search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்தபோது பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்திய பொறியாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #IndianTechie #USCourt
    வாஷிங்டன்:

    இந்தியாவை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் தற்காலிக விசாவில் வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் புராஜெக்ட் மானேஜராக வேலை பார்த்து வருகிறார்.

    பிரபு ராமமூர்த்தி கடந்த ஜனவரி மாதம் லாஸ் வேகாசில் இருந்து டெட்ராய்டுக்கு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றபோது தனதருகில் இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண், விமான ஊழியர்களிடம் புகார் செய்தார். பின்னர் விமானம் தரையிறங்கியதும் பிரபு  ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

    அவர் மீது டெட்ராய்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த நிலையில், ராமமூர்த்தியை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. அதன்பின்னர் அவருக்கான தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. இந்த வாதம் நிறைவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அப்போது, விமானத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட பிரபு ராமமூர்த்திக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அவரது தண்டனைக் காலம் முடிவடைந்ததும் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தவேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். #IndianTechie #USCourt

    தன்னை கொலை செய்யவும், வெனிசூலாவில் ஆட்சியை கவிழ்க்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டுவதாக நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். #Venuzuela #NicolasMaduro
    கராகஸ்:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

    ஆனால் அங்கு அதிபராக உள்ள நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், மாறாக அவர் சர்வாதிகார ஆட்சியில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

    இதனை காரணம் காட்டி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

    இந்த நிலையில், தன்னை கொலை செய்யவும், வெனிசூலாவில் ஆட்சியை கவிழ்க்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டுவதாக நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். அதிபர் மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:-

    என்னை படுகொலை செய்யவும், வெனிசூலாவில் அயல்நாட்டு படைகளை குவித்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டி வருகிறது. இந்த பொறுப்பு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதனை எதிர்கொள்ள நட்பு நாடுகளின் உதவியோடு வெனிசூலா மக்கள் தாயராக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Venuzuela #NicolasMaduro
    அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஆப்பிள் நிறுவனம் புது வளாகத்தை கட்டமைக்க 100 கோடி டாலர்களை செலவிட முடிவு செய்துள்ளது. #Apple



    உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்படும் ஆப்பிள் ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்பு பெற்ற முதல் நிறுவனமாக உருவெடுத்தது. இந்நிலையில் அமெரிக்க சந்தையில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் அந்நிறுவனம் 100 கோடி டாலர்கள் செலவில் புது வளாகத்தை கட்டமைக்க இருக்கிறது.

    புதிய ஆப்பிள் வளாகம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் அமைய இருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவில் புது வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். இதுதவிர சீட்டிள், சான் டீகோ மற்றும் கல்வர் சிட்டி உள்ளிட்ட இடங்களில் வளாகங்களை கட்டமைக்க இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.



    இந்த ஆண்டு மட்டும் ஆப்பிள் நிறுவனம் 6000 வேலைவாய்ப்புகளை உருவாக்கி சுமார் 90,000 பேரை பணியமர்த்தி இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கலிபோர்னியாவின் ஆப்பிள் பார்க் கேப்பசினோ வளாகத்தில் மட்டும் சுமார் 12,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    ஆப்பிளின் புதிய ஆஸ்டின் வளாகம் தற்போதைய வளாகத்திற்கு ஒரு மைல் தொலைவில் உருவாகிறது. இந்த வளாகத்தில் ஆய்வு, பொறியியல், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் சார்ந்த பணிகள் நடைபெற இருக்கின்றன. புதிய ஆப்பிள் வளாகம் திறக்கப்படும் போது ஆஸ்டின் நகரில் அதிகம் பேர் பணியாற்றும் தனியார் நிறுவனமாக இருக்கும். 

