search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    நெல்லை மாவட்டம் புளியங்குடி லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் விசேஷம் என்ன வென்றால் இங்கு வந்து வழிபட்டால் தீராத கடன் பிரச்சினை தீரும்.
    நெல்லை மாவட்டம் புளியங்குடியில் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவில் மதுரைக்கு தெற்கு, நெல்லைக்கு வடக்கு என இரண்டு பகுதிகளுக்கும் மத்தியில் ஒரே ஒரு தனி சன்னி தானத்தில் லெட்சுமி நரசிங்க பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் உற்சவமூர்த்தி சுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, பெரியதிருவடி கருடாழ்வார், திருவடி ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்திகள் அருள் பாலித்து வருகிறார்கள்.

    இக்கோவிலில் ஆகமம் பாஞ்சராத்ட்ரம ஆகமம் முறைப்படி நான்குகால பூஜை நடைபெறுகிறது. திருக்கோவிலின் விசேஷ நாட்களில் திருவிழா நாட்கள் சித்ரா பவுர்ணமி, கிருஷ்ணஜெயந்தி, உறியடி திருவிழா, புரட்டாசி சனி, ஸ்ரீராமநவமி, மார்கழி முப்பது நாட்களும் திருப்பாவை பாராயணம் நடைபெறும். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, திருப்பாவை விழா, அனுமன் ஜெயந்தி ஆகியவை திருவிழா காலத்தில் நடைபெறுகிறது. இந்த கோவில் மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் கீழ்புறத்தில் அமைந்துள்ளது.

    இம்மலை யில் தென்புறம் வாழை மலையாறு உற்பத்தியாகிறது. கோவிலுக்கு வடபுறம் நிட்சையப்ப நதி ஆறு உற்பத்தியாகிறது. இக்கோவில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பாக தோன் றியது. புளியங்குடியில் புளியமர வனப் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. இதனால் கோவிலின் ஸ்தல விருட்சம் புளியமரம். கோவில் தீர்த்தம் லெட்சுமி தீர்த்தம். உக்கிரமாக இருக்கக்கூடிய நரசிம்ம மூர்த்தியை மகாலெட்சுமி தாயார் சாந்தப்படுத்தி அருள்காட்சி கிடைத்த ஸ்தலம். சுவாமிக்கு இடது மடியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். லெட்சுமி நரசிங்கப்பெருமாள் சாந்தமாக காட்சியளிக்கிறார்.

    இத்திருக்கோவிலில் விசேஷம் என்ன வென்றால் இங்கு வந்து வழிபட்டால் தீராத கடன் பிரச்சினை தீரும். எந்த நேரத்தில் தீரும் என்றால் நரசிம்ம பிரதோஷ காலத்தில் தீரும். சுவாதி நட்சத்திரத்தில் தரிசனம் செய்தால் குபேர சம்பத் கிடைக்கும். புதன்கிழமை சுக்கிர ஹோரையில் அன்று இரவு 7 முதல் 8 மணிக்குள் ஆண் பெண்ணுக்கு திருமணத்திற்காக அர்ச்சனை செய்தால் திருமணம் காரியங்கள் வெற்றியாகும். உக்கிரம் தணிக்க பானகத்தால் நெய்வேத்தியம் செய்தால் இது மிகவும் நன்று. மந்திர ராஜபதா ஷோத்திரம் பாராயணம் செய்தால் லெட்சுமி நரசிங்க பெருமாள் திருஅருள் பூரணமாக அருள்கடாட்சம் கிடைக்கும்.

    வைகுண்ட ஏகாதசியும், பாவை விழாவும் நடைபெறும் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் கலந்து கொள்ளும் கன்னிகளுக்கு மார்கழியை தொடர்ந்து வரக்கூடிய தை மாதத்தில் திருமண யோகம் கிடைக்கும். மேலும் பாவை விழா பெண்கள் தெய்வ மகளிர் போல மிகுந்த வரங்கள் பெறுவதால், லெட்சுமி நரசிங்கப்பெருமாளுக்கு இணையில்லை. மேலும் கல்விக்கு அதிபதி மற்றும் புத்திகாரகர் புதன்கிழமையன்று அர்ச்சனை செய்தால் கல்வி வளமாக பெருகும்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் பல வகையான கதாபாத்திரங்கள் உள்ளன. அப்படிப்பட்ட புராண, இதிகார கதாபாத்திரங்கள் பற்றிய தகவலை இந்தப்பகுதியில் பார்க்கலாம்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் பல வகையான கதாபாத்திரங்கள் உள்ளன. அந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் கதையின் போக்குக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுவதாகவும், வலுசேர்ப்பதாகவும் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட புராண, இதிகார கதாபாத்திரங்கள் பற்றிய தகவலை இந்தப்பகுதியில் பார்க்கலாம்.


