search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95591"

    என் மகன் விடுதலையாகும் வரை மக்களை சந்தித்து முறையிடுவேன் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறினார். #Arputhammal #Perarivalan
    கோவை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ‘மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு’ பயணத்தை கோவையில் நேற்று தொடங்கினார். முன்னதாக அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-



    28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக போராடி வருகிறேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, தமிழக அரசு முறையாக அமைச்சரவையை கூட்டி, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளனர். இதில் கவர்னர் உடனடியாக கையெழுத்திடுவதே முறையாகும். கவர்னர் 4½ மாதங்களாக காலதாமதம் செய்து வருகிறார்.

    எனவே மக்களிடம் எங்களது தரப்பு நியாயத்தை கொண்டு சேர்க்கும் வகையில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளேன். மக்களின் கருத்துகளை கேட்டு இறுதி போராட்டம் பற்றி முடி வெடுப்பேன். எனது இந்த பயணம் 7 பேர் விடுதலைக்கானது. அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்வரை எனது பயணம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Arputhammal #Perarivalan
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான அனைத்து முட்டுக்கட்டைகளும் விலகி விட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான ஆணையை ஆளுனர் பிறப்பிக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss #BanwarilalPurohit #Perarivalan
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலர் தொடர்ந்துள்ள வழக்கை காலாவதியானதாக கருதி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிரான முட்டுக்கட்டையை அகற்ற மத்திய அரசின் இந்நிலைப்பாடு பெரிதும் உதவும். அந்த வகையில் மத்திய அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432, 435 ஆகிய பிரிவுகளின் கீழ் விடுதலை செய்ய 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக அரசு முடிவு செய்தது.

    அதை எதிர்த்து ராஜீவ் காந்தி கொலையின் போது உயிரிழந்த வேறு சிலரின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட சிலருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72 மற்றும் 161-வது பிரிவுகளின் கீழ் ஏற்கனவே தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்ட மத்திய அரசு, 7 தமிழர்களுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் கீழ் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கு தேவையற்றது; அவர்களின் கோரிக்கை காலாவதியாகி விட்டதாகக் கருதி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.


    7 தமிழர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 2014-ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்த அப்பாஸ் என்பவர் உள்ளிட்ட சிலர் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி தமிழக ஆளுனர் பன்வாரிலாலை சந்தித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பளிக்கப்படும்வரை பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதை தமிழக ஆளுனர் தாமதப்படுத்தி வந்த நிலையில் தான் மத்திய அரசு இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

    மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை ஏற்று 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் எந்த நேரமும் தள்ளுபடி செய்யலாம்.

    உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அப்பாஸ் உள்ளிட்ட சிலரின் வழக்குகளைக் காரணம் காட்டி 7 தமிழர்கள் விடுதலையை தாமதப்படுத்தி வந்த ஆளுனர், மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்? என்பது தான் இப்போது விடை காணப்பட வேண்டிய வினாவாகும். 7 தமிழர்களையும் விடுதலை செய்யப் பரிந்துரைத்து கடந்த 9.9.2018 அன்று தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நாளில் இருந்தே, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு எந்தத் தடையும் இல்லை என்றும், உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், யாருடைய விருப்பத்தையோ நிறைவேற்றுவதற்காக அவர்களின் விடுதலையை தமிழக ஆளுனர் திட்டமிட்டு தாமதித்து வந்தார்.

    7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இன்றுடன் 93 நாட்கள் ஆகி விட்ட நிலையில், இனியும் ஆளுனர் தாமதிப்பது முறையல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு இல்லை என்ற ஒற்றை விதியை மட்டும் வைத்துக் கொண்டு, 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்வதை தாமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். இந்தத் தவறை தமிழக ஆளுனர் மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான அனைத்து முட்டுக்கட்டைகளும் விலகி விட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான ஆணையை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பரிந்துரைத்து வரும் 17-ம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்குள்ளாக பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட எழுவரும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதை தமிழக அரசும், தமிழக ஆளுனரும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #Ramadoss #BanwarilalPurohit #Perarivalan
    தமிழ்நாட்டுக்குள் எந்த ஊருக்குள்ளும் ஆய்வு நடத்த கவர்னரை நுழைய விடமாட்டோம் என்று சென்னையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசினார். #MDMK #Vaiko #RajivCase
    சென்னை:

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி இன்று கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.

    இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    அதன்படி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் சைதாப்பேட்டை சின்னமலை அருகே ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இந்த போராட்டத்துக்கு தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, தாயகம் கவி எம்.எல்.ஏ., நிர்வாகிகள் சைதை குண சேகரன், பாலவாக்கம் விசுவநாதன், சோமு, மணிமாறன், ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா உள்ளிட்ட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மே-17 இயக்க நிர்வாகிகள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். விடுதலை செய், விடுதலை செய், 7 பேர்களை விடுதலை செய் உள்ளிட்ட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்த 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதற்காக இன்று முற்றுகை போராட்டம் நடத்துகிறோம். 7 பேரின் விடுதலையில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் மறுப்பது ஏன்?


    இது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது. கண்டிக்கத்தக்கது. உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    போட்டி அரசாங்கம் அமைத்து செயல்படுவது போன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் செயல்பாடு இருக்கிறது. எங்களின் அடுத்த போராட்டம் என்ன என்பதை இப்போது சொல்ல மாட்டேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எல்லோரிடமும் கலந்து பேசி அடுத்த போராட்டத்தை அறிவிப்பேன். அடுத்த போராட்டம் இதைவிட வேகமாக இருக்கும். தமிழ்நாட்டுக்குள் எங்கும் கவர்னரை நுழைய விடமாட்டேன். இதற்கு முன்பு தி.மு.க. மட்டும் தான் போராடியது. இனி எல்லோரும் சேர்ந்து போராடுவோம். தமிழ்நாட்டுக்குள் எந்த ஊருக்குள்ளும் ஆய்வு நடத்த அவரை நுழைய விடமாட்டோம். எந்த ஊர் அதிகாரிகளையும் பார்க்க விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

    7 பேரின் விடுதலையை அனைவரும் எதிர்நோக்கி உள்ள நேரத்தில் கவர்னர் இன்னும் மவுனமாக இருக்கிறார். சிறையில் உள்ள 7 பேரும் நம் சகோதரர்கள். நமது ரத்தங்கள். நமது உணர்வுகள். தேவையில்லாமல் உள்ளே வாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை உடனே விடுதலை செய்ய தேவையான நடவடிக்கையை கவர்னர் எடுக்க வேண்டும் என்றார்.

    போராட்டத்தையொட்டி ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #MDMK #Vaiko #RajivCase
    தந்தை பெரியார் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவு நாளான டிசம்பர் 24-ந்தேதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். #Sathyaraj #RajivGandhiAssassinationCase
    விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா மேடவாக்கத்தில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றில் கொண்டாடப்பட்டது.

    நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்குக் கல்வி உதவிகளை வழங்கினார். பின்னர் அங்குள்ள குழந்தைகளுடன் சிலம்பம் சுற்றி மகிழ்ந்தார்.

    நிகழ்ச்சிக்கு பின் சத்யராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    தந்தை பெரியார் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவு நாளான டிசம்பர் 24-ந்தேதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து, தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

    அதை கூடிய விரைவில் நிறைவேற்ற வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஒரு சாதாரண மனிதனாக எனது உணர்வுகளை இந்த அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sathyaraj #RajivGandhiAssassinationCase

    தமிழக வரலாற்றில் பன்வாரிலால் புரோகித் போல மோசமான கவர்னரை பார்த்ததே இல்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். #MDMK #vaiko #Banwarilalpurohit
    சென்னை:

    ஐகோர்ட்டு நீதிபதியாக பி.புகழேந்தி இன்று பதவி ஏற்றார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துக் கொண்டார். வக்கீல் சீருடையில் வந்திருந்த வைகோ, நீதிபதி புகழேந்திக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் நிருபர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீதிபதியாக புகழேந்தி பதவியேற்ற இந்த நாள் திராவிட இயக்கத்தின் சமூக நீதிக்கான நாளாகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றமே செய்யாத நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் நரக வேதனை அனுபவித்து வருகின்றனர். ஆனால், உயிரோடு 3 அப்பாவி மாணவிகளை எரித்துக் கொலை செய்த 3 அ.தி.மு.க.க்காரர்களை, தமிழக அரசு முன் கூட்டியே விடுதலை செய்துள்ளது.

