search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95494"

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாரியம்மன், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான நோய்களும், தீவினைகளும், அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்கவும், நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார். ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அவர் விரதம் மேற்கொள்வார். இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

    இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை கோவில் கொடிமரத்தில் இருந்து யானை மீது கோவில் அர்ச்சகர் பூக்கூடைகளில் பூக்களை வைத்து அமர்ந்திருக்க, கோவிலை வலம் வந்து கடைவீதி வழியாக கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு அம்மனுக்கு பூக்கள் சாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இணை ஆணையர்(பொறுப்பு) தென்னரசு, முன்னாள் இணை ஆணையர் குமரதுரை, கோவில் மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியன், மணியக்காரர் ரமணி, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் துரைராஜசேகர் மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள், பக்தர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அம்மன் பச்சை பட்டினி விரதம் தொடங்கினார். மேலும் காலை 8 மணியில் இருந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தியும், மாலையணிந்தும் பாதயாத்திரையாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் படத்தை வைத்து பூக்களை எடுத்து கொவிலுக்கு வந்து, அம்மனுக்கு சாற்றினர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

    பூச்சொரிதல் விழாவையொட்டி திருச்சி மாவட்டம் மட்டுமின்றி கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாமக்கல், சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று இரவு முழுவதும் கட்டணம் இல்லாமல் அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) தென்னரசு, ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    கொள்ளிடம் நெ.1 டோல்கேட்டில் இருந்து கூத்தூர், பழூர், பனமங்கலம், சமயபுரம் நால்ரோடு, ஒத்தக்கடை, சந்தை பகுதி ஆகிய இடங்களில் தொட்டிகள் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் நடமாடும் கழிவறை, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் தலைமையில் தலைமை எழுத்தர் சதீஸ் கிருஷ்ணன் மேற்பார்வையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறையின் சார்பாக திருச்சி, துறையூர் போன்ற இடங்களில் இருந்து சமயபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் மெல்கியுராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சமயபுரத்தில் முகாமிட்டுள்ளனர். 
    சமயபுரம் அருகே, இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலின் திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சமயபுரம் அருகே, இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி மாலை 6 மணிக்கு மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    இரவு 7 மணிக்கு உற்சவ அம்பாள் கேடயத்தில் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், யானை, ரிஷபம், அன்னம், குதிரை போன்ற வாகனங்களில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் மாதம் 3-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. 
    வள்ளிமலை சுப்பிர மணியசுவாமி கோவிலில் வன்னியகுல சத்திரிய மரபினர்களின் 6-ம் நாள் யானை வாகன பெருவிழா நடை பெற்றது.
    வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் வன்னிய குல சத்திரிய மரபினர்கள் நடத்தும் பிரசித்தி பெற்ற 6-ம் நாள் யானை வாகன பெருவிழா கோவிலில் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள வரசித்தி விநாயகர், ஆறுமுகபெருமாள், தேவி வள்ளியம்மை, மலைக்கோவில் முருகப்பெருமாள் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சூரண உற்சவம் நடைபெற்றது.