    அபிமன்யு

    மகாபாரதம் என்னும் புகழ்பெற்ற இதிகாசத்தில் முக்கியமான கதாபாத்திரமாக திகழ்பவன் அர்ச்சுனன். இவனது வீரப்புதல்வன் தான் அபிமன்யு. குருஷேத்திரப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் போரில் பாண்டவர்களுக்கு ஆதரவாக அபிமன்யுவும் பங்கேற்றான். கவுரவர்களின் படைத்தளபதி துரோணர் பாண்டவர்களை அழிப்பதற்காக சக்கரவியூகம் அமைத்தார். வலுமிகுந்த அந்த சக்கரவியூகத்தை உடைத்து உடைபுகும் வித்தையை கண்ணன், அபிமன்யுவுக்கு கற்றுக்கொடுத்திருந்தார். அதைப்பயன்படுத்தி சக்கரவியூகத்தை உடைத்த அபிமன்யு கடுமையாக போர் செய்தான். அதே நேரம் சக்கரவியூகத்தை உடைத்து வெளியேறும் வித்தையை அவன் அறியாத காரணத்தால், போரில் வீரமரணம் அடைந்தான். மகாபாரதத்தின் குருஷேத்திரப் போரில் அபிமன்யுவின் வீரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    பீஷ்மர்

    அளவில்லாத சக்திகளைப் பெற்ற மாவீரன், பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் பிதாமகராக விளங்கிய பீஷ்மர். இவர் சாந்தனு என்ற அரசனுக்கும் கங்கை தேவிக்கும் பிறந்தவர். தன் தந்தையின் ஆசைக்காக வாழ்நாள் முழுவதும் மணம் முடிக்காமல் பிரம்மச்சாரியாக விரதம் மேற்கொள்வேன் என்று சபதம் மேற்கொண்டு, அதனை நிறைவேற்றியவர். காலச் சூழ்நிலையின் காரணமாக மகாபாரதப் போரில் கவுரவர்களின் படைகளுக்கு முதல் பத்து நாட்கள் தலைமை தாங்கி வழி நடத்தினார். 10-ம் நாளில் அர்ச்சுனனின் அம்பால் வீழ்த்தப்பட்டார். ‘விரும்பும் போது உயிர் பிரியும்’ என்ற வரத்தை பீஷ்மர் பெற்றிருந்ததால், அவர் உயிர் பிரியும் வரை, ஒரு அம்புப் படுக்கையை உருவாக்கி அதில் அவரை படுக்க வைத்திருந்தான், அர்ச்சுனன்.

    அஸ்வத்தாமா

    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் கல்வி, போர் திறன் களைக் கற்றுக்கொடுத்த குரு, துரோணாச்சாரியார். அவரது மகன் தான் அஸ்வத்தாமா. இவன் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன் ஆவான். பிறந்த பொழுது இவனது அழுகை, குதிரையின் குரலை போன்று இருந்தது. அதன் காரணமாக ‘அஸ்வத்தாமா’ என்று பெயர் பெற்றான். குதிரையின் வலிமையைப் பெற்றவன் என்பதாலும் இந்தப் பெயர் வந்ததாக ஒரு சாரார் சொல்வார்கள். கவுரவர்களுக்காக போர்க்களத்தில் ஒரு பகுதி படைக்கு தலைமை தாங்கி போரிட்டவன் அஸ்வத்தாமா. அவன் போரில் இறந்ததாக துரோணாச்சாரியாரை நம்ப வைத்து, அவரை பாண்டவர்கள் கொன்றனர். அதற்கு பழிவாங்கும் விதமாக திரவுபதியின் ஐந்து மகன்களையும் அஸ்வத்தாமா கொன்றான்.

    ஐராவதம்

    பெருமதிப்பு பெற்ற ஐராவதம் ஒரு யானையாகும். வெள்ளை நிறம் கொண்ட இந்த யானையானது, தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்டது. அதனை தேவர்களின் அரசனான இந்திரன் தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டான். ஐராவதம் யானை நான்கு தந்தங்களையும், ஏழு துதிக்கை களையும் கொண்டது.

    அகத்தியர்

    கும்பத்தில் இருந்து தோன்றியவர் அகத்தியர். குறுகிய வடிவம் கொண்டவர். அதனால் இவர் ‘குறுமுனி’ என்றும் அழைக்கப்படுகிறார். பாரதம் எங்கும் பயணம் செய்து தனது தவத்தின் வலிமையால், அவர் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஈசனிடம் இருந்து தமிழ் மொழியை அறிந்து கொண்டு, தமிழுக்கு இலக்கணம் அமைத்தவர் அகத்தியப் பெருமான். இதனால் அவர் தமிழ் இலக்கணத்தின் தந்தை என்று அறியப்படுகிறார். விந்திய மலைத் தொடரை வில்லாக வளைத்துக் காட்டிய ஆற்றல் மிகுந்தவர். குறுமுனியாக இருந்தாலும், கடலுக்கடியில் மறைந் திருந்த அசுரர்களை வெளிக்கொண்டு வருவதற்காக, கடல்நீர் முழுவதையும் குடித்து தனக்குள் அடக்கியவர். வேதம், ஜோதிடம், ஆயுர்வேதம் போன்றவற்றில் பெரும் பங்காற்றிய இவர், சித்த மருத்துவத்தில் முதன்மையானவராக அறியப் படுகிறார்.

