search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    அர்த்தநாரீஸ்வரர் மூலமாக சிவனும், சக்தியும் ஒன்று, ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை என்பதும் இதன் மூலம் சொல்லப்படும் பொருள் ஆகும்.
    சிவனும் பார்வதியும் சரி பாதியாக கலந்த உருவமே ‘அர்த்தநாரீஸ்வரர்’. சிவபெருமானை மட்டுமே வழிபடும் பிருகு முனிவர், ஒரு முறை கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் வீற்றிருக்க சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டுச் சென்று விட்டார்.

    இதனால் வருத்தம் அடைந்த பார்வதி, பூலோகம் வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ததன் பயனாக, சிவபெருமானின் உடலில் சரிபாதியாக இருக்கும் வல்லமையை அடைந்தார். அர்த்தநாரீஸ்வரர் மூலமாக இறைவன், இந்த உலகத்தில் ஆணும், பெண்ணும் சமம் என்பதை நிறுவுகிறார்.

    மேலும் சிவனும், சக்தியும் ஒன்று, ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை என்பதும் இதன் மூலம் சொல்லப்படும் பொருள் ஆகும்.

    சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நாளை நடக்கிறது. இதை காண்பதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோவிலில் திரளான பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் தங்கி விரதம் கடைபிடித்து வருகின்றனர்.

    விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது. மாலையில், திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    விழாவின் 4-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலையில் எழுந்தருளினார். மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். இரவில் சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, மீண்டும் கோவில் சேர்ந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும் அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாய அபிஷேகம் நடக்கிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் படி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முன் தினமான பரணி நட்சத்திரமன்று மாலை வேளையில் இல்லத்திலும், இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும்.
    பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முன் தினமான பரணி நட்சத்திரமன்று மாலை வேளையில் இல்லத்திலும், இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும். 22-11-2018 (வியாழக்கிழமை) பரணி தீபம் வருகிறது.

    அகல் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளில், படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைத்து வழிபடுவது மரபு. வீட்டில் ஏற்றும் விளக்குகளை நல்லெண்ணெய் ஊற்றியும், இறைவன் சன்னிதியில் ஏற்றும் விளக்குகளை இலுப்பெண்ணெய் ஊற்றியும் வழிபடுவது நல்லது.

    அப்பொழுதுதான் அஷ்டலட்சுமி உங்கள் வீட்டில் அடியெடுத்து வைப்பார். இல்லத்தில் ஐஸ்வரியம் பெருக வழிபிறக்கும்.
    திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தனது தாயாரிடமிருந்து இன்று சக்திவேலை வாங்குகிறார்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகப் பெருமானுக்கு தினமும் 2 வேளை தலா 2 மணிநேரம் சண்முகார்ச்சனை நடைபெறுவது தனி சிறப்பு. சண்முகருக்கு (ஆறுமுகத்திற்கும்) 6 வகை சாத படையல் படைத்து சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று மயில் சேவையாக வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) கோவிலில் உள்ள ஆலய பணியாளர்கள் திருக்கண்ணில் இரவு 7 மணிக்கு வேல் வாங்குதல், நடக்கிறது. இதில் சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் தனது தாயாரான கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்திவேல் வாங்கு கிறார்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு மாலை 6 மணிக்கு சூரசம்ஹார லீலை நடக்கிறது. இதையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள்.

    திருவிழாவின் முத்தாய்ப்பாக நாளை மறுநாள் காலை 8 மணிக்கு சட்டத் தேர் பவனி நடக்கிறது. இதில் தெய்வானையுடன் முருகப் பெருமான் சட்டத் தேரில் எழுந்தருளுகிறார். காப்பு கட்டி விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சட்டத் தேரை வடம் பிடித்து இழுத்து கிரிவலம் வந்து சாமிதரிசனம் செய்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். இதே போல கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் மாலை 4 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை முருகப் பெருமானுக்கு தங்க கவசம் சாற்றப்படும். ஆகவே ஆண்டிற்கு 2 முறை கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு வருகிறது. இதேபோல இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான வருகிற 14-ந் தேதி மாலை 4 மணிக்கு முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. மேலும் கோவிலின் கருவறையில் கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்படுகிறது.