    மாலை திருப்புகழ் பாராயணம், பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவில் டி.வி.புகழ் சந்தோஷி மற்றும் கானா பிரபா ஆகியோர் பங்கு பெற்ற நிகழ்ச்சியும், டி.வி.புகழ் சென்னை கார்த்திக்கின் மெலோடியஸ் இன்னிசை கச்சேரியும், பின்னர் கரகாட்டமும் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கந்தபெருமான் வண்ணமலர் மாலைகளாலும், மின் அலங்காரத்துடனும் யானை வாகன திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் காலை நன்கொடையாளர் களுக்கும், தேவஸ்தான ஊழியர்களுக்கும், சமுதாய பிரமுகர்களுக்கும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. யானை வாகன பெருவிழா அன்று நாள் முழு வதும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    வன்னிய குல சத்திரிய மரபினரின் 6-ம் நாள் யானை வாகன பெருவிழா தலைவர் (பொறுப்பு) உமாபதி தலைமையில் நடைபெற்றது. கட்டிடக்குழு தலைவர், எஸ்.வி.டி. குழுமத்தை சேர்ந்த பெங்களூரு கிருஷ்ணன், செயலாளர் பெங்களூரு அஸ்வினி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ., கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. லோக நாதன், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி தலைவர் கதிர்ஆனந்த், முன்னாள் மாவட்ட செயலாளர் ராமு, சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, பாரதிதாசன் பொறியியல் கல்லூரி நிறுவனர் சக்கரவர்த்தி, ஏ.எஸ்.ஏ.பேக்கரி சண்முகம், எஸ்.எஸ்.எஸ். கல்லூரி தலைவர் நடராஜன், பெங்களூரு சமூகசேவகர் பழனிகாந்த், அரசு வக்கீல் அண்ணாமலை, டாக்டர் தொப்ப கவுண்டர், விழாக்குழு செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் கவுதமன் மற்றும் தொழிலதிபர்கள், நன்கொடை யாளர்கள், வன்னிய குல சத்திரிய மரபினர்கள் மற்றும் 6-ம் நாள் யானை வாகன பெருவிழா குழுவினர், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
    திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா வருடந்தோறும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு பொட்டு கட்டுதல் செய்து விழாவை தொடங்கினர். அதேபோல் இந்த சமூகத்தார் சார்பில் மஞ்சள் நீராட்டு நடத்தப்பட்ட பின்பு கோவிலில் கொடியிறக்கம் செய்யப்படுகிறது.

    அதன்படி இந்த வருட மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதனை சபா தலைவர் ஏ.கந்தசாமி ஆச்சாரி தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நகரின் 4 ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது.

    அங்கு, அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு செய்யப்பட்டது. இதனையொட்டி அனைவரின் மீதும் மஞ்சள்நீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு அம்மன் அழைத்தல் நடைபெற்று வீதிஉலா தொடங்கியது. இதில் பக்தர்கள் அனைவரும் மஞ்சள் நீராடி அம்மனை சபா மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு, மஞ்சள் நீராடி அழைத்து வந்தவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இரவு 7 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன.

    அதனைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் அம்மனின் மின்தேர் வீதிஉலா தொடங்கியது. இதில் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் தாரை, தப்பட்டை, கரகாட்டம், கிராமிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதைபோல விஸ்வகர்ம இளைஞர் சபா சார்பில் அக்கசாலை விநாயகர் மின்தேர் முன்செல்ல, அடுத்ததாக விஸ்வ பிரம்மா மின்தேர், 3-வதாக கோட்டை மாரியம்மன் சிறப்பு அலங்கார மின்தேர் வீதிஉலா ரதவீதிகள் வழியே வலம் வந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியளவில் கோவிலை அடைந்தது. அதன்பிறகு கொடியிறக்கம் செய்யப்பட்டது. முன்னதாக கோவில் கலையரங்கில் இன்னிசை கச்சேரி நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்ம மகாஜன சபா பொது செயலாளர் சந்தானம், பொருளாளர் பொன்னலங்காரம், அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், இயக்குனர்கள் குமரேசன், பாண்டி, இணை செயலாளர் சின்னு, துணை செயலாளர் முத்து, காளிராஜ், சண்முகம் உள்பட அனைத்து நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொடியேற்றம் ஏப்ரல் 2-ந்தேதி நடக்கிறது.
    தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு, கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    மாமன்னன் ராஜராஜன் காலத்தில் பெரியகோவிலில் நடந்த திருவிழாக்கள் பற்றி கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. காலப்போக்கில் நின்றுபோயிருந்த இந்த விழாக்களை தஞ்சையை ஆண்ட நாயக்கர், மராட்டிய மன்னர்கள் பெரியகோவிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடத்தினர். ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் இந்த திருவிழாவில் 15-ம் நாளன்று தேரோட்டம் நடைபெற்றுள்ளது.