    அட்சய பாத்திரம்

    இல்லை என்று சொல்லாமல் அளித்துக் கொண்டே இருப்பதற்கு ‘அட்சய பாத்திரம்’ என்று பொருள். பசி என்று வருவோருக்கு இல்லை என்ற சொல்லுக்கு இடமில்லாமல் வயிறு நிறைய உணவு வழங்குவதற்கு வழிவகை செய்யும் ஒரு பாத்திரம். தம்மை நாடிவரும் உயிர்களுக்கு தங்கு தடையின்றி உணவு வழங்க வேண்டும் என்று பாண்டவர்கள் விரும்பினர். அதனால் பாண்டவர்களின் மூத்தவரான தர்மர், சூரிய பகவானிடம் வேண்டிப் பெற்றதே அட்சய பாத்திரம். பாண்டவர்கள் வனத்தில் மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நேரத்தில், உணவுகளைப் பெறுவதற்காக சூரியபகவான் தர்மருக்கு இந்த அட்சய பாத்திரத்தை வழங்கியதாகவும் ஒரு கதை உண்டு. இது ஒரு அள்ள அள்ள குறையாத அமுத சுரபி.
    இந்து சமயத்தில் பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன. சில அரிய வழிபாட்டு தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    வலது பாத நடராஜர்

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள கேடிலியப்பர் ஆலயத்தில் நடராஜர், இடது காலை ஊன்று வலது காலை தூக்கி ஆடும் கோலத்தில் காட்சியளிக்கிறார். இறைவன் ஆடும் போது, பிரம்மா தாளம் போட, மகாவிஷ்ணு மத்தளம் வாசிக்க, லட்சுமி கைத்தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்கும் அரிய கோலம் இதுவாகும்.

    ராசிகள் மேல் தட்சிணாமூர்த்தி

    திருவாரூர் மாவட்டம் கழுகத்தூர் என்ற இடத்தில் ஜடாயுபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜசிம்மாசனத்தில் காட்சி அளிக்கிறார். இவரை வணங்கினால் 12 ராசிகளையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    துளசி ஏந்தும் பெருமாள்

    கும்பகோணம் அருகே உள்ளது இலந்துறை என்ற ஊர். இங்குள்ள சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் பத்ரி நாராயணன் சன்னிதி அமைந்துள்ளது. பத்ரிநாத்தில் இருப்பது போலவே, இங்குள்ள நாராயணரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலது கரம் அபயம் காட்டியபடியும், இடதுகரம் பாதங்களைக் சுட்டிக் காட்டியபடியும் இருக்கிறது. மற்ற இரு கரங்களில் ஒரு கையில் துளசி மணி மாலையும், மற்றொரு கையில் துளசிச் செடியையும் ஏந்தியிருக்கிறார்.

    தென்திசை துர்க்கை

    பொதுவாக வடதிசை நோக்கியபடியே துர்க்கை அம்மன் காட்சி தருவார். ஆனால் வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் தென்திசை நோக்கி அமர்ந்திருக்கும் துர்க்கை அம்மனை தரிசிக்க முடியும். இவரை மகிஷாசுரமர்த்தினி என்றும் அழைப்பார்கள்.

    முப்பழ விளக்கு

    கும்பகோணம் அருகே இலந்துறை அபிராமி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த அம்மனுக்கு மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களைக் கொண்டு நெய்விளக்கேற்றி ஆயுத வடிவில் மாவிளக்குகளை வைத்து அர்ச்சனை செய்கிறார்கள். இங்கு முப்பழ விளக்கு வழிபாடு என்பது மிகவும் பிரசித்திப் பெற்றதாக விளங்குகிறது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 6-ம் நாள் நேற்று காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 24-ந் தேதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் நெல்லையப்பர் சுவாமி, காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்து வருகிறது. விழாவின் 6-ம் நாள் நேற்று காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    காலை அம்பாள் வெள்ளி சப்பரத்தில் உள் பிரகாரத்தில் வீதி உலா வருதல், இரவு 8 மணிக்கு அம்பாள் வெளி பிரகாரத்தில் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வருதல் நடந்தது. டவுன் நான்கு ரதவீதியிலும் சுற்றி வந்து கோவிலை அடைந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். 
    நரசப்புரம் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் ஆலயத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மரிடம் மிக எளிதில் பக்தர்கள் செல்ல முடியாது என்று சொல்கிறார்கள். இவர் மனது வைத்தால்தான் இந்த தலத்திற்கு செல்ல முடியும்.
    ஓசூரில் இருந்து தர்மபுரி வரை 30 லட்சுநரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. இதில் 8 ஆலயங்கள் மிக பழமையான தொன்மை சிறப்பு கொண்டவை. இந்த ஆலயங்களுள் ஓசூரில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவில் அத்திமுகம் என்ற ஊர் அருகே உள்ள நரசப்புரம் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் ஆலயம் தனித்துவம் கொண்டது. இந்த ஆலயம் சுமார் 1500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும்.

