search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழா தொடங்கியது. இவ்விழா வருகிற 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
    புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழா. புஷ்கரம் என்றால் தீர்த்தகுரு, ஆதிகுரு என்று பொருள்படும். புஷ்கர திருவிழா ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்தந்த ராசிகளுக்கு உரிய நதிகளில் நடைபெறுவது ஆகும். மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான, பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கரமானவர் குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்வதாகவும், குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு இடம் பெயரும் போது துலா ராசிக்கு உரியவரான காவிரி நதியில் புஷ்கரமானவர் 12 நாட்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    அதன்படி, காவிரி மகாபுஷ்கரம் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஸ்ரீரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவிற்காக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே உள்ள மாமுண்டி கோனார் திடலில் கடந்த 12-ந் தேதி யாகசாலை பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. பின்னர் அங்கு யாகசாலை மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டது.

    காவிரி புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் தொடக்க நாளான நேற்று மண்ணச்சநல்லூரை அடுத்த கோபுரப்பட்டியில் இருந்து கல்யாண உற்சவர்கள் ஆதிநாயகப்பெருமாள், தாயாருடன் ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வழியாக மாமுண்டி கோனார் திடலில் உள்ள யாகசாலைக்கு வந்தடைந்தனர். பின்னர் காலை 5.45 மணிக்கு கோ-பூஜை, காலை 6 மணிக்கு விஷ்வக்சேன யாகம், காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம், மாலை 3.30 மணிக்கு ஹரி நாம பஜனை நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு துலா மாத ஆரத்தி நடைபெற்றது. பின்னர் யாகசாலை திடலில் மாலை 6.15 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழா நடைபெறும் 4 நாட்களும் மாலை காவிரி தாய்க்கு துலா மாத ஆரத்தி மற்றும் மகான்களின் ஆசிஉரைகளும் பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
    மகா புஷ்கர விழாவையொட்டி முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினார்கள்.
    தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் வரலாறு காணாத பக்தர்கள் வருகை தந்தனர்.

    நேற்று சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாள் என்பதால் அதற்குரிய ராசிக்காரர்களும், விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்ததால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

    அதிகாலை 4 மணிக்கே பக்தர்கள் முறப்பநாடு காசி தீர்த்தகட்டத்துக்கு வந்து நீராடி கைலாசநாதரை வணங்கினர்.

    முறப்பநாடு பஸ் நிறுத்தத்தில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ வசதி நேற்று இல்லை.

    எனவே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் நடந்து வந்து நீராடினர். கைலாசநாதர் கோவிலிலுக்குள் தரிசனம் செய்பவர்கள் கோவிலை சுற்றி சுமார் 1 கிலோ மீட்டருக்கு நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காமாட்சிபுரம் ஆதீனம் ஞானக்குரு சாக்த ஸ்ரீசிவலிங்கேசுவர சுவாமிகள் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் நீராடினர்

    தொடர்ந்து முறப்பநாட்டில் அதிருத்ர பெருவேள்வி நடைபெறுகிறது. அதில் 121 வைதீயர்கள் ருத்ர பாராயணம் செய்தனர். மாலை 5.30 மணிக்கு நதிக்கு சிறப்பு ஆராத்தி காட்டப்பட்டது. 6.30 மணிக்கு தாமிரபரணி ஈசுவரம் அறநிலை துறை சார்பாக நதிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.

    நெல்லை, தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதை வழியாக மாற்றி விடப்பட்டது.

    அதேபோல் ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள படித்துறை, ஆழ்வார்திருநகரி சங்கு படித்துறை, குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் படித்துறை, மங்களகுறிச்சி, ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் படித்துறை, சுந்தர விநாயகர் கோவில் படித்துறை, வாழவல்லான், உமரிக்காடு, முக்காணி வெங்கடேச பெருமாள் கோவில் படித்துறை, ராம பரமேசுவரர் கோவில் படித்துறை, சேர்ந்தபூமங்கலம் கைலாசநாத சுவாமி கோவில் படித்துறை, சங்கமம் படித்துறை போன்றவற்றில் காலையில் யாகசாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து திரளான பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடினர். 
    மகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நெல்லை திணறியது. இதையொட்டி பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இந்த விழா நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள், படித்துறைகளில் பகல் நேரத்தில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் தாமிரபரணிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    இந்த விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நெல்லைக்கு வந்து புனித நீராடி வருகிறார்கள்.

