search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை வருகிற 7, 8 தேதிகளில் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்க இருக்கிறது. #China #US
    பீஜிங்:

    உலகின் முன்னணி பொருளாதார நாடுகளாக திகழும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டில் வர்த்தகப்போர் மூண்டது.

    கடந்த மாதம் அர்ஜென்டினாவில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசி இரு தரப்பு வர்த்தக போரை 2019 மார்ச்-1 வரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்தனர்.

    இந்த நிலையில், சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை வருகிற 7, 8 தேதிகளில் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்க இருக்கிறது. இதற்காக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சீனாவுக்கு செல்கிறார்கள்.

    இரு நாட்டு துணை நிதி மந்திரிகளும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சீன வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.#China #US
    இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட உள்ள நூலகத்தை யார் வந்து பயன்படுத்தப் போகிறார்கள் என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். #Trump #AfghanistanLibrary #Modi
    வாஷிங்டன்:

    போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு பணிகளை இந்தியா செய்து வருகிறது.  அங்கு வாழ்வோரின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்ற நோக்கத்திற்காக அந்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவது, ஆப்கன் அரசுடன் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்டவற்றை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தானை புதுப்பிக்க மத்திய அரசு இதுவரை சுமார் ரூ. 21 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்க சென்ற பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் பிரமாண்ட நூலகம் அமைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பிரதமர் மோடி ஆப்கானிஸ்தானில் அமைக்கவுள்ள நூலகத்தால் என்ன பயன் என கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானில் நூலகம் அமைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருந்தார். இதனால் என்ன பலன் ஏற்படும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? அப்படியே கட்டினாலும் ஆப்கானிஸ்தானில் யார் வந்து அதனை பயன்படுத்தப் போகிறார்கள்? என குறிப்பிட்டுள்ளார். #Trump #AfghanistanLibrary #Modi
    தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்று சீன அதிபர் சி ஜின்பிங் மிரட்டலால் தைவானில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. #chinapresident #XiJinping

    பீஜிங்:

    சீனா அருகே தைவான் நாடு உள்ளது. இந்த நாடு அமைந்துள்ள இடம் ஒரு தீவு ஆகும். ஒரு காலத்தில் தைவான் சீனாவின் அங்கமாக இருந்தது. அங்கு நடந்த உள்நாட்டு பிரச்சினை காரணமாக தைவான் தனி நாடாக மாறியது.

    ஆனாலும், தைவானை தனி நாடாக இதுவரை சீனா ஏற்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் தனி நாடாக ஏற்றுள்ளன.

    அமெரிக்கா அந்த நாட்டுக்கு ராணுவ உதவிகளை செய்வதுடன் படை தளத்தையும் அமைத்துள்ளது.

    சீனா தொடர்ந்து தைவான் தங்களது நாட்டின் பகுதி. அதை எங்கள் நாட்டோடு இணைப்போம் என்று கூறி வந்தது.

    இந்த நிலையில் நேற்று சீன அதிபர் சி ஜின்பிங் கூறும்போது, தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம். அதை சீனாவுடன் இணைப்பதுதான் எங்களது ஒரே குறிக்கோள். தைவானும், சீனாவும் ஒரே நாடுதான்.

    எனவே, தைவான் தனியாக இயங்குவதற்கு அனுமதிக்க முடியாது. அதை சீனாவோடு இணைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் போர் நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்க மாட்டோம் என்று கூறினார்.

    இதற்கு எங்களது நாடு இறையாண்மை கொண்டது. யாரையும் கைப்பற்ற விட மாட்டோம் என்று தைவான் கூறி உள்ளது.

    சீன அதிபரின் மிரட்டலால் அங்கு போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தைவான் ஏற்கனவே சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில் தனது ராணுவத்தை எப்போதும் தயாராக வைத்திருந்தது. இப்போது சீன அதிபரின் மிரட்டலால் மேலும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது.

    சீனா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    டொனால்டு டிரம்ப் அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று சொந்த கட்சி தலைவரான மிட்ரூம்னி குற்றம் சாட்டியுள்ளார். #Trump #americapresident

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அமெரிக்கா இதுவரை பின்பற்றி வந்த பல வி‌ஷயங்களை எந்த அதிபராக இருந்தாலுமே அதை மாற்றுவது இல்லை. ஆனால், டொனால்டு டிரம்ப் அதுபோன்ற வி‌ஷயங்களையும் மாற்றி வருகிறார். இது, நாட்டின் நலனுக்கு ஆபத்தான வி‌ஷயம் என்று பலரும் கருதுகின்றனர்.