    இந்த ஆலயத்து நரசிம்மர் சம்மத நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் இவர் மிகுந்த சிறப்பு வாய்ந்தவர். இவரிடம் மிக எளிதில் பக்தர்கள் செல்ல முடியாது என்று சொல்கிறார்கள். இவர் மனது வைத்தால்தான் இந்த தலத்திற்கு செல்ல முடியும்.

    இந்த தலத்தில் சுவாதி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தால் வேண்டியதை தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக திருமணம் கைகூடும் தலமாக இது திகழ்கிறது. ஓசூரில் இருந்து இந்த கோவிலுக்கு 48, 33 ஆகிய எண்கள் கொண்டு டவுண் பஸ்கள் செல்கின்றன.

    ராமேசுவரம் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக் கிணறுகள் பூஜைகளுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வந்தன. பக்தர்கள் புனித நீராடினர்.
    அகில இந்திய புண்ணியதலமாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு பின்னர் கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடுவது வழக்கம். இந்த நிலையில் கோவிலுக்குள் அமைந்துள்ள 1-வது தீர்த்தமான மகாலட்சுமி தீர்த்தம் முதல் 6 தீர்த்தம் வரை மிகவும் குறுகலான பாதையில் அமைந்திருந்தன.

    இதையடுத்து ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடும் வகையில் வசதிகள் செய்ய வேண்டும். குறுகலான இடத்தில் அமைந்துள்ள 1 முதல் 6 தீர்த்தக்கிணறுகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து கோவிலின் 2-ம் பிரகாரத்தின் வடக்கு பகுதியில் புதிதாக 6 தீர்த்தக் கிணறுகள் தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்தன.

    இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது தீர்த்தக் கிணறுகளை இடமாற்றம் செய்வதற்கு அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இடமாற்றம் செய்வது ஆகம விதிக்கு எதிரானது எனவே இடமாற்றம் செய்யக்கூடாது என்று கோவில் இணை ஆணையரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். இதையடுத்து கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி அவர்களை சமரசம் செய்தார். இதையடுத்து இதையடுத்து அனைவரும் அமைதியாக கலைந்துசென்றனர்.

    அதனை தொடர்ந்து நேற்று யாகசாலை பூஜைகள் நடைபெற்று பிச்சை குருக்கள் தலைமையில் கோவில் குருக்கள் 5 பேர் யாகசாலையில் இருந்து புனித நீர் கலசத்தை தலையில் சுமந்து 3-ம் பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர் புதிய தீர்த்தக் கிணறுகளுக்கு வந்து அதில் புனித நீரை ஊற்றி பிரதிஷ்டை செய்தனர். புதிய தீர்த்தக் கிணறுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோவில் தக்கார் குமரன் சேதுபதி, ராணி லட்சுமி நாச்சியார், கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் அண்ணாதுரை, செல்லம், கண்ணன், கலைச்செல்வன், கமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் இந்த புதிய தீர்த்தக்கிணறுகளில் பக்தர்கள் நீராடலாம் எனவும், யாத்திரை பணியாளர்கள் இவற்றில் இருந்து நீர் இரைத்து பக்தர்கள் மீது ஊற்றலாம் என்றும் இணை ஆணையர் மங்கையற்கரசி தெரிவித்தார். மேலும் பழைய தீர்த்தக்கிணறுகள் உடனடியாக மூடப்பட்டன. ஆனால் இணை ஆணையர் தெரிவித்தும் யாத்திரை பணியாளர்கள் புதிய தீர்த்தக் கிணறுகளில் நின்று தண்ணீர் ஊற்றமாட்டோம் என்று தெரிவித்தனர். அதன் பின்னர் இணை ஆணையர் தலைமையில் யாத்திரை பணியாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது சங்க தலைவர் பாஸ்கரன், கோவிலில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் எழுத்துபூர்வமாக எங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு யாத்திரை பணியாளர்கள் சங்கத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதில்லை. புதிய தீர்த்தக் கிணறுகள் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கும் எங்களை அழைக்கவில்லை.

    புதிய தீர்த்தக் கிணறுகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், அதில் யாத்திரை பணியாளர்கள் தீர்த்தம் எடுத்து பக்தர்களுக்கு ஊற்ற வேண்டும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் தான் யாத்திரை பணியாளர்கள் அங்கு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார். அதற்கு இணை ஆணையர் இது ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இடநெருக்கடியை சமாளிக்கவும், பக்தர்கள் வசதிக்காகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால் இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதனால் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை புதிய தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராட வந்தும் யாத்திரை பணியாளர்கள் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். தொடர்ந்து இணை ஆணையர் யாத்திரை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து அந்த தீர்த்தக் கிணறுகளில் யாத்திரை பணியாளர்கள் நின்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர். தற்போது மகாலட்சுமி தீர்த்தம் தவிர மற்ற 5 தீர்த்தங்கள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
    தமிழ்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 8-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.
    தமிழ்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 8-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.