    ஆஸ்டினில் உருவாகும் புதிய ஆப்பிள் வளாகம் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது. இங்கு 100 சதவிகிதம் மாற்று எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. #Apple
    அமெரிக்காவில் ஓஹியோ மாகாணம், டோலிடோ நகரத்தில் அமைந்துள்ள யூத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் சதி செய்துள்ளனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஓஹியோ மாகாணம், டோலிடோ நகரத்தில் அமைந்துள்ள யூத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் சதி செய்துள்ளனர்.

    இந்த சதி தொடர்பாக ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் என அறியப்படுகிற டேமன் ஜோசப் (வயது 21) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் கவரப்பட்டு, அந்த அமைப்புக்காக யூத வழிபாட்டு தலத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக நீண்ட காலம் சதி செய்து வந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

    அவர் சதி செய்தபடி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

    சமூக வலைத்தளங்களில் டேமன் ஜோசப் வெளியிட்ட பதிவுகளின் அடிப்படையில் அவரை மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ. ஏஜெண்டுகள் பிடித்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 2 யூத வழிபாட்டு தலங்களில் தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ஒப்புக்கொண்டு உள்ளார். அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்காக அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஜப்பானில் பயிற்சியில் ஈடுபட்டபோது அமெரிக்க போர் விமானங்கள் நடுவானில் மோதி கடலில் விழுந்தது. இதில் மாயமான 5 வீரர்களை அமெரிக்க மற்றும் ஜப்பான் படையினர் தேடிவருகிறார்கள். #Aircraftscollide
    டோக்கியோ:

    அமெரிக்க ராணுவம் உலகின் பல்வேறு நாடுகளிலும் ராணுவ முகாம்களை அமைத்துள்ளது. அதன்படி ஜப்பானிலும் இவற்றின் ராணுவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

    அங்குள்ள யுவாகுனி என்ற இடத்தில் அமெரிக்க கடற்படை தளம் இருக்கிறது. நேற்று இரவு கடற்படை வீரர்கள் விமானத்தில் பறந்து போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது குண்டுவீச்சு விமானத்திற்கு மற்றொரு விமானத்தில் இருந்து இரவு நேரத்தில் பெட்ரோல் நிரப்புவது தொடர்பான பயிற்சி கடற்பகுதிக்கு மேலே நடந்தது. எப்.ஏ.18 ரக போர் விமானத்துக்கு சி-130 என்ற பெட்ரோல் டேங்கர் விமானம் மூலம் எரிபொருள் நிரப்ப பயிற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென 2 விமானங்களும் மோதிக் கொண்டன. இதில் அவை நொறுங்கி கடலில் விழுந்தது. எப்.ஏ.18 விமானத்தில் 2 வீரர்களும், சி-130 விமானத்தில் 5 வீரர்களும் இருந்தனர்.

    உடனடியாக அங்கு மீட்பு பணி நடந்தது. ஜப்பான் கடற்படையை சேர்ந்த 9 விமானங்களும், 3 கப்பல்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டன. அப்போது கடலில் மிதந்து கொண்டிருந்த 2 வீரர்களை மீட்டனர்.

    அதில் ஒருவர் கவலைக்கிடமான முறையில் இருக்கிறார். மற்ற 5 வீரர்களை காணவில்லை. தொடர்ந்து அமெரிக்க மற்றும் ஜப்பான் படையினர் தேடிவருகிறார்கள்.

    இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, இரவு நேரத்தில் நடுவானில் விமானங்களில் எரிபொருள் நிரப்புவது கடினமாக வி‌ஷயமாகும். இந்த பயிற்சியில் ஈடுபட்டதால் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.

    நேற்று ஜப்பான் பகுதியில் கடுமையான மேகக்கூட்டம் இருந்தது. எனவே, வானிலை காரணமாக இரு விமானங்களும் மோதி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. #Aircraftscollide

    அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா ஆயுதம் தயாரித்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம் என்று ரஷிய அதிபர் புதின் மிரட்டல் விடுத்துள்ளார். #Putin #Russia #Missiles #US
    மாஸ்கோ:

    2-ம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்காவும், ரஷியாவும் ஒன்று சேர்ந்து போரில் ஈடுபட்டன.