    காலப்போக்கில் தேர் சிதிலமடைந்த நிலையில் 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.

    புதிதாக தேர் செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றப்படுகிறது.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடக்கிறது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, மேற்பார்வையாளர் ரெங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மாசி மக திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் தென்காசியில் காசி விசுவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி காலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, ராமாயணம் குறித்த தோல்பாவை கூத்து கதை நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை, சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியவை நடக்கிறது.

    வருகிற 18-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், கோவில் ஆய்வாளர் கணேஷ் வைத்திலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர். 
    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.
    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜர் நகரில் அமைந்துள்ளது வென்னிமலை முருகன் கோவில். இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

    இதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில், திருவிழா நடைபெறும்.

    முதல் நாள் திருவிழா பாவூர்சத்திரம் காமராஜர் நகர் பொதுமக்கள் சார்பில் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5.15 மணிக்கு கொடியேற்றம், காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை மற்றும் பாலாபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு 1,008 திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரதவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் இசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 
    பட்டுக்கோட்டை அருகே உள்ள பரகலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் திங்கட்கிழமை மட்டும் இரவு 12 மணிக்கு பார் வேட்டை உற்சவ வழிபாடு நடைபெறுகிறது.
    பொங்கல் திருநாளுக்கு மறுதினம் காஞ்சி அருகே உள்ள சீவரத்தில் பார் வேட்டை உற்சவம் நடைபெறும். அந்த உற்சவத்திற்காக ஆற்றங்கரைக்கு காஞ்சி வரதர் வருகை தருவார். அங்கு அவருடன் பழைய சீவரம் லட்சுமி நரசிம்மர், காவாத்தண்டலம் கரிய மாணிக்கப் பெருமாள், காலவாக்கம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் மற்றும் திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாள் ஆகியோர் ஒரு சேர வருவார்கள்.

    பார்த்திபனூர் அருகே உள்ள மேலப்பெருங்கரை சிவபெருமான் ஆலயத்தில், எட்டு யானைத் தலை சிலைகள் இருக்கின்றன. ஆண்டு தோறும் தைப் பொங்கல் திருநாள் அன்று, இந்த யானை சிலைகளுக்கு முன்பாக கரும்புகளை வைத்து பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

    பட்டுக்கோட்டை அருகே உள்ள பரகலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் திங்கட்கிழமை மட்டும் இரவு 12 மணிக்கு வழிபாடு நடைபெறுகிறது. மற்ற நாட்களில் பூஜைகள் செய்யப்படுவதில்லை. தைப் பொங்கல் திருநாளில் மட்டும் இந்த ஆலயம் பகல் முழுவதும் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் பொங்கல் திருநாள் அன்று, சந்திரசேகர சுவாமி திருவீதி உலா வருவார். மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று, கற்பகாம்பாள் கன்னி உற்சவம் நடைபெறும்.

    வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. காணும் பொங்கல் அன்று இத்தல இறைவன் நிமிஷாசல மலையை சுற்றி வலம் வருவார்.

    மதுராவில் இந்திரனுக்கு மரியாதை கொடுக்கும் விழாவாக ‘ஹடாகா’ என்ற பெயரில் பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர். இந்திரனின் வாகனமான ஐராவதத்தை இந்த விழாவின் போது கவுரவிக்கின்றனர். யானையின் உருவத்தை எல்லா இடங்களிலும் வரைந்து வைத்து, அதற்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
    கடையநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    கடையநல்லூர் மலம்பேட்டை தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் தினமும் அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று கொடைவிழா நடந்தது. காலையில் திரளான பெண்கள் கோவிலில் பொங்கலிட்டு அம்பாளுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து ஏராளமான பெண்கள் நேர்த்திக்கடனாக தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலமானது கோவிலில் இருந்து புறப்பட்டு அப்பகுதியில் உள்ள வடக்கத்தி அம்மன் கோவிலை சென்றடைந்தது.