    முருகப் பெருமான் சூரனை வதம் செய்த உக்ரத்தில் (கோபம்) இருந்து தணிவதற்காக 100 படி அரிசியில் சாதம் படைத்து அதில் சுமார் 15 லிட்டர் தயிர் கலந்து படைக்கப்படுகிறது. இதை பாவாடை தரிசனம் என்று அழைக்கிறார்கள். இத்தகைய நிகழ்ச்சி ஆண்டிற்கு ஒரு முறை கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் மாலை 4 மணிக்கு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.
    சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின்மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர்.

    பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோ முக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.

    உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்ததினம் வைகாசி மாத – விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறு உருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).

    மு  – முகுந்தன் என்கிற விஷ்ணு
    ரு – ருத்ரன் என்கிற சிவன்
    க – கமலத்தில் உதித்த பிரம்மன்.

    ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து கோவில் அதிகாரிகளுடன் திருப்பதி துணை அதிகாரி போலா.பாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் அனைவரும் செய்ய வேண்டும். வருகிற டிசம்பர் மாதம் 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. 8-ந்தேதி கஜவாகனம், 9-ந் தேதி தங்கதேரோட்டம், கருடவாகனம், 11- ரதஉற்சவம், 12-ந்தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவை நடைபெறும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அப்போது பக்தர்களுக்கு எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழா வண்ணம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பிரம்மோற்சவத்தின் போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின்போது எவ்வாறு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டதோ அதேபோல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்ய வேண்டும்.

    பிரம்மோற்சவத்தையொட்டி ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளது. பக்தர்களை கவரும் விதமாக திருப்பதியில் கண்காட்சி விளம்பரங்களும் திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் பாதுகாப்புக்கு 300 ஸ்ரீவாரி சேவகர்களும் விஜிலன்ஸ் ஊழியர்களுடன் சேர்ந்து சேவைபுரிய உள்ளனர்.

    பிரம்மோற்சவ விழா நடைபெறக்கூடிய நாட்களில் நான்கு மாட வீதிகளில் 10 எல்.இ.டி. கேலரிகளும் பஞ்சமி தீர்த்தம் அன்று கூடுதலாக 8 கேலரிகளும் அமைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்யபட உள்ளது. சுவாமி வீதி உலாவின்போது ஊர்வலத்தின் முன்பு பல்வேறு மாநிலங்களில் உள்ள கலைக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. சஷ்டி அன்று ஷண்முகனை தரிசனம் செய்வது எண்ணங்களை நிறைவேற்றும்.
    ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்.

    அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரதநாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் எனஇப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறைஅல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர்.

    இத்திதிக்குநாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப்பெருமான். சுப்ரமணியருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம்பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன்என்றும் இதற்குப் பொருள்.

    ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்த ஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.
    திண்டிவனம் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும். மேலும் சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும்.
    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு நரசிம்மர் இடது மடியில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பெருமாளின் உக்கிரத்தை குறைக்க தாயாரை மார்கண்டேய மகரிஷி வேண்டிக் கொண்டார். அதன்படி தாயார், பெருமாளை நோக்கி கைகூப்பி பக்தனுக்கு சாந்த மூர்த்தியாக அருள்பாலிக்கும் படி வேண்டி கொண்டார். அதன்பேரில் சாந்த மூர்த்தியாக பிரகலாத வரதனாக பெருமாள் காட்சி தந்தார். எனவே இந்த தலத்தில் தற்போதும் பக்தனுக்காக தாயார் கும்பிட்ட நிலையில் நரசிங்க பெருமாளோடு காட்சி அளித்து வருகிறார்.

    திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி ஆகிய அரக்கர்கள் வனத்தில் தவம் செய்த முனிவர்களுக்கு தொடர்ந்து தீங்கு செய்து வந்தனர். உடனே முனிவர்கள், நாராயணரை வேண்டினர். இதை ஏற்றுக்கொண்ட நாராயணர், அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அனுமாருக்கு தனது சங்கு, சக்கரத்தை கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார். அதை பெற்றுக்கொண்ட அனுமர், அரக்கர்களை கொன்று முனிவர்களின் தவவேள்வியை நிறைவு பெற செய்தார். இதனால் இந்த கோவிலில் அனுமார் சங்கு, சக்கரத்தோடு 4 கைகளுடன் காட்சி அளிக்கிறார்.