    ஆனால், போர் முடிவுக்கு பிறகு அமெரிக்கா-ரஷியா இடையே நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டி ஏற்பட்டது.

    இதனால் இரு நாடுகளும் ஆயுதங்களை குவித்தன. குறிப்பாக அணுகுண்டு தயாரிப்பிலும், அவற்றை ஏவும் ஏவுகணை தயாரிப்பிலும் தீவிரம் காட்டின.

    எந்த நேரத்திலும் இருநாடுகளும் மோதிக் கொள்ளலாம் என்று சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் ரஷிய அதிபராக இருந்த கோர்பசேவ் சற்று இறங்கி வந்தார்.

    இதன் காரணமாக 1987-ம் ஆண்டு அமெரிக்கா- ரஷியா இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    இதன்படி குறுகிய மற்றும் நடுநிலை அணு ஆயுத ஏவுகணைகளை தயாரிப்பதை நிறுத்துவது, ஏற்கனவே தயாரித்த பல பல ஆயுதங்களை அழிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இரு நாடுகளுமே பெரும்பாலான அணு ஆயுதங்களை அழித்தன. புதிய ஆயுதங்களும் தயாரிக்கப்படவில்லை.

    ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்பட்டு வருவதாகவும், எனவே, ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற போவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ இன்னும் 60 நாட்களில் குறிப்பிட்ட ஏவுகணைகளை ரஷியா அழிக்காவிட்டால் நாங்கள் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என்று கூறினார்.

    நேட்டோ நாடுகளும் ரஷியா ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளது. நடுத்தர ஏவுகணைகளை தயாரிக்க அமைப்பு ஒன்றை ரஷியா உருவாக்கி உள்ளது. இதுவே ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று நேட்டோ கூறி இருக்கிறது.

    அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் குற்றச்சாட்டுக்கு ரஷிய அதிபர் புதின் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    இந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீறியதற்கான எந்த ஆதாரமும் அமெரிக்காவிடம் இல்லை. ஆனாலும், நாங்கள் ஒப்பந்தத்தை மீறி விட்டதாக தவறான குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.

    தற்போது நிலைமைகள் மாறி விட்டது. எங்கள் மீது குற்றம்சாட்டி ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி பல ஆயுதங்களை தயாரித்து வைத்து கொள்ளலாம் என அமெரிக்கா நினைக்கிறது.

    அவர்கள் ஆயுதம் தயாரித்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கும் நிலையில் பல நாடுகள் இதுபோன்ற தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்து உள்ளன.

    ஒப்பந்தத்தில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. எனவே, தங்கள் தரப்பில் நியாயம் இருப்பது போல் காட்டிக்கொள்ள எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

    இவ்வாறு புதின் கூறினார். #Putin #Russia #Missiles #US
    அமெரிக்காவில் 7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #Trump #StateofEmergency #AlaskaEarthquake
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அன்கரேஜ் நகரின் அருகே ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் அம்மாநிலத்தில் உள்ள பல சாலைகள், வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



    இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    தேசிய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறவும் இதற்கான செலவினங்களை தங்குதடையின்றி ஒதுக்கீடு செய்யவும் இந்த உத்தரவு துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது. #Trump #StateofEmergency #AlaskaEarthquake 
    அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. #7magnitude #Alaskaearthquake
    வாஷிங்டன்:

    கனடா நாட்டின் வடமேற்கில் உள்ள அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் அந்நாட்டு மக்களில் அதிகமானவர்கள் வாழும் இடமாக அறியப்படுகிறது.

    இந்நிலையில், இம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் (இந்திய நேரப்படி) பின்னிரவு சுமார் 12 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 7 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.



    இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் சில மணி நேரத்துக்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. #7magnitude #Alaskaearthquake 
    பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை வேடம் போட்டு வருவதால் பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய சுமார் ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது. #America #Pakistan
    வாஷிங்டன்:

    பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் தாயகமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. ஹக்கானி குழுக்கள், தலீபான், லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தங்கள் புகலிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக கோடிக்கணக்கில் ராணுவ நிதியுதவியும் அந்த நாடு வழங்கி வருகிறது.

    ஆனால் இந்த நிதியை பெற்றுக்கொள்ளும் பாகிஸ்தான், பயங்கரவாத ஒழிப்பில் பாராமுகம் காட்டி வருகிறது. அந்த மண்ணில் இருந்து கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாத தாக்குதல்களில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

    இது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடும் கோபத்தை காட்டி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த சூழலில்தான் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஆப்கானிஸ்தானுக்கான தனது புதிய கொள்கையை வெளியிட்டார். இதில் பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலையை எடுத்துவரும் பாகிஸ்தானுக்கு அவர் கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், அந்த நாட்டுக்கு வழங்கி வரும் நிதியுதவியை ரத்து செய்யவும் முடிவு செய்தார்.

    இந்த விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானை கடுமையாக தாக்கிய அவர், ‘பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கோடிக்கணக்கில் நிதியுதவி செய்து வருகிறது, ஆனால் அந்த நாடு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனவே அவர்களுக்கு வழங்கப்படும் 1.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரத்து 100 கோடி) நிதியுதவி நிறுத்தப்படும்’ என்று ஆவேசமாக கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள 20 பில்லியன் டாலர் அற்பமானது. ஆனால் அந்த நாட்டுடன் இணைந்து நாங்கள் மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு போரில் 75 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். 123 பில்லியன் டாலரை நாங்கள் செலவழித்து இருக்கிறோம். இது தொடர்பான வரலாற்று உண்மைகளை டிரம்ப் அறிந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    இவ்வாறு இரு தலைவர்களுக்கு இடையே வார்த்தை மோதல் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.21 ஆயிரம் கோடி) நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த தொகை பல்வேறு நிதியாண்டுகளில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய மொத்த தொகை என தெரிகிறது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என தெரிகிறது. முன்னதாக, பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தினாலும் அந்த நாட்டுடன் நல்ல உறவை நீடிக்கவே அமெரிக்கா விரும்புவதாக டிரம்ப் கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது. 
    மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள் பற்றியோ அல்லது அதற்கு திட்டம் தீட்டிய அல்லது உதவியவர்கள் பற்றிய தகவல் அளித்தால் 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.35 கோடி) பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. #MumbaiTerrorAttack #USReward
    வாஷிங்டன்:

    மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி கடல் வழியாக ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். 29-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான். உலகையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் 5 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 35 கோடி) வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.


    மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள், தாக்குதலுக்கு சதி செய்தவர்கள் மற்றும் உதவியவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் இந்த வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கூறியுள்ளார். #MumbaiTerrorAttack #USReward
    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு கடை வீதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். #FloridaShotting
    மாஸ்கோ:

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் பிரவுன்ஸ்வில்லே பகுதியில் வீட்டு உபயோகப் பொருள் கடையில் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த மர்ம நபர், திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினான்.

    இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய ஆசாமி ஓடிவிட்டான். இது தொடர்பாக மியாமி டேட் கவுண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது பொதுமக்களை மட்டுமின்றி காவல்துறையையும் கவலை அடையச் செய்துள்ளது. #FloridaShotting
    அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஜனாதிபதி டிரம்ப் மோதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #President #DonaldTrump #ChiefJustice #JohnRobert
    வாஷிங்டன்:

    மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், அமெரிக்காவினுள் குடியேறும் நோக்கத்தில் அமெரிக்க-மெக்சிகோ எல்லை நோக்கி வந்தனர். இதை ஜனாதிபதி டிரம்ப் சாடினார். படையெடுப்பு என வர்ணித்தார்.