    இந்த 3 பேரை விடுதலை செய்வதற்காகத்தான், பேரறிவாளன் உள்பட 7 பேரை முன் கூட்டியே விடுதலை செய்வதாக தமிழக அரசு இதுவரை நாடகம் ஆடியுள்ளது.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி நவ.24-ம் தேதி ம.தி.மு.க. சார்பில் அறப்போராட்டம் நடைபெறும்.


    நீதிக்கு எதிராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார். பிரதமர் மோடியின் ஏஜெண்டாக கவர்னர் செயல்படுகிறார். தமிழக வரலாற்றில், இப்படியொரு மோசமான கவர்னரை பார்த்ததே இல்லை.

    இவ்வாறு வைகோ கூறினார். #MDMK #vaiko #Banwarilalpurohit
    10 கட்சிகளுடன் மோதும் பிரதமர் மோடி பலசாலியா? என்று நடிகர் ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Modi #RajiniKanth
    சென்னை, நவ.13-

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூரு சென்று விட்டு சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் விடுதலையில் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டனர். அதற்கு ரஜினி, “எந்த 7 பேர்?. எனக்கு தெரியாது. நான் இப்போதுதான் வந்துள்ளேன்” என்று பதில் அளித்தார்.

    மேலும் பா.ஜனதா ஆபத்தான கட்சியா? என்ற கேள்விக்கும், பணம் மதிப்பிழப்பு தொடர்பான கேள்விக்கும் ரஜினி பதில் அளித்தார். அவர் அளித்த பதில்கள் கடும் விமர்சனத்தை உருவாக்கியது.

    குறிப்பாக ராஜீவ் கொலையாளிகள் பற்றிய கேள்விக்கு எந்த 7 பேர்? என்று அவர் கேட்டது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ராஜீவ் கொலையாளிகள் பற்றி தெரியாத இவர் எப்படி அரசியல் செய்வார் என்ற ரீதியில் நூற்றுக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று பகல் 11.30 மணியளவில் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரையும் பற்றி ரஜினி காந்துக்கு எதுவும் தெரியாது என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தெரியும் என்றால் தெரியும் என்பேன். தெரியாது என்றால் தெரியாது என்பேன். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது.

    கேட்ட கேள்வி தெளிவாக இல்லை. கொஞ்சம் தெளிவாக கேட்டிருக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலை பற்றி தமிழக அரசு கொடுத்துள்ள மனு என்று கேட்டிருந்தால் எனக்கு தெளிவாக புரிந்திருக்கும்.

    எடுத்த எடுப்பிலேயே 7 பேர் விடுதலை பற்றி என்று கேட்டால் எந்த 7 பேர் என்று கேட்பது இயற்கைதானே. அதற்காக அந்த 7 பேரையும் பற்றி தெரியாத அளவுக்கு இந்த ரஜினிகாந்த் முட்டாள் அல்ல. பேரறிவாளன் பரோலில் வந்திருந்தபோது 10 நிமிடம் போனில் பேசி அவருக்கு ஆறுதல் சொன்னவன் இந்த ரஜினிகாந்த்.

    இந்த வழக்கை பொறுத்தமட்டில் பல கட்டங்களில், பல இடங்களுக்கும் சென்றுள்ளது. சுப்ரீம்கோர்ட், ஜனாதிபதி என்று பல இடங்களுக்கு சென்று வந்துள்ளது. இப்போதும் தமிழக அரசு அந்த மனுவை கவர்னருக்கு அனுப்பி உள்ளது. கவர்னர் முடிவு எடுக்க வேண்டும்.

    அவர்கள் 27 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து உள்ளார்கள். மனிதாபிமான முறையில் அவர்களை விடுதலை செய்வதுதான் நல்லது. இது என்னுடைய கருத்து.

    அப்புறம் இன்னொன்று எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாஜக-வை தோற்கடிக்க முயற்சிக்கிறார்களே? அது ஆபத்தான கட்சியா என்று கேட்டார்கள். என்னுடைய பதில் எதிர்கட்சிகள் அப்படி நினைக்கின்றன. எதிர்கட்சிகள் அப்படி நினைக்கும்போது பாஜக அவர்களுக்கு ஆபத்தான கட்சிதானே. அது மக்களுக்கு ஆபத்தான கட்சியா? இல்லையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

    பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என்பது பற்றி ரஜினியின் கருத்து என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். என் கருத்தை இப்போது சொல்ல முடியாது. ஏனென்றால் நான் இன்னும் முழு அரசியலில் இறங்கவில்லை.