    இதனால் அவருடைய சொந்த கட்சியான குடியரசு கட்சியில் கூட எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தற்போது இந்த கட்சியின் மூத்த தலைவரும், செனட் உறுப்பினருமான மிட்ரூம்னி அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் போது அதில் மிட்ரூம்னியும் போட்டியிட்டார். அப்போதே மிட்ரூம்னி, டிரம்பை கடுமையாக விமர்சித்திருந்தார். டிரம்ப் ஒரு பொய்யர். போலியான மனிதர். மோசடிக்காரர் என்று அப்போது அவர் கூறினார்.

    இந்த நிலையில் இப்போது கருத்து தெரிவித்துள்ள மிட்ரூம்னி, டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று கூறி இருக்கிறார்.

    இதுபற்றி மேலும் கூறிய அவர், கடந்த 2 ஆண்டாக டிரம்ப் அதிபராக இருந்துள்ளார். அவர் பணியாற்றும் விதத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

    இதில் இருந்து பார்க்கும் போது அமெரிக்க அதிபர் பதவிக்கு இவர் தகுதி இல்லாதவர் என்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் அவர் எடுத்துள்ள சில நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் தகுதிக்கு மாறான வி‌ஷயமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதே போல் டிரம்பின் நடவடிக்கைக்கு குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் செனட் உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். #Trump #americapresident

    அமெரிக்காவில் துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதில் குண்டு பாய்ந்து நண்பன் இறந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசுக்கு பயந்து சிறுவனும் தற்கொலை செய்துகொண்டான். #ShootingFriend #Suicide
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவின் புறநகர் பகுதியான லாரன்சஸ்வில்லேவை சேர்ந்த சிறுவன் டெவின் ஹோட்ஜ் (வயது 15). இவனை பார்க்க நண்பர்கள் 3 பேர் நேற்று முன்தினம் அவனுடைய வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது சிறுவன் டெவின் ஹோட்ஜ், தங்கள் வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்து நண்பர்களிடம் காட்டினான். அப்போது டெவின் ஹோட்ஜ் தவறுதலாக துப்பாக்கியை அழுத்திவிட்டான். இதில் அவனது அருகில் இருந்த சாத் கார்லெஸ் (17) என்கிற சிறுவனின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து.

    இதையடுத்து அருகில் இருந்த மற்ற 2 நண்பர்களும், அங்கிருந்து எழுந்து ஓடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வருவதற்குள் சாத் கார்லெஸ் பரிதாபமாக இறந்துவிட்டான்.

    அதே சமயம் போலீஸ் வருவதை கண்டு டெவின் ஹோட்ஜ் அருகில் உள்ள வீட்டுக்கு ஓடினான். எனினும் எப்படியும் போலீசார் தன்னை பிடித்துவிடுவார்கள் என பயந்த டெவின் ஹோட்ஜ், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.
    அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷியா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார். #Putin #Trump
    மாஸ்கோ:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா-ரஷியா இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக அர்ஜென்டினாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் தவிர்த்துவிட்டார்.

    இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார்.

    அந்த கடிதத்தில், “பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷியா தயாராக இருக்கிறது” என புதின் குறிப்பிட்டுள்ளார்.

    ரஷியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கான முக்கிய காரணி என புதின் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

    அதே போல் சிரிய அதிபர் பாஷர் அல் ஆசாதுக்கு புதின் எழுதியுள்ள கடிதத்தில், பயங்கரவாதத்தை எதிர்க்கவும், இறையாண்மையைக் கட்டிக்காக்கவும் சிரிய அரசுக்கும், மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் ரஷியா தொடர்ந்து செய்யும் என உறுதியளித்து உள்ளார். #Putin #Trump
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுடன் சந்தித்து பேசிய அமெரிக்க வாலிபரிடம் போலீசார் 2‍-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். #ThoothukkudiFiring #Sterlite