    நேற்று 11-வது நாள் விழா தாமிரபரணி படித்துறைகளில் நடந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சியம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், கைலாசபுரம் தைப்பூச மண்டபம், நெல்லை மணிமூர்த்தீசுவரம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயு படித்துறைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் அம்பை, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், அத்தாளநல்லூர் உள்ளிட்ட படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தாமிரபரணி ஆற்றில் நேற்று காணும் இடமெல்லாம் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது.

    வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் நெல்லை மாவட்டத்தில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பாபநாசத்தில் அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புஷ்கர விழா இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் நடைபெறும் விழா நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது.

    பாபநாசத்தில் அகில பாரத துறவியர் சங்கம் சார்பில், சேனைத் தலைவர் மண்டபத்தில் தினமும் தாமிரபரணி புஷ்கர விழா நிகழ்ச்சிகள், மாநாடுகள் நடைபெற்று வருகிறது. பாபநாசம் படித்துறை இந்திர தீர்த்தத்தில் தினமும் மாலையில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடக்கிறது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கண்டுகளிக்கின்றனர். பாபநாசத்தில் நேற்று அதிகாலை 3 மணி முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை போலீசார் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தி விட்டு, அரசு பஸ்களில் மட்டுமே அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் கோவிலுக்கு அருகே நீண்ட வரிசையில் நின்று படித்துறை இந்திர தீர்த்தக்கட்டத்தில் நீராடினர். பின்னர் கோவிலுக்குள் சென்று சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

    நேற்று காலை பாபநாசம் ராஜேசுவரி மண்டப படித்துறையில் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குளித்து கொண்டிருந்தனர். அவர்களை திடீரென தண்ணீர் இழுத்து சென்றது. உடனே அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் அதிக அளவில் புனித நீராட குவிந்ததால் நெல்லை திணறியது.

    தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு வெளிமாவட்டம், பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ்கள், ரெயில்களில் நெல்லை வந்தனர். சில பக்தர்கள் வெளியூர்களில் இருந்து தனி வேன், கார்களில் வந்துள்ளனர். இதனால் நேற்று நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் பகுதியில் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து நெல்லை வந்த பஸ்கள், லாரிகள், கார்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதாவது நெல்லை டவுன் தொண்டர் சன்னதியில் இருந்து, நயினார்குளம் ரோடு வழியாக, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை வழியாக நெல்லை புதிய பஸ் நிலையம் சென்றனர். காலை முதல் இரவு வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெல்லை ரெயில் நிலையத்தில் நேற்று வந்த அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிந்தன. முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலையில் வெளியூர் சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிளாட்பாரங்கள் முழுவதும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 
    ஞானம், தெளிவு பிறக்கவும், கல்வியிலும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெறவும், வாணியம்மைபாடி ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    சத்தியலோகத்தில் இருக்கும் பிரம்மனுக்கும், சரஸ்வதிக்கு ஒரு முறை வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ‘வாக்கு’ என்னும் கல்விக்கு அதிபதி என்ற கர்வம் சரஸ்வதியிடம் காணப்பட்டது. இதனால் பேசும் சக்தியை இழக்கும்படி சரஸ்வதிக்கு பிரம்மன் சாபம் கொடுத்தார்.

    தன் தவறை எண்ணி வருந்திய சரஸ்வதி, பூலோகத்தில் வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் (திருமறைக்காடு) சென்று அங்குள்ள ஈசனை நோக்கி தவமிருந்தாள். பின்னர் அத்தல அம்பாளிடம் யாழ் இசைத்து காண்பிக்க வந்தாள். அப்போது அம்பாளின் குரல், தன் யாழில் இருந்து வெளிப்பட்ட இசையை விட இனிமையாக இருப்பதைக் கண்டு, யாழை மூடிவைத்து விட்டாள். இதனால் தான் வேதாரண்யத்தில் உள்ள இறைவியின் பெயர் ‘யாழைப் பழித்த மென்மொழியாள்’ என்றானது.