    7 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் போது, தினசரி சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    6-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்றைய தினம் மதியம் 3 மணிக்கு மேல் மலைக்கொழுந்து அம்மனிடம் விசேஷ பூஜைக்கு பின்பு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், பின்னர் சின்னக்குமாரர், வில்-அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட அயுதங்களுடன் வீரபாகு, நவவீரர்களுடன் சேர்ந்து போருக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    அதன் பின்னர் மலைக் கோவிலில் நடை அடைக்கப்படும். தொடர்ந்து சின்னக்குமாரர், தங்க சப்பரத்தில் எழுந்தருளி பாதவிநாயகர் கோவில் வந்து அடைதல் நிகழ்ச்சியும், பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பாதவிநாயகர் கோவில் வந்தடையும் நிகழ்ச்சியும் நடைபெறும். அதனை தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலில் குழந்தை வேலாயுத சுவாமியிடம் சக்திவேல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் சக்திவேல் பாதவிநாயகர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு பெரிய தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரரிடம் வைத்து தீபாராதனை நடத்தப்பட்டு போருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.

    மாலை 6 மணிக்கு மேல் அடிவாரம் வடக்கு கிரிவீதியில் யானைமுக சூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோப சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும். முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளலும், சின்னக்குமாரர் சந்திப்பும், தீபாராதனையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவும் இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவில் சம்ரோஜனை பூஜைக்கு பின்பு ராக்கால பூஜையும் நடைபெறும்.

    விழாவின் 7-ம் திருநாளான வருகிற 14-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் இணை ஆனையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    மிகவும் பழமையான ஆலயங்களில் சோடச உபசார பூஜைகள் மிகவும் விரிவாக, அழகாக நடத்தப்படுகிறது. அந்த பதினாறு வகை பூஜைகள் பின்வருமாறு.
    கடவுளுக்கு பதினாறு விதமான உபசார பூஜைகள் செய்ய வேண்டும். இதற்கு சோடச உபசாரம் என்று பெயர். சோடசம் என்றால் பதினாறு ஆகும். உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களும், இன்பமாக வாழ்ந்து இறுதியில் முக்தி பெற வேண்டும் என்ற அடிப்படையில், ஆகம விதிகளின்படி சோடச உபசார பூஜைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதிசங்கரர் இந்த பூஜை முறைகளை எளிமைப்படுத்தினார்.

    சில ஆலயங்களில் ஆவாகனம் முதல் புஷ்பதானம் வரை பத்து வித பூஜை மட்டும் செய்வார்கள். இதற்கு தச உபசாரம் என்று பெயர். சில இடங்களில் நீர்சாரம், ஜலீயோ உபசாரம், தைஜசோ உபகாரம், வாயவீயோ உபசாரம், நாதசோ உபசாரம், பஞ்ச உபசாரம் என்றெல்லாம் பூஜைகள் நடத்தப்படுவதுண்டு.  ஆனால் சோடச உபகார பூஜையே மிகவும் சிறப்புடையது. முழுமையானதும் கூட.

    இந்த பூஜைகளை தொடங்கும் முன்பு பூஜை செய்பவர் தன் உடம்பை சுத்தப்படுத்தும் ஆத்ம சுத்தி, கருவறையை சுத்தப்படுத்தும் ஸ்தான சுத்தி, பூஜை பாத்திரங்களை சுத்தப்படுத்தும் திரவிய சுத்தி, அந்தந்த மூர்த்திக்குரிய மூல மந்திரத்தை ஜெபிக்கும் மந்திர சுத்தி, விக்கிரகத்தை சுத்தப்படும் லிங்க சுத்தி ஆகியவற்றை செய்ய வேண்டும். அதன்பிறகே சோடச உபகார பூஜையைத் தொடங்க வேண்டும்.

    மிகவும் பழமையான ஆலயங்களில் சோடச உபசார பூஜைகள் மிகவும் விரிவாக, அழகாக நடத்தப்படுகிறது. அந்த பதினாறு வகை பூஜைகள் வருமாறு:-

    1. ஆவாகனம்: இறைவனை வரவழைத்து விக்கிரகத்தில் எழுந்தருள செய்வதே ஆவாகனம் எனப்படும். ஜீவ சைதன்யத்தை மூலாதரத்தில் இருந்து மேலே ஏற்றுவதாக பாவித்து சங்கல்பம் செய்ய வேண்டும்.

    2. ஸ்தாபனம்: இறைவனை விக்கிரகத்தில் எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திப்பது ஸ்தாபனம் ஆகும்.

    3. சன்னிதானம்: நாம் பூஜிக்கும் மூர்த்தி, நமக்கு அனுக்கிரகம் செய்வதற்காக நடத்தப்படும் பூஜைக்கு சன்னிதானம் என்று பெயர். இந்த பூஜையால் சிவத்தின் அருள் சுரந்து நம்மிடம் நிறைந்து நிற்கும்.

    4. சன்னி ரோதனம்: இறைவா என்னிடம் என்றும் கருணையோடு இருக்க வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்வதற்கு சன்னிரோதனம் என்று பெயர்.