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    இதை எதிர்த்து ஆலை தரப்பினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு எதிர்ப்பு இயக்கத்தினர் ஆலைக்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த மார்க் சியல்லா (வயது 35) என்பவர் கடந்த 27-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்தார். அவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார். மேலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் சிலரை நேரில் சென்று சந்தித்தார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராமங்களுக்கும் மார்க் சியல்லா சென்று மக்களை சந்தித்து பேசினார். அவரை தூத்துக்குடியை சேர்ந்த பிரின்ஸ் என்பவர் அழைத்து சென்று வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தூத்துக்குடியில் மார்க் சியல்லா தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதேபோன்று பிரின்சையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தெற்கு பீச் ரோட்டில் பனிமயமாதா ஆலயம் அருகே திரண்டனர். அவர்கள் அங்கு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரணைக்கு பிறகு பிரின்சை விடுவித்தனர். அதன்பிறகு எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுதொடர்பாக பிரின்ஸ் கூறுகையில், ‘ஒரு பத்திரிகையாளர் வந்தார். அவருக்கு தமிழ் தெரியாது. இதனால் அவருக்கு மொழி பெயர்ப்புக்காக நான் உடன் சென்றேன். அவர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஒருவரையும், பண்டாரம்பட்டியில் உள்ள சிலரையும் சந்தித்தார். பின்னர் அங்கு உள்ள பாழடைந்த கிணற்றையும், அந்த பகுதியில் உள்ள தண்ணீரையும் படம் பிடித்தார்.

    பின்னர் அவரை அழைத்து வந்து சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் விட்டு விட்டு வந்தேன். இரவில் வந்து போலீசார் என்னை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்‘ என்றார். இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த‌ மார்க் சியல்லா விசாரணைக்காக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் போலீசார் மார்க் சியல்லாவிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் போது, மார்க் சியல்லா, அமெரிக்காவில் நிறுவனம் சாரா செய்தியாளராக (பிரீ லான்சர்) இருப்பதாகவும், ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக செய்தி சேகரிக்க வந்ததாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார், அவருடைய மடிக்கணினி, கேமரா உள்ளிட்டவற்றையும் சோதனை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கூறும்போது, மார்க் சியல்லா சுற்றுலா விசாவில் வந்து உள்ளார். இவர் செய்தியாளராக பணி செய்வதாக தெரிவித்து உள்ளார். அவர் தெரிவித்த தகவல் உண்மையா? என்பதை அறிய குடியுரிமை பிரிவில் தகவல்களை கேட்டு உள்ளோம் என்று கூறினார்.

    இதனிடையே மார்க்சியல்லாவிடம் நேற்று நள்ளிரவு வரை விசாரணை நடந்தது. இன்றும் போலீசார் அவரிடம் விசாரித்து வருகிறார்கள். மார்க் சியல்லாவுக்கு தூத்துக்குடியில் வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  #ThoothukkudiFiring #Sterlite

    அமெரிக்காவில் அரசுத் துறைகளின் முடக்கம் நீடிப்பதால் அரசு ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டாய விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. #USGovernmentShutdown #Trump
    வாஷிங்டன்:

    அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக யாரும் நுழையாதபடிக்கு அமெரிக்க–மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்று 2016–ம் ஆண்டு தேர்தலின் போது டிரம்ப் வாக்குறுதி அளித்தார்.

    அதன்படி எல்லையில் சுவர் எழுப்ப மெக்சிகோவிடம் டிரம்ப் நிதி கேட்டார். ஆனால் அந்த நாடு தர மறுத்துவிட்டதால் உள்நாட்டு நிதியை பயன்படுத்த வேண்டிய நெருக்கடி உருவானது. இதற்காக உள்நாட்டு நிதி 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று, அமெரிக்க பாராளுமன்றத்தை டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால் மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறும் ஜனநாயக கட்சி, செலவின மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிக்க மறுத்து விட்டது. இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகள் முடங்கின.



    இந்த நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை கூடியது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இருந்தபோதிலும் உறுப்பினர்களின் கூட்டத்தில் அரசு துறைகள் முடங்கியதை சரி செய்வதற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும் இரு சபைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இதனால் அரசு துறைகளின் முடக்கம் தொடர்ந்து நீடிக்கிறது.

    அதே சமயம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்கிற தனது முடிவில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். இதனால் அரசு துறைகளின் செயலிழப்பு புத்தாண்டு வரை தொடரும் நிலை உருவாகி உள்ளது.

    இந்த குழப்பமான சூழலால் அரசு ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. #USGovernmentShutdown #Trump
    புகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ், ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை திருமணம் செய்து கொண்டார். #MileyCyrus #LiamHemsworth
    வாஷிங்டன் :

    புகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ் (வயது 26). இவர் ‘தி லாஸ்ட் சாங்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை (28) 10 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தார். இருவருக்கு இடையேயும் காதல் மலர்ந்தது.

    இருவரும் பல இடங்களில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக்கொண்டார்கள். 2012-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அடுத்த ஆண்டே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

    பிரிந்த ஜோடி, 2015-ம் ஆண்டு திரும்பவும் சேர்ந்தது.