    தன்னைப் பிரிந்து சென்ற சரஸ்வதியைத் தேடி பூலோகம் வந்தார் பிரம்மன். தவத்தில் இருந்த சரஸ்வதியை சமாதானம் செய்து, வாணியம்பாடி தலத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் வழிபட்டதன் பயனாக சரஸ்வதிக்கு பேசும் சக்தி வந்தது. மேலும் அங்குள்ள ஹயக்ரீவன் முன்னிலையில் யாழை மீண்டும் சரஸ்வதி இசைக்க இறைவனும், இறைவியும் அருள்புரிந்தனர். இதையடுத்து சரஸ்வதி இனிய கீதம் இசைத்தாள்.

    சரஸ்வதிக்கு வாணி என்ற பெயரும் உண்டு. வாணி பாடிய தலம் என்பதால், அது ‘வாணியம்மைபாடி’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி ‘வாணியம்பாடி’ ஆனது.



    சரஸ்வதி பூஜையன்று இந்த தலத்தில் ஈசனையும், அம்பாளையும், கலைவாணியையும் முறையே ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால் கல்வியறிவு ஊற்றெடுக்கும் என்பது நம்பிக்கை. ஞானம், தெளிவு பிறக்கவும், கல்வியிலும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெறவும், உயர்பதவிகள் கிடைக்கவும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வேலூரில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும், ஜோலார்பேட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது வாணியம்பாடி.
    காசியே நெல்லை, தூத்துக்குடிக்கு வந்தது போன்று எங்கு பார்த்தாலும் ஆற்றின் கரைகளில் வடமாநில பக்தர்களை காண முடிகிறது. பக்தர்கள் நவ திருப்பதி, நவ கைலாய கோவில்களில் அதிகளவில் குவிந்துள்ளனர்.
    குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆனதை தொடர்ந்து அந்த ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த விழா கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகிறா ர்கள். பல்வேறு ஆன்மீக அமைப்புகள் புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடுகள், யாகங்கள், வேள்விகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.

    விழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.

    தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணியின் அனைத்து படித்துறைகளிலும் விழாக் கோலமாக காட்சியளிக்கின்றன. புஷ்கர விழா நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர். ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பாக அங்குள்ள திரிநதி சங்கம தீர்த்தத்தில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி இன்று காலை சிறப்பு வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து தாமிரபரணிக்கு வழிபாடு மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


    முறப்பநாட்டில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடைபெற்ற காட்சி.

    அகில பாரத துறவியர் சங்கம் சார்பாக பாபநாசத்தில் இன்று நடைபெற்ற விழாவில் காலை சிறப்பு வேள்வி நடந்தது. தொடர்ந்து அங்குள்ள சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் கிராம கோவில் பூஜாரிகள் மாநாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சி சங்கரமடம் சார்பாக திருப்புடைமருதூரில் நடைபெற்ற புஷ்கர விழாவில் இன்று காலை தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    முக்கூடல் அருகே அத்தாளநல்லூர் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கஜேந்திர வரத பெருமாள் கோவிலில் இன்று காலை புஷ்கர பூஜை நடந்தது. தொடர்ந்து பெண்கள் நாராயணியம் பாடினர். இதையடுத்து பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

    இதேபோல கல் லிடைக்குறிச்சி, அம்பை, சேரன்மகாதேவி தீர்த்தக்கட்டங்களிலும் தாமிரபரணியில் சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் நடந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் புஷ்கர விழாவை முன்னிட்டு இன்று காலை புரு‌ஷ ஸுக்த ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து திருப்புகழ் இசைவழிபாடு நடந்தது. கைலாசநாதர் கோவிலில் வேதபாராயணம், சங்கீதசபாவில் பண்ணிரு திருமுறை பாராயணம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாடு நடந்தது.

    அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள யாகசாலையில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

    முக்கூடல் அத்தாளநல்லூரில் தாமிரபரணிக்கு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்ட காட்சி.

    புஷ்கர விழாவையொட்டி படித்துறைகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் செய்யப் பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மற்றும் சாதனங்களுடன் ஆற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தாமிரபரணி நதிக்கு தினசரி மாலையில் காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகா ஆரத்தி நடந்து வருகிறது. இதனால் ஆரத்தியை காண பக்தர்கள் அதிகளவில் திரண்டு வருகிறார்கள். காசியே நெல்லை, தூத்துக்குடிக்கு வந்தது போன்று எங்கு பார்த்தாலும் ஆற்றின் கரைகளில் வடமாநில பக்தர்களை காண முடிகிறது. பக்தர்கள் நவ திருப்பதி, நவ கைலாய கோவில்களில் அதிகளவில் குவிந்துள்ளனர்.