    மதியம் 12 மணிக்கு தாமரைக்குளம் சுடலைமாடன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் மாலையில் முத்துமாரியம்மன் மற்றும் வடக்கத்தி அம்பாளுக்கு பால் அபிஷேகமும், இரவு முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலையில் முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு திருவிழா வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலின் மாசித்திருவிழா வருடந்தோறும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு பூத்தமலர் பூ அலங்காரம், பூச்சொரிதல், கொடியேற்றம் உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழா வருகிற 31-ந்தேதி(வியாழக்கிழமை) பூத்தமலர் அலங்காரத்துடன் தொடங்குகிறது. அடுத்தநாள் 1-ந் தேதி மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 3-ந் தேதி சாட்டுதல், 5-ந் தேதி கொடியேற்றம், 8-ந்தேதி நாகல்நகர் புறப்பாடு நடைபெறுகிறது.

    அதனைத்தொடர்ந்து 15-ந் தேதி காலை 6 மணியளவில் பூக்குழி இறங்குதல், அன்று இரவு 8 மணியளவில் அம்மன் திருத்தேர் உலாவும், 16-ந் தேதி இரவு தசாவதாரம், 17-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதல், 18-ந்தேதி அதிகாலையில் கொடியிறக்கம், அன்று இரவு ஊஞ்சல் உற்சவம், 19-ந் தேதி இரவு 7 மணியளவில் தெப்பஉற்சவம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன், பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
    ஆசாரிபள்ளத்தை அடுத்த மேல சங்கரன்குழி காசி விஸ்வநாதர் சிவன்கோவிலில் வருடாந்திர திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    ஆசாரிபள்ளத்தை அடுத்த மேல சங்கரன்குழி காசி விஸ்வநாதர் சிவன்கோவிலில் வருடாந்திர திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

    நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.45 மணிக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 9 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு ஆன்மிக அறிவுரை, 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    13-ந்தேதி காலை 9 மணிக்கு சிறுவர்-சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், இரவு 8 மணிக்கு வில்லிசை, 15-ந்தேதி காலை 7 மணிக்கு தை பொங்கல் வழிபாடு, இரவு 8 மணிக்கு வினாடி-வினா, 17-ந் தேதி இரவு 8 மணிக்கு இசை பட்டிமன்றம், 19-ந்தேதி இரவு 8 மணிக்கு நடன நிகழ்ச்சி, 21-ந் தேதி காலை நிறைவு விழா வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் பூதப்பாண்டி பூதலிங்கசாமி- சிவகாமி அம்பாள் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் தை திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.45 மணிக்கு கொடியேற்றம், 9 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு மெல்லிசை விருந்து, 9 மணிக்கு சாமியும், அம்மனும் பூங்கோவில் வாகனத்தில் பவனி வருதல் போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், சாமியும், அம்மனும் வாகன பவனி வருதல், சமய சொற்பொழிவு, யானை ஸ்ரீபலி, சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருதல், மெல்லிசை நிகழ்ச்சி போன்றவை நடைபெறும்.

    20-ந் தேதி காலை 8 மணிக்கு தேர்களில் விநாயகரையும், சாமியையும், அம்மனையும் எழுந்தருள செய்து தேரோட்டம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு மெல்லிசை விருந்து, 9 மணிக்கு சாமியும், அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 21-ந் தேதி காலை 10 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு ஆறாட்டு, இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழா, நள்ளிரவு 12 மணிக்கு ஆங்காரவல்லி சப்தாவர்ணம் போன்றவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி மன்ற தலைவர் ராஜேந்திரன், பொது செயலாளர் பாண்டியன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் வேலப்பன், சண்முகம் ஆகியோர் செய்துள்ளனர்.
    ×