    பாஜக-விற்கு எதிரான மிகப்பெரிய எதிர்ப்பு பற்றி கேட்கிறீர்கள்.10 பேர் சேர்ந்து ஒருவரை (மோடி) எதிர்த்தால் அந்த 10 பேரும் பலசாலியா? 10 பேரை எதிர்த்து போராடும் அந்த ஒருவர் பலசாலியா? என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இதைவிட தெளிவாக எப்படி சொல்வது.

    பா.ஜனதாவுடன் கூட்டணியா என்பதையெல்லாம் அப்போது பார்த்துக் கொள்ளலாம். மோடி மிகப்பெரிய பலசாலியா என்பது 2019 தேர்தலில் தெரிந்துவிடப்போகிறது.

    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடிகர்களுக்கு குளிர்விட்டு போனதென்று அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களெல்லாம் பெரிய பதவியில் இருப்பவர்கள். கொஞ்சம் யோசித்து கருத்துக்களை சொல்ல வேண்டும்.

    இப்போ அதே கேள்வியை நான் கேட்க முடியுமா? அது நல்லாயிருக்காது. பதவிக்கு மதிப்பு கொடுத்து கொஞ்சம் தாழ்மையாக பேசினால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

    சர்கார் பட விவகாரத்தில் வன்முறையில் இறங்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மாற்றுக்கருத்து இருந்தால் அமர்ந்து பேச வேண்டும். அதற்காக தியேட்டரை உடைப்பது, பேனரை கிழிப்பது போன்ற செயல்கள் சரியானது அல்ல. ஒரு பேச்சு பேசிவிட்டு அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாமே.

    இலவசங்கள் 100 சதவீதம் தேவை. அது யாருக்கு? எதற்காக? என்பதை பொறுத்து இருக்கிறது. வாக்குகளை மனதில் வைத்து கொடுத்தால் சரியில்லை. சினிமாக்காரர்கள் எது சொல்ல வேண்டும்? எது சொல்ல கூடாது? என்று ஒரு வரையறையும் இருக்கிறது. உணர்ச்சிக்கரமான வி‌ஷயங்களை தொடக்கூடாது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    நடிகர்கள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். வருமான வரி கட்டுகிறார்கள். இதைப்பற்றி யார் என்ன கேட்பது?

    இவ்வாறு அவர் கூறினார்.
    பேரறிவாளன் உட்பட 7 பேரை தெரியாது என்று கூற நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தெரிவித்தார். #Rajinikanth #BJP
    ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆபத்தான கட்சியா என்று கேட்டதற்கு எந்த 7 பேர்,  எனக்கு தெரியாது, பாஜக ஆபத்தான கட்சியாக பார்த்தால் அப்படித் தான் என்று கூறினார். 

    எந்த 7 பேர் என்று ரஜினி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்க போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

    ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விவகாரம் குறித்து ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர். 7 பேர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. 

    பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசினேன். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.

    பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே. ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்யட்டும். #Rajinikanth #BJP #Perarivalan #RajivConvicts

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. #RajivCaseConvicts #SupremeCourt
    புதுடெல்லி:

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசும் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

    இதற்கிடையே, 7 பேர் விடுதலை தொடர்பாக 2014ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்தை எதிர்த்து, அமெரிக்கை நாராயணன், அப்பாஸ், ஜான் ஜோசப், சாமுவேல் திரவியம் மற்றும் ராம சுகந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


    இந்த வழக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவேண்டிய வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. எனவே விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

    மேலும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தற்போதைய தீர்மானம் மற்றும் கூடுதல் ஆவணங்களை சேர்த்து புதிய மனுக்களை மூன்று வாரங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. #RajivCaseConvicts #SupremeCourt
    ராஜூவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran #RajivCaseConvicts
    திருச்சி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜூவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அற்புதம்மாள் கூறியதை போன்று இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். ஆளுனர் நல்ல முடிவு எடுப்பார். 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.



    தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டுக்கு மின் வாரியத்தின் திட்டமிடாத நடவடிக்கையே காரணமாகும். நீர் நிலைகளை உரிய நேரத்தில் தூர்வாராமல் வெறும் கணக்கு காட்டி பணத்தை எடுத்துக் கொண்டதாலேயே காவிரி, டெல்டா மாவட்டங்களில் கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. உபரிநீர் வீணாக கடலில் கலக்க நேரிட்டுள்ளது.