    நவக்கிரகங்களில் அதிபதிகளுக்கு உரிய கோவில்களான சூரிய அம்சம் உள்ள பாபநாசம் சிவன் கோவில், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், சந்திரன் வழிபட்ட சேரன்மகாதேவி கைலாசநாதர் கோவில், நத்தம் விஹயாசன பெருமாள் கோவில், செவ்வாய் வழிபட்ட தலமான கோடகநல்லூர் சிவன் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் புதனுக்குரிய தென்திருபேரை கைலாசநாதர் கோவில், திருப்புளியங்குடி பெருமாள் கோவில், குரு பகவானுக்குரிய முறப்பநாடு கைலாசநாதர் கோவில், ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவில், சனி கிரகத்துக்குரிய பெருங்குளம் பெருமாள் கோவில், ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில், சுக்கிரனுக்குரிய சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில், தென்திருபேரை பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

    மேலும் ராகு கேது தலங்களான இரட்டை திருப்பதி பெருமாள் கோவில், ராஜபதி கைலாசநாதர் கோவில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் இந்த கோவில்களை தேடி கார், வேன்களில் சென்று சாமி ஹ்ரிசனம் செய்தார்கள். இது தவிர நெல்லையப்பர் கோவில், யரை தெட்சணாமூர்த்தி கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில், குற்றாலம் குற்றாலநாதர் கோவில், இலத்தூர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
    திருவேங்கடம் ஆலயத்தின் மதில் சுவற்றின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசயக் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளார். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    திருவேங்கடம் கோவிலின் இடப்பக்கத்திலே திருக்குளம் வெட்டும் பொழுது அங்கிருந்த ஒரு மரத்தில் முனீஸ்வரன் குடி கொண்டிருந்ததாகவும், மரத்தை வெட்டினால் முனிஸ்வரன் வெகுண்டு அத்தலத்திற்குத் தீங்கிழைத்து விடக் கூடுமாதலால், அம்முனீஸ்வரரைப் பாதமாகச் செதுக்கி அம்முனீஸ்வரருக்கு காவலாகத்தான் மூலைக்கெருடனை அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகின்றது. இச்செய்தி செவிவழிச் செய்தியாயினும், மூலைக்கெருட பகவானின் அபார சக்தியை நோக்குங்கால், உண்மை நிகழ்ச்சியாகத்தான் இருக்கக் கூடும் என எண்ணத் தோன்றுகிறது.

    எல்லாப் பெருமாள் கோவிலிலும் சன்னதி கருடன்தான் விசேடமாக ஆராதிக்கப்படுவார். ஆனால் இங்கு ஆலயத்தின் மதில் சுவற்றின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசயக் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளார். இருபுறமும் சிம்மங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். ஒவ்வொரு மாதமும், சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு 108 குடங்களில் திருமஞ்சனமும் பூஜைகளும் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று ‘மஹா சுவாதி’ என கருடனின் ஜென்ம நட்சத்திர வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
    பக்தர்களின் வேண்டுதல்களை அவ்வப்பொழுது நிறைவேற்றி வைக்கும் இவருக்குப் பக்தர்கள் சிதறு தேங்காய்களை அவர் அமர்ந்திருக்கும் மதில் சுவற்றில் உடைத்து நன்றி செலுத்துகின்றனர். இவரைத் தரிசித்து வழிபட் டால், ஏவல், பில்லி, சூனியம், மனவி யாதி அகலும். சத்ரு பயம் நீங்கி, வளம் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும். 
    காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. காரணம் பின்வருமாறு:-

    ராமர், ராவண வதம் செய்தபின் சேதுவில் சிவ பூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி ஏவினார்.

    அனுமார் காசியை அடைந்து பார்த்தார். எங்கும் லிங்கங்கள்; எது சுயம்பு லிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமார் அந்தச் சிவலிங்கத்தைப் பேர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

    காசியின் காவலராகிய காலபைரவர் அதுகண்டு கோபித்தார். “என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்?” என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும், அனுமாருக்கும் கடும் போர் நடந்தது.

    அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி, “உலக நன்மைக்காக இந்தச் சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொடுத்தனுப்பினார்.

    தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமாருக்குத் துணை புரிந்த கருடன் காசிநகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார்.

    அந்தச் சாபத்தின்படி இன்றும் கருடன் பறப்பதில்லை. பல்லி ஒலிப்பதில்லை.

    கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனை எந்த கிழமையில் வழிபட்டால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து பார்க்கலாம்.
    கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

    கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்.
    திங்கள்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும்.
    செவ்வாய்க்கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.

    புதன்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும்.
    வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.
    வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம். #Kulasekarapattinam #Dasara #Soorasamharam
    குலசேகரன்பட்டினம் :

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் பக்தர்கள் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனர்.

    ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். தசரா குழுக்களின் சார்பில் கரகாட்டம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதனால் தென் மாவட்டங்களில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் உள்ள சவுந்திரபாண்டிய நாடார்-தங்ககனி அம்மாள் கலையரங்கத்தில் தினமும் மாலையில் பக்தி சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை போன்றவையும், இரவில் பட்டிமன்றம், பாவைக்கூத்து, இன்னிசை நிகழ்ச்சி போன்றவையும் நடந்தது.

    10-ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை முதல் மதியம் வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் காத்து இருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த திரளான பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாரானான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்தார். பின்னர் யானையாகவும், சிங்கமாகவும், சேவலாகவும் அடுத்தடுத்து உருமாறி போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். பின்னர் கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.



    தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், குலசேகரன்பட்டினத்துக்கு வரும் சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டன. குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் பகுதியில் தற்காலிக பஸ் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து, கோவிலுக்கு சென்றனர்.

    குலசேகரன்பட்டினம் நகர எல்லையில் தசரா குழுவினர் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பக்தி கோஷங்களை எழுப்பியும் வந்தனர். வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர். பின்னர் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்ததை தரிசித்தனர். கடற்கரையில் தசரா குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கரகாட்டம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    பல்வேறு பகுதிகளில் இருந்தும் தசரா குழுவினர் குலசேகரன்பட்டினத்துக்கு விடிய, விடிய வந்த வண்ணம் இருந்தனர். குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையோரம் நீண்ட தூரத்துக்கு பக்தர்களின் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், சுமார் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    11-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன், கொடியிறக்கப்படும். பின்னர் அம்மன் காப்பு களைதல் நடைபெறும். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைவார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

    12-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர். #Kulasekarapattinam #Dasara #Soorasamharam

    குலசேகரன்பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது.
    அன்னை மகாசக்தி ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அருள்பாலிக்கிறாள். அந்த வகையில் குலசேகரன்பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது.

    பாண்டிநாடு முத்துடைத்து என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள் என்பது ஒரு கருத்து.

    பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள். கிராமங்களில் அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்துநோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் எனஅழைக்கப்படுகிறாள்.

    சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக்கிறது. உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பது போல உலக உயிர்களை மலக்கட்டு களிலிருந்து பிரித்துச் சீவன் முத்தர்களாக மாற்று கிறாள். இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.

    இப்படி முத்தாரம்மன் பெயர் தோன்றியதற்கு பல கதைகள் உள்ளன. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில், மற்ற பழைய கோவில்களை போல சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிட அமைப்புகளுடனோ அல்லது உயர்ந்த கோபுரங்கள் மற்றும் மாடவீதிகள் கொண்டதாகவோ அமையவில்லை. அந்த ஆலயம் மிகச்சிறிய ஆலயம்தான். ஆனால் முத்தாரம்மனின் அருளாட்சி வரையறுக்க முடியாத எல்லையாக பரவியுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் சாதி, மத வேறுபாடின்றி குலசை முத்தாரம்மனை குலதெய்வம் போல வழிபடுகின்றனர். அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குலசை முத்தாரம்மனின் நாமத்தை உச்சரிக்கத் தவறுவதில்லை.
    குலசேகரன்பட்டினம் தலத்தில் ஈசன் ஞானமூர்த்தீஸ்வராக மனித வடிவில் உள்ளார். அதுவும் அனைவரும் வியக்கும் வகையில் மீசையுடன் ஞானமூர்த்தீஸ்வரர் உள்ளார்.
    சென்னை திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி மீசையுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். வைணவத் தலங்களில் இங்கு மட்டுமே பெருமாள் மீசையுடன் உள்ளார்.