    5. அவகுண்டனம்: கருவறை மூலவர் விக்கிரகத்தை சுற்றி கவச மந்திரத்தால் மூன்று கவசம் உண்டாக்க வேண்டும். மூலவர் பூஜைக்கு தடைகள் வராமல் மந்திரத்தால் அதனை மூட வேண்டும். இதற்காக ஆகம விதிப்படி சோடிகா முத்திரை, காளசண்டீ முத்திரை ஆகிய முத்திரைகளை பூஜை செய்பவர்கள் செய்தல் வேண்டும்.

    6. அபிஷேகம்: எண்ணெய், மாப்பொடி, நெல்லி முள்ளி, மஞ்சள் பொடி, பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், பால், தேன், தயிர், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம், பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம், பத்ரோதகம், கும்போதகம் ஆகியவற்றை வரிசைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும். அப்போது தேனு முத்திரை காட்டப்படுதல் வேண்டும். கை விரல்களால் பசுவின் மடி நான்கு காம்போடு இருப்பது போல காட்டுவது தேனு முத்திரையாகும். அப்போது இறைவன் இவ்விடத்தில் அமர்ந்து எங்கள் பூஜையை ஏற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

    7. பாத்தியம்: சந்தனம், அருகு, வெண்கடுகு, விலாமிச்சை இந்த 4 பொருட்களையும் பாத்திய நீரில் கலந்து சுவாமி பாதத்தில் இட வேண்டும். ஆன்மாக்களாகிய நாம் சிவபதம் அடையவே இந்த பாத்தியம் கொடுக்கப்படுகிறது. அப்போது, நம என்பதோடு கூடிய இருதய மந்திரம் சொல்ல வேண்டும்.

    8. ஆச மனீயம்: ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நாவல்பழம், ஜாதிக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி நிரப்பி இறைவன் பாதத்தில் வைக்க வேண்டும். அப்போது சம்கிதா மந்திரம் சொல்ல வேண்டும். ஆன்மாக்கள் பரமாத்மாவின் முகத்தில் சேர்த்தல் என்ற பாவத்தில் இந்த பூஜை செய்யப்படுதல் வேண்டும்.

    9. அர்க்கியம்: எள், நெல், தர்ப்பை, நுனி, தண்ணீர், பால், அட்சதை, வெண்கடுகு, யவை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி அர்க்கியம் கொடுக்க வேண்டும் மூல மந்திரத்துடன் ஸ்வாகா என்ற மந்திரம் சேர்த்து சொல்ல வேண்டும். அபிஷேகம் ஆரம்பம் - முடிவு, நைவேத்தியம் ஆரம்பம் - முடிவு, தூபம் தீபம் ஆரம்பம் - முடிவு, பூஜைகள் ஆரம்பம் - முடிவு ஆகிய சமயங்களில் அர்க்கியம் கொடுக்க வேண்டும்.

    10. புஷ்பதானம்: அழகான பூக்கள், மலர்களால் இறைவனை அலங்கரிக்க வேண்டும். மலர் அலங்காரத்தில் கடவுளை ரசித்துப் பார்க்க வேண்டும். செண்பகம், அருகு, புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிரகதி, அரளி, தும்பை ஆகிய 8 வகை பூக்களுடன் அட்சதை சேர்த்து மூல மந்திரத்துடன் வெளவுட் என்ற மந்திரம் உச்சரித்து மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். இது பேரின்ப வீட்டை அடைய செய்யும். சுவாமிக்கு பத்மாசனத்தில் ஆவாகனமும், ஆனந்த சயனத்தில் அபிஷேகமும், விமலாசனத்தில் அர்ச்சனையும், யோகாசனத்தில் நைவேத்தியமும், சிம்மாசனத்தில் வஸ்திர சமர்ப்பணமும் செய்ய வேண்டும்.
     
    11. தூபம்: கருவறை மூலவருக்கு சாம்பிராணி புகை போட்டு வழிபடுவதே தூபம் எனப்படும். இது நமது அஞ்ஞானத்தை கிரியா சக்தியால் அகற்றலாம் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. அகில், கீழாநெல்லி, சாம்பிராணி, குங்கிலியம் ஆகியவை சிறந்த தூபப்பொருட்களாகும். தூபம் போட்டு இறைவனை வழிபட்டால் பாபம் விலகும் என்பது ஐதீகமாகும். தூபம் காட்டும் போது, ஹிருதய மந்திரத்துடன் ஸ்வாகா என்பதை கடைசியில் கொண்டதாக உச்சரிக்க வேண்டும். மூலவருக்கு தூபம் காட்டும் போது, அவர் மூக்குக்கு நேராக காட்ட வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    12 தீபம்: சோடச உபசாரங்களில் தீபம் காட்டுவது என்பது மிக, மிக முக்கியமானது. சுமாமிக்கு தீபம் காட்டப்படும் போது வழிபட்டால் நம்மிடம் உள்ள ஆணவம் நீங்கி, ஞானம் பெற முடியும். தீபம் ஏற்ற பசு நெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. துணி, பஞ்சு இவைகளில் திரி செய்து தீபம் ஏற்றலாம். தீப வழிபாடு ஞான சக்தியை அதிகரிக்க செய்யும். மூலவருக்கு தீபம் காட்டும் போது கண்ணுக்கு நேரில் காட்ட வேண்டும். தீப முத்திரை காட்டிய பிறகு மணி அடித்து, மந்திரங்கள் சொல்லியபடி மூலவரின் கிரீடம் முதல் பாதம் வரை தீபம் காட்டப்படுதல் வேண்டும்.