    விரிவுப்படுத்த வேண்டிய தேசிய நெடுஞ்சாலைகள் பலவும் தமிழகத்தில் உள்ள நிலையில், விளை நிலங்களை அழித்து கொண்டு வரப்படும் 8 வழிச்சாலை தேவையற்றது. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசால் செயல்படுத்தவும் முடியாது.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பயம் காரணமாகவே முன் கூட்டியே அமைச்சர்கள் முகாமிட்டு பிரசாரம் செய்கின்றனர். அவர்கள் வாக்கு கேட்பது எங்களுக்குத் தான் சாதகமாக இருக்கும். அ.தி.மு.க.வினர் டெபாசிட் பெறுவதற்காக போராடுகின்றனர்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும். குக்கர் சின்னத்தை சட்டப்படி கோருவோம். எதிலும் அலட்சிய போக்குடன் செய்யப்படும் இந்த அரசை மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்புவர்.

    அரசே மூட வேண்டிய சூழலில் உள்ள நிலையில், அரசு பள்ளிகளை மூட முடி வெடுத்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பள்ளிகள் திறக்கப்படும். அ.தி.மு.க.வை பா.ஜ.க. கைவிட்டு விட்டது என்பது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசி வருவதில் இருந்தே தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran #RajivCaseConvicts
    ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். #RajivGandhiCase #Perarivalan
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு தொல்.திருமாவளவன் அளித்த பதில் வருமாறு:-

    7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். எனவே தமிழக அரசு மீண்டும் அமைச்சரவையை கூட்டி கவர்னருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அப்போது அவர் அதனை ஏற்று தான் ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajivGandhiCase #Perarivalan
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். #RajivCaseConvicts
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

    தமிழக அரசே முடிவு செய்யலாம் என்பதுதான் கலைஞர் ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்த கழகத்தின் நிலைப்பாடாகும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்றும்; 27 வருடங்களாக சிறையில் வாடிவதங்கிக் கொண்டிருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.


    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்திருக்கும் 161 விதியின் படி உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #RajivCaseConvicts #DMK #MKStalin
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. #RajivCaseConvicts #Perarivalan #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

    தமிழக விரைவு கோர்ட்டில் நடந்த விசாரணையில் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் நளினிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர்.

    ஆனால் அந்த மனு மீது எந்த ஜனாதிபதியும் முடிவு எடுத்து அறிவிக்கவில்லை. இதற்கிடையே கருணை மனு தாக்கல் செய்து நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது.

    அந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து இருப்பதால் தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் மத்திய அரசு ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தண்டனை பெற்ற 7 பேரும் விடுதலையாவதில் சிக்கல் நீடித்தப்படி இருந்தது.


    இந்த நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார். இதற்காக சட்டசபையில் அவர் தீர்மானமும் கொண்டு வந்தார்.

    அந்த தீர்மானத்தை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கேட்டார். ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கு பதில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால் அதில் தமிழக அரசு தலையிட எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த சட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள உரிமைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு விவரம் வருமாறு:-

    ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே 7 பேரை விடுதலை செய்வது குறித்து கவர்னர் இறுதி முடிவு எடுக்கலாம்.

    இது தொடர்பாக தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம். 2016-ம் ஆண்டு தமிழக அரசு கொடுத்துள்ள மனு மீதும் கவர்னரே முடிவு செய்யலாம்.

    எனவே மத்திய அரசு தொடுத்துள்ள இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.

    சுப்ரீம்கோர்ட்டின் இன்றைய பரபரப்பு தீர்ப்பு காரணமாக ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற 7 பேரும் விரைவில் விடுதலையாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக புதிதாக தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கவர்னர் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்பார். அதன் பிறகு இதில் இறுதி முடிவு எடுக்கப்படும். அநேகமாக 7 பேரை விடுவிக்க கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேரறிவாளன் வக்கீல் பாபு இதுகுறித்து கூறுகையில், “தமிழக அரசு கவர்னரை சந்தித்து பேசி 7 பேர் விடுதலைக்கு உதவ வேண்டும்” என்றார். 

    இதனை அடுத்து, 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

    7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #RajivCaseConvicts #Perarivalan #SupremeCourt
    ×