    சிவ தலங்களில் 99 சதவீதம் லிங்க வழிபாடுதான் செய்து இருப்பீர்கள். ஆனால் இத்தலத்தில் ஈசன் ஞானமூர்த்தீஸ்வராக மனித வடிவில் உள்ளார். அதுவும் அனைவரும் வியக்கும் வகையில் மீசையுடன் ஞானமூர்த்தீஸ்வரர் உள்ளார்.

    முத்தாரம்மனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரர் கதை என்னும் செங்கோலைத் தன் வலது கையில் தாங்கிய நிலையில் உள்ளார். அவர் விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்கிறார் என்பதே இதன் தத்துவம். ஞானமூர்த்தீஸ்வரர் தன் இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார். அதில் உருவங்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை. விபூதி மட்டுமே அதில் உள்ளது.

    விபூதிக்கும் ஒரு விளக்கம் உள்ளது. வி என்றால் மேலான என்று பொருள். பூதி என்றறால் செல்வம் என்று அர்த்தம். மேலான செல்வத்தை பக்தர்களுக்கு அருளும் வல்லமை படைத்தவர் என்று இதற்கு பொருள்.

    ஞானமூர்த்தீஸ்வரர் என்று பெயர் பெற்றதற்கும் காரணம் இருக்கிறது. ஞானம் என்றால் பேரறிவு மூர்த்தி என்றால் வடிவம் என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ஈகை சுரப்பவர் என்று பொருள்.

    அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால் பேரறிவு உடைய வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று அர்த்தம். தவம் இருப்பவர்களுக்கு ஈஸ்வரன் பதிஞானம் வழங்குவதால் ஞானமூர்த்தி எனப்படுகிறார். ஞானமுடி சூடியிருப்பதாலும், ஞானபீடத்தில் எழுந்தருளிடயிருப்பதாலும் இவர் ஞானமூர்த்தியாக திகழ்வதாக சொல்கிறார்கள்.
    சக்தி தலங்களில் குலசை என்று அழைக்கப்படும் குலசேகரன்பட்டினத்தில் ஆட்சி செய்யும் முத்தாரம்மன் தலம் மிகமிக சக்தி வாய்ந்த தலமாக திகழ்கிறது.
    திங்கள் ஈராம் தினங்கள் ஓரேழும் திருப்பெயரை
    எங்கிருந்தாலும் புகழ்வேன் நான் செலும் இடங்களெல்லாம்
    மங்களம் பொங்கி மரபோங்கி வாழவரம் தருவாய்
    எங்கள் முத்தாரம்மையே! அகிலாண்ட நாயகியே போற்றி!

    தமிழ்நாட்டில் எத்தனையோ சக்தி தலங்கள் உள்ளன. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்று பெரும்பாலான ஊர்களில் அம்மன் ஆட்சி செய்கிறாள். அவளது அருள் எங்கும் நிரம்பி இருக்கிறது. என்றாலும் சக்தி தலங்களில் குலசை என்று அழைக்கப்படும் குலசேகரன்பட்டினத்தில் ஆட்சி செய்யும் முத்தாரம்மன் தலம் மிகமிக சக்தி வாய்ந்த தலமாக திகழ்கிறது. திருச்செந்தூருக்கு மிக, மிக அருகில் இந்த தலம் உள்ளது.

    தமிழ்நாட்டில் சக்தி ஆலயங்கள் தோறும் தற்போது நவராத்திரி திருவிழா நடத்தப்படுகிறது. ஆனால் குலசையில் நடக்கும் விழா தசரா திருவிழாவாக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவைத்தான் மிகப்புகழ் பெற்றதாக சொல்வார்கள். ஆனால் குலசை தசரா திருவிழா அதையும் மிஞ்சி சாதனை படைத்து வருகிறது.

    குலசை தசரா மகிசா சம்ஹார தினத்தன்று சுமார் 15 லட்சம் பேர் திரள்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்தவொரு சக்தி தலத்திலும் இல்லாத அதிசயம் இது. ஆண்டுக்கு ஆண்டு குலசை முத்தாரம்மன் அருளை பெற பக்தர்கள் குலசைக்கு படையெடுத்தப்படி உள்ளனர். இந்த ஊர் இப்போதுதான் புகழ்பெற்றது என்று நினைக்காதீர்கள். சங்க காலத்திலேயே இந்த ஊர் புகழ் பெற்று இருந்தது.