    இத்தனை அற்புதங்களை கொண்ட லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செல்வம் பெருகும். கடன் பிரச்சினை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் கைகூடும். சாந்த மூர்த்தியாக தாயாருடன் காட்சிதரும் இத்தல நரசிம்மரை புரட்டாசி சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும்.

    திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய 3 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், ராகுதிசை நடப்பவர்களுக்கும், ஏழரை சனியின் தாக்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்த கோவில் பரிகார தலமாக உள்ளது. கோவிலின் தெற்கு பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தாயார் சன்னதியும், வடமேற்கு பகுதியில் ஆண்டாள் சன்னதியும், பின்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளது.

    மேலும் இந்த கோவிலில் சக்கரத்தாழ்வார், கோதண்டராமர், வேணுகோபாலர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் தினமும் 2 கால பூஜைகள் நடந்து வருகிறது.

    தீபாவளியையொட்டி 9 நாட்களுக்கு மட்டுமே திறக்கப்பட்ட ஹாசனாம்பா கோவில் நடை நேற்று மூடப்பட்டது.
    ஹாசன் டவுனில் அமைந்துள்ளது ஹாசனாம்பா கோவில். இக்கோவிலில் ஹாசனாம்பா அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் தீபாவளியையொட்டி 9 நாட்களுக்கு மட்டுமே நடை திறக்கப்படும்.

    பின்னர் நடை மூடப்படும்போது அம்மனுக்கு போடப்பட்டிருக்கும் மாலைகள், கோவிலில் வைக்கப்பட்ட மலர்கள், படையல்கள் ஆகியவை கெட்டுப்போகாமல் அடுத்த ஆண்டு கோவில் திறக்கப்படும் வரை அப்படியே இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கோவிலில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்குகளும் அணையாமல் அடுத்த ஆண்டு வரை எரிந்து கொண்டே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

    இப்படி பல்வேறு சிறப்பு மிக்க ஹாசனாம்பா கோவில் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கடந்த 1-ந் தேதி திறக்கப்பட்டது. கோவில் திறக்கப்பட்ட நாள் முதல் தினமும் காலை 5 மணியளவிலும், மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரையிலும் ஹாசனாம்பா அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டன. மற்ற நேரங்களில் அம்மனை பக்தர்கள் தரிசித்து வந்தார்கள்.

    இப்படி ஹாசனாம்பா அம்மனை கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 2 கோடியே 25 லட்சம் பக்தர்கள் தரிசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இலவச தரிசன வரிசையில் மட்டும் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு கட்டணம் செலுத்தியும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தார்கள்.

    இவ்வாறாக சிறப்பு கட்டணம், அர்ச்சனை கட்டணம், பிரசாதம் விற்றது உள்ளிட்டவை மூலம் ரூ.21.45 லட்சம் வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்தான் ஹாசனாம்பா கோவில் திறக்கப்பட்டு 8-வது நாள் ஆகும். அதனால் நேற்று முன்தினத்துடன் அம்மனை, பக்தர்கள் தரிசனம் செய்தது முடிவுக்கு வந்தது. பின்னர் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

    பின்னர் நேற்று காலை 5 மணியளவில் மீண்டும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. மதியம் 2 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சரியாக 2 மணிக்கு அம்மனுக்கு மாலைகள் அணிவித்து, படையலிட்டு, விசேஷ பூஜைகள் செய்து, விளக்கேற்றி, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னர் கோவில் நடை மூடப்பட்டது.

    பின்னர் கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பிரசித்திபெற்ற ஹாசனாம்பா கோவில் கடந்த 1-ந் தேதி அன்று திறக்கப்பட்டது. 8-வது நாளான நேற்று முன்தினம் வரை கோடிக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தார்கள். தினமும் காலை 5 மணியளவிலும், பின்னர் மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரையிலும் அம்மனுக்கு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட வேண்டி இருந்ததாலும் அந்த நேரங்களில் மட்டும் அம்மனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    நேற்று முன்தினம் மாலையோடு அம்மனை, பக்தர்கள் தரிசித்தது முடிவுக்கு வந்தது. கோவில் திறக்கப்பட்டு 9-வது நாளான(கடைசி நாள்) நேற்று பக்தர்கள் யாரும் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டு பின்னர் சரியாக 2 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது. கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும் பணி சித்தேஸ்வரா கோவில் வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. உண்டியல் காணிக்கை மூலம் கோவிலுக்கு கிடைத்த வருமானம் குறித்து தகவல்கள் வெளியிடப்படும்’’ என்று கூறினார்.

    விஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    விஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார்.

    மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதார மாகும். இதன் காரணமாக மற்ற அவதாரங் களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும். எனவேதான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.

    நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாறு வருமாறு:-

    சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

    வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலிய வனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந் தான். பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது.

    எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.

    இந்த நிலையில் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் கயாதுக்கும் மகனாக பிரகலாதன் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான்.

    அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார்.

    பிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.

    ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்து செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்றும் செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

    பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.

    இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்டான். ஏனெனில் அந்த தூண், இரணியனே பார்த்து, பார்த்து கட்டிய தூணாகும். பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான்.

    இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.

    இரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை. சிவன் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை. அதனால் அவர்கள் விஷ்ணுவின் தேவியான லட்சுமியை நாடினர். ஆனால் லட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்லை.

    பின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும் வேண்டுதலாலும் நரசிம்மரின் சினம் அடங்கியது. அப்போது லட்சுமியும், நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதன் பிறகு அவர் பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார்.

    நரசிம்மருக்கு பல்வேறு வடிவங்கள் புகழ்ந்து கூறப்படுகின்றன. அதில் மிகமிக முக்கியமானது லட்சுமி நரசிம்மர் வடிவமாகும். லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தான் இந்த பிறவியானது அனைத்து வகையிலும் பூர்த்தியாகும். 
    கீழே கொடுக்கப்பட்டுள்ள நரசிம்மர் ஸ்லோகம் கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகமாகும். இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.
    அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.

    ‘நரசிம்மரே தாய்;
    நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே,
    தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே,
    செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே.
    இவ்வுலகத்தில் நரசிம்மரே,
    அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு
    செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’.
    நரசிம்மரை காட்டிலும்
    உயர்ந்தவர் எவரும் இல்லை.
    அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.

    இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.
    சென்னையில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கலச பூஜையுடன் தொடங்கியது. 13-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
    ஒவ்வொரு மாதம் வரும் சஷ்டிதிதியில் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். அதில் முக்கியமாக ஐப்பசி வளர்பிறை சஷ்டிதிதி கந்தசஷ்டியாகும். முருக பெருமான் சூரபத்மனை அழித்து உலகுக்கு அருள் புரிந்த நாள் கந்தசஷ்டி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    இதற்காக ஐப்பசி மாதம் அமாவாசை அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து சஷ்டிதிதி வரை 6 நாட்கள் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். இறுதிநாளில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பின்னர் பக்தர்கள் தங்கள் விரதங்களை முடித்துக்கொள்வார்கள்.

    சென்னை, பாரிமுனை கந்தகோட்டம் என்று அழைக்கப்படும் கந்தசாமி கோவிலில் 91-ம் ஆண்டு கந்தசஷ்டி கோடி அர்ச்சனை விழா நேற்று தொடங்கி 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முடிய 6 நாட்கள் நடைபெற உள்ளது. இதனையொட்டி பக்தர்கள் வசதிக்காக விழா நாட்களில் மூலவர், உற்சவர், தண்டாயுதபாணி, ஆறுமுகர் ஆகிய 4 சன்னதிகளில் தொடர்ந்து அர்ச்சனைகள் நடைபெற உள்ளன.

    13-ந்தேதி மகா சஷ்டி இரவு 7 மணிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் முத்துக்குமரன் சாமி பவனி வந்து சூரனை சம்ஹாரம் செய்யும் விழா பாய்கடை அருகில் நடைபெறுகிறது.

    14-ந்தேதி (புதன்கிழமை) காலை 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு தெய்வயானை திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. சிறப்பு ஆராதனையைத் தொடர்ந்து மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது.

    வடபழனி ஆண்டவர் கோவிலில் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கி, வரும் 13-ந்தேதி இரவு 7 மணிக்கு தெற்கு ராஜகோபுர சந்திப்பில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 9 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

    விழா நாட்களில் சிறப்பு அர்ச்சனை, அலங்கார பூஜைகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    இதேபோன்று, பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில், தண்டையார்பேட்டை முருகன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், சிறுவாபூரி முருகன் கோவில், சிட்டிலபாக்கம் குமரன்குன்றம், திருப்போரூர் கந்தசாமி கோவில், சைதாப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், குயப்பேட்டை முருகன்கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது.

    விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 
    ×