    13. நைவேத்தியம்: சுத்த அன்னம், பாயசம், பொங்கல் ஆகியவை சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்க ஏற்றவையாகும். மனிதர்களின் சராசரி குணமாகிய ஆசை, கோபம், மோகம் போன்றவைகளை நாம் அன்னமாக வேக வைத்து இறைவனுக்கு சமர்ப்பிதையே இது காட்டுகிறது. இறைவனின் 5 முகங்களில் சத்யோஜாதம் முகத்துக்கு எள் அன்னம், வாமதேவத்துக்கு சர்க்கரை அன்னம், அகோரத்துக்கு பாயாசம், தத்புருஷத்துக்கு சுத்த அன்னம், ஈசானத்துக்கு பொங்கல் படைப்பது மிகவும் விசேஷமாகும். இது தவிர ஒவ்வொரு ஆலயத்திலும் இறைவனுக்கு பிடித்த நைவேத்தியம் மாறுபடும். காய்கறி உணவு வகைகள், பாயாசம், வடை, இனிப்புகள் படைப்பது பொதுவானதாக உள்ளது. இறைவனுக்கு நாம் நைவேத்தியம் படைப்பதால் உலகில் சுபீட்சம் ஏற்படும்.

    14. பானீயம்: இறைவன் குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். அது பானீயம் எனப்படும். இதனால் நமது மனதில் உள்ள இவ்வுலக பற்று நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    15. ஜெப சமர்ப்பணம்: இறைவனின் மூல மந்திரத்தை 108 தடவை சொல்லி, அதை ஈஸ்வரனுக்கு சமர்ப்பணம் செய்வதே ஜெப சமர்ப்பணம் என்றழைக்கப்படுகிறது. ஜெபம், பூஜை ஹோமம் ஆகிய எல்லா புண்ணியைச் செயல்களையும் இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இறைவன் அதை ஏற்றுக் கொண்டு நமக்கு முக்தி தருவார். பூஜை முறைகளில் நம்மையும் அறியாமல் ஏற்படும் குற்றம், குறைகளை நிவர்த்தி செய்ய இந்த ஜெப சமர்ப்பணம் உதவுகிறது. ருத்ராட்ச மணி கொண்டு மூல மந்திரம் சொல்லி சம்கிதா மந்திரத்தால் முறைப்படி கவசம் செய்து அர்க்கிய தண்ணீரை ஈசனின் வலக்கையில் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

    16. ஆரத்தி: மேள, தாளம் முழங்க, மணி அடித்து ஆரத்தி காட்டப்பட வேண்டும். ஆரத்திக்கான தீபத்தில் பூ போட்டு பார்த்தல், தண்ணீர் தெளித்தல், தட்டுதல், மந்திரம் சொல்லி சுற்றுதல் என்ற 4 வகைகளை செய்தல் வேண்டும். இறைவனுக்கு தீபம் காட்டும் போது முகம், கண், மூக்கு, கழுத்து, மார்பு, கால்கள் என வரிசையாக 3 தடவை சுற்றி காட்டுதல் வேண்டும். தீபத்தில் 16 வகை உள்ளது. பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகிய மூன்றையும் காக்கவே மூன்று தடவை தீபாரதனை காட்டப்படுகிறது.

    இப்படி 16 வகை உபசாரங்கள் ஆகமங்களில் வகுத்து வைக்கப்பட்டிருந்தாலும் எல்லா ஆலயங்களிலும் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், ஆராதனை, உற்சவம் என்ற அடிப்படையில் 6 வகையான உபச்சாரங்களே செய்யப்படுகின்றன. 
    கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

    சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன்? திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை ‘சக்கரத்தாழ்வார்’ என்பர். பக்தர்களின் துன்பம் தீர்க்க திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார். தாயின் கருவில் இருந்து வராததால், இந்த அவதாரத்தை ‘அவசரத் திருக்கோலம்’ என்பர்.

    ‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர். துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு. இதன் அடிப்படையில் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள்.

    கடலிலோ, புண்ணிய நதிகளிலோ புனித நீராடும்போது, சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கடலிலோ, புண்ணிய நதிகளிலோ புனித நீராடும்போது, ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக்கூடாது. உடுத்தியிருக்கும் ஆடையின் மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும்.

    தீர்த்தத்தில் மூழ்குவதற்கு முன், வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இடுப்பு வரையில் தண்ணீரில் நனையும்படி நிற்க வேண்டும்.

    மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து ஆசமனம் (சிறிதளவு குடித்தல்) செய்ய வேண்டும். பின்பு புரோட்சணம் (தலையில் சிறிதளவு தெளித்தல்) செய்யவேண்டும்.

