனைவரும் அச்சத்தில் ஓரமாக ஒதுங்கி நின்றனர்.

    இதுபற்றி கேள்விபட்டதும் ராஜசேகரபாண்டியன், அமைச்சர், ராணி அனைவரும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். புலி மீது அமர்ந்திருந்த ஐயனை பார்த்ததும் ராணியும், அமைச்சரும் தங்கள் பிழையை பொறுத்தருளும்படி வேண்டினர். ஐயப்பன் தனது அவதார நோக்கத்தை அனைவருக்கும் எடுத்துக் கூறி புறப்பட்டார்.

    ஐயப்பனை வணங்கிய ராஜசேகரபாண்டியன், ‘எனது ராஜ்ஜியத்திலேயே நிரந்தரமாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அதனை தட்டமுடியாத ஐயப்பன், ‘பரிசுத்தமான சபரிமலையில் நிரந்தரமாக வாசம் செய்வேன். என்னை பார்க்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் அங்கு வந்து என்னை பார்த்துக் கொள்ளுங்கள். கார்த்திகை மாதங்களில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு நான் ஆண்டுதோறும் ஜோதி வடிவில் காட்சி தருவேன்’ என்று கூறி மறைந்தார்.

    இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளான, மகர சங்கராந்தி அன்று நடைபெறுகிறது.
    மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து இன்று தொடங்கியது.
    சபரிமலையில் உள்ள ஐ யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு திரு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. சபரிமலையில் கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை விழா நிறைவடைந்தது. அடுத்து மகர விளக்கு பூஜைக்கான விழா தொடங்கியது.

    வருகிற 14-ந்தேதி மாலையில் மகர விளக்கு பூஜை நடக்கிறது. அன்று சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள்.

    சபரிமலையில் மகர விளக்கு பூஜை நடக்கும் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திரு வாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருக்கும். விழாக்காலங்களில் திருவா பரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

    அதன்படி மகர விளக்கு பூஜைக்காக திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து இன்று தொடங்கியது. வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது.

    திருவாபரண ஊர்வலத்தில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம். இந்த முறை சபரிமலையில் போராட்டங்கள் நடந்ததால் ஊர்வலத்திற்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித் துள்ளனர். சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளனர். இதனால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×