    இருவரும் மறுபடியும் காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர்.

    கலிபோர்னியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயில் இந்த ஜோடியின் வீடு எரிந்து நாசமானது. ஆனால் அது அவர்களுடைய காதலுக்கு ஒரு தடையாக இல்லை.

    இந்த நிலையில் டென்னிசி மாகாணத்தில் உள்ள தனது பங்களாவில் வைத்து மைலி சைரஸ், தன் காதலர் லியாமை மணந்து கொண்டார். இதை அவர் உறுதி செய்துள்ளார். இந்த திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    டுவிட்டரில் மைலி சைரஸ் திருமணம் தொடர்பான படத்தை வெளியிட்டுள்ளார்.#MileyCyrus #LiamHemsworth
    அமெரிக்காவில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரியை காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். #Policeofficerdeath

    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ரோனில் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்த 33 வயதான அவர் நியூமேன் பகுதியில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    ரோனில்சிங் பணியில் இருந்தபோது அதிவேகமாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார். அப்போது அதில் இருந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் ஆத்திரம் அடைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

    இதில் அவருக்கு பல இடங்களில் குண்டுகள் பாய்ந்தன. அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரோனில்சிங் இறந்தார். #Policeofficerdeath

    அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் பதவி விலகியதையடுத்து பேட்ரிக் சனாகாவை பொறுப்பு ராணுவ மந்திரியாக டிரம்ப் அறிவித்தார். #DonaldTrump #PatrickShanahan
    வாஷிங்டன்:

    உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் அங்கு தாக்குதல் நடத்தி வந்தன.

    இந்த நிலையில், அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.

    இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், தான் பதவி விலகுவதாக கூறி, டிரம்பிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.



    இந்த நிலையில், துணை ராணுவ மந்திரி பேட்ரிக் சனாகானை பொறுப்பு ராணுவ மந்திரியாக நியமித்து, அவர் ஜனவரி 1-ந் தேதி முதல் பணியை தொடங்குவார் என டிரம்ப் நேற்று அறிவித்தார்.

    இது பற்றி டிரம்ப் தனது டுவிட்டரில் “மிக திறமை வாய்ந்த துணை ராணுவ மந்திரியை, ராணுவ மந்திரி (பொறுப்பு) ஆக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.#DonaldTrump #PatrickShanahan
    அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களின் மீது தாக்குதல் நடத்திய அல் கொய்தா பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்கி பிரிட்டன் நாட்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். #alqaeda #alqaedaplan #blowupairports #blowupairliners #UKminister #BenWallace
    லண்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தின் மீது 11-9-2001 அன்று விமானங்களை மோதவிட்டு அல் கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மோதிய நான்கு விமானங்களில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். 

    இதில் 246 பேர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள், உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் தீப்பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது. 

    இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர். இதற்கு பழிக்குப்பழியாய் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அமெரிக்க சீல் படையினர் சுட்டுக் கொன்றனர்.

    அவரை கொன்ற பின்னர் அல் கொய்தாவின் ஆதிக்கம் அழிந்து விட்டதாக பரவலாக பேசப்பட்டது. எனினும், அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்து வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், முன்னர் பலமிழந்தும் உதிரிகளாகவும் இருந்த அல் கொய்தா பயங்கரவாதிகள் மீண்டுன் பலம்பெற்று மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக பிரிட்டன் நாட்டு உள்துறை மந்திரி பென் வேல்லஸ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

    குறிப்பாக, பிரிட்டன் நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களை தாக்கி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்த அவர்கள் ஆயத்தமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    நவீன ஆயுதங்கள் மூலம் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் தொழில்நுட்பத்தில் அவர்கள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். புதிய யுக்திகள் மற்றும் முறைகளை பயன்படுத்தி ஐரோப்பிய கண்டத்தில் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் தயாரிப்பில் அல் கொய்தா பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிநவீன ரசாயனங்கள் மூலம் நடத்தப்படவுள்ள இந்த தாக்குதல்களில் இருந்து விமானங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்து தடுப்பு நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்காக பிரிட்டன் அரசு இதுவரை இரண்டரை கோடி பவுண்டுகளை செலவிட்டுள்ளது எனவும் அந்த பேட்டியில் பென் வேல்லஸ் தெரிவித்துள்ளார். #alqaeda #alqaedaplan #blowupairports #blowupairliners #UKminister #BenWallace 
    ×