    முதல் முறை மூழ்கும்போது கண்கள், காதுகள், மூக்குத் துளைகளை கைகளால் மூடி மூழ்க வேண்டும்.

    இரவில் தீர்த்த நீரில் மூழ்கக் கூடாது; சிவராத்திரி, சந்திர கிரகணம் ஆகிய நாட்களில் மட்டும் இரவு நீராடலாம்.
    பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு வந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூக தீர்வு ஏற்படுகிறது.
    திருப்பூர் மாவட்டம் அவினாசி - புளியம்பட்டி மெயின் ரோட்டில் 14-வது கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வலது புறகிளை ரோட்டில் 3 கி.மீ தொலைவில் உள்ள மங்கரசு வளையபாளையம் ஊராட்சி தாளக்கரையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவில் 8-ம் நூற்றாண்டில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள பரிக்கல், பூவரசம் குப்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள கோவில்களில் நரசிம்ம பெருமாள் மடியில் லட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால் தாளக்கரையில் லட்சுமி நரசிம்மர் தனித் தனியே நின்ற வண்ணம் காணப்படுகிறார். நரசிம்மர் கோரை பற்களுடன் நாக்கு தொங்கிய கோலத்திலும் கையில் சங்கு சக்கரமும் காலில் ஸ்ரீ சக்கரமும் இருந்தாலும் நின்ற கோலத்திலேயே நரசிம்மர் சாந்த சொரூபமாக உள்ளார்.

    மூலஸ்தானத்தில் நரசிம்மர் கையில் சங்கு, சக்கரத்துடன் சாந்த மூர்த்தியாக சந்திர விமானத்தின் கீழ் அருளுகிறார். மூலஸ்தானத்தில் சுவாமி, மகாலட்சுமி, இருவருமே நின்ற கோலத்தில் இருப்பது விசேஷமான அமைப்பு. நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்கரம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் சாளக்கிராமம் இருக்கிறது. இந்த சாளக்கிராமமே முதலில் நரசிம்மராக வழிபடப்பட்டுள்ளது. எனவே இதனை ஆதி மூர்த்தி என்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு முன்புறம் ஓடை உள்ளது. முற்காலத்தில் எப்போதும் வற்றாத ஜீவ நதியாக இந்த ஓடை திகழ்ந்துள்ளது. தாளம் என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே இத் தலம் தாளக்கரை என்று அழைக்கப்படுகிறது. சாமியின் ஈசாணி மூலையில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் இன்று வரை நீர் வற்றியதில்லை. இந்த குளத்திற்குள் தங்க தேர் இறங்கியதாக வரலாறு கூறுகிறது.

    சேர, சோழ, பாண்டியர் காலத்தில் தோன்றிய இக்கோவிலில் நரசிம்மர் அருளால் தடைபடும். திருமணம், புத்திர பாக்கியம், தொழில், கடன் நிவர்த்தி, மன நிலை பாதிப்பு, பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட இக்கோவிலுக்கு வந்து பக்தர்கள் துளசிமாலை, எலுமிச்சை கனி ஆகியவற்றை சுவாமியின் முன் வைத்து பிரார்த்தனை செய்தால் அவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூக தீர்வு ஏற்படுகிறது.

    சொர்க்கவாசல் வழியாக (பரமபதம்) பக்தர்கள் வருவது போல் இக் கோவில் அமைய பெற்று உள்ளது. பக்தர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கிறது.
    ராமேசுவரம் கோவில் புதிய தீர்த்தங்களுக்கு இன்று காலை பூஜைகள் நடந்தன. நாளை முதல் இந்த தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    தென்னிந்தியாவின் காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும் என்பது நம் பிக்கை.

    இதன் காரணமாக நாடு முழுவதும் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கானோர் வருவார்கள்.

    பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் 22 புனித தீர்த்த கிணறுகள் உள்ளன. இங்கு நீராடினால் பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து திரளான பக்தர்கள் நீராடுவார்கள்.

    இந்த புனித தீர்த்தங்களில் 6 தீர்த்த கிணறுகள் மிகவும் குறுகலான பாதையில் இருந்தது. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். சிலருக்கு காயமும் ஏற் பட்டது.

    இதையடுத்து நெருக்கடியான இடத்தில் உள்ள 6 புனித தீர்த்த கிணறுகளை மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு சவுகரியமான இடத்தில் 6 புனித தீர்த்த கிணறுகளை மாற்ற உத்தரவிட்டது.

    கடந்த சில மாதங்களாக கோவிலின் வடக்கு பகுதியில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கிணறு தோண்டும் பணி நடந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.

    புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்த கிணறுகளுக்கு மகாலட்சுமி, சரஸ்வதி, கங்கா, யமுனா, சங்கு, சக்கரம் என பெயரிடப்பட்டுள்ளது.

    புதிய தீர்த்தங்களுக்கு இன்று காலை கோவிலில் கணபதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்பாள்-சுவாமி புனித தீர்த்தத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாளை (28-ந்தேதி) 2-ம் கால யாகசாலை பூஜை முடிந்த பின் பக்தர்கள் புனித தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×