    அத்துடன், அமெரிக்காவின் தென்பகுதியின் வழியாக நுழைகிற அகதிகள் யாரும் அமெரிக்காவினுள் தஞ்சம் கேட்க முடியாது என நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    இதை சட்ட விரோதம் என மனித உரிமை அமைப்புகள் விமர்சித்தன. அத்துடன் சான்பிரான்சிஸ்கோ மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை நீதிபதி ஜோன் டைகர் விசாரித்து, டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.



    இந்த உத்தரவு, டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

    இந்த உத்தரவால் டிரம்ப் அதிர்ச்சி அடைந்தார். நீதிபதியின் உத்தரவு, அவமானகரமானது என விமர்சித்தார்.

    அதுமட்டுமின்றி, “ இது ஒபாமா நீதிபதி வழங்கிய உத்தரவு. இது இனியொரு முறை நடக்காது. இந்த கோர்ட்டை நெருக்கமான கோர்ட்டு என்று கருதி அத்தனை பேரும் ஓடிச்சென்று வழக்குகள் போட விடக்கூடாது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் வெற்றி பெறுவோம்” என கூறினார்.

    இந்த நீதிபதி, ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது நியமிக்கப்பட்டவர் என்பதால் அவரை ஜனாதிபதி டிரம்ப், ‘ஒபாமா நீதிபதி’ என முத்திரை குத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.



    இது தொடர்பாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் கருத்தை பிரபல பத்திரிகை நிறுவனம் அறிய விரும்பியது.

    “ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜனாதிபதிகளால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகள், தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதிக்கு எதிராக செயல்படுவதாக டிரம்ப் புகார் கூறுகிறாரே?” என கேள்வி எழுப்பியது.

    அதற்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், “ ஒபாமா நீதிபதிகள் அல்லது டிரம்ப் நீதிபதிகள், புஷ் நீதிபதிகள் அல்லது கிளிண்டன் நீதிபதிகள் என நாங்கள் கொண்டிருக்கவில்லை. நாங்கள் பெற்றிருப்பது, அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தனிச்சிறப்பான நீதிபதிகளைத்தான். அவர்கள் தங்கள் முன்னிலையில் ஆஜர் ஆகிறவர்களுக்கு சமநீதி வழங்குவதற்கு தங்களால் முடிந்தவரையில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.” என பதில் அளித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, “சுதந்திரமான நீதித்துறைக்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் இந்த கருத்து, டிரம்புக்கு பதிலடியாக அமைந்தது.

    ஜனாதிபதி டிரம்ப், புளோரிடாவுக்கு விடுமுறைக்கு சென்றுள்ளார். அவர் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் கருத்தை அறிந்து அவருடன் நேருக்கு நேர் மோதுகிற வகையில், அவர் கருத்தை மறுத்து டுவிட்டரில் பதில் வெளியிட்டார்.

    அதில் அவர், “மன்னிக்கவும், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ். உண்மையிலேயே நீங்கள் ஒபாமா நீதிபதிகளை கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் பார்வை, தங்கள் பாதுகாப்புக்காக குற்றம்சாட்டுகிற மக்களின் பார்வையில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், “ சட்ட விரோதமாக நுழைகிற அகதிகள் விவகாரம் உள்பட எனது சர்ச்சைக்குரிய, முன்னுரிமை வழக்குகள் பலவற்றில், கோர்ட்டு உத்தரவுகள் தலைகீழாகி விட்டன. அப்படி எத்தனை ஆகி இருக்கின்றன என்பதை எண்ணிப்பாருங்கள். அவை அதிர்ச்சி அளிக்கின்றன” எனவும் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

    அமெரிக்காவில் ஜனாதிபதியும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இப்படி நேருக்கு நேர் வார்த்தை மோதலில் ஈடுபட்டு இருப்பது ஒரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    டிரம்ப் மோதியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சி ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்சால் 2005-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #President #DonaldTrump #ChiefJustice #JohnRobert
    ×