    சங்க காலத்தில் குலசேகரன்பட்டினம் ‘‘தென் மறைநாடு’’ என்றழைக்கப்பட்டது. இந்த ஊர் கடல் பகுதி இயற்கையாகவே மிகப் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வசதி கொண்டது. இதனால் சங்க காலத்தில் குலசேகரன்பட்டினம் துறைமுகம் மிகப் பெரும் வாணிப கேந்திரமாகத் திகழ்ந்தது. சங்க காலத்தில் தமிழர்கள் குலசேகரன்பட்டினம் துறைமுகம் வழியாகவே ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்தனர். அது போல ஆப்பிரிக்கர்களும் குலசேகரன்பட்டினம் வந்ததற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

    சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் குலசேகரன்பட்டினம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அப்போது குலசேகரன்பட்டினம், வீரவளநாடு என்றழைக்கப் பட்டது. மூவேந்தர்களும் இந்த ஊர் துறைமுகம் வழியாகத்தான் நவதானியங்கள், தேங்காய், எண்ணை, மரம் போன்றவற்றை இறக்குமதி செய்தனர், உப்பு, கருப்பட்டி, கருவாடு, முத்து போன்றவற்றை ஏற்றுமதி செய்தனர். குலசேகரப் பட்டினத்தில் இருந்து சென்ற உப்பு ஒரு காலத்தில் உலகம் முழுவதும் வரவேற்பு பெற்று இருந்ததாக வரலாற்று குறிப்புகளில் உள்ளது.

    அரபு நாடுகளில் இருந்து பாண்டிய மன்னர்கள் குதிரைகளை குலசேகரன்பட்டினம் வழியாகத்தான் இறக்குமதி செய்தனர். இலங்கையை வென்ற சோழ மன்னன் இந்நகர் வழியாகத்தான் நாடு திரும்பினான். பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டியனின் மகன் குலசேகரப் பாண்டியன் இப்பகுதியை கி.பி.1251ம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

    குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் தோல்வியுற்றான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்டான் பாண்டிய மன்னன். அவன்முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.

    “பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன் நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன? மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான். கோவில் அருகே ஊர் அமைந்ததால் மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது.

    சில நூற்றாண்டுகள் கழித்து ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்பட்ட போதும், குலசேகரன்பட்டினம் தன் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. குசேகரன்பட்டினத்தை சிறந்த துறைமுகமாக பயன்படுத்திய ஆங்கிலேயர்கள், பனை மரங்கள் தந்த பயனுள்ள பொருட்களை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்வதற்காக திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு ரெயில் போக்குவரத்தையும் நடத்தி வந்தனர். அதே சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்திலும் குலசேகரன்பட்டினம் முதன்மையாக இருந்தது. 1942-ம் ஆண்டு நாடெங்கும் ஆகஸ்டு புரட்சி ஏற்பட்ட போது குலசேகரன்பட்டினத்தில் ஆங்கிலேய அதிகாரி லோன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    இத்தகைய சிறப்புடைய குலசேகரன்பட்டினம், நாடு விடுதலை அடைந்த பிறகு சில சிறப்புகளை இழந்து விட்டது. துறைமுகம் இல்லாமல் போய்விட்டது. ரெயில் போக்குவரத்து நடந்ததற்கான சுவடே மறைந்து போய் விட்டது.

    இத்தகைய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குலசேகரன்பட்டினம் ஊரின் பெயர் மீண்டும் நாடெங்கும் பேசப்படும் வகையில் உருவெடுத்துள்ளது. அதற்கு காரணம் குலசேகரன்பபட்டினத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் ஆன்மீக புரட்சி. குலசேகரன்பட்டினத்தில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வரும் முத்தாரம்மன் கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளாள். தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் குலசை வந்து முத்தாரம்மனை மனம் உருக வழிபட்டு மனதில் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

    குறிப்பாக புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா, இன்று குலசை பெயரை உலகம் முழுக்க வாழம் தமிழர்களிடம் மட்டுமின்றி எல்லா தரப்பினரிடமும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தலம் இந்தியாவின் முக்கிய சக்தி தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
    ×